Sunday, December 23, 2007

இப்படியும் சிலர்

"அன்பரே நான் போட்டியிடும் இந்த பெரும்சபையின் அங்கத்தினர் போட்டியில் என்னைவிட என்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் பெருமானே பல மடங்கு தகுதி வாய்ந்தவர்" என்று வோட்டு வேட்டை நடந்த இடத்தில் முன்பின் முரணாகப் பேசி வெற்றிக்காக உழைக்காமல் தோல்விக்காக உழைத்தார் நோபல் பரிசு பெற்ற (1903) அந்த விஞ்ஞானி.

பின் எதற்காக போட்டியிட்டார்? அவர் பிரான்ஸ் தேசத்தின் Academy of Sciences-ல் உறுப்பினரானால் அவருக்கு ஸோர்போன் (Sorbonne) பல்கலைகழகத்தில் பேராசியர் பதவியும் அவருக்கென தனி சோதனைச் சாலையும் ஒதுக்கப்படும் என்ற காரணத்தால் முதலில் ஒத்துக்கொண்டார்.

ஆனால் வெட்கம் அவரை பிடுங்கித் தின்றது. அவரால் தன் சாதனைகளைப் பட்டியல் போட்டு தன் வேட்பு தாக்கலின் உண்மை நிலையை எடுத்துக்கூற முடியாமல் அவரது தன்னடக்கம் தடுத்தது. தன்னைப் பற்றி பீற்றிக்கொள்ள நா கூசியது. ஆனால் அடுத்தவரை பாராட்டும் பொழுது அவருடைய இதயம் விசாலமானது. வார்த்தைகள் சரளமாக வந்தன.

முடிவு அவர் விரும்பியபடியே புகழைத் தவிர்ப்பதில் வெற்றி அடைந்தார். சரி இவர்தான் இப்படி இவரது மனைவி எப்படி ?

இரண்டாம் முறையாக(1911) நோபல் பரிசுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை ஒரு அமெரிக்க பத்திரிக்கையின் நிருபர் அவரைத் தேடிச்சென்றார். எளிமையான கறுப்பு கவுன் அணிந்து வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் பேச்சுக்கொடுத்தார்.

" நீங்கள்தான் இந்த வீட்டை பார்த்துக்கொள்கிறீர்களா?"
"ஆமாம் "
"அம்மையார் இருக்கின்றாரா?"
"இல்லை. வெளியே போய் இருக்கிறார்கள்"
"அவர்களை விரைவில் எதிர்பார்க்கலாமா?"
"இல்லை. எனக்கு அப்படித் தோன்றவில்லை"
படிக்கட்டின் கீழே அமர்ந்து கொண்டு "அவர்கள் குடும்பத்தைப் பற்றிய தகவல்களை கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று கிசு கிசு பேச்சிற்கு காதை தீட்டிக்கொண்டார்.
"குறிப்பாக ஒன்றுமில்லை. ஆனால் அம்மையார் எல்லா நிருபர்களுக்கும் ஒரு பொதுவான செய்தி சொல்லுவார். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டும் ஆர்வத்தை பெரிய விஞ்ஞான உண்மைகளைத் தெரிந்துகொள்வதில் காட்டட்டும்".

ஏமாற்றத்தோடு திரும்பிய அந்த நிருபருக்கு தெரியாமல் போன இன்னொரு விஷயம், தான் தேடிவந்த நபரான மேடம் மேரி க்யூரி தான் அதுவரை தன்னோடு பேசிக்கொண்டிருந்தது என்பது தான்.

என்ன குடும்பம் அய்யா இது. ! விளம்பரம்தான் வேண்டாம் சரி. ஆனால் தேடி வரும் லட்சுமியையுமா வேண்டாம் என்பார்கள்.

பல வருடங்கள் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இரவுபகலாக உழைத்து வெளிக்கொணர்ந்த ரேடியம் மற்றும் போலோனியம் கதிர் வீச்சுகளுடைய மூலக்கூறுகளின் மருத்துவ பயன்களைப் பற்றிய ஆராய்சிக் கண்டுபிடிப்புகளை காப்புரிமைப் பெற்றுக்கொள்ளுமாறு பலரும் பலமுறை வற்புறுத்தியும் கூட அதை நிராகரித்து விட்டார்கள். அவைகள் இயற்கை தந்த பிச்சை. உலகோருக்கெல்லாம் சொந்தம் அதை நாங்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்பதே அவர்கள் வாதம்.

அவர்கள் அந்நேரத்தில் விளம்பரத்தை வெறுத்தாலும் பல நூற்றாண்டுகளுக்கு அவர்களை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இறைவன் செய்துவிட்டான்.

மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு அக்குடும்பத்தைத் தேடி வந்தது இம்முறை (1935) அவரது மூத்த மகளும் (Irene), மருமகனும் செய்த வேதியியல் ஆராய்சிகளுக்காக வழங்கப்பட்டது. அதற்குப்பின்னும் இறைவனுக்கு திருப்தியாகவில்லை போலும். அவரது இரண்டாவது மகளுக்கு (Eve) குழந்தைகள் மேம்பாட்டிற்காக ஐ.நா. சபையின் மூலம் ஆற்றிய பணிகளுக்கு நோபல் சமாதான பரிசு 1965-ல் வழங்கப் பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்க்கு நான்கு முறை வெவ்வேறு துறைகளுக்காக நோபல் பரிசை வென்றது சரித்திரத்திலேயே இல்லை.

இவர்கள் தான் கர்ம யோகத்திற்கு எடுத்துக்காட்டோ?

Sunday, December 16, 2007

குட்டக் குட்ட குனிபவன் : சினா சோனா-2

குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனியகுனிய குட்டுபவனும் முட்டாள் அப்படீன்னு சொல்லுவோம் இல்லையா அதே மாதிரி

'The First faults are theirs that commit them - The second ,theirs that permit them"


முதல் தப்பு அதை செய்யறவன், இரண்டாவது தப்பு அதை விட்டு வச்சவன்

சினா-சோனா தன் வீட்டுக்காரியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு புலம்புவது போல் இருக்கும் இந்த சித்திரம் எல்லா இடத்துக்கும் பொருத்தம் .

சினா சோனா -சொன்னா சரிதான்

Thursday, December 13, 2007

Chiனா-Choனா சொன்னது என்னா ?

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பல ஆண்டுகாலம் Ching Chow என்கிற கேலிச் சித்திரத் துணுக்கு ஒன்றைப் பிரசுரித்து வந்தது. இதை Chicago Tribune என்ற அமெரிக்கப் பத்திரிக்கையினிடமிருந்து பதிப்புரிமை பெற்று வெளியிட்டது.

1927ல் ஸிட்னி ஸ்மித் என்பவரும் ஸ்டான்லி லிங்க் என்பவரும் அப்பத்திரிக்கையில் கருத்துப்படத் தொடர் ஒன்றைத் துவங்கினர். நம் தினத்தந்தியில் வரும் சாணக்கியன் சொல் போல என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆட்டு தாடி சாணக்கியனை போல் வெறுமனே நின்று கொண்டிருக்காமல், சீனத்துக் குடுமி வைத்த சிங்-சோவ் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது போலவோ அல்லது இக்கட்டில் சிக்கிக் கொண்டிருப்பது போலவோ அவர்கள் கேலிப்படம் வரைந்தனர். பிற்காலத்தில் குடுமியை மாற்றி அவனது சிகையை நவீன முறையிலேயே சித்தரிக்க ஆரம்பித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.

சிங் சோவ் கேலிச் சித்திரங்களில் மெல்லிய நகைச்சுவையும் உட்கருத்தும் பொதிந்திருக்கும். ஒரு சிலவற்றில் ஆங்கில வார்த்தைகளை வைத்து சிலேடைகள் இருக்கும். பல இடங்களில் சித்திரம் இல்லாமல் புரியாது. இவை தவிர உப்பு சப்பு இல்லாமல் வந்த துணுக்குகளும் உண்டு.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் இதனால் கவரப்பட்டு என்னிடம் காலியாக இருந்த நாட்குறிப்பேட்டில் தினமும் வரைந்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். சிங் சோவ் மட்டுமல்லாது அன்றைய தேதியில் வெளியான Think it over யும் சேர்த்தே எழுதி வைத்துக்கொண்டேன்.

மாலையில் வீடு திரும்பியதும் காபி குடித்துக் கொண்டே முதலில் செய்யும் காரியம் இது தான். இதற்கு தேவைப்பட்ட நேரம் சுமார் பத்து நிமிடங்கள். பலரும் இதை பாராட்டவே சுமார் நான்கு வருட காலம் (1978-1982)தொடர்ந்து செய்து வந்தேன். அதாவது நான்கு டைரிகள்.தொடராததற்குக் காரணம் அந்த தொடர் நின்று போனது தான். இப்பொழுது என்னிடம் உள்ளது இரண்டு டைரிகளே. இன்னும் இரண்டு யாரிடம் உள்ளது என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

பிற்காலத்தில் அவற்றை புரட்டிப் பார்க்கும் போது முன்பு புரியாதிருந்த பல கருத்துப் படங்கள் புரிந்தன. பல நிர்வாக உண்மைகள் புரிய ஆரம்பித்தன. மீண்டும் மீண்டும் புரட்டும் பொழுது என் அனுபவத்திற்கேற்ப பல புது பரிமாணங்கள் தெரிந்தன. இதில் எனக்குப் பிடித்த சிலவற்றை அவ்வப்போது நம் இணைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் "சினா-சோனா சொன்னது என்னா" என்ற தலைப்பில் பதியவிருக்கிறேன்

சிங்-சோவ் (Ching Chow)என்பதை சினா சோனா என்று நாம் தமிழ் படுத்திக் கொள்வோம். அதனோடு எனக்கு தோன்றும் கருத்துகள் இருப்பின் அவற்றையும் சொல்லுவேன். படித்தபின் உங்களுக்கு தோன்றுவதை நீங்களும் சொல்லுங்கள்.

Give a big hand to Chiனா Choனா


'its wisely written
More important than seeing through things is, seeing things through

பனிமழையில் முன்னே இருப்பதை பார்க்க முடியவில்லை என்பதால் பயணத்தை ரத்து செய்யாமல் காரியமே கண்ணாக பயணத்தை தொடர வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் உள்ளது இந்த படம்.

சற்று யோசித்துப் பார்த்தால் seeing through things என்பது நடப்பனவற்றை கவனித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் நிகழ்சிகளின் உள்நோக்கங்களையும் ஆராய்வது. "Seeing things through" என்பது எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வது.

நாம் அன்றாடும் காணும் உண்மை ஒன்று.

ஒரு முக்கியமான project-ல் உள்ள உறுப்பினர்கள் அதை வெற்றிகரமாக முடிக்க செயல்படுவது seeing things through ஆகும். அங்கே உட்பூசலும் குழப்பமும் இருந்தால் ஒருவரின் செய்கையை, முடிவுகளை மற்றவர் சந்தேகக் கண்கொண்டு அணுகுவதே seeing through things. வெற்றிக்கு எது தேவை ?

சினா-சோனா சொல்வது சரிதான்!
More important than "seeing through things" is, "seeing things through

Thursday, December 6, 2007

சித்திரமும் கைப் பழக்கம்.

பள்ளி பருவத்திலிருந்தே ஓவியத்தில் ஆர்வம் உண்டு. எட்டு ஒன்பது வகுப்பு படிக்கும் காலத்தில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இருமுறையும் இரண்டாம் பரிசு. ஆரம்ப காலங்களில் கேம்லின் கம்பெனி தயாரித்து வந்த தண்ணீரில் கரையும் வண்ண வில்லைகள் பெட்டியும் அதனோடு வரும் ஒரு ஒத்தை பிரஷும் தான் எனது பொக்கிஷம். ப்ரஷ் எலி கடித்தது போல இருக்கும். அதை வைத்தே பொழுதை போக்கக் கற்றுக்கொண்டேன். ஆயில் பெயிண்ட் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் கல்லூரி காலம் முடியும் மட்டும் முயற்சி செய்ய வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

எனது விருப்பமான படம் பிள்ளையார். சுலபமான யானை முகம். மூக்கு கோணியது, வாய் கோணியது என்று யாரும் கமெண்ட் அடிக்க முடியாது. எப்படி இருந்தாலும் ஓகே. அவருக்கு கிரீடம் போடுவதிலும் பாசாங்குசம் மற்றும் ஆபரணங்கள் தீட்டியே மஞ்சள் வில்லை ஓட்டையாகிவிடும். அப்படியும் அந்த தங்க கலர் வராது. அதற்கு காரணம் ஒளி-நிழல் வேற்றுமை புரிந்து கொள்ளாததாலும் அதை சொல்லித்தர யாரும் இல்லாததுமே காரணம்.

படம் போட்ட பின்பு அது மனதுக்கு சரியாகாவிட்டால் அதை தூக்கிப்போட்டு விடுவேன். பின்னர் என் அம்மாவிடம் திட்டு வாங்குவேன். "சாமி படம் வேணாம்னு சொன்னாலும் போட்டு எல்லாரும் மிதிக்கிற மாதிரி இங்கேயும் அங்கேயும் தூக்கி போடறியே உனக்கு படிப்பு வராது". நல்லவேளை பிள்ளையாருக்கு அப்படி ஒன்றும் என் மீது கோபம் வந்ததாகத் தெரியவில்லை. ஓரளவு நல்ல முறையிலே தேறி வந்து விட்டேன்.
என்னுடைய நோட்டுப் புத்தகங்களின் பின்பக்கங்களில் அன்றைய தேதிகளில் வந்திருக்கும் கோபுலு, மாயா வினு,ஜெயராஜ் போன்றவர்களின் ஓவியங்களை வரைய முயற்சித்திருப்பேன்.எல்லா கத்துகுட்டி ஓவியர்கள் போலவே பெரும்பாலும் கையும் விரல்கள் அமைப்பும் வராமல் சண்டித்தனம் செய்யும். ரப்பரால் அழித்து அழித்து பேப்பரே ஓட்டையாகி போவது சர்வசாதாரணம்.ஓட்டைக்குப் பின்னால் துண்டு பேப்பர் ஒட்டி அட்ஜஸ்ட் செய்ததும் உண்டு.

அப்புறம் இயற்கைக் காட்சிகள், கி்ருஷ்ணருடன் மாடு மயில் இப்படியாக சிலவற்றை அவ்வப்போது வரைந்து வந்தேன். நவராத்திரி போது எங்கள் வீட்டிலும் நண்பர்கள் வீட்டிலும் வண்ணப்பொடியில் ரங்கோலிக்கு ஏற்ப படங்கள் போட்டுத்தருவது என் பிரத்யேக வேலை. தேர்தல் நேரத்தில் பசுவும் கன்றும் (காங்கிரஸ் பிளவிற்கு முன்னர்) சின்னம் கேட்டு வரைந்து வாங்கி செல்லும் நண்பர்களும் இருந்தனர். உதய சூரியன் சின்னம் மிகவும் சுலபமானதால் அதற்கு என்னைப் போன்ற ஸ்பெஷலிஸ்டுகள் தேவையில்லை.

எஸ் எஸ் எல் ஸி தேர்வுகளுக்கு பின் வந்த பெரிய விடுமுறையில் ரீடர்ஸ்-டைஜஸ்ட் பத்திரிக்கையின் பின் அட்டையில் வந்த நல்ல பெயிண்டிங்களை வாட்டர் கலரில் செய்ததில் தன்னம்பிக்கை சற்று அதிகமானது.

பொதுவாக என்னுடைய ஓவிய ஆர்வம் குளிர் ஜுரம் போல விட்டு விட்டு வரும். ஏதாவது ஓவியக் கண்காட்சி அல்லது பத்திரிக்கையில் ஓர் ஓவியரைப் பற்றிய கட்டுரையை காண அல்லது படிக்க நேரும் பொழுது அதன் தாக்கம் சிறிது காலம் இருக்கும்.அதன் விளைவாக ஓரிரண்டு படைப்புகள் தோன்றும். படைத்த எதையும் முறையாக பாதுகாத்தது கிடையாது.

ஒரு நாள் திடீரென்று ஞானோதயம் வந்தது.

என்னுடைய மாமாவின் மகன் (என்னை விட பதினோரு வயது இளையவன்) அடிக்கடி ஓவியக் கண்காட்சிகளை அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்தி விற்பனையும் செய்கிறான். ஒரு பேட்டியில் அவனுடைய உள் உந்துதலுக்கு என்னை முக்கியமான காரணமாகக் காட்டியது பெருமிதப் பட வைத்தாலும் ஒரு குற்ற உணர்வு பற்றிக்கொண்டது. மென்பொருள் வல்லுனனாக இருக்கும் அவன் முழு நேர ஓவியனாக இல்லாவிட்டாலும் முறையாக எல்லாப் படைப்புகளையும் பாதுகாத்து வந்திருக்கிறான். பல வெளிநாட்டு கிளப்புகளில் உறுப்பினராகி தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறான். நான் இது போல எதையும் செய்யவில்லை.

ஞானோதயத்தின் முதல் படியாக ஒரு பெரிய வரைபட புத்தகம் வாங்கி அதில் பக்கத்திற்கு ஒன்றாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பென்ஸில் படங்கள் போட்டு வைத்திருகிறேன். பின்னர் சில வண்ணப் படங்களையும் பென்ஸில், பேஸ்டல்,ஆயில் இப்படியாக பல முயற்சிகளையும் செய்திருக்கிறேன். சில நாட்கள் rediffiland-ல் பல ஓவியங்களை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தேன். ஏதோ தவறுதல் காரணமாக எல்லாம் காணாமல் போய்விட்டது.

இவற்றை ஒரு தனி வலைப்பூவாக அமைத்து வெளியிட்டால் ஓவியத்தில் விருப்பமுள்ள இணைய நேயர்களுடன் தொடர்ந்து கருத்து பறிமாற்றம் செய்து வர முடியும் என்று தோன்றியது.

இனி ஒரு தனி வலைப்பூவில் சித்திரமும் கைப் பழக்கம் என்ற பெயரில் (http://en-chithirangal.blogspot.com/) அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். இரு பதிவுகளும் பதிவு செய்தாகி விட்டது. திரட்டிகளில் வருவதற்கு இன்னும் ஓரிரு பதிவுகள் தேவைப்படும்.

Tuesday, October 30, 2007

ஒலிநாடா to Mp3 -பகுதி 3

இந்த பதிவில் பழுதாகியுள்ள ஒரு ஒலிப்பதிவை, நீங்களே audacity ஐ உபயோகித்து சரி செய்து பார்க்க ஒரு அனுபவ பாடம்.

அதற்குமுன் சில கூடுதல் தகவல்கள்.audacity -ல் streaming audio வையும் online ஒலிப்பதிவு செய்யலாம். அதற்கு version 1.2.6 -ல் Wave-out-mix என்ற மெனுவை தேர்வு செய்யுங்கள். இது Tool Bar-ன் வலது மூலையில் இருக்கும். வலைத்தளத்திலிருக்கும் ப்ளேயலிருந்து பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் பொழுது audacity -ன் Record பொத்தானை இயக்கிவிடுங்கள். பிரமாதமாகப் பதிவாகும். ப்ராட் பேண்ட் இருந்தால் மிக்க நலம். துண்டித்தல் இல்லாமல் சீரான பதிவு கிடைக்கும். துண்டு துண்டாக பதிவானால் அதை அனுபவ பாடத்தில் விளக்கியுள்ளது போல் சரி செய்து கொள்ளலாம்.

அது போலவே கணிணியில் C D ஐ Media player-ல் பாடவிட்டு நேரடி ஒலிப்பதிவு செய்துகொள்ளலாம். ஆனால் இப்பொழுதல்லாம் Media Player லேயே CD ripping இருப்பதால் இது பெரிய விஷயமில்லைதான். ஆயினும் அதை Mp3 க்கு மாற்றுவதற்கு audacity-ன் உதவி வேண்டியிருக்கும். நேரடியாக பாடவிட்டு பதிந்தால் Mp3 ஆகவே சேமித்துக் கொள்ளலாம்.


audacityயிலும் பாடல் முடிந்தவுடன் STOP 'n' RECORD செய்தால் தனித்தனி track -க்குகளை ஒன்றின் கீழ் ஒன்றாக உருவாக்கிக்கொண்டு சேமித்துக் கொள்கிறது. ஆனால் audiograbber போல் auto save கிடையாது. ஆகையால் கடைசியில் தனித்தனியாக Export as Mp3 என்று கட்டளையிட்டே சேமிக்க வேண்டியிருக்கிறது.

மேலும் ஏதாவது கவனிக்காமல் விட்டிருந்தால் அதிக அனுபவமுள்ள வாசகர்கள் எல்லோரின் பயன் கருதி தெரிவிக்கவும்.

இப்போது அனுபவ பாடத்திற்கு வருவோம் (Practicals)

கீழே உள்ள மாதிரி-1 ஐ தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.இது இரண்டு நிமிடமே ஓடக்கூடியது. (மூலப்பதிவு- 5 1/2 நிமிடம்). அதில் 28 ஆவது நொடியிலிருந்து 54 ஆவது நொடிவரையிலான பதிவு பழுதாகியுள்ளது. இதற்கு காரணம் நாடாவில் இருந்த குறைபாடே. (esnip உறுப்பினராக இல்லாவிட்டால் கூட மேலே குறிப்பிட்டுள்ளபடி தரவிறக்கம் செய்ய முடியும்).
மாதிரி-1
Get this widget | Track details | eSnips Social DNA


தரவிறக்கம் செய்த கோப்பை audacity ல் திறந்து கீழே காட்டப்பட்டுள்ள படவிளக்கத்தைப் பயன்படுத்தி முயற்சி செய்து பாருங்கள். குறைபாடுகள் உள்ள பகுதிகளில் அலைப்பதிவுகள் துண்டு துண்டாக காட்சியளிக்கிறது. படிப்படியாக zoom செய்து நாம் அந்த பகுதிகளை கண்டறிய முடியும். பின்னர் அந்த zoom மெனு-வை வைத்தே மிகச் சரியாக வெற்று பகுதிகளை வெட்டி எறிய முடியும்.


பட விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் நேரக்கணக்கு முழுபதிவின் படி கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 52 துண்டுகள் 25 நொடிக்கான பழுதில் காணப்பட்டன.

இது வாத்திய இசையாகையினால் நான் மொத்த நீளத்தையும் வெட்டி எறிந்துவிட்டேன். அதுவே வார்த்தைகள் கூடிய பாடலானால் சற்று நிதானமாக ஒவ்வொரு blank space-யும் தனித்தனியாக வெட்டி எறிய வேண்டும். இது ஒன்றும் பிரம்ம வித்தையில்லை. கொஞ்சம் பொறுமை வேண்டும். அவ்வளவு தான்.

மாதிரி-2 கேட்டுப்பாருங்கள். 28 ஆவது நொடிக்குப்பின் வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு இயல்பாகத் தொடர்கிறது இசை ஓட்டம்.
zoom menu மிகவும் பயனுள்ள ஒரு கருவி. இதை நல்ல விதத்தில் பயன்படுத்தப் பழகினாலே ஒலிப்பதிவு நுட்பத்தில் ஒரு படி மேலே போய்விட்டோம் என்று வைத்துக்கொள்ளலாம்.

மாதிரி 2
Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, October 28, 2007

ஒலிநாடா TO குறுந்தகடு-பகுதி 2

இந்த பதிவை நாடாவிலிருந்து MP3 க்கு மாற்றப்பட்ட பாடல் ஒன்றைக் கேட்டுக்கொண்டே படியுங்கள். Fusion இசை. சங்கர் மஹாதேவன் பாடியுள்ளது.

S_M_ The Other Rhy...


Audacity உபயோகித்து Mp3 பதிவு செய்யும் முறை.

ஏற்கனவே சொல்லியுள்ளது போல் audacity ஒரு தனித்து இயங்கும் மென்பொருள். இதில் wav, mp3, ogg கோப்புகளை ஒரு வடிவத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக்கொள்ளலாம். Audiograbber போலவே லைன்-இன்-ரெகார்டிங்-கும் செய்யலாம். ஆனால் Comapct Disc CD ripping செய்ய முடியாது. இந்த மென்பொருள் .cda file extension ஏற்றுக்கொள்வதில்லை. ஆகையால் ஏதேனும் காம்பாக்ட் டிஸ்க் கோப்பை மாற்றுவதற்கும் ஒரு ப்ளேயரில் பாட விட்டு பின்னர் லைன்-இன் ஆக (ஒலிநாடாவில் செய்வது போலவே) செய்ய வேண்டும்.

Audacity-யின் அதிகப்படியான உபயோகம் ஒலிகோப்புகளை எடிட் செய்வதில் தான். இது ஒரு நல்ல ஒலிப்பதிவாளரின் உபகரணம். என்னைப் போன்றவர்கள் அதில் 20 சதம் கூட முழுதாகப் பயன் படுத்திக் கொள்ள முடியுமா என்பதே சந்தேகம். ஆர்வம் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நேரம் இருந்தால் முயன்று பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடியும்.

இனி ஒலிப்பதிவைப் பற்றிப் பார்ப்போம்.



தரவிறக்கம் செய்து கொண்ட பின் இதிலும் lame encoder ஐ பொருத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் MP3 முறையில் சேமிக்க இயலாது. File மெனுவுக்குள் சென்று preference மூலம் சேமிக்க வேண்டிய இடம் மற்றும் பிற setting களையும் அமைத்துக்கொள்ளலாம்.
Audacity மென்பொருளை திறந்த பின் ப்ளேயரை இயக்கி நேரடியாக ரெகார்ட் பொத்தானை அழுத்திவிட்டு கேஸட் முடியும் வரை காத்திருந்து நிறுத்திக்கொள்ளவும். இப்பொழுது தற்காலிக மெமரியில் கிட்டத்தட்ட அரைமணி நேர பதிவு தயாராக இருக்கும். Audiograbber போல் இதில் volume meter கிடையாது. அதற்கு பதிலாக பதிவாகும் அலைவரிசைகளையே கண்கூடாக பார்க்க முடியும். stereo வானால் இரண்டு ஜன்னல்கள் (ஒன்றன் கீழ் ஒன்றாக) காணப்படும். Mono-வானால் ஒரே ஜன்னல் தெரியும். ஒலிக் குறிகள் சரியாக மென்பொருளை அடையாவிட்டால் வெறும் ஒரு ஒற்றைக்கோடு மட்டும் நகர்ந்து செல்லும். பதிவு முடிந்தபின் அதிலுள்ள PLAY பொத்தானை இயக்கி ரெகார்டிங்கின் தரத்தை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அடுத்து நாம் முடிவு செய்ய வேண்டியது நமக்கு எல்லா பாடல்களும் தனித்தனியாக தேவைப் படுமா இல்லையா என்பதுதான். ஒரே கோப்பாக இருந்தால் பரவாயில்லை என்பதானால் எக்ஸ்போர்ட் MP3 செய்து விட்டால் சேமிப்பிற்காக கணிணி கேட்கும் சில விவரங்களைப் பூர்த்தி செய்து ஒலிக்கோப்பை சேமித்துக்கொள்ளலாம். இந்த கோப்பிலுள்ள அத்தனைப் பாடல்களும் கணிணியிலோ,காரிலோ அல்லது வேறு ப்ளேயரி்லோ ஒரே ட்ராக் காகவே காட்டப்படும். உதாரணத்திற்கு மூன்றாவது பாடல் மட்டும் கேட்கும் மனநிலையில் இருந்தால் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து தான் அதை அடையமுடியும். ஆனால் பிரித்து சேமித்து வைத்திருந்தால் நேரடியாக அதற்குண்டான ட்ராக் எண்ணை அழுத்தினால் அந்த பாடல் மட்டும் ஒலிக்கும்.
எனவே பிரித்து சேமிப்பது தான் நல்லது. இதற்கு சற்று நேரமாகும்.

இந்த விஷயத்தில் Audiograbber க்கு நன்றி சொல்ல வேண்டும். அதில் வெறும் STOP, RECORD பொத்தான்களை மாற்றி மாற்றி அழுத்தினாலே தனித்தனி கோப்புகளாக சேமிக்கப் படுமே!

Audacity-ல் இதற்காக மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதற்கு மென்பொருளில் உள்ள கர்ஸரைக் கொண்டு வேண்டிய பகுதியை highlight செய்து கொண்டு ஃபைல் மெனுவிலிருந்து "Export selection as MP3" மெனுவை சுட்டவும். இப்போது அதிலுள்ள ஹைலைட் பகுதி மட்டும் நீங்கள் விரும்பும் பெயரில் சேமிக்கப்படும். ஜன்னலை நாம் சுலபமாக பார்த்து எடிட் செய்ய view மெனுவில் zoom in, zoom out மெனுக்களை பயன்படுத்தவும். முதலில் fit-window மெனு மூலம் மொத்தப் பதிவையும் ஒரே ஜன்னலுள் பார்வையில் வைத்துக்கொண்டு cursor ஐ வைத்து வேண்டிய பகுதியை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக zoom-in செய்து துல்லியமாக ட்ராக் பிரியும் இடத்தை தேர்வு செய்யலாம். அப்படி செய்யும் பொழுது இடது கையில் shift key அழுத்திக்கொண்டு வலது கையால் Arrow key உபயோகித்து cursor- ஐ முன்பின் நகர்த்தி ஹைலைட் பகுதியை விரிக்கவோ சுருக்கவோ செய்யலாம்.
இப்படிக் கஷ்டப்பட விருப்பமில்லாதவர்கள் ஒவ்வொரு பாடலும் முடிந்தவுடனேயே ரெகார்டிங்கை நிறுத்தி Export as MP3 மூலமாக தனித்தனியாக சேகரித்து கொள்ளலாம். அப்போது ஒவ்வொரு முறையும் மென்பொருளை திறந்து மூட வேண்டும். இது பெரிய சிரமம் இல்லையென்றாலும் வேறு வேலைகளில் கவனம் செலுத்தாது இதே வேலையாக உட்கார்ந்து செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

இப்படி ஒரு வழியாக ஒவ்வொரு பாடலையும் சேமித்துக் கொண்ட பின்னர் கடைசியாக மென்பொருளை மூடும்பொழுது Do you want to save the changes என்ற உரைப் பெட்டி திறக்கும். கண்ணை மூடிக்கொண்டு NO சொல்லி விடுங்கள். அது கேட்பது .au குறியில் சேமித்துக் கொள்வதற்காக. இது audacity யின் கோப்புக் குறி. அது நமக்குத் தேவையில்லை.

இதுவரை ஒலிநாடாவிலிருந்து MP3 மாற்றுதலுக்கான முறையை மட்டும் முடிந்தவரை விளக்கி இருக்கிறேன். இன்னும் stereo split, merge, fade in, fade-out ,amplify, normalize போன்ற பல உபயோகமான கருவிகளும் உள்ளன. இவைகள் வெவ்வேறு காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை (அல்லது தரவிறக்கம் செய்தவற்றை) ஒரு CD யாக மாற்ற வேண்டினால் அவற்றை சமன் செய்ய (சில mono trackஐ stereo ஆக மாற்றவும் idle period குறைக்கவும் பலருக்கும் விருப்பமில்லாத தனி ஆவர்த்தனத்தை வெட்டி எறியவும்) பலவாறாகப் பயன்படும்.

Audacity-ல் CD burning வசதி கிடையாது. அதற்கு நாம் வழக்கம் போல் Nero அல்லது Sonic மென்பொருள்களையே பயன்படுத்த வேண்டும்.

குறைபாடுள்ள சில நாடாக்களை எப்படி சரி செய்வது என்பதை அடுத்த பதிவில் காண்க



Friday, October 26, 2007

ஒலி நாடாவிலிருந்து குறுந்தகடுக்கு மாற்று

மகனும் மகளும் ஆளுக்கொரு ஐ-பாட் அல்லது எம்பி3 ஐ காதில் மாட்டிக்கொண்டு திரிகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய பாட்டெல்லாம் இலவசமாக இந்த பிரெண்ட் அந்த பிரெண்ட் கொடுத்தான்(ள்) என்று குறுந்தகடு கொண்டு வந்து இறக்கம் செய்து கொள்கிறார்கள். நமக்கு அதை கேட்க சகிக்கவில்லை என்பது வேறு விஷயம். அவர்கள் உலகமே வேறு.
இப்படியாகி......
....இன்று டேப்ரெகார்டர் கேட்பாரற்று கிடக்கிறது. டேப் அடிக்கடி சிக்கிக் கொண்டு நல்ல டேப்பெல்லாம் பாழாய் விடுகிறது. ஹெட் வேறு அடிக்கடி கிரீச் கிரீச் னு சத்தம் போடுது. டேப் பாழாயிடும், அதில போடாதே அப்படீன்னு ஒரு பயமுறுத்தல் வேறெ.

அந்த டேப்-புக்களுக்கு உள்ளே தானே பத்து வருஷத்துக்கு முன்னாடி என் சகதர்மிணி சித்தி வினாயகர் கோவிலில் செய்த தேங்கா-மூடி கச்சேரியும், என்னோட பெண் மழலையில் மிழற்றிய "குட்டெ குட்டெ கத்திரிக்கா குண்டு குண்டு சுண்டக்கா" ரைம்ஸ்-உம் எனக்குப் பிடித்த பெங்களூர் ரமணியம்மாவின் "வேல் முருகா வேல் வேல்" ஹை எனர்ஜி பாடலெல்லாம் எல்லாம் புதைந்து கிடக்கிறது. கார் மாற்றிய போது அதனோடு காரிலிருந்த கெஸட் ப்ளேயரும் போய் புதிய எம்.பி3 வந்து அங்கேயும் கேட்க முடியாத நிலைமை. இப்போ ஒரே வழி எல்லா ஒலிநாடாக்களை எம்-பி3 ஆகவும் CD யாகவும் மாற்றுவது தான்.

அதற்கான வேண்டிய சாமான்களை சேர்த்துக் கொள்வோம்

1. முதலில் தேவைப் படுவது ஒரு நல்ல டேப் ரெகார்டர் அல்லது ப்ளேயர். Walkman கூட அழகாக ஒத்துழைக்கும். உங்கள் நிலைமையும் என் போன்றதே என்றால் ஒரு முறை இரவல் வாங்கிக் கொள்ளுங்கள் பரவாயில்லை :))

2. நல்ல சேமிப்பு திறமுள்ள ஒரு கணிணி. இது முக்கியம். ஏனெனில் ஒலிக்கோப்புகள் முதல் கட்டமாக கணிணியில் wav file முறையமைப்பில் தற்காலிகமாக சேகரிக்கப்படுகிறது. அதன் பின்னர் குறைந்த மெமரிக்கான mp3 முறைக்கு மாற்றிக் கொள்கிறது. இதில் wav கோப்புகள் சுமார் பத்துமடங்கு அளவில் பெரியவை. ஒரு நிமிடத்திற்க்கான 128 bitrate ஒலிக்கோப்பு சுமார் 1 MBஅளவே mp3 -ல் ஆகும். அதுவே wav கோப்பில்10 MB ஆக இருக்கும். இது ஒரு கைநாட்டுக் கணக்கு (rule of thumb). என் 128 MB RAM நடு நடுவே படுத்துவதால் இந்த முன்னெச்சரிக்கை. அதிக சக்தி படைத்தவர்கள் கவலைப் பட வேண்டியதில்லை.

3. அடுத்து தரவிறக்கம். இரு மென் பொருள்கள் வலையுலகில் இலவசமாகக் கிடைக்கின்றன. ஒன்று Audio grabber version 1.8.3. அடுத்தது Audacity version 1.2.6. இவ்விரண்டிற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் முதலாவது வெறும் பிடித்து வைத்து மாற்றிக் கொடுப்பது. இரண்டாவதில் அது மட்டுமல்லாமல் வெட்டி ஒட்டி, நீட்டி, செருகி பல வித்தைகளை செய்யமுடியும். அடுத்த முக்கிய வித்தியாசம் Audacity ஒரு stand alone மென் பொருள். அது program files -ல் எவ்வித மென்பொருளின் கோப்பையும் நிறுவாது. மிக சுலபமாக ஒரு கைச்சேமியில் (pen drive) எடுத்துச் சென்று எங்கு வேண்டுமானாலும் பயன் படுத்திக்கொள்ளலாம்.

4. இதையடுத்து இன்னொரு தரவிறக்கம். Lame encoder. இது ஒரு மிக மிகச் சிறியக் கோப்பு. ஆனால் மிக முக்கியமானது. WAV கோப்புகளை MP3 கோப்பாக மாற்றுவதற்கு இது அவசியம். சில காப்புரிமை பிரச்சனைகளால் இதை சேர்த்து வழங்குவதில்லை. ஆனால் தரவிறக்கத்திற்கான சுட்டிகளை அந்த வலைத்தளங்களிலே காணலாம். இந்த கோப்பையும் அவர்கள் கூறியிருப்பது போல் நிறுவிக்கொள்ளவும்.

மேற்கொண்டு இந்தப் பதிவில் Audiograbber பற்றிப் பார்ப்போம்.

Audiograbber முக்கியமாக CD யிலிருந்து இறக்கம் செய்து கொள்வதற்காகவும் MP3 மாற்றம் செய்து கொள்வதற்காகவும் செய்யப்பட்ட மென்பொருள். கூடுதலாக வானொலி அல்லது ஒலிநாடாவிலிருந்தும் இறக்கம் செய்துகொள்ள வழி செய்து இருக்கிறார்கள். இதற்கு டேப் ரெகார்டரின் out-put ஐ கணிணியின் mic-input -ல் கொடுக்க வேண்டும். இது தான் மிகவும் சிரமப்படுத்தியது. இரண்டு பக்கத்திலும் male connector உள்ள கேபிளை தேடி வாங்குவதற்குள் பெரும் சிரமப் பட்டுவிட்டேன். அந்த இணைப்பு கொடுத்து ரெகார்டரை இயக்கினால் கணிணியின் speaker மூலம் பாடலைக் கேட்க வேண்டும். அப்பொழுது இணைப்புகள் சரியாக உள்ளன என்று அர்த்தம்.
Connector cable கிடைக்காவிட்டால் ? இருக்கவே இருக்கிறது ஒரு தனியான மைக் அல்லது ஹெட் போன் மைக். அதை கணிணி input-ல் இணைத்து (சிவப்பு வர்ணப் ப்ளக்கை சிவப்பு வர்ண ஸாக்கெட்டில்) ரெகார்டரில் பாட்டை போடுங்கள். மைக் மூலம் அது உள்ளே போகும். ஆனால் நீங்கள் கேட்கும் ஒலி ரெகார்டரிலிருந்து வருவது, கணிணியின் ஸ்பீக்கர் அல்ல. மென்பொருளால் ஒலி உள்ளே வாங்கப் படுகிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது ? அதை பின்னால் பட விளக்கத்திலே காணலாம்.

தனிப்பட்ட மைக் மூலம் செய்வதில் தொல்லை என்னவென்றால் வேறு வெளிச் சத்தங்கள் பதிவு நேரத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தொலைப்பேசி அல்லது கைப்பேசி மணி அடிப்பதோ, நாற்காலியை தள்ளிக்கொண்டு எழும் சத்தமோ, வீட்டு காலிங் பெல்அல்லது குழந்தைகள் சத்தம் இப்படி பல குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இப்படி செய்வதில் ஒரிஜினல் ரெகார்டிங்-கின் தரத்திற்கு ஒரு மாற்று குறைய வாய்ப்புண்டு. ஆகவே உயர்ந்த அளவு தரம் எதிர்பார்ப்பவர்கள் connecting cable வைத்து செய்வதே சிறந்தது. அதில் மேலே சொன்ன பிரச்சனைகள் கிடையாது.

சரி இனி பட விளக்கங்களைக் காண்போம்.



நாம் ஒலிநாடா மாற்றும் முறையை மட்டுமே பார்க்கப்போவதால் CD ripping பற்றி சொல்லப் போவதில்லை. அது எளியதும் கூட. ஆகவே மென்பொருளைத் திறந்த பின் Line -in sampling என்ற மெனுவை தெரிவு செய்யவும்.



அதற்கு முன் Settings menu வில் போய், மேலே காண்பித்த படி, ஒலிக்கோப்புகள் எங்கே சேமிக்கப் பட வேண்டும் என்பதை முடிவு செய்து அந்த Folder க்கு இணைப்பை கொடுங்கள்.




Line in sampling menu வை திறந்ததும் வரும் திரை இது. மேலே கேட்ட ஒரு கேள்விக்கு பதில் இங்கே. மைக் மூலம் ஒலி சரியான முறையில் மென்பொருளுக்கு வந்து கொண்டிருப்பதை volume meter ல் முன்பின்னாக அலையும் அதிர்வுகளைக் கண்டு தெரிந்து கொள்ள முடியும். நேரடி கேபிள் இணைப்புக்கும் இது பொருந்தும். ஒலி அதிர்வுகள் வராவிட்டால் அதில் எவ்வித ஓட்டமும் தெரியாது.


ரெகார்டிங் தொடங்கும் முன் MP3 மெனுவுக்குள் சென்று Lame encoder ஐ தேர்வு செய்து கொள்ளவும். கீழே stereo, Mono போன்ற தெரிவு வசதிகளையும் தேவைக்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்கலாம். வேறு குறைவான bit rate களிலும் பதிவு செய்யலாம். கோப்பின் அளவு 128 bitrate பதிவை விட சிறியதாக இருக்கும். ஆனால் அதில் பதிவின் தரம் குறைவாக இருக்கும்.


ஒலி நாடாவை தொடர்ந்து ஓடவிட்டு பதிவு செய்தால் அது ஒரே கோப்பாக சேமிக்கப்படும். ஒரு பாடல் முடிந்ததும் STOP பொத்தானை அழுத்தினால் அது தனி Track ஆகக் சேமிக்கப்படும். மீண்டும் RECORD பொத்தானை அழுத்தினால் அது அதற்கடுத்த ட்ராக் ஆக பதிவைத் தொடரும். இவ்வாறு சிரமமே இல்லாமல் வெவ்வேறு பாடல்களை தனித்தனி ட்ராக் ஆக சேமித்துக் கொள்ள முடியும். இந்த வசதி audacity ல் கிடையாது.

பொதுவாக நினைவில் வைக்க வேண்டியவை:

ஒரு குறிப்பிட்ட ஒலி அளவில் (input volume) பதிவை தொடங்கி விட்டால் நடு நடுவே அதை மாற்றுவது கூடாது. ஆகையால் ஓரிரு பரிசோதனை ஓட்டங்கள் -playback - செய்து அதை சீரான அளவில் அமைத்துக் கொள்ளுங்கள்.

MP3 ஒலிப்பதிவு 44100 Hz, 128 bitrate ல் பொதுவாக wave கோப்புகளுக்கு இணையான ஒலி துல்லியம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சேமித்து வைக்கப்பட்ட கோப்புகளை குறுந்தகடாக மாற்றிக் கொள்ள விரும்பினால் அப்பொழுது எல்லா கோப்புகளின் frequency மற்றும் bitrate ஒன்றாக இருத்தல் நலம்.

உங்கள் கணிணியின் configuration, model க்கு ஏற்ப சில பிரச்சனைகள் தோன்றக்கூடும். முயன்றால் நீங்களே சரி செய்து கொள்ள இயலும். உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனை எனக்கும் வந்திருந்தால் அதை தீர்த்து வைக்க முயலுகிறேன். அல்லது நமது நூற்றுக்கணக்கான வலை நண்பர்களில் சிலர் தீர்த்துவைக்கக் கூடும்.

வெற்றி உமதாகட்டும்.

Audacity உபயோகித்து Mp3 பதிவு செய்யும் முறை : இங்கே

Sunday, October 14, 2007

சரக்கு வண்டியின் விடுதலை வேட்கை


ஓடாத ஓட்ட மில்லை,
காணாத தேச மில்லை
திரியாத சாலை யில்லை,
நிற்காத சந்தை யில்லை

ஏற்றாத சரக்கு இல்லை,
சேராத இலக்கம் இல்லை
குண்டு குழியும் கணக்கில் இல்லை,
கோடை குளிர் பார்ப்பதில்லை

பனி மழை பயந்ததில்லை
பகல் இரவு அறியவில்லை
இல்லையில்லை இல்லையெமக்கு
ஓய்வு என்பதில்லையே

சுற்றிச் சுற்றித் தேயும் தேகம்,
சகடம் பூட்டி சுற்றும் இவர்க்கும்
இல்லையில்லை இல்லையென்றும்
இரக்கம் என்பதில்லையே

போதும் போதும் அம்மா போதும்

வேண்டும் எமக்கு விடுதலை

வீதி நடுவே முரண்டு செய்வோம்

வேண்டி எங்கள் விடுதலை!

(போராட்டக்களம் சிகந்திராபாத்-உ.பி. வருடம் 2005)

மனிதர்களின் பணத்தாசையினால் இந்த வரலாறு காணாத போராட்டம் காணாமலே போய் விட்டது என்பதை அடிமைப்பட்டு உழலும் சரக்கு வண்டிகளின் சார்பில் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, September 22, 2007

தினமொரு சுனாமி

"சீக்கிரம் சீக்கிரம்" என்றபடி வேலை துரிதமாக நடந்து கொண்டு இருந்தது.

"ராணியம்மா அவசரப்படுத்துறாங்க. சாயந்திரதுக்குள்ள முடியணுமாம். அப்புறம் மழை வந்திடுமாம்" என்ற பேச்சும் அவசரத்துக்கு காரணமாய் இருந்தது.

"பேசாம இழுத்துக்கிட்டு போயிடுவோமா. வெட்டி கூறாக்கிக் கொண்டு போணும்னா இன்னிக்கு முடியாதும்மா"

"அதென்ன இழுத்துக்கிட்டு போற மாதிரியா இருக்கு. இம்மாம் கனம் கனக்குதே! யம்மாடி" என்று ஓரிரு பெருமூச்சுக்கள்.

"இன்னும் நூறு பேர் வந்தாலும் முடியாது போலிருக்கே. அங்க பச்சபுள்ளைங்க சோத்துக்கு அழுதுகிட்டு இருக்கும்"

" ராணி என்ன சொன்னாங்க. இந்த மாதிரி சந்தர்ப்பம் ஆயுசுல எப்பனாச்சம் ஒரு வாட்டிதான் வருமாம்.அப்புறம் ஆயுளுக்கும் சோத்து பிரச்சனை இருக்காதுன்னு சொல்லிட்டாங்களே! "

"ஆமா அப்ப மாத்திரம் உக்காந்து சாப்பிட முடியுமா இந்த ஆம்பிளைங்க மாதிரி" என்று ஒரு அலுப்புக் குரல்.

சிறிது நேரம் அமைதியாக வேலை தொடர்ந்தது.

திடீரென்று "இதென்னாடி இது. இப்பவே மழ வந்துடுச்சு போல இருக்குதே. எல்லாம் அப்படியே கெடக்கட்டும். போட்டு திரும்புங்க " என்று ஒரு குரல்.

அதுவரை ஒரே சீராக போய்க்கொண்டிருந்த வேலையினிடையே ஒரு பெரும் பரபரப்பு. திசை தெரியாத ஒரு ஓட்டம்.

"அடியே ! எங்கேடி போய்டீங்க?"

"பாதி பேரக்காணோமே"

"அய்யோ இது சுனாமி. மழை இல்ல"

என்று பல விதமானக் கூக்குரல்கள்.

நான் ஒரு குற்ற உணர்வோடு குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.

எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாகி விட்டேன்?


சிறிது நேரத்திற்கு முன் தான், முகச்சவரம் செய்து கொள்ளும் போது இந்த சிற்றெறும்புகள் செத்து போயிருந்த கரப்பான் பூச்சியைச் சுற்றி மொய்த்துக் கொண்டு நடத்திய உணவு வேட்டையை ரசித்துக் கொண்டிருந்தேன். சிறிது சிறிதாக அவைகள் தம்மிலும் பல ஆயிரம் மடங்கு பெரிய கரப்பானை நகர்த்த முயலுவது கலிவர்- லிலிபுட் கதையை ஞாபகப்படுத்தியது.

அது கடினம் என்று உணர்ந்து பின் அதையே கொஞ்சமாக கொறித்து கொறித்து வேக வேகமாக எடுத்துச் செல்வதையும் கண்டு படைப்பில் எல்லா ஜீவன்களுக்குள் இயங்கும் அந்த அபார சூட்சும அறிவை அல்லது சக்தியை எண்ணி அதிசயித்தேன்.

மனித சமுதாயமும் இவ்வெறும்புகளைப் போல் இணைந்து இயங்க கற்றுக் கொண்டால் இந்த உலகம் ஒரு அமைதி பூங்கா ஆகிவிடுமே. அவைகள் எப்படி பேசிக்கொள்ளுகின்றன ? சாலமன் கதையில் வரும் பீர்ஷீபா ராணியைப் போல் எறும்புகளின் பாஷையை தெரிந்திருந்து கொள்ளும் திறமை நமக்கும் இருந்திருந்தால்..........

இப்படி பலவகையான சிந்தைகளுக்கிடையில் ஷவரைத் திருகி குளியலை முடித்தேன். விளைவு சிற்றெறும்புகளின் சுனாமி. அவைகளின் விதியை எதிர்பாராத விதமாக நானே முடித்து விட்டேன். ஒரு சில எறும்புகள் நீர் திவலைகளுக்கிடையே திக்கித் திணறி வெளியேறும் வழி தேடிக்கொண்டிருந்தன. மனதில் குற்ற உணர்வு என்னவோ செய்தது. தினம் தினம் எத்தனை கோடிக் கணக்கான ஜீவன்கள் இப்படி பிறந்து மறைகின்றன !

இயற்கையின் பார்வையில் நாமும் வெறும் துரும்புதானே. ஒரு பூகம்பம் புயல் அல்லது சுனாமி போன்ற பெரும் அழிவு என்று நாம் வகைப்படுத்துவது இயற்கைக்கு ஒரு சிறிய அட்ஜஸ்ட்மெண்ட் தான். உட்கார்ந்திருக்கும் போது நாம் அடிக்கடி கால் மாற்றிக் கொள்வது போல. அந்நேரங்களில் கால்களின் கீழே என்ன உள்ளது என்று யோசித்திருப்போமா அல்லது யோசிக்கத்தான் போகிறோமா ?

"என்ன பாத்ரூம்ல கரப்பானெல்லம் செத்துக் கெடக்கு, கவனிக்கிறதே இல்லையா ?" என்று சொல்லியபடி என் மனசாட்சியைத் திசைத்திருப்ப சத்தம் போட்டு யாருக்கோ சொல்வது போல் சொல்லிக் கொண்டு போனேன்.
அதற்கெல்லாம் யாரும்செவி கொடுப்பது இல்லை என் வீட்டீல்.

எறும்புகளைப் பற்றி நானறிந்த குறிப்பு : தேனீக்களைப் போலவே பெண் எறும்புகள் தான் வேலை செய்யும். ஆண் எறும்புகள் சோம்பேறிகள். எறும்புகள் முட்டையை எடுத்துக் கொண்டு சுவரேறினால் அன்று மழை வரும். எறும்புகளுக்கும் ராணி எறும்புதான் தலைவி.

மேலே உள்ள உரையாடலில் "....உக்காந்து சாப்பிட முடியுமா இந்த ஆம்பிளைங்க மாதிரி" என்ற கிண்டல் வரை குளியலுக்கு முன் நான் செய்து வைத்திருந்த கற்பனை. மேலும் எப்படி கொண்டு செல்வது என்று திணறிக் கொண்டிருந்த நேரத்தில் ’உரையாடல் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்’ என்பதாக நிகழ்வுகள் தாமே முடிவுக்கு கொண்டு சென்று விட்டன.

Sunday, August 5, 2007

சனிபெயர்ச்சியும் நம் (போறாத) காலமும்

காலையிலிருந்து ஒலிபெருக்கி மூலம் சனீஸ்வரனை திருப்திபடுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய பெயர்ச்சி மூலம் என் ராசி தப்பித்துவிட்ட தைரியத்தில் இதை எழுதவில்லை. எனக்கும் சனீஸ்வரனை கண்டால் பயமும் பக்தியும் உண்டு. ஆனாலும் நம்மவர்கள் சில விஷயங்களை அளவுக்கு மீறி பெரிது படுத்தி (குட்டையை குழப்பி) வியாபாரத்தை (மீன்) பிடிக்கின்றனர். ஆடித் தள்ளுபடி, வேலன்டைன் டே போன்றே இந்த பெயர்ச்சி விவகாரமும். செல்வம் ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறுவதற்கு இதுவும் ஒரு வழி போலும். இருப்பவர்கள் கொடுக்கட்டும். நமக்கென்ன ?

சில வருடங்களுக்கு முன் ஒரு ஆராய்ச்சி மாநாட்டின் இடைவேளையில் இத்தகைய நம்பிக்கைகளைப் பற்றி உரையாடலில் பங்கு கொள்ள நேரிட்டது. அப்போது சொன்ன சில கருத்துகளை வைத்து எழுதப்பட்டது.

கேள்வி- பலரும் பல நூற்றாண்டுகளாக கேட்டுக்கொண்டிருப்பது தான்- எங்கோ உள்ள கிரகங்கள் இங்குள்ள மனிதர்களை எப்படி பாதிக்க முடியும் ?

பதில் : கிரகங்கள் எதுவும் வந்து யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அவை தம் வழியே தமக்கென்று வகுத்துள்ள வான வெளிப் பாதையில் சுற்றி வருகின்றன.

கேள்வி : அப்படியானால் ஜாதகம், சோதிடம் எல்லாம் பொய்யா ?

இதற்கு பதில் காண்பதற்கு முன் ஒரு பதில் கேள்வி. உங்களால் ஜப்பானில் நவம்பர் மாத தட்ப வெப்ப நிலையையும் மடகாஸ்கரில் பிப்ரவரி தட்ப வெப்ப நிலை மழை, காற்று நிலவரம் பற்றி சொல்ல முடியுமா ?

ஒரு பூகோளப் புத்தகத்தை எடுத்துப்பார்த்தால் முடியும்.

பூகோளப் பாடத்தில் அது எவ்வகையில் விளக்கப் பட்டுள்ளது ?

அவ்வூரின் தட்ப வெப்ப நிலையை அது அமைந்துள்ள அட்சரேகை, தீர்கரேகை கணக்கு கொண்டு கணிக்க முடியும்.

பூமியின் மேல் யார் அட்சரேகை தீர்கரேகை என்பதை நிர்ணயித்தது ?

பூகோள அறிஞர்கள் தான்.

போகட்டும். இந்த வருடம் மழை வந்ததே அடுத்த வருடம் அதே தேதியில் மீண்டும் வருமா?

வரலாம், வராமலும் போகலாம். அட்ச தீர்க ரேகைகள் வெறும் கணிப்பதற்கான ஒரு சாதனமே தவிர அவைகளே எல்லாவற்றையும் நிர்ணயிப்பதில்லை.

உங்களுடைய முதல் கேள்விக்கு இப்போது பதில் வந்து விட்டது.

எப்படி? புரியவில்லையே !

எப்படி அட்ச ரேகையும் தீர்க ரேகையும் ஒரு பகுதியின் பொதுப்படையான காலமாற்றங்களை குறிக்க இயலுமோ அது போலவே குறிப்பிட்ட கோள்களின் நிலையை கொண்டு பொதுவான சில விளைவுகளை கணிக்கும் முறை சாத்தியம் தானே ?

நீங்கள் சொல்வது பூகோள ரீதியாக உணரப்படுவதானால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் தனி மனிதர்களின் வாழ்க்கையில் எப்படி தாக்கல் இருக்க முடியும்?

அதுவும் கணிப்பிற்கு உரியதுதான். சற்று அதிகமான விவரங்கள் தேவைப்படுகின்றன. பிறந்த இடம், நேரம், நட்சத்திரம் போன்ற கூடுதல் விவரங்களை வைத்து கணிக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளனர்.

அப்படியானால் ஒரே தேதியில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பிறந்த இருவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்குமா?

இருக்கவேண்டிய அவசியமில்லை. வினைப்பயன் என்ற முக்கியமான இன்னொரு விவரம் நம் எல்லோரிடத்தும் மறைக்கப்பட்டுள்ளது. கணிக்கப்படும் எல்லா பலன்களையும் ஒரு அளவுக்குத்தான் புரிந்து கொள்ள முடியுமே தவிர உண்மையான பரிமாணம் அந்த காலக்கட்டத்தில் அனுபவிக்கும் பொழுதுதான் புரியும். ஏனெனில் பலன்களும் யாவும் அவரவர் வினைப்பயன் பொறுத்ததே. நீங்கள் குறிப்பிட்ட இருவருக்கும் முப்பது வயதிற்கு மேல் கஷ்டங்கள் (ஏழரை சனி) வருமென்றால் ஒருவர் செய்யும் தொழிலில் பெரிய கஷ்டங்களை சந்திக்கலாம். இன்னொருவர் உடல் நல ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.

எல்லாம் வினைப்பயன் என்றால் கோள் பெயர்ச்சிகளை நம்பி ஆவதென்ன ?

தேவையில்லை. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நடப்பது நடக்கத்தான் போகிறது.

பின் எதற்காக இந்த வழிபாடு என்ற கூத்து ?

நமக்கு வீட்டை விட்டு வெளியே போக வேண்டிய கட்டாயம். முக்கியமான ஒரு வேலை; உடனே செய்தாகவேண்டும். ஆனால் பலத்த மழை வந்து கொண்டிருக்கிறது. கையிலே ஒரு குடை எடுத்துச் செல்லுகிறோம். கஷ்ட காலம் என்கிற மழைக்காலத்தில் நம்பிக்கை என்பதான குடை சிலருக்கு பயன்படுகிறது. அவர்கள் அதை பிறர் கண்களைக் குத்துவது போல் பிடித்துச் செல்லாமலிருந்தால் போதும்.

ஆனாலும் இதை ஒரு விஞ்ஞானம் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லையே ?

விஜய் தொலைக்காட்சியில் Grand Master G.S.Pradeep இருபத்தியொரு கேள்விகளுக்குள்ளாக நாம் நினைத்துக்கொள்ளும் ஒரு பிரபலமான நபரையோ, இடத்தையோ அல்லது வரலாற்று நிகழ்சியையோ சொல்லி விடுவதை பார்க்கிறோம். அதற்கு பிண்ணணி அவர் தெரிந்து வைத்திருக்கும் விஷயஞானமும் கேள்விகளை கொண்டு செல்லும் விதமும்தான். அது போல ஒவ்வொரு கிரகத்தின் குணங்களும், பன்னிரெண்டு ராசிகளில் அவைகளின் நிலைப்பாட்டின் விளைவுகளும் புத்தகங்களிலே கிடைக்கப்பெற்றாலும் சேர்க்கை விளைவுகளை (Combined effect) கணிக்கும் பொழுது அதற்கு தனித்திறமை தேவைப்படுகிறது, இது பிரதீப்பின் திறமை போன்றது. அவரவர் திறமைக்கு ஏற்றார் போல் பலன்கள் கணிக்கப்படுகின்றன. கேட்டுச் சென்றவர் அனுபவத்திற்கு ஏற்ப நம்பிக்கையோ அவநம்பிக்கையோ எழுகிறது.

( இது போல் விவாதங்களில் நடுநிலை வகிக்க விழைவோரின் பயனுக்காக எழுதப்பட்டது.)

Friday, July 27, 2007

வள்ளுவர் ஆணாதிக்கத்தை ஆதரிப்பவரா ?

வாழ்க்கையில் தவிர்க்க வேண்டியவற்றை சொல்ல வரும் பொழுது அதிகாரம் 91 முழுவதுமாக பெண் வழி சேறல் என்ற தலைப்பில் மனைவிக்கு அடங்கி வாழும் மனிதரை பலவிதமாக குறைத்துப் பேசுகிறார் வள்ளுவர். உதாரணத்திற்கு சில:

1. மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாதவன் ஒரு தொழிலைச் செய்யும் தன்மை, பெருமை பெற்று விளங்க முடிவதில்லை (904)

2. மனைவிக்கு அஞ்சி வாழ்பவன் எந்நாளும் நல்லவர்களுக்கு நல்லதை செய்ய அஞ்சுவான் (905)

3. மனைவியின் விருப்பப்படி நடப்பவன், தன் நண்பனின் குறையையும் நீக்க மாட்டான்; நல்ல செயலும் செய்ய மாட்டான் (908)

4. அறச் செயலும், பொருள் தேடும் முயற்சியும், மற்ற கடமைகளும் மனைவியின் ஏவல் செய்பவனிடம் இல்லை (909)

5. நல்லதைச் சிந்தித்து அதை மனதில் கொள்ளும் தகுதி உடையவன் எக்காலத்திலும் மனைவியின் கட்டளைக்கு இணங்கும் அறியாமை உடையவன் ஆகான் (910)

இதில் விசேஷம் என்னவென்றால் 'எத்தகைய மனைவி' என்பதற்கான குறிப்பு (disclaimer) அந்த அதிகாரத்தில் எங்கும் தரப்படவில்லை. கணவனுக்கு அடங்கா மனைவி என்று நாமாகவே புரிந்து கொள்ள வேண்டுகிறது.

எல்லா சமயங்களிலும் கணவன் சரியாக செயல்படுவான் என்பதில் என்ன நிச்சயம் ? முரட்டு கணவன்மார்களையும் பொறுப்பற்ற கணவன்களையும் வழிக்குக் கொண்டுவர மனைவியானவள் சற்று மன உறுதியுடன் (Assertive) செயல்படும் நிலை ஏற்பட்டால் அதை தவறென்று கொள்ள முடியுமா ?
வெளியார்கள் முன்னிலையில் மனைவியை அன்போடு நடத்துவது போல் நடந்து தனிமையில் குத்தலும் கோபமுமாக கொடுமைப்படுத்தும் சில பேரையும் கண்டிருக்கிறோம்.

அத்தகைய மனைவிமார்கள் அச்சந்தர்பங்களில் தமது சுய மரியாதையை காத்துக் கொள்ளும் முறை பற்றி இது போலவே ஒரு அதிகாரம் ஒதுக்கி வழி சொல்லியிருந்தால் வள்ளுவரை நடுநிலையாளர் என்று போற்றியிருக்கலாம்.

போகட்டும், பெண்களைப் போற்றி என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று சில குறள்களைத் தேடினதில் 6 ஆவது அதிகாரத்தில் வாழ்க்கைத் துணைநலம் கிடைத்தது.

1. பிற தெய்வங்களைத் தொழாது தன் கணவனையே தெய்வம் என தொழுது துயில் எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும் (55)

2. தங்கள் கணவன்மார்களை வழிபடும் பெண்கள் தேவர் உலகத்தவராலும் சிறப்பிக்கப் படுவார்கள்.(58)

3. மனையறத்திற்கு ஏற்ற நற்குண செய்கைகளையும் கணவனின் வருவாய்க்கு தகுந்த வாழ்க்கையும் நடத்துபவளே இல்வாழ்க்கையின் துணையாவாள் (51)

இங்கு சொல்லப்படுவதிலும் நாம் காண்பது பெண் என்பவள் ஒரு ஆணைச் சார்ந்து அவனுக்கு அடங்கியவளாகவே வாழ்வது சிறப்பு என்ற கண்ணோட்டமே.

ஒரு வகையிலே இந்த முறை ஒரு சமுதாயக் கட்டுக்கோப்பை வளர்க்க, காக்க பயன்பட்டது என்றாலும் அக்காலங்களில் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அநீதிகளையும் அதற்கான சமூகத் தீர்வுகளையும் பற்றி எங்குமே காணப்படாதது ஆச்சரியமே.

இவ்விஷயங்களில் தேர்ச்சி உள்ளவர்கள் என் போன்ற அரைகுறைகளுக்கு உண்மை நிலையை சிறிது புரிய வைக்கலாமே !

(நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியை வரவேற்கும் பதிவு இது )

Thursday, July 19, 2007

அன்பின் வழி அறிவாரோ இவர்

இன்று நான் படித்த ஒரு கட்டுரையின் தாக்கம் இதை எழுதத்தூண்டியது. வன்முறை வழிகளால் வெறும் தனிப்பட்ட தலைமை நபரின் அரசியல் நோக்கங்கள் ஈடேறப்படுவதே அன்றி போராளிகளும் வெகுஜனங்களும் பெருமளவு பாதிக்கப் படுகின்றனர். யாஸர் அரஃபாத் பற்றிய இக்கட்டுரையில் சொல்லப்படும் கருத்துகள் சிந்திக்கவைப்பவை. இதைப் படித்தபின் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று பாடப்பெற்ற காந்திஜீயின் தலைமையைப் பெற நம் நாடு என்ன தவம் செய்திருந்ததோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அக்கட்டுரையிலிருந்து என்னை பாதித்த ஒரு சில வரிகள்.

But if one sees him as a man motivated by the spirit of destruction — as someone who hated his enemies without ever much loving his own peoplewho measured his success in the grief he inflicted on others without much caring what his supporters suffered in return: In that case, Arafat scored success after success.

In the words of his fairest and best informed biographers, Barry Rubin and Judith Colp Rubin: "This was the ultimate irony of his life: Arafat, the man who did more than anyone else to champion and advance the Palestinian cause, also inflicted years of unnecessary suffering on his people, delaying any beneficial redress of their grievances or solutions to their problems."


ஒவ்வொரு வார்த்தையும் மிக்க கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது. ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடியன. பல நேரங்களில் ஈழ சகோதர சகோதரிகளின் துயர்களைப் படிக்கும் பொழுது என் மனதில் தோன்றிய எண்ணங்களை ஒரளவு அந்த கட்டுரை பிரதிபலிப்பதாகவே நினைக்கிறேன். இடமும் காரணங்களும் சற்று வேறானவை, அவ்வளவே.

வன்முறைகளை விட்டு 'அன்பின் வழியில் தேடினால் தானே ஒளி கிடைக்கும்' என்ற நம்பிக்கையோடு செயல்பட்டால் அமைதியான உலகு பிறக்கும்.

Thursday, July 5, 2007

நலம் தரும், இதை வாசி: சுருள் பாசி- A.I.Ds க்கு ஒரு AID


SPIRULINA (ஸ்பிருலீனா) எனப்படும் சுருள் பாசி உலகத்திலேயே அதிப் பழமையான உயிரினமான சயனோபாக்டீ்ரியா குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு நன்னீரில் வளரும் நுண்பாசி. கடல் பாசி அல்ல. அதன் நீளம் 200 micron. ஒரு மைக்ரான் ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. இதைப் பார்க்க மைக்ராஸ்கோப் அவசியம். இந்தப் படம் 100 மடங்கு பெரிதாக்கப்பட்ட சுருள்பாசியின் படமாகும்.


சுருட்பாசி இன்று மருத்துவ ஆராய்ச்சிகளிலே மிக முக்கியத்துவம் பெற்று வருகிற ஒரு இயற்கை உணவாகப் போற்றப்படுகிறது.


புற்றுநோய் தடுப்பாற்றலிலிருந்து எய்ட்ஸ் நோய்க்கான தீர்வும் இதில் இருப்பதாக ஆராய்சியாளர்கள் கருதுகிறார்கள். சுருள்பாசியில் உள்ள Cynovirin N என்னும் 11Kda (da என்பது டால்டன், புரதங்களின் நீளங்களை குறிக்கும் ஒரு அளவை) நீளமுள்ள ஒரு புரதம் வைரஸ் கிருமிகளின் பெருக்கத்தை தடுத்து எய்ட்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவச உணவாக பயன்படுகிறது. எய்ட்ஸ் நோயின் முக்கிய அறிகுறி இரத்தத்தில் குறைந்து போகும் வெள்ளணுக்களும், மாக்ரோபேஜ் எனப்படும் தடுப்புசக்தியும் ஆகும்.

கதிரியக்கத்தால், உருஷ்ய நாட்டில், பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு சுருள்பாசி கொடுக்கப்பட்ட போது அக்குழந்தைகளின் உடலில் பிற (சுருள்பாசி கொடுக்கப்படாத) குழந்தைகளைக் காட்டிலும் இரத்தத்தின் வெள்ளணுக்கள் வேகமாக வளர்ந்ததைக் கண்டனர்.

இவ்விரண்டையும் இணத்துப் பார்க்கும் போது சுருள்பாசி வெறும் வைரஸின் போக்கைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்பிற்க்கு தேவையான இரத்த அணுக்களின் பெருக்கத்தையும் பலப்படுத்துகிறது என்பது புலனாகிறது.

சில வருடங்களுக்கு முன் ஒரு உயர்ந்த ஊட்டச்சத்துள்ள உபவுணவாக (Food supplement) மட்டுமே கருதப் பட்டது சுருள் பாசி. இன்று புற்று நோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி வியாதிகளுக்கு (Killer diseases) ஒரு பெரும் தடுப்பு சக்தியாக, ஒரு காப்புணவாக (Protective food) , உருவெடுத்து வருகிறதென்றால் அது மிகையில்லை.

அது என்ன காப்பு-உணவு ?

ஆரோக்கியமான தேகம் தன்னைத் தானே ஓரளவு நல்ல முறையில் காத்துக் கொள்ளக் கூடியது தான். ஆனால் தற்போதைய இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறை (தூக்கம் கெட்டு ஷிப்டில் வேலை செய்வது, இரவில் கண் முழித்து வண்டி ஓட்டுவது), பிற பழக்கவழக்கங்கள் (மது, புகைப்பிடித்தல், உணவு நேரங்களில் ஒழுங்கின்மை) போன்றவை உடலின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியன. வயிற்றில் அல்சர் வருவதற்கும் இவை காரணமாகின்றன. இவை physical stress வகையைச் சாரும்.

இவை தவிர அளவுக்கு மீறி கவலைப்படுதல் (தொழிலில் கடன் திண்டாட்டம், அலுவலகத்தில் அதிகாரிகளின் தொல்லை, மாமியார்-மருமகள் சண்டை, குழந்தைகள் பொறுப்பற்ற போக்கு, கணவன்-மனைவி தகராறுகள்.. இத்யாதி ) உடலுள் பலவிதமான இரசாயன மாற்றங்களை விளைவிக்கிறது. அதன் மூலம் உற்பத்தியாகும் இரசாயன பொருட்கள் உடலின் பல்வகையான திசுக்களை பாதித்து அவற்றின் செயல் திறனை முழுமையாகவோ அல்லது ஓரளவோ பாதித்து விடுகின்றன. இவைகளில் முதலில் பாதிக்கப்படுவது சுரப்பி வகை உறுப்புகளே. இன்சுலீன், தைராய்டு போன்றவை பாதிக்கப்பட்டால் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவை அதிகரிக்கின்றன. அதன் தொடர் வினையாக மூட்டு வலிகள், மூத்திர கோசக் கோளாறுகள் வருகின்றன. இவ்வகையில் வந்து சேரும் வியாதிகளை (நோய்வாய் படுதலை) degenerative diseases என்று கூறுவர். இவை mental stress ஆகும். இது ஒரு வகையில் உடல்மேல் மனம் செய்யும் ஆட்சியை புலப்படுத்துகிறது.

இவை மட்டுமல்லாது வேறு வகைகளில் உடலின் திசுக்களுக்கு ஊறு விளையக் கூடிய - பூச்சிக் கொல்லிகள் போன்ற - நச்சு ரசாயனங்கள், மாசுக்காற்று, மிக அதிகமான வெயில், சக்திக்கு மீறிய உடல் உழைப்பு இவைகளின் காரணமாகவும் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிக்கப்பட்ட திசுக்களே (Malignant cells) பின்னர் புற்று நோயாக உருவெடுக்கின்றன.

இவைகளுக்கான மூலக்காரணம் மேலே கூறிய ரசாயன மாற்றத்தால் வெளிப்படும் நிறைவுறா-ஆக்ஸீகரணிகளே (ஆக்ஸீகரணி= an oxidising agent)என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பல சமயங்களில் ஒரு வியாதிக்கென கொடுக்கப்படும் மருந்து பக்க விளைவை ஏற்படுத்தி வேறு ஒரு புது வியாதியைக் கொடுக்கக் கூடும். உதாரணத்திற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரிக்குப் பின் சைக்லோஸ்போரின் கொடுக்கப்படும் பொழுது பக்க விளைவாக மூத்திர கோசங்கள் பாதிக்கப்படுகின்றன. Chemotherapy என புற்று நோய்க்கென வழங்கப்படும் வெகுவான மருந்துகள் தலைமுடியெல்லாம் கொட்டிப்போகச் செய்யும்.
இத்தகைய பாதிப்பை எதிர்கொள்ள நமது உணவில் போதுமான அளவு காப்புப் சத்துக்கள் இருக்கவேண்டும். நாம் சத்துள்ள உணவு என்று கருதும் இறைச்சி, முட்டை, பால் எல்லாம் உடல் வளர்ச்சிக்கு அல்லது போஷாக்கிற்கு தேவையான ஊட்டச் சத்துகளை தருவனவே அன்றி, காப்பு-உணவு என்ற முறையில் செயல் படுவது மிகக்குறைவே. ஆகவே போஷாக்கு உணவையும் காப்புணவையும் பிரித்தறியும் காலம் வந்து விட்டது.

சரிபோதும், காப்புணவு என்ன என்பதை சொல்லித் தொலையும் என்கிறீர்களா? இதோ...

ஆங்கிலத்தில் இதை Antioxidants என்று பொதுப்படையாக சொல்வர். பலவிதமான நச்சுப் பொருட்களை சமனம் செய்ய பலவிதமான காப்புச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவைகள் நமது ஆகாரத்தில் இடம் பெற்றிருந்தால் சமனவினைக் கிரியைகள் தன்பாட்டுக்கு தானே நடந்து உடலின் திசுக்கள் காக்கப் படுகின்றன. இதற்கு ஒரு நல்ல உதாரணம் மஞ்சள். பண்டைகாலத்திலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள் இதைப் பலவிதமாகவும் பயன் படுத்தும் முறைகளை சொல்லிவைத்துள்ளனர். இதற்கு புற்று நோயை தடுக்கும் குணம் மிக அதிகமாகவே உள்ளது என்பது இன்று உலகளவிலே விஞ்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும். காப்புணவுக்கு என்பதற்கு மஞ்சள் ஒரு நல்ல உதாரணம். மஞ்சளிலுள்ள குர்குமினாய்ட்(curcuminoids) எனஅழைக்கப்படும் (இயற்கை) ரசாயனக் கூறுகளே மேலே சொன்ன காப்புத் தன்மைக்குக் காரணம்.

சுருட்பாசியின் சிறப்புத் தன்மைகள் என்னென்ன ?

முன்பே சொன்னது போல ஸயனோ-விரின்-N என்ற ரசாயனக்கூறு எச்.ஐ.வி. வைரஸ் பெருக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இது ஒரு சில கடல் பாசிகள் மற்றும் நீலப்பச்சைப் பாசிகளில் மட்டுமே காணப்படும் ஒரு இயற்கையின் வரமாகும். இதில் பைகோஸயனின் (Phycocyanin) எனப்படும் நீலச்சத்து பல விந்தையான குணங்களைக் கொண்டதாகத் தெரிகிறது. தரையில் வளரும் எந்த தாவரத்திலும் இந்த சத்து கிடையாது. ஏனெனில் நீரில் வெளிச்சம் ஊடுருவல் குறைவை சரிகட்ட குறைந்த ஒளியிலும் ஒளிச்சேர்க்கை தொடர்ந்து செய்ய சுருள் பாசி தயாரித்துக்கொள்ளும் ஒரு விசேஷ ரசாயனக்கூறு இது. இதன் மூலம் பச்சையத்தால் பயன்படுத்த முடியாத ஒளிக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு சுருட்பாசி வளர்கிறது. இதை ஆங்கிலத்தில் பில்லி ப்ரோட்டீன்ஸ் என்றும் கூறுவர்.

சுருட்பாசியை சிறந்த காப்புணவு என்பதற்கு காரணம் அதில் காணப்பெறும் அசாதாரண ஊட்டச்சத்துகளான நீலச்சத்து (Phycocyanin), ஜி.எல்.ஏ( Gama Linolenic Acid) எனப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலம், மஞ்சள் சத்து எனப்படும் கரோடீனாய்ட் (carotenoids) மற்றும் பலவிதமான நுண்சத்துகளுமாகும் (micronutrients). இவை ஒவ்வொன்றும் தனித்தனியே ஆன்டி ஆக்ஸிடென்ட் பணிபுரிய வல்லது. அதாவது பலவகையான ரசாயன கூறுகளின் தாக்கத்தையும் அதற்கேற்ற எதிர் கூறுகள் மூலம் முறியடிக்க வல்லமை தருகிறது. இதை, ஒரு ராணுவம் பல்வகையான தளவாடங்களுடன் போரை எதிர் கொள்வதைப் போன்றது. வலுவான ராணுவம் தேசத்தைக்காக்கும். வலுவான காப்புணவு தேகத்தைக் காக்கும்.

அவ்வகையில் சுருட்பாசிக்கு நிகர் சுருட்பாசிதான்.

ஆப்பிரிக்காவில், காங்கோ நாட்டில், மேற்கொண்ட ஒரு சோதனையில் நாற்பது பேர் எயிட்ஸ் நோயாளிகளில் 20 பேருக்கு வழக்கமான மருந்தும் மற்ற 20 பேருக்கு அதனோடு கூட 5 கிராம் சுருள்பாசியும் 3 மாதங்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனிறுதியில் சுருள் பாசி கொடுக்கப்பட்ட 85 சதவிகித நோயாளிகளில் வெள்ளணுக்களின் அளவு 4000 முதல் 6000 ஆகப் பெருகியிருந்தது. வெறும் மருந்து உட்கொண்டவர்களில் 11சதவிகிதம் பேரே இத்தகைய முன்னேற்றம் கண்டிருந்தனர். இது வெகு தெளிவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் சுருள்பாசியின் செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது. இந்த ஆராய்சிக்கட்டுரை 2007 மே மாதம் கென்யா நாட்டில் எய்ட்ஸ் நோய் பற்றிய ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. * இதுமட்டுமல்லாமல் சுமார் 60 சதம் நோயாளிகளின் முகவீக்கம் (facial odema)குணமாகியிருந்தது. ஆனால் வெறும் மருந்து மட்டுமே உட்கொண்டவர்களிடம் எவ்வித வீக்கக்குறைவும் காணப்படவில்லை. இதன் காரணம் சுருள் பாசி ஒரு டையூரெடிக் (diuretic) காகவும் செயல்படுவதுதான். அதிக ரத்தக்கொதிப்புள்ள நோயாளிகளுக்கு டையூரெடிக் மருந்துகள் கொடுக்கப்படும். இதனால் ரத்தத்தில் உள்ள அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு இதயத்தின் வேலைப் பளு குறைக்கப்படுகிறது. வெளியேற முடியாமல் திசுக்களில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் இவ்வாறு வெளியேற்றப்படும் பொழுது வீக்கம் குறைகிறது.

சுருள் பாசியின் பயன்களை கூற பல பதிவுகள் தேவைப்படும். அவைகளை பின்னால் பார்ப்போம்.

இதன் அடுத்தப் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்

* 4th SAHARA Conference on Social Aspects of HIV /AIDS : Innovations in Access to Prevention and treatmant and care, Kisumu, Kenya 29 April to 2 May 2007

Tuesday, June 19, 2007

கலாமுக்கு அனுப்பிய வாழ்த்து (மின்)அட்டை



திரு அப்துல்கலாம் 2002 ல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவுடனே ஒரு நாள் முழுதும் கணிணி முன் அமர்ந்து தயாரிக்கப்பட்ட மின் வாழ்த்து இது. விரிசுழல் அட்டை (animated card-மாற்று மொழிபெயர்ப்பு உண்டா ?) இருமுறை தான் செய்து காட்டும். மீண்டும் செயலிக்க இன்னொருமுறை சொடுக்கவும்.
அவருடையஆயிரக்கணக்கான அஞ்சல்களுக்கிடையில் இதற்கும் ஒரு பதில் வந்தது. அதுவும் ஒரு நன்றி அட்டை, 2020 க் கான கனவுகளோடு. கலாம் போன்றவர்கள் கனவு காண மாட்டார்கள். நம்மை முன்னோக்கோடு வழிகாட்ட விழைபவர்கள். அதைத் பின்பற்றுவதும் பற்றாததும் மக்கள் விருப்பம். அவரது பதிலைக் காண இங்கே சொடுக்கவும்.

Saturday, June 2, 2007

தருமம் பண்ணுங்க ஐயா சாமி, ஒரு ரேஷன் கார்டு

அரசாங்க அலுவலகங்களின் முன்னே மேற்படி பிச்சையெடுக்காத குறை ஒன்றுதான் பாக்கி. அதைத் தவிர எல்லாம் செய்து பார்த்தாகி விட்டது. தெய்வத்தின் கடைக்கண் எப்போது திறக்குமோ தெரியவில்லை.

இப்படி அலுத்துக் கொள்ளுமளவுக்கு என்ன ஆகிவிட்டது என்கிறீர்களா ? ஐயன்மாரே நம்ம வீட்டிலே அடுப்பு எரியணும்னா இப்போ தமிழ் நாட்டிலே ரேஷன் கார்டு அவசியம்.

தெரியாத்தனமா தில்லியிலிருந்த வேலையை விட்டு கோவைக்கு வந்தாலும் வந்தோம் பிடிச்சது ரேஷன் கார்டு என்னும் சனி.

இண்டேன் பதிவு செய்ய போன இடத்தில் முதல் கேள்வி 'ரேஷன் கார்டு காப்பி குடுங்க"
"ரேஷன் கார்டு இல்லியே.நாங்க ரேஷன் கார்டே வச்சுக்கல. வேணும்னா பாஸ்போர்ட் I D தர்ரோம்"
"அட்ரஸ் புரூவ் க்கு வேணும். ரேசன் கார்டு வாங்கியாங்க''
"இப்பத்தானே வந்திருக்கோம். அதுக்குள்ள எப்படி அட்ரஸ் புரூவ் தரமுடியும்? நீங்களே வந்து செக் பண்ணிக்குங்க''

PAN CARD, வங்கி கணக்கு என்பது போன்ற எந்த அத்தாட்சிகளும் அவர்களுக்கு ஆகாதாம். அர்த்தமற்ற வாக்குவாதமாகி ஏஜென்ஸி முதலாளியிடம் போனது விஷயம்.
"சார் நாங்க ஒண்ணும் பண்ணமுடியாது. இப்ப இன்ஸ்பெக்ஷன் எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். வேணும்னா ரெண்டு மாசத்துக்குள்ளே 'ரேஷன் கார்டு இல்லே'ன்னு ஒரு சர்டிபிகேட் தாஸில்தார்கிட்டேர்ந்து தர்றோம்-னு எழுதி கொடுங்க சிலிண்டர் ரிலீஸ் பண்றேன்"

அப்பாடா பிரச்சனை ஒருவழிக்கு வந்தது என்று பெரு மூச்சு விட்டு வீடு சேர்ந்தோம். இரண்டு மாதத்திற்குள்ளாக BSNL தொலைப்பேசி பில் ஒன்றை விலாசத்திற்கான அடையாளமாக சமர்ப்பித்து வேலை முடிந்தது என்றிருந்தேன். அப்பொழுதே முதல் எச்சரிக்கை திருமதியாளிடமிருந்து வந்தது. "இது பத்தாதுங்க. நாம தாஸில்தார் சர்டிபிகேட்-ன்னு எழுதி கொடுத்திருக்கோம். அதுக்கு விசாரிங்க". செவிடன் காதில் ஊதிய சங்காக ஆனது எச்சரிக்கை.

முதல் சிலிண்டர் தீர்ந்து புக் செய்த போது நல்லவிதமாக சிலிண்டர் வழங்கப்பட்டது. அதற்குள் மூன்று மாதங்கள் ஓடி விட்டன. No Ration-Card certificate ஐப் பற்றி நான் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை. ஐந்தாம் மாதம் இரண்டாம் முறையாக புக் செய்ய தொடர்பு கொண்டபோது வெடித்தது குண்டு

" மேடம் நீங்க இன்னும் ரேஷன் கார்டு குடுக்கல. அதனால ப்ளாக் பண்ணியிருக்காங்க மேடம்' என்ற பதில் கிடைத்தது திருமதியாளுக்கு.

அவளுடைய கோபம் என் மேல் வெடித்தது. ' ஆனாலும் ரொம்ப அலட்சியம். எல்லாருமே சொல்றாங்க.இங்கே ரேஷன் கார்டு குடுத்தே ஆகணுமாம். அதுக்கு வழியப் பாக்காமா எப்பப்பாத்தாலும் கம்ப்யூடரக் கட்டிக்கிட்டு அழுவறது' என்று தொடங்கி முற்றுப்புள்ளியில்லாமல் நீண்டது. கடைசியில் என்னை நம்பி பயனில்லை என்பது புரிந்து (அது பல வருடங்களாயிற்று) தானே அந்த அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது "நீங்க முன்னே இருந்த எடத்துலேந்து சர்டிபிகேட் வாங்கிட்டு வாங்க" என்ற பதில் கிடைத்தது. ஒரு ரேஷன் கார்டுக்கு இன்னொரு ரேஷன்கார்டு சர்டிபிகேட் !!

பந்து மீண்டும் என் கையில். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை. யாரைப் பார்த்தாலும் ரேஷன்கார்டு புராணம்தான். ஒரு அன்பர் ரூபாய் நூற்று ஐம்பதுக்கு வேலையை முடித்துத் தருவதாகக் கூறி விண்ணப்பத்தோடு பணம் வாங்கி சென்றவர் இரண்டு நாள் கழித்து "இப்போ அந்த சர்டிபிகேட் குடுக்கறத நிறுத்திட்டாங்களாம் சார் " என்று கைவிரித்தார். சாட்சிகாரன் கால்ல விழற்த விட சண்டைககாரன் (ஏஜென்ஸி) கால்ல விழுவதே மேல் அணுகு முறைப்படி இன்னொருமுறை வாய்தா வாங்கி சிலிண்டர் பிரச்சனை தற்காலிகமாக தீர்க்கப்பட்டது.

கவனிக்கவும்.செயப்பாட்டுவினை. கால்ல விழுந்தது நானல்ல.

ஆனா கால சுத்தின பாம்பு இன்னும் விடவில்லை. இதற்கு ஒரு வழி பண்ணனும் என்கிற தீர்மானத்தோடு இணைய வலையில் புகுந்து INDANE எரிவாயு வலையைப் பிடித்து நுகர்வோர் பகுதியில் விலாவாரியாக எழுதி எல்லா மட்ட அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் செய்தேன். ஒரு பெரிய காரியம் செய்த ஒரு வரட்டு பெருமையில் சில நாட்கள் கழிந்தன. இதற்கிடையில் புது விண்ணப்பப் படிவம் வாங்கி வந்து புகைப்படம் ஒட்டி எங்கோ கிடந்த SSLC சர்டிபிகேட் தேடி பிரதியெடுத்து அதனோடு இணைத்து புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பத்தையும் அலுவலகத்தின் உதவியாளர் மூலமாக அனுப்பிவைத்தாயிற்று.

பிரச்சனைத் தொடர்ந்தது. விண்ணப்பம் கொடுக்கும்பொழுது ஒரு டோக்கன் தருவார்களென்றோ அதை கொண்டுப்போய் ஏஜென்ஸியிடம் கொடுத்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தது என்றோ தெரியாமல் விட்டுவிட்டு தாஸில்தார் "எப்போ வருவாரோ" என்று காத்திருந்தோம். இரண்டு மாதங்கள் ஓடியது. தாஸில்தாரும் வரவில்லை. இன்னொரு சிலிண்டரும் தீர்ந்தது. மீண்டும் Booking Blocked.

நான் அலுவலகம் கிளம்பும் போது 'போற வழியில அவனப் பாத்துட்டு நல்லா திட்டிட்டு போங்க' என்ற அம்மணியின் உத்தரவு வந்தது. என் சாரதியிடம் வழியில 'அந்த கேஸ் ஏஜென்ஸில ரெண்டு நிமிஷம் நிறுத்துப்பா' சொல்லி வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தேன். 'ஸார் கேஸ் கம்பெனி' என்று நினைவூட்டபட்டதும் இறங்கிச் சென்றேன். அப்போதுதான் இன்னும் கூட்டி பெருக்கிக் கொண்டிருந்தனர். கேஸ் புக் பண்ணனும் என்று ஏதுமறியாதவன் போல பேச்சை ஆரம்பித்தேன். 'இதோ பாப்பா வந்துரும். பாத்துரலாம்' என்றார் பெரியவரொருவர். சிறிது நட்புத் தன்மை காணப்பட்டதால் பேச்சுவாக்கில் அவரிடம் 'ஏனிப்படி எல்லாரையும் ரேஷன்கார்டுக்காக ப்ளாக் பண்ணி தொந்தரவு பண்ணுறீங்க' சற்று உரிமையுடன் கேட்டேன். அவரோ அப்படி ஒண்ணுமில்லையே சார். நாங்க எதுவும் ப்ளாக் பண்றதுல்லையே. ஒங்க நம்பரச் சொல்லுங்க என்று கேட்டார். சந்தோஷத்துடன் அம்மணியை கைப்பேசியில் கூப்பிட்டு பதிவு எண்ணைக் கொடுத்தேன். சார் இது நம்ம ஏஜென்ஸி நம்பரே இல்லே. அவங்கள (எங்களின் ஏஜென்ஸி) தாண்டி வந்துட்டீங்க. அங்கே போய் கேளுங்க. நீங்க ரேஷன்கார்டு அப்ளிகேஷன் டோக்கன் கொடுத்தாலும் போதும்" என்றார் அவர். முகத்தில் வழிந்த படி அசடை துடைத்துக்கொண்டு சாரதியை முறைத்தேன். அவனும் அசடு வழிந்தான்.

நேரமாகிக் கொண்டிருந்தபடியால் நேரே அலுவலகம் அடைந்து அம்மணியை தாஸில்தார் ஆபீசுக்கு விரட்டி டோக்கன் நம்பரைத் தெரிந்து கொண்டு வரச் சொன்னேன். அங்கே இருந்த ஒரு மேடத்துடன் நடந்த உரையாடல்

"அப்ளிகேஷன் கொடுத்த தேதியை சொல்லுங்கள்"
"சுமார் ஒண்ணரை மாசம் ஆயிருக்கும்"
"அப்படி சொன்னா முடியாது. கரெக்டான தேதி வேணும் இல்லாட்டா தேடமுடியாது"
"தேதி ஞாபகம் இல்லியே. வேணும்னா நானே தேடிப்பாக்குறேன் ரிஜெஸ்டரை குடுங்க"

"அதையெல்லாம் ஒங்ககிட்டே கொடுக்க முடியாது. சரியான தேதி சொன்னாதான் பார்த்து சொல்லமுடியும்"

பக்கத்து மேஜைக்காரர் சற்று உதவும் நோக்கத்தோடு " மேடம் நெனச்சா செய்யலாம். மனசு வைக்கணும் " என்று திருமதியாளுக்கு ஒரு சிக்னல் கொடுத்துப்பார்த்தார். அந்த பாஷை புரியாத அம்மையார் திட்டிக்கொண்டே வெயிலில் இரண்டு பஸ் பிடித்து பசியோடு வீடு சேர்ந்தார். மாலையில் என்னுடைய நிலைமையை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

அடுத்த நாள் காலையில் ஒரு விவரமான கடிதம் எழுதி Indian Oil Corporation அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரை அணுகி ரேஷன் கார்டு தேவையில்லை என்ற விசேஷ அனுமதி பெற்று வர அம்மணியை அவருடைய சிநேகிதி துணைக்கூட்டி அனுப்பி வைத்தேன்.

" அந்த மாதிரியெல்லாம் தரமுடியாது. வேணும்னா இந்த ஒரு தடவைக்கு மட்டும் குடுக்கச் சொல்றேன். சீக்கிரம் ரேஷன் கார்டு வாங்கி குடுத்துடுங்க" என்றாராம் அந்த அதிகாரி. ஏதோ கடையில் கிடைக்கிற சாமான் போல சாதாரணமாக சொல்லியிருக்கிறார்.

"யாரும் எந்த சர்டிபிகேட்டும் தரமாட்டேனென்கிறார்களே நாங்க என்ன செய்ய முடியும்?"
"மேடம் நாங்க எங்களுக்கு வர்றர இன்ச்ட்ரக்ஷன தான் சொல்லமுடியும். நீங்க வேணும்னா கலெக்ட்ர போயி பாருங்க."

(இவர்களுக்கு பின்னால் நின்றிருந்த மனுஷன், தான் இதே ரீதியில் பலமாதங்களாக எல்லாவித அரசு அலுவல்களுக்கும் திரிந்து கொண்டிருப்பதை சொல்லிக் கொண்டராம். அவர் சொன்ன கொசுறு விஷயம்; நீங்க பதிவு பண்ண டோக்கனை கொண்டு போனாலும் அதை ஏஜெண்டுகள் ஏற்க மறுக்கின்றனர்.)

"பிரமாதம். தாஸில்தார் ஆபீஸிலிருந்து கலெக்டர் ஆபீஸுக்கு ப்ரமோஷன்" என்று திருமதியாளை கிண்டல் செய்தேன். 'இனிமே நான் எங்கேயும் போக முடியாது. அடுத்த சிலிண்டர் வரலைன்னா நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன். நீங்க ஓட்டல்ல சாப்பிட்டுக்குங்க" செய்யக்கூடியவள் தான். பிறந்த வீடு கொஞ்சம் ஸ்ட்ராங் பார்ட்டி.

இன்றைய நிலைமை இதுதான். IOCL ஆபீஸர் கொடுத்த லெட்டர் புண்ணியத்துல ஒரு சிலிண்டர் ஓடிகிட்டு இருக்கு.

ஏனிப்படி ஒரு அர்த்தமில்லாத சட்டம் என்று நினைத்து கூகிள் ஆண்டவரிடம் முறையிட்டேன். gas supply ration card என்று கீ செய்து பார்த்ததில் ஒன்று புரிந்தது. சிலிண்டர்கள் திருட்டுத்தனமாக தொழில் உற்பத்திக்கென விற்கப்படுவதை தடுக்கவே இந்த சட்டமாம். (அது சரி திருட்டு ரேஷன் கார்டுகளை எப்படி கண்டுபிடிக்க போகிறார்களாம்)

கலெக்டர் பேர் அடிபட்டதால் சிறிது அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று வலையில் சுற்றினேன். http://www.coimbatore.com/collector/suggestion.htm வலைப்பக்கம் கிடைத்தது. முன் போலவே இங்கும் என் குறையை, வயிற்றெரிச்சலை, பதிந்து வைத்திருக்கிறேன். ஒருவாரம் ஆயிற்று. இதுவரை எந்த பதிலும் இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. இன்று http://cbeonline.wordpress.com/collector என்ற வலப்பூவை கண்டு எல்லோரும் பார்க்கும் வண்ணம் அந்த கடிதத்தின் நகலையும் பதிந்து வத்துள்ளேன்.

ரூபாய் ஐநூறு கொடுத்தால் வேலையை முடித்துத் தருவதாக ஒரு தூண்டில் போடப்பட்டுள்ளது. மாட்டிக்கொள்வதா வேண்டாமா என்ற சிந்தனையில் நாட்கள் போய் கொண்டிருக்கின்றன.

யாரோ திருட்டு சிலிண்டர் விற்பதைத் தடுக்க யார்யாரெலாமோ அர்த்தமற்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி கூறுவதும் இதைத்தானோ ?

Friday, May 25, 2007

ஒரே நாளில் நஷ்டம், நூறு வருடம் !

Avoid Calf-Paths என்று நிர்வாக இயலில் ஒரு சொற்றொடர் உண்டு. 1895-ல் Walter Foss என்ற கவிஞரின் ஒரு கவிதையின் ஆரம்ப வரிகளே அதற்கு காரணம். அது இப்படிச் செல்கிறது.

A hundred thousand men were led
By one calf near three centuries dead
They followed still his crooked way
And lost one hundred years a day....

'மனிதர் யாவரும் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை கூற வந்த கவிதையின் முதல் நான்கு வரிகள் அவை. ஒரே நாளில் நூறு வருட இழப்பா ? எப்படி??

முதலில் நான் கண்ட இரு உதாரணங்களை சொல்லி விடுகிறேன்.
சென்னையில் கோட்டூர்புரத்திற்கும் நந்தனத்திற்கும் இடையே பாலம் இல்லாத காலம் 1980 வரை என்ற நினைவு. அப்போது நந்தனம் பகுதி நீச்சல் குளத்தை அடைய சுமார் ஆறு அல்லது ஏழு கி.மீ சுற்றிக்கொண்டு போக வேண்டும். அந்த மேம்பாலத்தை பல பெருங்குடிகள் கட்ட விடாமல் தடுத்ததாகக் கேள்வி. வாகனப் போக்குவரத்து அதிகமானால் அவர்கள் வசிக்கும் பகுதியின் அமைதியைக் கெடுத்து விடுமாம். அந்த அமைதிக்கு ஊறு ஏற்படாதவாறு 18B பேருந்துக்குக் காத்திருந்து, காந்தி மண்டபம், ராஜ்பவன், சைதாப்பேட்டை என்று சுற்றிக்கொண்டு போய்சேர ஒருமணி நேரம் வரை கூட தேவைப்படும். அதுவே பாலம் இருந்திருந்தால் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களிலே அடைய வேண்டிய தூரம் அது.

சரி சென்னையிலிருந்து தில்லி செல்வோம்.

10000 கோடி ரூபாய்களில் உருவாகிவரும் தில்லியின் மெட்ரோ ரயில் முதல் கட்டமாக 2002-ல் துவக்கப்பட்டது. அப்போது வெளியான விளம்பரத்தில் காணப்பட்ட ஒரு முக்கியமான விஷயம்: மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தினால் ரூ3 -8 பில்லியன் வருடத்திற்கு கச்சா எண்ணை சேமிக்க முடியும். மேலும் ஒரு மணி நேரத்திற்கு 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பயணிகளின் பயண நேரம் 50 முதல் 75 சதம் மிச்சப்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு 20 லட்சம் மனித மணித்துளிகள் ( Man-hours) மிச்சமாகும்.

இதை உழைப்பின் நேரமாக கணக்கிடுவோம். அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பாக வைத்துக் கொண்டால் 685 மனித உழைப்பு வருடங்கள் மிச்சமாகும். வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் சுமார் 685 மனிதர்கள் ஒரு வருடம் முழுவதும் உழைத்துத் தரக்கூடிய உற்பத்தித் திறன் ஒரு நாளிலேயே மிச்சப்படுகிறது!

ஆகையால் கவிஞர் Walter Foss கூற்று மிகச்சரியே ! நமது திட்டமிடும் முறையில் உள்ள கோளாறுகளையே அவரது கவிதை படம் பிடிக்கிறது.
அவர் இரண்டே வரிகளில் கூறியதை சற்றே விளக்கும் வகையில், கன்றின் பாதை எப்படி நகரத்தின் பாதையாக மாறியது என்பதையும் கால விரயம் மற்றும் எரிபொருள் விரயம் பற்றிய கவிதை இது.

அடவியுள் அன்றொரு குழக்கன்றும்
மறந்து திரிந்தது திரும்பும் வழியும்
சுற்றிச் சுற்றி சேர்ந்தது வீடும்
மறந்தே போனது சுற்றிய வகையும்


மறுநாட் காலையில் இடையன் நாயும்
மோப்பம் பிடித்ததே கன்றின் வழியும்
பின்னே சென்றது இடையன் மந்தையும்
அதுவே ஆனது பயணியின் பாதையும்


பாதையில் சென்றன வேந்தன் படையும்
முளைத்தன அருகே சாவடி பலவும்
வாணிபம் வந்தது வர்த்தகம் வளர்ந்தது
பட்டி தொட்டியும் பட்டணம் ஆனது


கன்றின் கால்கள் போன அப்பாதையில்
கணக்கிலா பேரும் வந்து போயினர்
மாறுதல் விரும்பா அவரும் நினைப்பது
முன்னவன் வழியே சாலச் சிறந்தது.


வேறு வழிகள் யோசியா இவரும்
இழைப்பரே என்றும் நட்டம் பலவும்
நாடும் இழந்தது ஒப்பிலாச் செல்வம்
மனிதவளம் தரும் உழைப்பின் நேரம்


கணித்தனர் அதையும் அறிஞர் பலரும்
நாளும் இழந்தோம் பன்னூறு வருடம்
விரயம் ஆகும் எரிபொருள் செலவும்
மீந்தால் தீர்க்குமே பசிப்பிணி யாவும்


விரயம் ஒழிந்தால் விந்தைகள் விளையும்
நேரம் போற்றின் ஏற்றம் சேரும்
சிக்கனம் என்பது சிந்தையில் வருவது
கன்றின் பாதை தவிர்ப்பது நல்லது.


(அடவி = காடு, சாவடி= வழிப்போக்கர் தங்கும் இடம் )

மிச்சப்பட்ட நேரம் சற்று அதிக நேரத் தூக்கத்திலோ அல்லது கிரிகெட் பார்ப்பதிலோ வெட்டிப் பேச்சிலோ போய்விடுமே ஒழிய தொழில் உற்பத்திக்கென பயன்படாது என்பதாக ஒருவர் கமெண்ட் அடித்தார். இன்னொரு கிண்டல்காரர் கண்டிப்பாக உற்பத்திக் கூடும் என்று வாதித்தார். அவர் சொல்வது, கூடுகின்ற மனிதவளம். இருந்தாலும் இருக்கலாம் !!

Wednesday, May 2, 2007

மனம் குன்றிய பிஞ்சுகள் :நல்வாழ்வு குழுமம்

குழந்தைகள் என்றாலே மனம் இளகும். அதிலும் மனம் குன்றிய குழந்தைகளென்றால் உருகிவிடும். அத்தகைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கென எவ்வளவு செய்தாலும் சொன்னாலும் போதாது. அவர்களின் மேம்பாட்டுக்கென குழுமம் (FORUM) வடிவமைப்பில் ஒரு வலை துவக்கப்பட்டுள்ளது. இது ஒரு பள்ளிக்கென செய்யப்பட்டிருப்பினும் இத்தகைய சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும்ஒன்று சேர்க்கும் வகையிலும், உலகத்தின் பல பாகங்களில் இது விஷயமாக நடைபெற்றுவரும் நல்ல காரியங்களையும் பரிமாற்றம் செய்து கொள்ளும் நோக்கோடு இவ்வடிவமைப்பு தரப்பட்டுள்ளது.

மனநலம் குறைப்பாடுள்ள குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள் எவருமே இதில் அங்கத்தினராகி கருத்துக்கள் சொல்லலாம். தனியாக வலையில்லாமல் செயல்பட்டுவரும் பள்ளிகளும் இத்தளத்தை, தங்களுடைய நடவடிக்கைகளை எல்லோருக்கும் தெரியும் வகையில் பயன்படுத்தலாம்.

தமிழ் பயணி நாடோடி இந்த வலையகத்தை அழகாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

வாசகர்கள் அனைவரும் இதை தேவைப்பட்டவர்களுக்கு- இவ்வகை சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், எந்த நாட்டினராயினும்- எடுத்துச் சொல்லி உறுப்பினராக்குங்கள். நீங்களும் ஆகுங்கள்

வலையகம் மற்றும் குழுமம் பார்வையிட இங்கே சொடுக்கவும்.

Monday, April 30, 2007

அற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள் -2

முதல் பகுதிக்கு >>>

ஜனாதிபதி கௌரவ் சிரோமணியின் புதிய தேர்தல் முறை வெளிநாட்டு அறிஞர்களின் பெருத்த ஆதரவைப் பெற்றாலும் அவர் எதிர்பார்த்தது போலவே அற்புதத் தீவின் அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை துவக்கின.

ஒருவரே ஒரே சமயத்தில் பலருக்கு ஓட்டளிக்க முற்படும் பொழுது தம் மனவிருப்பப்படி இல்லாமல் வாக்குப்பெட்டியின் வரிசைப்படி வாக்களித்து விட்டால் மதிப்பெண்கள் தலைகீழ் ஆகிவிடும். மதிப்பெண்கள் அளிக்கப்படும் முறை எல்லோருக்கும் புரியாது. புரியாத ஒரு செயலை செய்யச் சொல்லி வாக்குப்பெறுவது வாக்காளரை ஏமாற்றுவது போலாகும் என்று சிலர் வாதித்தனர்.

ஒரு சில கட்சிகள், ஏற்கனவே கணிணியில் முன்னேற்பாடு செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு எந்தப் பொத்தானை அழுத்தினாலும் மதிப்பெண்கள் கூடும்படியான மென்கருவிகள் நிறுவப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தமது அச்சத்தைத் தெரிவித்தன.

இது மக்கள் விரோத தேர்தல்; இதை திணிப்பதானால் தேர்தல்களைப் புறக்கணிப்போம் என்று சில தலைவர்கள் அறிக்கை விட்டனர்.

ஆனால் மக்களிடையே புது தேர்தல் முறை வரவேற்பை பெற்றது. இத்தகைய முறையில் கட்சிகள் இரண்டாவது மூன்றாவது ஓட்டுக்களை தக்க வைத்துக்கொள்ளவாவது நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன் மூலம் சட்டப் புறம்பான அடியாட்களின் ஆதிக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று தொலைக்காட்சி கருத்து கணிப்புகளில் தெரிவித்தனர்.

விடாமுயற்சியினால் சிரோமணியும் ஞானதீபனும் மற்றும் ஒத்தக் கருத்துக் கொண்டிருந்த சமூக நல அமைப்புகளும் சில வருடங்கள் போராடி ஒரு வழியாக புதிய தேர்தல் முறைக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை நிறைவேற்றினர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தேர்தல் தினமும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்யேகமான வாக்குப்பெட்டிகள் அதன் செயல் முறை, திறந்த முறை (Transparent operations) செயல்பாட்டு விளக்கங்கள் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

வாக்காளர்களுக்கு எவ்வித குழப்பமும் இருக்கவில்லை. "என்ன சார் இது! ஒன் டே கிரிகெட்-ல் இல்லாத ரூலா ! அதையே எல்லாரும் கரைச்சு குடிச்சிருக்காங்க. மூணு பேருக்கு நம்ம இஷ்டப்படி பர்ஸ்ட், செகண்ட் தர்டு சொல்லத் தெரியாதா ? என்று கிண்டலடித்தார்கள்.

கட்சிகளுக்கிடையே மக்கள் செல்வாக்குப் பெற்றவர்களை வளைத்துப்போடும் போட்டி துவங்கியது. சிவனே என்றிருந்த சில பழைய தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கதவைத் தட்டியது. வேட்பு மனு தாக்கல் துவங்கிய தினத்தன்று மாலையே ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. செய்தியின் விவரம்.

(உங்களுக்கு பிடித்த செய்தி வாசிப்பாளரின் நடையில் படித்துக் கொள்ளவும்)

" தேர்தல் ஆணையத்தில் பெரும் குழப்பம். தேர்தலை நடத்தமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் இருநூறுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பாதி பேரை தகுதி நீக்கம் செய்தாலும் சுமார் நூறு பெயர்களை இடம்பெறச் செய்யும் மின் வாக்குப்பெட்டிகள் தேவை. ஆனால் இப்போது உள்ளவை ஐம்பது பேர்களை மட்டுமே கொள்ள வல்லது. மேலும் இரு பெட்டிகளை இணையாக இயக்கி தேவையைப் பூர்த்தி செய்யலாமென்றால் அதில் interlock வேலை செய்யாது. இந்த தொழில்நுட்பத் தேவைக்கென இந்திய வல்லுனர்களை தொடர்பு கொண்டபோது தேவையான மாற்றங்களை செய்து தர பல மாதங்கள் பிடிக்குமென தெரிகிறது. மின்வாக்குப் பெட்டிகளை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க கோரியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் நடத்துவதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆலோசகர்களுடன் கலந்து முடிவு செய்வாரெனத் தெரிகிறது................."

அதை ஒட்டிய பல ஒளிப்பதிவு காட்சிகளும் விவரமாக காட்டப்பட்டன.

உயர்மட்ட ஆலோசனையில் பலிக்கடாவைத் தேடினர் சில அதிகாரிகள். "ஆர்டரிலேயே நூறு பெயர்களுக்காக என்று குறிப்பிட்டிருந்தால் இந்த குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்று தேர்தல் ஆணையத்தின் கொள்முதல் அதிகாரியை குற்றம் கண்டனர் சிலர். இதுவரை எந்த தேர்தலிலும் அதிகபட்சமாக முப்பத்திரெண்டு வேட்பாளர்களே எட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு தொகுதியில் தாக்கல் செய்திருந்தனர். சராசரியாக பத்து முதல் பதினைந்தே வேட்பாளர்கள் நாம் எதிர்பார்ப்பது. ஆகவே ஐம்பது என்பதே மிக அதிகமாகக் கருதப்பட்டது என்று தேர்தல் ஆணையம் தன் நிலையை எடுத்து சொல்லியது. தேர்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் நடத்தக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய தலைப்பட்ட போது மூன்று அல்லது நான்கு மடங்கு செலவுகள் கூடும் என பயமுறுத்தினர் கணக்குத் துறை பிரிவினர்.

இது மிகப்பெரிய சதிதிட்டம் என குற்றம் சாட்டினர் சிரோமணியின் ஆதரவாளர்கள்.

மக்கள் விரோத கொள்கைகளுக்கு மக்களே பதிலடி கொடுத்து விட்டனர் என்று கொக்கரித்தனர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அரசியல்வாதிகள்.

அற்புதத் தீவின நடைமுறைக்கு பொருந்தாது என்று நீதிமன்றத்தில் புதிய தேர்தல் முறையை ரத்து செய்யக் கோரி சிலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த குழப்பங்களுக்கிடையே வேறொரு இடத்தில் சில கோடிகள் கைமாறிக் கொண்டிருந்தன. " இன்னாங்க இது ஒவ்வொரு தொகுதிக்கும் இருநூறு பேர் ஆள் புடிச்சு அவனுங்களுக்கு வேண்டிய பத்திரமெல்லாம் உஸாரா தயாரிச்சு டெபாசிட் கட்டி, அவுனங்களை வண்டியில கூட்டியாந்து ஆபீஸர் முன்னாடி கையெழுத்து போட வக்கறது வெளயாட்டா? ஒண்ணர மாசமா எவ்ளோ அலஞ்சிருப்போம்" என்று தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர் பல தாதாக்கள்.

நேரமின்மைக் காரணமாகவும், நிதிப் பற்றாக்குறையாலும் அற்புதத் தீவில் தற்காலிகமாக மீண்டும் பழைய முறையிலேயே தேர்தல் நடத்துவது என்று உயர் மட்டக் குழு பரிந்துரை செய்தது. அதை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமன் ,மன்னிக்கவும், சிரோமணி பேரா. ஞானதீபனுக்கு , மாலை தேநீரில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பினார். வேறெதற்கு எல்லாம் தேர்தல் சீர்திருத்தங்களை விவாதிக்கத்தான்.

Sunday, April 29, 2007

அற்புதத் தீவில் தேர்தல் சீர்திருத்தங்கள்

முதல் பாகம்:

அற்புத தீவு என்பது ஆங்கிலேயர்களின் கப்பற்படைத் தளமாக இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது. அங்கே பெரும்பாலும் இந்திய வம்சாவழியினரே குடிமக்களாக இருப்பதால் அவர்களின் மனப்போக்கும் இந்திய மக்களைப் போலவே இருந்ததில் ஆச்சரியம் இல்லை. அத்தீவின் மக்கள் தொகை ஐம்பது லட்சத்திற்கும் குறைவே. ஆயினும் அவர்களுள் எத்தனை போட்டி, பொறாமை !!. என்னென்ன பெயர்களைச் சொல்லி மக்களைப் பிரித்து வைக்க முடியுமோ அத்தனையும் அங்கே அரசியல்வாதிகளால் வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர் அத்தீவை விட்டு வெளியேறியபின் அங்கே ஜனாதிபதி முறை குடியாட்சி அமலுக்கு வந்தது. அதாவது மக்கள் நேரடியாக ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். ஆனால் அன்றாட அலுவல்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை கட்சி கவனிக்கும். அவசர நிலை நடவடிக்கைகளை நிறைவேற்ற தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும்.

அற்புத தீவின் அரசியல் அலங்கோலமாக இருந்தது. எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை என்பது துர்லபமாக இருந்தது. அடிக்கடி கட்சி மாற்றங்களும் ஆட்சி கவிழ்ப்புகளும் நிலையற்ற ஒரு தன்மையை உண்டு பண்ணியது. பத்து ஆண்டுகளில் பதிமூன்று ஆட்சிகள் வந்து போயின. இதனால் அத்தீவின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.


அதிருஷ்டவசமாக அத்தீவிற்கு ஒரு நல்ல ஜனாதிபதி வாய்த்திருந்தார். நல்லவர், வல்லவர், சிந்திக்கத் தெரிந்தவர். அவர் பெயர் கௌரவ் சிரோமணி. அவருடைய தந்தையார் மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றத் தலைவராய் இருந்து சுமார் நாற்பது ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தவர். அவருடைய காலத்திற்குப் பின் சிரோமணிக்கு அப்பதவிக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. உலகின் மிக உயர்ந்த பல்கலைகழங்களில் கற்றுத் தேர்ந்தவர். எதையும் விஞ்ஞான பூர்வமாய் அணுகுபவர். எத்தகையப் பிரச்சனைக்கும் ஒரு விஞ்ஞான தீர்வு கண்டறிவதில் நாட்டம் உடையவர்.

இனம் இனத்தோடு சேரும். நல்ல ஜனாதிபதியான கௌரவ்சிரோமணிக்கு ஒரு நல்ல ஆலோசகர் இருந்தார். அவருடைய பெயர் Prof. ஞானதீபன். பல நாடுகளின் அரசியல் முறைகளை ஆராய்ந்தறிந்தவர். அற்புத தீவுகளின் அரசியல் முறையில் உள்ள குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

- பெரும்பான்மை இடங்களை வென்ற கட்சி மொத்த ஓட்டுப் பங்கில் மிக குறைவாகவே முன்னிலையில் இருக்கிறது. ஆகவே ஓட்டளிப்புக்கும் வெற்றி பெற்ற இடங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதிருப்பது ஜனங்களின் உண்மை மன நிலையை பிரதிபலிப்பதாகாது.

- பெரும்பாலான மக்கள் தாம் ஓட்டளித்தவர் தோற்று விட்டால் தமது ஓட்டு வீணாகிவிட்டது என்ற வருத்தப்படும் வகையை சேர்ந்தவர்கள். அவர்கள் அதிக வெற்றி வாய்ப்புள்ளவர்க்கே தனது ஓட்டு என்று தீர்மானிக்கின்றனர். இதுவும் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை.

- எல்லாவற்றிலும் முக்கியமாக நல்லவர்கள், சமுதாயத்திற்கு நன்மை விரும்பிகள் தேர்தலைக் கண்டாலே அஞ்சி ஒதுங்கிவிடுகின்றனர். இதனால் சுயநலமிகள் அரசியலில் பெருமளவில் ஆட்டம் போட ஏதுவாகிறது.


ஜனாதிபதி சிரோமணியும் ஞானதீபனும் பலநாள் ஆலோசனைக்குப்பின் ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப் படுத்தத் துணிந்தனர். அதன்படி மேற்க் கண்ட குறைகளை எல்லாம் பெருமளவில் களைய முடியும் என்று எண்ணினர். அவர்களின் முறைப்படி முன்கூட்டியே வெற்றி வாய்ப்புகளை கணக்கிடும் பத்திரிக்கைகள் மற்றும் பொது கணிப்புத் தேர்வுகள் இவைகளின் கணிப்பு முறையை தகர்த்தால் பொதுமக்கள் தம் சுய சிந்தனையுடன் ஓட்டளிக்க வழியுண்டாகும் என்று கருதினர். உடனடியாக சர்வதேச அமைப்புகளின் உதவியோடு சிரோமணி தமது திட்டத்திற்கு பக்கபலம் கூட்ட ஆரம்பித்தார்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. உள்நாட்டில் அரசியல் கட்சிகள் தன்னுடைய திட்டத்திற்கு ஆதரவு தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கவில்லை. அக்கட்சிகள் திட்டத்தை முறியடிக்க எதை வேண்டுமானாலும் செய்ய ஒற்றுமையுடன் (இந்த ஒரு விஷயத்தில்) செயல் படும் என்றும் அறிந்திருந்தார். ஆகவே பேரா. ஞானதீபன் மூலம் அதை வெளிநாட்டுப் பத்திரிக்கைகளிலும், கருத்தரங்கங்களிலும் ஆதரவான விமரிசனங்களை திரட்டினார்.

பேரா. ஞானதீபன் பிரபலப்படுத்திய அத் தேர்தல் முறைதான் என்ன?

அம்முறைப்படி வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்க அவர்கள் விரும்பிய வரிசையில் வாக்களிக்க முடியும். அதாவது ஓட்டு என்பது ஒருவருக்கு மட்டுமே அன்றி மூன்று அல்லது ஐந்து வாக்களர்களுக்கு ஓட்டு பதிவு செய்ய இயலும்.

மின்வாக்குப்பெட்டி ஒருவருக்கான ஓட்டை ஒருமுறைதான் பதிவு செய்யும். ஒருவரே பலமுறை ஒரு வேட்பாளருக்கு ஓட்டளிக்க முடியாது.

வாக்காளர்களின் தேர்வு படி முதல் பதிவாளருக்கு அதிக மதிப்பெண்களும்(points) இரண்டாமவர்க்கு அதிவிட குறைந்த மதிப்பெண்களும் மூன்றாமவர்க்கு அதற்குண்டான மதிப்பெண்களும் கணிணியில் தானே பதிவாகிவிடும்.

தேர்தலின் முடிவு மொத்த மதிப்பெண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஒருவரின் கணிப்பில் முதலாம் இடத்தில் உள்ள வேட்பாளர் இன்னொருவர் கணிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கக் கூடும். ஒரு வேட்பாளர் யாருடைய கணிப்பிலும் முதலிடம் பெறவில்லை என்றாலும் இரண்டாம் இடத்திலோ மூன்றாம் இடத்திலோ இருந்து கொண்டு மதிப்பெண்களை அள்ளிக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இதை weighted average கணிப்பு என்பர் ஆங்கிலத்தில்.

ஞானதீபன் கருத்தரங்களில் பயன்படுத்திய ஒரு உதாரண தேர்தல் முறையையும் முடிவுகளையும் பார்ப்போம். வேட்பாளர்கள் ஆறு பேர்.



அவர்கள் பிண்ணணி : பப்பூ குப்பா -பெரிய தொழில் சங்கத் தலைவன்.
வீரமணி ராஜாவும் மொய்தீனும் இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்கள். மற்ற மூவரும் சுயேச்சைகள். இதில் சுரேன் பாக்சி ஒரு மருத்துவர். மக்களிடையே அவருக்கு நல்ல பெயர் இருந்தது. தன்னலமில்லாமில் தொண்டாற்றுபவர் என்று மக்கள் அவரை அறிந்திருந்தனர்.

இவர்களுக்குக் கிடைத்த ஓட்டுக்களும் மதிப்பெண்களும் கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. முதல் விருப்பத்திற்கு 3, இரண்டாம் விருப்பம் 2 மற்றும் மூன்றாம் விருப்பம் 1 மதிப்பெண்களும் பெறும்.



வாக்காளரகள் 971 : மொத்தம் அளிக்கப்பட்ட வாக்குகள் : 971 x 3 = 2913. அதிகப்பட்ச மதிபெண்கள்ஒரு வேட்பாளர் பெறக்கூடியது 2913. இதன் பொருளென்ன? அத்தனை வாக்காளர்களும் ஒருவருக்கே முதல் வாக்கைத் தந்திருந்தால் பெறக்கூடிய குறியீடுகள் 2913 ஆகும். இந்த ஆறு பேரும் பெற்ற மதிப்பெண்களை அட்டவணையில் காணலாம்.

வழக்கமான தேர்தல் முறைப்படி 291 ஓட்டுகள் பெற்ற வீரமணியே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும். ஆனால் சிரோமணி ஞானதீபன் முறைப்படி வேறுவிதமான முடிவு வந்தது.

மிக பலம் வாய்நத கட்சிகளைச் சேர்ந்த வீரமணியும் மொய்தீனும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். பொதுநலத் தொண்டர் பாக்சீ மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முன்னுக்கு வந்து விட்டார். அவருக்கு கிடைத்தது = 58 x 3 +280 x 2+ 430 x1 = 1164

ஆனால் பெரும்பாலோர் அவருக்கு கொடுத்த இடமோ மூன்றாவது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்களின் எண்ணங்களை மேலும் முறையான வழியில் அறிந்து கொள்ள முற்பட்டால் வெளியாகும் முடிவுகளும் சரியான விதத்தில் அதை பிரதிபலிக்கக் கூடும்.

இக்கருத்தை ஞானதீபன் வெற்றிகரமாக நிலைநாட்டி பல நாட்டு அறிஞர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தினார். பத்திரிக்கைகள் இது நல்லவர்களை அரசியல் வட்டத்திற்குள் கவர்ந்திழுக்க ஒரு நல்ல வழி என்று பாராட்டின. பணமுதலைகளின் ஆட்டத்திற்கு இது ஒரு முடிவு என்றும் கருத்துக்கள் வெளியாயின. ரவுடிகளின் ராஜ்ஜியம் இனி அரசியல்வாதிகளின் ஆதரவுக்காக அலைய வேண்டிருக்கும்; கருத்துக் கணிப்புகள் அர்த்தமற்ற கூட்டல் கழித்தல் ஆகிவிடும் என்றெல்லாம் பேசப்பட்டன.

(அற்புத தீவில் தேர்தல் நடந்ததா முடிவுகள் என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம் )

Sunday, April 22, 2007

செல்போனும் ஆன்மீகமும்

1974 ல் தஞ்சாவூரில் முதல் முறையாக தொலைப்பேசி இணைப்பு வீட்டிற்கு வந்த போது பெரும் கொண்டாட்டம். யாரும் பெறாத பேறு பலநாள் காத்திருந்து பெற்றது. தொலைப்பேசியின் முன் பகுதி மொட்டையாக இருந்தது. எண் சுழற்றும் வசதி கிடையாது. எவருடனாவது பேச வேண்டுமானால் ரிஸீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டு சற்று பொறுத்திருக்க வேண்டும். "நம்பர் சொல்லுங்க" என்று இணைப்பகத்திலிருந்து ஒரு குரல் கேட்கும். அதிர்ஷ்டம் இருந்தால் சில நிமிடங்களிலேயே கிடைக்கும். இல்லாவிட்டால் அதன் முன் தவமிருக்க வேண்டும். 
    வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே சுரத்து போய் விட்டது. முதல் காரணம் நமக்கு வேண்டியவர்களுக்கு இன்னும் தொலைப்பேசி தெய்வத்தின் வரம் கிடைக்கவில்லை. இரண்டாவது, நமக்கு சாமியின் வரம் கிடைத்திருந்தாலும் இணையகத்தின் பூசாரிகளின் வரம் கிடைப்பது அதனினும் அரிது. யாரிடம் தொலைப்பேசுவது ? வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மணியடித்திருந்தால் அதுவே பெரிய விஷயம். 

    முப்பது வருடங்களுக்குள் நிலைமை தலைகீழ். செயற்கைக்கோள், கணிணி மற்றும் கைப்பேசிகள் (செல்போன்) உலகில் தகவல் தொடர்பை ஒரு விளையாட்டு ஆக்கி விட்டன. இதில் செயற்கைக்கோள் கடவுள் போல. எங்கோ கண்ணிற்குத் தெரியாத தூரத்தில் இருந்து இயக்குவது. கணிணிகள் ஆத்மாவைப்போல. எல்லா உயிர்களிலும் "உள்ளிருந்து இயக்குவது ஒரே ஆத்மா"தான் என்பதைப் போல. கைப்பேசிகள் மனிதரின் வடிவங்கள். வெறும் கூடு. ஒவ்வொன்றும் ஒரு ரகம்; பலவிதம் மனிதர்களைப் போலவே !

 பிறவிகளின் தொடர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மனிதர்களின் பூர்வ ஜன்ம வாசனைகளே என்று ஆன்மீகம் கூறுகிறது. இதை Bundle of Thoughts என்று கூறுவர். ஆசைகள் அறுமின் ஆசைகள் அறுமின் என்பது திருமூலர் வாக்கு. அதாவது பிறவிகளுக்கு காரணமான வினைப் பதிவுகளை விலக்குவீர் என்று பொருள். 

    இதை புரிந்து கொள்வது எப்படி. நாம் ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது எப்படி பல நூறு அல்லது ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி உள்ள இன்னொரு கைப்பேசியை தேடி அடைகிறது ? செய்தி என்பது Bundle of characters. கணிணி அதை பூஜ்யம் மற்றும் ஒன்று என்ற இலக்கங்களின் கூட்டாகத்தான் அதை அடையாளம் கொள்ளும். அது அதற்குரிய விலாசம் கிடைக்கும் வரை எங்கோ ஒரு கணிணியுள் சேமிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கைப்பேசி இயக்கப்பட்டதும் உடனடியாக கணிணி அதைக்கண்டறிந்து அனுப்பி வைக்கிறது. நமது கைப்பேசி அக்கூட்டு இலக்கங்களை குறி பெயர்த்து மீண்டும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் அளிக்கிறது. செய்தி அனுப்பிய காரியம் நிறைவேறியது. 

    ஆனால் அத்துடன் நிற்பதில்லையே. பெற்றவர் உடனே பதில் செய்தி பதிகிறார். விளையாட்டு தொடர்கிறது. வினை, எதிர்வினை என்னும் இந்த சுழலில் சிக்குண்டு எப்பொழுதும் வினைப்பதிவுகள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. ஒரு கைப்பேசி வேலை செய்யாவிட்டால் புதிதாக ஒன்றை மாற்றிக் கொள்வது போல நமது பூதவுடல் ஒத்துழைக்க மறுக்கும் பொழுது, சூக்ஷ்ம  உடல் (வினைப் பதிவுகளின் தொகுப்பு SIM card) இன்னொரு பூதவுடலுக்கு மாற்றப்படுகிறது. மீண்டும் வினப்பதிவுகளின் coding decoding விளையாட்டு. இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்.... என்பது வள்ளுவரின் வாக்கு. "இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து...." என்பது அவ்வையின் அகவல். பாவம் புண்ணியம் என்ற இருவினையுமே இருள் (அஞ்ஞானம்) சேர்ப்பவையே. இறைவனுக்கு எந்த வினையும் இல்லை. அவைகளை கடந்த நிலையே பிறவியை கடக்கும் வழி. வெறும் வினைதான் இரண்டு என்பது இல்லை.

      இயற்கையின் அமைப்பே pairs of opposites எனப்படும் துவைதநிலைதான். ஆண் பெண்; இரவு பகல்; வெப்பம் தணிப்பு ; புரோட்டான் எலக்ட்ரான் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மரபணு அளவிலே DNA வின் கூறமைப்பும் double helix. உலகில் படைத்தல் நிகழ அடிப்படை காரணத்திலேயே துவைதம் ஒளிந்து கொண்டுள்ளது. இதைத்தான் சிவம் என்றும் சக்தி என்றும் வகைப்படுத்தி வைத்துள்ளனரோ பெரியோர்கள் ! இந்த துவைதம் கணிணியையும் விட்டு வைக்கவில்லை. பூஜ்யம் (0) மற்றும் ஒன்று(1) இல்லாவிட்டால் Binary code ஏது ? பின்னர் கணிணிதான் ஏது ? கணிணியில் பார்த்து மகிழும் எல்லா வர்ணங்களும் ஆட்டம் பாட்டம் எல்லாம் இந்த (0) (1) க்குள் அடக்கம். மனிதனை விட மிக மிகப் பெரிய Designer இறைவன். அதனால் அவன் அதை ஒரு மெகா சைஸில் செய்து நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான். 

அவன் நம் SIM CARD ஐ எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் ?

Thursday, March 29, 2007

உங்கள் கவனத்திற்கு -ஒரு திருத்தம்

ஒரு சின்ன கரீக் -ஷன். நேத்திக்கு போட்ட டமாரத்தில ஒரு பொத்தல். அங்கே web site க்காக கொடுத்த லிங்க் சரியா வேலை செய்யவில்லை. கவனிக்காம விட்டது என் தப்புதான். இப்ப சரி பண்ணியாச்சு. வந்து ஏமாந்தவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். இன்னொரு தபா இங்கேயும் குடுத்துடறேன்.

www.pdstext.com

நன்றி வடுவூர் குமார்.