Tuesday, February 27, 2007

ஒரு சிறு - நிர்வாகக் -கதை

எனது தந்தையார் பல வருடங்களுக்கு முன் சொன்ன இந்தக் கதையில் ஒரு நிர்வாக (Management) ரகசியம் புதைந்திருப்பதை அனுபவ பூர்வமாகக் கண்டு கொண்டவன் நான்.

முதலில் கதை.

ஒரு ஊரில் ஒரு பணக்கார வியாபாரி இருந்தான். புகைவண்டி, பேருந்துகள் இல்லாத காலம் அது. அவன் தனது குதிரை வண்டியிலே ஊரூராகப் பயணம் செய்து பலவிதமான பொருட்களை கொள்முதல் செய்தும் விற்பனை செய்தும் செல்வம் சேர்த்தான். வசதியான வியாபாரியானதால் அவனுக்கு சொந்தத்தில் வீடு, நிலபுலன்கள், உழவு எருதுகள், கறவைப் பசுக்கள் என்று இலக்குமி கடாட்சம் பொங்கியது. தான் ஊரில் இல்லாத நேரத்தில் திருட்டு பயத்தை எதிர்கொள்ள நாய் ஒன்றையும் வளர்த்தான். ஆனால் கதையின் நாயகன் வியாபாரி அல்ல. அவனது குதிரை. இப்போது வீட்டின் பின்கட்டில் நடைபெற்ற ஒரு உரையாடலைக் கேட்போம். நேரம் இரவு பத்து மணிக்கு மேல்.

(நமது கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் இருந்தால் வசதியாக இருக்குமே. குதிரையை வீரனென்றும் உடன் உரையாடும் எருதை காளியன் என்றும் வைத்துக் கொள்வோம்.)

வீரன் : சே ! என்ன மாதிரி புல்லைப் போட்டு போறானையா மனுஷன். காஞ்சு போயி தொண்டைக்குள்ளே எறங்க மாட்டேங்குது.

காளியன் : என்ன வேய் அலுத்துக்கிறீர். நாங்களும் காஞ்சு போன வைக்கோலை தின்னுப் புட்டுதான் வெய்யில்ல வேகுறோம். இது என்ன புதுசா ?

வீரன் : அட நீ வேற வயத்தெரிச்சல கொட்டிக்கணுமா ? உமக்கெல்லாம் வருசத்தில மூணு மாசம் இல்லெ நாலு மாசம் ஒரே மாதிரி வேலை. அதுவும் சாயங்காலம் ஆச்சுன்னா வீடுதான். எம்ம பொழப்பு அப்பிடியா ! வெய்யிலு மழெ, காடு மேடு எதுவானாலும் ஓட்டம் தான். ஓடு ஓடு ஓடிகிட்டே இரு. சரியா சாப்பிட்டு மூணு நா ஆச்சி. இப்பத்தான் உள்ள வரேன். போடற புல்லு அஞ்சு நா பழசு. ஒடம்பெல்லாம் ஒரே வலி. பொழப்பு நாயி பொழப்பா போச்சு.


காளியன் : நாயி பொழப்புன்னு சொல்லாதே. கரியனுக்கு கோவம் வரும்.....
(கரியன் என்பது வியாபாரியின் நாயிற்கு இவைகளாக வைத்த அடைப்பெயர். வியாபாரியோ அதை ராஜா என்றே கொஞ்சுவான்)

வீரன் : அவனெ ஏம்பா இங்கெ இழுக்கிறெ.

காளியன் : பின்னே என்ன ! கரியனுக்கு கெடைக்கிற ராச மரியாத யாருக்கு கெடைக்குது இந்த வூட்டுல. தினந்தினம் பாலும் பிஸ்கோத்து, வாரத்துல ரெண்டு நாள் கறி. வீட்டுக்குள்ள எங்க வேண்டுமானாலும் சுத்தலாம்.யாரு மடியில வேண்டுமானாலும் ஏறி கொஞ்சலாம் ஹும்...

வீரன் : ஹும் நீ சொல்றதும் சரிதான். எல்லா நாயும் கரியன் ஆக முடியாது தான்.


பின்கட்டு ஜீவன்களுக்கு கரியனைக் கண்டால் ஒரு பொறாமை, ஒரு எரிச்சல். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கரியன் சும்மாவாவது பின்கட்டில் வந்து இந்த அற்ப ஜீவன்களிடம் தன் வெட்டி வீராப்பைக் காட்டிக் கொள்ளும். வைக்கற்புல் மேல் மதிய நேரங்களில் படுத்துக் கொள்வது, வைக்கற்புல்லைத் தின்ன வரும் ஜீவன்களை பார்த்து குரைப்பது, வீணிற்கு அவைகளின் கன்றுகளை விரட்டி பயமுறுத்துவது போன்ற பல நடவடிக்கைகள் இவைகளுக்கு அறவே பிடிக்கவில்லை.


வீட்டு முன் புறத்தில் வீதியில் போய் கொண்டிருந்த யாரையோ பார்த்து குலைக்கத் தொடங்கியது கரியன்.



காளியன் : இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. என்னமோ இவனே எல்லாத்தையும் கட்டி காக்கறதா நெனப்பு. ரொம்ப கொழுப்பு ஏறி கெடக்கான். நாக்கத் தொங்கப் போட்டுகிட்டு இங்க வந்து மணிகணக்கா உக்காந்துக்க வேண்டியது. தனக்கும் வேண்டியதில்லை அடுத்தவனையும் திங்க விடறது இல்லை. ஒரு நாளைக்கு உதை வாங்கி சாகப் போறான்.

வீரனுக்கு இருந்த களைப்பில் பேச்சைத் தொடர மனமிருக்கவில்லை. ஆனால் அன்றைய உரையாடல் மனதில் ஆழப் பதிந்தது. தானும் முதலாளியின் அன்பைப் பெறுவதே தன் சங்கடங்களை தீர்த்துக்கொள்ள வழி என்று எண்ணியது.

அன்றிலிருந்து கரியனின் நடவடிக்கைகளை உற்று நோக்கத் தொடங்கியது வீரன். எசமான் வரும் வேளையில் வாசலிலேயே காத்துக்கிடப்பது, அவன் வந்த உடன் அவனைச் சுற்றி சுற்றி வருவது அவன் சற்று மகிழ்சியாக காணப்பட்டால் தன் முன்னிரு கால்களையும் தூக்கி அவன் இடுப்பில் வைத்து தன் அன்னியோன்னத்தை வளர்த்துக் கொள்வது அதன் பின் எசமானனுக்கும் முன்பாக வேகமாக வீட்டுக்குள் ஓடி அன்பான குரைத்தல் செய்து வரவேற்பது போன்ற பல யுக்திகளை கரியன் கையாள்வதைக் கண்டது.

இதையெல்லாம் அந்த வியாபாரியும் அவன் குடும்பமும் அங்கீகரிப்பது அவர்கள் படும் சந்தோஷத்திலிருந்து தெரிந்து கொண்டது வீரன்.
ஒருவேளை இதைத்தான் இவர்கள் விரும்புகிறார்களோ, நாம் இப்படி யெல்லாம் தான் நடந்து கொள்ளாததால் தான் தன்னை இரண்டாம் தரமாக நடத்துகிறார்களோ என்பது போன்ற எண்ணங்கள் தோன்ற துவங்கியது. நாளாக நாளாக அந்த எண்ணமே வலுவானது. கடைசியாக ஒரு நாள் தாங்க முடியாமல் தானும் கரியன் போலவே தன் அன்பை வெளிக்காட்டி விடுவது என்ற முடிவு செய்தது.

வியாபாரி ஏதோ முக்கியமான விஷயமாக வெளி கிளம்பும் நோக்கத்தோடு வீரனை கொட்டிலிலிருந்து அவிழ்த்து விட்டான். அவன் வண்டியைத் தயார் செய்வதற்குள் அவனை சுற்றி சுற்றி ஓடத் தொடங்கியது வீரன். வியாபாரிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வீரனுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று கவலை ஏற்பட்டது. நடு நடுவே கனைக்கத் தொடங்கியது. வியாபாரி அதன் லாகானைப் பற்றி அதைக் கட்டுக்குள் கொண்டு வர முயல்கையில் அன்பின் மிகுதியால் தன் முன்னங்கால்களை வியாபாரியின் தோள்கள் மீது தூக்கி வைத்தது. அதன் எடை தாங்காமல் பொத்தென்று கீழே விழுந்தான் அவன். இப்போது வியாபாரிக்கு மரண பயம் வந்து விட்டது. போதாத குறைக்கு விழுந்த அவனை தனது நாக்கினால் நக்கி அன்பை வெளிக்காட்ட முயற்சித்தது வீரன். அதற்குள் அங்கு வந்த குடும்பத்தினர் வீரனுக்கு மதம் பிடித்து விட்டதென்று நையப் புடைத்து துரத்தி விட்டனர். "இரு இரு முதலில் இதை விற்று விட்டுதான் வேறு வேலை" என்று திட்டிக்கொண்டே வேட்டி சட்டை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான் வியாபாரி.

உதை வாங்கிய வேகத்தில் சற்று தூரம் ஓடி நின்ற வீரனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. கரியன் செய்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் இம்மக்கள் தன்னை மட்டும் தண்டித்தது ஏன்?

இந்த கதைக்கான உட்கருத்தை விளக்கும் போது தன் இயல்புக்கு மாறாக இன்னொருவரை போல் ஒருவர் நடந்துக் கொள்ள முற்பட்டால் அவமானமே மிஞ்சும் என்று கூறியதாக ஞாபகம்.

சரி இதில் நிர்வாக நுணுக்கம் (Management principle) என்ன உள்ளது ?

முதலாளிகள் வியாபாரியைப் போன்றவர்.

தயாரிப்பு துறையில் (Production Dept) உள்ளவர்கள் காளியன்கள் போன்ற எருதுகள்

விற்பனைத் துறையில் (Sales, Marketing) உள்ளோர் வீரன் -கள் போன்ற குதிரைகள்.

கரியன்கள் யார் ? இன்னுமா புரியவில்லை - கணக்குத் துறை ( Accounts) அல்லது நிதித் துறை (Finanace)

கதையை மீண்டும் படிக்கவும இந்தப் புதிய கோணத்துடன்.

ஒவ்வொரு துறையினரின் பரிதவிப்புகளும் நியாயமே. ஆயினும் ஒரு துறையினர் மற்றத் துறையினரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுக் கொண்டு பரிகாரம் தேட இயலாது. நான்கு அல்லது ஐந்து வருடங்களே ஆன Charted Accountant இருபது வருடங்களுக்கும் மேலாக அனுபவம் மிக்க தொழில் நுட்ப வல்லுனர்களை விட அதிக வருவாய் பெறுவது என்பது இன்றைய தொழில் உலகில் சர்வ சாதாரணம். காரணம் கரியனையும் காளியனையும் ஒப்பிட முடியாது என்பது தான்.

உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்.

Friday, February 16, 2007

முள்ளை முள்ளால் எடு

SPELLING BEE என்பது இன்று மிக உற்சாகத்துடன் கவனிக்கப்படும் போட்டி, இது நடைபெறுவது அமெரிக்காவில். உலகில் பல பகுதிகளிலும் இதனை பல கட்டங்களில் ஒளி பரப்புகிறார்கள். பங்குபெறுவோர் பதினான்கு வயதுக்குட்பட்ட (அல்லது 16) பள்ளி மாணவ மாணவிகள்.

உச்சரிக்கப்படும் ஒரு ஆங்கில வார்த்தைக்கு உரிய எழுத்துகளை கண்டுபிடிக்க வேண்டும். உச்சரிக்கப்படும் வார்த்தையின் பொருள், வேர்ச்சொல் (அதாவது மூலம்) சமயங்களில் சில குறிப்புகளும் தரப்படும்.

கொடுக்கப்படும் சொற்களைக் கேட்டால் நமது (எனக்கு) தலைசுற்றும். மருத்துவச் சொற்கள், புவியியற் சொற்கள் என்று எங்கெங்கிருந்தோ வரும். அமைதியாக அச்சொற்களை பலமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டு தத்தம் கைகளிலே எழுதிப்பார்த்து முடிவில் சரியான விடையை கூறி தன்னம்பிக்கையோடு திரும்பிச் செல்லும் குழந்தைகளைப் பார்க்கும் போது நமது விரல் மூக்கின் மேல். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இதில் இறுதி சுற்றுகளில் கடும் போட்டி கொடுப்பது நம் தேசத்து வம்சாவழியினரின் குழந்தகைள். நம்மவர்கள் எங்கு சென்றாலும் ஜே!

இன்னொரு ஆச்சரியம். எப்படி இந்த குழந்தைகள் ஆங்கிலத்திலே, கிரீக் லத்தீன் அல்லாத வெளி மொழிகளிலிருந்து வரும் சமீபகாலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வார்த்தைகளுக்கும் சரியான பதில் சொல்கிறார்கள் என்பதே. இது பிலிப்பைன் நாட்டில் வைக்கப்படும் குழம்பின் பெயராகவோ அல்லது ரஷ்யாவில் உபயோகப்படுத்தும் ஒரு வாசனை திரவியமாகவோ அல்லது ஜப்பானில் நெய்யப்படும் ஒரு துணியாகவோ, இந்தியாவின் கேரளத்தில் புழங்கும் ஒரு மசாலாப் பொருளாகவோ இருக்கலாம். ஐந்து நட்சத்திர விடுதியின் நிரல் அட்டவணையில் காணப்படும் Mulligatawny Soup ஒரு உதாரணம். நம்ம ஊர் மிளகு தண்ணியின் அவதாரம் தான் அது. அனைத்துக்கும் ஈடு கொடுக்கின்றனர் குழந்தைகள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பிற மொழிகள் ஆங்கிலத்தை வளமையாக்கிக் கொண்டிருக்கின்றன. பிற மொழிச் சேர்க்கையால் ஆங்கில மொழி வளர்ந்து வருகின்றதே அன்றி அழிந்து விடவில்லை.

உலக வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சில நாடுகளின் அதிகாரமும் அவர்களின் ஆட்சி மொழி கொடிகட்டிப் பறப்பதையும் பார்க்கிறோம். இதற்கு முக்கிய காரணம் வர்த்தகம். வருங்காலத்தில் சீன மொழி உலகில் மிகப் பரவலாகப் பேசப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனால் இத்தகைய மாற்றங்களால் ஒரு மொழி அழிந்து விடுமா? அப்படி யென்றால் தமிழ் என்றோ செத்துப் போயிருக்க வேண்டுமே. நாயக்கர்கள் காலத்தில் தெலுங்கு, பின் மராட்டியர் காலத்தில் மராட்டி, நவாபுகளின் காலத்தில் உருது அதன் பின் ஆங்கிலம் போன்ற பல காலங்களில் சிதைந்து போவதற்கான வாய்ப்புகளையும் மீறி கணிணி காலத்திலும் கொடிகட்டிப் பறக்கிறதே தமிழ் !
இதற்கு காரணம் தமிழ் வலுவான இலக்கண அடிப்படை கொண்ட ஒரு மொழி. ஆகையால் அதனை சுலபமாக சிதைக்க முடியாது. கவனக் குறைவால் சற்றே பின் தங்கி விட்டாலும் தகுந்த கட்டமைப்புக்கான வடிவு முறைகள் உள்ளதால் மீண்டும் உயிர் கொடுக்க ஒரு மீனாட்சிசுந்தரமோ, உவேசா வோ, பாரதியோ, கவிமணியோ நம்மிடையே வருவார்கள். மீண்டும் ஒரு உத்வேகம் பிறக்கும்.

குழந்தைகளை வைத்து ஆரம்பித்தேன். அவர்கள் கையில் தானே எதிர் காலமும் உள்ளது. தனியார் நிறுவனங்கள், தொலைக்காட்சியினர் இணைந்து பன்னிரண்டு முதல் பதினாறு வயது குழந்தைகைகளுக்கு ஆத்திச்சூடி ஆசாரக்கோவை, நன்னூல், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போன்ற நூல்களிலிருந்து அந்தாக்க்ஷரி, பொருளுரைத்தல், விட்ட இடத்திலிருந்து தொடருதல் என்பன போன்று பலவித போட்டிகளை கவர்சிகரமான பரிசுகளோடு நடத்த முன் வர வேண்டும். ஆயிரக்கணக்கான பள்ளிகளிடையே ஒவ்வொரு வருடமும் நல்ல கற்பனை வளத்துடன் நடத்த ஆரம்பித்தால் நமது குழந்தைகள் மட்டுமல்ல அவர்களது தாய் தந்தையரும் உற்சாகமாகத் தமிழ் கற்றிடுவர். நம் முன்னோர்களின் தீர்க்க சிந்தனையை பாராட்டும் பக்குவமும் வரும்.

பாரம்பரியம் என்பதால் வேஷ்டிக் கட்டி துண்டு போட்டத் தமிழாசிரியர் தான் சுத்தத் தமிழ்பேசி நடத்த வேண்டும் என்பதில்லை. பிற நிகழ்சிகளைப்போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக ஜீன்ஸும், டீ ஷர்ட்டுமாக (இவைகளுக்கான தமிழ் வார்த்தைகள் எனக்கு தெரியாது;தெரிந்தவர்கள் சொல்லவும்) வண்ணக் விளக்குகளின் நடுவே தமிழை பொங்குவிப்பின் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். சிறிது முனைப்புடன் செயல் பட்டால் கண்டிப்பாக மக்களிடையே வரவேற்பு பெறும். யாருக்குத்தான் தங்கள் குழந்தைகளின் திறமையை உலக மேடையில் பார்க்க விருப்பம் இருக்காது ?

இல்லாவிட்டால் "ஒட்டகத்தைக் கட்டிக்கோ" வும் "லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே" யும் "அழகான ராட்சசி" களும் தான் தமிழ் என்று இளைய தலைமுறையினர் நம்பும் நிலைக்குத் தள்ளப்படுவர். இதற்கு பொறுப்பு யார்?

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

பிற மொழிகளால் தமிழுக்கு ஆபத்து இல்லை. பிறரைத் தூற்றுவதை விட்டு ஆக்கப் பூர்வமாக தமிழ் வளர்க்க தமிழ் பற்றுள்ளவர்கள் ஆலோசிக்க வேண்டும்.

Saturday, February 10, 2007

பிணித் தீர்த்த சாதுவின் அனுபவம்

சுவாமி ராமா எழுதிய Living with the Himalayan Masters (Published by Himalayan Institute Press , Honesdale, Pennsylvania ) என்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு நிகழ்சி.

Page 340 , My Master Sends me to heal some one"

இனி சுவாமி ராமா:

எனது குருவுடன் ஒரு நாள் காலைப் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று நீ உடனே ஒரு பஸ் பிடித்து செல் என்றார். பஸ் பிடி என்றால் ஹரித்வாரத்திற்கு போகவேண்டும் என்று பொருள். பஸ் வரும் சாலை எங்கள் குகையிலிருந்து ஏழு மைல் தொலைவில் இருந்தது. எனக்கு இது புதிது அல்ல. அவர் அடிக்கடி இப்படி சொல்வதுண்டு. ஹரித்வார் போய் என்ன செய்ய வேண்டும் என்று வினவினேன் நான். "அங்கிருந்து ஒரு ரயிலைப் பிடித்து கான்பூரிலுள்ள என் பக்தன் Dr. மித்ரா வின் வீட்டுக்குச் சென்று அவனை குணப்படுத்தி வா. அவனுக்கு மூளை நரம்பு வெடித்து மூக்கிலிருந்து ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவன் சதா என் நினைவாகவே இருக்கிறான் ." என்றார். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் நான் எப்படி அவரை குணப்படுத்த முடியும் என்று கேட்டேன். " நீ செய்கிறாய் என்று நினைத்து செய்யாதே. அவரை சந்திக்கும் பொழுது அவருடைய வலது கன்னத்தை லேசாக ஒரு முறைத்தட்டு. போ. அவனருகில் நானிருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளட்டும்" என்று கட்டளையிட்டார்.

அவ்வளவு தூரப் பிரயாணத்திற்கு மனம் இடம் கொடுக்கவில்லையென்றாலும் Dr மித்ராவை நானும் ஒரளவு அறிந்து வைத்திருந்ததாலும் குருவின் ஆணையை நிறைவேற்றும் கடமையிருந்ததாலும் உடனே கிளம்பினேன். பொதுவாக ஹரித்வார் ரிஷிகேஷ் பகுதியில் சாதுக்களுக்காக எல்லா ஓட்டுனர்களும் எங்கு வேண்டுமானலும் நிறுத்தி ஏற்றி செல்லுவர். ஆகையால் ஹரித்வாரை அடைவதில் சிரமம் ஏதுமிருக்கவில்லை. கான்பூர் ரயில் கிளம்ப இன்னும் அரைமணிநேரம் இருந்தது. ஆனால் என்னிடம் பயணச் சீட்டு வாங்க பணம் இருக்கவில்லை. ஒரு பெரியவரை அணுகி என்னுடைய கைகடிகாரத்திற்கு உரிய பணம் கொடுப்பதானால் நான் பயணச் சீட்டு வாங்க இயலும் என்று தெரிவித்தேன். அவர் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்து தன்னுடன் பயணம் செய்ய வேண்டிய மகன் வர இயலாமையால் நானே அச்சீட்டில் பயணம் செய்யலாமென்று கூறி பணம் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

இரவு பயணத்தின் போது உடன் பயணம் செய்த ஒரு அம்மையார் உணவளித்து என் உணவின் தேவையை பூர்த்தி செய்தார். அவர் Dr. மித்ராவின் உறவினர். அவர் மூலமாக என் குருவைப் பற்றியும் என்னைப் பற்றியும் ஏற்கனவே அறிதிருதார். காலையில் கான்பூர் அடைந்ததும் என் வெகு நாளைய நண்பனை ரயில் நிலையத்தில் கண்டேன். அவனுக்கு வெகுவான மகிழ்சி. அவன் தேடிவந்த நபர் வரவே இல்லை. அவன் காரில் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் குறியாக இருப்பினும் நான் Dr. மித்ராவின் வீட்டிற்கு போக வேண்டிய அவசரத்தைப் புரிய வைத்து Dr. மித்ராவின் வீட்டை அடைந்தேன்.

என்னைக் கண்டதுமே Dr. மித்ராவின் மனைவியார், இந்தியர்களுக்கே உரித்தான குருட்டு நம்பிக்கையோடு "அப்பாடா இனி என் கவலை தீர்ந்தது. இனி அவர் உடல் நலம் உங்கள் கையில்" என்று சொல்லி வரவேற்றார். அந்நேரம் மூன்று மருத்துவர்கள் அருகே நின்று அவரை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். நான் வைத்தியன் அல்லவென்றும் வெறும் மித்ராவின் உடல் நலம் விசாரிக்க வந்தேனென்றும் கூறி Dr மித்ராவை அணுகினேன். என் குரு எப்படி இருக்கிறார் என்று அவர் விசாரிக்கையிலே என் குரு சொல்லியபடி அவருடைய வலது கன்னத்தை லேசாகத் தட்டினேன்.

என்ன ஆச்சரியம். சில நிமிடங்களிலேயே மூக்கின் ரத்தப் போக்கு நின்று விட்டது. ஒரு மருத்துவர் கூறினார் நான் தட்டிய வகையில் உடை பட்ட நாளம் அடைந்து போய் விட்டிருக்கும் என்று. வெகு சீக்கிரமாகவே விஷயம் பரவி அவர்கள் வீட்டின் முன் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அன்று மாலையே கிளம்பி நான் குருவின் இருப்பிடத்தை மறுநாள் சென்றடைந்தேன்.

"உங்கள் சிகிச்சையின் ரகசியம் எனக்குத் தெரியுமே" என்று அவரை கிண்டல் செய்தேன். அவரும் சிரித்துக் கொண்டே "மருத்துவர்கள் அஞ்ஞானிகள். எல்லாவற்றிலும் சிரமமான பிணி அஞ்ஞானத்தை குணப் படுத்துவதே ஆகும்" என்றார்.


இந்நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை உடையவர்கள் அறிய வேண்டியவை

1. ஞானிகளின் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே எல்லாம் அறிய வல்லவர்கள். நம்பிக்கையுடயவரின் உதவிக்கு விரைபவர்கள்.
2. அத்தகைய குரு சங்கல்பம் செய்யும் போது காலம், பொருள் எதுவும் பிரச்சனைகள் ஆவதில்லை. உதவிகள் கேட்காமலே வந்து சேரும்.
3. காரியத்தில் இறங்குபவன் தன்னை ஒரு கருவியாக உணர வேண்டும்.
4. எல்லா காலங்களிலும் இத்தகைய ஞானிகள் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள்.

Tuesday, February 6, 2007

கூகிள் ரீடர் -தனித் திரட்டி- உங்கள் திரட்டி

தமிழ் திரட்டிகள் மிக அழகாக, வெளியாகும் வலைப்பூக்களைத் தொடுத்து உடனுக்குடன் வழங்கி ஒரு பெரும் சேவை செய்து வருகின்றன. இதில் இடுகைகளின் வேகமும் பின்னூட்டங்களில் போட்டியும் புல் வளர்வதை விட படு வேகமாக காணப்படுகிறது. வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நம்மால் அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து மேய முடியாமல் போய் விடுவதுதான். நமது பசிக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. ஆனால் வேறு கடமைகளும் உள்ளனவே.

இதற்கான தீர்வை கூகிள் ரீடரில் கண்டு கொண்டேன். "பட்டால் தெரியும் பழசும் புதுசும்". நான் விழுந்து எழுந்து வருவதனால் எனக்கு இது புதுசாகத்தெரிகிறது. ஏற்கனவே அறிந்தவர்கள் என்னுடைய கற்றலில் உள்ள நிதானத்தை மன்னிப்பார்களாக.

பலரும் புது மனைப் புகுவிழா (புதிய ப்ளாகர் ) நடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒவ்வொருவரும் கூகிள் அடையாளத்தோடு தான் உள் நுழைய முடியும். அதே அடையாளத்துடன் கூகிள் ரீடருள்ளும் நுழைய முடியும் ! ஆகையால் இதற்கென தனி சிரமம் எதுவுமில்லை.

கூகிள் ரீடர் என்பது என்ன ? இது உங்கள் தனி திரட்டி. உங்களுக்கு பிடித்தமானவர்களின் வலைப்பூக்களை இதில் இணைத்துக் கொண்டுவிட்டால் ஒரு இடத்திலிருந்தே அனைவரது புதுப்பதிவுகளையும் பார்த்துக் கொள்ளலாம். (இதை கூகிள் திரட்டி செய்து கொடுக்கிறது). வேறு வேலை காரணமாக சில நாட்கள் கணிணி பக்கம் போகமுடியவில்லையா? கவலை வேண்டாம் படிக்காமல் விட்டுப் போன இடுகைகள் அனைத்தையும் கூகிள் ரீடர் அதை நீங்கள் இன்னும் படிக்காததாக சுட்டிக் காட்டும். மேலும் அங்கிருந்தே நேராக குறிப்பிட்ட இடுகைக்குச் செல்ல தனி ஜன்னலில் இணைப்பும் பெற முடியும். இதனால் பின்னூட்டம் இட்டுவிட்டு அந்த ஜன்னலை மூடிவிட்டு திரும்பவும் விட்ட இடத்தில் தொடர முடியும். வெறும் தமிழ் மட்டுமன்றி எல்லா மொழி ப்ளாகர் களையும் இதில் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.

ஒரு சங்கடம் பதிவாளருக்கு. உங்களுடைய விஜயம் அவருடைய எண்ணிப்பான்(counter) கணக்கிற்கு வராது, நீங்கள் பின்னூட்டம் இடாவிட்டால். ஏனெனில் இந்த சேவை அடொம் மூலம் தரப்படுகிறது. யாரேனும் ஒரு பதிவை இட்டு விட்டு அதை நீக்கியிருந்தாலும் ஆடம்-ல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ரீடரில் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். அப்படிப் பட்ட சில பதிவுகளையும் கண்டேன்.

தேவைப்பட்டால் நீங்கள் Mark as unread என்று குறித்துவிட்டால் எந்த குறிப்பிட்ட இடுகையும் உங்கள் பார்வையில் இருந்து கொண்டே இருக்கும். அலுப்புத்தட்டும் இடுகைகளை Mark as read என்பதை சுட்டிட்டு பார்வைக்கு வராமலே மறந்து விடலாம்.

ஆனால் பின்னூட்டத்திரட்டி இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர் சொல்லுங்களேன்; Please.

Saturday, February 3, 2007

பண்ணிய பயிரில் புண்ணியம்

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் என்று சொல்லும் ஔவைப் பாட்டியின் வரிகள் ஒரு ஆழமான கருத்தை மிக எளிமையாக புரிய வைப்பனப் போல் தோன்றுகிறது. 'பயிர்' என்பது மனிதனின் முயற்சியையும் 'புண்ணியம்' என்பது கிடைக்கின்ற பலனைப் பற்றியதும் என்று கொள்ளலாம். இதில் சற்று குழப்பமும் ஏற்படுகிறது

ஒரு சிலருக்கு பெரிய செயலாற்றல் இல்லாமலே சமய சந்தர்பங்களினாலே பெரும் வெற்றிகளை அடைகின்றனர். வெற்றி என்பது எடுத்த செயலை குறித்த விதத்தில் பலரும் பாராட்டும் விதமாக செய்து முடிப்பது. அதன் பயனாக உத்தியோக உயர்வோ, புகழோ அல்லது செல்வசிறப்போ தேடி வரலாம். வேறு ஒருத்தன், முதலில் சொன்னவனை விட புத்திசாலியாக இருந்தும் மாங்கு மாங்கென்று உழைத்த பின்னும் -உழைக்கத் தயாராக இருந்தும் - அவனை கண்டு கொள்ள யாரும் இருப்பதில்லை. இங்கே தவறான வழிகளில் ஈடுபடுவர்களைப் பற்றி மறந்து விடுவோம்.

உலக வழக்கில் சொல்வது "அவனோட டயம் நல்லா இருக்கு. தொட்ட தெல்லாம் பொன்னாகும்" . இந்த 'டயம்' என்பது என்ன? ஜாதக அமைப்பின் படி கிரக பலன்களா? ஜாதகம் கணிப்பவர்கள் 'பதவி பூர்வ புண்யானாம்' - அதாவது பூர்வ ஜென்ம பாவ புண்யங்களை ஒட்டியே பதவி (அ) வெற்றி அமையும்- என்றே எழுத துவங்குவார்களாம் !

இன்னொரு பக்கம் கண்ணனோ "கர்மத்தை செய்வது மட்டும் தான் உனது கடமை. அதன் பலன்களில் அல்ல" என்று சொல்லி விட்டான்

பகவான் இரமணரும் உபதேச சாரத்தின் முதல் உபதேசத்திலேயே சொல்வது

"கர்த்ரு ஆஞ்ஞயா ப்ராப்யதே பலம். கர்ம கிம் பரம், கர்ம தத் ஜடம்"

நாம் செய்யும் கர்மங்களெல்லாம் வெறும் ஜடம் தானாம். கிடைக்கின்ற பலன்களெல்லாம் "அவனுடய" ஆணைப்படிதானாம்.

பின் வாழ்க்கையில் நம் முயற்சிகளின் பொருளென்ன ?

ஆன்மீகத்தில் ஓரளவு ஈடுபாடுடையவர்கள் சற்று மனம் தளரும் வேளைகளில் மருந்தாகவும், ஒரு பேருண்மையின் அருகே நம்மை இட்டுச் செல்லும் வழியாக, ஒரு நம்பிக்கையோடு, இதை ஏற்க வேண்டியிருக்கிறது.

ஆனால் இத்தகைய எண்ணங்கள் சாதாரண மனிதனை 'விதிப்படி நடக்கட்டும்' என்ற Fatalist appraoch க்கு தள்ளி விடாமல் இருப்பதற்குத்தான் "முயற்சி திருவினயாக்கும்", "ஊக்கமது கைவிடேல்" என்றும் கூறி வைத்திருக்கிறார்கள் போலும் !!

எந்த ஜென்மத்து 'முயற்சியோ'

எந்த ஜென்மத்தில் 'திருவினை' யோ ?

யாமறியோம் பராபரமே

Thursday, February 1, 2007

திறந்த வெளிக் கல்வி

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது அதிவீரராம பாண்டியரின் வாக்கு. ஒருவர் கற்றவற்றை மற்றவர்க்கு சொல்லும் பொழுது அவரும் கற்றவர் ஆகின்றார். வலைப்பூ என்பது வரப்பிரசாதமாய் வந்திருக்கும் பொழுது கற்பதும் எளிதாகி விட்டது. என்னையும் உங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு திறந்த உலகம். இதோ உண்மையில் ஒரு திறந்த வெளிக் கல்வி.