Sunday, June 27, 2010

மக்குத்திம்மன் கவிதைகள் (2)

1920-ல் ஆசியாவிலேயே மிகப்பெரிய அணை எனக் கருதப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை மைசூர் அருகே கட்டப்பட்டு வந்தது. அதன் தலைமை பொறிஞர் சர்.M.விஸ்வேசுவரய்யா ஊரூராக பயணம் செய்து சர்வே செய்ய வேண்டியிருந்தது. உணவகங்கள் இல்லாத அக்காலத்தில் சிறிய ஊர் ஒன்றில் அன்பர் ஒருவரின் வீட்டில் மதிய உணவு ஏற்பாடு ஆகியிருந்தது. மலர்ந்த முகத்துடன் சர் MV சாப்பிட்டு முடித்தார். அவருக்குப் பின் சாப்பிட்டவர்களுக்கு உணவில் உப்பின் அளவு அதிகமாகி விட்டிருந்தது தெரிந்தது. சமைத்தவர் மறந்து இருமுறை அள்ளிப் போட்டாரோ என்னமோ !

பின்னால் சர் MV யிடம் ’சாப்பிடும் போது ஏன் இதைச் சொல்லவே இல்லை’ என்று வினவியதும் ” ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி இருக்கும், நமக்கு உணவின் ருசியா முக்கியம் “ என்று பதிலளித்தாராம்.

அவருக்கு இருந்த கடமை உணர்வு இன்றும் கர்நாடகமெங்கும் போற்றப்படுகிறது. அவருடைய நண்பர் ஒரு மாலையில் அவரை சந்தித்து உரையாட சென்ற போது அலுவல் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவரை அமரச் சொல்லி விட்டு மேலும் சிறிது நேரம் கோப்புகளில் கவனமாய் இருந்தார். வேலை முடிந்ததும் கோப்புகளை ஒரு ஓரமாக அடுக்கி, எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைத்து வேறொரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து நண்பருடன் அளவளாவத் துவங்கினார்.

நண்பருக்கோ ஆச்சரியம். ’அதே மெழுகுவர்த்தி இருந்திருக்கலாமே’ என்று கேட்டார். “ அது அலுவல் காரியங்களுக்காக வாங்கப்பட்டிருப்பது. இப்போது எரிவது என் தனிப்பட்ட காரியங்களுக்காக நான் வாங்கி வைத்திருப்பது “ என்று விளக்கினாராம்.

பாரதத்தின் முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது விஸ்வேசுவரய்யாவுக்கு 1955-ல்

D.V.குண்டப்பா அவர்கள் சிறிது காலம் சர் எம்.விஸ்வேசுவரய்யாவுக்கு உதவியாளராக இருந்திருக்கிறார். அதன் தாக்கமோ என்னவோ மக்குத் திம்மனாகிய தனக்கு சொல்லிக் கொள்வது போல் அவர் சொல்லும் புத்திமதியை கேளுங்கள்.

சிரத்தையுடன் கருமம் செய்திடு, சிறிதெனாமல் |
பிரசாதமாய், கிடைத்ததை புசித்திடு முணகாமல்||
மறவாமல் மறைபொருளை, சுமந்திடு இகபாரம்|
புறப்படு கூப்பிட்டதும், அழாமலே -மக்குத்திம்மா||


(மறைபொருள் = வாழ்க்கையின் உட்பொருள், முக்திக்கான தேடல்)