Wednesday, December 30, 2009

பாரதி மன்னிக்கட்டும்

புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் உள்ள ஆர்வம் சில சமயங்களில் உரிமை மீறல்களுக்கு வகை செய்து விடுகிறது. அவ்வகையில் பாரதியின் இப்பாடலை சிதைத்ததற்கு அவரிடம் மன்னிப்புக் கோரி வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.[படத்தை சொடுக்கினால் பெரிய அளவில் தெரியும்]

Friday, December 25, 2009

World space க்கு என்ன ஆச்சு ?

இன்றைக்கு மின் அஞ்சலில் வந்த செய்தி :

//This action is an outgrowth of the financial difficulties facing WorldSpace India's parent company, WorldSpace, Inc., which has been under bankruptcy protection since October 2008. The potential buyer of much of WorldSpace's global assets has decided not to buy the WorldSpace assets relating to and supporting WorldSpace's subscription business in India. As a consequence, WorldSpace, Inc. must discontinue its subscriber business in India. Your subscription contract is with WorldSpace, Inc., a US company that is in a bankruptcy proceeding in the United States. The company recognizes that you may have paid for services to be rendered beyond the termination date, but is not in a position to offer a refund for any unused portion of your subscription. //

ஒரு தரமான வானொலி ஒலிபரப்பு, விளம்பர தொல்லைகள் இல்லாமல் வந்து கொண்டிருந்தது.

இப்போது அதில் மண் ! :((

ஜஸ்பால் பட்டி ”FLOP SHOw”என்கிற தூர்தர்ஷன் தொடரில் வேலை செய்யாத BSNL தொலை பேசி மேல் துண்டைப் போட்டு ”மர்கயே.. மர்கயே” என்று காமெடி பண்ணினது போல நாமும் நம்முடைய அந்த ரேடியோ மேல் துண்டைப் போட்டு துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது தான்.


மிகப் பிரபலமான திரைப்படப் பாடலை வைத்து தொலைப்பேசியை நையாண்டி செய்து இருப்பதை இங்கே கேட்டு மகிழுங்கள்

Wednesday, December 2, 2009

கடவுளுடன் ஒரு அரட்டை

கணிணியில் மிக மும்முரமாக ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த போது டண் என்று அரட்டைக்கான அழைப்பு மணி அழைத்தது.

hello ,did you call me ?


Called you? No. Who is this?


this is God, i heard your prayers; so i thought i will chat


( அரட்டை இனி தமிழில் தொடரும்)

நான்: கடவுளை கும்பிடுவதுண்டு. ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி அவ்வளவுதான். இப்பொழுது ஒரு முக்கியமான காரியமாக இருக்கிறேன்
.
கடவுள்: என்ன காரியம்? எறும்புகள் கூடத்தான் காரியமாக இருக்கும்.

நான்: சரியாக சொல்லமுடியவில்லை. ஆனால் நேரமே இருப்பதில்லை. எப்போதும் ஓட்டம் தான்

கடவுள்: ஆமாம். காரியமென்றால் (activity) முடியாது. உற்பத்தியானால் (productivity) முடியும். காரியம் நேரத்தை தின்று விடும். உழைப்பு நேரத்தை மிச்சமாக்கும்

நான்
: புரிகிறது. ஆனால் எப்படி என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் உம்மை அரட்டை பெட்டியில் எதிர்பார்க்கவில்லை
கடவுள்: போகட்டும்.நேரத்திற்கான போராட்டத்தை பற்றி உனக்கு சிறிது புரியவைக்கலாமென்று தோன்றியது. இந்த மின்னல்வேக கணிணி யுகத்தில் உனக்கு வசதிப்படும் வகையிலேயே பேசலாமே என்றுதான் வந்தேன்.

நான்:நீங்களே சொல்லுங்கள். இப்போது வாழ்க்கை ஏன் குழப்பமானதாக இருக்கிறது ?
கடவுள் : ஆராய்வதை விட்டு விடு. வாழத் தொடங்கு. ஆராய்வது தான் குழப்பத்தை உண்டாக்குகிறது.

நான்: அப்படியானால் ஏன் எல்லோரும் சந்தோஷமின்றி இருக்கின்றனர் ?
கடவுள்: இன்று என்பது நேற்று நீ கவலைப்பட்ட ’நாளை’. உன்னுடைய கவலைக்குக் காரணம் நீ ஆராயமுற்படுவதுதான். ஆகையால் நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கிறாய். அதுவே உன் பழக்கமாகி விட்டது

நான்: நிச்சயமற்ற தன்மை இவ்வளவு இருக்கும்போது எப்படி கவலைப் படாமல் இருக்கமுடியும் ?
கடவுள்: நிச்சயமற்ற தன்மை தவிர்க்க முடியாதது. ஆனால் கவலைப்படுவது ஒருவரது சுய தேர்வு

நான்: ஆனால் நிச்சயமின்மையால் எவ்வளவு மனவலி ?
கடவுள்: வலி தவிர்க்கமுடியாது. ஆனால் துன்பப் படுவது ஒருவனது சுயதேர்வு

நான்: துன்பம் அனுபவிப்பது சுய தேர்வு எனில் நல்லவர்கள் ஏன் எப்போதும் துன்பப் பட வேண்டும் ?
கடவுள்: பட்டைத் தீட்டாமல் வைரம் ஒளிராது. உலைக்குள் வைக்காமல் தங்கம் புடமாகாது. நல்லவர்கள் சோதனைகளை சந்திக்கத்தான் வேண்டும். ஆனால் துன்பப் பட வேண்டிய தேவையில்லை. அனுபவத்தின் காரணமாக அவர்கள் வாழ்க்கை கனியுமே தவிர கசப்பாகாது.

நான்: அத்தகைய சோதனை அனுபவங்கள் உபயோகமானவையா ?
கடவுள் : ஆம். அனுபவம் ஒரு கடினமான ஆசிரியன். முதலில் சோதனை வைத்து பின்னர் பாடம் புகட்டும் ஆசிரியன்.

நான்: யாருக்கு தேவை இந்த சோதனைகள் ? இவையின்றி கவலைகள் இல்லாமல் இருக்க முடியாதா?
கடவுள்: சோதனைகள் தான் பயணத்தில் இருக்கும் உபயோகமான பாடங்கள்.அதனால் மனவலிமைக் கூடுகிறது. சோதனைகளால்தான் ஆன்மபலம் வருகிறது. கவலையற்ற வாழ்க்கையினால் அது வராது.

நான்: சொல்லப் போனால் திக்குத் தெரியாமல்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.
கடவுள்: வெளிப்பக்கமாகப் பார்த்தால் திக்கு தெரியாது. உள்முகமாக பார்க்கத் தொடங்கு. வெளிமுகமாகும்போது நீ கனவு காண்கிறாய். உள்முகமாகும்போது விழித்துக் கொள்கிறாய். கண்கள் வெளிக்காட்சி தருகின்றன. மனம் உள் உண்மையை உணர்த்துகிறது.

நான்: நாம் எதிர்பார்க்கும் வெற்றி விரைவில் வராதபோது மனத்துன்பத்தை தவிர்த்து சரியான வழியில் செல்வது எப்படி?
கடவுள் : வெற்றி என்பது அடுத்தவர்கள் முடிவு செய்வது. திருப்தி என்பது நீ முடிவு செய்வது.

நீ முன்னால் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை விட எங்கே செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்வது அதிக திருப்தி அளிக்கும். நீ திசைக் காட்டியை வைத்துக்கொள். மற்றவர்கள் கடிகாரத்தை பார்க்கட்டும்.


நான்: கடினமான நேரங்களில் உற்சாகத்துடன் இருப்பது எப்படி ?
கடவுள்: எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதை பார், இன்னும் எவ்வளவு தூரம் என்பதை விட உனக்குக் கிடைத்திருக்கும் அருட்செல்வத்தைப் போற்று, கிடைக்காதவற்றை விட.

நான்: மக்களிடம் உங்களை ஆச்சரியப்பட வைப்பது எது ?
கடவுள்: துன்பப் படும் போது எனக்கு மட்டும் ஏன் என்பவர்கள் சுகத்தில் அப்படி ஏன் நினைப்பதில்லை.
ஒவ்வொருவரும் உண்மை தன் பக்கம் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் ஆனால் உண்மையின் பக்கம் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.


நான்: நான் யார்? ஏனிங்கு இருக்கிறேன் இப்படி சில கேள்விகள் தோன்றுவதுண்டு ஆனால் விடை தெரிவதில்லை
கடவுள்: நீ யார் என்று தேடாதே. நீ என்னவாக வேண்டும் என்பதை கண்டுகொள். ஏனிங்கு வந்தேன் என்பதற்கு காரணம் தேடாதே. அதை உருவாக்கு. வாழ்க்கை என்பது கண்டுபிடித்தல் அல்ல. அது உருவாக்கப்படுவது.

நான்: வாழ்க்கையின் முழுப்பயனை அடைவது எப்படி ?
கடவுள் : கடந்து போனதைப் பற்றி கவலைப் படாதே நிகழ்காலத்தில் நம்பிக்கையோடு செயல்படு எதிர்காலத்தை பயமற்று அணுகு

நான்: கடைசி கேள்வி, பல சமயங்களில் என் பிரார்த்தனைக்கு பதில் கிடைப்பதில்லை
கடவுள் : பதில் போடப்படாத பிரார்த்தனை எதுவும் கிடையாது. சில நேரங்களில் பதில் “முடியாது” என்பது தான்

நான்: அருமையான அரட்டைக்கு நன்றி
கடவுள் : நல்லது. பயத்தை விட்டு நம்பிக்கை வளர்த்துக் கொள். சந்தேகங்களை நம்பாதே; ஆனால் உன் நம்பிக்கைகளில் சந்தேகம் கொள். வாழ்க்கை ஒரு விடுவிக்கப் படவேண்டிய புதிர்; விடைகாண வேண்டிய பிரச்சனை அல்ல.

என்னை நம்பு. வாழ்க்கை ஒரு அற்புதம். வாழ்க இனிய நாளாகட்டும் இந்த நாள்.

-------------------------------------------------
பலமுறை வலையுலகில் உலா வந்து கொண்டிருக்கும் ஒரு மின்னஞ்சலின் தமிழாக்கம் இது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் முத்தமிழ் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்ததை இப்போது வலைப்பூவில் பதிவிடுகிறேன் . இதன் மூல ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. அருமையான கருத்துக்கும் கட்டுரைக்கும் அவருக்கு நன்றிகள் உரித்தாகுக.

Thursday, November 19, 2009

மேனகா காந்தியை டென்மார்க்கின் மந்திரியாக்க முடியுமா ?

இத்தாலி நாட்டில் பிறந்த ஒருவர் மிகப் பெரிய ஜனநாயகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க முடிந்தால், இப்பெரிய ஜனநாயக நாட்டில் பிறந்தவர் சிறிய நாடான டென்மார்க்கின் சுற்றுசசூழல் பாதுகாப்பு மந்திரியாக பதவி ஏற்க முடியாதா ?

”நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்” என்ற வரிகளை நினைத்துப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை கீழ் கண்ட படங்களைப் பார்த்துவிட்டால்.

டால்பின்களை கொன்று குவிக்கும் டென்மார்க் தேசத்தின் குரூரமான விளையாட்டு பற்றி இன்றைய மின்னஞ்சலில் செய்தியை பார்த்த உடனேயே இதை வலைப்பக்கத்தில் போட்டு விடுவது என்று முடிவு செய்தேன்.

சிவந்த மண் படத்தில் ஸ்பெயின் நாட்டு காளை விளையாட்டுக் கொலை கண்ட போது வந்த அருவருப்பு இப்போது பதைபதைப்பாக மாறி விட்டது. ஒரு ஜீவனை அணுவணுகாக கொலை செய்வது விளையாட்டிலும் வீரத்திலும் சேர்த்தியா ? கடவுளே :((((


மனிதர்களுடன் நட்பை விரும்பும் மிக அருமையான கடல் ஜீவன்கள் டால்பின்கள். சிறு குழந்தைகளும் ஆனந்தமாய் கட்டிப்புரண்டு நீந்தி விளையாடும் தோழமை படைத்தவை அவை. டால்பின்களால் மனிதர்களுக்கு எவ்வித கெடுதியும் இல்லை. நட்போடு நெருங்கி வரும் அப்பாவி உயிர்களை குத்திக் கொலை செய்வதா ! இது நம்பிக்கைத் துரோகம்.டால்பின்களின் உயிர் சீக்கிரம் போவதில்லையாம். அவைகளின் மரண ஓலம் பிறந்த குழந்தையின் அழுகையை போலக் கேட்குமாம். சிவ சிவா!!
விஞ்ஞானத்தில் முன்னேறியும் (?) அன்பிலா வாழ்க்கையினால் என்ன பயன்? இவர்கள் கையில் கிடைக்கும் விஞ்ஞானமும் அழிவிற்கே பயன்படும் என்ற பயமும் ஏற்படுகிறது.மேனகா காந்தியை டென்மார்க் நாட்டின் மந்திரியாக்குவதற்கு வழியுண்டா சொல்லுங்கள்

Friday, September 11, 2009

பாரதி ஒரு மனோ வைத்தியன்

விளையாட்டுக் குழந்தை மனப்பான்மை மேதைகளின் லட்சணமோ என்னவோ? கணிதத்தில் மகா மேதை என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீ ராமனுஜம் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டிற்று. மிகச் சாதாரணம் என்று கருதப்படுவதைக்கூட அவர் கேட்டால், குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு “அப்படியா” என்பார். கிண்டலுக்காகத்தான் அப்படி செய்கிறாரோ என்று முதலில் நான் சந்தேகப்பட்டேன். கணிதத்தில்தான் அவர் மேதாவி ! மற்ற விஷயங்களில் குழந்தை மாதிரி என்பதைப் பிறகு தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டேன்.

ராமனுஜத்தைப் போலவே பாரதியும் சில விஷயங்களில் குழந்தையாய் இருந்தார்.
..........
லேசாகப் பைத்தியம் பிடித்த பையன் ஒருவன் பாரதியாரின் கண்ணில் தென்பட்டான். அவனுக்குச் சித்தபிரமை. அவன் அதிகமாக உளறுவதில்லை. மௌனமாக இருப்பான். அவனைக் கண்டதும் பாரதியாருக்கு பரிதாபம். சித்தப் பிரமையை எப்படியாவது போக்கி விட வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டார். “பைத்தியம் என்பது மனதைப் பிடித்தக்கோளாறு தானே பார்த்துக் கொள்ளலாம்” என்று எங்களுக்குத் தைரியம் சொல்லுவார்.

பையனை அனேகமாக எப்பொழுதும் தொட்டுக் கொண்டே இருப்பார். பழ வகைகளைத் தாமே உரித்துத் தமது கையாலேயே அவனுக்குக் கொடுப்பார்; சில சமயங்களில், ஊட்டவும் செய்வார். இரவில், தம்முடன் கூடவே பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வார். கொஞ்சுகிற மாதிரி , ‘என்ன கண்ணு! என்ன ராஜா!’ என்று அவனை அழைப்பார். அவனுக்கு ராஜோபசாரந்தான்.

பையனுடைய சித்தப்பிரமையை நீக்க முயலுவது முயல் கொம்பு வேட்டை என்பது எங்கள் அழுத்தமான எண்ணம்.

பாரதியார் இல்லாத இடங்களில் இல்லாத காலங்களில் நாங்கள் ஒருவரை ஒருவர், ‘என்ன கண்ணு சாப்பிடடி அம்மா! தங்கமோன்னோ! தாமரமோன்னோ! அட குப்பைத் தொட்டியே! சோற்றை முழுங்கேன்! என்று பேசி,நையாண்டி பண்ணிக் கொண்டிருப்போம்.

சித்தப் பிரமை சிகிச்சை,சுமார் ஒரு மாதத்துக்கு மேல்,மிகவும் கிரமமாக நடந்து வந்தது.

கடைசியில், நையாண்டி பண்ணிக் கொண்டிருந்த எங்களை பாரதியார் அடி முட்டாளாக ஆக்கி விட்டார். பையனுடைய சித்தப் பிரமை சிறிது சிறிதாகத் தெளிந்து போய், அவன் நல்ல படியாகப் பேசவும் நடக்கவும் ஆரம்பித்து விட்டான். பாரதியார் ஆனந்தம் அடைந்தார். ஆனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற அகம்பாவக் குறி எதையும் அவரது முகத்திலும் நடையிலும் நாங்கள் காணவில்லை. இந்த நாட்களில், ஈசுவரப் பிரார்த்தனைதான் மிகவும் வலுவாக இருந்தது.

பையனுடைய பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, பாரதியாரை வாழ்த்தினார்கள். அசடு தட்டின முகங்களை வைத்துக் கொண்டு, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.

--------------------------------------
மகாகவி பாரதியார், ஆசிரியர் வ.ரா; பழனியப்பா பிரதர்ஸ். எட்டாம் பதிப்பு (1974)
--------------------------------------
அன்பு நிறைந்த மனது யாவற்றிலும் தெய்வத்தைக் காண்கிறது. அப்போது அதன் சக்தி அளப்பரியது; அதனால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை. அது புரியாத வ.ரா. வும் நண்பர்களும் பாரதியை எள்ளி நகையாடினர். ஆனால் தெய்வம் பாரதியின் பக்கம் நின்று நகைத்தது. குழந்தை மனம் கொண்ட கவிஞனோ தன் போக்கிலே ஆனந்தத்தில் திளைத்திருந்தான்.

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலப்பலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப் பொருள்களனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.


அந்த மகாகவியின் நினைவு நாளான இன்று அவரை நினைவுகூரும் வகையி்ல் இடப்பட்டப் பதிவு

Wednesday, September 9, 2009

கடவுளின் செயல்பாடு

இன்று (09 /09/09 )மின்னஞ்சலில் கடவுளைப் பற்றி வந்த ஒரு அழகிய ஆங்கில மேற்கோளின் தமிழாக்கம். படத்தை சுட்டினால் பெரிய அளவில் காணலாம்.

இந்த தேவாலயம் திருச்சூர் நகரில் உள்ளது.

விருப்பப்பட்டவர்கள் save image செய்து அதை நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.

Friday, September 4, 2009

முரண்டு பிடிக்கும் ப்ளாகர் -பின்னூட்டம்

திடீரென்று ப்ளாகர் பின்னூட்ட வார்ப்பு கட்டமைப்பில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்பெல்லாம் முன்னோட்டம்(preview) மஞ்சள் வர்ணத்தில் பிற பின்னூட்டங்களுக்கு கீழே காட்டப்பட்டு வந்தது. இப்போது தனி பெட்டியில் திரைக்கு நடுவே பெரிய எழுத்துகளில் பயமுறுத்துவது போல் zoom செய்து காட்டுகிறது.

போகட்டும். இன்னொரு பிரச்சனை-இந்த மாற்றம் எதைப் பற்றியது என்றால் பிற வலைப்பூ இணைப்பு நிரல்களை(hyper links) சேர்க்க முடியவில்லை. கீழே உள்ள படத்தை காணுங்கள்.


இதில் "http" not allowed என்று வருகிறதே :(

முன்பெல்லாம் சர்வ சாதாரணமாக மேற்கண்ட முறையில் இணைப்பு கொடுக்க முடிந்தது. இப்போது ஒட்டு மொத்தமாக அந்த நிரலை நிராகரிக்கிறது.

சரியென்று நிரலில் “http://" பகுதியை மட்டும் நீக்கிவிட்டு செய்தால் ஏற்றுக்கொண்டது. ஆனால் அப்படி வரும் இணைப்பைச் சுட்டினால் ‘Page Not Found' என்ற பக்கத்திற்கு இட்டுச் செல்கிறது ?????


இதற்கு ஏதாவது நாட்டுமருந்தோ, அலோபதியோ, ப்ளாகர்பதியோ தெரிந்தால் சொல்லுங்களேன்,ப்ளீஜ்ஜ்ஜ் :))

Friday, August 14, 2009

சுதந்திர தின விருது: மூன்று பதிவர்களுக்கு

இன்று சுதந்திர தினம். பத்ம விருதுகள் பற்றி பத்திரிக்கைகளில் விவரங்கள் வந்திருக்கும். அவர்களுக்கெல்லாம் ஒரு பாராட்டு.

நம் வலையுலகம் பெரிது. அதில் நாம் புழங்கும் வட்டமோ சிறிது. அந்த சிறிய வட்டத்திற்குள்ளே நாமறிந்த ஒரு சிலருக்கு விருது அளித்து சந்தோஷப் படுவோமே !

கவிநயா அவர்கள் எனக்கு இந்த விருது கொடுத்தாங்க. அதை சித்திரமும் கைப்பழக்கம் வலைப்பூவில் பொருத்தி விட்டேன். நமக்கு கொடுத்ததை நாலு பேரோட பகிர்ந்து கொள்ளணும். ஆனா இது தீபாவளி ஸ்வீட் மாதிரி. நாம் கொடு்க்கத் தயாரானாலும் வாங்க ஆளு கெடையாது. ஏற்கனவே ஆணியில நெறைய தொங்கிக்கிட்டு இருக்கு. மாட்ட எடம் இல்லைன்னு சொல்றவங்க நெறைய பேர்.

என்ன பண்ண? எப்படியோ மூணு பேரை கண்டு பிடிச்சிட்டேன். அவர்கள் எல்லோருமே Interesting Bloggers தான். மிகவும் பயனுள்ள தகவல்களை சுவையாக தருபவர்கள். அவர்கள் மறுக்காமல் என் விண்ணப்பத்தை ஏற்று கௌரவிக்க வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முதலாவதாக வின்சென்ட் ஐயா அவர்கள். அவருடைய ”மண் மரம் மழை மனிதன்” பலரும் அறிந்ததே. அவருக்கோ அவரது அருமையான பணிக்கோ அறிமுகம் தேவையில்லை. மிக அற்புதமான பல நல்ல தகவல்களை மேலும் தாங்கி வரவேண்டும் என்பது என் விருப்பம்.

வடுவூர் குமார் அவர்களின் கட்டுமானத்துறை பதிவுகள் நான் தொடர்ந்து படித்து வரும் ஒரு வலைப்பூ. அவருடைய கட்டுமானத்துறை இடுகைகள் யாவும் short & sweet. தொழில் நுட்பம் பற்றிய விவரங்கள் மட்டுமல்லாது தன்னைக் கவர்ந்த பல்சுவை தகவல்களையும் அவர் எந்த அலட்டலும் இல்லாமல் தருவது மிகவும் பிடிக்கும். சந்தேகம் இல்லாமல் இவரும் ஒரு Interesting Blogger தான்.

இன்னொரு சுவையான வலைப்பூ தர்ஷிணி அவர்களின் ”இன்று முதல்” . இவருடைய செயல்முறை விளக்கங்களுடன் கூடிய வண்ண வண்ண கைவினை கலைப் படைப்புகள் யாவும் மிகவும் மனதை ஈர்ப்பவை. அவை ஒவ்வொன்றின் பின்னும் இருக்கும் உழைப்பும் உற்சாகமும் போற்றப்பட வேண்டிய ஒன்று. எனவே இந்த விருது அவருக்கும் சாலப் பொருந்தும்.

இன்னும் சிலருக்குக் கொடுக்க விருப்பந்தான். ஆனால் என் வட்டம் மிகச்சிறியது ஆதலின் சிறிது காலம் பொறுத்திருந்து கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். குடியரசு தினம் ?

விருது பெற்றவர்கள் இந்த விருதை தமக்கு பிடித்தவர்களுக்கு அணிவித்து மகிழலாம்.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்

Tuesday, July 21, 2009

கங்குபாய் :கர்நாடகத்தின் பட்டம்மாள்

இசை உலக ரசிகர்களுக்கு கர்நாடக இசையில் சமீபத்தில் ஒரு பட்டம்மாள் இழந்த துயரம் நீங்கும் முன்பே ஹிந்துஸ்தானி இசை உலகமும் ஒரு பட்டம்மாளை இழந்து விட்டது. அவர் பெயர் கங்குபாய் ஹனகல்.

கர்நாடக மாநிலம் இரண்டு இசை உலகிலும் கொடி கட்டி பறக்கிறது. தெற்கில் மைசூர் சமஸ்தானம் கர்நாடக இசையை ஊட்டி வளர்க்கையில் வட கர்நாடகத்தினர் ஹிந்துஸ்தானி இசையைப் பற்றிக் கொண்டனர். பண்டிட் பீம்சேன் ஜோஷி, கங்குபாய் ஹனகல், ஷோபா முத்கல், ப்ரவீண் கோர்கண்டி (குழல்) போன்றோர் கர்நாடக மாநிலத்திற்கு ஹிந்துஸ்தானி துறையில் பெருமை சேர்ப்பவர்கள்.

இன்று கங்குபாய் ஹனகல் காலமானார். அவருக்கு வயது 97. ஐந்தாம் வகுப்பு வரையிலேயே பள்ளிக்குச் சென்ற இவருக்கு சரஸ்வதி கடாக்ஷம் பூரணமாக இருந்தது. இவரை கௌரவிக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளில் பாரத அரசாங்கத்தால் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளும் அடங்கும். ஒன்பது பிரதம மந்திரிகள், ஐந்து ஜனாதிபதிகளால் கௌரவிக்கப்பட்ட ஒரே இசைக் கலைஞர் என்ற பெருமையும் உண்டு.

எளிய விவசாயக் குடியை சேர்ந்த இவர் இசைத்துறையில் ஆரம்பகாலங்களில் பல பெரும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. இளம் தலைமுறையினரிடையே சங்கீதக் கலை நன்முறையில் தழைக்க வேண்டும் என்பதற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது.

இவரது மறைவு குறித்து கர்நாடக அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்திருக்கிறது. எல்லா அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. (தமிழ் நாட்டில் நம் இசைக் கலைஞர்களுக்கு இவ்வித அஞ்சலி செலுத்தினார்களா என்பது தெரியவில்லை). இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நாளை (22-07-09) அன்று நடைபெறும்.

அவரது விருப்பப்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

அவர் எவ்வளவு எளிமையானவர் என்பது இந்த படத்தைப்பார்த்தாலே விளங்கும். இதுதான் இந்த அஞ்சலிப் பதிவை எழுதுவதற்கும் தூண்டுகோ்லாயிற்று.

அவரது குரலைக் கேட்டறியாதவர்களுக்காக இதோ ஒரு இசை இணைப்பு.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, June 16, 2009

32 கேள்வி கேட்டாரு கே.ஆர்.எஸ்-ஸு

அண்ணன் பேச்சை தம்பி தட்டக்கூடாது .
கபீரண்ணன் ரவிசங்கர் கூப்பிட்ட பிறகு தம்பி கபீரன்பன் தட்ட முடியுமா?

என்னங்க இது? அவரு எப்படி அண்ணனாக முடியும் அப்படீன்னு என்னைத் தெரிஞ்சவங்க கேக்கிறது ஞாயந்தான். வலையுலகிலே, என்னையும் சேர்த்து, அவரு பலருக்கும் சீனியர்தான் பிரவேச காலத்தை வச்சுப்பார்த்தா!

ஆனா அது ஒண்ணுமாத்திரமில்ல நான் சொன்னதுக்கு காரணம் அவரே தன் பெயருக்குள்ள அதை ஒளிச்சு வச்சிருக்கிறார் பாருங்க. அவரு பேரு Kannabiran Ravishankar. கொஞ்சம் மாத்தி போட்டு படியுங்க Kabirannan Ravishankar :)))))

32 விளையாட்டில் அவரு என்னை இழுத்து விட்டப்புறம் எல்லாமே வெளையாட்டுதான்.

_______________________________________________________________________

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எனக்கு கபீர்தாஸ் என்றே வைத்துக்கொள்ள ஆசை. ஆனால் மூலவர் பெயரும் கபீர்தாஸ் ஆகிவிட்டதால் சிறிது தமிழ்மணம் கமழட்டுமே என்று கபீரின் ’அன்பன்’ ஆகிவிட்டேன். நானே வைத்துக் கொண்டதால் பிடிக்காமலா போகும் !!

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ரயிலில் பத்து அல்லது பன்னிரெண்டு வயதுடைய சிறுவன் அவன் இரு தங்கைகளுடன் ஒரு ஆர்மோனிய பெட்டியை வைத்துக் கொண்டு ‘ஏனேனோ ஆசே’ என்ற புகழ்பெற்ற கன்னடப் பாடலை பாடிக்கொண்டு வந்தான். அவனுடைய எட்டு வயது தங்கை அப்பாடலுக்கு அபிநயம் பிடித்தாள். மூன்றாவது குட்டி ஏதும் புரியாமல் அண்ணனுடைய சட்டையைப் பிடித்துக் கொண்டே மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு என்னென்ன ஆசைகள் இருக்கும்?

தினமும் ஐந்தாறு ஸ்டேஷன்கள் முன்னும் பின்னுமாக போய்வருவார்கள் போலும். அவர்கள் தாய் தந்தையர் எங்கோ! வறுமை எப்படியெல்லாம் மனிதனை விரட்டுகிறது. இப்படி இன்னும் எத்தனை லட்சக்கணக்கான ஜீவன்களோ அவர்களுடைய ஆசைகளும் கனவுகளும் அந்த மிகக் குறுகிய வட்டத்திலேயே முடங்கி விடுமோ? வழிக்காக கொடுக்கப்பட்டிருந்த தின்பண்ட பொட்டலத்தை அப்படியே அவர்களிடம் கொடுத்துவிட்டேன். நான் கொடுத்ததை அவர்கள் ஆசையாக தின்ற போது என்னையறியாமல் கண்களில் நீர் நிறைந்தது.

இன்னொரு முறை டயோடா-க்வாலிஸ் ஒன்றில் ஊரிலிருந்து வந்திருந்த தமிழறியாத அன்பர்களுடன் முண்ணாறு போய்க் கொண்டிருந்தோம். கெஸட்டிலிருந்து ‘உன்னையே கதியென்றடைந்தேன் தாயே’ என்று ஜெயஸ்ரீயின் அமுதமான குரலில் பாடல் வந்த போது அதன் பொருளை கேட்டார் உடன் வந்திருந்த அம்மையார். வரிக்கு வரி அதன் பொருளை கன்னடத்தில் சொல்ல ஆரம்பித்தேன். ’சின்னதனம் செய்து சித்தம் மிக வாடி’ என்பதன் பொருள் சொன்னவுடனயே அவர் கண்களில் குபுக் என்று நீர் வந்துவிட்டது. அதைக் கண்டதும் என் கண்களிலும் நீர் வந்து தொண்டை கம்மி மேலே பேச முடியாமல் போனது. உண்மையில் அந்த ராகமும் பாவக்குழைவும் ஏற்கனவே மனதை கரைத்து விட்டிருந்தது. பொருள் சொன்னதும் அவரால் மனநெகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

[என்ன இது ! ரெண்டாவது கேள்வியிலேயே அழுகையா? எப்போ சந்தோஷமா இருந்தே அப்படீன்னு ஒரு நல்ல கேள்வி கிடைக்கலையா. கேக்காத கேள்விக்கு பதில் எழுதினாலும் மார்க் போட மாட்டாங்க துளசி டீச்சர், கீதா மேடம். சரி ஒண்ணு என்ன ரெண்டு அழுகை கதையே சொல்லிட்டேன். பாத்து செய்யுங்க ]

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிரமாத பீத்திக்கிற மாதிரியெல்லாம் இல்லை! தலையெழுத்து மாதிரி அதுவும் ரொம்ப சாதாரணம், மோசமில்லை.
கடைசி கேள்விக்கான பதிலில் சாம்பிள் கையெழுத்து இருக்கு !:)))

4. பிடித்த மதிய உணவு என்ன?


சுத்த சைவம் எதுவாயினும் சரி.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

வேறு யாருடனாவது ??? அப்படீன்னா. புது ஆளுங்கள சொல்றீங்களா ? நான் ரிசர்வ்ட்-டும் இல்லை; அதுக்குன்னு யாரு மேலேயும் விழுந்து ஃப்ரண்ட்ஷிப் தேடறதும் இல்லை. விரும்பி பேசறவங்ககிட்ட ரொம்ப ஆர்வமா இணக்கமா பேசுவேன். அதுக்கப்புறம் நட்பை தொடர்வது அவர்களைப் பொறுத்தது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவிதான். கடல்ல குளிச்சு ரொம்ப வருஷமாயிடுச்சு

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

என் மனதில் படிவது அவங்க பாடி லாங்க்வேஜ்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

a)எதையாவது உருப்படியா செய்யணும்-ன்னு விடாம- இருக்கிறத வச்சுகிட்டு -எதையாவது செஞ்சுக்கிட்டு இருக்கிறது. இது பிடிச்சது.

[உதாரணம் பக்கத்தில (side Bar)இருக்கிற உலகநீதி கேட்ஜட் -ஐ விழுந்து எழுந்து எப்படியோ ஒரு வழியா இப்பதான் செஞ்சு முடிச்சேன். பிடிச்சிருந்தா இருந்தா உங்க வலைப் பக்கத்திலேயோ igoogle பக்கத்திலோ நீங்களும் பொருத்திக்கலாம்]


b) பிடிக்காததுன்னு கேட்டா ’என் உலகத்திலேயே’ இருந்துகொண்டு பல விஷயங்களை கவனிக்காம விட்டுடறது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பாவங்க! அவங்க அப்பாவி. அவங்களை நம்ம வம்புல ஏன் இழுக்கணும் :))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.
அமீரகத்திலிருந்து ஒரு எதிர்பாராத தரைவழி அஞ்சல் (மின்னஞ்சல்கள் இல்லாத காலம்) அலுவலக முகவரிக்கு வந்தபோது பெரும் சந்தோஷப்பட்டேன். எழுதியிருந்தது என் நெருங்கிய பள்ளித்தோழன். தொடர்பு விட்டுப்போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டிருந்தது. எனக்கு கிடைத்திருந்த ஒரு விருதை பத்திரிக்கையில் படித்து மகிழ்ச்சியுடன் பாராட்டி (தனக்கு மகன் பிறந்த சந்தோஷத்தையும் சொல்லி) அரைகுறை விலாசத்துடன் அவன் எழுதிய கடிதத்தை இன்னமும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன். அடுத்த முறை சென்னை வரும் போது கண்டிப்பாக சந்திக்கலாம் என்று எழுதியவனை சந்திக்க முடியாமலே போய்விட்டது. அவன் போய் மூன்று வருடங்களுக்கு பின்னரே எனக்கு விஷயம் தெரிய வந்தது.

இப்போது அவன் பக்கத்துல வரவே முடியாது என்ற நினைவு அடிக்கடி என் நெஞ்சை பாரமாக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

தொலைக்காட்சியில் ஏதோ எம்.ஜியார் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மனதில் ஒட்டவில்லை.
நடிகர் அசோகன் எம்.ஜி.யாருக்கு எலிப்பாஷாணம் பற்றி ஏதோ விளக்கிக் கொண்டிருக்கிறார்

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிடிச்ச வர்ணம் அப்படீன்னே கேட்டிருக்கலாமே ! நான் ஏன் பேனாவா மாறணும்.
எனக்குப் பிடிச்ச வர்ணம் நீலப்பச்சை (Bluegreen).

14. பிடித்த மணம்?
பெங்களூருக்கே உரிய சம்பகா . இப்போதெல்லாம் மரங்கள் குறைந்துவிட்டன. நான் சிறுவனாக இருந்த போது சாலையில் நடக்கும்போதே நம்மை பற்றிக்கொள்ளும் அந்த மணம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அவர்கள் தொந்தரவு என்று நினைக்காத பட்சத்தில்

நினைவின் விளிம்பில் - கவிநயா : குழந்தைகளுக்கான பாடலாகட்டும், அம்மன் கவிதைகளாகட்டும் மிக எளிய வார்த்தைகளில் மனம் கவரும் வண்ணம் எழுதும் திறமை படைத்தவர். நல்ல சிறுகதைகள் படைக்கும் ஆற்றல் உள்ளவர்.

பக்தியே பிரதானமாகக் கொண்டு மிகுந்த சிறப்பான இடுகைகளை இட்டு வருபவர் மதுரையம்பதி. இவருக்கும் அம்மனை ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது. பல ஆசாரியர்கள் மற்றும் ஞானிகளைப் பற்றிய இவரது இடுகைகளும் மனம் தொடுபவையாக இருக்கும்.

முகமூடிக் கவிதைகள் என்று ஒரு theme based approach-ல் வடிகால் வலைப்பூவில் கிருத்திக்கா அவர்கள் நன்றாக செய்து வருகிறார். அப்படி மையக் கருத்தை வைத்து எழுதுபவர்கள் மிகவும் குறைவு. இவருடைய கதைகளும் அனுபவங்களும் கூட நல்ல நடையில் யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும்.

ஜீவாவுக்கு அறிமுகம் தேவையில்லை. இசையின்பத்திலும் ஆத்ம போதத்திலும் வாசகர்களை முக்கி தோய்த்து எடுப்பவர். இவருடைய இடுகைகளில் மொக்கை ரகமே இருக்காது. அவருடைய உழைப்பு அவர் சொல்ல வரும் கருத்துகளில் நன்கு புலனாகும்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கே.ஆர்.எஸ் எதை எழுதினாலும் அக்குவேறு ஆணிவேறாய் பிரிச்சுப் பார்த்துட்டுதான் மறு வேலை பார்ப்பார் என்பது அவருடைய காரைக்கால் அம்மையார் மற்றும் ஆண்டாள் பதிவுகளை படித்தாலே புரியும்.

காரைக்கால் அம்மையார் பதிவுக்கு தமிழ்மணம் விருது கிடைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

17. பிடித்த விளையாட்டு?

கொஞ்சம் சதுரங்கம், கொஞ்சம் பாட்மிண்டன். கூடைப்பந்து ஆடுபவர்களின் லாவகத்தையும் வேகத்தையும் ரசித்துப் பார்ப்பேன்

18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம், 16 வயதிலிருந்து. பொன்னியின் செல்வனை ஒரே மூச்சில் படித்ததால் வந்ததென்று திட்டு வாங்கியிருக்கிறேன் !

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பொதுவாக நகைச்சுவை படங்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்தது ‘தாரே ஜமீன் பர்’

21. பிடித்த பருவ காலம் எது?

காலங்களில் அது வசந்தம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கொஞ்ச நாளா Power of Now என்ற புத்தகத்தை வைத்துக்கொண்டு இங்குமங்குமாக பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கிறேன்

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எதுவும் வச்சுகிறது கிடையாது. ஹெச்.பி கொடுத்த ஒரிஜினல் செட்டிங் அப்படியே இருக்கு

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பறவைகளின் கீச்சு மூச்சு சத்தம் பிடிக்கும்.
பிடிக்காதது மிக்ஸி

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெங்களூருக்கு ஹாங்காங் தூரமா ஜெனிவா தூரமா ?

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித் திறமை என்று என்னத்தை சொல்றது, நான் செய்யிற எல்லாத்தையும் மிக மிக சிறப்பா செய்யிறவங்க நிறைய பேர் இருக்காங்களே !!

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னைப் பார்த்து யாராவது பயப்படுவது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஏதாவது சாலை நிகழ்வோ,தொலைபேசியோ அல்லது சகப் பிரயாணிகளின் பேச்சோ எரிச்சலடைய வைத்தால் உடனே வண்டியின் வேகம் கூடி விடும். தேவையில்லாமல் முன்னே போகும் வண்டிகளை முந்திக் கொண்டு போக முனைவேன். இது ஏனென்று புரியவில்லை. சொன்ன மாதிரி ஏதோ சாத்தானாயிருக்குமோ !

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இனிமேலத் தான் கண்டுபிடிக்கணும்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒண்ணும் இல்லை. உள்ளதே போதும்

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
விரும்பி செய்வது என்று இல்லை. நிர்பந்தத்தால் செய்வது சமையலறை பிரவேசம்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

Life should be like a snow flake. Leave a mark but not a stain.

நான் சொல்லவில்லை சினா-சோனா தான் சொல்றாரு.
[கையெழுத்து நிபுணர்கள் பெரிசு பண்ணி பார்த்து என்னைப் பற்றி
எனக்கு தெரியாத விஷயங்கள் இருந்தால் சொல்லவும் :)))) ]


________________________________________________________________________
பொறுமையா படிச்சதற்கு நன்றி

ரவியண்ணன் கொடுத்த பொறுப்பு நிறைவேறியது. சுபம்

Monday, May 18, 2009

பறக்குது :காகிதப் பட்டங்கள்

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் பழையத் திரைப்படப்பாடல் ஒன்று (குலதெய்வம் -1956).

கோழியெல்லாம் கூவையிலே
குறட்டை விட்டார்

வாய் கொப்பளிக்கும் முன்னே

கொஞ்சம்
காப்பியையும் குடித்து விட்டார்.

குளிக்காமல் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்

தன்னை குழந்தை போல் எண்ணிவிட்டார்

எங்க சின்ன மச்சான் - இப்போ

பட்டம் விட புறப்பட்டு விட்டாரைய்யா

பட்டம் விட்டாரையா -எட்டாத

உயரத்திலே விட்டாரைய்யா
பட்டம் விட்டாரைய்யா
பறக்க விட்டாரைய்யா

ஆராரோ பட்டம் விட்டு

பேராசை வட்டமிட்டு

ஆடி ஓடி போனதைப் போலே

விட்டாரையா - அணை

கட்டாத ஏரி தண்ணி
கடலோடு போனது போல
கற்றதெல்லாம் காற்றோடு

விட்டாரைய்யா


டா பட்டம், டீ பட்டம்
ஜமீன் பட்டம், சாமி பட்டம்

ஜாதி பட்டம்,பகதூர் பட்டம்
லேடி பட்டம் கேடி பட்டம்

வாலறுந்து நூலறுந்து

போன இடம் தெரியலே-இந்த

வேலையத்த மச்சான் வெறும்

காகித பட்டம் கட்டி
விட்டாரைய்யா -ஓட
விட்டாரைய்யா

பலவித பட்டங்களை பெறுவதாலேயே தங்களை அறிஞர்களாகவோ, சமூகத்தில் பெரும் புள்ளிகளாவோ காட்டிக்கொள்ளும் முயற்சி அந்த காலத்திலிருந்து இருந்து வந்திருக்கி்றது. பலர் அதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொள்கின்றனர். அவைகளெல்லாம் வாலறுந்து, நூலறுந்து போன கதைதான். எத்தனை திவான் பஹதூர்களை உலகம் நினைத்துப் பார்க்கிறது? மந்திரி பதவி இருந்தால் டாக்டர் ’பட்டம்’ உண்டு. பணம் (கொடை) கொடுக்கும் நடிகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் கூட அது சுலபமாக கிடைக்கும்.

இன்றைய காலத்தில் ”பத்ம“ பட்டங்கள், கலைமாமணி, இத்யாதிகளும் உண்டு. இதைத்தான் ”ஆராரோ பட்டம் விட்டு பேராசை வட்டமிட்டு ஆடி ஓடி போனதை போலே” என்று பட்டுக்கோட்டையார் கேலி செய்கிறார்.

இப்படி ஒரு வாழ்க்கை முழுவதும் போலி வெற்றிகளுக்காக போராடும் வாழ்க்கையைப் பற்றி சினா சோனா சொல்வதை பார்ப்போம்.A LONG LIFE MAY NOT BE GOOD ENOUGH
BUT A GOOD LIFE IS LONG ENOUGH

எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைக்காட்டிலும் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.

Good Life என்பது அணைகட்டிய நீர். ஒரு ஒழுங்குபாடு உள்ளது. அதனால் பல நன்மைகள் சமுதாயத்திற்கு உண்டு. பிறருக்கு எவ்வகையிலேனும் பயன்படாத வாழ்க்கையானால் அவர்கள் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தென்ன ? அவர்கள் எவ்வளவு படித்திருந்தென்ன ! பட்டுக்கோட்டையார் சொல்வது போல் “கற்றதெல்லாம் காற்றோடு விட்டாரைய்யா” என்கிற நிலைதானே !

மாபெரும் சாதனையாளர்கள் எனப் போற்றப் பெறுபவர் அனவரும் பெரும்பாலும் சாதனைகளை மிக இளம் வயதிலேயே சாதித்துள்ளனர். ஆதிசங்கரர், விவேகானந்தர், ஸ்ரீனிவாஸ ராமானுஜம், பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் போன்றவர்கள் தமது நாற்பது வயதுக்குள்ளாகவே தத்தம் துறையில் சாதனை படைத்து அமரத்துவம் எய்திவிட்டனர்.

அவர்களால் உலகம் பயனடைந்திருப்பதனால்தான் அவர்களை இன்றளவும் நினைத்துப்பார்க்க முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கை உண்மையிலே Good Life.

Sunday, May 10, 2009

பிரமிட் தியான மண்டபம்- தியான முறை

ஆரோவில் பாண்டிச்சேரியில் மிகப் பெரிய தியான மண்டபத்தை 70 களில் கட்டப்பட்டு வரும் நிலையில் கண்டு அதிசயித்தது உண்டு. இனம், மொழி, மதம் வேறுபாடு இன்றி எவரும் எப்பொழுது வேண்டுமானலும் சென்று தியானம் செய்வதற்கு உதவியாக அரவிந்த ஆசிரமத்தின் அன்னையின் விருப்பப்படி கட்டப்பட்டது.

மாத்ருமந்திர் என்ற பெயரில் இப்பொழுது பொற்கோவில் போன்று ஓங்கி நிற்பதை (இணைய தளத்தில்) காணும் போது பரவசமாகிறது.

ஆனால் மாத்ருமந்திர் வெறும் பாண்டிச்சேரிக்கு மட்டுமே.

ஆந்திராவைச் சேர்ந்த பிரம்மரிஷி பத்ரிஜி (Brahmarishi Patriji) இப்போது தியான மண்டபங்களை நாட்டின் பல பாகங்களிலும் நிறுவுவதற்கு ஊக்குவித்து வருகிறார். இவர் விவசாயத்தில் முதுகலை பட்டதாரி.கிருஹஸ்தர். பலவருடங்கள் தனியார் துறையில் பணியாற்றியவர்.

இவரது தியான மண்டபம் சற்று வித்தியாசமானது. அவை பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

வடுவூர் குமாரின் கட்டுமானத்துறை வலைப்பக்கத்தில் பிரமிட் அதிசய சக்தியை விளக்கும் ஒரு சலனப் படத்தை கண்டபோது அதை தரவிறக்கம் செய்து பலருக்கும் காட்டி வந்தேன். அப்போது ஒருவர் பெங்களூருக்கு அருகே உள்ள பிரமிட் தியான மண்டபத்தை குறிப்பிட்டார். அது தான் மேலே குறிப்பிட்ட பத்ரிஜியின் தியான மண்டபம். சமீபத்தில் அங்கு சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கனகபுரா சாலையில் Pyramid valley என்ற பெயரில் வழிகாட்டும் பலகைகள் உள்ளன. தூரம் 35 கிமீகள் பிராதன சாலையிலிருந்து ஒரு கிமீ தூரம் கிராமபாங்கான சாலையில் உள்ளே பயணிக்க வேண்டும்.

சுமார் 160 அடி அளவுள்ள சதுர வடிவ அடிபாகத்தில் 107 அடி உயரம் உயர்ந்து இருக்கும் இந்த பிரமிட்டில் ஐந்தாயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் தியானம் செய்ய முடியுமாம்.

இது அல்லாமல் ஆந்திராவில் பத்து, கர்நாடகத்தில் மூன்று தமிழ்நாட்டில் இரண்டு என கிளைகள் 200 முதல் 300 பேர் வரை தியானம் செய்யக் கூடிய மண்டபங்களாக மலர்ந்து சேவை புரிந்து வருகின்றன.

சென்னை தியாகராய நகரில் சுப்ரமண்யா பிரமிட் தியான மையம் என்ற பெயரிலும், கோவை வடவள்ளியில் ஸ்ரீ சதாசிவ பிரமிட் தியான மையம் என்ற பெயரிலும் இயங்குகின்றன.

பத்ரிஜியின் முறை தியானம் மூச்சு ஓட்டத்தை கவனிப்பதையே முக்கிய அங்கமாக கொள்கிறது. இதை புத்தர் கண்ட வழி என்று சொல்லலாம். அதனால் செபிக்க மந்திரமோ ஆராதனை முறைகளோ இங்கு தேவையில்லை.
(பெரிது படுத்தி படிக்கலாம்)

தியானத்தில் மூச்சு ஒழுங்குபடுகிறது, மூச்சு ஒழுங்குப் படும் பொழுது மனம் ஒழுங்காகிறது. மனம் ஒழுங்குபட்டால் மனிதன் ஒழுங்காகிறன். மனிதன் ஒழுங்காகும் பொழுது சமுதாயமும் ஒழுங்கு படுகிறது.

எளிமையான முறைதான். ஆனால் மனிதனை இதை கைகொள்ள வைப்பதில் தான் வெற்றியின் ரகசியம் உள்ளது. அதற்கு இப்படிப்பட்ட தியான மண்டபங்கள் ஊக்குவிக்கும் புதிய ஆலயங்களாக மலருமோ என்னவோ !

தியானத்தை வீட்டிலோ நடமாற்ற வெளியிலோ அல்லது அமைதியான ஆலயத்திலோ கூட செய்ய இயலும் தான். ஆனால் ஒரு புதிய முனைப்பு கொடுக்க வேண்டுமாயின் அதற்கென பிரத்யேகமான ஏற்பாடு செய்தால் பலரையும் கவர்ந்திழுக்க முடியும்.

காலத்திற்கேற்ற உத்தியை கைகொள்வதில் தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.

சரி, நான் தியானம் செய்தேனா என்று கேட்கிறீர்களா? உம் ...செய்தேன், முதல் தளத்தில். சர்வ நிசப்தம். அசதியில் தூக்கமாய் வந்தது. எழுந்து வந்து விட்டேன்.

பாவம், பிறருக்கு ஏன் என்னால் தொந்தரவு :)))


பிரமிட் முறை தியானம் பற்றி அறிய விரும்புவர்கள் கீழ்கண்ட இணைப்புகளில் மேலும் விவரம் பெறலாம்.

http://www.pyramidspiritualsocieties.org/PSS/Home/Home1.htm

http://www.patriji.org/en/htmls/articles/pyramid_movement.html

Wednesday, April 1, 2009

Google and Feed Burner

Google Feed Burner செய்திருக்கும் குழப்பத்தால் கபீரின் கனிமொழிகளின் மூன்று இடுகைகள் நேரடி அஞ்சலில் பெற விழைந்தவர்களுக்கு சேராமல் இருக்கிறது.

”சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்” என்பது போல நான் சும்மா இல்லாமல் கூகிள் சொன்னதற்காக என் Feed Burner கணக்கை Google Feed Burner க்கு மாற்றினேன்.அப்போதிலிருந்து பிரச்சனைதான்.

பெப்ரவரி 6 ஆம் தேதி உழப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற இடுகைக்குப் பிறகு வெளிவந்த இடுகைகள் எதுவும் Feed Burner- தரும் முன்னோட்டத்திலும் காட்டப்படவில்லை. இங்கே Side bar-ல் “ கபீரைக் கண்டீரா” தலைப்பில் இன்னும் பழைய இடுகைகளையே காட்டுவதைக் காணலாம்.


மார்ச் 29 தேதியிட்ட கூகிள் அறிவிப்பு அந்த குறிப்பிட்ட தினத்தில் இருந்த பிரச்சனையை சரி செய்ததாக சொல்லிக் கொள்கிறது. இப்போது என்னுடைய பிரச்சனை என்னவென்று புரியவில்லை. :(

செய்தி ஓடை விலாசத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா, விஷயம் தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். நன்றி

Thursday, March 19, 2009

சிறு துளி.....- உலகத் தண்ணீர் தினம்


மண் மரம் மழை மனிதன் வலைப்பூவில் வின்சென்ட் ஐயா உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பதிவர்கள் தம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரி ஒரு வேண்டுகோள் முன் வைத்தார். ஆசானின் வார்த்தைகளை சிரமேற் கொண்டு இதோ ஒரு இடுகை.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நீர் சேமிப்பைப் பற்றியது.

ஒரு முறை எங்கள் தொழிற்சாலை தரக்கட்டுபாடு சோதனைச் சாலையிலிருந்து ரிப்போர்ட்டுகள் வெளியிடுவதில் தேக்கம் கண்டது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றாக்குறை. நீர் சுத்திகரிக்கும் உபகரணம் (Distillation unit) பழுதாகி பல சோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை. வெளியிலிருந்து வாங்குவதற்கு முயற்சி செய்தும் பல காரணங்களால் வந்து சேரவில்லை. இதனால் கைவசம் சரக்கு இருந்தும் அனுப்ப முடியாத நிலைமை. பெட்ரோல் பங்கிலிருந்து பாட்டரி நீரையாவது வாங்கி செய்யலாம் அவற்றின் தரம் சரியில்லை என்று பதில் வந்தது.

இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தொழிற்சாலையை சுற்றி வரும்போது குளிர்பதன அறைக்கான எந்திரத்திலிருந்து நீர் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் குழாய் வழியாக ஒழுகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். இதை ’காண்டென்சேட்’ என்று சொல்வார்கள். இது காற்றிலிருக்கும் அதிகமான ஈரப்பதம் கம்ப்ரெஸரின் உயர் அழுத்தத்தில் கனிந்து திவலைகளாகக் மாறி வெளியேறுவது.

இப்படி சதா நீர் வெளியேறிக் கொண்டிருப்பது வழக்கமான காட்சிதான் என்றாலும், அன்று மின்னலென ஒரு எண்ணம். நேரடியாக காற்றிலிருந்து கனிந்து வருவதால் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட நீர் தானே! அதில் எவ்வித உப்புகளும் கரைந்திருக்க முடியாதல்லவா !

உடனடியாக ஒரு நல்ல சுத்தமான குழாயை செருகி அந்த நீரை சுத்தமான கண்ணாடி குடுவையில் பிடிக்கச் சொல்லி சோதனைச் செய்யச் சொன்னேன். மூன்று முக்கிய பரிசோதனைகளிலும் வெற்றி.

1) pH =7.63; 2) conductivity= 0.0 ; 3) Total Dissolved Solids= 0.0 ppm

அன்றிலிருந்து நீரை தனிப்பட்ட முறையில் சுத்திகரிக்க மின்சார சக்தியை பயன்படுத்துவது நின்றுவிட்டது. ஏற்கனவே மின்சாரத்தால் இயங்கும் குளிர்பதன இயந்திரம் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு உப பொருளாக தந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு 12 லிருந்து 15 லிட்டர் வரை சுத்தமான பரிசோதனைகளுக்கேற்ற நீர் கிடைக்கிறது. ஆனால் தேவையோ 10 லிட்டருக்கும் குறைவு.

10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீருக்கென 3KW மின்சார சக்தியை பயன்படுத்தினால் இரண்டரை மணிநேரங்கள் தேவைப்படும். அதற்கான மின்சக்தி ஏழரை யூனிட்டுகள், ஒரு மாதத்தில் சுமார் 200 யூனிட்கள் சேமிக்கப் படுகின்றது.

தொழிற்சாலையின் முழு மின்சக்தித் தேவையில் இந்த சேமிப்பு சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை. ஆயினும் இதை யாவரும் கடைபிடிக்க முன்வந்தால் கணிசமான நீர் சேமிப்பும் மின்சார சேமிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குறிப்பிடுகிறேன்.

உதாரணத்திற்கு 1.5 ton அறை குளிரூட்டும் எந்திரம் எட்டு மணிநேரம் வேலை செய்தால் 2.5 லிருந்து 3.0 லிட்டர் தண்ணீர் வெளியேற்றும். பெரிய திரை அரங்குகள், ’மால்’களில் நிறுவப்பட்டிருக்கும் ராட்சஸ குளிரூட்டும் எந்திரங்களால் ஒரு நகரத்திற்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் வாகனங்களுக்கான பாட்டரி தர சுத்திகரிக்கப்பட்ட நீரை சுலபமாக சேமிக்கலாம்.

இப்படி நம் முன் இருக்கும் பலப்பல வழிகளை முனைப்புடன் ஒருங்கு படுத்தினால் நீர் மட்டுமல்ல மின்சக்தியையும் சேமிப்பவர்களாவோம்.இவ்வருட தலைப்பு Transboundry water அதாவது ”எல்லைகளைக் கடக்கும் நீர்பெருக்கு” மேலும் விவரங்களுக்குhttp://www.worldwaterday.org/
மற்றும் http://www.unwater.org/

அப்பாடா ! சிறு துளிப் பெருவெள்ளம். நானும் ஒரு இடுகையை உலக தண்ணீர் தினத்திற்காக எழுதி சமர்ப்பணம் பண்ணியாச்சு.

Tuesday, March 10, 2009

...புதுப் புது உலகமும் அவரவர் உள்ளங்களே

சுமார் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன் ஒரு அனுபவம்.
திருவள்ளுவர் பேருந்தில் திருச்சி செல்வதற்காக இரவு ஒன்பதரை மணியளவில் வண்டியேறி அமர்ந்தேன்.
சென்னையின் வியர்வை கசகசப்பு எப்போதடா வண்டி கிளம்பும் என்று நினைக்கத் தோன்றியது. ஒருவழியாக நடத்துனர் வண்டியிலேறினார்.சரி பேருந்து கிளம்பப் போகிறது என்று நினைத்தால் அவர் மையப் பகுதியில் நின்று பேச ஆரம்பித்தார்.

மாலை வணக்கங்கள்.பயணிகள் கவனத்திற்கு.

தாம்பரம்,செங்கல்பட்டு,மதுராந்தகம்,திண்டிவனம், விழுப்புரம் உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மார்க்கமாக திருச்சி செல்லும் பேருந்து சில நிமிடங்களில் புறப்படவிருக்கிறது. ஓட்டுனர் பெயர் xxxx, பத்திரமாக பேருந்தை ஓட்டிச்செல்வதில் அனுபவம் மிக்கவர். நடத்துனராகிய என் பெயர் XXXX. பயண தூரம் 310 கிமீ.பயண நேரம் எட்டு மணி நேரம். திருச்சி சேரும் நேரம் காலை 6மணி .


பயணச்சீட்டு இல்லாத பயணம் சட்டப்படி குற்றம். அபராதம் ரூபாய் 500-ம் புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடத்திற்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.


பயணிகள் வசதிக்காக பேருந்தில் சுகாதாரமான குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தம் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுகிறோம். தங்கள் கவனக்குறைவால் ஏற்படும் இழப்புகளுக்கு நிர்வாகமோ ஊழியர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.

தங்கள் பயணம் இனிதாகட்டும். நன்றி


கணீரென்ற குரலில் ஆரம்பித்து கடைசிவரையில் ஒரு நிரடலும் இல்லாமல் தேவைக்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன் அந்த நடத்துனர் அறிவிப்பை முடித்தவுடன் கடமையில் அவர் காட்டிய உற்சாகத்தை கைத்தட்டி சிலர் பாராட்டினர்.

விமானங்களில் வரும் அறிவிப்பை போல-சொல்லப்போனால் -இன்னும் சிறப்பாகவே செய்த அந்த நடத்துனருக்கு கண்டிப்பாக ஏதும் அதிக ஊதியம் கொடுத்திருக்க மாட்டார்கள்.அப்படி ஒரு அறிவிப்பை செய்ய வேண்டும் என்ற அவசியமும் அவருக்கு இருக்கவில்லை.

அவர் அறிவிப்பை செய்த விதம் பலவருடங்களாகவே அவர் இதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார் என்பது தெரிந்தது. அப்பேற்பட்ட ஊழியர்கள் கிடைப்பது அரிது,கிடைத்தாலும் அவர்களுக்குரிய திறமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் நிர்வாகங்களும் அரிது.

நாம் வேலையில் காட்டும் உற்சாகம்தான் பலரையும் கவர்கிறது.நாம் முழுமனதுடன் உற்சாகத்துடன் செய்யும் எந்த வேலையும் மிகச் சிறப்பாக அமைகிறது. அதை குறிப்பிடுவது தான் இந்த இடுகையின் சினா-சோனா
"OUR BEST WORK IS THAT WHICH WE DO EASILY AND JOYFULLY"

நமக்க அளிக்கப்பட்ட வேலை மிகவும் சாதாரணமானதாக இருப்பினும் அதை மேற்கொள்வதில் பல வழிகள் இருக்கும். ஒருவரது பர்ஸனாலிடி எனப்படும் தனித்தன்மையை அவர் வேலையை அணுகும் விதத்தை வைத்தே அறிந்து விடலாம்.

சந்தோஷத்துடன் நாம் மேற்கொள்ளும் எந்த வேலையும் சிறப்பானதாகவே அமையும். அதற்கு, என் நினைவில் நிற்கும்- மறக்கமுடியாத - அந்த நடத்துனரே உதாரணம்.
................
போய்வரும் உயரமும்
புதுப்புது உலகமும்
அவரவர் உள்ளங்களே!
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம் !!

Tuesday, February 10, 2009

இந்த புன்னகை என்ன விலை....

நகைக்கு விலை பேசுவோர் உண்டோ
அது செய்யும் நலத்திற்(கு) அளவுண்டோ

தந்தவர் இழந்த தேதுமில்லை
பெற்றவர் மகிழ்ச்சிக் கேதெல்லை!

கணநேரத்தில் தோன்றி மறையுது
அதன் மாயம் நினைவிலே நிற்குதுஇந்நகை இன்றி வாழ்வரோ
சீமானும் கோமானும் அவனியில்

நகையினால் சுகம் காணாத
தீனனும் உண்டோ தரணியில்

நகையினால் இல்லம் ஒளிருது
வாணிபம் பெருகி வளருது

சோர்ந்த உள்ளங்கள் ஆறுது
வாடிய மனங்கள் துளிருது

இயற்கையின் இன்மருந்து நகையே

இருந்த போதும்
இரவலோ,இரத்தலோ,இயலுமோ ?
வாங்கவோ,திருடவோ முடியுமோ ?

ஆயினும்
தராமல் போனால் அறிவரோ
எவரும் அதற்கான மதிப்பு ?

சோர்வில் துவண்ட நெஞ்சம்
நகைக்க இயலாதது கண்டீர்
தருவீர் ஒன்றை அவருக்கும்
காண்பீர் அது செய்யும் மாயம்

மலருதே அங்கும் ஒரு நகை


( ஒரு ஆங்கில கவிதையின் தழுவல்-ஆசிரியர் தெரியவில்லை)


Thursday, January 29, 2009

வலைப் பதிவு அன்பர்களுக்கு நற்செய்தி

எழுதிய இடுகைகளை எழுதியவரே படிக்க வேண்டிய நிலையா

இடுகைகள் படிக்கப்படும் முன்பே திரட்டிகளில் புதைந்து போய்விடுகின்றதா

கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் அப்போ இப்போ என்று ஓரிருவர் எட்டிப்பார்க்கின்றனரா

பின்னூட்டங்கள் பெரும்பாலும் ஒற்றை படை இலக்கத்தை தாண்டுவதே கடினமா

மொக்கைக்கான ஐடியாவெல்லாம் கூட தீர்ந்து போச்சுதா

புதுசா எழுதாவிட்டால் யாரும் எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்ற நிலைமையா


என்னங்க இது! இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே

ஆமாங்க , ஆனா ஒரு நல்ல நியூஸ்!

மேலே உள்ள எல்லாவற்றிற்கும் உங்கள் பதில் ஆமாம் என்றால் இன்னும் படியுங்கள்.

வந்துவிட்டது தேன் சிட்டுஇது திரட்டியா -இல்லை

அவார்டு பம்மாத்தா -இல்லை

அன்பர்களே தமிழ் வலையுலகிலேயே முதல் முறையாக ஒரு வலைப்பூந்தோட்டம். (தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க)

தேன்சிட்டு-வளையத்தில் உறுப்பினராகுங்கள்.

தேன்சிட்டு வாசகர்களை உங்கள் வலைக்கு அழைத்து வரும்
.

அதாவது வெறும் கூகிளாரையும் திரட்டிகளையும் நம்பாம இன்னொரு வழியிலேயும் வாசகர்களை உங்கள் வலைப்பக்கம் வரவழைக்க இது ஒரு வழி.

உதாரணத்திற்கு ஆன்மீகத்தேனில் இணைந்த ஒரு வலைப்பக்கம் போய் பாருங்க.

பலவகை வளையத்தில் இணைவதற்கு இங்கே செல்லவும்.

மிச்சத்தை அங்கேயே போய் படிச்சுங்குங்க ! மறக்காம என்ன தோணுதுன்னு (அங்கேயோ இங்கேயோ) சொல்லிட்டு போங்க. நன்றி

Sunday, January 25, 2009

Slumdog Millionaire - வெள்ளைக்காரன் சொன்னால் ”சரி”

நான் இந்த படத்தை கணிணியில் பார்த்தேன்.

படத்தின் ஆரம்பமே ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது.

போட்டியில் விடைகளை சரியாக சொல்லிக் கொண்டு வந்ததாலேயே ஒருவனை காவல்துறை சித்திரவதை செய்வதும் பின்னர் ஏதும் நடக்காதது போல் மீண்டும் போட்டியில் கலந்து கொள்வதும் சற்றும் ஏற்கும்படியாக இல்லை. காவல்துறை விசாரிப்புகள் தொலைக்காட்சி செய்திகள் மூலம் யாவருக்கும் தெரியப்படுத்த படுகிறது.

அப்படியானால் பல கோடிகள் செலவழித்து போட்டி ஏற்பாடு செய்திருப்பவர்களுக்கே தமது போட்டியின் தயாரிப்பு முறையில் நம்பிக்கை இல்லையா?

மனித உரிமை கழகங்கள் என்று ஒன்று இருப்பதை கதாசிரியரும் தயாரிப்பாளர்களும் அறியாரா? நமது காவல்துறையினரும் வெற்றி பெற்று வரும் ஒரு அப்பாவியை துன்புறுத்தும் அளவுக்கு ஈவு இரக்கம் அற்ற கொடியவர்களா?

வாழ்க்கையின் அவலங்களை சித்தரிக்க ஆரம்பித்தால் அதற்கு எல்லையே கிடையாது.
நிஜங்கள் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தி விடலாம்.

இந்தியாவில் மனிதாபிமானம் என்ற ஒன்று இல்லை, வெறும் பணவெறி பிடித்த சிலரின் ஆட்சிதான் நடக்கிறது என்பது போல் சித்தரிக்கப்பட்டிருப்பது மிகவும் அவமானகரமானது ஆகும்.

சிறுவர்களின் அபாரமான நடிப்பு, நல்ல காமிரா, திரைத் தொகுப்பு போன்ற பல தரமான அம்சங்கள் உண்டு. இந்திய படங்களின் ஃபார்முலா காட்சிகளும் உண்டு!

ஆனால் படத்தின் ஆரம்பமே மனதுடன் ஒட்டாததால் ஏதோ ஒரு படம் பார்த்தோம் என்றுதான் தோன்றியது.

இதே தரத்தில் மணிரத்தினம் மகேஷ்பட் ஷ்யாம்பெனகல் போன்றவர்கள் எடுக்கக் கூடியவர்கள்தான். ஆனால் அப்போது இந்த வரவேற்பு இருந்திருக்குமா அல்லது விருதுகள்தான் குவிந்திருக்குமா ?:((

ரஹ்மானின் இசையில் நமக்கு எதுவும் புதுமை தெரியவில்லை. (கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை ?) ஒரு வேளை வெள்ளைக்காரர்களுக்கு புதிதாக இருக்குமோ என்னமோ ? வெள்ளைக்காரன் சொன்னால் ”சரி”


surveyசனின் இடுகைக்கு பின்னூட்டமாக எழுதி, நீளம் காரணமாக தனிப்பதிவானது :)

Tuesday, January 13, 2009

உழுபவனுக்கு ஏது திருநாள் ?

உழுபவன் கணக்கு பாத்தா உழக்குக் கூட மிஞ்சாது.

பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விவசாயம் குறைந்து வருகிறது. அதை பலரும் சுட்டிக்காட்டி நம் நாட்டிலும் அந்நிலை வந்துவிடக்கூடாது என்று எவ்வளவு சத்தம் போட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது நம் அரசியல் நிலைமை. உழவர் சந்தை போன்ற ஒரு சில நல்ல யோசனைகள் கூட வோட்டுக்கான திட்டமாகி அங்கும் தரகர்கள் பினாமி பேர்களில் இயங்குவதாகக் கேள்வி :(

பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கம், பட்டு உற்பத்தி கூட்டுறவு போல் கறிகாய் உற்பத்தி, நெல், பயிறு பிற தானியங்களுக்கும் கூட்டுறவு முறை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு வேளை பெரும் சுவான்தாரர்கள் இவற்றில் பங்கேற்காமல் தனியாக இயங்குவதால் ஒற்றுமை இல்லையோ என்னவோ.

சூரிய இந்திரரின் அருள் எல்லோருக்கும் பொது. உழைப்பின் பலன் உரியவர்களுக்கு போய் சேர்வது நாட்டிற்கு நலம் பயக்கும். கூடியவரை சந்தையில் சென்று விளைபவருக்கு பொருளின் விலை கொடுத்தால் அதுவே நாம் செய்யும் பெரும் உதவி.

வாழையை வளர்க்க வார்த்தோம் நீர்
விற்பனைக்கும் கேட்குது வியர்வை நீர்
பேரத்தில் பொழுதை கழித்திடுவீர் நீர்
எமக்கு பசியாறக்
கிடைப்பதோ ஒரு கோப்பை தேநீர்


உழுது விளைந்தால் போதாதய்யா
உழைப்பது சந்தை வரைத் தொடருதய்யா
வெயிலோ வெங்காயமோ, எம் மனக்காயம்
புரிந்தவர் எவரும் இல்லை அய்யா


அனைவருக்கும் பொங்கல் திருநாளின் நல்வாழ்த்துகள்