Friday, September 11, 2009

பாரதி ஒரு மனோ வைத்தியன்

விளையாட்டுக் குழந்தை மனப்பான்மை மேதைகளின் லட்சணமோ என்னவோ? கணிதத்தில் மகா மேதை என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீ ராமனுஜம் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டிற்று. மிகச் சாதாரணம் என்று கருதப்படுவதைக்கூட அவர் கேட்டால், குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு “அப்படியா” என்பார். கிண்டலுக்காகத்தான் அப்படி செய்கிறாரோ என்று முதலில் நான் சந்தேகப்பட்டேன். கணிதத்தில்தான் அவர் மேதாவி ! மற்ற விஷயங்களில் குழந்தை மாதிரி என்பதைப் பிறகு தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டேன்.

ராமனுஜத்தைப் போலவே பாரதியும் சில விஷயங்களில் குழந்தையாய் இருந்தார்.
..........
லேசாகப் பைத்தியம் பிடித்த பையன் ஒருவன் பாரதியாரின் கண்ணில் தென்பட்டான். அவனுக்குச் சித்தபிரமை. அவன் அதிகமாக உளறுவதில்லை. மௌனமாக இருப்பான். அவனைக் கண்டதும் பாரதியாருக்கு பரிதாபம். சித்தப் பிரமையை எப்படியாவது போக்கி விட வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டார். “பைத்தியம் என்பது மனதைப் பிடித்தக்கோளாறு தானே பார்த்துக் கொள்ளலாம்” என்று எங்களுக்குத் தைரியம் சொல்லுவார்.

பையனை அனேகமாக எப்பொழுதும் தொட்டுக் கொண்டே இருப்பார். பழ வகைகளைத் தாமே உரித்துத் தமது கையாலேயே அவனுக்குக் கொடுப்பார்; சில சமயங்களில், ஊட்டவும் செய்வார். இரவில், தம்முடன் கூடவே பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வார். கொஞ்சுகிற மாதிரி , ‘என்ன கண்ணு! என்ன ராஜா!’ என்று அவனை அழைப்பார். அவனுக்கு ராஜோபசாரந்தான்.

பையனுடைய சித்தப்பிரமையை நீக்க முயலுவது முயல் கொம்பு வேட்டை என்பது எங்கள் அழுத்தமான எண்ணம்.

பாரதியார் இல்லாத இடங்களில் இல்லாத காலங்களில் நாங்கள் ஒருவரை ஒருவர், ‘என்ன கண்ணு சாப்பிடடி அம்மா! தங்கமோன்னோ! தாமரமோன்னோ! அட குப்பைத் தொட்டியே! சோற்றை முழுங்கேன்! என்று பேசி,நையாண்டி பண்ணிக் கொண்டிருப்போம்.

சித்தப் பிரமை சிகிச்சை,சுமார் ஒரு மாதத்துக்கு மேல்,மிகவும் கிரமமாக நடந்து வந்தது.

கடைசியில், நையாண்டி பண்ணிக் கொண்டிருந்த எங்களை பாரதியார் அடி முட்டாளாக ஆக்கி விட்டார். பையனுடைய சித்தப் பிரமை சிறிது சிறிதாகத் தெளிந்து போய், அவன் நல்ல படியாகப் பேசவும் நடக்கவும் ஆரம்பித்து விட்டான். பாரதியார் ஆனந்தம் அடைந்தார். ஆனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற அகம்பாவக் குறி எதையும் அவரது முகத்திலும் நடையிலும் நாங்கள் காணவில்லை. இந்த நாட்களில், ஈசுவரப் பிரார்த்தனைதான் மிகவும் வலுவாக இருந்தது.

பையனுடைய பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, பாரதியாரை வாழ்த்தினார்கள். அசடு தட்டின முகங்களை வைத்துக் கொண்டு, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.

--------------------------------------
மகாகவி பாரதியார், ஆசிரியர் வ.ரா; பழனியப்பா பிரதர்ஸ். எட்டாம் பதிப்பு (1974)
--------------------------------------
அன்பு நிறைந்த மனது யாவற்றிலும் தெய்வத்தைக் காண்கிறது. அப்போது அதன் சக்தி அளப்பரியது; அதனால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை. அது புரியாத வ.ரா. வும் நண்பர்களும் பாரதியை எள்ளி நகையாடினர். ஆனால் தெய்வம் பாரதியின் பக்கம் நின்று நகைத்தது. குழந்தை மனம் கொண்ட கவிஞனோ தன் போக்கிலே ஆனந்தத்தில் திளைத்திருந்தான்.

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலப்பலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப் பொருள்களனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.


அந்த மகாகவியின் நினைவு நாளான இன்று அவரை நினைவுகூரும் வகையி்ல் இடப்பட்டப் பதிவு

8 comments:

நிகழ்காலத்தில்... said...

\\உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலப்பலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப் பொருள்களனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.\\

தெய்வத்தைப்பற்றி இதைவிட வேறெப்படி சொல்லமுடியும் !!!!


வாழ்த்துக்கள் நண்பரே

KABEER ANBAN said...

நல்வரவு நிகழ்காலம்

//தெய்வத்தைப்பற்றி இதைவிட வேறெப்படி சொல்லமுடியும் !!!!//

ஆகையால்தானே அவர் வரகவி என்றும் மகாகவி என்றும் போற்றப்படுகிறார்.

வருகைக்கும் கஎஉத்துக்கும் நன்றி

ராம்ஜி.யாஹூ said...

good post, thanks for that but today (sept 11 is his death anniversary date, birthday is Dec11.)

This confusion happens often to all of us.

KABEER ANBAN said...

Thanks Ramji,

Thanks for pointing out the lapse &the confusion in dates. I shall correct it.

[Bharathidasan's biographical notes on several web pages carry this mistake.:(( ]

once again thank you for your appreciation.

வெ.இராதாகிருஷ்ணன் said...

மனதை நெகிழச் செய்த அதிஅற்புதமான பதிவு.

ராமானுஜர் பற்றியும் பாரதி பற்றியும் படித்ததும் கண்கள் கசிந்தன.

அழகிய கவிதையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

KABEER ANBAN said...

வருக இராதாகிருஷ்ணன்,

//மனதை நெகிழச் செய்த அதி அற்புதமான பதிவு //

உண்மையிலே எத்தகைய வியாதியும் பரிவுடன் அணுகப்படும் போது பாதி குணமாகி விடுகிறது. அதை நடமுறைப் படுத்திக் காட்டிய பாரதியின் இந்த முகம் நான் கேள்விப்படாததாலேயே இதை பதிவிட எண்ணினேன்.

தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி

thenammailakshmanan said...

//அன்பு நிறைந்த மனது யாவற்றிலும் தெய்வத்தைக் காண்கிறது. அப்போது அதன் சக்தி அளப்பரியது; அதனால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை//

அருமை கபீரன்பன் ஸார்

KABEER ANBAN said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேனம்மை மேடம் !