Sunday, November 30, 2008

சொதப்பிட்டாங்கய்யா சொதப்பிட்டாங்க !

எதிரிகள் பாசறையில் ஒரு அவசரக்கூட்டம்.

”வெற்றி வெற்றி, கலக்கிட்டாங்கப்பா கலக்கிட்டாங்க” தொண்டர்கள் பெரும் சந்தோஷத்துடன், டைமஸ்- நௌ மற்றும் சி என் என், பார்த்தபடியே கைத்தட்டிக்கொண்டிருந்தனர்.

இந்திய அரசியலில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும் இறந்து போனவர்களின் இறுதி யாத்திரைகளும், பெரும் புள்ளிகள் வரிந்து கட்டிக்கொண்டு அரசாங்கத்தையும் போலீஸையும் “மை ஃபுட்” என்று திட்டித் தீர்ப்பதும் அளவில்லாத ஆனந்தத்தை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று சப்தமெல்லாம் அடங்கி யாவரும் நிமிர்ந்து அமர்ந்தனர். பாஸ் உள்ளே வந்து அமர்ந்தார்.

”கங்கிராசுலேஷன்ஸ் பாஸ். உங்க மாஸ்டர் மைண்ட் அப்படியே இந்தியாவையே கலக்கிடுச்சே” பாராட்டினார் ஒரு அடிவருடி.

பாஸ் முகத்தில் ஒரு சிறு அரைமனதான புன்முறுவல் மட்டும் பதிலாக வந்த்தது.

”என்ன பாஸ் ச்ந்தோஷமாயில்லையா ?”

”எப்படி ஓய் சந்தோஷமா இருக்க முடியும் ? சொதப்பிட்டாங்க, சொதப்பிட்டாங்க” வெறுப்புடன் பதில் சொன்னார் பாஸ்.

ஆஹா! ஏதோ எக்குத்தப்பாயிட்டிச்சு அப்படிங்கறது அடிவருடிகளுக்கு புரிந்தது. சரி பாஸ்-ஸே அடுத்து ஆரம்பிக்கட்டும் என்று மௌனம் காத்தனர் அடிவருடிகள்.

மொத்தம் எத்தனை பேரை அனுப்பினோம் ?

பதினைந்து

சொன்னதை செஞ்சாங்களா?

”கிட்டத்தட்ட செஞ்சிட்டாங்களே பாஸ். தாஜ் ஓட்டலும் ட்ரைடென்னும் இன்னும் ஒரு வருஷம் ஆகும் சரி செய்ய. கொறஞ்சது 100 கோடி நஷ்டம். 200 பேர் பப்ளிக்ல செத்திருக்காங்க. இதுக்கு மேலே பதினைஞ்சு பேர் என்ன செய்ய முடியும் பாஸ்?” சற்று கெஞ்சலான பதில் வந்தது.

”நாம ஒவ்வொருத்தனுக்கும் கொடுத்திருக்கிறது ஒரு கோடி. அது இல்லாம இவங்களுக்கு ட்ரெயினிங், பொய் தஸ்தாவேஜ், பிரான்சு, மொரிஷியஸ் செலவு, ஸாட் ஃபோன் செலவு இந்தியாவில இருக்கிற ஏஜெண்டுகளுக்கு காசு அப்படி இப்படின்னு செஞ்சிருக்கிறது இருபது கோடி. செலவழிச்ச காசுக்கு பலன் பத்தாதுன்னு சொல்றாங்கையா மேலிடத்துல.கொறஞ்சது ஒரு ஓட்டலையாவது தரைமட்டமாக்கியிருந்தா கொஞ்சம் நிமிர்ந்து பதில் சொல்லமுடியும்.இப்ப எந்த மூஞ்சிய வச்சுகிட்டு மேலிடத்தில நான் முழிக்கிறது?”

”பாஸ் ரெண்டு நாள் ஸ்டாக் மார்கெட் வேலை செய்யலை. அதானாலெ வந்த நஷ்டம் எவ்வளவு வேணுமானாலும் வைச்சுகலாம் பாஸ். சும்மா போடுங்க ஒரு குத்து மதிப்பா ஒரு ரெண்டாயிரம் கோடி” ஒரு பாய்ண்ட் எடுத்து குடுத்தான் இன்னொரு புத்திசாலி.

பாஸின் முகத்தில் ஒரு ஏற்பு தெரிந்தது. ”உம் அதுவும் சரிதான். வெளிநாட்டு முதலீடு எல்லாம் திருப்பி கொண்டு போயிடுவாங்க. அதனால வர்ற நாட்களெல்லாம் இந்திய பொருளாதாரம் அடிவாங்கிடும் அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.”

பாஸ்-ஸின் கவலை தீரவில்லை.

”அந்த முட்டாள் கஸாப் ஏன்யா மாட்டிக்கிட்டான்? ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தோம். ’செய் அல்லது செத்துமடி’-ன்னு எத்தனை தடவை ட்ரெயினிங்-ல சொல்லியிருப்போம். சாகமா மாட்டிக்கிட்டு இப்போ எல்லோரையும் காட்டிக் குடுத்தாட்டேனே. அவனாலே எல்லாம் வெளியே வந்திடிச்சு” வெறுப்பை உமிழ்ந்தார் பாஸ்.

“அதுக்குதான் பாஸ், எனக்கு இந்த சின்ன வயசு பசங்களைக் கண்டால் நம்பிக்கையில்லை. நீங்க யெங்-கா இருக்கணும், இங்கிலீசு படிச்சவனாயிருக்கணும், சாட் ஃபோன் யூஸ் பண்ணத் தெரிஞ்சிருக்கணும் அப்படி இப்படின்னு சொன்னதுனாலதான் இப்படி ஊத்திக்கிச்சு. கொஞ்சம் கம்மி படிச்ச நம்மூர் ஆளுங்க இதே வேலைய பாதி செலவுல செஞ்சு காமிச்சிருப்பாங்க பாஸ்.”

பாஸ் எதுவும் காமித்து கொள்ளாமல் அடிவருடியின் முகத்தைப் பார்த்தவாரே மேலும் பேசவிட்டார்.

”புலிய பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா பாஸ். வொர்ல்ட் ட்ரேட் செண்டர் அமெரிக்காவுல இருந்துச்சு. அதுக்கு படிச்ச பசங்க ஏரோப்ளேன் ஓட்ட தெரிஞ்சவங்க எல்லாம் வேணும். அல்-காய்தால அதுக்கு தோதா எல்லாம் இருந்து பண்ணி குடுத்தாங்க. இந்த சொத்தை இந்தியாவுல ரெண்டு பில்டிங்ல பாம்ப் வச்சு முடிக்க வேண்டிய வேலைக்கு AK-47, ஹாண்ட்-கிரெனேட் ட்ரெயினிங் எல்லாம குடுத்து அனுப்பணும் ?” அடிவருடியின் கிண்டல் கொஞ்சம் எல்லை மீறியது.

பாஸுக்கு கோபம் வெடித்தது. “முட்டாள் தனமா பேசாதேய்யா. நாம சொன்னது ஓட்டல்-ல இருக்கிற வெள்ளைக்காரப் பசங்களை சிறை புடிச்சு அவனுங்க நாட்டுலேர்ந்து பெரும் பணம் புடுங்கணும். அதுக்கப்புறம் ஒரு வெளிநாட்டானும் இந்திய பசங்களோட பேச மாட்டான். ரொம்ப அன்-ஸேஃப் அப்படீன்னு ஊரை காலி பண்ணிடுவாங்க. அதுல எதுவும் நடக்கலை. 25000 ரூபாய்க்கு கோழிக்கறியும் சாப்பாடும் வாங்கிகிட்டு நாரிமன் ஹவுஸ்-ல பூந்து நாறி போய்டானுங்கைய்யா. சொன்னதுல ஒண்ணும் நடக்கலை. அதுக்குதான் சொன்னேன் சொதப்பிட்டாங்கய்யா சொதப்பிட்டாங்க”

அவர்களோடு மேலும் பேசுவதில் அர்த்தமில்லை என்று மேலிடத்துக்கு சொல்ல வேண்டிய பதிலைப் பற்றிய கவலையில் பாஸ் வெளியேறினார்.

Thursday, November 27, 2008

பாதைத் தவறிய கால்கள்

மும்பய் வன்முறைகளைப் பற்றிய, ராமலக்ஷ்மி அவர்களின், மனக்குமறல் முத்துச்சரம் வலைப்பூவில் மனதைத் தொடும் ஒரு கவிதையாக மலர்ந்திருக்கிறது. கலங்கி நிற்கும் எவர்க்குள்ளும் எழும் நியாயமான உணர்வுகள் அவை. ஆனால் கலங்கி நிற்பது மன உறுதியை குலைத்திடும். காலனையும் காலால் மிதிக்கத் துணியும் பாரதியின் வீர உணர்ச்சி இருந்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும். ஆகவே இன்னொரு கவிதையை பாரதியின் கோணத்தில் படைத்திருக்கிறேன்.

இதற்கு வித்திட்ட ராமலக்ஷ்மி அவர்களுக்கு நன்றி.


என்னதான் செய்வீர்,செய்திடீர்
எதுவரை செல்வீர்,சென்றிடீர்
குள்ள நரிகளின் கூட்டம்
எததனை தினங்கள் ஆட்டம்

கட்டிக்கொடுத்த சோறு காணுமோ
குறியற்ற பயணத்தில்,மூர்க்கரே
வெட்டி முறிப்போம் உம் கால்களை
வன்முறை கொள்ளும் கைகளையுமே

குழம்பிய குட்டையில் மீனோ
கனவு காணும் மூடர்களே
பாரத தேசம் சிறு குட்டையோ
குழப்பிடின் எதிர்வரும் சுறாக்களே

மனிதத்தை மறப்பது புனிதமோ
மாற்றலரை அழிப்பது பாவமோ
மந்தபுத்தி யர்தம் கையோங்குமோ
மருண்டு மடிவதும் விவேகமோ

இறப்பதற்கு அஞ்சோம் உலகிலே
பிறந்த எவரும் சாவது உறுதி
கதறிப் பணியோம் வன்முறைக்கே
கலங்க அடிப்போம் இது உறுதி

மகன் போனால் மகன்கள் உண்டு
தமயன் போனால் தமயனா ருண்டு
எமக்கு உண்டு அன்பின் மொழி
உமக்கு சொல்வோம் தெண்டின் மொழி

(மாற்றலர்= எதிரிகள்; தெண்டு= கோல்,தடி)

Tuesday, November 25, 2008

கரெண்ட் போச்சா ? மாட்டை கட்டு !

முதல் முதலா கச்சா எண்ணெய் பிரச்சனை 70 களில் வந்த போது மாற்று எரிசக்தி ஆராய்ச்சி மிகவும் சூடாக ஆரம்பித்தது.அப்போது மாட்டு வண்டியை எப்படி மேம்படுத்துவது அதனால் எருதுகளின் சக்தி வீணாகமல் எப்படி முழுமையாக பயன்படுத்த முடியும் என்றெல்லாம் பெங்களூர் Indian Institute of Management-லிருந்து ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்தன.அதை யொட்டி வெளிவந்த ஒரு கேலிச் சித்திரம் சிந்தனையை தூண்டுவதாக இருந்தது.

வண்டி இழுக்கும் இரண்டு மாடுகள் பேசிக் கொள்கின்றன “You know, we are no more animals; we are alternate sources of energy "

இன்றைக்கு Times of India (Times Bangalore 25/11/08) பத்திரிக்கையில் வந்திருக்கும் ஒரு செய்தி அதை நிஜப்படுத்துவது போல் உள்ளது.
படத்தை சுட்டினால் பெரிதாக்கி முழு விவரத்தையும் படிக்கலாம்.

செக்கு மாடுகள் எண்ணெய் வித்துகளை அரைத்து எண்ணெய் எடுக்க ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றி வருவது போலத்தான் இதிலும் மாடுகள் சுற்றிச் சுற்றி வரவேண்டும். அதை தகுந்த பற்சக்கரங்கள் (கியர்) துணையோடு சுற்றுவிசையாக மாற்றி ஒரு ஜெனேரட்டர் வழியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது 2 KW ஜெனேரேட்டர் மாதிரி உற்பத்தி திறனுள்ள எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிதான தொழில்நுட்பம். சுருக்கமாகச் சொன்னால் சைக்கிள் பெடல் மிதிப்பதால் டைனமோ எரிவதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இதை ஒட்டி மனதில் வரும் சில எண்ணங்கள்.

உழவு மாடுகளை செக்கு மாடாக பயன்படுத்த முடியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.அது உண்மையில்லா விட்டால் வருடத்தில் விவசாயத்தில் நான்கு மாதங்களே பயன்பட்டு வரும் எருதுகள், இந்த வேலையினால் வருடம் முழுவதும் பயன்பட வாய்ப்பிருகிறது.

கோவை,மைசூர் போன்ற நகரங்களில் தெருக்களில் சும்மா சுற்றிக்கொண்டிருக்கும் குதிரைகளை பூட்டினால் இன்னும் அதிகமான மின் உற்பத்தி திறனுடைய ஜெனேரட்டர்களை இயக்கமுடியுமோ என்னமோ !

இதில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதாவது எருதுகளை (எருமைகளையும் வடநாட்டில் பயன்படுத்துவதுண்டு) செக்கு மாடுகளைப் போல் பயன்படுத்தினால் பிராணிநல ஆர்வலர்களுக்கு கோபம் வருமாம்!! அதனால் இந்த தொழில் நுட்பத்திற்கு மான்யம் அளிக்க மத்திய அரசு தயங்குகிறதாம்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதனுடைய உற்ற தோழனாக இருந்து அவன் கூடவே உழைப்பில் பங்கு கொண்டு குடும்பத்தில் ஒருவராக கருதப்பட்ட பிராணிகளை இன்று வெகுவாக உணவுக்காக வளர்த்து கசாப்பு கடைகளுக்கு அனுப்புவதை இந்த ஆர்வலர்கள் ஏன் தடுப்பதில்லை ?

ஒருவேளை விருப்பமில்லாததால் தட்டிக் கழிக்க அரசு அவர்கள் மேல் பழியை திருப்புகிறதோ ?
மீண்டும் பிராணிகளையும் மனிதர்களையும் ஒருவரைச் சார்ந்து ஒருவர் என்ற வகையில் இணைக்கக்கூடிய,சுற்றுப்புற சூழலுக்கு தீங்கிழைக்காத தொழில் நுட்பம் என்ற வகையில் இதன் முன்னேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். (படம் :நன்றி F.A.O.)

Wednesday, November 12, 2008

ஒரு பலூன் கதையும் பலூன் பாடலும்

இன்று மின்னஞ்சலில் ”How America went Bust" என்ற தலைப்பில் வந்த ஒரு கட்டுரையை தழுவி எழுதியது. பங்கு சந்தை என்ற பலூன் உருவாகும் விதத்தை எளிமையாக விளக்கியுள்ளது . இனி, கதைக்குச் செல்வோம்.

ஒரு தீவு. அந்த தீவில் புழக்கத்தில் இருந்தது இரண்டு ‘ஒரு ரூபாய்’ நாணயங்கள் மட்டுமே.

அந்த தீவில் குடியிருப்போர் மூன்று பேர். முகேஷ் மற்றும் அனில் ஆளுக்கொரு ரூபாய் வைத்திருந்தனர். மூர்த்தியிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அவன் ஒரு தென்னங்கன்று வளர்த்தான்.

முகேஷ் அதை ஒரு பணம் காய்ச்சி மரம் என்பதை எப்படியோ புரிந்து கொண்டு மூர்த்திக்கு ஒரு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு மூன்று ரூபாய்கள். அதாவது மூர்த்தி அனில் இருவரிடமும் ஒவ்வொரு ரூபாயும் முகேஷிடம் ஒரு ரூபாய் மதிப்புள்ள மரமும் இருக்கிறது.

இதைக் கண்ட அனில் பணம் காய்ச்சி மரம் பிற்காலத்தில் பயன்படும் என்று மூர்த்தியிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி தனது ஒரு ரூபாயையும் சேர்த்து முகேஷிடமிருந்து இரண்டு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு நான்கு ரூபாய்கள். அதாவது மரம் 2 ரூபாய், முகேஷிடம் 2 ரூபாய்.

மரத்தின் விலை ஏறுவதைக் கண்ட மூர்த்தி அதை விற்றதற்காக மனம் வருந்தி முகேஷிடம் 2 ரூபாய் கடன் வாங்கி அனிலிடம அவன் (அனில்)ஏற்கனவே பட்டிருந்த ஒரு ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்து மீண்டும் மரத்தை வாங்கினான். இப்போது மரத்தின் மதிப்பு 3 ரூபாய்கள். அனிலிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 5 ரூபாய்கள்.

அடடே மரத்தின் விலை கூடிக்கொண்டே போகிறதே என்று முகேஷ் அனிலிடம் 2 ரூபாய் கடன் வாங்கி மூர்த்தியின் 2 ரூபாய் கடனை தள்ளுபடி செய்து 4 ரூபாய்களுக்கு மரத்தை கிரயம் செய்தான். இப்போது மூர்த்தியிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 4 +2 =6 ரூபாய்கள்.

திடீரென்று அனிலுக்கு கவலைப் பிடித்துக்கொண்டது. மரம் நினைத்தபடி பலன் தராமல் போய்விட்டால் முகேஷ் எப்படி தன்னுடைய 2 ரூபாய் கடனை திருப்பித்தர முடியும். மூர்த்திக்கும் அதே கவலை பிடித்துக் கொண்டது. அதனால் கையில் பணமிருந்தும் அவன் மரத்தை விலை பேச முன்வரவில்லை. என்னதான் சொன்னாலும் காய்க்காத தென்னங்கன்றின் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்பதை புரிந்து கொண்டான் அவன்.

இப்போது மரத்தை வாங்குவோர் இல்லை. மூர்த்தியிடம் 2 ரூபாய்கள் இருக்கிறது. முகேஷிடம் 4 ரூபாய் மதிப்புள்ள மரம் ஒரு ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. எனவே அவன்
அனிலுக்கு கொடுக்க வேண்டிய 2 ரூபாய் கடனில் ஒரு ரூபாய் மட்டுமே திருப்பித்தர இயலும்.

முகேஷ் திவாலாகிப் போனான். முகேஷ் பட்ட கடனை அனில் திரும்பாதக் கடனாகத் தள்ளுபடி செய்தான். இப்பொது தீவின் மதிப்பு மீண்டும் 3 ரூபாய்கள். 6 ரூபாயில் இழந்த 3 ரூபாய்கள் எங்கே போயிற்று ?

கதை சொல்லும் நெறி.

எளிமை கருதி வர்த்தகம் மூவருக்குள்ளே நடப்பதாக காட்டப்பட்டது. அங்கே இன்னுமொரு மரம் இருந்து ரத்தன் என்பவன் சொந்தக்காரனாக இருந்திருந்தால் இன்னும் ருசிகரமான கைமாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ரத்தன் விளையாட்டில் சேராமல் வேடிக்கைப் பார்த்தாலும் அவனுடைய மரத்தின் விலையும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்திருக்கும். அதற்குதகுந்தாற்போல் தீவின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும்.

இதைத் தவிர வெளித் தீவிலிருந்து யாரேனும் முதலீடு செய்ய முற்பட்டிருந்தால் பணபுழக்கம் அதிகரித்து தீவின் மதிப்பும் காகிதத்தில் உயர்ந்து கொண்டே போகும். புத்திசாலியான வெளியாள் செயற்கையாக விலையை ஏற்றி, மரத்தை சமயம் பார்த்து உள்ளுர்காரனுக்கே அதிக விலையில் விற்று தன்னுடைய வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொண்டு போயே போய் விடுவான். அப்போது தீவில் உள்ளவர்கள் ஏமாளிகளாக அமர்ந்திருக்க வேண்டியது தான்.

பங்குச் சந்தை செய்கின்ற குளறுபடிகளும் இப்படிபட்டதே. எவனொருவன் வேகமாய் பணமாக மாற்றிக் கொள்வானோ அவனே புத்திசாலி. பங்கு காகிதத்தை நம்பி பணம் கொடுத்த வங்கிகளுக்கும், கடன் வாங்கி முதலீடு செய்வோருக்கும் கடைசியில் தலையிலே துண்டு.

பத்துக்காசு விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன்....... மழலையின் மொழியிலே கேட்டு மகிழுங்கள். பாடல் வரிகள் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, November 4, 2008

ஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு

ஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்தம் என்பது படித்து அறிந்து கொள்ள முடியாது.

முதன்முறையாக சத்யசாயி பிரசுரத்தினர் உச்சரிப்பு சுத்தத்துடன் சுயமாக கற்றும் கொள்ளும் வகையில் ஸ்ரீருத்ரத்தை அவர்களுடைய இணைய தளத்தில் வலையேற்றம் செய்துள்ளார்கள். PDF கோப்பில் ஒலிக் கோப்பையும் பதிந்து ஒவ்வொரு வரிக்குக் கீழே அதன் உச்சரிப்பு முறையை தெளிவு படுத்தியிருப்பதால் குரு முகமாக கற்றுக் கொள்வதைப் போலவே பயிற்சி செய்து பழகலாம்.

இதனால் வெளி மாநிலங்கள் அயல்நாடுகளில் வசிப்போர், கற்பதற்கு வாய்ப்பில்லையே என்று வருந்துவோர் பெருமளவில் பயனைடய முடியும். இந்த நூதனமான தொழில்நுட்பம் (sound embedded pdf file) ஆத்திக அன்பர்களுக்கு இப்படி பயனுள்ள முறையில் பயன்படுவது சந்தோஷத்திற்குரியது.



(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)


இந்த கோப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.