Sunday, August 31, 2008

தேயீயீயீ....இன்னும் தேய்- : சினா சோனா(6)

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்கு துணியும் நெறஞ்சிருக்கு” அப்படீன்னு ஒரு பாட்டு திருவருட் செல்வர் படத்துல வரும். பாட்டு நடுவில வார்த்தைகளோட அழகை கவனிங்க.


மனசு போல வெளுத்து வைச்சு
உறவு போல அடுக்கிவைச்சு
வரவு போல மூட்டைகட்டி- வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும் நாணயம் தான்
வெள்ளையப்பா


“ மனசு, துணிய விட சுத்தமா இருக்கு”.

எளிமையான மக்களுக்கு அப்படிதாங்க. கவிஞர் வார்த்தையிலேயே படம் புடிச்சிட்டாரு. அப்படி ஒரு சுத்தம் வரணுமின்னா என்ன செய்யணும். சினா சோனா சொல்றாரு பாருங்க
(படம் பெரிதாகத் தெரிய அதன் மேல் சுட்டவும்)


"It wisely put, better to rub it out, than to rub it in "

மனைவிக்கு பயந்த கணவனாக இருக்கும் சினா-சோனா வுக்கு துணி துவைக்கும் வேலை வந்து சேருது. அவங்க ஊர்ல துணிய தேய்க்கிறப் பலகை, தொட்டிக்கு செங்குத்தாகத்தான் இருக்கும் போலிருக்கு. அது மேல அழுக்கு துணிய தேய்க்கும் போது முதலில் அவருக்கு தன்னுடைய நிலைமைய நினைச்சு மனம் கஷ்டப் படுது. ( அதை படத்துல அவரு மூஞ்சியப் பார்த்து புரிஞ்சிக்கணும்). சுய பச்சாதாபம்.

அதன் பிறகு அழுக்கைப் போக்கத் தேய்த்துக் கொண்டிருக்கும் (rub it out ) செய்கையாலே ஞானோதயம் வருது. கோபத்தையோ கஷ்டத்தையோ மனசிலேயே போட்டு உழப்பிக் கிட்டு (rub it in ) இருக்கிறத விட 'அழுக்கை வெளிய தள்ளுற மாதிரி, எதிர்மறை எண்ணங்களை தள்ளிடணும்' ன்னு சொல்றார்.

குள்ளச்சாமியை பார்த்து பாரதியார் ‘ஏனய்யா அழுக்கு மூட்டை சுமக்கிறீர்' ன்னு கேட்டதுக்கு அவரு என்ன சொன்னாரு?

“புறத்தே நான் சுமக்கின்றேன், அகத்தினுள்ளே
இன்னொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ ”

அப்படீன்னு பதில் வந்திச்சு. சினா சோனா சொல்ற "rub it in " ங்கறது பழங்குப்பை சேர்ப்பதற்கான வழி. மனசுக்கு எது உற்சாகம் கொடுக்குமோ அந்த விஷயங்களை மாத்திரம் நெனச்சு பார்க்கணும். அப்போ தானாகவே வேண்டாத எண்ணங்களெல்லாம் தூர ஓடிப்போயிடும்.

ரொம்ப சிம்பிளா கவிஞர் rub-it out வழியும் சொல்லிட்டாரு பாருங்க.
கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா - உன்
சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

சினா சோனா, சொன்னா சரிதான் !

Saturday, August 23, 2008

எது இன்ஸ்பிரேஷன், எது காப்பி ?

வெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண்டுகோலாக (inspiration) கொள்வதில் தவறில்லை. அப்படியே நகல் எடுக்கக்கூடாது என்று பப்பி லஹரி சொன்னார்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா ? சின்ன சின்ன ஆசை என்று சக்கை போடு போட்டதே ஒரு பாடல் அதற்கு மூலம் கே.எஸ். நரசிம்மஸ்வாமி என்பவர் எழுதி பல வருடங்களுக்கு முன்னர் கன்னடத்தில் ”மைசூரு மல்லிகே” என்கிற திரைப் படத்தில் வரும் ஒரு பாடலை ஒட்டியிருக்கும். ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு வரும் போது இசையை 'காப்பி' அடிக்கமுடியும் ஆனால் வார்த்தைகளை அவ்வளவு சுலபமாக முடியாது.

ஆனால் ஒரே மொழியில் ஒரே விதமான வரிகள் கொண்டு வரும் போது அதை என்ன சொல்வது?

சமீபத்தில் கவிநயா அவர்களின் ”நினைவின் விளிம்பில்”வலைப்பூவில் நடராசர் பற்றிய கவிதையை கண்டபோது என்னிடமிருந்த சஞ்சய் சுப்பிரமணியன் அவர்கள் குரலில் பதிவான ”மானாட மழுவாட” என்ற பாடல் நினைவுக்கு வந்தது. விருத்தமாக பாடப்பெற்ற அந்த பாடல் தில்லி B வானொலியில் காலை 6.0லிருந்து 6.45 வரை ஒலிபரப்பாகும் ”வந்தனா” நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதன் பொருள் செறிவு காரணமாக அதை பதிவு செய்து வைத்திருந்தேன். அப்போது பாடல் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. கோபாலகிருஷ்ண பாரதியோ, அருணாசலக் கவியாகவோ இருக்கலாம் என்று ஊகித்திருந்தேன்.

கவிநயா வின் பதிவை படித்தபின் அதன் ஆசிரியரை தேட முனைந்தேன். முதலில் அப்புசாமி டாட் காம் -ல் நடராஜ பத்து என்ற தலைப்பில் பாடல் கிடைத்தது. ஆனால் ஆசிரியர் பற்றி குறிப்பிருக்கவில்லை. மேலும் தேடியதில் இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. என்னைப் போலவே அப்பாடலால் கவரப்பட்ட சேதுக்கரசி அவர்கள் அதைப் பற்றி 'அன்புடன்' குழுமத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அப்பாடலை ”மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என்று ஆரம்பிக்கும் திரைப்படப் பாடலின் கடைசி சில வரிகளோடு ஒப்பிட்டு எப்படி ஒரு பாடல் இன்னொரு பாடலாசிரியருக்கு 'தூண்டுகோலாக' அமைகிறது என்பதை அழகாக காட்டியிருக்கிறார்.

பூவை செங்குட்டுவன் எழுதி சூலமங்கலம் சகோதரிகள் பாடியிருக்கும் பிரபலமான பாடலில் வரும்

ஆடுகின்றானடி தில்லையிலே

அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே

திங்களும் ஆட சூலமும் ஆட

விரிசடை மீதொரு கங்கையுமாட

என்கிற வரிகளும் மேற்கண்ட பாடலின் தாக்கம் எனக்கொள்ளலாம். இப்படி பலருக்கும் பலவிதமாக ஊக்கமளிக்கும் பாடலை நீங்களும் பக்க-பட்டையில் (side Bar) பொருத்தப்பட்டுள்ள தமிழிசை தொகுப்பில் கேட்டு மகிழலாம். அதன் ஆசிரியர் சிறுமணவூர் முனுசாமி முதலியார். நடராச பத்து என்ற பதிகத்தில் இரண்டாம் பாடலாக வருவது.

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திரையாட
மறை தந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டம் எல்லாமாட
குஞ்சர முகத்தான் ஆட
குண்டலம் இரண்டாட தண்டை புலியுடை ஆட
குழந்தை முருகேசன் ஆட
ஞான சம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனி அட்டபாலகரும் ஆட
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்க ளாட
வினையோட உனைப்பாட யெனைநாடி இதுவேளை
விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ் நடராசனே

(அட்டபாலகர்= அஷ்ட பாலகர்)
விருத்தம் பாடுவது ஒரு கலை. அதை குறிப்பாக ஒரு பாடலின் பொருள் உணர்ந்திருந்தால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். அதில் பாவத்திற்கேற்ற ராகமும், தெளிவான உச்சரிப்பும் இருந்தால்தான் களைக்கட்டும். அதை நன்றாகவே கையாண்டிருக்கிறார் சஞ்சய் சுப்பிரமணியன் அவர்கள்.

முனுசாமி முதலியார்க்கும் ஒரு முன்னோடி உண்டு. அவர்தான் திருமூலத்தேவர். அவருடைய பாடலையும் பாருங்களேன் !

வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட

கீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாடப்

பூதங்களாடப் புவனம் முழுதாட

நாதன் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே

எது இன்ஸ்பிரேஷன் எது காப்பி ?