Thursday, March 31, 2011

பாதாளம் போகும் சூதாடி மாந்தர்

சமீபத்தில் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களுடைய ஒரு பாடலை படிக்க நேர்ந்தது. சூதாடிகள் படும் துன்பம் பற்றியது. அதைக் கண்டதும் சினா சோனா வின் ஒரு கார்ட்டூன் நினைவுக்கு வந்தது.

”துண்டக் காணோம் துணியக் காணோம் என்று ஓடினான்” என வேடிக்கையாகக் குறிப்பிடுவது போல இருக்கும் உடமையெல்லாம் சூதாட்டத்தில் இழந்து ஓட்டைப் பீப்பாயை அரைக்கு அசைத்து போகும் சினா-சோனா ஏறக்குறைய பாண்டவர்களின் கதியை அடைந்து விட்டான்.எல்லோரையும் எல்லாக் காலத்திலேயும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்த்தும் நல்ல கருத்து உள்ள நகைச் சித்திரம் இது.

சூதாடி மாந்தர்களின் சுக வாழ்வும் ஒரு நாளில்
பாதாளம் போகுமெனல் பாரறிந்த உண்மையன்றோ

சொல்ல முடியா துன்பக்கதை சூதாடி மனிதரின் சோகக்கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகை கள்ள வேலைகள் செய்த கதை
சிலர் கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர் அரசு உரிமை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன் அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலை பிரிய நேர்ந்ததும் ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே

( படம் : உலகம் சிரிக்கிறது 1959)

Saturday, March 12, 2011

தமிழ்மணம் வலைப்பூ ராங்கிங்

தமிழ்மணம் வலைப்பூ ராங்கிங் பட்டியலை சிலர் தத்தம் வலைப்பக்கங்களில் பிரதர்சனப்படுத்தியதைக் கண்டு என்னுடைய வலைப்பூக்களின் நிலைமையை என்னவென்று தெரிந்து கொள்ளலாமே என்று உரலை(URL) இடித்தேன் :)

பொதுவாக நான் வலைப்பக்கத்தின் வார்ப்புருவிலிருந்து ’பிங்’ செய்துவிடுவதாலும் நான் படிக்க வேண்டிய வலைப்பூக்களை ரீடரில் படித்துவிடுவதாலும் தமிழ்மணம் முகப்பிற்கு போய்வர அவசியம் ஏற்படுவதில்லை.இதனால் பல புது வலைப்பூக்களையும் எழுத்தாளர்களையும் அறியாமல் போய்விடுவது வருத்தத்திற்குரிய ஒரு உண்மைதான் :(

என் வலைப்பக்கங்களில் அதிக போக்குவரத்தும் பின்னூட்டங்களும் உள்ளது கபீரின் கனிமொழிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அதற்கு அடுத்துதான் இந்த வலைப்பூவும் (கற்கை நன்றே),சித்திரமும் கைப்பழக்கமும் என்ற வலைப்பூவூம்.
அப்படித்தான் statcounter-உம் சொல்கிறது. இவையிரண்டில் பல சமயங்களில் பின்னூட்டங்களே இருப்பது இல்லை என்பது தான் உண்மை.

ஆனால் தமிழ்மணம் ராங்கிங் அதை தலைகீழாக்கி விட்டது

மேலும் மாதம் இரண்டு இடுகைகள் என்பதாக கபீர் வலைப்பூவிலும் மற்ற இரண்டு வலைப்பூக்களில் ஒவ்வொன்றாகவும் தான் இட்டு வருகிறேன். இது மிகவும் குறைவு என்ற காரணத்தால் ராங்கிங் கீழே இருப்பதில் ஆச்சரியம் இல்லை. எனக்கு அதில் ஏமாற்றமோ குறையோ இல்லை. என்றாலும் குறைவான பின்னூட்டங்களும், பின்னூட்டங்களே திரட்டப்படாத இந்த வலைப்பூ எப்படி கபீரின் வலைப்பூவை விட நல்ல ராங்கிங் பெற்றுள்ளன என்பது ஆச்சரியமாயிருக்கிறது.

தமிழ்மணத்தின் கணக்குப்படி இன்றைய நிலவரப்படி:

கபீரின் கனிமொழிகள் -1801 : கற்கை நன்றே 1202 : சித்திரமும் கைப்பழக்கம் 1309

மூன்று நாட்களுக்கு முன்பு - 1737, 1209, 1313

எழுத்து அல்லது கருத்து தரத்தின் அடிப்படையில் ராங்கிங் செய்வது மிகவும் கடினமான விஷயம் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

ராங்கிங் பற்றி தமிழ்மணம் சொல்வது :
தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு பதிவும் பெறும் பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்

என் வலைப்பூக்களில் வாசகர் பரிந்துரையும் பெரும்பாலும் பூஜ்யமே. அப்படி இருக்கும் போது வெறும் போக்குவரத்து கணக்கினாலே செய்யப்படும் ராங்கிங்-கில் ஏனிந்த முரண்பாடு?

தமிழ்மணத்திலிருந்து வந்து போகும் வாசகர் எண்ணிக்கை கபீரின் கனிமொழிகள் சரியாக இணைக்கப்படவில்லையா அல்லது மறுமொழி திரட்டப்படுவதில் கோளாறா?

ஏதோ என் புத்திக்கு இது எட்டவில்லை, சொன்னேன். எப்படியோ வண்டி ஓடிக்கொண்டிருந்தால் சரி. முன்னாலே போவதால் ஆதாயமும் இல்லை, பின்னாலே இருப்பதால் நஷ்டமும் இல்லை. :))))