Monday, January 28, 2008

பாரதியாரின் பகல் கொள்ளை

“ஏற்பது இகழ்ச்சி” என்ற சொன்ன கையோடு “ஐயம்(பிச்சை) இட்டு உண்” என்றும் சொல்லி வைத்திருக்கிறார் ஔவைப்பாட்டி. ஏற்பவர் இருந்தால்தானே பிச்சை இடுபவர்கள் இருக்க முடியும். சோழவள நாடு சோறுடைத்து என்பதற்கு ஒப்பான வளம் நிறைந்த நாட்டில்'ஏற்பவர்'களாக துறவிகள் மட்டுமே இருந்திருக்க வேண்டும். இந்நாட்டில் மட்டும் தான் இல்லறத்தானை உய்விக்க துறவிகளுக்கு 'பிக்‌ஷா' தருமம் என்று ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஏ.பி.என் படத்தை போல கல்வியா, செல்வமா, வீரமா என்கிற குழப்பம் எப்போதும் இருக்கிறது. சரஸ்வதி கடாட்சம் உள்ள இடத்தில் லட்சுமி இருப்பதில்லை என்று சொல்வதுண்டு. பிறர் விஷயத்தில் எப்படியோ பாரதியாரின் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை. அவர் வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்ச்சி

வெல்லச்சு செட்டியார் என்று பாரதியாரால் அன்பாக அழைக்கப்பட்ட கிருஷ்ணசாமி செட்டியார் ரொம்பக் குள்ளை.நல்ல கெட்டியான இரட்டை நாடி உடம்பு. உடலிலோ மனதிலோ சோர்வை ஒருநாளும் பார்த்ததில்லை.

நெசவு தொழிலும் துணி வியாபாரமும் செய்து வந்த அவர் அடிக்கடி பாரதியாரின் வீட்டுக்கு வந்து
விடுவார். எத்தனை நாழிகை வேண்டுமானாலும் மௌனமாய் உட்கார்ந்திருப்பார்.முதலில் பாரதியாரை 'ஸ்வாமி' என்று கும்பிடுவதோடு சரி.

பாரதியாருக்கு அவரிடம் பிரியம் அதிகம். அவரிடம் தம் பாடல்களைப் பாடிக் காண்பிப்பதில் ரொம்பத்திருப்தி. செட்டியாரின் முகத்தைப் பார்த்தால் அவர் ஒரு
இலக்கிய ரசிகரென்றே தோன்றாது. அவருக்கு வயது அப்போது சுமார் இருபது இருக்கலாம்.

“இவரிடத்தில் வீணாக பாரதியார் வாசித்துக் காண்பிக்கிறாரே !” என்று எங்களில் சிலர் எண்ணியதுண்டு.ஆனால் சிரிக்க வேண்டிய பகுதியில், எங்களுக்கு முன்னமே ‘களுக்'கென்று சிரித்துவிடுவார்.சோகரஸக் கட்டம் வந்தால் செட்டியாரின் முகத்தைக் கண் கொண்டு பார்க்க முடியாது. முகத்திலே உருக்கம் தாண்டவமாடும்.

பார்வையிலே நாம் எவ்வளவு ஏமாந்து போகிறோம் என்பதற்கு, கிருஷ்ணசாமி செட்டியாரை ஓர் உதாரணமாக பாரதியார் அடிக்கடி சொல்லுவார்.“எந்த புற்றில்
எந்த பாம்பு இருக்குமோ, யார் கண்டார்” என்று முடித்துவிடுவார்.

இம்மாதிரி சமயங்களில், பாரதியார் சில கதைகள் சொல்லுவார். செட்டியாரை குத்துகிறது போலவும் தூக்கி பேசுகின்ற மாதிரியும் ஒரு கதை சொல்லுவார்.அது பழைய கதைதான். நண்பர் செட்டியாருக்கு அதை பாரதியார் பிரயோகம் செய்ததால் அதை சொல்ல வேண்டியிருக்கிறது.

இரண்டு பேர் காட்டுப் பாதையாகப் போய்க்கொண்டிருந்தார்களாம். ஒருவர் குடியானவர். மற்றவர் செட்டியார்.காட்டுப் பாதையில் திருடர் பயம் ஜாஸ்தி.
இருட்டுக்கு முன் காட்டைக் கடந்துவிடலாம் என்று இருவரும் பயணம் புறப்பட்டார்கள். ஏதோ அவக்கேட்டால், இருட்டிப் போனபிறகுதான் அவர்கள் காட்டுக்குள் நுழைந்தார்கள்.

இந்தக் கட்டத்தில், “ஏன் செட்டியாரே! கதை சரியாகச் சொல்ல வேண்டுமானால் இந்த சமயம் திருடர்கள் வரலாமா,அல்லது கொஞ்ச தூரம் வழி நடந்து,
சிறிது நேரம் ஆன பிறகு வரலாமா?” என்று பாரதியார் கேட்பார். “எந்த சமயத்தில் வந்தாலென்ன? நான் பாரதியாரோடு வழிப் பிரயாணம் செய்கிற செட்டி. எனக்கு என்ன பயம், என்ன அவமானம்?”என்பார் செட்டியார். “அச்சா! அப்படிச் சொல்லப்பா தங்கமே!” என்று பாரதியார் விழுந்து விழுந்து சிரிப்பார்.நாங்கள் மட்டும் சிரிக்காமல் இருப்போமா ?

திருடர்கள் குடியானவனை நையப் புடைத்து,அவனிடமிருந்ததைப் பிடுங்கிக் கொண்டனர்.செட்டியார் (கதைச் செட்டியார்) பார்த்தார்.பேச்சு மூச்சு இல்லாது
படுத்துக் கொண்டார். திருடர்கள் செட்டியாரைக் கோலால் தட்டிப் பார்த்து,'கட்டை கிடக்கிறது' என்றார்கள்.“உங்கள் வீட்டுக் கட்டை பத்து ரூபாயை மடியில் கட்டிக்கொண்டிருக்குமோ? என்றார் செட்டியார்.

“என்ன செட்டியாரே, சரிதானே கதை?” என்றார் பாரதியார். “கதை எப்படி இருந்தாலும் அது இப்பொழுதுதான் முடிந்தது” என்று மடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை பாரதியாரிடம் கொடுத்தார் செட்டியார். “கதையில் திருடர்கள், நான் பகல் கொள்ளைக்காரன்” என்று சொல்லி,பாரதியார் கட கடவென்று சிரிப்பார். பாரதியார் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதில் செட்டியாருக்கு பிரம்மானந்தம். கண் கொட்டமாட்டார். அத்தகைய பக்தியை செட்டியாரிடம் தவிர வேறு யாரிடமும் அவ்வளவாக நான் பார்த்ததில்லை.

என்ன ஆச்சரியம்! செட்டியாரைப் பார்த்தால் ஒன்றுமே விளங்காத அப்பாவியைப் போல இருப்பார்.ஆனால் அவர் செய்கின்ற காரியமோ, அபாரமாயிருக்கும்.
பாரதியார் சொன்ன கதையை எவ்வளவு நேர்த்தியான நகைச்சுவையுடன் முடித்தார்!விளையாட்டுக்காக பாரதியாரிடம் அந்த ரூபாய்களைக் கொடுக்கவில்லை.

பாரதியாரின் நிலைமை அறிந்தே கொடுத்தார்.


(மகா கவி பாரதியார், ஆசிரியர் :வ.ரா, பழனியப்பா பிரதர்ஸ், எட்டாம் பதிப்பு 1974- முதல் பதிப்பு 1944)

இரத்தலில் ஒரு நயம் இருக்கவேண்டும். அது போலவே ஈகையிலும் ஒரு இங்கிதம் வேண்டும். மேற்க்கண்ட நிகழ்சியைப் பற்றிப் (1910-1911) படித்த போது
மேலோர் எனப்படுவர் இரண்டு சந்தர்பங்களிலும் எப்படி நடந்து கொள்வர் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்தது.

Wednesday, January 9, 2008

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.....(சினா-சோனா-3)

ஒவ்வொருவர் உள்ளும் ஒரு தனித்திறமை இருக்கும், அதை முறையாக வெளிக்கொணர்ந்தால் அவரது ஆற்றல் எல்லோருக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்ற சொல்லக் கேட்கிறோம். பிரச்சனையே எப்படி "முறையாக" வெளிக் கொண்டுவருவது என்பதிலே தான்.

பிறர் சொல்வதையெல்லாம் நம்புபவர்கள், தலையாட்டி பொம்மை போல ஆமாம் சாமி போடுகிறவர்கள் தலைவர்களாக முடியாது. தான் ஈடுபட்டுள்ளத் துறையிலே தன் அறிவை வளர்த்துக் கொள்ளாதவன் நிபுணனாக முடியாது. ஒருவனின் திறமை வெளிவர வேண்டுமானால் அவன் சுய சிந்தனை உடையவனாக இருக்க வேண்டும். பிறரை நம்பி இருக்காமல் தன் திறமையிலே நம்பிக்கை கொள்பவனுக்குத்தான் தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை உள்ள இடத்தில் ஆற்றல் வளரும்.

இதோ பாருங்கள் சினா-சோனா வும் சொல்ல வருவதும் அதைத்தான்.

He who follows the crowd will never be followed by a crowd (Oct 11)

The wise man says to fill your job fill your mind (Oct 12)



Oct 11-ல் பிரசுரிக்கப்பட்ட Think it over... உண்மையிலே யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
"However brilliant an action may be it should not be accounted great when it is not the result of a great purpose"

உலகத்திலேயே மிக நீளமான தலைமுடி வைத்திருப்பவர், நகம் வளர்த்திருப்பவர், பின்பக்கமாகவே நடந்து உலகை சுற்றி வருபவர்கள் என்று பல சாதனைகள் உள்ளன. இவற்றால் உண்மையிலே ஆனது அல்லது ஆவது என்ன என பலமுறை நினைப்பதுண்டு. அதை நினவு படுத்தியது மேலே கண்ட வாசகம்.

Thursday, January 3, 2008

அப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி

புத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி கருத்துகள் எழுத தோன்றினாலும் வேறு பல வேலைகள் காரணமாய் முடியாமல் போனது. நேற்று அது பற்றி வலைப்பூ அன்பர் விவரம் கேட்டிருந்தார். காலதாமதமாயிருந்தாலும் ஆர்வம் உள்ளவர்களின் வசதிக்காக என் நினைவிலிருந்து பதிகிறேன்.

பேட்டி கண்டவர், சன் செய்திவாசிப்பவர் என்று நினைக்கிறேன்( அவர் பெயர் தெரிந்துகொள்ளாததற்கு மன்னிக்கவும்). மிக நல்ல முறையில் பொருத்தமான தமிழ் வார்த்தைகளை அவ்வப்போது எடுத்துக் கொடுத்து தமிழ் நேயர்களுக்கு பேட்டியின் முழுபயனும் கிடைக்குமாறு செய்தார். கலாம் அவர்கள் வழக்கம் போல் தனது எளிமையினால் அவரது பெருமைகளையும் சாதனைகளையும் நினைக்க விடாமல் தடுத்து விட்டார். அவருடைய புத்தகங்களை படித்தவர்களுக்கு அறிந்து கொள்ள புதிதாக அதிகம் இருக்கவில்லை.

3 S எனக் குறிப்பிடப்படும் சியாசின், சுகோய் விமான ஒட்டுதல், சப்மரீனில் ஆழ்கடல் பயண அனுபவங்கள் நன்றாக இருந்தன.

எப்படி இந்திய ராணுவத்தினர் சியாசின்னில் உறைபனி - 43 டிகிரி -ல் எல்லை பாதுகாவல் புரிகின்றனர் என்பதை சொல்லியதிலும் அவருக்கு தேசத்தின் முதல் குடிமகன் என்ற முறையில் அவர்களை நேரில் சந்தித்து உற்சாகம் ஊட்டுவது தனது கடமை யென்று எண்ணி செயல்பட்ட கடமையுணர்வு புரிகிறது.

சுகோய் விமானம் ஓட்டும் பொழுது எப்படி 7 G வரை தாக்குபிடிக்கும் ஆடை அணிந்து தனது ஐம்பது வருட கனவான போர்விமானம் ஓட்டும் ஆவலை பூர்த்தி செய்தார் என்ற விவரமும் சுவையாக இருந்தது. (1G= புவிஈர்ப்பு விசை). அந்த ஆடை அணிந்துகொள்ளும் போது வெளியே வேகத்தின் காரணமாக ஏழு மடங்கு அழுத்தம் இருப்பினும் உள்ளே ஒரு G அழுத்தமே இருக்குமாம்.

சாதனைகளில் இமயமாய் உயர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் ஆழ்கடலின் அமைதி காப்பவருக்கு ஆழ்கடலின் கவர்ச்சியும் விடவில்லை. நீர்மூழ்கி கப்பலில் தான் செலவழித்த சில மணி நேர அனுபவத்தையும் சொல்லி முப்படையினருக்கும் அதிபதியாகிய ஜனாதிபதி பதவியின் முழு பரிமாணத்தையும் புரிய வைத்தார். இவர் சியாச்சினுக்கு செல்ல முடிவெடுத்ததால் அந்த பக்கம் எட்டியே பார்க்காத பல உயர் அதிகாரிகள் வலுக்கட்டயமாக போய் அந்த அனுபவத்தை பெற வேண்டியிருந்தது. அதன் பின் அவர்கள் அணுகுமுறை சியாச்சின் விஷயத்திலும் அங்கு பணிபுரியும் ராணுவத்திடமும் பெருமளவில் மாறியது என்பதையும் ராணுவ நண்பர் ஒருவர் மூலம் அறிவேன்.

இதையெல்லாம் இவர் கடமையாக செய்தது தனது 70 வயதுக்கு மேலே என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

டெஹ்ராடூனில் விமானப்படையில் தேர்வாகாமல் மனம் தளர்ந்திருந்த கலாம் அவர்கள் வரும் வழியில் ரிஷிகேஷ்-ல் சிவானந்தா ஆசிரமத்தை அடைந்தார். சுவாமி சிவானந்தா கடைசி வரிசையில் அமர்ந்திருந்த இவரை பேட்டிக்கு தேர்ந்தெடுத்து சுமார் இரண்டு மணி நேரம் அவருக்கு உற்சாகம் ஊட்டக் கூடிய வகையில் பேசியதை நினைவு கூர்ந்தார்.

" அவருக்கு அப்பொழுதே தெரிந்திருந்ததோ என்னமோ நீங்கள் சாதனையாளராகப் போகிறீர்கள்! " என்ற பேட்டியாளரின் கூற்றுக்கு" அங்க வேட்டி கட்டிகிட்டிருந்தது நான் ஒருத்தன் தான் அதனாலதான் கூப்பிட்டாரோ என்னமோ!! " என்று யதார்த்தமாக கூறியது மனதை தொட்டது.

பிற கேள்விகள் 25 லட்சம்பேர் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தது, 10 லட்சம் மாணவர்களை சந்தித்தது என ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் நினைவு கூறும் போது பிரமிக்கவைக்கும் விஷயங்கள்தான். 2020-ல் முன்னேறிய நாடாக மாற்றுதற்கான திட்டங்களை கணிணியைப் பார்த்து படித்தது இயல்பான உரையாடலில் சற்று நெருடலாக இருந்தது.

பேட்டியாளர் கேட்காமல் விட்டு விட்ட விஷயம் கலாம் அவர்களின் கவிதைகள் பற்றி. தமிழ் மக்களுக்கு தமது போற்றுதலுக்குரிய விஞ்ஞானி இயல்பான கவிஞரும் கூட என்பதை புரியவைக்க இதை விட நல்ல சந்தர்ப்பம் இருந்திருக்க முடியாது. பேட்டியின் ஆரம்பித்திலேயே தனக்கும் கடலுக்கும் பிறப்பிலிருந்து உள்ள நெருங்கிய தொடர்பை ஒரு கவிதை உணர்வோடு உரைத்தது நன்றாக இருந்ததது.

அது போலவே அவரால் முயற்சியெடுத்து வடிவமைக்கப்பட்ட கால் ஊனமுற்றவர்களுக்கான மிக லேசான செயற்கை கால்கள் பற்றியும் கேட்டிருக்கலாம். தேவையற்ற கேள்வி அவரது பிரம்மச்சரியம் பற்றியது.

கடைசியாகத் தோன்றியது. இந்த நேர்காணலையே சில மாணவர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட, இதுவரை அறியப்படாத பல அனுபவங்களை வெளிகொணரும் வகையில் அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்னவோ !

விரைவிலேயே வேறு ஏதாவது ஒரு தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்து இந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யட்டும்