Thursday, January 3, 2008

அப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி

புத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி கருத்துகள் எழுத தோன்றினாலும் வேறு பல வேலைகள் காரணமாய் முடியாமல் போனது. நேற்று அது பற்றி வலைப்பூ அன்பர் விவரம் கேட்டிருந்தார். காலதாமதமாயிருந்தாலும் ஆர்வம் உள்ளவர்களின் வசதிக்காக என் நினைவிலிருந்து பதிகிறேன்.

பேட்டி கண்டவர், சன் செய்திவாசிப்பவர் என்று நினைக்கிறேன்( அவர் பெயர் தெரிந்துகொள்ளாததற்கு மன்னிக்கவும்). மிக நல்ல முறையில் பொருத்தமான தமிழ் வார்த்தைகளை அவ்வப்போது எடுத்துக் கொடுத்து தமிழ் நேயர்களுக்கு பேட்டியின் முழுபயனும் கிடைக்குமாறு செய்தார். கலாம் அவர்கள் வழக்கம் போல் தனது எளிமையினால் அவரது பெருமைகளையும் சாதனைகளையும் நினைக்க விடாமல் தடுத்து விட்டார். அவருடைய புத்தகங்களை படித்தவர்களுக்கு அறிந்து கொள்ள புதிதாக அதிகம் இருக்கவில்லை.

3 S எனக் குறிப்பிடப்படும் சியாசின், சுகோய் விமான ஒட்டுதல், சப்மரீனில் ஆழ்கடல் பயண அனுபவங்கள் நன்றாக இருந்தன.

எப்படி இந்திய ராணுவத்தினர் சியாசின்னில் உறைபனி - 43 டிகிரி -ல் எல்லை பாதுகாவல் புரிகின்றனர் என்பதை சொல்லியதிலும் அவருக்கு தேசத்தின் முதல் குடிமகன் என்ற முறையில் அவர்களை நேரில் சந்தித்து உற்சாகம் ஊட்டுவது தனது கடமை யென்று எண்ணி செயல்பட்ட கடமையுணர்வு புரிகிறது.

சுகோய் விமானம் ஓட்டும் பொழுது எப்படி 7 G வரை தாக்குபிடிக்கும் ஆடை அணிந்து தனது ஐம்பது வருட கனவான போர்விமானம் ஓட்டும் ஆவலை பூர்த்தி செய்தார் என்ற விவரமும் சுவையாக இருந்தது. (1G= புவிஈர்ப்பு விசை). அந்த ஆடை அணிந்துகொள்ளும் போது வெளியே வேகத்தின் காரணமாக ஏழு மடங்கு அழுத்தம் இருப்பினும் உள்ளே ஒரு G அழுத்தமே இருக்குமாம்.

சாதனைகளில் இமயமாய் உயர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் ஆழ்கடலின் அமைதி காப்பவருக்கு ஆழ்கடலின் கவர்ச்சியும் விடவில்லை. நீர்மூழ்கி கப்பலில் தான் செலவழித்த சில மணி நேர அனுபவத்தையும் சொல்லி முப்படையினருக்கும் அதிபதியாகிய ஜனாதிபதி பதவியின் முழு பரிமாணத்தையும் புரிய வைத்தார். இவர் சியாச்சினுக்கு செல்ல முடிவெடுத்ததால் அந்த பக்கம் எட்டியே பார்க்காத பல உயர் அதிகாரிகள் வலுக்கட்டயமாக போய் அந்த அனுபவத்தை பெற வேண்டியிருந்தது. அதன் பின் அவர்கள் அணுகுமுறை சியாச்சின் விஷயத்திலும் அங்கு பணிபுரியும் ராணுவத்திடமும் பெருமளவில் மாறியது என்பதையும் ராணுவ நண்பர் ஒருவர் மூலம் அறிவேன்.

இதையெல்லாம் இவர் கடமையாக செய்தது தனது 70 வயதுக்கு மேலே என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

டெஹ்ராடூனில் விமானப்படையில் தேர்வாகாமல் மனம் தளர்ந்திருந்த கலாம் அவர்கள் வரும் வழியில் ரிஷிகேஷ்-ல் சிவானந்தா ஆசிரமத்தை அடைந்தார். சுவாமி சிவானந்தா கடைசி வரிசையில் அமர்ந்திருந்த இவரை பேட்டிக்கு தேர்ந்தெடுத்து சுமார் இரண்டு மணி நேரம் அவருக்கு உற்சாகம் ஊட்டக் கூடிய வகையில் பேசியதை நினைவு கூர்ந்தார்.

" அவருக்கு அப்பொழுதே தெரிந்திருந்ததோ என்னமோ நீங்கள் சாதனையாளராகப் போகிறீர்கள்! " என்ற பேட்டியாளரின் கூற்றுக்கு" அங்க வேட்டி கட்டிகிட்டிருந்தது நான் ஒருத்தன் தான் அதனாலதான் கூப்பிட்டாரோ என்னமோ!! " என்று யதார்த்தமாக கூறியது மனதை தொட்டது.

பிற கேள்விகள் 25 லட்சம்பேர் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தது, 10 லட்சம் மாணவர்களை சந்தித்தது என ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் நினைவு கூறும் போது பிரமிக்கவைக்கும் விஷயங்கள்தான். 2020-ல் முன்னேறிய நாடாக மாற்றுதற்கான திட்டங்களை கணிணியைப் பார்த்து படித்தது இயல்பான உரையாடலில் சற்று நெருடலாக இருந்தது.

பேட்டியாளர் கேட்காமல் விட்டு விட்ட விஷயம் கலாம் அவர்களின் கவிதைகள் பற்றி. தமிழ் மக்களுக்கு தமது போற்றுதலுக்குரிய விஞ்ஞானி இயல்பான கவிஞரும் கூட என்பதை புரியவைக்க இதை விட நல்ல சந்தர்ப்பம் இருந்திருக்க முடியாது. பேட்டியின் ஆரம்பித்திலேயே தனக்கும் கடலுக்கும் பிறப்பிலிருந்து உள்ள நெருங்கிய தொடர்பை ஒரு கவிதை உணர்வோடு உரைத்தது நன்றாக இருந்ததது.

அது போலவே அவரால் முயற்சியெடுத்து வடிவமைக்கப்பட்ட கால் ஊனமுற்றவர்களுக்கான மிக லேசான செயற்கை கால்கள் பற்றியும் கேட்டிருக்கலாம். தேவையற்ற கேள்வி அவரது பிரம்மச்சரியம் பற்றியது.

கடைசியாகத் தோன்றியது. இந்த நேர்காணலையே சில மாணவர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட, இதுவரை அறியப்படாத பல அனுபவங்களை வெளிகொணரும் வகையில் அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்னவோ !

விரைவிலேயே வேறு ஏதாவது ஒரு தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்து இந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யட்டும்

No comments: