Sunday, December 23, 2007

இப்படியும் சிலர்

"அன்பரே நான் போட்டியிடும் இந்த பெரும்சபையின் அங்கத்தினர் போட்டியில் என்னைவிட என்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் பெருமானே பல மடங்கு தகுதி வாய்ந்தவர்" என்று வோட்டு வேட்டை நடந்த இடத்தில் முன்பின் முரணாகப் பேசி வெற்றிக்காக உழைக்காமல் தோல்விக்காக உழைத்தார் நோபல் பரிசு பெற்ற (1903) அந்த விஞ்ஞானி.

பின் எதற்காக போட்டியிட்டார்? அவர் பிரான்ஸ் தேசத்தின் Academy of Sciences-ல் உறுப்பினரானால் அவருக்கு ஸோர்போன் (Sorbonne) பல்கலைகழகத்தில் பேராசியர் பதவியும் அவருக்கென தனி சோதனைச் சாலையும் ஒதுக்கப்படும் என்ற காரணத்தால் முதலில் ஒத்துக்கொண்டார்.

ஆனால் வெட்கம் அவரை பிடுங்கித் தின்றது. அவரால் தன் சாதனைகளைப் பட்டியல் போட்டு தன் வேட்பு தாக்கலின் உண்மை நிலையை எடுத்துக்கூற முடியாமல் அவரது தன்னடக்கம் தடுத்தது. தன்னைப் பற்றி பீற்றிக்கொள்ள நா கூசியது. ஆனால் அடுத்தவரை பாராட்டும் பொழுது அவருடைய இதயம் விசாலமானது. வார்த்தைகள் சரளமாக வந்தன.

முடிவு அவர் விரும்பியபடியே புகழைத் தவிர்ப்பதில் வெற்றி அடைந்தார். சரி இவர்தான் இப்படி இவரது மனைவி எப்படி ?

இரண்டாம் முறையாக(1911) நோபல் பரிசுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை ஒரு அமெரிக்க பத்திரிக்கையின் நிருபர் அவரைத் தேடிச்சென்றார். எளிமையான கறுப்பு கவுன் அணிந்து வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் பேச்சுக்கொடுத்தார்.

" நீங்கள்தான் இந்த வீட்டை பார்த்துக்கொள்கிறீர்களா?"
"ஆமாம் "
"அம்மையார் இருக்கின்றாரா?"
"இல்லை. வெளியே போய் இருக்கிறார்கள்"
"அவர்களை விரைவில் எதிர்பார்க்கலாமா?"
"இல்லை. எனக்கு அப்படித் தோன்றவில்லை"
படிக்கட்டின் கீழே அமர்ந்து கொண்டு "அவர்கள் குடும்பத்தைப் பற்றிய தகவல்களை கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று கிசு கிசு பேச்சிற்கு காதை தீட்டிக்கொண்டார்.
"குறிப்பாக ஒன்றுமில்லை. ஆனால் அம்மையார் எல்லா நிருபர்களுக்கும் ஒரு பொதுவான செய்தி சொல்லுவார். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டும் ஆர்வத்தை பெரிய விஞ்ஞான உண்மைகளைத் தெரிந்துகொள்வதில் காட்டட்டும்".

ஏமாற்றத்தோடு திரும்பிய அந்த நிருபருக்கு தெரியாமல் போன இன்னொரு விஷயம், தான் தேடிவந்த நபரான மேடம் மேரி க்யூரி தான் அதுவரை தன்னோடு பேசிக்கொண்டிருந்தது என்பது தான்.

என்ன குடும்பம் அய்யா இது. ! விளம்பரம்தான் வேண்டாம் சரி. ஆனால் தேடி வரும் லட்சுமியையுமா வேண்டாம் என்பார்கள்.

பல வருடங்கள் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இரவுபகலாக உழைத்து வெளிக்கொணர்ந்த ரேடியம் மற்றும் போலோனியம் கதிர் வீச்சுகளுடைய மூலக்கூறுகளின் மருத்துவ பயன்களைப் பற்றிய ஆராய்சிக் கண்டுபிடிப்புகளை காப்புரிமைப் பெற்றுக்கொள்ளுமாறு பலரும் பலமுறை வற்புறுத்தியும் கூட அதை நிராகரித்து விட்டார்கள். அவைகள் இயற்கை தந்த பிச்சை. உலகோருக்கெல்லாம் சொந்தம் அதை நாங்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்பதே அவர்கள் வாதம்.

அவர்கள் அந்நேரத்தில் விளம்பரத்தை வெறுத்தாலும் பல நூற்றாண்டுகளுக்கு அவர்களை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இறைவன் செய்துவிட்டான்.

மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு அக்குடும்பத்தைத் தேடி வந்தது இம்முறை (1935) அவரது மூத்த மகளும் (Irene), மருமகனும் செய்த வேதியியல் ஆராய்சிகளுக்காக வழங்கப்பட்டது. அதற்குப்பின்னும் இறைவனுக்கு திருப்தியாகவில்லை போலும். அவரது இரண்டாவது மகளுக்கு (Eve) குழந்தைகள் மேம்பாட்டிற்காக ஐ.நா. சபையின் மூலம் ஆற்றிய பணிகளுக்கு நோபல் சமாதான பரிசு 1965-ல் வழங்கப் பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்க்கு நான்கு முறை வெவ்வேறு துறைகளுக்காக நோபல் பரிசை வென்றது சரித்திரத்திலேயே இல்லை.

இவர்கள் தான் கர்ம யோகத்திற்கு எடுத்துக்காட்டோ?

3 comments:

cheena (சீனா) said...

1903 ல் தொடங்கி 1965 க்குள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் வெவ்வேறு துறைகளுக்காக னோபல் பரிசு பெறுவதென்பது எளிய செயல் அல்ல. விளம்பரம் இல்லாமல் செயல் ஆற்றிய அக்குடும்பத்தினை நன்றியுடன் நினைவு கூற வேண்டும். அன்பர் கபீரன்பருக்கு நன்றிகள்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கடமையைக் காதலிப்போர் அப்படித்தான் குனாதிசயிப்பார்கள்.
நல்ல செய்தி.

KABEER ANBAN said...

நன்றி சீனா,
நன்றி அறிவன்.
இதில் நான் குறிப்பிடாமல் விட்டது 1)மேரி க்யூரி இருமுறை நோபல் பரிசு பெற்றது. முதல்முறை கணவருடன் பௌதிகத்திற்காகவும் இரண்டாம் முறை தனியாக வேதியியலுக்காகவும் பெற்றார். 2)அவர் கணவர் பியரி க்யூரி ஒரு சாலைவிபத்தில் 1906 ஏப்ரல் மாதத்தில் காலமானது.