Thursday, December 6, 2007

சித்திரமும் கைப் பழக்கம்.

பள்ளி பருவத்திலிருந்தே ஓவியத்தில் ஆர்வம் உண்டு. எட்டு ஒன்பது வகுப்பு படிக்கும் காலத்தில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இருமுறையும் இரண்டாம் பரிசு. ஆரம்ப காலங்களில் கேம்லின் கம்பெனி தயாரித்து வந்த தண்ணீரில் கரையும் வண்ண வில்லைகள் பெட்டியும் அதனோடு வரும் ஒரு ஒத்தை பிரஷும் தான் எனது பொக்கிஷம். ப்ரஷ் எலி கடித்தது போல இருக்கும். அதை வைத்தே பொழுதை போக்கக் கற்றுக்கொண்டேன். ஆயில் பெயிண்ட் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் கல்லூரி காலம் முடியும் மட்டும் முயற்சி செய்ய வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

எனது விருப்பமான படம் பிள்ளையார். சுலபமான யானை முகம். மூக்கு கோணியது, வாய் கோணியது என்று யாரும் கமெண்ட் அடிக்க முடியாது. எப்படி இருந்தாலும் ஓகே. அவருக்கு கிரீடம் போடுவதிலும் பாசாங்குசம் மற்றும் ஆபரணங்கள் தீட்டியே மஞ்சள் வில்லை ஓட்டையாகிவிடும். அப்படியும் அந்த தங்க கலர் வராது. அதற்கு காரணம் ஒளி-நிழல் வேற்றுமை புரிந்து கொள்ளாததாலும் அதை சொல்லித்தர யாரும் இல்லாததுமே காரணம்.

படம் போட்ட பின்பு அது மனதுக்கு சரியாகாவிட்டால் அதை தூக்கிப்போட்டு விடுவேன். பின்னர் என் அம்மாவிடம் திட்டு வாங்குவேன். "சாமி படம் வேணாம்னு சொன்னாலும் போட்டு எல்லாரும் மிதிக்கிற மாதிரி இங்கேயும் அங்கேயும் தூக்கி போடறியே உனக்கு படிப்பு வராது". நல்லவேளை பிள்ளையாருக்கு அப்படி ஒன்றும் என் மீது கோபம் வந்ததாகத் தெரியவில்லை. ஓரளவு நல்ல முறையிலே தேறி வந்து விட்டேன்.
என்னுடைய நோட்டுப் புத்தகங்களின் பின்பக்கங்களில் அன்றைய தேதிகளில் வந்திருக்கும் கோபுலு, மாயா வினு,ஜெயராஜ் போன்றவர்களின் ஓவியங்களை வரைய முயற்சித்திருப்பேன்.எல்லா கத்துகுட்டி ஓவியர்கள் போலவே பெரும்பாலும் கையும் விரல்கள் அமைப்பும் வராமல் சண்டித்தனம் செய்யும். ரப்பரால் அழித்து அழித்து பேப்பரே ஓட்டையாகி போவது சர்வசாதாரணம்.ஓட்டைக்குப் பின்னால் துண்டு பேப்பர் ஒட்டி அட்ஜஸ்ட் செய்ததும் உண்டு.

அப்புறம் இயற்கைக் காட்சிகள், கி்ருஷ்ணருடன் மாடு மயில் இப்படியாக சிலவற்றை அவ்வப்போது வரைந்து வந்தேன். நவராத்திரி போது எங்கள் வீட்டிலும் நண்பர்கள் வீட்டிலும் வண்ணப்பொடியில் ரங்கோலிக்கு ஏற்ப படங்கள் போட்டுத்தருவது என் பிரத்யேக வேலை. தேர்தல் நேரத்தில் பசுவும் கன்றும் (காங்கிரஸ் பிளவிற்கு முன்னர்) சின்னம் கேட்டு வரைந்து வாங்கி செல்லும் நண்பர்களும் இருந்தனர். உதய சூரியன் சின்னம் மிகவும் சுலபமானதால் அதற்கு என்னைப் போன்ற ஸ்பெஷலிஸ்டுகள் தேவையில்லை.

எஸ் எஸ் எல் ஸி தேர்வுகளுக்கு பின் வந்த பெரிய விடுமுறையில் ரீடர்ஸ்-டைஜஸ்ட் பத்திரிக்கையின் பின் அட்டையில் வந்த நல்ல பெயிண்டிங்களை வாட்டர் கலரில் செய்ததில் தன்னம்பிக்கை சற்று அதிகமானது.

பொதுவாக என்னுடைய ஓவிய ஆர்வம் குளிர் ஜுரம் போல விட்டு விட்டு வரும். ஏதாவது ஓவியக் கண்காட்சி அல்லது பத்திரிக்கையில் ஓர் ஓவியரைப் பற்றிய கட்டுரையை காண அல்லது படிக்க நேரும் பொழுது அதன் தாக்கம் சிறிது காலம் இருக்கும்.அதன் விளைவாக ஓரிரண்டு படைப்புகள் தோன்றும். படைத்த எதையும் முறையாக பாதுகாத்தது கிடையாது.

ஒரு நாள் திடீரென்று ஞானோதயம் வந்தது.

என்னுடைய மாமாவின் மகன் (என்னை விட பதினோரு வயது இளையவன்) அடிக்கடி ஓவியக் கண்காட்சிகளை அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்தி விற்பனையும் செய்கிறான். ஒரு பேட்டியில் அவனுடைய உள் உந்துதலுக்கு என்னை முக்கியமான காரணமாகக் காட்டியது பெருமிதப் பட வைத்தாலும் ஒரு குற்ற உணர்வு பற்றிக்கொண்டது. மென்பொருள் வல்லுனனாக இருக்கும் அவன் முழு நேர ஓவியனாக இல்லாவிட்டாலும் முறையாக எல்லாப் படைப்புகளையும் பாதுகாத்து வந்திருக்கிறான். பல வெளிநாட்டு கிளப்புகளில் உறுப்பினராகி தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறான். நான் இது போல எதையும் செய்யவில்லை.

ஞானோதயத்தின் முதல் படியாக ஒரு பெரிய வரைபட புத்தகம் வாங்கி அதில் பக்கத்திற்கு ஒன்றாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பென்ஸில் படங்கள் போட்டு வைத்திருகிறேன். பின்னர் சில வண்ணப் படங்களையும் பென்ஸில், பேஸ்டல்,ஆயில் இப்படியாக பல முயற்சிகளையும் செய்திருக்கிறேன். சில நாட்கள் rediffiland-ல் பல ஓவியங்களை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தேன். ஏதோ தவறுதல் காரணமாக எல்லாம் காணாமல் போய்விட்டது.

இவற்றை ஒரு தனி வலைப்பூவாக அமைத்து வெளியிட்டால் ஓவியத்தில் விருப்பமுள்ள இணைய நேயர்களுடன் தொடர்ந்து கருத்து பறிமாற்றம் செய்து வர முடியும் என்று தோன்றியது.

இனி ஒரு தனி வலைப்பூவில் சித்திரமும் கைப் பழக்கம் என்ற பெயரில் (http://en-chithirangal.blogspot.com/) அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். இரு பதிவுகளும் பதிவு செய்தாகி விட்டது. திரட்டிகளில் வருவதற்கு இன்னும் ஓரிரு பதிவுகள் தேவைப்படும்.

11 comments:

காட்டாறு said...

உங்கள் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

இந்த பதிவில் படங்கள் தெரியவில்லையே.. சரி பார்க்கவும்

யாத்திரீகன் said...

படங்கள் எதுவும் தெரியவில்லையே .. :-(

துளசி கோபால் said...

சாம்பிளுக்கு ஒரு படத்தை இங்கே போட்டுருக்கலாமில்லே?

வாழ்த்து(க்)கள் உங்க புதிய பதிவுக்கு.

நானும் கொஞ்சநாள் இப்படி 'வரைஞ்சுக்கிட்டு' இருந்தேன்.

அப்ப ஹேண்ட் மேட் பேப்பர் வாங்கி அதுலே நானே வரைஞ்சு வாழ்த்துஅட்டைகள் தயாரிச்சு நண்பர்களுக்கு அனுப்புவேன்.

பூனாவில் நடக்கும் மிலிட்டரி எக்ஸிபிஷனுக்கும் நிறையச் செஞ்சு கொடுத்தோம்.
(யாராவது வாங்குனாங்களான்னு தெரியாது:-)))))

என்னிடம் இருக்கும் சிலதை ஒரு நாள் ஸ்கேன் செஞ்சு போடுவேன்:-)))

( ஹை...இப்ப எனக்கு ஆடியன்ஸ் கிடைச்சாச்சு:))))

கபீரன்பன் said...

நன்றி காட்டாறு, யாத்திரிகன் துளசி மேடம். என் கணிணியில் இரண்டு வலைப்பூக்களிலும் படங்கள் நன்றாகத் தெரிகின்றனவே.
உங்கள் கணக்குக்கு, கற்கை நன்றே வில் மூன்று படங்களும், சித்திரமும் கைப்பழக்கத்தில் இரண்டு படங்களும் தெரிந்திருக்க வேண்டுமே.

கோளாறு எங்கே என்று புரியவில்லையே :( யாரேனும் உதவ முடியுமா

தி. ரா. ச.(T.R.C.) said...

@kapiranapan
3 படங்கள் தெளிவாகத் தெரிகிறதே.
அதுவும் ரமணரின் படம் அற்புதம்.

cheena (சீனா) said...

அருமை நண்ப,

பதிவு அருமை. படங்அKலும் அருமை. மூண்றாசது வடம் ரமண மகரிஷி, இரண்டாவது படம் கிளி, முதல் படம் படியேறும் மூதாட்டி - ஆக அனைத்தும் அருமை.

பிள்ளையார் எல்லொர்ருக்கும் இனியவர். யாருக்கும் எத்தீங்கும் செய்ய மாட்டார். படிப்பு வரும் அவரைத் தொழுதால். பசுவும் கன்றும் வரைந்தீர்களா ...நன்று

தனி வலைப்பூவிற்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறவும் நல் வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

இப்பப் படங்கள் தெரியுதுங்க.

பாட்டி சூப்பர்.

ரமனரின் கண்களில் ஜீவன் இருக்கு.

மீன்கொத்திப் பறவையும் பரவாயில்லை.

ரொம்பப் பிடிச்சிருக்கு.

வாழ்த்து(க்)கள்.

கபீரன்பன் said...

நன்றி தி.ரா.ச. சீனா,

தெரியாமல் வந்த பிரச்சனை தானாகவே போய் விட்டது போலும். என் வேண்டுகோளுக்கு இணங்கி சரி பார்த்தமைக்கு நன்றி. இப்போது டென்ஷன் போய் ஆற அமர பிறருக்கு பின்னூட்டம் இடலாம். :))

கபீரன்பன் said...

காட்டாறு, யாத்ரிகன், துளசி மேடம் பிரச்சனைத் தீர்ந்ததாம். மீண்டும் வருக.
//பூனாவில் நடக்கும் மிலிட்டரி எக்ஸிபிஷனுக்கும் நிறையச் செஞ்சு கொடுத்தோம்.
(யாராவது வாங்குனாங்களான்னு தெரியாது:-)))))
//

அடடே நீங்களும் எக்ஸிபிஷன் ரேஞ்ச்சுக்கான ஆளா !! அப்போ கண்டிப்பா பதிவு போடுங்க.
நானும் அரச இலையில் வாழ்த்து அட்டைகள் நிறைய செய்திருக்கிறேன். அதைப்பற்றி ஒரு தனி பதிவே போடலாம். நினைவூட்டலுக்கு நன்றி.

யாத்திரீகன் said...

முதல் படம் சூப்பரா இருக்கு... இராமனரின் படமும் ரொம்ப நல்ல வந்திருக்கு .. இருபடங்களிலும் என்னைகே கவர்ந்த காரணம் .. வெறும் கோடுகளைக்கொண்டே ... அதாவது (Just Strokes & Shades) அருமையா வந்திருக்கு...

கபீரன்பன் said...

நன்றி, துளசி மேடம் யாத்திரீகன், இந்த பதிவில் ஒரு மாதிரிக்காக சிறிய அளவிலே போட்டேன். பின்னர் சற்றே பெரிய அளவில் கூடுதலான கமெண்ட் களுடன் புதிய வலைப்பூவில் பதிகிறேன். இருவருமே புதிய வலைப்பூவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. கீழே இருக்கும் இணைப்பை கவனிக்கவில்லையா?
அங்கிருக்கும் படங்கள் அளவில் பெரியவை.மீண்டும் தருகிறேன்.

http://en-chithirangal.blogspot.com