Wednesday, February 20, 2019

டிவிட்டர் என்னும் பறவையுலகம்

பெரிய மரங்களின் அடியில்  அந்தி சாயும் வேளைகளில் அமர்ந்திருக்கும் போது பறவைகளின் கீச் கீச் என்ற சத்தம்  அந்த பகுதியையே உயிரோட்டமுள்ளதாக மாற்றும். நல்ல வேளை அவைகளின் மொழி நமக்கு புரிவதில்லை. தெரிந்தால் இப்போதுள்ள டிவிட்டர் உலகம் போலத் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

சமூகத் தளங்கள் எனப்படும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போல டிவிட்டரும் ஒரு சமூகத் தளம். யார் யாருடன் வேண்டுமானாலும் கருத்து பகிரலாம் இருவரும் டிவிட்டர் கணக்கு வைத்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.

எனக்கு 2009 லிருந்தே டிவிட்டர் கணக்கு இருப்பினும் அதை வெறும் என் பதிவுகளை பிறருக்கு தெரிவிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தேன். எனக்கு குறைவான அரசியல் ஆர்வக் காரணமும் அங்கே எழும் அர்த்தமற்ற விவாதங்களும் என்னை விலக்கியே வைத்தன.

சமீபத்தில் நண்பரொருவர் ( எதிர்வீட்டுக்காரர்- 10000 அதிகமான Followers) தூண்டி விட்டதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று டிவிட்டர் தளத்திற்கு அடிக்கடி வந்து புரட்ட ஆரம்பித்தேன். பலருடைய கீச்சுகளை (tweets) படித்த பின் அவ்வப்போது  எனக்குள் எழும் எண்ணங்களை அவர்களுக்கு பின்னூட்டமாக இட ஆரம்பித்தேன்.  இதில் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பது புரிந்தது.

மழையும் சகதியும் நிறைந்த குறுகிய பாதையில் கண் மண் தெரியாமல் வண்டி ஓட்டுபவர்கள் பாதசாரிகள் மேல் தெரிக்கின்ற சேற்றைப் பற்றி கவலைப் படாமல் போவது போலத்தான் இந்த சமூகத்தளம். யார் யாரைப் பற்றியும் எப்படியும் கருத்து சொல்லலாம். அதிலுள்ள நியாயத்தையோ அநியாயத்தையோ சுட்டிக் காட்டப்போனால் தூள் பறக்கும். பலர் முகமூடிகளுடன் திரிவதால் நாகரீகமற்ற  சொற்களையும் பயன்படுத்தத் தயங்குவதில்லை. இதை trolling என்று சொல்கிறார்கள். அதனால் நீங்கள் எப்பொழுதுமே தெரிந்தவர்களுடனேயே இருப்பது நல்லது.  சுதந்திரப் பறவை என்று நினைத்து சுற்றிவரப் போனாலோ எங்கிருந்து எப்போது கல் பறக்கும் என்று தெரியாது.

உதாரணத்திற்கு ஒரு அம்மையார் யாரையோ பற்றி ஆங்கிலத்தில் விமரிசிக்கும் போது  “மூதேவி!” என்று ஆரம்பித்து தன் கருத்தை சொல்லி இருந்தார். பெரும்பான்மையான தமிழரல்லாத வாசகர்களுக்கு அதன் பொருள் என்னவென்று விளங்காததால் அப்படி என்றால் என்ன? என்று கேட்டிருந்தனர். அவர் எவருக்கும் பொருள் சொல்லாத காரணத்தால் நான் வட இந்திய அன்பருக்கு உதவட்டுமே என்று ”தமிழில், கோபத்தின் போது சொல்லப்படும் ஒரு வசவுச் சொல். துரதிரிஷ்டம் தரும் பெண் என்ற பொருளில் மந்தபுத்தி உடைய மகளையோ வேலைக்காரியையோ அல்லது அண்டை வீட்டுப் பெண்மணியையோ ஏச்சும் சொல்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

ராக்கெட் வேகத்தில் அந்த அம்மையாரிடமிருந்து பதில் வந்தது. ”என்னவொரு அபத்தமான விளக்கம்! யாராவது வேலைக்காரியை மூதேவி என்பார்களா? Rubbish racist ! ..... என்று ஆரம்பித்து மூதேவி பாற்கடலில் ஆலாஹல விஷத்துடன் தோன்றியவள் என்று விளக்கம் கொடுத்து  she is ”embodiment of laziness and misfortune" என்று முடித்திருந்தார்.

இவருடைய பதில் எவ்விதத்தில் நான் குறிப்பிட்ட பேச்சு வழக்கை தவறு என்று காட்டியது என்று புரியவில்லை. என்னுடைய கிராம வாழ்க்கையில் பலர் பல சந்தர்பங்களில் மூதேவி, சனியனே, சண்டாளா, கட்டையல போறவனே ....(இன்னும் பலவுண்டு) சொல்லிக் கேட்டிருக்கிறேன். இவர் கேட்காத பட்சத்தில் நான் Racist  ஆகி விட்டேன் ! அப்படியானால் இதை  அவர் டிவிட்டரில் எந்த பொருளில் பயன்படுத்தினார்? வேலைக்காரி அல்லாத எவரையும் மூதேவி என்று திட்டலாமா??  எனக்கு முன்பு, தானே அந்த விளக்கத்தை கேட்பவருக்குக் கொடுத்திருக்கலாமே, ஏன் கொடுக்கவில்லை?

எதற்கு சொல்ல வந்தேன் என்றால் இப்படி தம்மை தாமே மிக உயர்வாக நினைத்துக் கொண்டு கீச்சுபவர்கள் ஏராளம்.  சேறு நம் மேல்தான் வீசும்.

இன்னொரு வகை உண்டு. அடுத்தவர்களின் கீச்சுகளை அப்படியே நகலெடுத்து தம்முடையது போல் காட்டிக் கொள்பவர்கள். இவர்கள் அதை மொழிமாற்றமோ அல்லது மீள் கீச்சோ (Retweet) செய்யாமல் தன் சொந்த எண்ணத்தை பதிவிடுவதாகக் காட்டிக் கொள்வார்கள். கீழே ஒரு உதாரணம்.
(படத்தை சுட்டினால் முழுவதும் படிக்கலாம்)

இப்படி போலிமுகங்கள் மிக அதிகம் டிவிட்டர் உலகில்.  அதனால் தான் நான் அதிகம் யாரையும் பின் தொடர்வதில்லை. என்னைத் தொடர்பவரின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலையும் இல்லை. இப்பொழுதெல்லாம் மிக தேர்ந்தெடுத்த சில கேள்விகளுக்கு ( அது யாரிடமிருந்து எழுகிறது என்பதைப் பார்த்து) என்னுடைய மனதில் நியாயம் எனப்பட்டதை பதிவு செய்கிறேன்.

அப்படி பதிவு செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என்ற கேள்வி எழலாம். ஒவ்வொரு கருத்தும் ஒரு விதை போல. அது பழத்தை தின்ற பறவையின் எச்சத்தில் விழும் விதை எந்த மண்ணில் எப்போது முளைக்குமோ தெரியாது. நல்ல கருத்துகளை தெரியப்படுத்த சமூக வலைத்தளம் ஒரு நல்ல சாதனம்.

அது போலவே இன்றைய ஊடகங்கள் செய்யும் தவறான பிரச்சாரங்களையும் அரைவேக்காட்டு உண்மைகளையும் மிக மிக விரைவாக தோலுரித்து காட்டிவிடுகின்றனர். உதாரணம் ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்த ரஃபேல் விவகாரத்தில் கத்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ராணுவ ஆவணம்  எப்படி தவறானது என்றும் பொய் பிரச்சாரத்தில் அது ஈடுபட்டுள்ளது என்பதையும் டிவிட்டர் மக்கள் வெளிக்குக் கொண்டு வந்தனர். ஆகவே இன்று பத்திரிக்கைகளையும் தொலைக் காட்சிகளையும் நம்புவதை விட நாமே சமூக வலைத் தளங்களுக்கு சென்று உண்மையை கண்டறிய வேண்டும்.  ஆனால் அதற்கு நம்பத் தகுந்தவர்களை மட்டுமே பின் தொடர வேண்டும்.

டிவிட்டர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தவறான வதந்திகளை மிக வேகமாக பரப்புகிறது என்பவற்றை பற்றி சட்ட ஒழுங்கு பிரச்சனை கண்ணோட்டத்துடன் கவலை எழுந்திருக்கிறது. இதைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

டிவிட்டர் உலகில் பிழைக்க வேண்டுமானால் பாதசாரியாக நடந்து செல்லக் கூடாது. பறவை போல பறக்கத் தெரிய வேண்டும். நீங்கள் பருந்தாகவோ ஆந்தையாகவோ இருந்தால் பரவாயில்லை. தனிக் குருவிக்கு கஷ்டந்தான். 

Tuesday, October 2, 2018

நம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி


காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி.

அவர் வருவதைத் தெரிந்து கொண்டு எல்லா புகை வண்டி நிலையங்களிலும்  அவருடைய தரிசனத்திற்காக கட்டுப்பாடு செய்யவே கடினமானதான மக்கள் கூட்டம் கூடி விடும்.  அப்படிப்பட்ட  ஒரு சமயத்தில் ஒரு சிறிய புகைவண்டி நிலைய அதிகாரிக்கு காந்திஜி தன்னைஅழைப்பதாகக் கேட்டதுமே தலைகால் புரியாத சந்தோஷம்.

அவரைக் கண்டதுமே காந்திஜி தன் உதவியாளர் வி.கல்யாணத்தைக் காட்டி “ இவருக்கு ஒரு பயணச்சீட்டுக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை வழங்கவும். என் பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர் உடன் வருவதை அறியார்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்த அதிகாரியோ “உலகமே கொண்டாடும் உங்களிடம் பயணச்சீட்டுக் கேட்க முடியாது “என்று மறுத்தார். அதற்கு காந்திஜி “ நீங்கள் உங்கள் கடமையிலிருந்து தவறுகிறீர்கள். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் புகார் கொடுக்க நேரிடும்” என்று பயமுறுத்தியதும் திரு கலியாணத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டது.

இன்று 96 வயதாகும் திரு V கல்யாணம் காந்திஜியின் கடைசி நான்கு வருடங்கள் அவருடைய தனி உதவியாளராக இருந்தவர்.  1944 -ல்  ஆங்கில அரசாங்கத்தில் ரூ.250 மாத சம்பள வேலையை உதறிவிட்டு காந்திஜியிடம் உதவியாளராக சேர்ந்தார். “என்னால் அறுபது ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும்” என்று காந்திஜி சொன்னதற்கு “ ஆசிரமத்தில் எனக்கு உணவும் உடையும் மட்டும் போதும். நான் சேவையாகவே இதை செய்கிறேன்” என்று வார்தா வில் உள்ள சேவாக்கிராமத்தில் சேர்ந்து கொண்டார்.

“ அவருக்கு வரும் கடிதங்களை பிரித்து அடுக்கி வைப்பது, பின்னர் அவர்
சொல்லும் பதில்களை குறிப்பெடுத்து தட்டச்சு செய்வதே எனக்கிடப்பட்ட கடமையாக இருந்தது.  நான் எத்தனையோ முறை தவறுகள் செய்த போதிலும் அவர் ஒரு போதும் என் மீது கோபம் கொண்டது இல்லை. பொறுமையாகத் திருத்துவார். பிறர் மனம் நோகப் பேசுவதையே அஹிம்சைக்கு எதிரானது என்பதை உறுதியாக எண்ணிய மகான் அவர். நாட்கள் கூடக் கூட அவர் மேலான மதிப்பு கூடிக் கொண்டே போனது” என்கிறார் சென்னையில் வசிக்கும் திரு கல்யாணம்.

இன்றும் தனது 96 ஆவது வயதில் சுறுசுறுப்பாக தனது தேவைகளை தானே கவனித்துக் கொண்டு  துணி துவைப்பது, சமையல் செய்வது, காய்கறிகளை விளைவிப்பது மட்டுமன்றி சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதில்  அவர் காட்டும் அக்கறை அவருடைய ஆசிரமப் பணியின் தொடர்ச்சிதான்.

’ஒருவன் தனது தேவைக்கு மீறி சேமிப்பது தேவையற்றது அதை பங்கிட்டு உண்ண வேண்டும்’ என்ற கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் அவர் தனது மாதாந்திர ஓய்வு தொகையான ரூ.பத்தாயிரத்தில் ஒன்பதாயிரத்தை அனாதை இல்லங்களுக்கும் பிற சேவா காரியங்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்து விடுகிறார்.

எல்லோரும் திரு கல்யாணத்தை போல் வாழ்ந்து விட்டால் ஒரு பொற்காலமே மலர்ந்து விடும்.

இது ரேடியோ சாயி-ல் இன்று வெளியான ஒரு கட்டுரையின் சிறு பகுதியே. முழுக் கட்டுரையையும் படிக்க “ Story of Gandhiji;s Secretary -Mr V Kalyanam...."
[Pics : Thanks to Radiosai] 

-------------------------------------------------------------------
இன்று காந்தி ஜெயந்தி . இந்திய வரலாற்றை மாற்றியமைத்த  அந்த மகானுக்கு  அர்ப்பணம்