Wednesday, December 6, 2023

காணறியா இறைவன் சூது

 அந்த காலத்தில் 16 m.m.   திரையில் எங்கள் காலனியில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை  திறந்த வெளியில் திரையிடும் போது பல வேடிக்கைகள் நடக்கும். அடிக்கடி ரீல் அறுந்து போகும்.  ஏற்கனவே படம் பார்த்திருப்பவர்கள் அதற்கான உரையாடல்களை கூடவே சொல்லிக் கொண்டு போவார்கள். படத்தை விட பார்க்க வந்திருப்பவர்களின் வைபோகமே அதிகம்.

 ஒரு முறை நான்கு வயது சிறுவன் சுற்றியிருந்த இருளும் திரையில் படமும்  புரியாததாலோ என்னமோ திரும்பி நின்று கொண்டு "அம்மா லைட்'  'அம்மா லைட்" ப்ரொஜக்டரைக் காட்டிக் கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தான்.   (அந்த வெளிச்சம் பரவாமல் ஏன் யாவரும் இருட்டில் அமர்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வியே அவனுள்ளத்தில்  இருந்திருக்குமோ ?) சிறிய துவாரத்தின் மூலம் வெளியான அவ்வெளிச்சம் தான் திரையில் காணும் காட்சிகளுக்கு காரணம் என்பது அவனுக்கு புரியவில்லை.  "ஆமா ஆமா லைட் தான் படுத்து தூங்கு" என்று சிரமப்பட்டு அவனை தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தாள் அவனுடைய தாயார். 

"Go to the source "  என்பது ஆன்மவிசாரம் செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை.  ஆன்மாவின் ஒளிதான் தேகம் மற்றும் உலகத்தின் இயக்கத்திற்கே அடிப்படை. அதை கவனிக்க ஆரம்பித்தால்  உலகம் என்ற திரை நம் முதுகு பக்கமாகி நம்மை பாதிக்காது. இதையே அந்தர்முகம் என்று தியானவகுப்பில் சொல்கின்றனர்.  

அந்த கவனிப்பு நீளும் அளவு மனம் கொந்தளிப்புகள் அடங்கி குளிர்ந்து இருக்கும்.  இதன் அவசியத்தை டி.வி.ஜி. அவர்கள் மக்குத் திம்மன் கவிதை ஒன்றில் அழகாக உரைக்கிறார்.

இனியென்ன மற்றென்ன, கதி ஏது எனப் பதறினும்  

விதியதன் எழுது கோலும் உளதோ உன் கையில் ?  

கண்களுக்கு எட்டாது அவன் நடத்தும் சூது

குளிர்ந்திருப்பாய் உன் ஆன்மாவிலே- மன்கு திம்மா.

திரையில் ஓடும் காட்சிகளோடு மனம் ஒன்றியிருக்கும் போது கதையின் போக்கு திகிலூட்டக்கூடும். ஆனால் அதிலிருந்து விலகிடும் போது மனதை திரைக்கதை பாதிப்பதில்லை.  

உலக விசாரங்களில் நம் மனதின்படி முடிவுகள் வராமல் போய்விட்டால் அதை சுலபமாக மனம் ஏற்றுக் கொள்ளாமல் தவிப்பை அதிகமாக்கிக் கொள்கிறது.  இறைவனின் இச்சைப்படிதான்  இந்த உலகில் எல்லாம் நடக்கிறது என்ற போக்கை கடைபிடித்தால் மனமும் போராட்டங்கள் இல்லாமல் குளிந்திருக்கும். அதற்கான வழிதான் ஆன்மாவில் கவனம் செலுத்துவது என்கிறார் திரு குண்டப்பா அவர்கள்.

இதே உண்மையை  ஜென் கருத்தும் எவ்வளவு பொருத்தமாக எடுத்து சொல்கிறது !!   'நாம் முடிவு செய்பவர் அல்லர்' என்பதை புரிந்து கொண்டால்

"....your struggles with life will end " 

பாடலின் மூலமும்,  தமிழில் முயற்சியும் :

கதியிதுவோ மற்றெதுவோ எனப் பதைப்பதும் ஏன்?
விதியதன் கோலும்  உன் கையில் உளதோ?
பதியவன் காணறியா சூதின் வழி நடக்கும் உலகு 
மதியும் குளிரட்டும் ஆத்மனிலே-மக்குத் திம்மா  (# 360)

(பதி =இறைவன்; காணறியா சூது = கற்பனைக்கெட்டாத வழி முறை )

பின் குறிப்பு :

 ( தபாலில் வந்த ஒரு உறை மேல் கிறுக்கிய  இந்த படத்திற்கு டிஜிடல் வர்ணம் பூசி, ஜென் ஞானத்துடன்  வாட்ஸப்பில் சிலருடன் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு அது எனக்கே வேறொருவர் மூலமாக வந்தது ... இப்போது டிவிஜி கவிதைக்கு துணையாகிறது. ) 



1 comment:

கோமதி அரசு said...


//இறைவனின் இச்சைப்படிதான் இந்த உலகில் எல்லாம் நடக்கிறது என்ற போக்கை கடைபிடித்தால் மனமும் போராட்டங்கள் இல்லாமல் குளிந்திருக்கும்.//

மக்குதிம்மன் கவிதை என் சஞ்சல படும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. எல்லாம் இறைவன் விருப்பபடிதான் நடக்கிறது. ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று சில நேரம் மனது யோசித்து கலங்கி போகும்.

அப்போது எல்லாம் அசீரிரி போல இறை சிந்தனை காதில் கேட்கும். அது போல உங்கள் பதிவு மனதுக்கு ஆறுதல். இறைவாக்கியம் கிடைத்து போல இருக்கிறது. நன்றி.

அடிக்கடி பதிவு போடுங்கள்.