Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்


தனி அஞ்சலில் தொடர்பு கொள்ள இயலாத அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்

(வாழ்த்து அட்டை தனி வலைப்பக்கத்தில் திறக்கும்)

Monday, December 29, 2008

Scribe Fire: நேற்றைய குறை இன்று தீர்ந்தது

Scribe Fire பற்றிய முந்தைய பதிவில் படங்களை வலையேற்றுவதில் ஏற்படும் அளவு பிரச்சனை குறிப்பிட்டிருந்தேன். அதற்கான தீர்வு இன்று கிடைத்தது.
படங்களை வலையேற்றுகையில் Scribe Fire "max-width: 800 px வைத்து பிகாஸா வெப் ஆல்பத்திற்கு வலையேற்றுகிறது. பின்னர் வலைப்பக்கத்திலும் அதே அளவு படத்தை காண்பிக்கிறது. ஆனால் நம் வலை வார்ப்புருவில் (Template) உள்ள அகலம் அதை விட குறைவாக இருப்பதால் படத்தின் ஒரு பகுதியையே காண முடிகிறது.

உதாரணத்திற்கு கீழே உள்ள படத்திற்கு வலையேற்றியபின் கிடைத்த நிரலி

<img style="max-width: 800px;" src="http://lh4.ggpht.com/_cQDFu3JrK0o/SVetJ4hFcmI/AAAAAAAAAXM/vWhtaEx2vmI/%5BUNSET%5D.jpg?imgmax=800" />

ஆனால் வலைப் பக்கத்தில் 800 px முழுவதுமாகக் காட்டப்படாது. அதனால் 800 px வரும் இடங்களில் 400 px என்று மாற்றிக்கொள்ளவும். இதை Edit HTML லில் சென்று செய்ய வேண்டும். அப்போது படம் அளவில் குறுக்கப்பட்டு சரியாக முழுவதுமாகக் காட்சியளிக்கும்.


(அளவில் குறுக்கப்பட்டப் படம்; இதை பெரிதாக்க இணப்பு இல்லை)

அடுத்ததாக முழு படத்தையும் பெரிதாகக் காண்பிப்பதற்கு இணைப்பு தர வேண்டும். அதற்கு படத்தை highlight செய்து Add a Link மெனுவை திறந்து நிரலியில் பட இணைப்பிற்கான பகுதியை மட்டும் உள்ளீடு செய்து Ok செய்து விடவும்.

மேலே உள்ள நிரலியில் இணைப்பிற்கான பகுதி :

http://lh4.ggpht.com/_cQDFu3JrK0o/SVetJ4hFcmI/AAAAAAAAAXM/vWhtaEx2vmI/%5BUNSET%5D.jpg


இப்போது மேலே உள்ள படத்தை ப்ளாகரில் பார்ப்பது போலவே பெரிதாக்கிப் பாருங்கள்.

வெற்றி !! வெற்றி !!!

இனி எந்த சிரமும் இல்லாமல் Scribe Fire பயன் படுத்தி மகிழுங்கள். :))

Sunday, December 28, 2008

நெருப்பு நரி பற்ற வைத்திருக்கும் ’தீ’

இடுகைகளை பிரசுரிப்பதற்கு முன்பே தங்கள் வலைப்பூவில் எப்படித் தெரியும் என்பதை முன்னோட்டமாகப் பார்க்க Fire fox தரும் add on மென்பொருள் Scribe Fire இப்போது உதவுகிறது.

இடுகைகளை வெளியிட பலர் பலவிதமான வழிமுறைகளை கையாளக்கூடும். நான் என் இடுகைக்கானக் கட்டுரைகளை தனியாக தட்டச்சு செய்து வைத்துக்கொண்டு பின்னர் ப்ளாகரில் கடவு சொல் மூலம் உள் நுழைந்து புது பதிவிற்கான பெட்டியில் நகலெடுத்து ஒட்டுவது வழக்கம். பலர் நேரடியாக மின்னஞ்சலில் செய்வதாகக் கேள்வி. அதை முயற்சித்து பார்த்தது இல்லை.

Blogger-ல் பதிவுக்கான பெட்டிக்குள் காணப்படும் எழுத்துருவுக்கும் வலைப்பூவில் காட்டப்படுவதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. மேலும் அது தரும் முன்னோட்டம் படு அபத்தம். படங்களுக்கும் எழுத்துகளுக்கும் இருக்கும் இடைவெளி மற்றும் பல பத்திகளுக்கு இடையே இருக்கும் இடவெளி இவற்றை பெட்டிக்குள் வைத்து முழுவதுமாக முடிவு செய்ய முடியாது. அதனால்
இடுகையை பிரசுரித்தப் பின்பும் பலமுறை மீண்டும் மீண்டும்- திருப்தியாகும் வரை- உள்ளும் வெளியுமாக அலைந்து சரி பார்த்து இறுதியான வடிவம் தர வேண்டியதாகிறது.

Scribe Fire இக்குறையை தீர்க்கிறது.

(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

இதன் முக்கிய பயன்கள்
:

1. உங்கள் முழு இடுகையையும் ஆன்-லைனில் வராமலே வலைப்பூவில் தெரிவது போல் முன்னோட்டமாகப் பார்க்க இயலும்.

2. Scribe Fire லிருந்து நேரடியாக வலைப்பூவில் பிரசுரிக்கவும் முடியும்.

3. உங்களுக்கு பல வலைப்பூக்கள் இருப்பின் எல்லா வலைப்பூக்களிலும் முன்னோட்டம் பார்க்க முடியும். அதற்கு ஒரே ஒருமுறை நீங்கள் ஆன் -லைனில் அந்த வலைப்பூவுடன் Scribe Fire மூலமாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதன் பின் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், சேமித்து வைத்துக் கொண்டுள்ள வலைப்பூவின் வார்ப்புருவின் மூலம் அந்த இடுகை எப்படித் தெரியுமோ அதை அப்படியே முன்னோட்டமாகக் காட்டுகிறது.

4. இதிலிருக்கும் Tool bar அதிகமான பல உள்ளீட்டு கருவிகளை கொண்டுள்ளது.

5. நீங்கள் பிரசுரித்த இடுகைகள் அனைத்தையும் Posts என்ற பெயரிலும் தயாரிப்பில் இருக்கும் இடுகைகளை Notes என்ற பெயரிலும் சேமித்து வைத்துக் கொள்கிறது. இதனால் எல்லா பதிவுகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரே சொடுக்கில் வந்து பார்க்க முடியும். சிதறிக் கிடக்கும் பல கோப்புகளுக்கிடையில் பழைய இடுகைகளுக்கான கோப்புகளை தேட வேண்டிய அவசியம் இல்லை.

(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

6. விளம்பரங்கள் மூலம் வருவாய் விழைவோர்க்கு உதவும் வகையிலும் திரட்டிகளில் நேரடியாக பிங் செய்யக்கூடிய வகையிலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளன.


முன்னோட்டம் Scribe Free பெட்டிக்குள்(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

ஒரு பெரிய குறை: படங்களை ப்ளாகர் செய்வது போல் Auto size செய்வது இல்லை. API மூலம் வலையேற்றப்படும் படங்கள் பிகாசா வெப் ஆல்பம்-ல் Drop box என்ற பெயரில் சேகரிக்கப்பட்டு முழு அளவில் வலைப்பூவில் காட்டப்படுகிறது. அதனால் வார்ப்புருவின் அளவை விட பெரிதாக இருந்தால் பாதி படம் மட்டுமே காட்டப்படுகிறது. கீழே பார்க்கவும். இது Scribe Fire மூலம் வலையேற்றப்பட்டது.ஆகையால் படங்களே இல்லாத அல்லது சிறிய அளவு படங்களுடைய பதிவுகளுக்கு Scribe Fire பெரும் பயன் தரும். பெரிய படங்களை காட்டவேண்டிய கட்டாயம் இருந்தால் Scribe Fire லிருந்து draft mode ல் வலையேற்றி பின்னர் ப்ளாகர் உள் நுழைந்து படங்களை தனியாக வலையேற்றி இடுகையின் கட்டமைப்பை சரி செய்ய வேண்டும்.

இப்போது அப்படித்தான் செய்திருக்கிறேன். :-)
Scribe Fire-ல் நான் விரும்பும் இப்போது இல்லாத இன்னொரு ஒரு வசதி, செய்த தவறைத் திருத்துவதற்கான Undo பொத்தான்.

பிற்சேர்க்கை :29/12/2008
படங்களை வலையேற்றுவதில் உள்ள பிரச்சனை தீர்க்கப் பட்டுவிட்டது. இதற்கு அடுத்த பதிவை காணவும்.

Tuesday, December 23, 2008

காக்கா கூட்டத்த பாருங்க,அதுக்கு சொல்லி கொடுத்தது யாருங்க

இரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) ஒரு ஆங்கிலோ இந்தியர். எழுத்து உலகில் மிகவும் புகழ் பெற்றவர். ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னரும் இந்தியாவிலேயே தங்கி விட்டர். அவர் எழுதும் கதைகள் கட்டுரைகள் உலக அளவில் பெரிதும் விரும்பி படிக்கப்படுகிறது.சாகித்திய அகடெமி விருது பத்மஸ்ரீ விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்.

ஒரு காகத்தோடு உரையாடுவது போல் அவர் எழுதிய கட்டுரை ஒன்றை காண்போம்.

ஒரு காகம் எழுத்தாளனுக்கு வாழ்க்கைத் தத்துவத்தை போதிக்கிறது.

நம் நாட்டில் இது ஒன்றும் அதிசயம் இல்லை.காகபுசுண்டர் என்று ஒரு சித்தர். ஒரு காகத்தின் வடிவில் கல்லால மரத்திலிருந்து கொண்டு பல யுகங்கள் வாழ்ந்து கண்ட உண்மைகளையும் தத்துவங்களையும் புசுண்ட நாடி, காகபுசுண்டர் ஞானம், காகபுசுண்டர் காவியம்,காகபுசுண்டர் குறள் என்ற பெயர்களில் தொகுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

இப்போது ஆங்கில காக புசுண்டர் (Ruskin Bond) தத்துவத்தை பார்ப்போம்.


கோடை நாளில் ஒரு மாலை வேளை. ஊதா வர்ண மலைகளில் மழையைக் குறிக்கும் மேகம் சூழத் தொடங்கியிருந்தது. மேனி பளபளக்க ஒரு கரிய காகம் ஜன்னல் அருகே வந்தமர்ந்தது.

தலையை ஒரு புறமாகத் திருப்பி “ஏது! அய்யா இன்னிக்கி கவலையா இருக்காரு. நம்மாலெ ஏதாச்சும் முடிஞ்சா செய்யிறேன் “ என்று சொல்லி உரையாடலை ஆரம்பித்தது.
ஆடும் சாய்நாற்காலியில் மெதுவாக மேலும் கீழுமாக அசைந்து கொண்டு வாழ்க்கையின் ஓட்டத்தையும் ஏமாற்றங்களையும் அசைப்போட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்தால் அப்படித்தான் இருந்திருக்கும் போலிருக்கு. எதிர்பாராத அதன் வரவால் என் தனிமை கலைந்தது.

“மன்னிக்கணும், கேட்டது புரியலெ” என்றேன் பணிவாக.

இப்போதெல்லாம் தெரியாதவர்களிடம் பேசும்போது பணிவாக இருப்பது அவசியம். சிலரிடம் கத்தியும் துப்பாக்கிகள் கூட இருக்குமாம்.

“ஒண்ணுமில்லே.சும்மாதான், முகத்திலே சந்தோஷத்தை காணோமேன்னு கேட்டேன்.அவ்ளோதான்” என்றது காகம்.

“நிஜம் தான்,அதுக்கு யாரும் எதுவும் செய்யமுடியாது. அது உனக்கு சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல” என்றேன்

“அதை மட்டும் சொல்லாதே “

”அப்படீன்னா ? ....இப்போ என்ன சொல்ல வர்றே ?”

“இதோ பார்.நானும் மனுஷனா இருந்தவன் தான். சாங்-சு வோட சீடனாயிருந்தேன்; எபிக்டஸ்-ஸோட ஃபிரெண்டாயிருந்தேன். புராணத்துல கஷ்யபன் காலத்திலேந்து எல்லாத்தையும் பார்த்தவனாக்கும் !”

“என்ன அதனாலே.இப்ப நீ காக்கா தானே. இதுவா முன்னேறுகிற லட்சணம்?”

“தெரியாத்தனமா போன ஜன்மத்துல அரசியல்ல புகுந்துட்டேன். அதனால வந்த வினை. இந்த பிறவியில கொஞ்சநாள் காக்காயாக சுத்தணும். நிஜம்மா பாத்தா காக்காய் ஜன்மம் ஒண்ணும் மோசமில்லை. வேணுமின்னே எங்களுக்கு ஒரு கெட்ட பேரு காக்கா-கூட்டமின்னு. எல்லா பறவைகள விடவும் எங்களுக்கு புத்திசாலித்தனமும் பொழச்சுபோற குணமும் அதிகம். அந்த பொழைக்கிற வழி தெரியாமத்தானே நீ தவிக்கிறே.”

அட ! கரெக்டா பாய்ண்டப் புடிக்குதே இந்த காக்காய். எழுத்தாளனா பொழைப்பு நடத்துணமின்னா ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கு.

”என்னாலே என்னென்ன முடியுமோ அவ்வளவும் செய்துகிட்டுதான் இருக்கிறேன்”

மெல்ல ரெண்டு தத்து தத்தி பக்கத்தில் வந்தது.

”அது தான் நீ பண்ற தப்பு. வெறும் உழைப்பு உழைப்புன்னு இருந்தா வெற்றி வந்திடுமா? எவனொருத்தன் ரொம்ப குறைச்சலா செஞ்சு ரொம்ப அதிகமா பயனடைவானோ அவன் தான் நிஜம்மாலுமே வெற்றி பெற்றவனாக்கும்.”


“எழுதாமையே பெரிய எழுத்தாளனா எப்படி ஆக முடியும்?” என்றேன் காரமாக.

“தப்பா புரிஞ்சுக்கிட்டே நீ. நான் சோம்பேறி யா இருக்கச் சொல்லவில்லை. எங்கேயாவது சோம்பேறி காக்காயைப் பார்த்திருக்கியா? பார்த்திருக்க முடியாது. சரி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிற காகத்தையாவது பார்த்திருப்பியா ? அதுவும் முடியாது. ஆனா எங்களுக்கு எப்பவுமே எல்லாத்துலேயும் ஒருகண் இருந்துகிட்டே இருக்கும். அதுதான் சமய சந்தர்ப்பம்.”

இன்னும் சற்று அருகே தத்தி வந்து கையில் வைத்திருந்த ரொட்டித்துண்டை லபக்கென்று இழுத்தது.

“பார்த்தியா, எனக்கு வேண்டியது கிடைச்சுதா இல்லியா! அதுவும் கஷ்டப்படாமலே. கவனிக்க வேண்டியது என்னான்னா சரியான சமயத்தில சரியான இடத்தில இருக்கணும்.”

எனக்கு அது செஞ்சது பிடிக்கவில்லை.

“ஆமாம் ஆமாம், அடுத்தவனோட தீனியைப் பிடுங்குவது தான் உன் வழி என்றால் அது எழுத்தாளனுக்கு எப்படி பொருந்தும்? அடுத்தவங்களோட எழுத்தை காப்பி அடிக்கச் சொல்லிறியா?”

“அதை செய்யிறவங்களும் நிறைய பேர் இருக்காங்க. ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல. கொஞ்சம் விவரமானவனா இரு அப்படீன்னு தான். ரொம்ப பேரோட-எழுத்தாளனும் அதில் அடங்கும்- பிரச்சனை என்னான்னா அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் தான். ஒரு ரொட்டித்துண்டு போதும்னு சும்மா இருக்காமே ஒவ்வொரு சாப்பாட்டையுமே பெரிய கல்யாண விருந்தா எதிர்பார்க்கிறீங்க. எங்கேயாவது முடியுமா? இதுதான் நீங்க செய்யிற முதல் தவறு ”

ரெண்டாது மிஸ்டேக் என்னான்னா ’விரட்டி’கிட்டே போறது. பெரியவரே நான் சொல்றது எழுத்தாளனுக்கு மட்டுமில்லே எல்லாருக்கும்தான். எல்லாருமே என்ன வேண்டுறோம்? வெற்றி வெற்றி. இப்ப நான் ஒரு வெற்றிகரமான காக்கை; நீ ஒத்துகிட்டாலும் இல்லாட்டியும் அதுதான் நெஜம்.நாம் தேடறது கெடச்சுட்டா அது ’வெற்றி’. பொறுத்திரு,பார்த்திரு,அடைந்திடு. எல்லாத்தையும் சேர்த்து என் கொள்கைன்னு சொல்லணும்னா ’விழித்திரு.

நான் வேட்டையாடி தின்னும் பறவையுமில்லை.நீயும் வேட்டையாடும் மிருகமும் இல்லை. அதனால்தான் துரத்தி பிடிச்சு வெற்றி அடைவது என்பது முடியாத காரியம். எப்படி வேட்டையாடப் படுகிற பிராணி தப்பிச்சு ஓட பார்க்குமோ நாம் துரத்துற சமாச்சாரமும் நம்மை விட்டு ஓடத்தான் பார்க்கும். இந்த வெற்றியும் அப்படிதான். நீ எவ்வளவு வேகமா புடிக்கப் பாக்குறியோ அவ்வளவு வேகமா ஓடும்.”

”இப்போ என்ன செய்யணுமிங்கிறே? புத்தகம் எழுதிட்டு மறந்து போ ன்னு சொல்றியா?”

”சரியா சொன்னே.மறந்து போ ன்னு சொல்லமாட்டேன். உலகத்தோட மூலை முடுக்குக்கெல்லாம் அனுப்பி வை.ஆனா ரொம்ப பெரிசா எதையும் எதிர்பார்க்காதே. அதையே நெனச்சு புலம்பிக்கிட்டு இருக்காதே. அதுதான் மூணாவது தப்பு. வராததை நெனச்சுக்கிட்டு புலம்புறது. எப்ப புலம்ப ஆரம்பிக்கிறியோ அப்போ மூளைக்கு வேற எதையும் யோசிக்கிற சக்தி போயிடும்”

“உம்.நீ சொல்றதும் சரிதான். நான் கவலைப்படுற ஜென்மம் தான்”

“தப்பு.பெரிய தப்பு. எதப்பத்தி கவலைப் படுறே?”

“எவ்வளவோ சின்னச் சின்ன விஷயங்கள்”

“பெரிசா எதுவும் ?”

“இப்போதைக்கு இல்லே”

“ஆனாலும் பெரிசா ஏதோ கெட்டது நடக்கப் போவுதுன்னு ஒரு பயம் ?”

“முன்கூட்டியே எதிர்பார்த்திட்டா மனசு தயாரா இருக்குமில்ல “

“எங்க அகராதியில அது கெடையாது. நாங்க எப்பவுமே நல்லதயே எதிர்ப்பார்போம்”

கொஞ்சம் நகர்ந்து பீர் குவளைக்குள்ளே தலைய விட்டு பீரை உறிஞ்ச ஆரம்பித்தது.

“ஆமா பீர் குடிக்கிறதுக்கு காசு இருந்தா வசதியா இருக்கேன்னுதான்ன அர்த்தம்”

“நான் ஒண்ணும் தினம் குடிக்கிறது இல்லை. அது சரி என்மேலே உனக்கு என்ன அவ்வளவு அக்கறை ?”

காகம் கழுத்தை ஒரு பக்கம் சாய்த்து பார்த்தது

“உன்னை எனக்கு பிடிச்சிருக்கு அதனாலத்தான். நீ எங்க வர்க்கத்துக்கு தொந்தரவு செய்யறது இல்லை”

“நான் உங்க வர்க்கத்தை அதிகமா கண்டுகிட்டது கிடையாது”
“ அடப் பரிதாபமே. எவ்வளவு விஷயம் எங்ககிட்ட கத்துக்கறதுக்கு இருக்கு! சுதந்திரம்,பொழைக்கிற வழி,ஜாலியா இருக்கறது இப்படி எத்தனையோ! எங்களைப்பத்தி எழுதாத பெரிய எழுத்தாளனே இருக்க முடியாதே. ஹூம் “

பீரை இன்னொரு தடவை உறிஞ்சி இறக்கையை ரெண்டு முறை படபடத்து விர்ரென்று மேலே கிளம்பி பக்கத்துல இருக்கிற பிரியாணி கடை பக்கமாக பறந்தது.

(Delhi is not Far by Ruskin Bond. Penguin Books ISBN:0-14-024606-1)

Sunday, December 14, 2008

BOSS பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் !

இது ’சிவாஜி த பாஸ்’ பற்றி அல்ல.

அல்லது என்னோட பாஸ் பற்றியதும் அல்ல !

நான் கேட்க விரும்புற BOSS, பாரத் ஆபரேடிங் சிஸ்டம் சொல்யூஷன்ஸ்-ங்கற C-DAC அறிமுகப்படுத்தியிருக்கிற புது மென்பொருள் பற்றியது. லினெக்ஸ் திறந்த கட்டற்ற மென்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இதன் முக்கிய நோக்கம் இந்திய மொழிகளில் கணிணி பயன்பாட்டை விரிவாக்குதல் ஆகும்.

இதில் கட்டளை நீட்சிகள் எல்லாம் தமிழ் மற்றும் இந்தி போன்ற இந்திய மொழிகளிலே காணக் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

லினக்ஸ் சார்ந்த டெபியன், உபுண்டு போன்ற சேவைகளால் இது முடியாததாகையால் இது முக்கியத்துவம் பெறுகிறது

இதில் Fire fox 3.0 உலாவியும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டிருப்பதாகவும் 18000 பலவேறு மென்பொருட்கள் தரவிறக்கம் செய்து பரவலாக பயன் படுத்த் முடியும் என்றும் c-DAC வல்லுனர்கள் கூறுகிறார்கள். மேலும் வலையுலகில் வலம் வர மிகவும் பாதுகாப்பானது என்றும் சொல்கிறார்கள்.

இதை யாரவது நமது வலையுலக நண்பர்கள் பயன் படுத்தியிருந்தாலோ அல்லது அனுபவங்களை ஏற்கனவே பதிந்திருந்தாலோ அதற்கான இணைப்புகளை கொடுத்தால் என் போன்ற வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சில ஆங்கில குழுமங்களில் தேடிய விவரங்கள் பயனளிப்பதாக இருக்கவில்லை.

ஹைதராபாத்தில் இம்மாதம் 18 ஆம் தேதி இலவச விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு வலைப்பக்கம் மூலமாகவே பதிவு செய்து கொள்ள முடியும். அங்கு வசிக்கும் நண்பர்கள் இதை பயன் படுத்திக்கொள்ளவும். இலவச குறுந்தகடுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது !!

எப்படியோ கிராம கிராமங்களுக்கும் கணிணியை கொண்டு செல்வதில் ஒரு முக்கியமான முன்னேற்றம் வந்திருப்பது மகிழ்ச்சி

Wednesday, December 10, 2008

கூகிள் க்ரோம் தந்த அதிர்ச்சி

இன்று மாலை கூகிள் க்ரோம்-ல் HDFC வங்கிக் கணக்கை Net Banking ல் திறந்து வேண்டியவர் ஒருவரின் இன்னொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த விழைந்தேன்.
Third party transfer ஆதலால் அவருடைய பெயரை நேற்றே பதிவு செய்து,அவர்கள் சொல்லியிருந்தபடி 24 மணிநேரம் கழித்து ஒப்புதல் இருப்பின் பணம் செலுத்த வேண்டும் என்பதால் ஒப்புதலை அறியவும் பணம் செலுத்தவும் முறைப்படி உள்நுழைந்தால் எனக்கு அதிர்ச்சி.
மூன்றாமவருக்கான பணம் மாற்றுவதற்கான நீட்சி (menu) காணப்படவில்லை. Sidebar menu விலும் காணப்படவில்லை.

ஏதேனும் தவறாகி அந்த வசதியே முடக்கப்பட்டுவிட்டதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் இது நான் கல்லூரியில் படிக்கும் என் மகனுக்காக தொடர்ந்து உபயோகித்துவரும் ஒரு சேவை. ஆகையால் முடக்கப்பட்டு விட்டால் பல பிரச்சனைகள் ஏற்படுமே என்ற கவலைத் தொற்றிக்கொண்டது.

சரி, உள் நுழையும் போதே ஏதேனும் கவனிக்காமல் விட்டிருப்போமோ என்று ஒருமுறை வெளியேறி மீண்டும் கவனமாக ஒவ்வொரு அடியையும் கவனித்து சரிபார்த்து உள்நுழைந்தேன். திரும்பவும் அதே பிரச்சனை.

ஏதடா இது மதுரைக்கு வந்த சோதனை யாரிடம் முறை போக வேண்டும் என்று யோசித்தேன். நேற்றுவரை சரியாக இருந்தது இன்று எப்படி மாறிவிடும் ? பளிச்சென்று ஒரு உண்மை புரிந்தது. நேற்று உட்புகுந்தது Firefox உலாவியில். இன்று Chrome-ல்!!

இன்னுமொருமுறை நரியாரை தூது விடுவோம் என்று Firefox மூலம் உட்புகுந்தால் எல்லா நீட்சிகளும் (மெனுக்களும்) அழகாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன.


வந்த வேலையை முடித்துவிட்டு firefox லிருந்து வெளியேறி மீண்டும் GOOgle Chrome-ல் உட்புகுந்தால் பழைய கதைதான். மேலிருக்க வேண்டிய நீட்சிகள் காணப்படவில்லை.
இந்த பிரச்சனை வங்கியைச் சேர்ந்த வலைத்தள அமைப்பாளர்கள் சரி செய்ய வேண்டியதா அல்லது கூகிள் க்ரோம் சரி செய்ய வேண்டியதா ?

நிபுணர்கள் இதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றால் பலருக்கும் உதவியாக இருக்கும்.

Tuesday, December 2, 2008

அமைதிக்கு திறவுகோல்- தாயின் அன்பு

God could not be everywhere and therefore he made mothers. ~Jewish Proverb

அமைதியை தேடித் தவிக்கும் மக்கள் அதற்கான திறவுகோலை தம்மிடமே வைத்துக் கொண்டு வெளியே தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Men are what their mothers made them. - Ralph Waldo Emerson

All that I am, or hope to be, I owe to my angel mother. - Lincoln

Let France have good Mothers, and she will have good sons. - Napoleon

ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பலர் போற்ற வாழ்வதைக் காண ஆசைப்படுவாள். அவள் தன் மகனோ மகளோ வன்முறையில் ஈடுபட்டு பலருக்கும் துன்பம் விளைவித்து தனக்கும் துன்பம் தேடிக்கொள்வதை விரும்புவாளா ?

குறிக்கோள் எவ்வளவே உயர்வாயினும் அதை அடைய தீவிரவாதம் முறையான வழியாகது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் சமூக விரோதிகள்.

வன்முறையை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் தொலைக்காட்சிப் பெட்டியே கதியென்றிருக்கும் லட்சக்கணக்கான தாய்மார்களிடம் இந்த உணர்ச்சிகளை அழுத்தமாகத் தூண்டிவிட வேண்டும்.

அந்த அடிப்படையில், செப்டெம்பெர் 11-ல் விளைவிக்கப்பட அழிவிற்கு பிறகு, அக்கருத்தை மையப்படுத்தி ஒரு சிறு விளக்கப்படம் ஒன்றை 2001-ல் தயாரித்து அதை ஒரு வலைப்பக்கத்தில் போட்டு வைத்திருந்தேன். இப்போது மும்பய் வன்முறை கண்ட பிறகு அதன் அவசியம் இன்னமும் அதிகமானது போல் உணர்கிறேன். அதனால் அதை இந்த வலைப்பக்கத்திலும் ஒரு முறை இணைத்து விடுகிறேன்.

Power of the Mother
View SlideShare presentation or Upload your own. (tags: fraternity peace)மதிப்பிற்குரிய மேதகு அப்துல்கலாம் அவர்கள் தன் தாய்க்கு சூட்டும் நன்றிக் கவிதையையும் படியுங்கள்

Mother

My Mother, you came to me like heavens carrying arms,
I remember the war days when life was challenge and toil-

...

All this pain of a young boy
My Mother you transformed in to pious strength
With kneeling and bowing five times
For the grace of the Almighty only my Mother
Your strong piety is your children's strength
You always shared your best with to whoever needed the most,
You always gave and gave with faith in him,

I still remember the day when I was ten,
Sleeping on your lap to the envy of my elder brothers and sisters.
It was full moon night, my world only you knew Mother!, My Mother!
When at midnight, I woke with tears falling on my knee
You knew the pain of your child, My Mother.
Your caring hands, tenderly removing the pain
Your love, your care, your faith gave me strength,
To face the world without fear and with His strength.
We will meet again on the great Judgment Day. My Mother!

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் புரிவாரோடு இணங்க வேண்டாம் -- உலகநீதி

Sunday, November 30, 2008

சொதப்பிட்டாங்கய்யா சொதப்பிட்டாங்க !

எதிரிகள் பாசறையில் ஒரு அவசரக்கூட்டம்.

”வெற்றி வெற்றி, கலக்கிட்டாங்கப்பா கலக்கிட்டாங்க” தொண்டர்கள் பெரும் சந்தோஷத்துடன், டைமஸ்- நௌ மற்றும் சி என் என், பார்த்தபடியே கைத்தட்டிக்கொண்டிருந்தனர்.

இந்திய அரசியலில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும் இறந்து போனவர்களின் இறுதி யாத்திரைகளும், பெரும் புள்ளிகள் வரிந்து கட்டிக்கொண்டு அரசாங்கத்தையும் போலீஸையும் “மை ஃபுட்” என்று திட்டித் தீர்ப்பதும் அளவில்லாத ஆனந்தத்தை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று சப்தமெல்லாம் அடங்கி யாவரும் நிமிர்ந்து அமர்ந்தனர். பாஸ் உள்ளே வந்து அமர்ந்தார்.

”கங்கிராசுலேஷன்ஸ் பாஸ். உங்க மாஸ்டர் மைண்ட் அப்படியே இந்தியாவையே கலக்கிடுச்சே” பாராட்டினார் ஒரு அடிவருடி.

பாஸ் முகத்தில் ஒரு சிறு அரைமனதான புன்முறுவல் மட்டும் பதிலாக வந்த்தது.

”என்ன பாஸ் ச்ந்தோஷமாயில்லையா ?”

”எப்படி ஓய் சந்தோஷமா இருக்க முடியும் ? சொதப்பிட்டாங்க, சொதப்பிட்டாங்க” வெறுப்புடன் பதில் சொன்னார் பாஸ்.

ஆஹா! ஏதோ எக்குத்தப்பாயிட்டிச்சு அப்படிங்கறது அடிவருடிகளுக்கு புரிந்தது. சரி பாஸ்-ஸே அடுத்து ஆரம்பிக்கட்டும் என்று மௌனம் காத்தனர் அடிவருடிகள்.

மொத்தம் எத்தனை பேரை அனுப்பினோம் ?

பதினைந்து

சொன்னதை செஞ்சாங்களா?

”கிட்டத்தட்ட செஞ்சிட்டாங்களே பாஸ். தாஜ் ஓட்டலும் ட்ரைடென்னும் இன்னும் ஒரு வருஷம் ஆகும் சரி செய்ய. கொறஞ்சது 100 கோடி நஷ்டம். 200 பேர் பப்ளிக்ல செத்திருக்காங்க. இதுக்கு மேலே பதினைஞ்சு பேர் என்ன செய்ய முடியும் பாஸ்?” சற்று கெஞ்சலான பதில் வந்தது.

”நாம ஒவ்வொருத்தனுக்கும் கொடுத்திருக்கிறது ஒரு கோடி. அது இல்லாம இவங்களுக்கு ட்ரெயினிங், பொய் தஸ்தாவேஜ், பிரான்சு, மொரிஷியஸ் செலவு, ஸாட் ஃபோன் செலவு இந்தியாவில இருக்கிற ஏஜெண்டுகளுக்கு காசு அப்படி இப்படின்னு செஞ்சிருக்கிறது இருபது கோடி. செலவழிச்ச காசுக்கு பலன் பத்தாதுன்னு சொல்றாங்கையா மேலிடத்துல.கொறஞ்சது ஒரு ஓட்டலையாவது தரைமட்டமாக்கியிருந்தா கொஞ்சம் நிமிர்ந்து பதில் சொல்லமுடியும்.இப்ப எந்த மூஞ்சிய வச்சுகிட்டு மேலிடத்தில நான் முழிக்கிறது?”

”பாஸ் ரெண்டு நாள் ஸ்டாக் மார்கெட் வேலை செய்யலை. அதானாலெ வந்த நஷ்டம் எவ்வளவு வேணுமானாலும் வைச்சுகலாம் பாஸ். சும்மா போடுங்க ஒரு குத்து மதிப்பா ஒரு ரெண்டாயிரம் கோடி” ஒரு பாய்ண்ட் எடுத்து குடுத்தான் இன்னொரு புத்திசாலி.

பாஸின் முகத்தில் ஒரு ஏற்பு தெரிந்தது. ”உம் அதுவும் சரிதான். வெளிநாட்டு முதலீடு எல்லாம் திருப்பி கொண்டு போயிடுவாங்க. அதனால வர்ற நாட்களெல்லாம் இந்திய பொருளாதாரம் அடிவாங்கிடும் அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.”

பாஸ்-ஸின் கவலை தீரவில்லை.

”அந்த முட்டாள் கஸாப் ஏன்யா மாட்டிக்கிட்டான்? ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தோம். ’செய் அல்லது செத்துமடி’-ன்னு எத்தனை தடவை ட்ரெயினிங்-ல சொல்லியிருப்போம். சாகமா மாட்டிக்கிட்டு இப்போ எல்லோரையும் காட்டிக் குடுத்தாட்டேனே. அவனாலே எல்லாம் வெளியே வந்திடிச்சு” வெறுப்பை உமிழ்ந்தார் பாஸ்.

“அதுக்குதான் பாஸ், எனக்கு இந்த சின்ன வயசு பசங்களைக் கண்டால் நம்பிக்கையில்லை. நீங்க யெங்-கா இருக்கணும், இங்கிலீசு படிச்சவனாயிருக்கணும், சாட் ஃபோன் யூஸ் பண்ணத் தெரிஞ்சிருக்கணும் அப்படி இப்படின்னு சொன்னதுனாலதான் இப்படி ஊத்திக்கிச்சு. கொஞ்சம் கம்மி படிச்ச நம்மூர் ஆளுங்க இதே வேலைய பாதி செலவுல செஞ்சு காமிச்சிருப்பாங்க பாஸ்.”

பாஸ் எதுவும் காமித்து கொள்ளாமல் அடிவருடியின் முகத்தைப் பார்த்தவாரே மேலும் பேசவிட்டார்.

”புலிய பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா பாஸ். வொர்ல்ட் ட்ரேட் செண்டர் அமெரிக்காவுல இருந்துச்சு. அதுக்கு படிச்ச பசங்க ஏரோப்ளேன் ஓட்ட தெரிஞ்சவங்க எல்லாம் வேணும். அல்-காய்தால அதுக்கு தோதா எல்லாம் இருந்து பண்ணி குடுத்தாங்க. இந்த சொத்தை இந்தியாவுல ரெண்டு பில்டிங்ல பாம்ப் வச்சு முடிக்க வேண்டிய வேலைக்கு AK-47, ஹாண்ட்-கிரெனேட் ட்ரெயினிங் எல்லாம குடுத்து அனுப்பணும் ?” அடிவருடியின் கிண்டல் கொஞ்சம் எல்லை மீறியது.

பாஸுக்கு கோபம் வெடித்தது. “முட்டாள் தனமா பேசாதேய்யா. நாம சொன்னது ஓட்டல்-ல இருக்கிற வெள்ளைக்காரப் பசங்களை சிறை புடிச்சு அவனுங்க நாட்டுலேர்ந்து பெரும் பணம் புடுங்கணும். அதுக்கப்புறம் ஒரு வெளிநாட்டானும் இந்திய பசங்களோட பேச மாட்டான். ரொம்ப அன்-ஸேஃப் அப்படீன்னு ஊரை காலி பண்ணிடுவாங்க. அதுல எதுவும் நடக்கலை. 25000 ரூபாய்க்கு கோழிக்கறியும் சாப்பாடும் வாங்கிகிட்டு நாரிமன் ஹவுஸ்-ல பூந்து நாறி போய்டானுங்கைய்யா. சொன்னதுல ஒண்ணும் நடக்கலை. அதுக்குதான் சொன்னேன் சொதப்பிட்டாங்கய்யா சொதப்பிட்டாங்க”

அவர்களோடு மேலும் பேசுவதில் அர்த்தமில்லை என்று மேலிடத்துக்கு சொல்ல வேண்டிய பதிலைப் பற்றிய கவலையில் பாஸ் வெளியேறினார்.

Thursday, November 27, 2008

பாதைத் தவறிய கால்கள்

மும்பய் வன்முறைகளைப் பற்றிய, ராமலக்ஷ்மி அவர்களின், மனக்குமறல் முத்துச்சரம் வலைப்பூவில் மனதைத் தொடும் ஒரு கவிதையாக மலர்ந்திருக்கிறது. கலங்கி நிற்கும் எவர்க்குள்ளும் எழும் நியாயமான உணர்வுகள் அவை. ஆனால் கலங்கி நிற்பது மன உறுதியை குலைத்திடும். காலனையும் காலால் மிதிக்கத் துணியும் பாரதியின் வீர உணர்ச்சி இருந்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும். ஆகவே இன்னொரு கவிதையை பாரதியின் கோணத்தில் படைத்திருக்கிறேன்.

இதற்கு வித்திட்ட ராமலக்ஷ்மி அவர்களுக்கு நன்றி.


என்னதான் செய்வீர்,செய்திடீர்
எதுவரை செல்வீர்,சென்றிடீர்
குள்ள நரிகளின் கூட்டம்
எததனை தினங்கள் ஆட்டம்

கட்டிக்கொடுத்த சோறு காணுமோ
குறியற்ற பயணத்தில்,மூர்க்கரே
வெட்டி முறிப்போம் உம் கால்களை
வன்முறை கொள்ளும் கைகளையுமே

குழம்பிய குட்டையில் மீனோ
கனவு காணும் மூடர்களே
பாரத தேசம் சிறு குட்டையோ
குழப்பிடின் எதிர்வரும் சுறாக்களே

மனிதத்தை மறப்பது புனிதமோ
மாற்றலரை அழிப்பது பாவமோ
மந்தபுத்தி யர்தம் கையோங்குமோ
மருண்டு மடிவதும் விவேகமோ

இறப்பதற்கு அஞ்சோம் உலகிலே
பிறந்த எவரும் சாவது உறுதி
கதறிப் பணியோம் வன்முறைக்கே
கலங்க அடிப்போம் இது உறுதி

மகன் போனால் மகன்கள் உண்டு
தமயன் போனால் தமயனா ருண்டு
எமக்கு உண்டு அன்பின் மொழி
உமக்கு சொல்வோம் தெண்டின் மொழி

(மாற்றலர்= எதிரிகள்; தெண்டு= கோல்,தடி)

Tuesday, November 25, 2008

கரெண்ட் போச்சா ? மாட்டை கட்டு !

முதல் முதலா கச்சா எண்ணெய் பிரச்சனை 70 களில் வந்த போது மாற்று எரிசக்தி ஆராய்ச்சி மிகவும் சூடாக ஆரம்பித்தது.அப்போது மாட்டு வண்டியை எப்படி மேம்படுத்துவது அதனால் எருதுகளின் சக்தி வீணாகமல் எப்படி முழுமையாக பயன்படுத்த முடியும் என்றெல்லாம் பெங்களூர் Indian Institute of Management-லிருந்து ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்தன.அதை யொட்டி வெளிவந்த ஒரு கேலிச் சித்திரம் சிந்தனையை தூண்டுவதாக இருந்தது.

வண்டி இழுக்கும் இரண்டு மாடுகள் பேசிக் கொள்கின்றன “You know, we are no more animals; we are alternate sources of energy "

இன்றைக்கு Times of India (Times Bangalore 25/11/08) பத்திரிக்கையில் வந்திருக்கும் ஒரு செய்தி அதை நிஜப்படுத்துவது போல் உள்ளது.
படத்தை சுட்டினால் பெரிதாக்கி முழு விவரத்தையும் படிக்கலாம்.

செக்கு மாடுகள் எண்ணெய் வித்துகளை அரைத்து எண்ணெய் எடுக்க ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றி வருவது போலத்தான் இதிலும் மாடுகள் சுற்றிச் சுற்றி வரவேண்டும். அதை தகுந்த பற்சக்கரங்கள் (கியர்) துணையோடு சுற்றுவிசையாக மாற்றி ஒரு ஜெனேரட்டர் வழியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது 2 KW ஜெனேரேட்டர் மாதிரி உற்பத்தி திறனுள்ள எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிதான தொழில்நுட்பம். சுருக்கமாகச் சொன்னால் சைக்கிள் பெடல் மிதிப்பதால் டைனமோ எரிவதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இதை ஒட்டி மனதில் வரும் சில எண்ணங்கள்.

உழவு மாடுகளை செக்கு மாடாக பயன்படுத்த முடியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.அது உண்மையில்லா விட்டால் வருடத்தில் விவசாயத்தில் நான்கு மாதங்களே பயன்பட்டு வரும் எருதுகள், இந்த வேலையினால் வருடம் முழுவதும் பயன்பட வாய்ப்பிருகிறது.

கோவை,மைசூர் போன்ற நகரங்களில் தெருக்களில் சும்மா சுற்றிக்கொண்டிருக்கும் குதிரைகளை பூட்டினால் இன்னும் அதிகமான மின் உற்பத்தி திறனுடைய ஜெனேரட்டர்களை இயக்கமுடியுமோ என்னமோ !

இதில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதாவது எருதுகளை (எருமைகளையும் வடநாட்டில் பயன்படுத்துவதுண்டு) செக்கு மாடுகளைப் போல் பயன்படுத்தினால் பிராணிநல ஆர்வலர்களுக்கு கோபம் வருமாம்!! அதனால் இந்த தொழில் நுட்பத்திற்கு மான்யம் அளிக்க மத்திய அரசு தயங்குகிறதாம்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதனுடைய உற்ற தோழனாக இருந்து அவன் கூடவே உழைப்பில் பங்கு கொண்டு குடும்பத்தில் ஒருவராக கருதப்பட்ட பிராணிகளை இன்று வெகுவாக உணவுக்காக வளர்த்து கசாப்பு கடைகளுக்கு அனுப்புவதை இந்த ஆர்வலர்கள் ஏன் தடுப்பதில்லை ?

ஒருவேளை விருப்பமில்லாததால் தட்டிக் கழிக்க அரசு அவர்கள் மேல் பழியை திருப்புகிறதோ ?
மீண்டும் பிராணிகளையும் மனிதர்களையும் ஒருவரைச் சார்ந்து ஒருவர் என்ற வகையில் இணைக்கக்கூடிய,சுற்றுப்புற சூழலுக்கு தீங்கிழைக்காத தொழில் நுட்பம் என்ற வகையில் இதன் முன்னேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். (படம் :நன்றி F.A.O.)

Wednesday, November 12, 2008

ஒரு பலூன் கதையும் பலூன் பாடலும்

இன்று மின்னஞ்சலில் ”How America went Bust" என்ற தலைப்பில் வந்த ஒரு கட்டுரையை தழுவி எழுதியது. பங்கு சந்தை என்ற பலூன் உருவாகும் விதத்தை எளிமையாக விளக்கியுள்ளது . இனி, கதைக்குச் செல்வோம்.

ஒரு தீவு. அந்த தீவில் புழக்கத்தில் இருந்தது இரண்டு ‘ஒரு ரூபாய்’ நாணயங்கள் மட்டுமே.

அந்த தீவில் குடியிருப்போர் மூன்று பேர். முகேஷ் மற்றும் அனில் ஆளுக்கொரு ரூபாய் வைத்திருந்தனர். மூர்த்தியிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அவன் ஒரு தென்னங்கன்று வளர்த்தான்.

முகேஷ் அதை ஒரு பணம் காய்ச்சி மரம் என்பதை எப்படியோ புரிந்து கொண்டு மூர்த்திக்கு ஒரு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு மூன்று ரூபாய்கள். அதாவது மூர்த்தி அனில் இருவரிடமும் ஒவ்வொரு ரூபாயும் முகேஷிடம் ஒரு ரூபாய் மதிப்புள்ள மரமும் இருக்கிறது.

இதைக் கண்ட அனில் பணம் காய்ச்சி மரம் பிற்காலத்தில் பயன்படும் என்று மூர்த்தியிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி தனது ஒரு ரூபாயையும் சேர்த்து முகேஷிடமிருந்து இரண்டு ரூபாய் கொடுத்து மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு நான்கு ரூபாய்கள். அதாவது மரம் 2 ரூபாய், முகேஷிடம் 2 ரூபாய்.

மரத்தின் விலை ஏறுவதைக் கண்ட மூர்த்தி அதை விற்றதற்காக மனம் வருந்தி முகேஷிடம் 2 ரூபாய் கடன் வாங்கி அனிலிடம அவன் (அனில்)ஏற்கனவே பட்டிருந்த ஒரு ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்து மீண்டும் மரத்தை வாங்கினான். இப்போது மரத்தின் மதிப்பு 3 ரூபாய்கள். அனிலிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 5 ரூபாய்கள்.

அடடே மரத்தின் விலை கூடிக்கொண்டே போகிறதே என்று முகேஷ் அனிலிடம் 2 ரூபாய் கடன் வாங்கி மூர்த்தியின் 2 ரூபாய் கடனை தள்ளுபடி செய்து 4 ரூபாய்களுக்கு மரத்தை கிரயம் செய்தான். இப்போது மூர்த்தியிடம் 2 ரூபாய்கள். தீவின் மதிப்பு 4 +2 =6 ரூபாய்கள்.

திடீரென்று அனிலுக்கு கவலைப் பிடித்துக்கொண்டது. மரம் நினைத்தபடி பலன் தராமல் போய்விட்டால் முகேஷ் எப்படி தன்னுடைய 2 ரூபாய் கடனை திருப்பித்தர முடியும். மூர்த்திக்கும் அதே கவலை பிடித்துக் கொண்டது. அதனால் கையில் பணமிருந்தும் அவன் மரத்தை விலை பேச முன்வரவில்லை. என்னதான் சொன்னாலும் காய்க்காத தென்னங்கன்றின் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்பதை புரிந்து கொண்டான் அவன்.

இப்போது மரத்தை வாங்குவோர் இல்லை. மூர்த்தியிடம் 2 ரூபாய்கள் இருக்கிறது. முகேஷிடம் 4 ரூபாய் மதிப்புள்ள மரம் ஒரு ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. எனவே அவன்
அனிலுக்கு கொடுக்க வேண்டிய 2 ரூபாய் கடனில் ஒரு ரூபாய் மட்டுமே திருப்பித்தர இயலும்.

முகேஷ் திவாலாகிப் போனான். முகேஷ் பட்ட கடனை அனில் திரும்பாதக் கடனாகத் தள்ளுபடி செய்தான். இப்பொது தீவின் மதிப்பு மீண்டும் 3 ரூபாய்கள். 6 ரூபாயில் இழந்த 3 ரூபாய்கள் எங்கே போயிற்று ?

கதை சொல்லும் நெறி.

எளிமை கருதி வர்த்தகம் மூவருக்குள்ளே நடப்பதாக காட்டப்பட்டது. அங்கே இன்னுமொரு மரம் இருந்து ரத்தன் என்பவன் சொந்தக்காரனாக இருந்திருந்தால் இன்னும் ருசிகரமான கைமாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ரத்தன் விளையாட்டில் சேராமல் வேடிக்கைப் பார்த்தாலும் அவனுடைய மரத்தின் விலையும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்திருக்கும். அதற்குதகுந்தாற்போல் தீவின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும்.

இதைத் தவிர வெளித் தீவிலிருந்து யாரேனும் முதலீடு செய்ய முற்பட்டிருந்தால் பணபுழக்கம் அதிகரித்து தீவின் மதிப்பும் காகிதத்தில் உயர்ந்து கொண்டே போகும். புத்திசாலியான வெளியாள் செயற்கையாக விலையை ஏற்றி, மரத்தை சமயம் பார்த்து உள்ளுர்காரனுக்கே அதிக விலையில் விற்று தன்னுடைய வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொண்டு போயே போய் விடுவான். அப்போது தீவில் உள்ளவர்கள் ஏமாளிகளாக அமர்ந்திருக்க வேண்டியது தான்.

பங்குச் சந்தை செய்கின்ற குளறுபடிகளும் இப்படிபட்டதே. எவனொருவன் வேகமாய் பணமாக மாற்றிக் கொள்வானோ அவனே புத்திசாலி. பங்கு காகிதத்தை நம்பி பணம் கொடுத்த வங்கிகளுக்கும், கடன் வாங்கி முதலீடு செய்வோருக்கும் கடைசியில் தலையிலே துண்டு.

பத்துக்காசு விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன்....... மழலையின் மொழியிலே கேட்டு மகிழுங்கள். பாடல் வரிகள் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, November 4, 2008

ஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு

ஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்தம் என்பது படித்து அறிந்து கொள்ள முடியாது.

முதன்முறையாக சத்யசாயி பிரசுரத்தினர் உச்சரிப்பு சுத்தத்துடன் சுயமாக கற்றும் கொள்ளும் வகையில் ஸ்ரீருத்ரத்தை அவர்களுடைய இணைய தளத்தில் வலையேற்றம் செய்துள்ளார்கள். PDF கோப்பில் ஒலிக் கோப்பையும் பதிந்து ஒவ்வொரு வரிக்குக் கீழே அதன் உச்சரிப்பு முறையை தெளிவு படுத்தியிருப்பதால் குரு முகமாக கற்றுக் கொள்வதைப் போலவே பயிற்சி செய்து பழகலாம்.

இதனால் வெளி மாநிலங்கள் அயல்நாடுகளில் வசிப்போர், கற்பதற்கு வாய்ப்பில்லையே என்று வருந்துவோர் பெருமளவில் பயனைடய முடியும். இந்த நூதனமான தொழில்நுட்பம் (sound embedded pdf file) ஆத்திக அன்பர்களுக்கு இப்படி பயனுள்ள முறையில் பயன்படுவது சந்தோஷத்திற்குரியது.(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)


இந்த கோப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

Tuesday, October 14, 2008

ஒரு பர்ஸெண்ட் பகவத்கீதை- சப்த ஸ்லோகி கீதா

குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலை சாமான்யர்களோடு பஸ்ஸில் பயணம் செய்வார்.திரைப்படம் பார்ப்பார்.எப்போதும் திரைமறைவிலிருந்து வந்தார். இவைகள் அவருடைய அரசு கேள்வி பதில் பகுதியை மிக சுவாரசியமாக்கியது. அவர் அதே அளவு ஆர்வத்துடன் பகவத் கீதை படித்ததை அவருடைய ஆசிரியர் குழுவில் ஒருவர் பின்னாளில் நினவு கூர்ந்திருந்தார். எனக்கு இதை படித்த போது ஆச்சரியமாயிருந்தது. என் கணிப்பில் வெகு ஜன ரசனைக்காக வெளிவந்த பத்திரிக்கை குமுதம் என்பதே. அதில் பலமுறை மலின ரசனைக் கதைகளையும் துணுக்குகளையும் கண்டு அதை படிப்பதையே நிறுத்திவிட்டேன்.

தனி மனிதத் தேடல் வேறு (ஜீவியின் தொடரை படித்து வருகின்றீர்களா ?), வியாபாரப் போட்டி வேறு என்று அவர் நினைத்தாரோ என்னவோ! யாவருக்குள்ளும் ஆன்மீகம் என்பது நீறு பூத்த நெருப்பாக இருக்கும். நேரம் வரும் போது ‘பக்’கென்று பிடித்துக்கொள்ளும்

மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த காக்டே என்பவர் ஒரு மருத்துவர். ஷிரடி சாயியின் பெரும்பக்தர். அவர் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட பல நிகழ்ச்சிகளையும் ஒரு ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் தம்முடைய சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவருக்கு பால்ய வயதில் ஆன்மீகத்தில் பற்று ஏற்படக் காரணமாயிருந்த ஒரு பெண்மணியைக் குறிப்பிட்டு அவர் ஊரைவிட்டு பிரியும் முன்னர் தினம் குறைந்தது ஐந்து பகவத்கீதை சுலோகங்களையாவது படிப்பேன் என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டார் என்று சொல்கிறார். பின்னர் வாழ்நாள் முழுவதும் அதை விடாமல் காப்பாற்றி வந்ததாகவும் அதுவே பல சமயங்களில் தனக்கு மனவுறுதியும் உற்சாகமும் கடமையில் ஈடுபாடும் தந்ததாக விவரித்திருந்தார்.

இதை படித்த உடன் ”சப்த ஸ்லோகி கீதா” என்று கீதா ப்ரஸ் கோரக்பூர் அவர்களின் புத்தக பதிப்பில் ஒன்றை பார்த்தது நினைவுக்கு வந்தது. காக்டே அவர்கள் போல் கீதையை தொடர்ந்து படிப்போமோ இல்லையோ குறைந்தது அந்த ஏழு சுலோகங்களையாவது கற்றுக்கொள்வோமே என்ற எண்ணம் தோன்றியது. அதை எழுதி வைத்து தொடர்ந்து பலவருடங்களாக, தினம் இல்லாவிட்டாலும், வாரம் மூன்று நான்கு முறை சொல்லி வருகிறேன்.

பின்னர் பலருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் அதை ஒலி ஒளி வடிவில் பவர் பாயிண்ட் கோப்பாகத் தயாரித்து 2003-ல் ஜியோசிடி இலவச பக்கங்களில் வலையேற்றி கொஞ்ச நாளில் அதை மறந்தும் போனேன்.

இப்போது தமிழ் வலைப்பூ அன்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் esnip சேகரிப்பு பகுதியில் சேர்த்துவிட்டு இணப்பை இங்கே தருகிறேன். ஒரு சில கணிணிகளில் ஒலிவடிவம் வேலை செய்வதில்லை என்று கேள்விப்பட்டேன். விண்டோஸ் 98 வைத்து உருவாக்கியது. இப்போது என் விண்டோஸ் எக்ஸ்-பியிலும் ஒலி வேலை செய்யவில்லை. யாருக்காவது வேலை செய்தால் சந்தோஷம்.

ஏழு சுலோகங்களைத் தொடர்ந்து எட்டாவது சுலோகமும் ஒன்றை இணைத்திருக்கிறேன். அதை பலஸ்ருதி என்பர். படித்ததன் பலனை நினைவிலிருத்திக் கொள்ளச் சொல்லப்படுவது. இறைவனிடம் ஒரு அப்ளிகேசன் அவ்வளவுதான். கோளறு பதிகத்தின் கடைசியில் சம்பந்தர் சொல்வாரே

“தானுறு கோளு நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொன் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே”

என்பதும் தேவராய சுவாமிகள் சொல்லும்

.......
கந்தசஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
..............
கந்தர்சஷ்டி கவசம் இதனைச்
சிந்தைகலங்காது தியானிப்பவர்கள்
...................
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங் கருளுவர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
........

எல்லாம் பலஸ்ருதியே.

பலனைக் கருதாது கடமையைச் செய்யவேண்டும் என்றாலும் கடவுளிடம் இறைஞ்சுதலிலும் பெருமை போற்றுவதிலும் தவறில்லை போலும்!

பகவத் கீதையை படிக்க ஆர்வமிருந்தும் நேரம்,சூழ்நிலை அனுகூலமில்லாதவர்கள் குறைந்த பட்சம் இந்த ஏழு சுலோகங்களை படித்து மனநிறைவு அடையலாம். ஆன்மீகம் எனும் கனலை அணைந்து விடாமல் அது பாதுகாக்கும். இப்படி ஆர்வத்தை பாதுகாத்தால் காலம் கனியும் போது கீதை முழுவதும் படிக்க இறைவன் வழி செய்வான்.

வாழ்க வளர்க

தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணப்பைச் சுட்டவும்.

பகவத்கீதை  எளிமையாக

Sunday, August 31, 2008

தேயீயீயீ....இன்னும் தேய்- : சினா சோனா(6)

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்கு துணியும் நெறஞ்சிருக்கு” அப்படீன்னு ஒரு பாட்டு திருவருட் செல்வர் படத்துல வரும். பாட்டு நடுவில வார்த்தைகளோட அழகை கவனிங்க.


மனசு போல வெளுத்து வைச்சு
உறவு போல அடுக்கிவைச்சு
வரவு போல மூட்டைகட்டி- வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும் நாணயம் தான்
வெள்ளையப்பா


“ மனசு, துணிய விட சுத்தமா இருக்கு”.

எளிமையான மக்களுக்கு அப்படிதாங்க. கவிஞர் வார்த்தையிலேயே படம் புடிச்சிட்டாரு. அப்படி ஒரு சுத்தம் வரணுமின்னா என்ன செய்யணும். சினா சோனா சொல்றாரு பாருங்க
(படம் பெரிதாகத் தெரிய அதன் மேல் சுட்டவும்)


"It wisely put, better to rub it out, than to rub it in "

மனைவிக்கு பயந்த கணவனாக இருக்கும் சினா-சோனா வுக்கு துணி துவைக்கும் வேலை வந்து சேருது. அவங்க ஊர்ல துணிய தேய்க்கிறப் பலகை, தொட்டிக்கு செங்குத்தாகத்தான் இருக்கும் போலிருக்கு. அது மேல அழுக்கு துணிய தேய்க்கும் போது முதலில் அவருக்கு தன்னுடைய நிலைமைய நினைச்சு மனம் கஷ்டப் படுது. ( அதை படத்துல அவரு மூஞ்சியப் பார்த்து புரிஞ்சிக்கணும்). சுய பச்சாதாபம்.

அதன் பிறகு அழுக்கைப் போக்கத் தேய்த்துக் கொண்டிருக்கும் (rub it out ) செய்கையாலே ஞானோதயம் வருது. கோபத்தையோ கஷ்டத்தையோ மனசிலேயே போட்டு உழப்பிக் கிட்டு (rub it in ) இருக்கிறத விட 'அழுக்கை வெளிய தள்ளுற மாதிரி, எதிர்மறை எண்ணங்களை தள்ளிடணும்' ன்னு சொல்றார்.

குள்ளச்சாமியை பார்த்து பாரதியார் ‘ஏனய்யா அழுக்கு மூட்டை சுமக்கிறீர்' ன்னு கேட்டதுக்கு அவரு என்ன சொன்னாரு?

“புறத்தே நான் சுமக்கின்றேன், அகத்தினுள்ளே
இன்னொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ ”

அப்படீன்னு பதில் வந்திச்சு. சினா சோனா சொல்ற "rub it in " ங்கறது பழங்குப்பை சேர்ப்பதற்கான வழி. மனசுக்கு எது உற்சாகம் கொடுக்குமோ அந்த விஷயங்களை மாத்திரம் நெனச்சு பார்க்கணும். அப்போ தானாகவே வேண்டாத எண்ணங்களெல்லாம் தூர ஓடிப்போயிடும்.

ரொம்ப சிம்பிளா கவிஞர் rub-it out வழியும் சொல்லிட்டாரு பாருங்க.
கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா - உன்
சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

சினா சோனா, சொன்னா சரிதான் !

Saturday, August 23, 2008

எது இன்ஸ்பிரேஷன், எது காப்பி ?

வெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண்டுகோலாக (inspiration) கொள்வதில் தவறில்லை. அப்படியே நகல் எடுக்கக்கூடாது என்று பப்பி லஹரி சொன்னார்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா ? சின்ன சின்ன ஆசை என்று சக்கை போடு போட்டதே ஒரு பாடல் அதற்கு மூலம் கே.எஸ். நரசிம்மஸ்வாமி என்பவர் எழுதி பல வருடங்களுக்கு முன்னர் கன்னடத்தில் ”மைசூரு மல்லிகே” என்கிற திரைப் படத்தில் வரும் ஒரு பாடலை ஒட்டியிருக்கும். ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு வரும் போது இசையை 'காப்பி' அடிக்கமுடியும் ஆனால் வார்த்தைகளை அவ்வளவு சுலபமாக முடியாது.

ஆனால் ஒரே மொழியில் ஒரே விதமான வரிகள் கொண்டு வரும் போது அதை என்ன சொல்வது?

சமீபத்தில் கவிநயா அவர்களின் ”நினைவின் விளிம்பில்”வலைப்பூவில் நடராசர் பற்றிய கவிதையை கண்டபோது என்னிடமிருந்த சஞ்சய் சுப்பிரமணியன் அவர்கள் குரலில் பதிவான ”மானாட மழுவாட” என்ற பாடல் நினைவுக்கு வந்தது. விருத்தமாக பாடப்பெற்ற அந்த பாடல் தில்லி B வானொலியில் காலை 6.0லிருந்து 6.45 வரை ஒலிபரப்பாகும் ”வந்தனா” நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதன் பொருள் செறிவு காரணமாக அதை பதிவு செய்து வைத்திருந்தேன். அப்போது பாடல் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. கோபாலகிருஷ்ண பாரதியோ, அருணாசலக் கவியாகவோ இருக்கலாம் என்று ஊகித்திருந்தேன்.

கவிநயா வின் பதிவை படித்தபின் அதன் ஆசிரியரை தேட முனைந்தேன். முதலில் அப்புசாமி டாட் காம் -ல் நடராஜ பத்து என்ற தலைப்பில் பாடல் கிடைத்தது. ஆனால் ஆசிரியர் பற்றி குறிப்பிருக்கவில்லை. மேலும் தேடியதில் இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. என்னைப் போலவே அப்பாடலால் கவரப்பட்ட சேதுக்கரசி அவர்கள் அதைப் பற்றி 'அன்புடன்' குழுமத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அப்பாடலை ”மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என்று ஆரம்பிக்கும் திரைப்படப் பாடலின் கடைசி சில வரிகளோடு ஒப்பிட்டு எப்படி ஒரு பாடல் இன்னொரு பாடலாசிரியருக்கு 'தூண்டுகோலாக' அமைகிறது என்பதை அழகாக காட்டியிருக்கிறார்.

பூவை செங்குட்டுவன் எழுதி சூலமங்கலம் சகோதரிகள் பாடியிருக்கும் பிரபலமான பாடலில் வரும்

ஆடுகின்றானடி தில்லையிலே

அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே

திங்களும் ஆட சூலமும் ஆட

விரிசடை மீதொரு கங்கையுமாட

என்கிற வரிகளும் மேற்கண்ட பாடலின் தாக்கம் எனக்கொள்ளலாம். இப்படி பலருக்கும் பலவிதமாக ஊக்கமளிக்கும் பாடலை நீங்களும் பக்க-பட்டையில் (side Bar) பொருத்தப்பட்டுள்ள தமிழிசை தொகுப்பில் கேட்டு மகிழலாம். அதன் ஆசிரியர் சிறுமணவூர் முனுசாமி முதலியார். நடராச பத்து என்ற பதிகத்தில் இரண்டாம் பாடலாக வருவது.

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திரையாட
மறை தந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டம் எல்லாமாட
குஞ்சர முகத்தான் ஆட
குண்டலம் இரண்டாட தண்டை புலியுடை ஆட
குழந்தை முருகேசன் ஆட
ஞான சம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனி அட்டபாலகரும் ஆட
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்க ளாட
வினையோட உனைப்பாட யெனைநாடி இதுவேளை
விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ் நடராசனே

(அட்டபாலகர்= அஷ்ட பாலகர்)
விருத்தம் பாடுவது ஒரு கலை. அதை குறிப்பாக ஒரு பாடலின் பொருள் உணர்ந்திருந்தால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். அதில் பாவத்திற்கேற்ற ராகமும், தெளிவான உச்சரிப்பும் இருந்தால்தான் களைக்கட்டும். அதை நன்றாகவே கையாண்டிருக்கிறார் சஞ்சய் சுப்பிரமணியன் அவர்கள்.

முனுசாமி முதலியார்க்கும் ஒரு முன்னோடி உண்டு. அவர்தான் திருமூலத்தேவர். அவருடைய பாடலையும் பாருங்களேன் !

வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட

கீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாடப்

பூதங்களாடப் புவனம் முழுதாட

நாதன் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே

எது இன்ஸ்பிரேஷன் எது காப்பி ?

Thursday, July 31, 2008

'மின்னல் வேக' நியோ-வார்ப்புரு (Neo template)

கடந்த இரண்டு நாட்களாக ஒரு புது வார்ப்புரு நிரலை என்னுடைய ஆங்கில வலைப்பூவிற்காக தேடிக் கொண்டிருந்தேன். 'அன்னியலோகம்' ரமணியின் மிகப்
பிரபலமான நியோ வார்ப்புரு (Neo template) நினைவுக்கு வந்தது. அதை நிறுவிய போது கண்ட சில அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

இது ப்ளாகரின் புதிய வார்ப்புரு பயனர்களுக்கு பொருந்தும்.

விண்ணும் மண்ணும் என்று பெயர் சூடப்பட்ட என்னுடைய பரீட்சார்த்த வலப்பக்கத்தில் இந்த வார்ப்புருவின் செயல்பாட்டைக் காணலாம். இதற்கு கீழே உள்ள பகுதியை அந்த இணைப்பிலேயே சென்று படித்தால் சொல்லப்படும் விஷயங்களை நேரடியாகவே செய்து பார்க்கலாம். எதற்கும் ஒரு முறை இங்கே முழுவதுமாகப் படித்தபின் அங்கு செல்லவும்.

(அந்த வலைப்பக்கம் அடிக்கடி மாறுதலுகளுக்கு உட்படுமாதலால் முழு கட்டுரையும் கீழே தருகிறேன்.)

நியோவின் முக்கிய கவர்ச்சி அதன் ”மின்னல் வேகம்”.

(பெரிது படுத்திப் பார்க்கவும் )

வலைப்பக்கத்தின் 'பதிவு சட்டத்துள்' ளேயே ( Post Frame) பழைய பதிவுகளை உடனடியாகத் தெரிய Neo வகை செய்கிறது. ஒவ்வொரு முறையும் பதிவுகளின் பக்கங்கள் புதிதாக வலையேற்றம் செய்யப்படுவதில்லை. அதோடு பழைய பதிவினுடைய பின்னூட்டங்களும் சேர்ந்தே தெரிகிறது.

வார்ப்புருவை வலையேற்றிய பின் Lay out , Font & color முதலிய தெரிவுகளில் வேண்டிய வடிவத்திலும் வர்ணத்திலும் வடிவமைத்துக் கொள்ளலாம். எல்லா
பதிவுகளில் உள்ளது போலவே பல விட்ஜெட் இணைப்புகளும் கொடுக்க இயலும். எல்லாவற்றையும் விட மூன்று பத்திகள் கொண்ட வார்ப்புருவாகும். இதனால்
வலைப்பக்கத்தில் அதிக விஷயங்களை ஒரே பார்வையில் தர இயலும்.

ஆரம்பத்தில் ரமணி நிறுவியிருக்கும் இரண்டு Label மெனுக்கள் பெரும் குழப்பம் விளைவித்தது. நீலவர்ண பெட்டிக்குள் இருப்பது RECENT POSTS என்ற பெட்டியுடன் தொடர்பு உள்ளது. வெளியே தெரியும் இன்னொரு Label, பதிவுப் பெட்டியுடன் நேரடி தொடர்பு உள்ளது. நான்கைந்து 'மாதிரி' பதிவுகளை பதிந்து
பார்த்த பின்னரே இது புரியத் தொடங்கியது.

உதாரணத்திற்கு நீங்கள் spiritual என்ற Label ஐ நீலப் பெட்டியில் சொடுக்கினால் அது சம்பந்தமான பதிவுகள் அதன் மேலே உள்ள Recent Post பெட்டியில் தெரிகிறது. அதனோடு அதன் RSS ஓடையும் காட்டப்படுகிறது. அங்கே தெரிவு செய்யப்படும் பதிவு, பெரிய பதிவு பெட்டியில் பின்னூட்டங்களோடு உடனடியாகக் காட்டப்படுகிறது. இந்த முறையில் வலைப்பக்கம் மூடித் திறக்கப் படுவதில்லை (does not reload).

அதே 'spiritual' Label ஐ வெளியில் இருக்கும் இணைப்பிலிருந்து சுட்டினால் வலைப்பக்கம் மூடி, புதிதாக திறக்கப்படுகிறது அதற்குண்டான எல்லா பதிவுகளும் மொத்தமாக (ஒன்றன் கீழ் ஒன்றாக) பதிவுப் பெட்டியில் காட்டப்படுகிறது. இப்போது பின்னூட்டங்கள் காட்டப்படுவதில்லை. இது தான் முக்கிய வேறுபாடு.

எதற்காக இந்த ( இரண்டு Label) ஏற்பாடு என்பது புரியவில்லை. ஒன்றே போதும் என்று ஒன்றை நீக்கியபோது இன்னொன்று செயலிழந்து விட்டது. எனவே
நிரலியில் இரண்டுக்கும் பொதுவான ஒரு நிரலோட்டம் உள்ளது என்று புரிந்தது. மென்பொருள் வல்லுனர்கள் இதை விளக்க முடியும்.

இன்னும் ஒரு புதிய விஷயம் ( இதைப் பற்றி யாரும் குறிப்பிட்டதாக தெரியவில்லை) :
ஒரு முறை வலைப்பக்கம் திறந்தவுடன் இணையத்தின் இணைப்பைத்
துண்டித்து விடுங்கள். அதன் பின்னும் நீல நிறப் பெட்டிக்குள் இருக்கும் பதிவுகளின் தலைப்பை சொடுக்கினால் அதற்குரிய பக்கங்கள் பதிவுக்கானப் பெட்டியில் உடனே தெரியும். கிட்டத்தட்ட பத்து பதினைந்து பதிவுகளை இப்படியாக off-line ஆகப் படிக்க முடியும். ஆனால் படங்கள் மட்டும் தெரிவதில்லை

இம்மாதிரியான வசதி வேறு எந்த வார்ப்புருவை பயன் படுத்தினாலும் கிடைக்குமா என்பது சந்தேகமே !

IE மற்றும் Fire Fox உலாவிகளில் நியோ பொருத்திய வலைப்பக்கம் சற்றே வித்தியாசமாய்த் தெரிகிறது. ஃபையர் ஃபாக்ஸில் பெட்டிகளின் மூலைகள் அழகாக வளைந்து காணப்படுகிறது (rounded corners); அதுவே எக்ஸ்ப்ளோரலில் மூலைகளில் கட்டம் கட்டமாகத் தெரிகிறது. ஏனிந்த வித்தியாசம்?

நான் இதுவரை கண்ட வரையில் நியோ வார்ப்புரு மிகவும் பயனுள்ள ஒன்று. தமிழ் பதிவர்கள் இதை ஏன் பரவலாகப் பயன் படுத்த முன் வரவில்லை என்பது
புரியவில்லை. ஒருவேளை தமிழ்மணம் கருவிப் பட்டையை பொருத்துவதில் ஏதேனும் சிரமம் உண்டோ, அல்லது ஒரு வரவிலேயே பல பக்கங்களை படித்த விட முடியும் என்பதால் வாசகர் வருகை குறைவாகக் காட்டப்படும் என்ற எண்ணமோ தெரியாது. புதிய பதிவர்கள் அல்லது வெகு சில பதிவுகளே உடைய பதிவாளர்கள் சுலபமாக நியோ வார்ப்புருவுக்கு மாற்றிக் கொள்ளலாம். வெகுவான விட்ஜெட்கள் இருந்தால் மாற்ற முயல்வது சற்று தொந்தரவான விஷயம்தான்.

இடது பக்கத்தில் இருக்கும் பக்கப் பட்டைகளை வலது பக்கத்திற்கு மாற்ற வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்? அதை Layout-ல் மாற்ற முடியவில்லை.

ரமணி அவர்கள் இன்னும் பல உபயோகமான மென்பொருட்களை வlலைப் பதிவர்களுக்கென தன் வலைப் பக்கமான Hackosphere-ல் பதிந்து வருகிறார். கண்டு பயன் பெறலாம்.

நியோ செயல்பாட்டு முறைப் பக்கம் காண விண்ணும் மண்ணும் இணப்பைச் சுட்டவும்.

Thursday, July 24, 2008

தண்ணீர்... தண்ணீர்


(படத்தை சொடுக்கி முழு செய்தியும் படிக்கலாம்)

சுமார் இருபது வருடங்களுக்கு முன் முதன் முதலாக செட்டிநாட்டில் கால் வைத்தேன். புதிதாக தொடங்க வேண்டிய ப்ராஜெக்ட் ஒன்றிற்காக ஊர் ஊராக நிலம் தேடி சுற்றி வந்தோம். அப்போது சவேரியார்புரத்தில் ஒரு மதியம், பள்ளத்தூர் செல்ல, பேருந்துக்காக காத்திருந்த வேளை. ஆள் நடமாட்டமே இல்லாத கிராமம்.

உடனிருந்த அன்பர்களில் ஒருவர் குடிப்பதற்கு அருகிலிருந்த வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டார். ஒரு வயதான பெண்மணி ஒரு சொம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கையில் வாங்கிய அன்பர் அதைப் பார்த்துவிட்டு இன்னொருவரிடம் கொடுத்தார். அவரும் பார்த்து விட்டு என்னிடம் கொடுத்தார். எனக்கு அதைப் பார்த்த உடனே பகீரென்றது. மண்வாசனை கூடிய கலங்கலான மஞ்சள் நிறத் தண்ணீர். ஒருவரை ஒருவர் பார்த்து முழிப்பதைக் கண்ட பெண்மணிக்கு புரிந்து விட்டது.

“அது ஒண்ணும் பண்ணாதுங்க. ஊரணித் தண்ணிதான். நாங்க எல்லாம் குடிக்கிறோமில்ல !” என்று தைரியம் கொடுத்தார். பசித்தவனுக்கு எட்டிக்காயும் தித்திக்குமாம். தவிப்பவன் தாகசாந்திக்கு ஊரணி நீரே அமிர்தம் என்று குடித்து வைத்தோம். ஆயினும் சென்னை திரும்பும் வரை சற்று கவலையாகவே இருந்தது. யாருக்கும் ஒரு தொந்தரவும் வரவில்லை. அதன் பிறகு எட்டு ஆண்டுகள் செட்டிநாடு வாசமும் ஆரோக்கியமாகவே இருந்தது.

எதற்கு சொல்லவந்தேன் என்றால் இப்போதெல்லாம் பாக்டீரியா, காலரா, ஜாண்டீஸ் என்றெல்லாம் அளவுக்கு அதிகமாக பயமுறுத்தி வீட்டுக்கு வீடு தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை பெரிய அளவில் விற்பனை செய்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

அதி சுத்தமான நீரை குடித்து வளர்பவர்களுக்குள் ஒருவருக்கு இயல்பாக இருக்க வேண்டிய நோய் எதிர்ப்புத் திறனை வளரவிடாமல் தடுக்கின்ற அபாயம்தான் இதில் அதிகம்.

இதை என் அனுபவத்திலேயே உணர்ந்துள்ளேன். 1991-ல் ஆறு வாரகாலம் இஸ்ரேலுக்கு போக வேண்டியிருந்தது. பம்பாய்க்கு இரண்டு தினங்கள் முன்பே சென்று, சகோதரனுடன் தங்கி விசா, அன்னிய செலாவணி இத்யாதி எல்லாம் முடித்துக்கொண்டு பயணமானேன். அங்கே விருந்தினரகத்தில் வழங்கப்பட்ட நீரில் ஒரு வித மருந்து வாடை அதிகமாகவே இருந்தது. விசாரித்ததில் நீரை காய்ச்சி விட்டால் அந்த வாடை போய்விடும் என்றும் அது பொது வினியோகத்திற்கு முன் கலக்கப்படும் கிருமி நாசினியினால் வருவது என்றும் தெரிந்தது. மற்றபடி பிரச்சனை ஏதுமின்றி கழிந்தது.

திரும்பவும் மும்பையில் இறங்கி சகோதரன் வீட்டை அடைந்து உணவு உட்கொண்டு நீர் அருந்தினேன். அடுத்த அரை மணிக்குள் பேசக்கூட இயலாத அளவுக்கு தொண்டை கட்டி விட்டது !!

“ஓ! அங்க ட்ரீடெட் வாட்டர். அதனாலத்தான் இங்க வந்ததும் உனக்கு ஒத்துக்கல” என்றான் சகோதரன். பயணத்திற்கு முன்பு ஏற்புடையதாக இருந்த அதே நீர் ஆறு வாரங்களில் ஏற்பில்லாததாகி விடுகிறதென்றால் என் உடலில் ஏதோ ஒரு தடுப்பு சக்தி குறைந்து விட்டதாகத்தானே பொருள்.

நோய் கிருமிகளால் வரக்கூடிய அபாயத்தை காய்ச்சி ஆறிய நீரே தடுக்க முடியும். எளிதும் கூட. ஆனால் காலராவோ ஜாண்டீஸோ எப்போதுமே தலைமேல் தொங்கும் கத்தி (Damocle's sword) போல் கொல்வதற்கு காத்திருப்பதில்லை. சுத்திக்கரிக்கப் படாத நீரினால் எப்போதாகிலும் சிறு அசௌகரியங்கள் உண்டாகலாம். அதற்காக அளவுக்கு மீறி பயமுறுத்துவது வெறும் சந்தைப் படுத்தும் போக்கையே காட்டுகிறது.

எனது முந்தைய தலைமுறையை விட என் தலைமுறை, நோய் எதிர்ப்பு விஷயத்தில், சற்றே பலவீனமானதுதான். அதை விட அடுத்த தலைமுறை இன்னும் பலவீனமாவதைக் காண்கிறேன். இதன் முக்கிய காரணம்
இயற்கையோடு ஒன்றி வாழ்வது குறைந்து கொண்டே வருவதால் தானோ என்று தோன்றுகிறது.

சலனப் படத்தில் ஒரு Reverse Osmosis முறை சுத்திகரிப்பு கருவியில் சுத்திகரிக்கப் பட்ட நீரின் தன்மையை காணலாம்.

Monday, July 21, 2008

தமிழ் இசைப் பிரியர்களுக்காக....

ஒரு சிறிய இசைத் திரட்டு உருவாக்கலாமே என்று தோன்றியது. ஞானிகளின் மொழிக்கு மந்திர சக்தியுண்டு என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆகவே அது நம் தமிழ் ஞானிகளின் மொழி வழியால் வந்த பாடல்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் பட்டது.

இரண்டு தேவாரப் பாடல்களும்,கந்தர் அலங்காரத்திலிருந்து 'நாளென் செயும்' என்ற பாடலும் சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் குரலில். அவர் பாடுவதில் தமிழும் பக்தியும், பூவும் மணமுமாகக், கமழும். தெள்ளிய உச்சரிப்பும் பாவனையும் மனதை உருக்கும். தமிழ் பண் இசையை முறையாகப் பயின்றவர் என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். எந்த நாட்டில் எந்த நேரத்தில் கேட்டாலும் மனம் உடனே தமிழ் நாட்டிற்கு பயணித்துவிடும்.

அபிராமி பதிகத்திலிருந்து ‘கலையாத கல்வியும்' பாடலை பாடியிருப்பவர் ராஜ்குமார் பாரதி. இவருடைய பாணியிலும் ஒரு அலாதி ஈர்ப்பு எனக்கு உண்டு. பாடலைக் கேட்ட பின்பு உங்களுக்கே புரியும் ஏன் அப்படி சொன்னேன் என்று.

சஞ்சய் சுப்பிரமணியின் குரலில் ’மானாடா மழுவாட’ என்ற விருத்தம். நடராஜர் பத்து என்ற தொகுப்பிலிருந்து ஒரு பாடல். எழுதியவர் சிறுமணவூர் முனுசாமி.
விருத்தம் பாடுவதும் ஒரு கலை. ஒரு சிலரால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். சஞ்சய் மிகமிக சிறப்பாகவே பாடியிருக்கிறார். கேட்டு அனுபவியுங்கள்.

திருப்புகழைப் பாடப் பாட வாய்மணக்கும். மும்பை சகோதரிகளின் குரலில் ஏவினை நேர்வழி என்ற திருப்புகழைக் கேட்டும் பாடியும் மகிழுங்கள். கூடவே பாடிப் பார்ப்பதற்கு வசதியாக திருப்புகழை எழுத்து வடிவிலும் கீழே தருகிறேன்.

தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் குரலிலும் இதேப் பாடலை இணையத்தில் ஓதுவார் டாட் காம்-மில் கேட்டு மகிழலாம். அங்கே அவரது குரல் மட்டும் அல்லாது பல ஓதுவார்களின் குரலில் தமிழிசைக் கேட்கலாம், தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை---- நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை....அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை----யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது .....மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ...குறமாதை
நாடிய கானிடை கூடிய சேவக
நாயக மாமயி....லுடையோனே
தேவிம நோமணி ஆயிரப ராபரை
தேன்மொழி யாள்தரு...சிறியோனே
சேணுயர் சோலையி நீழலி லே திகழ்
சீரலை வாய்வரு ...பெருமாளே

இனி இந்த இசைத் திரட்டை எப்போதும் கற்கை நன்றே மற்றும் சித்திரமும் கைப்பழக்கம் வலைப்பூக்களின் பக்கப் பட்டையி(side bar) லிருந்து கேட்டு மகிழலாம்.

Tuesday, June 24, 2008

இடம் பெயரும் ஆயிரம் வருட கோவில்

பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படிக்கும் பொழுது பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை நினைவு படுத்தியது ஒரு சமீபத்திய கோவில் விஜயம். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை கட்டப்படும் பொழுது எகிப்து நாட்டின் 2000 வருட புராதனமான கோவில் நீரில் மூழ்கியது. பின்னர் அதை யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் அருகில் உள்ள மற்றொரு தீவுக்கு அப்படியே புனர் நிர்மாணம் செய்தனர்.

அது போல இப்பொழுது நம் நாட்டிலும் ஒரு ஆயிரம் வருட கோவில் புனர் நிர்மாணம் பெற்று வருகிறது.


கிருஷ்ணராஜ சாகரம் எனப்படும் கே.ஆர்.எஸ் அணை 1920-ல் கட்டப்பட்டப் பொழுது ஹொய்சளர் காலத்திய (1100 AD ) வேணு கோபாலசுவாமி கோவில் ஒன்று கண்ணம்பாடி ஊரில் நீரில் மூழ்கியது. அணைக்கு நீர் விடுவதற்கு முன் ஆராதனைக்குட்பட்டிருந்த சில விக்கிரகங்களை மட்டுமே அருகில் சிறிய கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து மீதமுள்ள கட்டிடங்களை கைவிட்டனர்.

மொத்தம் 32 கிராமங்கள் அச்சமயம் நீர் தேக்கத்தில் மூழ்கின. அணையின் உயரம் 125 அடிகள். எப்பொழுதெல்லாம் எண்பது அடிக்கும் குறைவாக நீர் மட்டம் குன்றுமோ அப்பொழுதெல்லாம் அந்த கோவிலின் மேற்புரப் பகுதிகள் பார்வைக்கு தென்பட்டது. பலரும் பரிசலில் சென்று கோவிலை சுற்றிப் பார்பது வழக்கமாக இருந்தது.

1957 லும் 1982 லும் நீர்மட்டம் 60 அடிக்கு குறைந்து முழுக் கோவிலும் பார்வைக்கு வந்தது. அப்பொழுதே பலர் கோவிலை இடம்பெயர்தல் பற்றிய பிரஸ்தாபம் செய்தனர். ஆனால் முடிவெடுக்கும் முன்பே காவிரியில் நீர் வரவு அதிகரித்ததால் எதுவும் செய்ய இயலவில்லை. 2001 ல் மீண்டும் வாய்ப்பு வந்தது.

இம்முறை ஹரி கோடே (Khoday distilleries) என்ற தொழிலதிபரின் ஆர்வத்தால் மொத்த கோவிலும் இடம் பெயர்க்கப்பட்டு அருகிலேயே சற்று மேட்டுபாங்கான இடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.


இதற்கான கோவிலின் பிரத்யேக கட்டுமான வரைபடங்களை இடிபாடுகளுக்கிடையே தயார் செய்யப்பட்டு புனர் நிர்மாணப்பணி சுற்றியிருக்கும் வண்டல் சகதியின் ஊடே துவங்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் துவங்கிவிட்டால் நீர் மட்டம் அதிகரிக்கத் துவங்கிவிடும். எனவே இரவு பகலாக நூற்றுக் கணக்கானோர் கிராமத்தினர் உட்பட சேர்ந்து வேலை செய்தனர்.


ஏப்ரல் மே இரண்டே மாதங்களுக்குள் அங்கம் அங்கமாக வரைபட உதவியுடன் குறியிடப்பட்டு மேட்டு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் குறியீட்டின்படி சேகரிக்கப்பட்டு, வகைப் படுத்தப்பட்ட கட்டிட பகுதிகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.


கொடிமரம் (த்வஜஸ்தம்பம்) மட்டும் முழுக்க புதிதாக செய்யப்பட்டது. இதற்கெனவும், பிற சேதமடைந்திருந்த பகுதிகளை புதிதாக செய்யவும் தமிழ் நாட்டு சிற்பவல்லுனர்கள் உதவி பெறப்பட்டதாக தெரிகிறது.


சற்று ஏறக்குறைய 70 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையிலேயே அற்புதமாக காட்சியளிக்கும் இக்கட்டிடம் முடிக்கப்பட்ட பின்னர் மைசூரில் முக்கியமான சுற்றுலாத் தலமாகி விடும்.

இந்த கோவிலை காண்பதற்கு கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் வடக்கு திசையில் கண்ணம்பாடி கிராமத்தினுள் புகுந்து செல்ல வேண்டும். புதிதாகக் கட்டப்பட்டு வரும் கோவிலில் மீண்டும் பழைய ஆராதனைக்குரிய விக்கிரகங்களே வருமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

கொடிமரத்தில் காணப்படும் முருகனும் நந்தியும் இதை சிவ ஆலயமாக குறிப்பனவாக இருக்கின்றன.

மூல விக்கிரகங்களான வேணுகோபாலரும் பூவராகனும், தனியார் மேற்பார்வையில் கட்டப்பெறும் ஆலயத்திற்கு தரப்பட மாட்டாது என்று சிலர் சொல்வதை இது உறுதி படுத்துவது போல் உள்ளது.

ஏனெனில் வேணுகோபால சுவாமியை பூசிக்கும் கோவில் கொடிமரத்தில் நந்திக்கும் முருகனுக்கும் இடம் ஏது?

தனியனாய் நிற்கும் இத்தூண் பழைய கொடிமரத்தின் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதில் அன்னப் பறவை காணப்படுகிறது.

இங்கே இடம் பெயர்ந்த வேணு கோபாலருக்கு புதிய மாளிகை வாசம் கிடையாது போலும் ! அவர் இந்த சின்ன கோவிலிலேயே இருந்து அருள் பாலிக்க வேண்டும் என்பது கூட அவருடைய சொந்த இச்சையோ !!

(நன்றி : 2001 மூலக் கோவில் படங்கள் உதவி, திரு கணபதி, KRS )

Wednesday, June 18, 2008

கோ வாடீஸ் : Quovadis
ஒருத்தன் ரைட்டுக்கு போன்னு சொல்றான்.

இன்னொருத்தன் லெஃப்ட்ங்குறான்.

இன்னும் ரெண்டு கை கீழே கீழே ன்னு காட்டுது.

'என்' னை காப்பாத்துங்களே ங்குது இன்னொரு கை.இது என்னவோ உருப்படறதுக்கு வழி மாதிரி தெரியலேயே.
அட இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் அப்படீன்னு கேக்கறீங்களா?

நீங்கதான் சொல்லணும். :))(க்ளூ: உங்க கணிணில windings-2 ங்கற எழுத்துரு (font) இருந்தா அதை தேர்வு செய்து MS WORD ல் போட்டு பாருங்க)

Sunday, May 25, 2008

தூசி மூடிய வைரங்கள்

”எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய குணமிருக்கு” என்பது ஒரு திரைப்படப் பாடலின் முதல் வரி. இரண்டாவது வரி நினைவிருக்கா ?

சமீபத்தில் படித்த ஒரு உண்மை நிகழ்ச்சி எனக்கு அந்த இரண்டாவது வரியை நினைவூட்டியது. நிகழ்ச்சியைச் சொன்னவர் யாரென்பதை நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள். எனினும் கட்டுரையின் கடைசியில் விவரத்தை தந்து விடுகிறேன். இப்போது அந்த உண்மை நிகழ்ச்சி, சொன்னவருடைய மொழியில்.
_____________________________________________________

பெங்களுர் குடிசைப் பகுதி குழந்தைகளுக்கென தேவைப்பட்ட பாட புத்தகங்களை ஷேக் முகமதுவின் கடையில்தான் வாங்குவது வழக்கம். அவருடையது மிகச் சிறிய கடை. எங்கள் அலுவலகத்தின் அருகிலேயே இருந்தது. அவர் மொத்ததில் கொடுத்த புத்தகங்களுக்கான காசோலை தயாரானதும் அவருக்கு விவரம் தெரிவிப்போம். அவர் வந்து வாங்கிச் செல்வார். அதுவே அவருடன் எனக்கிருந்த தொடர்பு.

ஒருமுறை அவ்ர் காசோலை வாங்கிச்செல்ல வந்த போது அலுவலகத்தில் ஒரு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த்தது. எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அவருடையதை அவர் பையில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

“என்ன ஷேக் ! நீங்க சாப்பிடமாட்டீங்களா? சர்க்கரை தொந்தரவா?” என்று கேட்டேன்.
ஷேக் சொன்ன பதில் சற்றே மகிழ்ச்சிக்குரிய ஆச்சரியமாயிருந்தது.

”இல்லை மேடம், வீட்டில் குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும்”.
ஷேக் மிகவும் கூச்ச சுபாவம் உடையவராதலால் அவரைப் பற்றிய குடும்ப விவரங்கள் எனக்கு எதுவும் தெரியாதிருந்தது.
“உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்”
“எனக்கு ஒரு மகள். அப்புறம் என் தங்கையின் மகள். ஆக இரண்டு குழந்தைகள்”
“தங்கையின் பெண் ஏன் உங்களோடு இருக்கிறாள்?”
“தங்கை சுபைதா கணவனை இழந்த பின் இருவரும் என்னோடு தான் இருக்கிறார்கள்”
அவ்வளவு சிறிய கடை வைத்திருக்கும் ஷேக்கிற்கு இது உண்மையிலே பெரிய பொறுப்புதான். சமாளிப்பது கடினம் என்று தோன்றியது.


“சுபைதா ஏதாவது வேலை பார்க்கிறாளா ?” என்று கேட்டேன்.


“ ஓ தையல் வேலை நன்றாகத் தெரியும். அவளும் என் மனைவியுமாக வீட்டிலிருந்தே துணி தைத்துக் கொடுத்து சம்பாதிக்கிறார்கள். கூடவே கடையிலிருந்து என் வருமானம். எல்லாம் சேர்ந்து நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கிறது. எங்களுக்கு போதுமானதாக உள்ளது.”

அவருடைய எளிமை என் மனதைத் தொட்டது. எத்தனைப் பேர் இன்றைய உலகில் போதும் என்ற மனதோடு வாழ்க்கை நடத்துகின்றனர். அதன் பிறகு பல மாதங்கள் சென்று விட்டன.


ஒருநாள் ஷேக் என்னிடம், 'வழக்கத்தை விட முன்னதாகவே காசோலை தர முடியுமா' என்று தொலைப் பேசியில் வேண்டுகோள் விடுத்தார். ”என்ன ஷேக் ? ஏதும் அவசர தேவையா?” என வினவினேன்.

“ஆமாம் மேடம். சுபைதாவுக்கு புற்றுநோய் என்று தெரிய வந்தது. அதற்கான அறுவை சிகிச்சை நாளை ஏற்பாடு ஆகியிருக்கிறது. அதனால்தான் பணத்திற்கு சற்று அவசரம்.” காசோலையை அன்றே வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறினேன். அவருடைய நிலைக்கு இத்தகைய அறுவை சிகிச்சை செலவுகள் மிகவும் அதிகப்படியாகத்தான் இருக்கும். இருந்தும் அவர் தனக்கு சேர வேண்டிய தொகையை மட்டுமே கேட்டுக்கொண்டார்.

இன்ஃபோஸிஸ் பவுண்டேஷன் துவங்கியதிலிருந்து நான் பலவித மனிதர்களை சந்தித்திருக்கிறேன். வைரக்கம்மல்களை கைப்பையில் வைத்துக்கொண்டு ஏழைகள் உதவிக்கென பணம் திரட்டுபவர்கள், வசதியிருந்தும் குழந்தைகள் படிப்பிற்கென உதவி தொகை வேண்டி விண்ணப்பிபவர்கள், பெற்ற தந்தையையே அனாதை என்று முதியோர் விடுதியில் சேர்க்க உதவி கோருபவர்கள் இப்படி பலப்பல.

நான் ஷேக்குடன் மீண்டும் பேசினேன். “ஷேக், உங்களுக்கு அறுவை சிகிச்சைக்கான பணம் முழுவதும் ஏற்பாடு ஆகிவிட்டதா ?”

”சுபைதா மற்றும் என் மனைவியின் நகைகளை விற்றுவிட்டேன். சிறிது வங்கி மூலமும் கடன் கிடைத்துள்ளது”


“ஷேக் ! எங்களிடம் கேட்டிருக்கலாமே?”


“ மேடம், ஏதோ இந்த சக்தியாவது எங்களுக்கு இருக்கிறது. என்னளவுக்குக் கூட வசதியில்லாதவர்களுக்கு உங்கள் உதவி சேர வேண்டியதுதான் முறை என்று நினைக்கிறேன்”

அவரது பதில் என் உள்ளத்தைத் தொட்டது அடுத்த நாளே காலையில் சிகிச்சைக்கான பத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்து வரச் சொன்னேன். காலையில் முதல் வேலையாக அவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய்களுக்கான காசோலை ஏற்பாடு செய்தேன். அதை மிகுந்த தயக்கத்துடன் பெற்றுக்கொண்ட ஷேக், “ இது மிகவும் பெரிய தொகை....... நான் எதிர்பாராத உதவி. நீங்கள் ஆசீர்வாதிக்கப் படுவீர்களாக” என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டார்.

சிலதினங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடை பெற்றதாக ஷேக்கிடமிருந்து தகவல் வந்தது. அதன் பிறகு வெகு நாட்களுக்கு வேறெதுவும் தகவல் இருக்கவில்லை.

ஒருநாள் அலுவலகத்தில் நுழையும் போது வரவேற்பு நாற்காலியில் நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியுடன் ஷேக் எனக்காக காத்திருப்பதைக் கண்டேன். அச்சிறுமி தலைக்கு எண்ணெய் தடவி சீவி 'போனி டெயில்' கட்டப்பட்டு எளிமையான பருத்தி ஆடையில் காட்சியளித்தாள்.


“எப்படி இருக்கீங்க ஷேக் ? சுபைதா எப்படி இருக்காங்க” என்று விசாரித்தேன் நான். ஷேக்கின் முகம் களையிழந்தது. “ எவ்வளவோ வைத்தியம் பாத்தும் உங்க உதவிக்கப்பறமும், சுபைதா பிழைக்கவில்லை. சுமார் பதினைந்து நாள் முன்பு தான் தவறி விட்டாள். அது அல்லாவுடைய விருப்பம். இது அவளுடைய மகள் தபஸ்ஸும்” என்று அந்த சிறுமியை அறிமுகம் செய்தார் ஷேக்.

நான் தபஸ்ஸும் பக்கம் பார்த்தேன். அவளிடம் ஒரு மிரட்சி தெரிந்தது. தனக்கு பழக்கமில்லா ஒரு சூழ்நிலையில் பலரும் வருவதும் போவதுமாக இருந்த அலுவலகம் சற்றே விநோதமாயிருந்திருக்க வேண்டும். அவளுடைய தயக்கத்தைப் போக்க பிஸ்க்கோத்து தட்டை நீட்டினேன்.

ஒன்றை எடுத்துக்கொண்டாள். பின்னர் கூச்சத்துடன் “இன்னொண்ணு எடுத்துக்கலாமா? அமீனாவுக்கு? “ என்று கேட்டாள். “கண்டிப்பா கொண்டுபோ “ என்று புன்னகையுடன் சொன்னேன்.
அமீனா ஷேக் முகமதுவின் மகள்.

“பேடி அம்மீ நே போலா தா நா? இன்கோ கோ ஸலாம் கரோ” என்றார் அவளுடைய மாமா.
(குழந்தெ ! அம்மா சொல்லியிருந்தாங்க இல்லெ இவங்களுக்கு வணக்கம் சொல்லு ) பிஸ்கத்துகளை வைத்து விட்டு மிக தெளிவான உச்சரிப்பில் “மேடம் ! அம்மீ கா ஸலாம்” என்று கூறினாள் (”மேடம் என் அம்மாவுடைய வணக்கங்கள்” ).

எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. ஷேக் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டார். தன்னிடமிருந்த பையிலிருந்து ஒரு உறையை எடுத்து “மன்னிக்க வேண்டும். இதை சேர்ப்பிப்பதில் சற்று தாமதமாகி விட்டது” என்று சொல்லிக் கொண்டே கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். அதில் மூவாயிரம் ரூபாய்கள் இருந்தது. ஒன்றும் புரியாமல் ஷேக்கைப் பார்த்தேன்.


“ நீங்கள் கொடுத்த ஐம்பதினாயிரத்தில் நாற்பத்தியேழாயிரம் சுபைதாவின் அறுவை சிகைச்சைக்காக செலவானது. வீடு திரும்பியதுமே அவளுக்கு புரிந்து விட்டது தான் பிழைக்கப் போவதில்லை என்பது. மேலும் அந்த பணத்தை தன் வைத்தியத்திற்கு செலவு செய்வது வீண் என்று நினைத்து மீதி பணத்தை தங்களிடம் திருப்பிக் கொடுத்துவிட விருப்பப்பட்டாள். வேறு யாராவது ஏழையின் வைத்திய செலவுக்கு பயன்படட்டும் என்று மேடத்திடம் தெரிவித்து விடு என்று கூறினாள். உங்களை நேரில் சந்தித்து தன் மரியாதையை செலுத்த விருப்பப் பட்டிருந்தாள். ஆனால் அல்லாவின் விருப்பம் வேறாக இருந்தது. அவள் இறுதி விருப்பத்தை பூர்த்தி செய்வதாக வாக்களித்தேன்”.

நான் வாயடைத்து அமர்ந்திருந்தேன். சுபைதாவை நான் சந்தித்தது கிடையாது. மரணத்தின் தருவாயிலும் அவள் காட்டிய பெருந்தன்மை என்னிடமிருந்து பேசும் சக்தியை பறித்துக் கொண்டுவிட்டது.

தனது வறுமை மற்றும் நோயின் துயரத்தையும் மீறி அதைவிட அதிக அவசியமுள்ளவர்களின் நிலை குறித்து கவலைப்படும் அந்த விசால இதயம் படைத்தவளின் மேன்மையை என்ன சொல்வது. என்னை நேரில் சந்திக்க விருப்பம் இருந்தது. அது முடியாது என்று புரிந்ததும் தன் மகளை அனுப்பி வைத்திருக்கிறாள். அதன் மூலம் தன் சிறப்பான பண்பை தபஸ்ஸும் பெறுவதற்கு வழி வகுத்தாள். தபஸ்ஸும் அப்படியே சிறப்பான பண்புகளுடன் வளருவாள் என்பதில் சந்தேகம் கிடையாது.
( ”அந்த இரண்டாவது வரி : எத்தனை சிறிய பறவைக்கு எத்தனைப் பெரிய அறிவிருக்கு” . TMS பாடியது. ஏழைகளே ஆனாலும் தந்நலமில்லா வாழ்வு வாழ முடியும் என்பதற்கு சுபைதாவும், ஷேக் முகமதுவும் சான்று )

பணமிருந்த உறையைப் பார்த்தேன். “இது தபஸ்ஸுவின் எதிர்காலத்திற்காக. அல்லா அவளுக்கு நல்லதே செய்வார். நன்றாகப் படிக்கட்டும். அவள் படிப்பிற்காக இன்னும் தேவைப்பட்டால் தெரிவியுங்கள். ஆனால் அவளுடைய தாயின் பெருங்குணத்தையும் அவளுக்கு நினைவூட்டிக் கொண்டிருங்கள். ஏனெனில் இந்த பூமியில் நிறைய சுபைதாக்கள் தேவை”. தன் விரிந்த விழிகளில் ஏதும் புரியாதவளாக தபஸ்ஸும் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஒரு நாள் தன் தாயாருடைய பெருங்குணத்தை அவளும் புரிந்து கொள்வாள் என்பதில் ஐயமில்லை.

ஆங்கில மூலம்:
நமஸ்தே -ஸலாம், பக்கம் 101, Wise & Otherwise, Sudha Murthy, Penguin Books 2006
ISBN 0-14-304222

________________________________________________________________


சுதா மூர்த்தி கணிணி துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆசிரியர். ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் நாவல்கள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள் என்று தொடர்ந்து எழுதும் எழுத்தாளர். அவருடைய புத்தகங்கள் 150000 பிரதிகளுகும் மேலாக விற்பனை ஆகியுள்ளன, பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன,
இன்போஸிஸ் தொண்டு நிறுவனத்தின் தலைவர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டில் மிக்க அக்கறை கொண்டவர்.


இலக்கியத் தேன்

Join List Next

alt-webring.com

Saturday, May 17, 2008

சர்வர் சுந்தரமும் சினா-சோனா வும்

ஓடியோடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

அப்படிங்கற சினிமா பாட்டு கேக்கறதுக்கு ரொம்ப நல்லாத்தான் இருக்கு. முதல் வரி சரிதான். எல்லோரும் ஆலா பறந்து நாலு காசு சேர்க்கறதுக்கு ரொம்பதான் கஷ்டப் படுறோம்.

ஆனால் அடுத்த வரி... அதுதாங்க அந்தகாலத்துலேந்து இடிக்குது.
சரி சம்பாதிச்சா சந்தோஷமா செலவாவது பண்ணத் தெரியுதா? அதுவும் கிடையாது.

பணத்தை சம்பாதிக்கிறதுக்கும் அதுக்கப்புறம் உள்ள கஷ்டத்தையும் இந்த பழைய தமிழ் பாட்டுல சொல்றத பாருங்க :

ஈட்டலும் துன்பம், ஈட்டிய ஒண் பொருளைக்
காத்தலும் ஆங்கே கடும் துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம், கெடில் துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள். (நாலடியார் -280)

செல்வத்தைச் சம்பாதித்தல் ஒருவகை துன்பம்.
தேடிச் சேர்த்த அப்பொருளை காப்பாற்றுவதும் துன்பம்.
காத்த அச்செல்வம் குறைந்தால் துன்பம்
காணாமல் போய்விட்டாலோ துன்பமே
இப்படி எல்லாவிதத்திலும் துன்பத்துக்கே உறைவிடம் ஆகும் (நாம் ஈட்டும்) செல்வம்


இதையே சினா-சோனாவும் நச்சுன்னு சொல்லியிருக்காரு பாருங்க."Riches are Gotten with Pain, Kept with Care and lost with Grief"

சர்வர் சுந்தரம் படத்துல நாகேஷ் நல்லா சாப்பாட்டுட்டு, காசில்லாம ஓட்டல் முதலாளி சுந்தரராஜன் முன்னாடி நின்னு சர்ட் பாக்கெட்-ல இருக்கிற ஓட்டையில விரல விட்டு ஆட்டி காட்டுவாறே !! அந்த சீன் ஞாபகத்துக்கு வருது இல்ல !

படத்துக்கு மேலே இருக்கிற “சிந்திக்க ஒரு நொடி” சமாச்சாரத்துல, ஹென்றி டெய்லர், ஒரு நெஜத்தை எவ்வளவு நக்கலா சொல்யிருக்காரு பாருங்க :))

Saturday, April 26, 2008

ஒரு ஜோடி நாற்காலியின் கதை

( வ. வா. ச ரெண்டாவது வருட போட்டிக்கு)


உலகத்திலேயே............
வேணாம், இந்தியாவிலேயே.......
அதுவும் ஒத்துக்க மாட்டீங்களா
சரி, சென்னையிலேயே
ரொம்ப அதிகமான போட்டோ பிடிச்சு இருக்கிறது என்னையத் தாங்க.
ரெண்டு லட்சத்துக்கும் மேலே. எப்படீங்க்றீங்களா கதைய கேளுங்க.

எனக்கு வயசு எழுபதுக்கு மேல. முதலாளி அய்யா வெங்டேச ரெட்டி பர்மா தேக்குல ஸ்பெஷலா சொல்லி நாலு ஆளுங்க ராப்பகலா வேலை பார்த்து ஒருமாசத்தில எனக்கு ஒரு உரு கொடுத்தாங்க. அப்பயிலேர்ந்தே என் பேரு ஜோடி நாற்காலி தாங்க. இப்போ எல்லாம் டபுள் சோபா அப்படீங்கறாங்களே, அப்பிடி.

வீட்டுல என்ன விசேஷமானாலும் அய்யாவயும் அம்மாவையும் ஜோடியா தாங்கறதுக்கு அடியேன்தான். அவரு நவராத்திரி, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி அப்படீன்னு வருசம் முழுக்க எதினாச்சும் விழா நடத்தி கிட்டே இருப்பாரு. பட்டணத்துல இருக்கிற பெரிய புள்ளிங்களெல்லாம் ஆஜர். எதுவானாலும் எட்டுநாள் பத்து நாள் நடக்கும். வர்றவங்களுக்கெல்லாம் டிபன் சாப்பாடு. வீடு ஜே ஜே ன்னு இருக்கும். அந்த வீட்டுல நான் தான் சிம்மாஸனம்.

என்னெயெ பாத்துட்டு “இது மாதிரி ஒரு வேலைப்பாடு எங்கேயும் பார்த்தே இல்லை. இதை எனக்கு குடுத்துடுன்னு” பலான பலான பேர்வழிகளெல்லாம் வந்து கேட்டுப் பார்த்துட்டாங்க. அய்யா மாத்திரம் ஒத்துக்கவே மாட்டாரு. அப்படி ஒரு பாசம் எம்மேலே. ரொம்ப ராசியான நாற்காலி அப்படீனு பேரு எல்லாம் வந்துச்சு.

நான் வந்து இருபது வருசத்திலெ அம்மாவுக்கு உடம்பு ரொம்ப முடியாம போச்சு. அப்ப வீட்ல வேலை செஞ்சுக்கிட்டிருந்த ஒரு ஏழைப் பொண்ணுக்கு கலியாணம் செஞ்சு வைங்கன்னு சொல்லி செத்து போயிட்டாங்க.

அய்யா பாத்தாரு. அம்மா பேருல ஒரு கலியாண மண்டபமே கட்டிட்டாரு. அலமேலு ரெட்டப்ப கலியாண சத்திரம் கட்டின காலத்தில ரொம்ப ஃபேமஸ்.

அம்மா போனப்புறம் என் மேல வந்து உக்கார்றதுக்கு அவருக்கு என்னமோ போலருந்திச்சு.'இந்த ராசியான நாற்காலி புதுசா கலியாணம் கட்டிக்க போற புள்ளைங்களுக்கும் ராசியா இருக்கட்டும்' அப்படீங்கற நல்ல மனசோட என்னை கொண்டு போய் கலியாண சத்திரத்தில வச்சுட்டாங்க.

இங்கே வந்தப்புறம் பழைய கல கலப்பு இல்லீங்க. வருசத்திலே முப்பது நாப்பது முகூர்த்தம் தேறும் அப்போ ரெண்டு நாளைக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கும். சின்ன ஜோடிங்க சந்தோசமா இருக்கிறத பாக்கிறதுக்கே உத்சாகமா இருக்கும்.

ரிசப்ஷனுக்கு முன்னாடி நம்மளை வெளிய கொண்டு வந்து வச்சதுமே சின்ன புள்ளைங்களெல்லாம் என் மேலே ஏறி வெளயாட ஆரம்பிச்சுடும். அந்த வாச்சுமேன் சின்னையா இருக்கானே (அவன் தாங்க என்கதையில வில்லன்) அவன் வந்து கொளந்தங்களையெல்லாம் வெரட்டுவான். பெரிய அய்யா
இருக்கும்போது கொளந்தைங்க அந்த மாதிரி வெளையாடினா ஆசையோட பார்ப்பாரு. கூடவே அவரும் வெளையாடுவாரு.

ஹும் பெரிய அய்யா போனப்புறம், இந்த நாப்பது வருசத்தில எவ்ளவோ மாறிடிச்சு. அவுங்க புள்ளைங்களெல்லாம் வேற வேற பிஸினஸ்க்கு போயிட்டாங்க. பெரிய மருமக(ள்) மாத்திரம் கொஞ்சம் சத்திரம் விஷயமா வந்து கவனிச்சுக்குவாங்க.

பெரிய அய்யா காலத்திலேந்து போட்டோன்னா எனக்கு ரொம்ப பிரியமுங்க. எல்லா விழாவிலேயும் அய்யா போட்டோகிராபருக்கு சொல்லிடுவாரு. கறுப்பு வெள்ளை போயி, கலர் வந்து அப்புறம் வீடீயோ வந்திடுச்சு. வீடீயோ என்னங்க வீடீயோ. அந்த காலத்துலே காந்தராவ் சினிமாவுல கூட நெறைய வந்திருக்கேனாக்கும். அப்பப்ப ஷூட்டிங்கு கொண்டு போய் திரும்ப கொண்டு வந்திடுவாங்க. இதுவரைக்கும் என்னைய ரெண்டு லட்சத்துக்கும் மேல போட்டோ எடுத்திருங்காங்களாம் !!

என்னோட வாழ்க்கையில ஒரே ஒரு பெரிய குறைதானுங்க. எங்க வீட்டு ஒரு கலியாணத்தில எனக்கு எடமில்லாம போனதுதாங்க அது.

என்னாச்சுன்னா பெரிய பையனுக்கு ரெட்டைப் பொண்ணுங்க. அது ரெண்டும் கலியாண வயசு வந்ததும் இன்னொரு ரெட்டையா பொறந்த பையங்கள பார்த்து நிச்சயம் பண்ணினாங்க. ரெண்டாம் தலைமுறையில முதல் கலியாணம்.

ரிசப்ஷன் ல ரெண்டு ஜோடியும் ஒண்ணா நிக்கணுமே. “இதுக்கு செட்டா இன்னொரு ஜோடி நாற்காலி இருக்கான்னு” என்னைய காமிச்சு பிள்ளை வீட்டுக்காரங்க கேட்டாங்க. மானேஜர் சொன்னாரு “இது ரொம்ப பழசுங்க. இது மாதிரி எங்க தேடினாலும் கெடைக்காது.” “அப்ப இதை உள்ளேயே வச்சுட்டு ஒரே மாதிரி இருக்கிற ரெண்டு ஜோடி சோபா ஏற்பாடு பண்ணுங்க” ன்னு பிள்ளை வீட்டுகாரங்க சொல்லிட்டாங்க :((

நம்ம வூட்டு கலியாணத்துல என் மேலே ஆசையா குதிச்சு வெளையாண்ட நம்ம குழந்தைகளோட கலியாண போட்டோல நான் இல்லை.

அன்னிக்கு பெரிய அய்யாவையும் அம்மாவையும் நெனச்சு அழுதேன் பாருங்க அந்த மாதிரி என்னிக்குமே வருத்தப்பட்டதில்லே.

ரெண்டு லட்சத்துக்கும் மேலே போட்டோல விழுந்து என்ன புண்ணியம். நம்ம பேரக் குழந்தைங்க கலியாணத்துல இல்லாம போயிட்டேனே அப்படீன்னு ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு.

ஜோடி கிடைக்காம தனியா நிக்கிற 'ஜோடி நாற்காலி' நான்.

அதுவே ஏதோ ஒரு கெட்ட சகுனமா தோணிச்சு.

இது நடந்து ரெண்டு மாசம் கூட இல்லீங்க,இந்த வாச்சுமேன் சின்னையாவால வந்தது வெனை.

அவன் சத்திரத்துல யாரும் இல்லாத போது வந்து என் மேல உக்காந்துக்குவான். பெரிய ராசா மாதிரி, சிவாஜி மாதிரி, சூப்பர் ஸ்டார் மாதிரி எல்லாம் ஆக்ட் குடுப்பான். அப்படி ஒரு நாள் குடிச்சுக்கிட்டிருந்த துண்டு பீடிய ரஜ்னி மாதிரி தூக்கிப் போட்டு ஆக்ட் குடுத்தானா, அந்த பாளாப் போனப் பீடி எம்மேல இருந்த மெத்தை சந்துக்குள்ள விழுந்திடுச்சு. அவன் தேடறான் தேடறான் கீழ எங்கேயோ தேடிக்கிட்டே இருக்கான்.

பாவி பொகையுதுடா இங்க பாரு-ன்னு கத்துரேன், காதுல விழுந்தாதானே. கொஞ்சம் பொகை ஜாஸ்தியானப்புறம் தான் அவனுக்கு புரிஞ்சது தன்னோட தப்பு. அதுக்குள்ள பாதி மெத்தை கருகி போயி பார்க்கிறதுக்கே விகாரமா போச்சு. அம்மா கிட்ட மானேஜரும் அவனுமா ஏதோ பொய்யைச் சொல்லி தப்பை மூடிட்டாங்க.

ரெண்டு வாரத்துக்கு முந்தி அம்மா வந்தபோது ஏன் சத்திரத்த சுத்தமா வச்சுக்க கூடாதா அப்டீன்னு ஒரு வெரட்டு வெரட்டினாங்க. மேனசர் சொல்றாரு “அம்மா ரொம்ப வருசமாச்சு வெள்ளையடிச்சு. வெள்ளை அடிச்சா பாக்கிறதுக்கு நல்லா இருக்கும்.”

“அதுக்கு ஏது காசு ?” அப்படீன்னு பெரிய மருமக கணக்கு போட்டாங்க.

மேனஜர் சொன்னாரு “எரிஞ்சு போன அந்த பழைய ஜோடி நாற்காலி இருக்குதுங்களே அது அத்தனையும் பர்மா தேக்கு. தேக்கு மரம் மட்டுமே அம்பதாயிரத்துக்கு மேலே போவும். வேலைப்பாடு செஞ்சதுங்கறதுனால எப்படியும் ஒரு லட்சத்துக்கு கேட்டு பாக்கலாம். இப்ப எல்லாம் யாருங்க அதை யூஸ் பண்றாங்க. பழைய மாடல். வித்து வர்ற காசு வச்சு முடிச்சுடலாம்”.

எனக்குத் தானே தெரியும் அவரு போடற கமிஷன் கணக்கு. பொம்பளைங்களுக்கு விவரம் பத்தாதுங்க.

மருமகளோட கண்ணு அகல விரிஞ்சுது. “அப்படியா, விசாரிச்சு சொல்லுங்கன்னு” சொல்லிட்டு போயிட்டாங்க.

யார் யாரோ எல்லாம் வந்து பார்த்துட்டு போறாங்க. ஏதோ பாம்பே பார்ட்டியாம். ஃபை ஸ்டார் ஹோட்டலுக்கு வேணுமாம். சீக்கிரமே முடிச்சுட பாக்குறாங்க.

சின்னையா சொல்றான் 'இதுக்கு வந்த வாழ்வ பாருடா. பாம்பேயாம்! ஃபைஸ்டார் ஹோட்டலாம்!”

“பொய் சொல்ற ரெண்டுபேரும் இங்கயே ஜோடியாவே இருந்து அழுங்கடா” அப்படீன்னு மனசுல திட்டிக்கிட்டேன். பெரிய அய்யா போனப்புறம் எனக்கு எந்த ஊரானா என்னங்க.

அப்போ பாம்பே -ல சந்திக்கலாமா? புள்ளகுட்டிங்களோட வந்திடுங்க. நெறைய போட்டோ எடுத்துக்கலாம்.

வரலாற்றிலே மிக அதிகமான போட்டோ யாருதுன்னு கேட்டா .........
இல்லையில்லை.. மிக அதிகமாக போட்டோ எடுக்கப்பட்ட ஜோடி நாற்காலி அப்படீன்னா .....

அது நானாதான் இருக்கணும்-னு ஆசை. அம்புட்டுதான்.