Thursday, July 31, 2008

'மின்னல் வேக' நியோ-வார்ப்புரு (Neo template)

கடந்த இரண்டு நாட்களாக ஒரு புது வார்ப்புரு நிரலை என்னுடைய ஆங்கில வலைப்பூவிற்காக தேடிக் கொண்டிருந்தேன். 'அன்னியலோகம்' ரமணியின் மிகப்
பிரபலமான நியோ வார்ப்புரு (Neo template) நினைவுக்கு வந்தது. அதை நிறுவிய போது கண்ட சில அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

இது ப்ளாகரின் புதிய வார்ப்புரு பயனர்களுக்கு பொருந்தும்.

விண்ணும் மண்ணும் என்று பெயர் சூடப்பட்ட என்னுடைய பரீட்சார்த்த வலப்பக்கத்தில் இந்த வார்ப்புருவின் செயல்பாட்டைக் காணலாம். இதற்கு கீழே உள்ள பகுதியை அந்த இணைப்பிலேயே சென்று படித்தால் சொல்லப்படும் விஷயங்களை நேரடியாகவே செய்து பார்க்கலாம். எதற்கும் ஒரு முறை இங்கே முழுவதுமாகப் படித்தபின் அங்கு செல்லவும்.

(அந்த வலைப்பக்கம் அடிக்கடி மாறுதலுகளுக்கு உட்படுமாதலால் முழு கட்டுரையும் கீழே தருகிறேன்.)

நியோவின் முக்கிய கவர்ச்சி அதன் ”மின்னல் வேகம்”.

(பெரிது படுத்திப் பார்க்கவும் )

வலைப்பக்கத்தின் 'பதிவு சட்டத்துள்' ளேயே ( Post Frame) பழைய பதிவுகளை உடனடியாகத் தெரிய Neo வகை செய்கிறது. ஒவ்வொரு முறையும் பதிவுகளின் பக்கங்கள் புதிதாக வலையேற்றம் செய்யப்படுவதில்லை. அதோடு பழைய பதிவினுடைய பின்னூட்டங்களும் சேர்ந்தே தெரிகிறது.

வார்ப்புருவை வலையேற்றிய பின் Lay out , Font & color முதலிய தெரிவுகளில் வேண்டிய வடிவத்திலும் வர்ணத்திலும் வடிவமைத்துக் கொள்ளலாம். எல்லா
பதிவுகளில் உள்ளது போலவே பல விட்ஜெட் இணைப்புகளும் கொடுக்க இயலும். எல்லாவற்றையும் விட மூன்று பத்திகள் கொண்ட வார்ப்புருவாகும். இதனால்
வலைப்பக்கத்தில் அதிக விஷயங்களை ஒரே பார்வையில் தர இயலும்.

ஆரம்பத்தில் ரமணி நிறுவியிருக்கும் இரண்டு Label மெனுக்கள் பெரும் குழப்பம் விளைவித்தது. நீலவர்ண பெட்டிக்குள் இருப்பது RECENT POSTS என்ற பெட்டியுடன் தொடர்பு உள்ளது. வெளியே தெரியும் இன்னொரு Label, பதிவுப் பெட்டியுடன் நேரடி தொடர்பு உள்ளது. நான்கைந்து 'மாதிரி' பதிவுகளை பதிந்து
பார்த்த பின்னரே இது புரியத் தொடங்கியது.

உதாரணத்திற்கு நீங்கள் spiritual என்ற Label ஐ நீலப் பெட்டியில் சொடுக்கினால் அது சம்பந்தமான பதிவுகள் அதன் மேலே உள்ள Recent Post பெட்டியில் தெரிகிறது. அதனோடு அதன் RSS ஓடையும் காட்டப்படுகிறது. அங்கே தெரிவு செய்யப்படும் பதிவு, பெரிய பதிவு பெட்டியில் பின்னூட்டங்களோடு உடனடியாகக் காட்டப்படுகிறது. இந்த முறையில் வலைப்பக்கம் மூடித் திறக்கப் படுவதில்லை (does not reload).

அதே 'spiritual' Label ஐ வெளியில் இருக்கும் இணைப்பிலிருந்து சுட்டினால் வலைப்பக்கம் மூடி, புதிதாக திறக்கப்படுகிறது அதற்குண்டான எல்லா பதிவுகளும் மொத்தமாக (ஒன்றன் கீழ் ஒன்றாக) பதிவுப் பெட்டியில் காட்டப்படுகிறது. இப்போது பின்னூட்டங்கள் காட்டப்படுவதில்லை. இது தான் முக்கிய வேறுபாடு.

எதற்காக இந்த ( இரண்டு Label) ஏற்பாடு என்பது புரியவில்லை. ஒன்றே போதும் என்று ஒன்றை நீக்கியபோது இன்னொன்று செயலிழந்து விட்டது. எனவே
நிரலியில் இரண்டுக்கும் பொதுவான ஒரு நிரலோட்டம் உள்ளது என்று புரிந்தது. மென்பொருள் வல்லுனர்கள் இதை விளக்க முடியும்.

இன்னும் ஒரு புதிய விஷயம் ( இதைப் பற்றி யாரும் குறிப்பிட்டதாக தெரியவில்லை) :
ஒரு முறை வலைப்பக்கம் திறந்தவுடன் இணையத்தின் இணைப்பைத்
துண்டித்து விடுங்கள். அதன் பின்னும் நீல நிறப் பெட்டிக்குள் இருக்கும் பதிவுகளின் தலைப்பை சொடுக்கினால் அதற்குரிய பக்கங்கள் பதிவுக்கானப் பெட்டியில் உடனே தெரியும். கிட்டத்தட்ட பத்து பதினைந்து பதிவுகளை இப்படியாக off-line ஆகப் படிக்க முடியும். ஆனால் படங்கள் மட்டும் தெரிவதில்லை

இம்மாதிரியான வசதி வேறு எந்த வார்ப்புருவை பயன் படுத்தினாலும் கிடைக்குமா என்பது சந்தேகமே !

IE மற்றும் Fire Fox உலாவிகளில் நியோ பொருத்திய வலைப்பக்கம் சற்றே வித்தியாசமாய்த் தெரிகிறது. ஃபையர் ஃபாக்ஸில் பெட்டிகளின் மூலைகள் அழகாக வளைந்து காணப்படுகிறது (rounded corners); அதுவே எக்ஸ்ப்ளோரலில் மூலைகளில் கட்டம் கட்டமாகத் தெரிகிறது. ஏனிந்த வித்தியாசம்?

நான் இதுவரை கண்ட வரையில் நியோ வார்ப்புரு மிகவும் பயனுள்ள ஒன்று. தமிழ் பதிவர்கள் இதை ஏன் பரவலாகப் பயன் படுத்த முன் வரவில்லை என்பது
புரியவில்லை. ஒருவேளை தமிழ்மணம் கருவிப் பட்டையை பொருத்துவதில் ஏதேனும் சிரமம் உண்டோ, அல்லது ஒரு வரவிலேயே பல பக்கங்களை படித்த விட முடியும் என்பதால் வாசகர் வருகை குறைவாகக் காட்டப்படும் என்ற எண்ணமோ தெரியாது. புதிய பதிவர்கள் அல்லது வெகு சில பதிவுகளே உடைய பதிவாளர்கள் சுலபமாக நியோ வார்ப்புருவுக்கு மாற்றிக் கொள்ளலாம். வெகுவான விட்ஜெட்கள் இருந்தால் மாற்ற முயல்வது சற்று தொந்தரவான விஷயம்தான்.

இடது பக்கத்தில் இருக்கும் பக்கப் பட்டைகளை வலது பக்கத்திற்கு மாற்ற வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்? அதை Layout-ல் மாற்ற முடியவில்லை.

ரமணி அவர்கள் இன்னும் பல உபயோகமான மென்பொருட்களை வlலைப் பதிவர்களுக்கென தன் வலைப் பக்கமான Hackosphere-ல் பதிந்து வருகிறார். கண்டு பயன் பெறலாம்.

நியோ செயல்பாட்டு முறைப் பக்கம் காண விண்ணும் மண்ணும் இணப்பைச் சுட்டவும்.

No comments: