Sunday, November 30, 2008

சொதப்பிட்டாங்கய்யா சொதப்பிட்டாங்க !

எதிரிகள் பாசறையில் ஒரு அவசரக்கூட்டம்.

”வெற்றி வெற்றி, கலக்கிட்டாங்கப்பா கலக்கிட்டாங்க” தொண்டர்கள் பெரும் சந்தோஷத்துடன், டைமஸ்- நௌ மற்றும் சி என் என், பார்த்தபடியே கைத்தட்டிக்கொண்டிருந்தனர்.

இந்திய அரசியலில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும் இறந்து போனவர்களின் இறுதி யாத்திரைகளும், பெரும் புள்ளிகள் வரிந்து கட்டிக்கொண்டு அரசாங்கத்தையும் போலீஸையும் “மை ஃபுட்” என்று திட்டித் தீர்ப்பதும் அளவில்லாத ஆனந்தத்தை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று சப்தமெல்லாம் அடங்கி யாவரும் நிமிர்ந்து அமர்ந்தனர். பாஸ் உள்ளே வந்து அமர்ந்தார்.

”கங்கிராசுலேஷன்ஸ் பாஸ். உங்க மாஸ்டர் மைண்ட் அப்படியே இந்தியாவையே கலக்கிடுச்சே” பாராட்டினார் ஒரு அடிவருடி.

பாஸ் முகத்தில் ஒரு சிறு அரைமனதான புன்முறுவல் மட்டும் பதிலாக வந்த்தது.

”என்ன பாஸ் ச்ந்தோஷமாயில்லையா ?”

”எப்படி ஓய் சந்தோஷமா இருக்க முடியும் ? சொதப்பிட்டாங்க, சொதப்பிட்டாங்க” வெறுப்புடன் பதில் சொன்னார் பாஸ்.

ஆஹா! ஏதோ எக்குத்தப்பாயிட்டிச்சு அப்படிங்கறது அடிவருடிகளுக்கு புரிந்தது. சரி பாஸ்-ஸே அடுத்து ஆரம்பிக்கட்டும் என்று மௌனம் காத்தனர் அடிவருடிகள்.

மொத்தம் எத்தனை பேரை அனுப்பினோம் ?

பதினைந்து

சொன்னதை செஞ்சாங்களா?

”கிட்டத்தட்ட செஞ்சிட்டாங்களே பாஸ். தாஜ் ஓட்டலும் ட்ரைடென்னும் இன்னும் ஒரு வருஷம் ஆகும் சரி செய்ய. கொறஞ்சது 100 கோடி நஷ்டம். 200 பேர் பப்ளிக்ல செத்திருக்காங்க. இதுக்கு மேலே பதினைஞ்சு பேர் என்ன செய்ய முடியும் பாஸ்?” சற்று கெஞ்சலான பதில் வந்தது.

”நாம ஒவ்வொருத்தனுக்கும் கொடுத்திருக்கிறது ஒரு கோடி. அது இல்லாம இவங்களுக்கு ட்ரெயினிங், பொய் தஸ்தாவேஜ், பிரான்சு, மொரிஷியஸ் செலவு, ஸாட் ஃபோன் செலவு இந்தியாவில இருக்கிற ஏஜெண்டுகளுக்கு காசு அப்படி இப்படின்னு செஞ்சிருக்கிறது இருபது கோடி. செலவழிச்ச காசுக்கு பலன் பத்தாதுன்னு சொல்றாங்கையா மேலிடத்துல.கொறஞ்சது ஒரு ஓட்டலையாவது தரைமட்டமாக்கியிருந்தா கொஞ்சம் நிமிர்ந்து பதில் சொல்லமுடியும்.இப்ப எந்த மூஞ்சிய வச்சுகிட்டு மேலிடத்தில நான் முழிக்கிறது?”

”பாஸ் ரெண்டு நாள் ஸ்டாக் மார்கெட் வேலை செய்யலை. அதானாலெ வந்த நஷ்டம் எவ்வளவு வேணுமானாலும் வைச்சுகலாம் பாஸ். சும்மா போடுங்க ஒரு குத்து மதிப்பா ஒரு ரெண்டாயிரம் கோடி” ஒரு பாய்ண்ட் எடுத்து குடுத்தான் இன்னொரு புத்திசாலி.

பாஸின் முகத்தில் ஒரு ஏற்பு தெரிந்தது. ”உம் அதுவும் சரிதான். வெளிநாட்டு முதலீடு எல்லாம் திருப்பி கொண்டு போயிடுவாங்க. அதனால வர்ற நாட்களெல்லாம் இந்திய பொருளாதாரம் அடிவாங்கிடும் அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.”

பாஸ்-ஸின் கவலை தீரவில்லை.

”அந்த முட்டாள் கஸாப் ஏன்யா மாட்டிக்கிட்டான்? ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தோம். ’செய் அல்லது செத்துமடி’-ன்னு எத்தனை தடவை ட்ரெயினிங்-ல சொல்லியிருப்போம். சாகமா மாட்டிக்கிட்டு இப்போ எல்லோரையும் காட்டிக் குடுத்தாட்டேனே. அவனாலே எல்லாம் வெளியே வந்திடிச்சு” வெறுப்பை உமிழ்ந்தார் பாஸ்.

“அதுக்குதான் பாஸ், எனக்கு இந்த சின்ன வயசு பசங்களைக் கண்டால் நம்பிக்கையில்லை. நீங்க யெங்-கா இருக்கணும், இங்கிலீசு படிச்சவனாயிருக்கணும், சாட் ஃபோன் யூஸ் பண்ணத் தெரிஞ்சிருக்கணும் அப்படி இப்படின்னு சொன்னதுனாலதான் இப்படி ஊத்திக்கிச்சு. கொஞ்சம் கம்மி படிச்ச நம்மூர் ஆளுங்க இதே வேலைய பாதி செலவுல செஞ்சு காமிச்சிருப்பாங்க பாஸ்.”

பாஸ் எதுவும் காமித்து கொள்ளாமல் அடிவருடியின் முகத்தைப் பார்த்தவாரே மேலும் பேசவிட்டார்.

”புலிய பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா பாஸ். வொர்ல்ட் ட்ரேட் செண்டர் அமெரிக்காவுல இருந்துச்சு. அதுக்கு படிச்ச பசங்க ஏரோப்ளேன் ஓட்ட தெரிஞ்சவங்க எல்லாம் வேணும். அல்-காய்தால அதுக்கு தோதா எல்லாம் இருந்து பண்ணி குடுத்தாங்க. இந்த சொத்தை இந்தியாவுல ரெண்டு பில்டிங்ல பாம்ப் வச்சு முடிக்க வேண்டிய வேலைக்கு AK-47, ஹாண்ட்-கிரெனேட் ட்ரெயினிங் எல்லாம குடுத்து அனுப்பணும் ?” அடிவருடியின் கிண்டல் கொஞ்சம் எல்லை மீறியது.

பாஸுக்கு கோபம் வெடித்தது. “முட்டாள் தனமா பேசாதேய்யா. நாம சொன்னது ஓட்டல்-ல இருக்கிற வெள்ளைக்காரப் பசங்களை சிறை புடிச்சு அவனுங்க நாட்டுலேர்ந்து பெரும் பணம் புடுங்கணும். அதுக்கப்புறம் ஒரு வெளிநாட்டானும் இந்திய பசங்களோட பேச மாட்டான். ரொம்ப அன்-ஸேஃப் அப்படீன்னு ஊரை காலி பண்ணிடுவாங்க. அதுல எதுவும் நடக்கலை. 25000 ரூபாய்க்கு கோழிக்கறியும் சாப்பாடும் வாங்கிகிட்டு நாரிமன் ஹவுஸ்-ல பூந்து நாறி போய்டானுங்கைய்யா. சொன்னதுல ஒண்ணும் நடக்கலை. அதுக்குதான் சொன்னேன் சொதப்பிட்டாங்கய்யா சொதப்பிட்டாங்க”

அவர்களோடு மேலும் பேசுவதில் அர்த்தமில்லை என்று மேலிடத்துக்கு சொல்ல வேண்டிய பதிலைப் பற்றிய கவலையில் பாஸ் வெளியேறினார்.