Tuesday, November 25, 2008

கரெண்ட் போச்சா ? மாட்டை கட்டு !

முதல் முதலா கச்சா எண்ணெய் பிரச்சனை 70 களில் வந்த போது மாற்று எரிசக்தி ஆராய்ச்சி மிகவும் சூடாக ஆரம்பித்தது.அப்போது மாட்டு வண்டியை எப்படி மேம்படுத்துவது அதனால் எருதுகளின் சக்தி வீணாகமல் எப்படி முழுமையாக பயன்படுத்த முடியும் என்றெல்லாம் பெங்களூர் Indian Institute of Management-லிருந்து ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்தன.அதை யொட்டி வெளிவந்த ஒரு கேலிச் சித்திரம் சிந்தனையை தூண்டுவதாக இருந்தது.

வண்டி இழுக்கும் இரண்டு மாடுகள் பேசிக் கொள்கின்றன “You know, we are no more animals; we are alternate sources of energy "

இன்றைக்கு Times of India (Times Bangalore 25/11/08) பத்திரிக்கையில் வந்திருக்கும் ஒரு செய்தி அதை நிஜப்படுத்துவது போல் உள்ளது.
படத்தை சுட்டினால் பெரிதாக்கி முழு விவரத்தையும் படிக்கலாம்.

செக்கு மாடுகள் எண்ணெய் வித்துகளை அரைத்து எண்ணெய் எடுக்க ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றி வருவது போலத்தான் இதிலும் மாடுகள் சுற்றிச் சுற்றி வரவேண்டும். அதை தகுந்த பற்சக்கரங்கள் (கியர்) துணையோடு சுற்றுவிசையாக மாற்றி ஒரு ஜெனேரட்டர் வழியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது 2 KW ஜெனேரேட்டர் மாதிரி உற்பத்தி திறனுள்ள எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிதான தொழில்நுட்பம். சுருக்கமாகச் சொன்னால் சைக்கிள் பெடல் மிதிப்பதால் டைனமோ எரிவதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இதை ஒட்டி மனதில் வரும் சில எண்ணங்கள்.

உழவு மாடுகளை செக்கு மாடாக பயன்படுத்த முடியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.அது உண்மையில்லா விட்டால் வருடத்தில் விவசாயத்தில் நான்கு மாதங்களே பயன்பட்டு வரும் எருதுகள், இந்த வேலையினால் வருடம் முழுவதும் பயன்பட வாய்ப்பிருகிறது.

கோவை,மைசூர் போன்ற நகரங்களில் தெருக்களில் சும்மா சுற்றிக்கொண்டிருக்கும் குதிரைகளை பூட்டினால் இன்னும் அதிகமான மின் உற்பத்தி திறனுடைய ஜெனேரட்டர்களை இயக்கமுடியுமோ என்னமோ !

இதில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதாவது எருதுகளை (எருமைகளையும் வடநாட்டில் பயன்படுத்துவதுண்டு) செக்கு மாடுகளைப் போல் பயன்படுத்தினால் பிராணிநல ஆர்வலர்களுக்கு கோபம் வருமாம்!! அதனால் இந்த தொழில் நுட்பத்திற்கு மான்யம் அளிக்க மத்திய அரசு தயங்குகிறதாம்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதனுடைய உற்ற தோழனாக இருந்து அவன் கூடவே உழைப்பில் பங்கு கொண்டு குடும்பத்தில் ஒருவராக கருதப்பட்ட பிராணிகளை இன்று வெகுவாக உணவுக்காக வளர்த்து கசாப்பு கடைகளுக்கு அனுப்புவதை இந்த ஆர்வலர்கள் ஏன் தடுப்பதில்லை ?

ஒருவேளை விருப்பமில்லாததால் தட்டிக் கழிக்க அரசு அவர்கள் மேல் பழியை திருப்புகிறதோ ?
மீண்டும் பிராணிகளையும் மனிதர்களையும் ஒருவரைச் சார்ந்து ஒருவர் என்ற வகையில் இணைக்கக்கூடிய,சுற்றுப்புற சூழலுக்கு தீங்கிழைக்காத தொழில் நுட்பம் என்ற வகையில் இதன் முன்னேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும். (படம் :நன்றி F.A.O.)

3 comments:

ஜுர்கேன் க்ருகேர் said...

தண்ணீரைக்கொண்டு ஓடும் காரை டாட்டா நிறுவனத்தார் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர். மேலும் அதற்கான தயாரிப்பு தொழிற்சாலையையும் நிறுவ உத்தேசித்துள்ளார்கள்.

மாடுகளை கட்டிதான் மின்சாரம் தயாரிக்க வேண்டுமென்றில்லை.
அன்றாட வாழ்வின் காலை உடற்பயிற்சி சாதனைகளில் இருந்து,அலுவலக சுழலும் நாற்காலி மற்றும் கம்ப்யூட்டர் மௌஸ் கிளிக் வரையிலான உந்து சக்தியை மின்சார சக்தியாக மற்ற இயலும்.

(மொக்கையாயிருதாலும் அட் லீஸ்ட் அடுத்த சந்ததியிலாவது நடக்கத்தான் போகுது!)

KABEER ANBAN said...

வருகைக்கு நன்றி ஜுர்கேன்,

//தண்ணீரைக்கொண்டு ஓடும் காரை டாட்டா நிறுவனத்தார் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர். //

தண்ணீர் என்ன காற்றால் ஓடும் கார்களே வரவிருக்கின்றன. அதுவும் உங்கள் இப்போதைய கார்களே சிறு மாற்றங்களுடன் ஓட்டமுடியும். விவரங்களை இந்த பக்கத்தில் அறியலாம். "http://www.air4zero.com/projects.html"

//அலுவலக சுழலும் நாற்காலி மற்றும் கம்ப்யூட்டர் மௌஸ் கிளிக் வரையிலான உந்து சக்தியை மின்சார சக்தியாக மற்ற இயலும் //

பிரச்சனை எப்படி சேமித்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது தான்.

//மொக்கையாயிருதாலும் அட் லீஸ்ட் அடுத்த சந்ததியிலாவது நடக்கத்தான் போகுது!)//

இது புரியவில்லை

ஜுர்கேன் க்ருகேர் said...

1.காற்றில் ஓடும் கார்களை பற்றி சொன்னதற்கு நன்றி
2.இது போன்ற சமயங்களில் மின்சாரத்தை சேமிப்பது கடினம்தான். ஆயினும் அது சம்மந்தமான ஆராச்சிகள் நடை பெற்று கொண்டிருப்பதை மறுக்க இயலாது.
3.//இது புரியவில்லை// தடங்கலுக்கு வருந்துகிறேன்