Tuesday, June 24, 2008

இடம் பெயரும் ஆயிரம் வருட கோவில்

பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படிக்கும் பொழுது பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை நினைவு படுத்தியது ஒரு சமீபத்திய கோவில் விஜயம். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை கட்டப்படும் பொழுது எகிப்து நாட்டின் 2000 வருட புராதனமான கோவில் நீரில் மூழ்கியது. பின்னர் அதை யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் அருகில் உள்ள மற்றொரு தீவுக்கு அப்படியே புனர் நிர்மாணம் செய்தனர்.

அது போல இப்பொழுது நம் நாட்டிலும் ஒரு ஆயிரம் வருட கோவில் புனர் நிர்மாணம் பெற்று வருகிறது.


கிருஷ்ணராஜ சாகரம் எனப்படும் கே.ஆர்.எஸ் அணை 1920-ல் கட்டப்பட்டப் பொழுது ஹொய்சளர் காலத்திய (1100 AD ) வேணு கோபாலசுவாமி கோவில் ஒன்று கண்ணம்பாடி ஊரில் நீரில் மூழ்கியது. அணைக்கு நீர் விடுவதற்கு முன் ஆராதனைக்குட்பட்டிருந்த சில விக்கிரகங்களை மட்டுமே அருகில் சிறிய கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து மீதமுள்ள கட்டிடங்களை கைவிட்டனர்.

மொத்தம் 32 கிராமங்கள் அச்சமயம் நீர் தேக்கத்தில் மூழ்கின. அணையின் உயரம் 125 அடிகள். எப்பொழுதெல்லாம் எண்பது அடிக்கும் குறைவாக நீர் மட்டம் குன்றுமோ அப்பொழுதெல்லாம் அந்த கோவிலின் மேற்புரப் பகுதிகள் பார்வைக்கு தென்பட்டது. பலரும் பரிசலில் சென்று கோவிலை சுற்றிப் பார்பது வழக்கமாக இருந்தது.

1957 லும் 1982 லும் நீர்மட்டம் 60 அடிக்கு குறைந்து முழுக் கோவிலும் பார்வைக்கு வந்தது. அப்பொழுதே பலர் கோவிலை இடம்பெயர்தல் பற்றிய பிரஸ்தாபம் செய்தனர். ஆனால் முடிவெடுக்கும் முன்பே காவிரியில் நீர் வரவு அதிகரித்ததால் எதுவும் செய்ய இயலவில்லை. 2001 ல் மீண்டும் வாய்ப்பு வந்தது.

இம்முறை ஹரி கோடே (Khoday distilleries) என்ற தொழிலதிபரின் ஆர்வத்தால் மொத்த கோவிலும் இடம் பெயர்க்கப்பட்டு அருகிலேயே சற்று மேட்டுபாங்கான இடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.


இதற்கான கோவிலின் பிரத்யேக கட்டுமான வரைபடங்களை இடிபாடுகளுக்கிடையே தயார் செய்யப்பட்டு புனர் நிர்மாணப்பணி சுற்றியிருக்கும் வண்டல் சகதியின் ஊடே துவங்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் துவங்கிவிட்டால் நீர் மட்டம் அதிகரிக்கத் துவங்கிவிடும். எனவே இரவு பகலாக நூற்றுக் கணக்கானோர் கிராமத்தினர் உட்பட சேர்ந்து வேலை செய்தனர்.


ஏப்ரல் மே இரண்டே மாதங்களுக்குள் அங்கம் அங்கமாக வரைபட உதவியுடன் குறியிடப்பட்டு மேட்டு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் குறியீட்டின்படி சேகரிக்கப்பட்டு, வகைப் படுத்தப்பட்ட கட்டிட பகுதிகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.


கொடிமரம் (த்வஜஸ்தம்பம்) மட்டும் முழுக்க புதிதாக செய்யப்பட்டது. இதற்கெனவும், பிற சேதமடைந்திருந்த பகுதிகளை புதிதாக செய்யவும் தமிழ் நாட்டு சிற்பவல்லுனர்கள் உதவி பெறப்பட்டதாக தெரிகிறது.


சற்று ஏறக்குறைய 70 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையிலேயே அற்புதமாக காட்சியளிக்கும் இக்கட்டிடம் முடிக்கப்பட்ட பின்னர் மைசூரில் முக்கியமான சுற்றுலாத் தலமாகி விடும்.

இந்த கோவிலை காண்பதற்கு கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் வடக்கு திசையில் கண்ணம்பாடி கிராமத்தினுள் புகுந்து செல்ல வேண்டும். புதிதாகக் கட்டப்பட்டு வரும் கோவிலில் மீண்டும் பழைய ஆராதனைக்குரிய விக்கிரகங்களே வருமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

கொடிமரத்தில் காணப்படும் முருகனும் நந்தியும் இதை சிவ ஆலயமாக குறிப்பனவாக இருக்கின்றன.

மூல விக்கிரகங்களான வேணுகோபாலரும் பூவராகனும், தனியார் மேற்பார்வையில் கட்டப்பெறும் ஆலயத்திற்கு தரப்பட மாட்டாது என்று சிலர் சொல்வதை இது உறுதி படுத்துவது போல் உள்ளது.

ஏனெனில் வேணுகோபால சுவாமியை பூசிக்கும் கோவில் கொடிமரத்தில் நந்திக்கும் முருகனுக்கும் இடம் ஏது?

தனியனாய் நிற்கும் இத்தூண் பழைய கொடிமரத்தின் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதில் அன்னப் பறவை காணப்படுகிறது.

இங்கே இடம் பெயர்ந்த வேணு கோபாலருக்கு புதிய மாளிகை வாசம் கிடையாது போலும் ! அவர் இந்த சின்ன கோவிலிலேயே இருந்து அருள் பாலிக்க வேண்டும் என்பது கூட அவருடைய சொந்த இச்சையோ !!

(நன்றி : 2001 மூலக் கோவில் படங்கள் உதவி, திரு கணபதி, KRS )

2 comments:

siva said...

Thx Kambiran

very nice message and photo
shall you have any video this temple if possible you put your blog

puduvai siva

கபீரன்பன் said...

நல்வரவு புதுவை சிவா,
சலனப்படம் எடுக்கவில்லை. மீண்டும் சென்றால் எடுத்து இணைத்து விடுகிறேன். பரிந்துரைத்தமைக்கு நன்றி.