Tuesday, December 23, 2008

காக்கா கூட்டத்த பாருங்க,அதுக்கு சொல்லி கொடுத்தது யாருங்க

இரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) ஒரு ஆங்கிலோ இந்தியர். எழுத்து உலகில் மிகவும் புகழ் பெற்றவர். ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னரும் இந்தியாவிலேயே தங்கி விட்டர். அவர் எழுதும் கதைகள் கட்டுரைகள் உலக அளவில் பெரிதும் விரும்பி படிக்கப்படுகிறது.சாகித்திய அகடெமி விருது பத்மஸ்ரீ விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்.

ஒரு காகத்தோடு உரையாடுவது போல் அவர் எழுதிய கட்டுரை ஒன்றை காண்போம்.

ஒரு காகம் எழுத்தாளனுக்கு வாழ்க்கைத் தத்துவத்தை போதிக்கிறது.

நம் நாட்டில் இது ஒன்றும் அதிசயம் இல்லை.காகபுசுண்டர் என்று ஒரு சித்தர். ஒரு காகத்தின் வடிவில் கல்லால மரத்திலிருந்து கொண்டு பல யுகங்கள் வாழ்ந்து கண்ட உண்மைகளையும் தத்துவங்களையும் புசுண்ட நாடி, காகபுசுண்டர் ஞானம், காகபுசுண்டர் காவியம்,காகபுசுண்டர் குறள் என்ற பெயர்களில் தொகுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

இப்போது ஆங்கில காக புசுண்டர் (Ruskin Bond) தத்துவத்தை பார்ப்போம்.


கோடை நாளில் ஒரு மாலை வேளை. ஊதா வர்ண மலைகளில் மழையைக் குறிக்கும் மேகம் சூழத் தொடங்கியிருந்தது. மேனி பளபளக்க ஒரு கரிய காகம் ஜன்னல் அருகே வந்தமர்ந்தது.

தலையை ஒரு புறமாகத் திருப்பி “ஏது! அய்யா இன்னிக்கி கவலையா இருக்காரு. நம்மாலெ ஏதாச்சும் முடிஞ்சா செய்யிறேன் “ என்று சொல்லி உரையாடலை ஆரம்பித்தது.
ஆடும் சாய்நாற்காலியில் மெதுவாக மேலும் கீழுமாக அசைந்து கொண்டு வாழ்க்கையின் ஓட்டத்தையும் ஏமாற்றங்களையும் அசைப்போட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்தால் அப்படித்தான் இருந்திருக்கும் போலிருக்கு. எதிர்பாராத அதன் வரவால் என் தனிமை கலைந்தது.

“மன்னிக்கணும், கேட்டது புரியலெ” என்றேன் பணிவாக.

இப்போதெல்லாம் தெரியாதவர்களிடம் பேசும்போது பணிவாக இருப்பது அவசியம். சிலரிடம் கத்தியும் துப்பாக்கிகள் கூட இருக்குமாம்.

“ஒண்ணுமில்லே.சும்மாதான், முகத்திலே சந்தோஷத்தை காணோமேன்னு கேட்டேன்.அவ்ளோதான்” என்றது காகம்.

“நிஜம் தான்,அதுக்கு யாரும் எதுவும் செய்யமுடியாது. அது உனக்கு சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல” என்றேன்

“அதை மட்டும் சொல்லாதே “

”அப்படீன்னா ? ....இப்போ என்ன சொல்ல வர்றே ?”

“இதோ பார்.நானும் மனுஷனா இருந்தவன் தான். சாங்-சு வோட சீடனாயிருந்தேன்; எபிக்டஸ்-ஸோட ஃபிரெண்டாயிருந்தேன். புராணத்துல கஷ்யபன் காலத்திலேந்து எல்லாத்தையும் பார்த்தவனாக்கும் !”

“என்ன அதனாலே.இப்ப நீ காக்கா தானே. இதுவா முன்னேறுகிற லட்சணம்?”

“தெரியாத்தனமா போன ஜன்மத்துல அரசியல்ல புகுந்துட்டேன். அதனால வந்த வினை. இந்த பிறவியில கொஞ்சநாள் காக்காயாக சுத்தணும். நிஜம்மா பாத்தா காக்காய் ஜன்மம் ஒண்ணும் மோசமில்லை. வேணுமின்னே எங்களுக்கு ஒரு கெட்ட பேரு காக்கா-கூட்டமின்னு. எல்லா பறவைகள விடவும் எங்களுக்கு புத்திசாலித்தனமும் பொழச்சுபோற குணமும் அதிகம். அந்த பொழைக்கிற வழி தெரியாமத்தானே நீ தவிக்கிறே.”

அட ! கரெக்டா பாய்ண்டப் புடிக்குதே இந்த காக்காய். எழுத்தாளனா பொழைப்பு நடத்துணமின்னா ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கு.

”என்னாலே என்னென்ன முடியுமோ அவ்வளவும் செய்துகிட்டுதான் இருக்கிறேன்”

மெல்ல ரெண்டு தத்து தத்தி பக்கத்தில் வந்தது.

”அது தான் நீ பண்ற தப்பு. வெறும் உழைப்பு உழைப்புன்னு இருந்தா வெற்றி வந்திடுமா? எவனொருத்தன் ரொம்ப குறைச்சலா செஞ்சு ரொம்ப அதிகமா பயனடைவானோ அவன் தான் நிஜம்மாலுமே வெற்றி பெற்றவனாக்கும்.”


“எழுதாமையே பெரிய எழுத்தாளனா எப்படி ஆக முடியும்?” என்றேன் காரமாக.

“தப்பா புரிஞ்சுக்கிட்டே நீ. நான் சோம்பேறி யா இருக்கச் சொல்லவில்லை. எங்கேயாவது சோம்பேறி காக்காயைப் பார்த்திருக்கியா? பார்த்திருக்க முடியாது. சரி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிற காகத்தையாவது பார்த்திருப்பியா ? அதுவும் முடியாது. ஆனா எங்களுக்கு எப்பவுமே எல்லாத்துலேயும் ஒருகண் இருந்துகிட்டே இருக்கும். அதுதான் சமய சந்தர்ப்பம்.”

இன்னும் சற்று அருகே தத்தி வந்து கையில் வைத்திருந்த ரொட்டித்துண்டை லபக்கென்று இழுத்தது.

“பார்த்தியா, எனக்கு வேண்டியது கிடைச்சுதா இல்லியா! அதுவும் கஷ்டப்படாமலே. கவனிக்க வேண்டியது என்னான்னா சரியான சமயத்தில சரியான இடத்தில இருக்கணும்.”

எனக்கு அது செஞ்சது பிடிக்கவில்லை.

“ஆமாம் ஆமாம், அடுத்தவனோட தீனியைப் பிடுங்குவது தான் உன் வழி என்றால் அது எழுத்தாளனுக்கு எப்படி பொருந்தும்? அடுத்தவங்களோட எழுத்தை காப்பி அடிக்கச் சொல்லிறியா?”

“அதை செய்யிறவங்களும் நிறைய பேர் இருக்காங்க. ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல. கொஞ்சம் விவரமானவனா இரு அப்படீன்னு தான். ரொம்ப பேரோட-எழுத்தாளனும் அதில் அடங்கும்- பிரச்சனை என்னான்னா அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் தான். ஒரு ரொட்டித்துண்டு போதும்னு சும்மா இருக்காமே ஒவ்வொரு சாப்பாட்டையுமே பெரிய கல்யாண விருந்தா எதிர்பார்க்கிறீங்க. எங்கேயாவது முடியுமா? இதுதான் நீங்க செய்யிற முதல் தவறு ”

ரெண்டாது மிஸ்டேக் என்னான்னா ’விரட்டி’கிட்டே போறது. பெரியவரே நான் சொல்றது எழுத்தாளனுக்கு மட்டுமில்லே எல்லாருக்கும்தான். எல்லாருமே என்ன வேண்டுறோம்? வெற்றி வெற்றி. இப்ப நான் ஒரு வெற்றிகரமான காக்கை; நீ ஒத்துகிட்டாலும் இல்லாட்டியும் அதுதான் நெஜம்.நாம் தேடறது கெடச்சுட்டா அது ’வெற்றி’. பொறுத்திரு,பார்த்திரு,அடைந்திடு. எல்லாத்தையும் சேர்த்து என் கொள்கைன்னு சொல்லணும்னா ’விழித்திரு.

நான் வேட்டையாடி தின்னும் பறவையுமில்லை.நீயும் வேட்டையாடும் மிருகமும் இல்லை. அதனால்தான் துரத்தி பிடிச்சு வெற்றி அடைவது என்பது முடியாத காரியம். எப்படி வேட்டையாடப் படுகிற பிராணி தப்பிச்சு ஓட பார்க்குமோ நாம் துரத்துற சமாச்சாரமும் நம்மை விட்டு ஓடத்தான் பார்க்கும். இந்த வெற்றியும் அப்படிதான். நீ எவ்வளவு வேகமா புடிக்கப் பாக்குறியோ அவ்வளவு வேகமா ஓடும்.”

”இப்போ என்ன செய்யணுமிங்கிறே? புத்தகம் எழுதிட்டு மறந்து போ ன்னு சொல்றியா?”

”சரியா சொன்னே.மறந்து போ ன்னு சொல்லமாட்டேன். உலகத்தோட மூலை முடுக்குக்கெல்லாம் அனுப்பி வை.ஆனா ரொம்ப பெரிசா எதையும் எதிர்பார்க்காதே. அதையே நெனச்சு புலம்பிக்கிட்டு இருக்காதே. அதுதான் மூணாவது தப்பு. வராததை நெனச்சுக்கிட்டு புலம்புறது. எப்ப புலம்ப ஆரம்பிக்கிறியோ அப்போ மூளைக்கு வேற எதையும் யோசிக்கிற சக்தி போயிடும்”

“உம்.நீ சொல்றதும் சரிதான். நான் கவலைப்படுற ஜென்மம் தான்”

“தப்பு.பெரிய தப்பு. எதப்பத்தி கவலைப் படுறே?”

“எவ்வளவோ சின்னச் சின்ன விஷயங்கள்”

“பெரிசா எதுவும் ?”

“இப்போதைக்கு இல்லே”

“ஆனாலும் பெரிசா ஏதோ கெட்டது நடக்கப் போவுதுன்னு ஒரு பயம் ?”

“முன்கூட்டியே எதிர்பார்த்திட்டா மனசு தயாரா இருக்குமில்ல “

“எங்க அகராதியில அது கெடையாது. நாங்க எப்பவுமே நல்லதயே எதிர்ப்பார்போம்”

கொஞ்சம் நகர்ந்து பீர் குவளைக்குள்ளே தலைய விட்டு பீரை உறிஞ்ச ஆரம்பித்தது.

“ஆமா பீர் குடிக்கிறதுக்கு காசு இருந்தா வசதியா இருக்கேன்னுதான்ன அர்த்தம்”

“நான் ஒண்ணும் தினம் குடிக்கிறது இல்லை. அது சரி என்மேலே உனக்கு என்ன அவ்வளவு அக்கறை ?”

காகம் கழுத்தை ஒரு பக்கம் சாய்த்து பார்த்தது

“உன்னை எனக்கு பிடிச்சிருக்கு அதனாலத்தான். நீ எங்க வர்க்கத்துக்கு தொந்தரவு செய்யறது இல்லை”

“நான் உங்க வர்க்கத்தை அதிகமா கண்டுகிட்டது கிடையாது”
“ அடப் பரிதாபமே. எவ்வளவு விஷயம் எங்ககிட்ட கத்துக்கறதுக்கு இருக்கு! சுதந்திரம்,பொழைக்கிற வழி,ஜாலியா இருக்கறது இப்படி எத்தனையோ! எங்களைப்பத்தி எழுதாத பெரிய எழுத்தாளனே இருக்க முடியாதே. ஹூம் “

பீரை இன்னொரு தடவை உறிஞ்சி இறக்கையை ரெண்டு முறை படபடத்து விர்ரென்று மேலே கிளம்பி பக்கத்துல இருக்கிற பிரியாணி கடை பக்கமாக பறந்தது.

(Delhi is not Far by Ruskin Bond. Penguin Books ISBN:0-14-024606-1)

No comments: