கர்நாடக மாநிலம் இரண்டு இசை உலகிலும் கொடி கட்டி பறக்கிறது. தெற்கில் மைசூர் சமஸ்தானம் கர்நாடக இசையை ஊட்டி வளர்க்கையில் வட கர்நாடகத்தினர் ஹிந்துஸ்தானி இசையைப் பற்றிக் கொண்டனர். பண்டிட் பீம்சேன் ஜோஷி, கங்குபாய் ஹனகல், ஷோபா முத்கல், ப்ரவீண் கோர்கண்டி (குழல்) போன்றோர் கர்நாடக மாநிலத்திற்கு ஹிந்துஸ்தானி துறையில் பெருமை சேர்ப்பவர்கள்.
இன்று கங்குபாய் ஹனகல் காலமானார். அவருக்கு வயது 97. ஐந்தாம் வகுப்பு வரையிலேயே பள்ளிக்குச் சென்ற இவருக்கு சரஸ்வதி கடாக்ஷம் பூரணமாக இருந்தது. இவரை கௌரவிக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளில் பாரத அரசாங்கத்தால் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளும் அடங்கும். ஒன்பது பிரதம மந்திரிகள், ஐந்து ஜனாதிபதிகளால் கௌரவிக்கப்பட்ட ஒரே இசைக் கலைஞர் என்ற பெருமையும் உண்டு.
எளிய விவசாயக் குடியை சேர்ந்த இவர் இசைத்துறையில் ஆரம்பகாலங்களில் பல பெரும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. இளம் தலைமுறையினரிடையே சங்கீதக் கலை நன்முறையில் தழைக்க வேண்டும் என்பதற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது.
இவரது மறைவு குறித்து கர்நாடக அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்திருக்கிறது. எல்லா அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. (தமிழ் நாட்டில் நம் இசைக் கலைஞர்களுக்கு இவ்வித அஞ்சலி செலுத்தினார்களா என்பது தெரியவில்லை). இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நாளை (22-07-09) அன்று நடைபெறும்.
அவரது விருப்பப்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.
அவர் எவ்வளவு எளிமையானவர் என்பது இந்த படத்தைப்பார்த்தாலே விளங்கும். இதுதான் இந்த அஞ்சலிப் பதிவை எழுதுவதற்கும் தூண்டுகோ்லாயிற்று.
அவரது குரலைக் கேட்டறியாதவர்களுக்காக இதோ ஒரு இசை இணைப்பு.
|
2 comments:
தங்கள் வலைப்பதிவுக்கு இன்று தான் வருகை தருகிறேன்....
நன்றாகவுள்ளது..
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்........
அன்புள்ள முனைவர் குணசீலன்,
வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
அடிக்கடி வருகை தாருங்கள்.
வாழ்த்துகள்
Post a Comment