கணிணியில் மிக மும்முரமாக ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த போது டண் என்று அரட்டைக்கான அழைப்பு மணி அழைத்தது.
hello ,did you call me ?
Called you? No. Who is this?
this is God, i heard your prayers; so i thought i will chat
( அரட்டை இனி தமிழில் தொடரும்)
நான்: கடவுளை கும்பிடுவதுண்டு. ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி அவ்வளவுதான். இப்பொழுது ஒரு முக்கியமான காரியமாக இருக்கிறேன்.
கடவுள்: என்ன காரியம்? எறும்புகள் கூடத்தான் காரியமாக இருக்கும்.
நான்: சரியாக சொல்லமுடியவில்லை. ஆனால் நேரமே இருப்பதில்லை. எப்போதும் ஓட்டம் தான்
கடவுள்: ஆமாம். காரியமென்றால் (activity) முடியாது. உற்பத்தியானால் (productivity) முடியும். காரியம் நேரத்தை தின்று விடும். உழைப்பு நேரத்தை மிச்சமாக்கும்
நான்: புரிகிறது. ஆனால் எப்படி என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் உம்மை அரட்டை பெட்டியில் எதிர்பார்க்கவில்லை
கடவுள்: போகட்டும்.நேரத்திற்கான போராட்டத்தை பற்றி உனக்கு சிறிது புரியவைக்கலாமென்று தோன்றியது. இந்த மின்னல்வேக கணிணி யுகத்தில் உனக்கு வசதிப்படும் வகையிலேயே பேசலாமே என்றுதான் வந்தேன்.
நான்:நீங்களே சொல்லுங்கள். இப்போது வாழ்க்கை ஏன் குழப்பமானதாக இருக்கிறது ?
கடவுள் : ஆராய்வதை விட்டு விடு. வாழத் தொடங்கு. ஆராய்வது தான் குழப்பத்தை உண்டாக்குகிறது.
நான்: அப்படியானால் ஏன் எல்லோரும் சந்தோஷமின்றி இருக்கின்றனர் ?
கடவுள்: இன்று என்பது நேற்று நீ கவலைப்பட்ட ’நாளை’. உன்னுடைய கவலைக்குக் காரணம் நீ ஆராயமுற்படுவதுதான். ஆகையால் நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கிறாய். அதுவே உன் பழக்கமாகி விட்டது
நான்: நிச்சயமற்ற தன்மை இவ்வளவு இருக்கும்போது எப்படி கவலைப் படாமல் இருக்கமுடியும் ?
கடவுள்: நிச்சயமற்ற தன்மை தவிர்க்க முடியாதது. ஆனால் கவலைப்படுவது ஒருவரது சுய தேர்வு
நான்: ஆனால் நிச்சயமின்மையால் எவ்வளவு மனவலி ?
கடவுள்: வலி தவிர்க்கமுடியாது. ஆனால் துன்பப் படுவது ஒருவனது சுயதேர்வு
நான்: துன்பம் அனுபவிப்பது சுய தேர்வு எனில் நல்லவர்கள் ஏன் எப்போதும் துன்பப் பட வேண்டும் ?
கடவுள்: பட்டைத் தீட்டாமல் வைரம் ஒளிராது. உலைக்குள் வைக்காமல் தங்கம் புடமாகாது. நல்லவர்கள் சோதனைகளை சந்திக்கத்தான் வேண்டும். ஆனால் துன்பப் பட வேண்டிய தேவையில்லை. அனுபவத்தின் காரணமாக அவர்கள் வாழ்க்கை கனியுமே தவிர கசப்பாகாது.
நான்: அத்தகைய சோதனை அனுபவங்கள் உபயோகமானவையா ?
கடவுள் : ஆம். அனுபவம் ஒரு கடினமான ஆசிரியன். முதலில் சோதனை வைத்து பின்னர் பாடம் புகட்டும் ஆசிரியன்.
நான்: யாருக்கு தேவை இந்த சோதனைகள் ? இவையின்றி கவலைகள் இல்லாமல் இருக்க முடியாதா?
கடவுள்: சோதனைகள் தான் பயணத்தில் இருக்கும் உபயோகமான பாடங்கள்.அதனால் மனவலிமைக் கூடுகிறது. சோதனைகளால்தான் ஆன்மபலம் வருகிறது. கவலையற்ற வாழ்க்கையினால் அது வராது.
நான்: சொல்லப் போனால் திக்குத் தெரியாமல்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.
கடவுள்: வெளிப்பக்கமாகப் பார்த்தால் திக்கு தெரியாது. உள்முகமாக பார்க்கத் தொடங்கு. வெளிமுகமாகும்போது நீ கனவு காண்கிறாய். உள்முகமாகும்போது விழித்துக் கொள்கிறாய். கண்கள் வெளிக்காட்சி தருகின்றன. மனம் உள் உண்மையை உணர்த்துகிறது.
நான்: நாம் எதிர்பார்க்கும் வெற்றி விரைவில் வராதபோது மனத்துன்பத்தை தவிர்த்து சரியான வழியில் செல்வது எப்படி?
கடவுள் : வெற்றி என்பது அடுத்தவர்கள் முடிவு செய்வது. திருப்தி என்பது நீ முடிவு செய்வது.
நீ முன்னால் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை விட எங்கே செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்வது அதிக திருப்தி அளிக்கும். நீ திசைக் காட்டியை வைத்துக்கொள். மற்றவர்கள் கடிகாரத்தை பார்க்கட்டும்.
நான்: கடினமான நேரங்களில் உற்சாகத்துடன் இருப்பது எப்படி ?
கடவுள்: எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதை பார், இன்னும் எவ்வளவு தூரம் என்பதை விட உனக்குக் கிடைத்திருக்கும் அருட்செல்வத்தைப் போற்று, கிடைக்காதவற்றை விட.
நான்: மக்களிடம் உங்களை ஆச்சரியப்பட வைப்பது எது ?
கடவுள்: துன்பப் படும் போது எனக்கு மட்டும் ஏன் என்பவர்கள் சுகத்தில் அப்படி ஏன் நினைப்பதில்லை.
ஒவ்வொருவரும் உண்மை தன் பக்கம் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் ஆனால் உண்மையின் பக்கம் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.
நான்: நான் யார்? ஏனிங்கு இருக்கிறேன் இப்படி சில கேள்விகள் தோன்றுவதுண்டு ஆனால் விடை தெரிவதில்லை
கடவுள்: நீ யார் என்று தேடாதே. நீ என்னவாக வேண்டும் என்பதை கண்டுகொள். ஏனிங்கு வந்தேன் என்பதற்கு காரணம் தேடாதே. அதை உருவாக்கு. வாழ்க்கை என்பது கண்டுபிடித்தல் அல்ல. அது உருவாக்கப்படுவது.
நான்: வாழ்க்கையின் முழுப்பயனை அடைவது எப்படி ?
கடவுள் : கடந்து போனதைப் பற்றி கவலைப் படாதே நிகழ்காலத்தில் நம்பிக்கையோடு செயல்படு எதிர்காலத்தை பயமற்று அணுகு
நான்: கடைசி கேள்வி, பல சமயங்களில் என் பிரார்த்தனைக்கு பதில் கிடைப்பதில்லை
கடவுள் : பதில் போடப்படாத பிரார்த்தனை எதுவும் கிடையாது. சில நேரங்களில் பதில் “முடியாது” என்பது தான்
நான்: அருமையான அரட்டைக்கு நன்றி
கடவுள் : நல்லது. பயத்தை விட்டு நம்பிக்கை வளர்த்துக் கொள். சந்தேகங்களை நம்பாதே; ஆனால் உன் நம்பிக்கைகளில் சந்தேகம் கொள். வாழ்க்கை ஒரு விடுவிக்கப் படவேண்டிய புதிர்; விடைகாண வேண்டிய பிரச்சனை அல்ல.
என்னை நம்பு. வாழ்க்கை ஒரு அற்புதம். வாழ்க இனிய நாளாகட்டும் இந்த நாள்.
-------------------------------------------------
பலமுறை வலையுலகில் உலா வந்து கொண்டிருக்கும் ஒரு மின்னஞ்சலின் தமிழாக்கம் இது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் முத்தமிழ் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்ததை இப்போது வலைப்பூவில் பதிவிடுகிறேன் . இதன் மூல ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. அருமையான கருத்துக்கும் கட்டுரைக்கும் அவருக்கு நன்றிகள் உரித்தாகுக.
3 comments:
//ஆராய்வதை விட்டு விடு. வாழத் தொடங்கு. ஆராய்வது தான் குழப்பத்தை உண்டாக்குகிறது.//.........
உண்மைதானோ!?
நம்ம Internet chatடிங்கில் கடவுளையும் விட்டு வைக்கல!
அதானே! எங்கேயோ படித்த ஞாபகம்!
@ Priya
//நம்ம Internet chatடிங்கில் கடவுளையும் விட்டு வைக்கல! //
கடவுள் நம்மில் ஒருவர் என்னும் போது அவரை எப்படி விட்டு வைக்க முடியும் ? தமக்கு வேண்டியவரைத்தானே வம்புக்கு இழுப்பது மனித குணம் ! :)))
@ அன்புடன் அருணா
//அதானே! எங்கேயோ படித்த ஞாபகம்! //
அரைச்ச மாவுதான். தமிழ் ஆட்டுரலில் அரைக்கப்பட்டு இருக்கிறது. :)
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
Post a Comment