Thursday, March 19, 2009

சிறு துளி.....- உலகத் தண்ணீர் தினம்


மண் மரம் மழை மனிதன் வலைப்பூவில் வின்சென்ட் ஐயா உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பதிவர்கள் தம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரி ஒரு வேண்டுகோள் முன் வைத்தார். ஆசானின் வார்த்தைகளை சிரமேற் கொண்டு இதோ ஒரு இடுகை.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நீர் சேமிப்பைப் பற்றியது.

ஒரு முறை எங்கள் தொழிற்சாலை தரக்கட்டுபாடு சோதனைச் சாலையிலிருந்து ரிப்போர்ட்டுகள் வெளியிடுவதில் தேக்கம் கண்டது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றாக்குறை. நீர் சுத்திகரிக்கும் உபகரணம் (Distillation unit) பழுதாகி பல சோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை. வெளியிலிருந்து வாங்குவதற்கு முயற்சி செய்தும் பல காரணங்களால் வந்து சேரவில்லை. இதனால் கைவசம் சரக்கு இருந்தும் அனுப்ப முடியாத நிலைமை. பெட்ரோல் பங்கிலிருந்து பாட்டரி நீரையாவது வாங்கி செய்யலாம் அவற்றின் தரம் சரியில்லை என்று பதில் வந்தது.

இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தொழிற்சாலையை சுற்றி வரும்போது குளிர்பதன அறைக்கான எந்திரத்திலிருந்து நீர் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் குழாய் வழியாக ஒழுகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். இதை ’காண்டென்சேட்’ என்று சொல்வார்கள். இது காற்றிலிருக்கும் அதிகமான ஈரப்பதம் கம்ப்ரெஸரின் உயர் அழுத்தத்தில் கனிந்து திவலைகளாகக் மாறி வெளியேறுவது.

இப்படி சதா நீர் வெளியேறிக் கொண்டிருப்பது வழக்கமான காட்சிதான் என்றாலும், அன்று மின்னலென ஒரு எண்ணம். நேரடியாக காற்றிலிருந்து கனிந்து வருவதால் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட நீர் தானே! அதில் எவ்வித உப்புகளும் கரைந்திருக்க முடியாதல்லவா !

உடனடியாக ஒரு நல்ல சுத்தமான குழாயை செருகி அந்த நீரை சுத்தமான கண்ணாடி குடுவையில் பிடிக்கச் சொல்லி சோதனைச் செய்யச் சொன்னேன். மூன்று முக்கிய பரிசோதனைகளிலும் வெற்றி.

1) pH =7.63; 2) conductivity= 0.0 ; 3) Total Dissolved Solids= 0.0 ppm

அன்றிலிருந்து நீரை தனிப்பட்ட முறையில் சுத்திகரிக்க மின்சார சக்தியை பயன்படுத்துவது நின்றுவிட்டது. ஏற்கனவே மின்சாரத்தால் இயங்கும் குளிர்பதன இயந்திரம் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு உப பொருளாக தந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு 12 லிருந்து 15 லிட்டர் வரை சுத்தமான பரிசோதனைகளுக்கேற்ற நீர் கிடைக்கிறது. ஆனால் தேவையோ 10 லிட்டருக்கும் குறைவு.

10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீருக்கென 3KW மின்சார சக்தியை பயன்படுத்தினால் இரண்டரை மணிநேரங்கள் தேவைப்படும். அதற்கான மின்சக்தி ஏழரை யூனிட்டுகள், ஒரு மாதத்தில் சுமார் 200 யூனிட்கள் சேமிக்கப் படுகின்றது.

தொழிற்சாலையின் முழு மின்சக்தித் தேவையில் இந்த சேமிப்பு சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை. ஆயினும் இதை யாவரும் கடைபிடிக்க முன்வந்தால் கணிசமான நீர் சேமிப்பும் மின்சார சேமிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குறிப்பிடுகிறேன்.

உதாரணத்திற்கு 1.5 ton அறை குளிரூட்டும் எந்திரம் எட்டு மணிநேரம் வேலை செய்தால் 2.5 லிருந்து 3.0 லிட்டர் தண்ணீர் வெளியேற்றும். பெரிய திரை அரங்குகள், ’மால்’களில் நிறுவப்பட்டிருக்கும் ராட்சஸ குளிரூட்டும் எந்திரங்களால் ஒரு நகரத்திற்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் வாகனங்களுக்கான பாட்டரி தர சுத்திகரிக்கப்பட்ட நீரை சுலபமாக சேமிக்கலாம்.

இப்படி நம் முன் இருக்கும் பலப்பல வழிகளை முனைப்புடன் ஒருங்கு படுத்தினால் நீர் மட்டுமல்ல மின்சக்தியையும் சேமிப்பவர்களாவோம்.இவ்வருட தலைப்பு Transboundry water அதாவது ”எல்லைகளைக் கடக்கும் நீர்பெருக்கு” மேலும் விவரங்களுக்குhttp://www.worldwaterday.org/
மற்றும் http://www.unwater.org/

அப்பாடா ! சிறு துளிப் பெருவெள்ளம். நானும் ஒரு இடுகையை உலக தண்ணீர் தினத்திற்காக எழுதி சமர்ப்பணம் பண்ணியாச்சு.

4 comments:

mohanpuduvai said...

Very Good and Useful meassage.
Thank You

KABEER ANBAN said...

வாங்க மோகன்

நல்ல விஷயங்கள் ஏதாவது தூண்டுதல் இருந்தால்தான் நினைவுக்கு வருகிறது. உலகத் தண்ணீர் தினம் ஒரு தூண்டுதல்.

பின்னூட்டத்திற்கு நன்றி

அறிவே தெய்வம் said...

முன்னேற்றத்தை மனதில் கொண்ட
மிக நல்ல பதிவு, தொடர்ந்து இதுபோல்
எழுதுங்கள். வாழ்த்துகள்.

KABEER ANBAN said...

அறிவே தெய்வம் நல்வரவாகுக.
பயனுள்ள பதிவாக பாராட்டியதற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி