Friday, February 16, 2007

முள்ளை முள்ளால் எடு

SPELLING BEE என்பது இன்று மிக உற்சாகத்துடன் கவனிக்கப்படும் போட்டி, இது நடைபெறுவது அமெரிக்காவில். உலகில் பல பகுதிகளிலும் இதனை பல கட்டங்களில் ஒளி பரப்புகிறார்கள். பங்குபெறுவோர் பதினான்கு வயதுக்குட்பட்ட (அல்லது 16) பள்ளி மாணவ மாணவிகள்.

உச்சரிக்கப்படும் ஒரு ஆங்கில வார்த்தைக்கு உரிய எழுத்துகளை கண்டுபிடிக்க வேண்டும். உச்சரிக்கப்படும் வார்த்தையின் பொருள், வேர்ச்சொல் (அதாவது மூலம்) சமயங்களில் சில குறிப்புகளும் தரப்படும்.

கொடுக்கப்படும் சொற்களைக் கேட்டால் நமது (எனக்கு) தலைசுற்றும். மருத்துவச் சொற்கள், புவியியற் சொற்கள் என்று எங்கெங்கிருந்தோ வரும். அமைதியாக அச்சொற்களை பலமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டு தத்தம் கைகளிலே எழுதிப்பார்த்து முடிவில் சரியான விடையை கூறி தன்னம்பிக்கையோடு திரும்பிச் செல்லும் குழந்தைகளைப் பார்க்கும் போது நமது விரல் மூக்கின் மேல். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இதில் இறுதி சுற்றுகளில் கடும் போட்டி கொடுப்பது நம் தேசத்து வம்சாவழியினரின் குழந்தகைள். நம்மவர்கள் எங்கு சென்றாலும் ஜே!

இன்னொரு ஆச்சரியம். எப்படி இந்த குழந்தைகள் ஆங்கிலத்திலே, கிரீக் லத்தீன் அல்லாத வெளி மொழிகளிலிருந்து வரும் சமீபகாலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வார்த்தைகளுக்கும் சரியான பதில் சொல்கிறார்கள் என்பதே. இது பிலிப்பைன் நாட்டில் வைக்கப்படும் குழம்பின் பெயராகவோ அல்லது ரஷ்யாவில் உபயோகப்படுத்தும் ஒரு வாசனை திரவியமாகவோ அல்லது ஜப்பானில் நெய்யப்படும் ஒரு துணியாகவோ, இந்தியாவின் கேரளத்தில் புழங்கும் ஒரு மசாலாப் பொருளாகவோ இருக்கலாம். ஐந்து நட்சத்திர விடுதியின் நிரல் அட்டவணையில் காணப்படும் Mulligatawny Soup ஒரு உதாரணம். நம்ம ஊர் மிளகு தண்ணியின் அவதாரம் தான் அது. அனைத்துக்கும் ஈடு கொடுக்கின்றனர் குழந்தைகள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பிற மொழிகள் ஆங்கிலத்தை வளமையாக்கிக் கொண்டிருக்கின்றன. பிற மொழிச் சேர்க்கையால் ஆங்கில மொழி வளர்ந்து வருகின்றதே அன்றி அழிந்து விடவில்லை.

உலக வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சில நாடுகளின் அதிகாரமும் அவர்களின் ஆட்சி மொழி கொடிகட்டிப் பறப்பதையும் பார்க்கிறோம். இதற்கு முக்கிய காரணம் வர்த்தகம். வருங்காலத்தில் சீன மொழி உலகில் மிகப் பரவலாகப் பேசப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனால் இத்தகைய மாற்றங்களால் ஒரு மொழி அழிந்து விடுமா? அப்படி யென்றால் தமிழ் என்றோ செத்துப் போயிருக்க வேண்டுமே. நாயக்கர்கள் காலத்தில் தெலுங்கு, பின் மராட்டியர் காலத்தில் மராட்டி, நவாபுகளின் காலத்தில் உருது அதன் பின் ஆங்கிலம் போன்ற பல காலங்களில் சிதைந்து போவதற்கான வாய்ப்புகளையும் மீறி கணிணி காலத்திலும் கொடிகட்டிப் பறக்கிறதே தமிழ் !
இதற்கு காரணம் தமிழ் வலுவான இலக்கண அடிப்படை கொண்ட ஒரு மொழி. ஆகையால் அதனை சுலபமாக சிதைக்க முடியாது. கவனக் குறைவால் சற்றே பின் தங்கி விட்டாலும் தகுந்த கட்டமைப்புக்கான வடிவு முறைகள் உள்ளதால் மீண்டும் உயிர் கொடுக்க ஒரு மீனாட்சிசுந்தரமோ, உவேசா வோ, பாரதியோ, கவிமணியோ நம்மிடையே வருவார்கள். மீண்டும் ஒரு உத்வேகம் பிறக்கும்.

குழந்தைகளை வைத்து ஆரம்பித்தேன். அவர்கள் கையில் தானே எதிர் காலமும் உள்ளது. தனியார் நிறுவனங்கள், தொலைக்காட்சியினர் இணைந்து பன்னிரண்டு முதல் பதினாறு வயது குழந்தைகைகளுக்கு ஆத்திச்சூடி ஆசாரக்கோவை, நன்னூல், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போன்ற நூல்களிலிருந்து அந்தாக்க்ஷரி, பொருளுரைத்தல், விட்ட இடத்திலிருந்து தொடருதல் என்பன போன்று பலவித போட்டிகளை கவர்சிகரமான பரிசுகளோடு நடத்த முன் வர வேண்டும். ஆயிரக்கணக்கான பள்ளிகளிடையே ஒவ்வொரு வருடமும் நல்ல கற்பனை வளத்துடன் நடத்த ஆரம்பித்தால் நமது குழந்தைகள் மட்டுமல்ல அவர்களது தாய் தந்தையரும் உற்சாகமாகத் தமிழ் கற்றிடுவர். நம் முன்னோர்களின் தீர்க்க சிந்தனையை பாராட்டும் பக்குவமும் வரும்.

பாரம்பரியம் என்பதால் வேஷ்டிக் கட்டி துண்டு போட்டத் தமிழாசிரியர் தான் சுத்தத் தமிழ்பேசி நடத்த வேண்டும் என்பதில்லை. பிற நிகழ்சிகளைப்போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக ஜீன்ஸும், டீ ஷர்ட்டுமாக (இவைகளுக்கான தமிழ் வார்த்தைகள் எனக்கு தெரியாது;தெரிந்தவர்கள் சொல்லவும்) வண்ணக் விளக்குகளின் நடுவே தமிழை பொங்குவிப்பின் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். சிறிது முனைப்புடன் செயல் பட்டால் கண்டிப்பாக மக்களிடையே வரவேற்பு பெறும். யாருக்குத்தான் தங்கள் குழந்தைகளின் திறமையை உலக மேடையில் பார்க்க விருப்பம் இருக்காது ?

இல்லாவிட்டால் "ஒட்டகத்தைக் கட்டிக்கோ" வும் "லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே" யும் "அழகான ராட்சசி" களும் தான் தமிழ் என்று இளைய தலைமுறையினர் நம்பும் நிலைக்குத் தள்ளப்படுவர். இதற்கு பொறுப்பு யார்?

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

பிற மொழிகளால் தமிழுக்கு ஆபத்து இல்லை. பிறரைத் தூற்றுவதை விட்டு ஆக்கப் பூர்வமாக தமிழ் வளர்க்க தமிழ் பற்றுள்ளவர்கள் ஆலோசிக்க வேண்டும்.

2 comments:

அகரம் அமுதா said...

//////மீண்டும் உயிர் கொடுக்க ஒரு மீனாட்சிசுந்தரமோ, உவேசு வோ, பாரதியோ, கவிமணியோ நம்மிடையே வருவார்கள். மீண்டும் ஒரு உத்வேகம் பிறக்கும்/////

இனி அவர்களேல்லாம் தேவையில்லை. புதுக்கவிதையாளர்கள் போதும். தூக்கி நிறுத்தி விடுவார்கள்.

/////பன்னிரண்டு முதல் பதினாறு வயது குழந்தைகைகளுக்கு ஆத்திச்சூடி ஆசாரக்கோவை, நன்னூல், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போன்ற நூல்களிலிருந்து அந்தாக்க்ஷரி, பொருளுரைத்தல், விட்ட இடத்திலிருந்து தொடருதல் என்பன போன்று பலவித போட்டிகளை கவர்சிகரமான பரிசுகளோடு நடத்த முன் வர வேண்டும்.//////

ஆம் இக்கருத்தோடு உடன்படுகிறேன் தோழரே! மிக அழகான சிந்தனை இது.

////இல்லாவிட்டால் "ஒட்டகத்தைக் கட்டிக்கோ" வும் "லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே" யும் "அழகான ராட்சசி" களும் தான் தமிழ் என்று இளைய தலைமுறையினர் நம்பும் நிலைக்குத் தள்ளப்படுவர்.////

இந்த கொடுமையிலிருந்து காக்கத்தான் தனித்தமிழ் கோருகிறோம்.

////பிற மொழிகளால் தமிழுக்கு ஆபத்து இல்லை. பிறரைத் தூற்றுவதை விட்டு ஆக்கப் பூர்வமாக தமிழ் வளர்க்க தமிழ் பற்றுள்ளவர்கள் ஆலோசிக்க வேண்டும்.////

முழுக்க முழுக்க உண்மையே என்போன்றோருக்குப் பிற இனத்தையோ மொழியையோ பார்த்து அச்சமில்லை.தமிழை அழிக்கிறோம் என்பதே தெரியாது அழித்துக்கொண்டிருக்கும் தமிழனைப்பார்த்துத்தான்.

வாழ்த்துக்கள் நண்பரே! மிக அழகிய கட்டுரையைப் படிக்க முன்மொழிந்தமைக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.

KABEER ANBAN said...

நல்வரவு அகரம்.அமுதா

//புதுக்கவிதையாளர்கள் போதும். தூக்கி நிறுத்தி விடுவார்கள். //

தங்கள் நம்பிக்கையைக் காண மகிழ்ச்சியாய் இருக்கிறது.

//இந்த கொடுமையிலிருந்து காக்கத்தான் தனித்தமிழ் கோருகிறோம்.//

யாரிடம் ?

’முள்ளை முள்ளால் எடு’ என்றதன் நோக்கமே வர்த்தகக் காரணங்களால் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மூலம் ஏற்படும் எதிர்மறைத் தாக்கலை தடுக்க அதே வர்த்தகக் கண்ணோட்டத்துடன் நல்ல தமிழையும் இளம் தலைமுறையினரிடையே புகுத்த வேண்டும். பரிசுகள் பெரிதாக இருந்தால் போட்டியும் கற்றலும் பெரிய அளவில் இருக்கும். பெரிய அளவில் பேசப்படும்.

இதற்கான வழிமுறைகளை அங்கங்கே உள்ள தமிழ்சங்கங்கள் ஒன்றிணைந்து யோசிக்க வேண்டும்.

கருத்து பரிமாற்றலுக்கு நன்றி.