Tuesday, February 6, 2007

கூகிள் ரீடர் -தனித் திரட்டி- உங்கள் திரட்டி

தமிழ் திரட்டிகள் மிக அழகாக, வெளியாகும் வலைப்பூக்களைத் தொடுத்து உடனுக்குடன் வழங்கி ஒரு பெரும் சேவை செய்து வருகின்றன. இதில் இடுகைகளின் வேகமும் பின்னூட்டங்களில் போட்டியும் புல் வளர்வதை விட படு வேகமாக காணப்படுகிறது. வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நம்மால் அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து மேய முடியாமல் போய் விடுவதுதான். நமது பசிக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. ஆனால் வேறு கடமைகளும் உள்ளனவே.

இதற்கான தீர்வை கூகிள் ரீடரில் கண்டு கொண்டேன். "பட்டால் தெரியும் பழசும் புதுசும்". நான் விழுந்து எழுந்து வருவதனால் எனக்கு இது புதுசாகத்தெரிகிறது. ஏற்கனவே அறிந்தவர்கள் என்னுடைய கற்றலில் உள்ள நிதானத்தை மன்னிப்பார்களாக.

பலரும் புது மனைப் புகுவிழா (புதிய ப்ளாகர் ) நடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒவ்வொருவரும் கூகிள் அடையாளத்தோடு தான் உள் நுழைய முடியும். அதே அடையாளத்துடன் கூகிள் ரீடருள்ளும் நுழைய முடியும் ! ஆகையால் இதற்கென தனி சிரமம் எதுவுமில்லை.

கூகிள் ரீடர் என்பது என்ன ? இது உங்கள் தனி திரட்டி. உங்களுக்கு பிடித்தமானவர்களின் வலைப்பூக்களை இதில் இணைத்துக் கொண்டுவிட்டால் ஒரு இடத்திலிருந்தே அனைவரது புதுப்பதிவுகளையும் பார்த்துக் கொள்ளலாம். (இதை கூகிள் திரட்டி செய்து கொடுக்கிறது). வேறு வேலை காரணமாக சில நாட்கள் கணிணி பக்கம் போகமுடியவில்லையா? கவலை வேண்டாம் படிக்காமல் விட்டுப் போன இடுகைகள் அனைத்தையும் கூகிள் ரீடர் அதை நீங்கள் இன்னும் படிக்காததாக சுட்டிக் காட்டும். மேலும் அங்கிருந்தே நேராக குறிப்பிட்ட இடுகைக்குச் செல்ல தனி ஜன்னலில் இணைப்பும் பெற முடியும். இதனால் பின்னூட்டம் இட்டுவிட்டு அந்த ஜன்னலை மூடிவிட்டு திரும்பவும் விட்ட இடத்தில் தொடர முடியும். வெறும் தமிழ் மட்டுமன்றி எல்லா மொழி ப்ளாகர் களையும் இதில் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.

ஒரு சங்கடம் பதிவாளருக்கு. உங்களுடைய விஜயம் அவருடைய எண்ணிப்பான்(counter) கணக்கிற்கு வராது, நீங்கள் பின்னூட்டம் இடாவிட்டால். ஏனெனில் இந்த சேவை அடொம் மூலம் தரப்படுகிறது. யாரேனும் ஒரு பதிவை இட்டு விட்டு அதை நீக்கியிருந்தாலும் ஆடம்-ல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ரீடரில் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். அப்படிப் பட்ட சில பதிவுகளையும் கண்டேன்.

தேவைப்பட்டால் நீங்கள் Mark as unread என்று குறித்துவிட்டால் எந்த குறிப்பிட்ட இடுகையும் உங்கள் பார்வையில் இருந்து கொண்டே இருக்கும். அலுப்புத்தட்டும் இடுகைகளை Mark as read என்பதை சுட்டிட்டு பார்வைக்கு வராமலே மறந்து விடலாம்.

ஆனால் பின்னூட்டத்திரட்டி இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர் சொல்லுங்களேன்; Please.

2 comments:

ரவிசங்கர் said...

கூகுள் ரீடர் அருமையை மூன்று மாதம் முன்னர் உணர்ந்தவன் நான். அதுவும் இது போல் இன்னொரு பதிவர் வெளியிட்ட உதவிக்குறிப்பின் மூலமே. நீங்கள் இப்பொழுது சொல்லி இருப்பதும் சிலருக்கு உதவி இருக்கும். நானும் திரும்ப இது குறித்து எழுதலாம் என்றிருக்கிறேன். நம்ம மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இன்னும் பத்தலை :(

கபீரன்பன் said...

நன்றி ரவிசங்கர், தாங்கள் எழுதும் பொழுது இன்னும் பல நுணுக்கங்களை வெளியிடுங்கள். இதை வேறு திரட்டிகள் இருந்தால் ஒப்பிட முடியுமா ? டெக்னோகிராட்டி என்பது என்ன ? எனக்கு அதிகம் பிடிபடவில்லை :(