வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே சுரத்து போய் விட்டது. முதல் காரணம் நமக்கு வேண்டியவர்களுக்கு இன்னும் தொலைப்பேசி தெய்வத்தின் வரம் கிடைக்கவில்லை. இரண்டாவது, நமக்கு சாமியின் வரம் கிடைத்திருந்தாலும் இணையகத்தின் பூசாரிகளின் வரம் கிடைப்பது அதனினும் அரிது. யாரிடம் தொலைப்பேசுவது ? வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மணியடித்திருந்தால் அதுவே பெரிய விஷயம்.
முப்பது வருடங்களுக்குள் நிலைமை தலைகீழ்.
செயற்கைக்கோள், கணிணி மற்றும் கைப்பேசிகள் (செல்போன்) உலகில் தகவல் தொடர்பை ஒரு விளையாட்டு ஆக்கி விட்டன. இதில் செயற்கைக்கோள் கடவுள் போல. எங்கோ கண்ணிற்குத் தெரியாத தூரத்தில் இருந்து இயக்குவது. கணிணிகள் ஆத்மாவைப்போல. எல்லா உயிர்களிலும் "உள்ளிருந்து இயக்குவது ஒரே ஆத்மா"தான் என்பதைப் போல. கைப்பேசிகள் மனிதரின் வடிவங்கள். வெறும் கூடு. ஒவ்வொன்றும் ஒரு ரகம்; பலவிதம் மனிதர்களைப் போலவே !
பிறவிகளின் தொடர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மனிதர்களின் பூர்வ ஜன்ம வாசனைகளே என்று ஆன்மீகம் கூறுகிறது. இதை Bundle of Thoughts என்று கூறுவர். ஆசைகள் அறுமின் ஆசைகள் அறுமின் என்பது திருமூலர் வாக்கு. அதாவது பிறவிகளுக்கு காரணமான வினைப் பதிவுகளை விலக்குவீர் என்று பொருள்.
இதை புரிந்து கொள்வது எப்படி. நாம் ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது எப்படி பல நூறு அல்லது ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி உள்ள இன்னொரு கைப்பேசியை தேடி அடைகிறது ? செய்தி என்பது Bundle of characters. கணிணி அதை பூஜ்யம் மற்றும் ஒன்று என்ற இலக்கங்களின் கூட்டாகத்தான் அதை அடையாளம் கொள்ளும். அது அதற்குரிய விலாசம் கிடைக்கும் வரை எங்கோ ஒரு கணிணியுள் சேமிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கைப்பேசி இயக்கப்பட்டதும் உடனடியாக கணிணி அதைக்கண்டறிந்து அனுப்பி வைக்கிறது. நமது கைப்பேசி அக்கூட்டு இலக்கங்களை குறி பெயர்த்து மீண்டும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் அளிக்கிறது. செய்தி அனுப்பிய காரியம் நிறைவேறியது.
ஆனால் அத்துடன் நிற்பதில்லையே. பெற்றவர் உடனே பதில் செய்தி பதிகிறார். விளையாட்டு தொடர்கிறது.
வினை, எதிர்வினை என்னும் இந்த சுழலில் சிக்குண்டு எப்பொழுதும் வினைப்பதிவுகள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. ஒரு கைப்பேசி வேலை செய்யாவிட்டால் புதிதாக ஒன்றை மாற்றிக் கொள்வது போல நமது பூதவுடல் ஒத்துழைக்க மறுக்கும் பொழுது, சூக்ஷ்ம உடல் (வினைப் பதிவுகளின் தொகுப்பு SIM card) இன்னொரு பூதவுடலுக்கு மாற்றப்படுகிறது. மீண்டும் வினப்பதிவுகளின் coding decoding விளையாட்டு.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்.... என்பது வள்ளுவரின் வாக்கு. "இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து...." என்பது அவ்வையின் அகவல். பாவம் புண்ணியம் என்ற இருவினையுமே இருள் (அஞ்ஞானம்) சேர்ப்பவையே. இறைவனுக்கு எந்த வினையும் இல்லை. அவைகளை கடந்த நிலையே பிறவியை கடக்கும் வழி.
வெறும் வினைதான் இரண்டு என்பது இல்லை.
இயற்கையின் அமைப்பே pairs of opposites எனப்படும் துவைதநிலைதான். ஆண் பெண்; இரவு பகல்; வெப்பம் தணிப்பு ; புரோட்டான் எலக்ட்ரான் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மரபணு அளவிலே DNA வின் கூறமைப்பும் double helix. உலகில் படைத்தல் நிகழ அடிப்படை காரணத்திலேயே துவைதம் ஒளிந்து கொண்டுள்ளது. இதைத்தான் சிவம் என்றும் சக்தி என்றும் வகைப்படுத்தி வைத்துள்ளனரோ பெரியோர்கள் !
இந்த துவைதம் கணிணியையும் விட்டு வைக்கவில்லை. பூஜ்யம் (0) மற்றும் ஒன்று(1) இல்லாவிட்டால் Binary code ஏது ? பின்னர் கணிணிதான் ஏது ? கணிணியில் பார்த்து மகிழும் எல்லா வர்ணங்களும் ஆட்டம் பாட்டம் எல்லாம் இந்த (0) (1) க்குள் அடக்கம்.
மனிதனை விட மிக மிகப் பெரிய Designer இறைவன். அதனால் அவன் அதை ஒரு மெகா சைஸில் செய்து நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான்.
அவன் நம் SIM CARD ஐ எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் ?
7 comments:
எனக்கு இறை நம்பிக்கை இல்லை. ஆனாலும், உங்கள் ஒப்பீடும், எழுத்து நடையும், நன்றாக இருக்கிறது.
அருமையான பதிவு... உண்மை...
நல்ல ஒப்பீடு கபீரன்பன். வெற்றியின் இந்த வாரப்பதிவுகள் இடுகையிலிருந்து இங்கே வந்தேன். நன்றாக இருக்கிறது.
As you have enabled Comment Moderation, Word Verification is not required. Can you please remove it?
ஆழியூரான், sursh,குமரன் அனைவரின் வருகைகளும் நல்வரவாகட்டும்.குமரன் நீங்கள் குறிப்பிட்டபடி word verification ஐ நீக்கி விட்டேன். நன்றி
நல்ல பதிவு.
/* மனிதனை விட மிக மிகப் பெரிய Designer இறைவன். அதனால் அவன் அதை ஒரு மெகா சைஸில் செய்து நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான். அவன் நம் SIM CARD ஐ எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் ? */
சிந்திக்க வைக்கும் வரிகள்.
சூப்பரு! நல்லா இருந்தது கபீரன்பன் ஐயா, உங்க இறைக் கைப்பேசி! :)
//அவன் நம் SIM CARD ஐ எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் ?//
மனிதன் கண்டுபிடிக்க முடியாத, அதே மனிதனிடத்திலேயே தான் ஒளிச்சி வச்சிருக்கான்! :)
Post a Comment