Friday, December 9, 2016

அலைபேசியில்லா காசற்ற வாணிகம்

’காசில்லா வியாபாரம்’ என்றால் பண்ட மாற்று முறை என்பதை பழைய சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறோம்.

இப்போது வேண்டுமானால் அதை “காசற்ற வாணிபம்” என்று மாற்றிக் கொள்ளலாம். Cashless transactions.
இதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் புதுப் புது சலுகைகளை அறிவித்துள்ளது.  இதில் எதுவும் எளிய மக்களுக்கு சுலபமாகப் படக்கூடியதாகக் காணப்படவில்லை. கடைக்காரர்கள் QRC  வைத்திருக்க வேண்டும். அதன் பின் அதை நம் அலைப்பேசியில் படம் பிடித்து அதன் சொந்தக்காரரை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். எல்லா இடத்திலும் எப்போதும் எல்லாரிடத்தும் ஆண்ட்ராய்ட் அலைபேசிகள் இருக்க முடியுமா என்பது கேள்வி.

Saturday, October 15, 2016

நலம் தரும் இதை வாசி, சுருள்பாசி- தாய் சேய் நலம்

சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சுருள்பாசியை ( Spirulina) பற்றிய பதிவை இன்றும்  அதிகப்படியான வாசகர்கள் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூகிள் சேவை மூலம் அறிந்து கொண்டேன்.

அப்படி இருக்கும் போது அதைப் பற்றிய மேற்கொண்டு விவரங்களை பதிவு செய்தால் பலருக்கும் நன்மை அளிக்குமே என்ற எண்ணத்தில்  எழுந்ததுதான் இந்தப்பதிவு.  இதில்  தாய் சேய் நலத்திற்கு  சுருள்பாசி  எப்படி பயனளிக்க வல்லது என்பதை காண்போம்.

Monday, September 26, 2016

சோலார் பவரும் என் அனுபவங்களும்-4



எப்பொழுது  எங்கள் ”மாலை 2 காலை ” மின் பற்றாக்குறைக்குக் காரணம்  குளிர்பதனப் பெட்டி என்று எனக்கு எண்ணம் ஏற்பட்டதோ  அப்போழுதே  அதற்கான பரிகாரம் தேட ஆரம்பித்தேன்.

இப்பொழுதெல்லாம்  நட்சத்திர குறிப்புடன் திறம் மிக்க  குளிர்பதனப் பெட்டிகள், அறை குளிரூட்டல், தண்ணீர் காய வைத்தல் போன்ற சாதனங்களுக்கு  வந்திருப்பதால்  நம்முடைய பழைய எந்திரங்களின்  திறனை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. அப்படிப் பார்த்ததில்  என்னுடைய ஃபிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டி கிட்டத்தட்ட  மூன்று மடங்கு சக்தியை உபயோகித்துக் கொண்டிருந்தது

Wednesday, September 14, 2016

சோலார் பவரும் என் அனுபவங்களும் -3


வெற்றிகரமாக சூரியமின் சக்தி தகடுகளை நிறுவி வீட்டிற்கு இணைப்பு கொடுத்தாகி விட்டது. இதனை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதை அதை நிறுவ வந்த இஞ்சினியருக்கே சொல்லத் தெரியவில்லை.

அவர் பொதுவாக சொன்னது
“ நல்ல அவுட்புட் வேணும்னா வெயில் இருக்கும் போதே எல்லா வேலையையும் செஞ்சுக்குங்க. சாயங்காலம் அஞ்சுமணிக்கு மேலே பாட்டரிலே ஓடட்டும். அந்த நேரத்துல ஹீட்டர் மாதிரி ஹெவி லோட் குடுக்காம இருந்தா ராத்திரி பூராவும் பாட்டரி பேக்-அப் லே ஓடும். கிரைண்டர், மிக்ஸி,  வாஷிங்மெஷின், ரைஸ் குக்கர் இப்படிப்பட்ட சமாசாரத்தையெல்லாம் காலைல எட்டு மணியிலேருந்து மதியம் மூணு -இல்லை-நாலு மணிக்குள்ள முடிச்சுட்டீங்கனா எல்லாம் சோலார்பவர்-ல நடந்துறும். பாட்டரில மிச்சம் ஸ்டோராயிருக்கிற பவர் ராத்திரிக்கு  டிவி, பிரிட்ஜ், லைட் வரைக்கும் போதுமானது.”

Saturday, July 30, 2016

சோலார் பவரும் என் அனுபவங்களும்-2


சென்ற பதிவின் தொடர்ச்சி......

அறிவு தெளிந்த படலம்:


என் கணக்கே வேறு என்று நான் சொல்வதற்குக் காரணம் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ள பெரும்பாலானவர் தவறி விடுகின்றனர்.

உதாரணத்திற்கு 2016 ஏப்ரலில் பயனர் குறியீடு 271 அது 2001-ல் 100 என்கிற அடிப்படையில் குறிக்கப்படுகிறது. இது 11.4% வருடதிற்கு வீழ்ச்சியாகும்.  எளிமையாக சொல்ல வேண்டுமானால் ரூ 100க்கு 2001-ல் வாங்கிய பொருளின் இன்றைய விலை ரூ 271

Friday, July 29, 2016

சோலார் பவரும் என் அனுபவங்களும் -1

அறிந்தவை- அறியாதவை படலம்

”கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பது வள்ளுவர் வாக்கு. அதையே  ஆங்கிலத்தில் சொல்வதானால் “Practice  before you Preach” என்று சொல்லலாம்.

சூரிய சக்தியில் இருசக்கிர வண்டி மின்னூட்டம் பற்றி வாய்கிழிய பேசி என்னப் பிரயோசனம்? அடுத்தவர்களுக்கு உபதேசம் போதும், உன்னளவில் முடியக் கூடியதை நீ செய்திருக்கிறாயா என்று உள்மனம் குத்த என் வீட்டு மின்சக்தித் தேவைக்கு சூரிய தகடுகளை நிறுவிட முடிவு செய்தேன். ”An ounce of performance is better than promise of an acre”

அதாவது அரசாங்கத்தை நம்பாமல் என் வீட்டு மாடியிலேயே எங்களுக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வது.
பிரச்சனையின் முதல் கட்டம், வீட்டாரை ஒப்புக் கொள்ள வைப்பது. 

அதாவது அதிக சக்தி தேவைப்படும் அறைக் குளிரூட்டல், சுடுநீர் காய்க்கும் Geyser தவிர மற்றவை எல்லாம் இயங்கத் தேவைப்படும் சக்தி 2.0 KW  என முடிவாயிற்று. இதில் குளிர்பதனப் பெட்டி, சலவை எந்திரம், நீர் இறைக்கும் பம்பு, அன்னம் வடிக்கும் மின்சட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, அரவை எந்திரங்கள் என்று எல்லாவற்றையும் இயக்கக் கூடும்  என்பதை இரண்டு மாதங்கள் மின்சார அளவை காலையிலும் மாலையிலும் கணக்கெடுத்து பட்டியல் போட்டு காட்டிய பின் வீட்டில் “ எங்களுக்கு என்னவோ இது வேண்டாத செலவாகத்தான் படுது. சும்மா  பதினஞ்சாயிரத்துல ஒரு UPS போட்டு மாடியிலே ஒரு ரூம் கட்டினா உபயோகமாவது இருக்கும்” என்று அரை மனதான ஒப்புதல் கிடைத்தது. அவ்வப்போது நடந்து கொண்டிருந்த மின் துண்டிப்புக்கு அரசாங்கத்துக்கு நன்றி.

இது நடந்து கொண்டிருக்கும் பொழுதே பல தயாரிப்பாளர்களோடு தொடர்பு கொண்டு எந்த கட்டத்திலும் கைவிட்டு விடாத தொழில்நுட்பம் தரும் தயாரிப்பாளரைக் கண்டறிந்து 2.0 KW சூரியத் தகடுகளை நிறுவ ஆகும் செலவு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்கள் என்றறிந்தேன். ஒருவேளை வீட்டார் சொல்வதிலும் அர்த்தம் உள்ளதோ என்று தோன்றியது. ஆனாலும் முன் வைத்த காலை பின் வைக்காத வீரத்துடன் (சிலர் இதை வீண் பிடிவாதம் அல்லது வீம்பு என்றும் சொல்வதுண்டு) முடிவை செயல்படுத்தத் துவங்கினேன்.

“சார் வீட்டுக்கு போடற UPS தான்.  பிரிட்ஜ் வாஷிங் மெஷின் எல்லாம் வேணும்னா பாட்டரி கொஞ்சம் பெரிய சைஸ் போட்டு  சோலார் பேனலோட கனெக்ட் பண்ணிக்க வேண்டியதுதான். வெறும் UPS வைச்சிக்கிரவங்க 100 Ah பாட்டரி, 800 VA இன்வெர்டர் போட்டுக்குவாங்க.  நீங்க நாலு 150 Ah பாட்டரி, 2000 VA சார்ஜர்-கம்-இன்வெர்ட்டர் போட்டுகுங்க. நாங்க இதை பவர் கண்டிஷன் யூனிட் அப்படீன்னு சொல்வோம். பாட்டரி ஓவர் சார்ஜ் ஆகாம இருக்க இன்-பில்ட் ப்ரொடெக்‌ஷன் இருக்கு. பாட்டரி டௌன் ஆயிடிச்சுன்னு வச்சுக்குங்க – ஆகாது, அப்படி ஆச்சுன்னா-தானே EB சப்ளைக்கு மாத்திக்கும்.  சூரிய வெளிச்சம் இருக்கும் போது சோலாருக்குதான் பிரயாரிடி. இதனால் எலெக்டிரிசிடி பில் குறையும். நீங்க மாசம் மினிமம் கட்டினா போதும். உங்களுக்கு 24 அவர்ஸ் கன்டினியூவஸ்  பவர் சப்ளை இருக்கும். இதுல ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனோட வைஃபை கனெக்‌ஷன் மூலமா நீங்க எங்கிருந்தாலும் பெர்ஃபார்மன்ஸ் மானிடர் பண்ணிக்கலாம். உங்க பிரயாரிடி மாத்திகலாம். சோலார் பேனல் 20 வருஷம் கியாரண்டி. நாலு இல்ல அஞ்சு வருஷத்துல பாட்டரி மட்டும் மாத்த வேண்டி வரும்” என்று விவரித்தார் அந்த தொழில்நுட்பப் பொறியாளர். கேட்பதற்கு எல்லாம் மிக மிக சுவையாக இருந்தது.



‘அம்மா’ ன்னு பசுமாடு கத்தறத கேட்டதும் SV சேகருக்கும் பாண்டியராஜுக்கும் பால் பண்ணை வச்சு ஊரெல்லாம் பால் வினியோகம் செய்யற கற்பனை மாதிரி என் கற்பனையும் கொடிகட்டி பறந்தது. ஆனாலும் இந்த பாட்டரி செலவு கொஞ்சம் குறைந்தால் தேவலாம் என்று தோன்றியது.

 “சரி 800 VA பவருக்கு 100 Ah பாட்டரின்னா 2000 VA க்கு 250 பாட்டரி போதாதா என்ற என் கேள்விக்கு அந்த மனுஷன் பார்த்த பார்வை இருக்கே அப்படியே வடிவேலு பார்வையை ஞாபகப்படுத்தியது. ‘ ஏண்டா! இப்படி எத்தனை பேரு கிளம்பிட்டீங்க’ அப்படீன்னு கேட்கிற மாதிரி இருந்தது. ஆனாலும் ஒரு மாதிரி சமாளித்து  சிரித்துக் கொண்டே ” இது கரெண்ட் வைச்சு முடிவு பண்ற விஷயம் சார். நீங்க சொல்ற ஐட்டத்துல 50 % ஒரே சமயத்தில ஓடிச்சினா கூட அதுக்கு வேண்டிய கரெண்ட் நாலு மணி நேரத்துக்கு தொடர்ந்து குடுக்கணுமின்னா இந்த கெபாஸிடிய கம்பெனி ரெகமண்ட் பண்ணுது. 250Ah பாட்டரில ஒரு மணி நேரம் கூட சப்ளை கிடைக்காது”  என்று சொல்லி புரிய வைக்க முயற்சித்தார்.  ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ரூபாய் அறுபதினாயிரம் செலவு. அதாவது மாதம் ரூ. ஆயிரம். என்னுடைய மாதாந்திர பில்லே அவ்வளவுதான் என்னும் போது எதற்கு சோலார் என்ற கேள்வி பல திசைகளிலிருந்து பாய்ந்தது. அந்த அறுபதினாயிரத்துக்கு வட்டியே மூன்று நான்கு மாதங்களுக்கு பில் கட்டுமே என்று (சரியான) கணக்கு சொல்லினர் சகாக்கள்.
ஆனால் என் கணக்கு வேறு விதமாக இருந்தது.

Wednesday, May 18, 2016

சூரிய சக்தியும் மின்சார வண்டியும்

எனக்கு எப்போதுமே மரபுசாரா எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தி  உபயோகத்தில் ஆர்வம் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தினத்திற்கு தினம் பெருகி வரும் மாசடைந்த காற்றும் சுற்றுச் சூழலுமே ஆகும்.

உதாரணத்திற்கு பெங்களூர் நகரில் மட்டும் 52 லட்சம் இருசக்கிர வாகனங்கள் வளைய வருகின்றன. நம் நாட்டில் மாதந்தோறும் 14 முதல் 17 லட்சம் இருசக்கிர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதன் விளைவு, ஆண்டுக்கு சுமார் 50 முதல் 60 லட்சம் டன் கரிமல வாயு வெளிப்படுகிறது.

அதன் பரிமாணம் இன்று பெங்களூர் நகரத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பம் 39 டிகிரியை தொட்டு இருக்கிறது. வெகுகாலமாக பெங்களூரில் வசிப்பவர்கள்
 பத்து வருடங்கள் முன்பு வரை 34 அல்லது 35 டிகிரியே மிக அதிகம் என்று நினைத்து வந்தனர்.  மனம் போன போக்குபடி அடுக்கு மாடி கட்டடங்கள் எழுப்புவதும் மரங்களும் திறந்த வெளிகள் குறைந்து வருவதும் எல்லாவற்றிற்கும் மேலாக புகையையும் வெப்பத்தையும் கக்கும் வாகன நெரிசலுமே இன்றைய நிலைமைக்கு காரணம்.

இதை மாற்ற வேண்டுமானால் கச்சா எண்ணெய் உபயோகம் கட்டுக்குள் வரவேண்டும். கூடிய மட்டிலும் மின்சக்தி மூலம் வாகனங்கள் இயக்கப்படவேண்டும். இதற்கான தொழில் நுட்பம் தயாராக இருப்பினும் வணிக ரீதியில் வெற்றி பெற இன்னும் பலகாலம் ஆகும் என்று விற்பனைத்துறை வல்லுனர்கள் கணிக்கிறார்கள்.

இதன் முக்கிய காரணம் பாட்டரி எனப்படும் மின்கலன் திறன் குறைந்த அளவு தூரமே பயணத்திறன் கொண்டது. மேலும் அதை மின்னூட்டம் (CHARGE) செய்ய குறைந்தது 4 முதல் 6 மணி நேரங்கள் தேவை. இதனால் பெட்ரோல் வண்டிகளுக்கு பழக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ள இயலாமல் மின்சார வண்டிகளை தவிர்கிறார்கள்.
நம் சாலைகளில் மின்வண்டிகள் பெருக வேண்டுமானால் ஒன்று சட்டரீதியான தடை  பெட்ரோல் வாகனங்களுக்கு வரவேண்டும் ( அதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாது) அல்லது  மின்வண்டி பயன்பாட்டில் உள்ள குறைகளைக் களைய வேண்டும்.

நுகர்வோரின் பயன்படுத்தும் முறைகளைப் பார்க்கும் போது குறைந்தது 50 லிருந்து 60 சதம் வாகனங்களை மின்கலன் துணை கொண்டே இயக்க முடியும். அதையும் சூரிய சக்தியாலே மின்னூட்ட இயலும். அதற்கு சில வசதிகளை நுகர்வோர்க்கு தயாரிப்பாளர்களோ விற்பனை முறைகளோ செய்ய முன் வந்தால் அவற்றின் பயன்பாடு கூடும். அதற்கான சாத்திய கூறுகளை கீழ்கண்ட விளக்கக் காட்சியாக தயாரித்து இருக்கிறேன்

தமிழில் படிக்க விழைபவர்கள் இங்கே சுட்டவும்

கீழே  ஆங்கில மொழியில்  படிக்கலாம்.

குறிப்பாக புதிய தொழிலில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் செய்ய புது முயற்சிகளை பரிந்துரை செய்யும் ஆசியர்களுக்கு பயன்படும் என்று நம்புகிறேன். தங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்.


Monday, March 21, 2016

தேன் சிட்டு இனி தேடி வராது

தேடி வரும் தேன் சிட்டு என்ற பெயரில் ஒரு வலைப்பூ வளையம் ஆரம்பித்து அதில் ஆன்மீகம், பல்சுவை, இன்னிசை என்ற பெயர்களில்  பல வலைப்பூக்கள் இணைக்கப்பட்டிருந்தன.

இது alt.webring என்கிற வலைப்பக்கத்தின் இலவச சேவையாக இருந்தது. இது எப்போது வேண்டுமானாலும் நின்று போகலாம் என்கிற அச்சம் இருந்தது. இதை 2013 வருடம் வலைச்சரத்தின் ஆசிரியராக இருந்த போதே வெளிப்படுத்தி இருந்தேன்.

நான் பயந்தபடியே நடந்து விட்டது. இப்போது தேன்சிட்டை தொடர்ந்து சென்று எந்த வலைப்பூவையும் படிக்க இயலாது.  alt.webring தளம் அடியோடு  நீக்கப்பட்டதால்  அதில் இணந்திருந்தவர்களை கண்டுபிடிப்பதும் கடினமாகி விட்டது. இதனால் தனிப்பட்ட முறையில் தெரிவிப்பது இயலாமலிருக்கிறது.
யாவருக்கும் எனது வருத்தத்தையும் மன்னிப்பு வேண்டியும் இதை தெரிவித்து கொள்கிறேன்.  அருகே காணும்  செயலற்று விட்ட இந்த நிரலை பொருத்தி இருப்பவர்கள்  நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்முயற்சிக்கு இத்தனை நாட்கள் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

Wednesday, March 9, 2016

மின் அழுத்தம் கூட குறையும் மன அழுத்தம்

கற்கை நன்றே-வில் பதிவு எழுதி பல நாட்களாகி விட்டனவே ஏதேனும் உபயோகமாக எழுதுவோமே என்று நினைத்தபோது மனதிற்கு வந்தது கர்நாடக அரசின் மூலம் மான்ய விலையில் விற்கப்படும்  எல்.இ.டி விளக்குகள் தான். கர்நாடகத்தில் வசிக்கும் பதிவர்கள் உடனடியாக இதன் மூலம் பயன்பெறலாமே என்ற எண்ணத்தில் எழுந்ததுதான் இந்த பதிவு.

வெயில் காலம் வந்தாலே மின் அழுத்தக் குறைவால் குறிப்பிட்ட நேரங்களில் பவர் கட் என்பது பெங்களூரில் சர்வ சாதாரணம். அது அரைமணியாக இருக்கலாம் அல்லது ஒரு மணி நேரம் கூட ஆகலாம். ஆனால் உத்திர பிரதேசத்தை போல இன்வேர்டர் சார்ஜ் செய்யக் கூட நேரம் இல்லாமல் 12, 15 மணி நேரம் போகாது. அது வரையில் அதிருஷ்டசாலிகள்.


மின் அழுத்தம் ஏன் குறைகிறது? உற்பத்தியை விட நுகர்தல் கூடும் பொழுது அதிக கரெண்ட் தேவைப் படுகிறது. மின்சக்தி ஒரு குறிப்பிட்ட அளவே உற்பத்தி ஆகும் பொழுது 220 வோல்ட் அழுத்தத்தில் குறிப்பிட்ட கரெண்ட் மட்டுமே நுகரப்பட வேண்டும். நாம் எத்தனைக்கு எத்தனை சாதனங்களை பயன்படுத்துகிறோமோ அவை ஒவ்வொன்றும் அதற்கென்று குறிப்பிட்ட கரெண்டை உபயோகிக்கத் தொடங்கும். இதனால் கரெண்ட் தேவையை பூர்த்தி செய்ய டிரான்ஸ்போர்மர் வோல்டேஜை குறைத்துக் கொள்கிறது. அதன் காரணமாக மின் அழுத்தக் குறைவு ஏற்படுகிறது. அப்படி குறைந்த அழுத்தத்தில் வேலை செய்தால் நம் உபகரணங்கள் முழுவதுமாக பழுதடைய வாய்ப்புகள் இருப்பதால் மின் வாரியமே மின் வினியோகத்தை கட்டுப்படுத்துகிறது. பவர்கட்டை தவிர்க்க வேண்டுமானால் ஒன்று நாம் சுயக் கட்டுபாட்டுடன் நம் தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது உபகரணங்களை மேம்படுத்தி குறைந்த சக்தியில் (அதாவது குறைந்த கரெண்ட்-ல்) இயங்குபவனாக வடிவமைக்க வேண்டும்.

இரண்டாவதைத்தான் இப்போது கர்நாடக அரசு எல்.இ.டி பல்பு வினியோகத்தின் மூலம் செய்ய முற்பட்டிருக்கிறது.

சுமார் ரூ.350 விலையாகும் பல்பு ரூ.100 க்கு விற்கப்படுகிறது. கள்ள சந்தையை தவிர்க்க நமது நுகர்வோர் எண்ணை பதிந்து கொண்டு ஒரு குடியிருப்புக்கு 10 பல்புகள் மட்டுமே கொடுக்கப் படுகின்றன. ஆனால் இதனால் ஏற்படும் மின்சக்தி சேமிப்பு மிகக் கணிசமானது.  
உதாரணத்திற்கு 60 வாட் உள்ள சாதாரண பல்பின் வெளிச்சத்தை 9 வாட் திறனுள்ள எல்.இ.டி விளக்கு தரும். அதாவது ஆறு மடங்குக்கும் குறைவான சக்தியே தேவைப்படுகிறது. ஸி.எஃப்.எல். குழல் விளக்கை விட 1.6 மடங்கு திறன் வாய்ந்தது.  
ஆனால் இதன் விலையோ சாதாரண விளக்கை விட 30 மடங்கும் ஸி.எப்.எல் விளக்கை விட 3 மடங்கும் அதிகம் என்று சொல்பவர்களுக்கு இதன்  ஆதரவாளர்கள் கூறும் பதில் இதன் பயனளிக்கும் நேரக்கணக்கே. ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் உபயோகிப்போம் என்று வைத்துக் கொண்டால் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக உழைக்கும் என்று சொல்கின்றனர். இதை மணிக்கணக்கில் சொல்வதானால் 25000 மணி துளிகள் எல்.இ.டி க்கும் 5000 மணித்துளிகள் ஸி.எப்.எல் க்கும்   1000 மணித்துளிகள் சாதாரண விளக்குக்கும் சொல்லப்படும் வாழ்வு காலமாகும்.
ஆகையால் எல்.இ.டி விளக்குக்கு கொடுக்கும் அதிக விலை உண்மையிலேயே ஒரு நல்ல முதலீடு போலவே அன்றி ஒரு தொடர் செலவு அல்ல. இதனால் தனிப்பட்ட சேமிப்பு மற்றும் அன்றி நாட்டிற்கும் பெருமளவு மின்சக்தி மிச்சப்படுகிறது. ஒரு  பல்பு ஒரு வருடத்தில் ரூ.118 சேமிக்கும் என கர்நாடக அரசின் பிரசுரம் அறிவிக்கிறது ஆகையால்தான்  இதை ரூ.நூறுக்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளார்கள்.
  மேலும் அதிக விவரங்களுக்கு பல்பின் அட்டைப் பெட்டியில் காணப்படும் தகவல்களையே படம் பிடித்து போட்டு விடுகிறேன்.
ஒரு சந்தோஷமான சமாசாரம். இது MADE IN INDIA ( சீனா அல்ல ) 






இது தமிழ் நாட்டிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கலாம். சற்றே பொறும்  பிள்ளாய், யார் கண்டார்கள், இலவசமாகவே கூட கிடைக்கலாம்.

Thursday, January 7, 2016

கதரில் சூரிய ஒளி

 நேற்று மைசூரில் நடைபெற்ற அகில இந்திய விஞ்ஞான கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பிரதமர் மோடி அதை திறந்து வைக்கும் போதுகிராம மக்களும் சிறு தொழில்களும் முன்னேறும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் என்பதை விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள்  விடுத்ததை தொலைக்காட்சியில் இரண்டு நாட்களுக்கு முன் கண்டிருந்தேன். வழக்கமான அரசியல்வாதிகளின் பேச்சு என்ற எண்ணமே தோன்றியது.
ஆனால் அங்கே சென்ற போது உண்மையில் அப்படி ஒரு கண்டுபிடிப்புக்கான முயற்சியை கண்டு மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்தது.

கதர் கிராம தொழில் வாரியத்தினர் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய ராட்டினம் ஒன்றை தயாரித்து உள்ளனர். இது ஒரு நாளில் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் என்றும் அதனால் மாத வருமானம் ரூ.6000 வரை உயரும் என்று அங்கிருந்தவர் கூறினர். முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்குவதால் இதை எந்த நேரத்திலும் எந்த ஊரிலும் சிறுதொழிலாக கைகொள்ளலாம். இதற்கான முதலீடு ரூ 35000லிருந்து ரூ.  40000  வரையே. தற்போது எட்டு spindles (இதற்கான தமிழ் வார்த்தை தெரியவில்லை) உள்ளதை இருபத்திநான்காக மாற்றினால் இன்னமும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை இணையத்தில் கண்டேன். ஆனால் அரசாங்க ஆவணங்களில் ரூ.150000 வரை சிறு தொழிலாகக்( குடிசைத் தொழில்? ) கருதப்படுவதால் இதன் முக்கியத்துவவம் பிடிபடவில்லை. செய்யப்படும் முதலீடு ஒரு வருடத்துக்குள்ளேயே திரும்பி விடுவதாலும் சூரிய தகடுகள் இருபத்தைந்து ஆண்டுகள் பயனளிக்க வல்லன என்பதாலும் இது எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை.

அந்த கண்காட்சியிலே கடல் பாசியிலிருந்து எரி எண்ணெய் தயாரிக்கும் ஆராயிச்சி பற்றிய முயற்சிகள் கோடிக் கணக்கில் முதலீடு செய்வது பற்றியும் விரிவான விளக்கங்கள் கண்டேன்.  அதன் வெற்றி செல்வம் உடையவர்களிடம் மேலும் செல்வம் சேர்க்கப் பயன்படுமே அன்றி ஏழைக் குடும்பங்களில் ஒளியேற்றுமா என்பது சந்தேகமே.




அவ்வளவு கோடிகளில் எவ்வளவு ஏழை குடும்பங்களுக்கு சூரிய ராட்டினங்களை தயாரித்து கொடுக்க முடியும் என்று மனம் கணக்கு போட்டது.
செல்வத்தை பகிர்ந்து கொள்ள மானுட மனம் சுலபத்தில் ஒப்புவதில்லை. அதனால் உழைப்பை பகிர்வதன் மூலம் பலருக்கும் வாய்ப்பளித்து தொடர் வருவாய்க்கு   வழி செய்கிறது. இதனால்தான் காந்திஜி அந்த காலத்திலிருந்து இயந்திர மயமாக்குதலை ஆதரிக்கவில்லை.

அரசியலைத் தாண்டி நமது விஞ்ஞானிகள் மக்கள் சேவையில் உள்ளனர் என்பதைக் கண்டு மனம் ஆறுதல் அடைகிறது.