Wednesday, September 14, 2016

சோலார் பவரும் என் அனுபவங்களும் -3


வெற்றிகரமாக சூரியமின் சக்தி தகடுகளை நிறுவி வீட்டிற்கு இணைப்பு கொடுத்தாகி விட்டது. இதனை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதை அதை நிறுவ வந்த இஞ்சினியருக்கே சொல்லத் தெரியவில்லை.

அவர் பொதுவாக சொன்னது
“ நல்ல அவுட்புட் வேணும்னா வெயில் இருக்கும் போதே எல்லா வேலையையும் செஞ்சுக்குங்க. சாயங்காலம் அஞ்சுமணிக்கு மேலே பாட்டரிலே ஓடட்டும். அந்த நேரத்துல ஹீட்டர் மாதிரி ஹெவி லோட் குடுக்காம இருந்தா ராத்திரி பூராவும் பாட்டரி பேக்-அப் லே ஓடும். கிரைண்டர், மிக்ஸி,  வாஷிங்மெஷின், ரைஸ் குக்கர் இப்படிப்பட்ட சமாசாரத்தையெல்லாம் காலைல எட்டு மணியிலேருந்து மதியம் மூணு -இல்லை-நாலு மணிக்குள்ள முடிச்சுட்டீங்கனா எல்லாம் சோலார்பவர்-ல நடந்துறும். பாட்டரில மிச்சம் ஸ்டோராயிருக்கிற பவர் ராத்திரிக்கு  டிவி, பிரிட்ஜ், லைட் வரைக்கும் போதுமானது.”



ஒரு நாளைக்கு 5 முதல் 6 யூனிட்கள் தேவை இருக்கும் போது அதற்கேற்ற உற்பத்தியும் இருக்கும் போது இது கடினம் இல்லை என்றே நினைத்தேன்.  ஆனால் என் மனக்கணக்கு சரிபட்டு வரவில்லை. இதற்கு முக்கிய காரணம்  நமது பழக்க வழக்கங்கள்.

 “மாலை 6 மணிக்குத்தான்  இட்லி தோசைக்கு மாவரைக்க வசதியாயிருக்கு. மத்தியானமே அரைச்சு வச்சா அடுத்த நாளைக்கு புளிச்சு போயிடும்.  பிரிட்ஜ்-ல வச்சா மாவு பொங்காது ....... கெஸ்ட்  வரும்போது  சாயந்திரம் ஆயிடுச்சுன்னு  மிக்ஸி போடாமா இருக்க முடியுமா ?. போட்டுத்தான் ஆகணும்......இத்யாதி   இப்படிப்பட்ட  அணுகு முறையால் டிமாண்ட்-சப்ளை  வித்தியாசங்கள் ஏற்பட ஆரம்பித்தது.

இது மாமியார்- மருமகள் பிரச்சனை மாதிரி. இதற்கு தீர்வு என்பதே கிடையாது. எப்போது எதை வேண்டுமானாலும் அவரவர் தேவைப்படி நியாயப்படுத்திக் கொள்ளலாம் !

இதனால் ஏற்பட்ட பாதிப்பு,  மின்கலன்களில் சேமித்து வைத்த சக்தி, இரவு நேரங்களில், பற்றாக் குறையாகி அதை நிவர்த்திக்க மின்வாரியத்திலிருந்து அது கரெண்ட் இழுக்க ஆரம்பித்தது.  ஏதோ கொஞ்சம் என்றால் கண்டு கொள்ளாமலிருக்கலாம். ஆனால் ஒரு நாளையத் தேவையில் 40 -50 % என்றால்...?
சோலாரையும் போட்டு மின்வாரியத்திற்கும் பணம் கட்டுவதா என்ற கேள்வி பெரிதாக எழுந்தது.  முதல் நாள் ராத்திரியில் எப்போதோ பற்றாக்குறையால் மின்வாரிய சப்ளைக்கு மாற்றிக் கொண்ட பின் அது பாட்டரியை அதிக அளவில் சார்ஜ் செய்து அடுத்த நாள் சூரிய சக்தி வரும் போது  அதில் கிடைக்கும் உபரி சக்தி ஏற்றுக் கொள்ள இயலாமல் வீணாக்கியது தான் பிரச்சனையானது.

இரண்டாவதாக எவ்வளவு சூரிய சக்தி உற்பத்தியாகிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர எவ்வளவு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்பதோ எவ்வளவு சேமிப்பிற்கு சென்றது என்பதோ தெரிந்து கொள்ள மீட்டர்கள் பொருத்தப்படவில்லை. இந்த  டிமாண்ட்-சப்ளை பிரச்சனையை தீர்க்க இது அவசியம் என்று தோன்றியது. அதன் விளைவாக  இணையத்தில் தேடி  'Kill a Watt '  என்கிற  மீட்டர் ஒன்றை வாங்கினேன்.



அதை  ஒவ்வொரு பயன்பாட்டுக் கருவியிலும் பொருத்தி அது இழுக்கும் கரெண்ட், யூனிட் சக்தியை  அளவிட ஆரம்பித்தேன். தொலைக்காட்சிப் பெட்டி 65 watts,   மிக்ஸி 300 வாட்,  ரைஸ் குக்கர் 600 வாட், பிரிட்ஜ் 135 வாட் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் யூனிட் கணக்கு( kwh) எவ்வளவு நேரம்  தொடர்ந்து வேலை செய்கிறது என்பதை பொருத்ததால் அதையும் கவனித்து வந்தேன்.
இதில் தான் அகப்பட்டுக் கொண்டது குளிர்பதனப்பெட்டி எனப்படும் ஃபிரிட்ஜ். அதில்  auto on-off  இருப்பதால் இதைப்பற்றி யாரும் பொதுவாகக் கவலைப்படுவதில்லை.

ஆனால்  என் மீட்டர்படி  ஒரு நாளைக்கு- 24 மணி நேரத்தில்-  2.7 யூனிட்கள் பயன் படுத்தி வந்திருக்கிறது. சூரியன் மங்கியிருக்கும் மாலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை இது பாட்டரி  சேமிப்பில் ஓடியாக வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 15 மணி நேரம்  -1.7 யூனிட்கள் -அது பாட்டரியின் ஆதரவில்தான் செயல்பட வேண்டும்.

பாட்டரியின் சேமிப்பு திறன் எவ்வளவு என்கிற கேள்வி எழுந்தது.  150 AH     பாட்டரி என்றால் அதில் 25% தான் நமக்கு உபயோகமான யூனிட்கள் கிடைக்கும். எந்த தயாரிப்பாளரும்  பாட்டரியின் நலம் கருதி  அதற்கு மேலே உறிஞ்ச அனுமதிப்பதில்லை.  அதற்கு முக்கிய காரணம் பாட்டரி வோல்டேஜ் மிகக் குறைந்து போவதே. இதனால்  நமக்குக் கிடைப்பது 1.8 லிருந்து 2.0 யூனிட்களுக்குள்ளேதான். இதனால் தான் பற்றாக்குறை ஏற்படுகின்றது என்பதை ஊகிக்க முடிந்தது.

“இன்னும் நாலு பாட்டரி போட்டு ஸ்டோரேஜ்-ஜ கூட்டிக்கிங்க”  என்று ஒருவர் சிலாகித்தார். என் எண்ணமெல்லாம் எப்படியாவது மின்வாரியத்தின் உபயோகத்தைத் தவிர்த்து சுயசார்பு அடைவதே

அதைப் பற்றி அடுத்த பதிவில்....

கீழே உள்ள படத்தில்  எங்கள் மின்வாரிய நுகர்தல் ஜுலை மாதத்திலிருந்து எப்படிக் குறைந்துள்ளது என்பதை அவர்களுடைய வலைத் தளத்திலேயே படம் பிடித்து போட்டிருக்கிறேன்.  சோலார் உற்பத்தியின்படி மாதம் ரூ 800 லிருந்து ரூ 950 வரை மிச்சமாகியுள்ளது.


3 comments:

Geetha Sambasivam said...

கடைசியில் ஜெயித்து விட்டீர்கள்.

KABEER ANBAN said...

இதில் ஜெயிப்பது தோற்பது என்றெல்லாம் இல்லை. நம் தேவைகளை தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் அனுபவம். அது பலருக்கும் பயன்படுடட்டுமே என்று நினைத்து எழுதியது. அவ்வளவு தான்.
நன்றி

கோமதி அரசு said...

சூரிய சக்தியை பயன்படுத்தும் முறை பலருக்கு பயன்படும்.