Saturday, July 30, 2016

சோலார் பவரும் என் அனுபவங்களும்-2


சென்ற பதிவின் தொடர்ச்சி......

அறிவு தெளிந்த படலம்:


என் கணக்கே வேறு என்று நான் சொல்வதற்குக் காரணம் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ள பெரும்பாலானவர் தவறி விடுகின்றனர்.

உதாரணத்திற்கு 2016 ஏப்ரலில் பயனர் குறியீடு 271 அது 2001-ல் 100 என்கிற அடிப்படையில் குறிக்கப்படுகிறது. இது 11.4% வருடதிற்கு வீழ்ச்சியாகும்.  எளிமையாக சொல்ல வேண்டுமானால் ரூ 100க்கு 2001-ல் வாங்கிய பொருளின் இன்றைய விலை ரூ 271


ஆகையால் ஒரு கணக்குக்காக 10% பணவீக்கம் என்று வைத்து அடுத்த 25 வருடங்களில் மின்சாரக் கட்டண உயர்வையும் பாட்டரி விலையையும் கூட்டி அதை மின் உற்பத்தி மதிப்புடன் சரி பார்த்தேன். இதில் 2KW  உற்பத்தி திறன் தகடுகள் மாதம் சராசரியாக 240 யூனிட்கள் உற்பத்தி செய்யும் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது

வருடக்கடைசியில்
மின் உற்பத்தி யுனிட்கள்…
வருடாந்திர மதிப்பு
இணைப்புக் கட்டணம்-வருடாந்திரம்
புது மின்கல / மாற்று செலவு
2016-
16488
1800
48908
2021-14400 kwh
24732
2700
73362
2026-28800 kwh
32976
3600
97816
2031-43200 kwh
41220
4500
122270
2036-57600 kwh
49464
5400
146724
2041-72000 kwh
57708
9450
----

இருபத்தைந்து வருட இறுதியில் உற்பத்தியான 72000 யூனிட்களின் மின்சார மொத்த மதிப்பு ரூ 1058365/. பாட்டரி மற்றும் இணப்புச் செலவு (489080 +114390) =603470.  (அட்டவணையில் ஐந்தாண்டு இறுதிகளில் பணவீக்கத்தினால் மதிப்பு எப்படி மாறுகிறது என்பது மட்டுமே சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. அவைகளைக்  கூட்டிப் பார்க்கக் கூடாது)

நிகர மீதி ரூ. 454895/  அல்லது வருடத்திற்கு ரூ.18196/
இதை 2 லட்சம் முதலீடு என்று பார்த்தால் (பாட்டரி செலவு கணக்கில் வந்து விடுகிறது)  தனிவட்டியாக 9.1% ஆகிறது. இன்று எந்த வங்கி 8.2 % விட அதிகம் கொடுக்கிறது? 

கூட்டுவட்டி கணக்கின் படி ரூ.2 லட்சம் 25 வருடங்களில் 10 லட்சமாக பெருகுவதற்கு  6.85 % வட்டிவிகிதம் வேண்டும். ஆனால் நமக்கு இலவச சூரிய மின் சக்தி கிடைக்குமா? 

இப்படியாக, சூரிய தகடுகளின் மூலம் மின்சாரத் தன்னிறைவு அடைவது ஒரு நட்டக் கணக்கே அல்ல என்பது என் வாதமானது.

என்னுடைய அடுத்த வாதம் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுவது. ஒரு சொகுசு காரை 4 லட்சத்திலும் வாங்கலாம் அல்லது 10 அல்லது 12 லட்சத்திலும் வாங்கலாம். அதில் பயணிப்பதோ ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூட இல்லை. அதிகப்படியான ரூ.6 லட்ச முதலீடு எதற்காக ? வெட்டி ஜம்பம்.  மூன்று நான்கு வருடம் கழித்து விற்கப் போனால் பாதி விலை கூடத் தேறாது. அப்போது யாராவது இந்த லாப நட்ட கணக்குகளை மனதில் கொள்கிறார்களா ? அதை உலக நடப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

2000-ல் பென்டியம்-III கணினியை ரூ. 55000 விலை கொடுத்து வாங்கினேன்.  அதை இன்று சீண்டுவாரின்றி தூக்கிப் போட்டேன். 2011-ல் வந்த சாம்சங் ஸ்மார்ட் ஃபோன் ரூ 30000 க்கு விற்றது.  இன்று அதை விட திறன் வாய்ந்த ஃபோன்கள் பத்து அல்லது பதினையாயிரத்துக்கே கிடைக்கிறது.  இப்படி 
எல்லாமே இறங்கு முகமாக இருக்கும் போது சூரிய மின் உற்பத்தி ஒன்றே ஏறுமுக முதலீடாகத் தோன்றியது.

 ஒரு வேளை தொழில்நுட்ப முன்னேற்றத்தால் முதலீட்டுத் தொகை குறையலாம் அதனால் பயனர்கள் கூடலாம். அவையெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவையே, ஆனால் அது ஆரம்பகால முதலீட்டாளர்களை பாதிக்கப் போவதில்லை. அவர்கள் அடையும் மின்சாரத் தன்னிறைவின் காரணமாக ஒரு சமூகத் தொண்டு புரிகின்றனர்.

இதனிடையே அறிந்தவர்கள் இரண்டு பேர் வீட்டில் ஒரு 5KW  மற்றும் 3KW சூரியத் தகடுகளை கண்டு வந்தேன். 5 KW நபர் மின்வாரியத்திற்கு உபரி மின் சக்தியை ஏற்றுமதியும் செய்கிறார். இப்போது என் முடிவை செயல்படுத்துவதில் எவ்வித தயக்கமும் இல்லை.


               (5 KW generating panels at Mysore:Thanks to Dr, R.K.Jagdeesh)

தங்கத்தில் முதலீடு, பங்கு சந்தையில் முதலீடு போன்று நாட்டு பொருளாதாரத்திற்கு ஊட்டம் அளிக்காத வழிகளில் மக்கள் பணம் புழங்குவதும் முடங்கிப் போவதும் வருத்தமான விஷயம். பல லட்சங்கள் (கோடிகள்) செலவழித்து வீடு கட்டும் போது சூரிய தகடுகளையும் நிறுவிக் கொண்டால் சிரமம் இல்லாமல் ஒவ்வொரு இல்லமும் மின்சாரத் தன்னிறைவு பெறமுடியும்.

நான் வீம்பிற்காக செய்யவில்லை என்பதை இப்போது சிலர் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் பிரச்சனைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.

2 comments:

Geetha Sambasivam said...

பிரச்னைகளை வென்றிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

கோமதி அரசு said...

நல்ல யோசனை