Thursday, January 7, 2016

கதரில் சூரிய ஒளி

 நேற்று மைசூரில் நடைபெற்ற அகில இந்திய விஞ்ஞான கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பிரதமர் மோடி அதை திறந்து வைக்கும் போதுகிராம மக்களும் சிறு தொழில்களும் முன்னேறும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் என்பதை விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள்  விடுத்ததை தொலைக்காட்சியில் இரண்டு நாட்களுக்கு முன் கண்டிருந்தேன். வழக்கமான அரசியல்வாதிகளின் பேச்சு என்ற எண்ணமே தோன்றியது.
ஆனால் அங்கே சென்ற போது உண்மையில் அப்படி ஒரு கண்டுபிடிப்புக்கான முயற்சியை கண்டு மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்தது.

கதர் கிராம தொழில் வாரியத்தினர் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய ராட்டினம் ஒன்றை தயாரித்து உள்ளனர். இது ஒரு நாளில் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் என்றும் அதனால் மாத வருமானம் ரூ.6000 வரை உயரும் என்று அங்கிருந்தவர் கூறினர். முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்குவதால் இதை எந்த நேரத்திலும் எந்த ஊரிலும் சிறுதொழிலாக கைகொள்ளலாம். இதற்கான முதலீடு ரூ 35000லிருந்து ரூ.  40000  வரையே. தற்போது எட்டு spindles (இதற்கான தமிழ் வார்த்தை தெரியவில்லை) உள்ளதை இருபத்திநான்காக மாற்றினால் இன்னமும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை இணையத்தில் கண்டேன். ஆனால் அரசாங்க ஆவணங்களில் ரூ.150000 வரை சிறு தொழிலாகக்( குடிசைத் தொழில்? ) கருதப்படுவதால் இதன் முக்கியத்துவவம் பிடிபடவில்லை. செய்யப்படும் முதலீடு ஒரு வருடத்துக்குள்ளேயே திரும்பி விடுவதாலும் சூரிய தகடுகள் இருபத்தைந்து ஆண்டுகள் பயனளிக்க வல்லன என்பதாலும் இது எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை.

அந்த கண்காட்சியிலே கடல் பாசியிலிருந்து எரி எண்ணெய் தயாரிக்கும் ஆராயிச்சி பற்றிய முயற்சிகள் கோடிக் கணக்கில் முதலீடு செய்வது பற்றியும் விரிவான விளக்கங்கள் கண்டேன்.  அதன் வெற்றி செல்வம் உடையவர்களிடம் மேலும் செல்வம் சேர்க்கப் பயன்படுமே அன்றி ஏழைக் குடும்பங்களில் ஒளியேற்றுமா என்பது சந்தேகமே.




அவ்வளவு கோடிகளில் எவ்வளவு ஏழை குடும்பங்களுக்கு சூரிய ராட்டினங்களை தயாரித்து கொடுக்க முடியும் என்று மனம் கணக்கு போட்டது.
செல்வத்தை பகிர்ந்து கொள்ள மானுட மனம் சுலபத்தில் ஒப்புவதில்லை. அதனால் உழைப்பை பகிர்வதன் மூலம் பலருக்கும் வாய்ப்பளித்து தொடர் வருவாய்க்கு   வழி செய்கிறது. இதனால்தான் காந்திஜி அந்த காலத்திலிருந்து இயந்திர மயமாக்குதலை ஆதரிக்கவில்லை.

அரசியலைத் தாண்டி நமது விஞ்ஞானிகள் மக்கள் சேவையில் உள்ளனர் என்பதைக் கண்டு மனம் ஆறுதல் அடைகிறது.




6 comments:

Geetha Sambasivam said...

மிக அருமை. இந்த விஞ்ஞானக் கண்காட்சிகள் எல்லாம் பார்ப்பது இப்போது அவ்வளவாக இல்லை. அரிதாகவே கிடைக்கிறது. அதிலும் அருமையான கண்டுபிடிப்புக்கள் இருப்பது அதைவிடவும் அரிது. கண்டு பிடித்தவர்கள் அதை விரைவில் வணிக நோக்கில் தயாரித்துக் குறைந்த விலைக்கு விற்பார்கள் என நம்புவோம். அரசும் இதற்கு ஆவன செய்யும் என எதிர்பார்ப்போம்.

ஜீவி said...

கண்டுபிடிப்புகளுக்கும் அவற்றை நாம் உபயோகப்படுத்திக் கொள்வதும் வெவ்வேறானவை அல்லவா?.. உங்கள் சிந்தனைப் பின்னல் உங்கள் நல்ல மனத்திற்கு ஏற்பவான சிந்தனை வலையைப் பின்னியிருக்கிறது.

டெலிபோனை கண்டுபிடித்தவரை நான் விஞ்ஞானி என்றே ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று யாரோ சொன்ன நினைவு வருகிறது. அவர் சொன்ன காலத்தில் தொலைபேசியின் உபயோகம் அவரை நொந்து போக வைத்திருக்கலாம். ஆனால், இன்றைய வளர்ச்சி கால கட்டத்தில் அதே தொலைபேசி மக்களின் அத்தியாவசிய சொத்தாகியிருக்கிறதல்லவா?..

எளிய மக்கள் திரட்சி வலிமையானது. எல்லா புதிய கண்டுபிடிப்புகளும் அதற்கானவையே.

KABEER ANBAN said...

நல்வரவு கீதா மேடம். இதை வணிகப் படுத்துவதில் உள்ள சிரமம் உற்பத்தியை வகைப்படுத்துவதில் எழுந்துள்ளதாம்.அதற்காக இதை பச்சை கதர் (green khadi) என்று வகை செய்ய கதர் வாரியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாம்.
கருத்து பகிர்வுக்கு நன்றி.

KABEER ANBAN said...

நல்வரவு ஜிவி சார்.
/..அவர் சொன்ன காலத்தில் தொலைபேசியின் உபயோகம் அவரை நொந்து போக வைத்திருக்கலாம். ///
இதைப்படித்ததும் எனக்கு கர்நாடகத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நாடக விற்பன்னர் மாஸ்டர் ஹிரண்யா கூறிய மற்றொரு நொந்து போகச் செய்யும் காட்சி நினைவுக்கு வந்தது.
"ஒருவர் சாப்பிட வந்தால் போதும் போதும் என்று சொல்ல வைக்கலாம். ஆனால் போன் கையில் கிடைத்து விட்டால் போதும் போதும் என்று சொல்ல வைக்க முடியுமா ?"
அந்த அளவுக்கு பெரும்பாலானவர்கள் ஆகிவிட்டார்கள்.
தங்கள் கருத்து நூறு சதம் உண்மை. எளிய மக்களின் திரட்சி வலிமையானதுதான்.
கருத்து பரிமாற்றத்திற்கு நன்றி.

கோமதி அரசு said...

விஞ்ஞானிகள் மக்கள் சேவையில் உள்ளனர் என்பது மகிழ்ச்சி தான். நம் நாட்டில் சூரிய ஒளியை கொண்டு நிறைய செய்யலாம்.

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம். உண்மைதான், சூரிய ஒளியைக் கொண்டு செய்யக் கூடிய சாதனங்களை இன்னும் அதிகமாக எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம். நன்றி