Friday, December 9, 2016

அலைபேசியில்லா காசற்ற வாணிகம்

’காசில்லா வியாபாரம்’ என்றால் பண்ட மாற்று முறை என்பதை பழைய சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறோம்.

இப்போது வேண்டுமானால் அதை “காசற்ற வாணிபம்” என்று மாற்றிக் கொள்ளலாம். Cashless transactions.
இதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் புதுப் புது சலுகைகளை அறிவித்துள்ளது.  இதில் எதுவும் எளிய மக்களுக்கு சுலபமாகப் படக்கூடியதாகக் காணப்படவில்லை. கடைக்காரர்கள் QRC  வைத்திருக்க வேண்டும். அதன் பின் அதை நம் அலைப்பேசியில் படம் பிடித்து அதன் சொந்தக்காரரை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். எல்லா இடத்திலும் எப்போதும் எல்லாரிடத்தும் ஆண்ட்ராய்ட் அலைபேசிகள் இருக்க முடியுமா என்பது கேள்வி.



இதை சுலபமாக மாற்ற வேண்டுமெனில் எந்த வங்கியோ அஞ்சல் அலுவலுகத்திலோ நமக்கு வேண்டிய தொகைக்கு ஒரு prepaid card வாங்க வசதி இருக்க வேண்டும். அதை வாங்கும் போது நமது ஆதார் அட்டை எண்ணை அதில் அவர்கள் பதிவு செய்து கொடுத்து விட்டால் அது நமதாகி விடும். அந்த அட்டையை வேறொருவர் பயன் படுத்த இயலாது. நமது  MPIN ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட்டிருப்பதால்  அதை எந்த கடையிலும் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நம் அட்டையில் உள்ள தொகை குறைந்த போது வேறு ஒரு அட்டை வாங்கிக் கொள்ளலாம்.

அதன் முறை கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது:


இன்றைக்கு  POS Machine  எனப்படும் கார்டுகளை கணிக்கும் எந்திரங்கள் ரூ5000 க்கும் குறைவான விலையிலே கிடைக்கிறது. 

அதை ஒரு வங்கிக் கணக்கோடு இணத்துக் கொண்டால் எந்த விற்பனையாளரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் பணவரவிற்கான
ரசீதும் வருவதால் நுகர்வோருக்கும் பணம் கொடுக்கப்பட்டதற்கான அத்தாட்சி உடனே கிடைத்து விடுகிறது.

இதில் முக்கியமான வசதி நுகர்வோர்க்கு இதில் அலைபேசியின் அவசியம் இல்லை. எனவே கிராமப்புறங்களில் சாமானியர்கள் கூட இதை பயன்படுத்த முடியும்

இந்த கார்டை விற்கும் வங்கிகள் 0.5% அதற்கான கட்டணமாக வசூலித்து விட்டால்  விற்பவர்கள் தனியாக ஏதும் கட்டணம் தர வேண்டியிருக்காது.  இதைக் குறைந்தபட்சமாக 500 முதல்  அதிக பட்சமாக 10000 வரை விற்பனை செய்யலாம்.  இதன் மூலம் Master Card, VISA  போன்றவர்கள்  விற்பனையாளர்களிடம் வசூலிக்கும்  2% கட்டணம் தவிர்க்கப்படும். அதனால் யாவருமே இதை உவப்புடன் ஏற்றுக் கொள்வார்கள்.
கீழே உள்ள விளக்க படங்களையும் படியுங்கள்:


1 comment:

KABEER ANBAN said...

இந்த பதிவை படித்த (பின்னூட்டம் இட இயலாத) ஒருவரின் கருத்துக்கு பதில் இது.
அவருடைய கேள்வி: ஆதார் அட்டைக்கான PIN பதிவு செய்வதற்கும் (தேவையென்றால் மாற்றம் செய்வதற்கும்) ஒருவருக்கு இணையம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.இதுவும் ஒரு குறையே !

என்னுடைய பதில்: ஆதார் PIN பதிவு என்பது ஒருமுறை செய்ய வேண்டியது. அதை செய்வதில் குடும்ப உறுப்பினர்களோ அல்லது ஸைபர் கஃபே நண்பர்களோ உதவ முடியும். வெறும் PIN ஐ தெரிந்து கொள்வதால் ஏதும் நஷ்டம் இல்லை. மேலும் வங்கிகளோ அஞ்சல் அலுவலங்களோ கூட இந்த உபரி சேவையை வழங்க முடியும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ரூ 5000 அல்லது ரூ 10000 கூட எடுத்துச் செல்ல எளிதானது. தொலைத்து விட்டாலும் பயமில்லை. உடனே அதை வாங்கிய வங்கிக்கு சென்று ஒரு மனு கொடுத்து மீதமுள்ள தொகையை அடுத்த கார்டுக்கு மாற்றிக் கொள்ள முடியும். இந்த பாதுகாப்பு நிஜமான பணத்தைத் தொலைத்தால் கிடையாது.
செலவழிக்காத மீதம் வங்கிக்கு எப்படி தெரியும்?
வாடிக்கையாளர் வாங்கும் ஒவ்வொரு அட்டைக்கும் தனியான 16 இலக்கம் கொண்ட எண் இருக்கும். அது ஆதார் எண்ணைப் பதியும் பொழுது அந்த வாடிக்கையாளரின் பெயரில் பதிவாகி விடும். பின்னர் அவர் ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் அது பயன்படுத்தப்பட்ட இடம், தொகை எல்லாம் உடனுக்குடன் வங்கியின் கணக்குகளில் பதிவாகிவிடும். எனவே உபயோகிக்கப்படாத தொகையும் வங்கியின் கணிணியில் கண்டறிய முடியும். ஆகையால் உண்மையான பணத்தைக் காட்டிலும் இது மிக மிக எளிமையானது பாதுகாப்பானது.
ஆகையால் வாடிக்கையாளர் தரப்பில் வங்கிக்கான அவசியமில்லாமல் செல்போனும் இல்லாமல் இந்த prepaid முறை செயல்படும். உதாரணத்திற்கு பள்ளிக்கு கல்லூரிக்கு செல்லும் மணவர் அல்லது விடுதிகளில் தங்கி படிக்கும் குழந்தைகள் முதலியவருக்கு, பணம் உபயோகிப்பது போன்றே எளிமையுடன் ஆனால் தொலந்து போனால் போகும் பணத்தை இழந்து விடும் பயமில்லாமல் கொடுத்து அனுப்பலாம்.