Sunday, January 8, 2017

பீம் பாயும் ரொக்கமில்லா வர்த்தகமும்

நேற்று தொலைக்காட்சி பொதிகையில் ஒரு புதிய சொற்றொடரை கற்றுக்கொண்டேன்.  “ரொக்கமில்லா வர்த்தகம்” என்பது cashless transaction என்பதற்கு தமிழாக்கமாக பயன்படுத்தப்பட்டது.  ‘காசற்ற வாணிபம்” என்று சென்ற பதிவில்  நான் பயன்படுத்திய சொற்றொடரைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது. அதையே  வைத்துக் கொள்வோம்.

மைக்கேல் மதன காமராஜ் திரைப்படத்தில் கமலஹாசன் பீம் பாய் பீம் பாய் என்று அடிக்கொருதரம் தன்னுடைய உதவியாளரை கூப்பிடுவார். அப்படிப்பட்ட உதவியாளர்தான் இந்த புதிய BHIM APP என்று நினைத்தேன்இந்திய பிரதமர் BHIM APP மூலமாக ரொக்கமில்லா வர்த்தக பயன்பாட்டை விஸ்தரிக்க ஆதரவு தரும் அதே நேரத்தில் இன்று credit Debit அட்டைகளில் வங்கிகள் தமது கமிஷனை அதிகரிப்பதால் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று பெட்ரோல் வங்கிகளின் சங்கம் அறிவித்துள்ளது.

நான் என்னுடைய அலைபேசியில் பீம் பயன் முறையை தரவிறக்கம் செய்து கொண்டு மூன்று முறை தோல்வியுற்று நான்காம் முறை வெற்றி பெற்றேன்,

முதன் முறை என்னுடைய அலைபேசியையே பழையமாடல் (Samsung GT-S5630) என்று சொல்லி தள்ளி விட்டது.  என்னுடைய sim cardஐ  Lenovo Tablet க்கு மாற்றி முயற்சி செய்ததில்  அது என் வங்கிக் கணக்கை சரியாக பிடித்து எனக்கென ஒருவரி விலாசத்தையும் கொடுத்தது. ஆனால் அதன் மூலம் வர்த்தகம் செய்ய 6 இலக்கம் கொண்ட UPI PIN  பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றது.  அதைச் செய்ய Debit card-ல் கடைசி 6 இலக்கங்களையும் அதன்  expiry date உம் பதிய சொல்லியது. இது எதற்காக என்றால்  ரகசிய UPI கடவு சொல்லைத் தேர்ந்தடுக்க வேண்டி.  பின்னர் அதிக பாதுகாப்பு கருதி அதை   அலைப்பேசிக்கு வரும் OTP  யுடன் இணைத்து விட்டிருக்கிறார்கள்.  எனக்கு வரும் OTP குறித்த நேரத்தில் வராமல் காலம் கடந்து மூன்று OTP கள் ஒட்டு மொத்தமாக வந்தது. கடைசியாக வந்ததை உள்ளீடு செய்தால் Error in generation" என்று  வந்தது. சரி என்னுடைய அலைபேசியில் தான் முடியவில்லை, மனைவியின் அலைபேசியிலாவது அவளது வங்கிக் கணக்கை இணைக்க முடியுமா ( அது MOTO-G latest model) என்று முயற்சி செய்த போது அந்த அலைபேசி எண் வங்கியில் பதிவு செய்த எண்ணுடன் ஒத்து வரவில்லை என்று  நிராகரித்தது.  அப்பொழுது தான் புரிந்தது சென்ற முறை சிம் கார்டை மாற்றியபோது வங்கி பதிவுகளில் மாற்றம் செய்யவில்லை.

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மாதிரி அவருடன் வங்கிக்கு சென்று புதிய அலைபேசி எண்ணை பதிவு செய்து வந்தேன், அவர்கள் 24 மணிநேரத்திற்கு பின் அது செயல்படும் என்று தெரிவித்தனர்.
இரண்டு நாள் கழித்து மீண்டும் பீம் வழி முயற்சியில் இறங்கினேன்.
எல்லாம் சுலபமாக நிறைவேறியது. அவருடைய வங்கி கணக்குக்கும் ஒரு-வரி விலாசம் வந்தது.

ஆனால் இவருக்கு UPI PIN  நான்கே இலக்கங்கள் தான். ஆனால் என்னிடம் கேட்கப்பட்டதோ 6 இலக்கம் ! 
இது எதனால். வேறு வேறு வங்கிகள் என்பதால் எழுந்த வித்தியாசமா அல்லது அலைபேசிகளிக்கிடையே உள்ள வித்தியாசமா?

எப்படியோ அவருடைய வங்கி ஒரு-வரி விலாசத்திலிருந்து என்னுடைய ஒரு-வரி விலாசத்திற்கு ரூ 100/ வெற்றிகரமாக அனுப்பி சோதனை ஓட்டம் செய்தேன். இப்போது என்னுடைய விலாசத்திலிருந்து அனுப்புவதற்கு நான் ஒரு புதிய அலைபேசிதான் வாங்க வேண்டும் போலிருக்கிறது.

நானா வாங்குவேன். பணம் அனுப்ப இயலாததற்கு அதுவே நல்ல காரணம்.  என்னுடைய மொபைல்  BHIM incompatible  என்று சொல்லி தப்பித்துக் கொள்வேன்.

இந்த அனுபவங்களிலிருந்து எனக்கு தோன்றுவது என்னவெனில் சாமானியருக்கு இந்த தொழில் நுட்பம் மிக புதியது எளிதில் பிடிபடாது. இதை வெற்றிகரமாக பயன்படுத்த உங்களிடம்   நவீன அலைபேசி இருக்க வேண்டும். உங்கள் வங்கிக் கணக்குடன் அலைபேசி எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  மேலும் டெபிட் கார்ட் இருக்கவேண்டும் அதனுடைய இலக்கங்கள் கைவசம் இருக்க வேண்டும். சிலர் தங்களது டெபிட் கார்டில் expiry date இல்லை அதனால் UPI PIN பதிவு செய்ய இயலவில்லை என்று புகார் செய்து உள்ளார்கள்.  நீங்கள் உங்கள் அலைபேசி எண்ணை  மாற்றினால் கொஞ்சம் சங்கடம் தான். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் வர்த்தகர் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்.

விடுதிகளில் படிக்கும் மாணவர்கள்  தம் வங்கி கணக்குகளில் தாய் தந்தையரிடமிருந்து உடனுக்குடன் பணம் பெற முடியும். அதனால் நச்சரிப்பு கூடும் :))   அதிலிருந்து தப்பித்துக் கொள்ள என்னுடைய      வழியை கடைபிடிக்கவும். பழைய மாடல் அலைபேசியையே உபயோகிக்கவும் !

இல்லாவிட்டால் prepaid card முறையை  அறிமுகப்படுத்த வேண்டும்.

No comments: