Tuesday, April 18, 2017

சோலார் பவரும் என் அனுபவங்களும்-5

 சென்ற செப்டம்பர் பதிவை நிறைவு செய்யும் போது குரங்கு -பூனைகள்- ரொட்டி கதை சொன்னேன் நினைவிருக்கிறதா? :)  கதைக்கு இங்கே

அதாவது என்னுடைய சூரிய சக்தி தகடுகள் 8 யூனிட்களுக்கு பதிலாக ஏழுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கின்றனவே இதை கூட்டுவது எப்படி- அதாவது அதன் முழு பலனையும் அடைவது எப்படி என்ற சிந்தனை எப்போதும் ஓடிக் கொண்டே இருந்தது.
அப்போது தான் நாங்கள் ஒரு மாதம் ஊரை விட்டே போகக் கூடிய சூழ்நிலை வந்தது, இது என்னடா! முழு உற்பத்தி திறனும் வீணாகப் போய்விடுமே என்ற எண்ணம் தோன்றிய போது கூடவே ஒரு வழியும் கண்டேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

என் சூரிய சக்தி இணைப்பை கீழே குடித்தனக்காரருக்கு கொடுத்து ( அதற்காக தனியாக செலவழித்து)  அவர்களை முழுவதுமாகப் பயன் படுத்திக் கொள்ள சொல்லிக் கொடுத்தேன்.  அதன் மூலம் அவர்களுக்கும் கணிசமான மின்சாரக் கட்டணம் - மூன்றில் இரண்டு பங்கு- குறைந்தது. எனக்கு ஏக திருப்தி.

ஊரிலிருந்து வந்த பின்னும் அவர்களை பகல் போது மட்டும் (காலை 8 முதல் மாலை 5 வரை ) சூரிய சக்தியை பயன்படுத்திக் கொள்ளச் சொன்னேன். அதற்கான மாற்று விசையை (  change over switch) ஏற்கனவே பொருத்தி இருந்தேன். அதிசயம் ஆனால் உண்மை. இப்போது சூரிய தகடுகளின் உற்பத்தி சராசரியாக எட்டு யூனிட்டுகளுக்கும் மேலேயே பெருகியது. அதற்காக மின்கலத்தில் பற்றாக்குறையும் ஏற்படவில்லை.  அப்பாடா !இப்போது முழு  திறனும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

கீழே உள்ள அட்டவணையை  பாருங்கள்:


Solar Gen (kwh) என்பது தகடுகளிலிருந்து உற்பத்தியாகும் மின் சக்தியும் அது அத்தனையும் பயன் படுகிறதா ( எப்படி செலவாகிறது ) என்பதும் அட்டவணையில் பதியப்பட்டு இருக்கிறது.

இதில் மேலும் திடுக்கிடும் உண்மைகள் புரிய ஆரம்பித்தன.  அதாவது உற்பத்தியாகும் சக்தியில் பாதியளவே நமக்கு பயன்படுகிறது.  சுமார் 25%     சக்தியை இன்வெர்டர்   DC to AC to DC to AC மாற்றுவதிலேயே சாப்பிட்டு விடுகிறது. சூரிய சக்தி( DC)- இன்வெர்டர் (AC) - மின்கலன் (அ)பாட்டரி(DC)- நம் தேவை (AC) இப்படி மாற்றி மாற்றி கொடுப்பதால் ஏற்படும் இழப்பே அது.

இது எப்படி என்றால் ரூபாயை அமெரிக்க டாலருக்கு மாற்றி திரும்பவும் ரூபாய்க்கு மாற்றும் போது வங்கிகள் எடுத்துக் கொள்ளும் கட்டணம் போன்றது.

பயன் படுத்தப்படும் சக்தியில் இது 41% ஆகும் அதையே சிவப்பு வர்ணம் குறிக்கிறது. MPPT என்னும் கட்டுப்பாட்டு மையமே இதற்கு காரணம்.

இதைத் தவிர்க்க பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். நம் இயந்திரங்களை நேரடியாக DC சக்தியில் இயக்குவதன் மூலம் இந்த இழப்பை பெருமளவு தவிர்க்கலாம். ரயில்வே மின்விசிறிகள் விளக்குகள் எல்லாம்  DC சக்தியில் இயங்குபவையே. ஆனால்  இதை பரவலாக்க  நம் தயாரிப்பாளர்களும் அரசாங்கமும் பெரும் முயற்சி   எடுக்க வேண்டும்.

சில வருடங்களில் இதற்கு தீர்வு வரலாம். அது வரை இந்த இழப்பை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும்.


2 comments:

கோமதி அரசு said...

நல்ல விழிப்புணர்வு பகிர்வு.

//யாம பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்//

உதவும் எண்ணம் வாழ்க!

KABEER ANBAN said...

நன்றி கோமதி மேடம்,

அடேயப்பா! ஐந்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து பின்னூட்டம் இட்டு வாழ்த்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.