Tuesday, June 20, 2017

பூனைகளும் எறும்புகளும்

       மொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில்  ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. அது குட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றும் வரை காத்திருப்போம் என்று விட்டு விட்டோம். குட்டிகளும் சற்று பெரியவையாகி விளையாட ஆரம்பித்து விட்டன. விளையாட்டை ரசிப்பவர்களுக்கு அவைகளின் ஒரு சலனப்படம் கீழே.  
     குறிப்பாக தாய் பூனை எப்படி மேலே ஏறிப் போய் எப்படி கீழே இறங்குவது என்பதை செய்து காட்டுகிறது என்பதை கவனிக்கவும். படம் அலைபேசியில் சுட்டது.
 
    சரி, அடுத்து இன்னொரு  முறை குட்டி போட இடம் கொடுக்க வேண்டாம் என்று நேற்று காலை அதையெல்லாம் அப்புறப்படுத்த ஆரம்பித்தோம்.

      அட! பெட்டிகளின் உள்ளே பூனை ராஜ்ஜியமோ இல்லையோ தெரியாது. அவற்றின்    அடியில் ஒரு பெரிய எறும்புகளின் ராஜ்ஜியமே நடந்து கொண்டிருக்கிறது. நூற்றுக் கணக்கான எறும்புகளுக்கும் அவற்றின் முட்டைகளுக்கும் அந்த இடம் பெரும் பாதுகாப்பாக இருந்திருக்கிறது போலும். துடப்பத்தை எடுத்து எல்லாவற்றையும் சுத்தம் செய்து விடலாம் என்று சொல்லிக் கொண்டே தன் பலமான ஆயுதத்தை கொண்டு வரப் போனாள் என் மனைவி.

  இரண்டு நாள் முன்னர்தான் தொலைக் காட்சியில் பாவமன்னிப்பு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். தொழிற்சாலை கட்டுவதாகச் சொல்லிக் குப்பத்து மக்களை இடம் காலி செய்யச் சொல்லி விரட்டுவார் MR ராதா. அவர்கள் அவரிடம் தங்களுக்கு போக்கிடம் வேறு இல்லை எனவும் தொழிற்சாலையை வேறு இடத்தில் கட்டிக் கொள்ளும்படியும் கெஞ்சுவார்கள். இந்த எறும்புகளுக்கு வாயிருந்தால் அப்படித்தான் கெஞ்சியிருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. உடனேயே, சீ சீ மனிதர்களை விட அவை புத்திசாலிகள். இயற்கை அவைகளுக்கு ஏகப்பட்ட புத்திசாலிதனத்தை வழங்கியிருக்கிறது. அவற்றின் மூளையில் இரண்டு லட்சத்துக்கும் மேலான செல்கள் இருக்கின்றனவாம் !

    இப்போதெல்லாம் Ant Logic என்பதே ஒரு பாடமாக ஆராய்ச்சிப் பொருளாக ஆகியிருக்கிறது. மென்பொருள் வல்லுனர்கள் அவற்றின் முடிவெடுக்கும் திறனை அனுசரித்து problem solving software தயாரிக்க முற்படுகிறார்கள்.

    மனிதர்கள் மட்டும் அவைகளுடைய போக்கில் குறுக்கே வராமலிருந்தால், பிரச்சனை வரும் போது அவை எப்படி முடிவுகளை மேற்கொள்கின்றன என்பதை கண்ணாரக் காணலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள், இப்போது எனக்கு ஒரு சந்தர்பம் வாய்த்தது. துடப்பத்துடன் வந்த என் மனைவியைத் தடுத்தேன். ”அவைகள் வேறு இடம் பார்த்து குடி பெயரும் வரை பொறு. மதியத்திற்கு மேல் சுத்தம் செய்து கொண்டால் ஆயிற்று” என்று சொல்லி படம் பிடிக்க என் செல்போனை கொண்டு வரப் போனேன். “ஆரம்பிச்சாச்சா உங்க ரிஸர்ச்சை ?” என்று அலுத்துக் கொண்டே வேறு வேலையை பார்க்கப் போனாள்.

     என்  எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. பார்ப்பதற்கு அந்த எறும்புகள் தாறுமாறாக குழம்பிப் போன ஒரு கூட்டத்தைப் போல இங்குமங்கும் ஓடினாலும் அவைகளின் நடுவே ஏதோவொரு முறையில் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு சில நிமிடங்களிலேயே அவைகள் அருகே இருந்த கேபிள் டிவிக்காரர்களின் கேபிள் மேல் வரிசையாக முட்டைகளை சுமந்து செல்வதை காணமுடிந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் முட்டைகளையெல்லாம் பத்திரமாக புதிய இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டன.
                                      (படத்தை சுட்டினால் பெரியதாக்கிக் காணலாம்)

     படத்தில் காண்பது ஒரு சிறிய பகுதியே. அந்த எறும்புகளை மிதித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் வெளிப்பக்கமாக இருந்த ஒரு பகுதியை மட்டும் படம் எடுத்தேன்.

     இதில் என்னை சிந்திக்க வைத்தது ஒன்றுதான். அது எப்படி அவ்வளவு வேகமான தீர்மானத்திற்கு புது இடத்தைப் பற்றி வர முடிந்தது. அது ஏற்கனவே இம்மாதிரியான ஒரு நெருக்கடி நிலவரத்தை எதிர்பார்த்து தயாராக இருந்திருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் Exigency Plans என்பார்கள்.

     அங்கே தலைவி அல்லது தலைவன் அல்லது வழிகாட்டிகள் என்று குறிப்பிட்டு சொல்லும்படியான எறும்புகளை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு சில ஒரு குறிப்பிட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்தன. உதாரணத்திற்கு என் ஆடை மேல் ஏறிய சில எறும்புகளை தட்டி விட்டதில் ஒன்று குற்றுயிராய் போய் விழுந்தது. அதைக் கண்டதும் என் அஜாக்ரதையான செயலை நினைத்து வருத்தப் பட்டேன். பல சமயங்களில் அவைகளை சக தொழிலாளர்கள் வந்து உடனடி நிவாரணம் தரக்கூடும் என்று படித்திருந்ததால் அதைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

       ஒரு சில எறும்புகள் அருகே வந்து அதை முகர்ந்து பார்த்து வேறு பக்கம் போய் விட்டன. அப்படி போனவைகளில் ஏதோ ஒன்று செய்தி கொடுத்திருக்க வேண்டும். இன்னொரு எறும்பு வந்தது. தன் சகாவை சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பல முயற்சிகள் செய்து நிமிர வைத்து நடக்க வைக்க முயன்று கொண்டிருந்தது. அதன் பின்னர் அதனால் முடியாமல் போகவே வேறொரு ஸ்பெஷிலிஸ்ட்டை தேடிக்கொண்டு போனதோ என்னமோ என் கவனம் திசை திரும்பி விட்டது.

      அந்த குறிப்பிட்ட எறும்பு மருத்துவ உதவிக் குழுவை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் வேறு பக்கம் கவனம் செலுத்தாது தன் கடமையாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சேவகனை காப்பாற்ற முயன்று கொண்டிருந்தது.

       அன்பு என்னும் அடிப்படை உணர்வை எல்லா  உயிரினங்களிடமும்    நிறைத்து அனுப்பியிருக்கிறான் இறைவன். சில whatsapp vedio க்களைப் பார்க்கும் போது பறவைகளாகட்டும்,  யானைகளாகட்டும்,  காட்டெருமைகளாகட்டும் சிங்கம் புலி போன்ற மாமிச பட்சிணிகளும் கூட எப்படியெல்லாம் ஒற்றுமையை கூட்டுறவை, தாய்பாசத்தை, அன்பை வெளிப்படுத்துகின்றன என்பதைக் காணும் போது பிரமிப்பு ஏற்படுகிறது.

       உண்மையில், கடவுளின் முன், மனிதர்களாகிய நாம் சுயநலத்தால் அன்பை மறந்ததால், தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாகிறோம்

2 comments:

கோமதி அரசு said...

//உண்மையில், கடவுளின் முன், மனிதர்களாகிய நாம் சுயநலத்தால் அன்பை மறந்ததால், தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாகிறோம்//

சிறு வயதில் தன்னை காப்பாற்றிய புறாவின் உயிரை வேடனிடமிருந்து காப்பாற்றிய கதை படித்திருக்கிறோம் இல்லையா?
அடிப்பட்ட எறும்பை தூக்கி செல்வதை நானும் பார்த்து இருக்கிறேன்.
அருமையான கவனிப்பு மனித நேயம், சுறு சுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி இவைகளிடம் காணலாம்.

http://mathysblog.blogspot.com/2014/05/blog-post_20.html

தாய் பூனை குட்டிகளுக்கு மரத்திலிருந்து இறங்க
கற்றுக் கொடுத்ததை பார்த்தேன், அருமை.
எறும்புகள் ஆராய்ச்சி நானும் செய்து இருக்கிறேன். வெளியில் வெயில் அடித்தால் குளிர்ச்சி தேடி வீட்டுக்குள் அம்மி, ஆட்டுக்கள், த்ண்ணீர் பானை கீழே வந்து விடும் நாம் அவற்றை நகர்த்தினால் அவை முட்டையை தூக்கி கொண்டு வேறு இடம் நோக்கி சில நிமிடங்களில் போய் விடும்.
எறும்பை பற்றி பதிவு எழுதி இருக்கிறேன்.
http://mathysblog.blogspot.com/2014/05/blog-post_20.html
நேரம் இருந்தால் படித்துப்பாருங்கள்.


KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம்,
// வெளியில் வெயில் அடித்தால் குளிர்ச்சி தேடி வீட்டுக்குள் அம்மி, ஆட்டுக்கள், த்ண்ணீர் பானை கீழே வந்து விடும் நாம் அவற்றை நகர்த்தினால் அவை முட்டையை தூக்கி கொண்டு வேறு இடம் நோக்கி சில நிமிடங்களில் போய் விடும்////
மிகவும் சரியாகச் சொன்னீர்கள். அவற்றின் போக்கில் விட்டு விட்டால் அவை யாருக்கும் தொந்தரவு இன்றி இடம் மாற்றிக் கொள்ளும். நமக்குத் தான் தாழ்மை இருக்க வேண்டும்.
தங்களுடைய பதிவையும் படித்து ஆச்சரியப்பட்டேன். இலைகளைப் பின்னி கூடு அமைக்கும் எறும்புகள்! அடேயப்பா! மகாசக்தியின் அற்புத விந்தைகள் தான் எத்தனை எத்தனை!!
அற்புதமான கருத்துப் பதிவுக்கு நன்றி.