பங்குச் சந்தை போல் உருவாகி வரும் கரி-மாற்று (Carbon exchange) வியாபாரத்தைப் பற்றிய சிறு அறிமுகம்.
கார்பன் டிரேடிங் என்பது சமீபகாலமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். நான் இதை கரி வியாபாரம் என்று சுருக்கமாக தமிழ்படுத்திக் கொள்கிறேன். வேண்டுமானால் சர்வதேச கரி-மாற்று வாணிகம் என்றும் வைத்துக் கொள்ளலாம் :))
கூடிவரும் புவி வெப்பம், கடல் மட்ட உயர்வு, உருகும் பனிப்பாறைகள், காற்றில் கரியமலவாயு அதிகரிப்பு, க்யோடோ தீர்மானங்கள் இத்யாதி போன்றவைகளுக்கும் இந்த கரி வியாபாரத்திற்கும் பெரிய தொடர்பு உண்டு.
க்யோட்டோ பற்றிய விவாதங்கள் செய்திகளாக வந்தபோது மனதின் மூலையில் ஏதோ ஒரு கூத்து நடந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது. ஆனால் முழு உண்மையை புரிந்து கொள்ளாமல் எதைப் பற்றியும் விமர்சிக்கக் கூடாது என்ற எண்ணத்தால் வாளாவிருந்தாயிற்று.
சமீபத்தில் இவைகளைப் பற்றி வேறு ஒரு காரணத்திற்காக சற்று ஆழ்ந்து படிக்க நேர்ந்தது. அதன் விளைவே இந்த கட்டுரை. கட்டுரையின் முடிவில் ஏற்கனவே பாரபட்சமான கருத்துக் கொண்டிருந்ததால்தான் இப்படி முடித்திருக்கிறீர்கள் நீங்கள் குற்றம் சாட்டினால் அதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
முதற்படியாக மேற்கத்திய நாடுகள்- குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்- விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கூக்குரலுக்கு செவிசாய்த்து இந்த கரியமலவாயு அதிகரிப்பு கவலை தரக்கூடிய விஷயம் என்பதை ஏற்றுக் கொண்டு இதற்கு பரிகாரம் காண வேண்டும் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஒரு அமெரிக்கப் பிரஜை ஆண்டொன்றுக்கு 24 டன் கரியமலவாயு உற்பத்திக்கு காரணமாகிறான். அதுவே ஒரு சீனன் 4 டன் உற்பத்திக்கும் இந்தியன் 2 டன் உற்பத்திக்கும் காரணமாகிறான். உலக அளவில் நபருக்கு 6.2 டன் அளவை மிஞ்சாத வரைக்கும் சரியே என்ற கருத்து நிலவுகிறது.
இதன் மூலம் அமெரிக்கா இந்த சுற்றுசூழல் மாசுபாட்டுக்கு முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டியதாயிற்று.
இவ்வகை அளவீட்டை கார்பன் ஃபுட் பிரிண்ட் (Carbon foot print) என்கின்றனர். தமிழில் கரிமல-அடியொற்று அல்லது எளிமையாக ”கரியொற்று” என்று சொல்லலாம்.புதுப்பிக்க இயலாத கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை அதிகமான அளவில் பயன்படுத்தி வருவதால் இது அதிகமாகிவிட்டது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளில் பூமிக்கு அடியில் சேமிக்கப்பட்ட சூரிய சக்தி திடீரென்று நூறு வருடங்களுக்கு உள்ளாக எரிக்கப்பட்டு வெளிப்படும் போது காற்றில் கரிமல வாயுவின் அளவு கூடுகிறது.
பெரியவர்களெல்லாம் ஒரு வழியாக கூடி 1990 நிலவரப்படி வெளியிட்ட கரிமல அளவை வரும் ஐந்து ஆண்டுகளில் (2008-2012) 5.2 % குறைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். ரஷ்யாவிற்கு குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆஸ்திரேலியா 8% அதிகம் எரித்துக் கொள்ளலாம் ! ஏனெனில் இந்த நாடுகளில் கரியமல வெளிப்பாடு நபர் ஒருவருக்கு 6.2 டன் அளவை விட மிகக் குறைவாகவே இருக்கிறது.
விவரமாகச் சொன்னால் 2010 ற்கு எதிர்பார்க்கப்பட்ட அளவை வைத்துப் பார்த்தால் இது 29% குறைவாக வேண்டும். அதாவது ஆண்டொன்றுக்கு அமெரிக்கா 7%, ஐரோப்பிய நாடுகள் 8%, ஜப்பான் 6% என்ற அளவில் வருடா வருடம் குறைத்துக் கொண்டே போக வேண்டும்.
இதை ஒவ்வொரு நாட்டிலும் பெரும் நிறுவனங்கள் முதல் தனி பிரஜை வரை பொறுப்பெடுத்து செயலாற்ற வேண்டும்.
உதாரணமாக ஒருவர் வாரத்தில் சுமார் 100 கிமீ வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல தன் காரை பயன்படுத்தினால் அவரால் 1114 கிலோ கரிமம் ஒரு வருடத்தில் கூடுகிறது. அதுவே அவர் மோட்டார் சைக்கிள் மூலம் போனால் 364 கிலோவும் நகரப் பேருந்தில் சென்றால் 135 கிலோவும் கூடுவதற்கு காரணமாகிறார். நாளொன்றுக்கு 5 மணிநேரம் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்தால் வருடத்திற்கு 394 கிலோ அளவு கரிமலவாயு வெளியாகிறது.
இவற்றைக் கருத்தில் கொண்டு குடிமக்கள் தேவையற்ற எரிபொருள் செலவை குறைக்க முன்வந்தால் கரியொற்று அளவைக் குறைக்க முடியும்.
அதற்கான விழிப்புணர்வு உண்டாக்குவது அரசுகளின் கடமை. ஆனால் இது அவ்வளவு சுலபமானதா?
பணத்தை செலவழித்தே பழக்கப்பட்ட ஒருவனுக்கு செலவழிக்க கூடாது என்றால் எப்படி முடியாதோ இதுவும் அது போலத்தான்.
சரி, குறைக்க முடியாமல் போனால் என்ன தண்டனை?
கவலை வேண்டாம். குறைவாக பயன்படுத்துபவனிடம் பேசி ’என் கணக்கை அவனுடன் அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறேன்’ என்று சொல்லிக் கொள்ளலாம். இதற்காக ஏற்பட்டிருக்கும் அமைப்புதான் கரியமில-மாற்று அல்லது கரி-வணிகம். இன்றைய வணிக அளவு சுமார் 28000 கோடி ரூபாய்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
உதாரணமாக ஒரு தொழில் நிறுவனம் குறிப்பிட்ட அளவு கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். இதற்கு ஈடு செய்வது எப்படி? காடு வளர்ப்பு திட்டம், மாசற்ற எரி சக்திகள் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி செய்தல் மூலம் கரியமிலக் கணக்கை சரிகட்ட முடியும்.
சூரிய சக்தியில் இயங்கும் நூறு லிட்டர் சுடுநீர் வழங்கி வருடத்திற்கு 1.5 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்கிறது.
அப்படி -வேறொருவன் நிறுவி-மிச்சப்பட்டக் கணக்கைக் காட்டி தமது அதிக பயன்பாட்டை சரிகட்டிக் கொள்வதே கரி வணிகத்தின் அடிப்படை. இதை Carbon Credit அல்லது CER (certified emission reduction ) என்பர். இதை அளவு கோலாகப் பயன்படுத்தி கரி-மாற்று வணிகம் நடைபெறும்.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் க்யோட்டோ முறைப்படி சர்வதேச அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதில் இடம் பெற ஏகப்பட்ட கட்டுபாடுகள், கண்காணிப்பு முறைகள், கரியமில வாயு வெளியேற்றத் தவிர்ப்பை உறுதி செய்யும் முறைகள் என பலப்பல கட்டங்களைத் தாண்ட வேண்டும்.
சொல்ல வேண்டுமா? உடனே உலகெங்கும் பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் என்ற பெயரில் தரகர்கள் தயாராகி விட்டார்கள். எல்லா நாடுகளிலும் ஏஜெண்டுகளை நியமித்து பார்ட்டிகளை பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு டன் கரியமில வாயுவை சமன் செய்ய 13.88 அமெரிக்க டாலர் ( 17.5% VAT உட்பட) கட்டினால் போதும்.
ஒரு நிறுவனம் 1400 டன் கரியமல வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தால் அது செய்ய வேண்டியதெல்லாம் க்யோட்டோ அமைப்பின்படி ஒப்புதல் பெற்றிருக்கும் ஒரு திட்டத்திற்கு நிதி அளித்து அதில் தவிர்க்கப்பட்டதாகச் சொல்லப்படும் கரிமல வெளியேற்றத்தை தனது கணக்கில் காட்டினால் போதும். நிறுவனம் தொடர்ந்து தன் போக்கில் செயல்படலாம்.
இதில் ஒரு நல்ல விஷயம். இருபத்தைந்து சதவிகிதம் மட்டுமே வளரும் நாடுகளில் முதலீடு செய்யவோ சமன் செய்யவோ முடியும். மீதி 75%ஐ உள் நாட்டிலேயே குறைத்துக் காட்ட வேண்டும்.
இதனால் உலகெங்கும் காளான் போல சுற்றுச் சூழல் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மாசற்ற எரிசக்தி, மரம் வளர்ப்பு, எரிசக்தி சேமிப்பு என்ற வகையில் புது புது திட்டங்கள் தீட்டி அங்கீகாரத்திற்காக அனுப்பிய வண்ணம் உள்ளன.
டிமாண்ட்- சப்ளை போல, திட்டங்கள் அதிகம் இருந்தால் ஒரு டன்னுக்கான கரி-மாற்று விலை குறைவாக இருக்கும். திட்டங்கள் குறைவாக இருப்பின் டன்னுக்கான விலை அதிகமாகி விடும். இதையும் பங்கு சந்தை போல ஒரு சில குறிப்பிட்ட நாடுகள் அல்லது அங்கத்தினர்கள் பண பலத்தினால் தங்கள் நோக்கம் போல திசை திருப்ப முடியும்.
பொதுவாக டிசம்பர் மாதத்தில் விலைக் கூடுமென்றும் தமது CER ஐ விற்க நினைப்பவர்கள் காத்திருந்து விற்கலாம் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த வருடக் கணக்கை -விற்கப்படாமல் இருக்கும் CER களை அடுத்த வருடத்தில் விற்க முடியுமா என்பது தெரியவில்லை.
இதில் தில்லுமுல்லுகள் நடக்க அதிக வாய்ப்புண்டு. எத்தனை திட்டங்கள் வெறும் காகிதத்தில் இருக்கப் போகின்றனவோ! அங்கங்கே இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி மாயமாய் போய்விடும் சாத்தியக்கூறுகளும், வரிக்கணக்கை ஏய்ப்பதற்கான வாய்ப்புகளும் பெருகியுள்ளது.
கோடிகள் கை மாறுவதற்கு புது புது உக்திகள் தோன்றியுள்ளன. வல்லரசு நாடுகள் புத்தி ஜீவிகளின் வாயை அடக்க ஒரு புது வித கண் துடைப்பு நாடகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்து இவையெதுவும் பலனளிக்க வில்லை என்று சொன்னால் ஆச்சரியப்படத் தேவையில்லை.
There is always another side for the coin. இப்படியாவது சில நல்ல திட்டங்கள் வரட்டுமே ! சொல்லிக் கொள்வதில் முப்பது நாற்பது சதம் உண்மையானலும் நல்லதே தானே செய்யும். ஏன் எல்லோரையும் ஏமாற்றுக் காரர்கள் என சந்தேகப் பட வேண்டும்.
எப்படியோ மக்கள் மனதில் விழிப்புணர்வு வந்தால் சரிதான் !