Sunday, May 30, 2010

மக்கு திம்மன் கவிதைகள்

தேவனஹள்ளி வெங்கடரமணய்யா குண்டப்பா-வை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருந்திருக்காது. அவரையே D.V. குண்டப்பா என்ற பெயரில் சிலர்- குறிப்பாக கர்நாடகவாசிகள் -கேட்டிருக்கக்கூடும். அவரை DVG என்று சுருக்கமாகவும் குறிப்பிடுவர் (1889-1975).

பத்தாவது வகுப்பிற்குப் பின், வறுமை காரணமாக அவருக்கு படிப்பைத் தொடரமுடியவில்லை. உலகமே பள்ளிக் கூடமாயிற்று குண்டப்பாவிற்கு. சுயமுயற்சியில் கன்னடம் ஆங்கிலம் மற்றும் வடமொழி கற்று அவைகளில் மிக உயர்வான தேர்ச்சி அடைந்திருந்தார். அவருக்கு பத்திரிக்கைத் துறைப் பிடித்திருந்தது. ஒரு வருட காலம் ஒரு கன்னட பத்திரிக்கையில் வேலை செய்த பின்னர் தானே Karnataka என்னும் பெயரில் ஆங்கிலப் பத்திரிக்கை நடத்தினார். அது அவரது நேர்மைக்கும் நடுநிலைமைக்கும் பெயர் வாங்கித்தந்தது. அவர் கர்நாடக பத்திரிக்கையாளர் சங்கத்தில் 1928 -ல் ஆற்றிய உரை இன்றும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிகவும் பொருந்தும் என்று சொல்லப்படுகிறது.

அவர் எழுதிய கோபாலகிருஷ்ண கோகலேயின் வாழ்க்கை வரலாறு மற்றும் திவான் ரங்காசார்லுவின் வரலாறு தகவல்களைத் திரட்டுவதில் அவருக்கு இருந்த முனைப்புக்கும், எழுத்தாற்றலுக்கும் எடுத்துக்காட்டு என்பர். (திவான் ரங்காசார்லு மைசூர் சமஸ்தானத்தை ஒரு முற்போக்கு சமஸ்தானமாக மாற்றிய பெருமை உடையவர். டிவிஜி பிறப்பதற்கு நான்கு வருடம் முன்பே அவர் இயற்கையெய்தினார்).

இதைத் தவிர ஓமர் கயாம்-ன் கவிதைகளையும் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தையும் கன்னட மொழிக்கு மொழி பெயர்த்திருக்கிறார். அவர் அறுபத்து ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது ஸ்ரீமத் பகவத்கீதா தாத்பர்யம் என்னும் விளக்க நூல் 1976 ல் சாகித்ய அகடெமி விருது பெற்றது

இன்று கன்னட சாகித்ய உலகம் அவரை நினைவு கூர்வது அவரது மகத்தான 'மன்கு திம்மன கக்கா'(Mankuthimmana Kagga) எனப்படும் தத்துவக் களஞ்சியத்திற்காகத்தான். எளிய சந்தத்தில் சாமானியனுக்கும் புரியும் வகையில் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை சமபாவனையில் எதிர் கொள்ள அவர் எழுதியிருக்கும் இந்த செய்யுள்கள் கன்னட பகவத்கீதை என்று போற்றப் படுகிறது. 935 பாடல்கள் கொண்டது. 1943-ல் இதன் முதற்பதிப்பு வெளிவந்தது. இதுவரை பதினான்கு பதிப்புகள் வெளியாகியுள்ளன.
(photo courtesy : www.sssglobal.org)

Foggy fool's farrago என்றுதான் தன் மக்கு திம்மனை (கன்னடத்தில் மன்கு என்றால் மக்கு,மந்தபுத்தி என்று பொருள்) குண்டப்பா வருணிக்கிறார். திம்மா என்பது திம்மப்பா அல்லது திம்மையா என்ற கற்பனை நாயகனை சுருக்கி அழைக்கும் பெயர்.

அவருடைய மக்கு திம்மனுக்கு ஞானபீட விருது கிடைக்காதப் பொழுது பலரும் கர்நாடகத்தில் பெரிய ஏமாற்றத்திற்குள்ளாகி விருதைத் தீர்மானிக்கும் குழு அங்கத்தினர்களை குறை கூற முற்பட்டனர். அப்போது அவர் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் அவர் மனதில் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை உணர்த்திற்று. பன்மொழி இலக்கியங்களை ஒரே தராசில் அளவிட முடியாது என்பதையும் விருதுகள்தாம் எழுத்தாளனின் படைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளம் என்று நினைப்பது தவறாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார். எழுத்தாளனின் படைப்பின் சிறப்பை நிர்ணயிப்பது காலம் ஒன்றே என்பதால் மக்கு திம்மன், காலம் நிர்ணயித்தபடி மக்கள் மனதில் வாழட்டும் என்று கூறினாராம்.

இன்று ஆன்மீகத் துறையிலும் இலக்கியத்துறையிலும் அவருடைய மக்கு திம்மன் ஆராய்ச்சிக்கான பொருளாகி விட்டான். R.K. லக்ஷ்மண் அவர்களுடைய "காமன் மேன்", கார்ட்டூன் உலகில் எப்படிப் பிரசித்தமோ அப்படி கர்நாடகத்தில் கன்னடம் படித்த யாவருக்கும் மன்கு திம்மன் பிரசித்தம்.

மக்கு திம்மனை மேற்கோள் காட்டாத ஆன்மீக உரையாளர்களே இன்று இருக்கமுடியாது. "baaLu jatka bandi" (பிழைப்பு ஜட்கா வண்டி) என்கிற பாடல் மிகவும் புகழ் பெற்றது. சின்மையா மிஷனை சேர்ந்த சுவாமி பிரம்மானந்தாவின் "மக்கு திம்மன்" பற்றிய விளக்கவுரைகள் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. டாக்டர் ஆர். கணேஷ் என்ற பிரபல ஆன்மீக விரிவுரையாளரும் திம்மனைப் பற்றிய குறுந்தகடுகள் வெளியிட்டுள்ளார்.

தனக்கென்று செல்வம் ஈட்டுவதில் குண்டப்பாவிற்கு ஆர்வம் இருக்கவில்லை. கர்நாடக அரசு அவருக்கு அளிக்க முன்வந்த ஓய்வு ஊதியத்தை அவர் மறுத்து விட்டார். இலக்கிய சேவைக்காக அவருக்கு 1970ல் அளிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பணமுடிப்பை அவர் சமூகப் பணிக்கென கொடுத்து விட்டார்.

பெங்களூர் பசவன்குடியில் கோகலே இன்ஸ்டிட்யூட் (Gokhale Institute of Public Affairs) என்பது திரு டிவிஜி அவர்களால் துவக்கப்பட்டு இன்று மிகப்பெரும் இலக்கிய சேவையிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளது. 1974 இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மபூஷண் விருது அளித்து கௌரவித்தது.

மக்குதிம்மன் பாடல்களின் சில மாதிரி :

சரியாகவில்லை அது, சரியில்லை இதுவென்று
பஞ்சணையில் முள் பரப்ப வேண்டாம்.

நிறைவாகும் ஒன்று, குறையாகும் இன்னொன்று
வாழ்க்கையில் என்றும் முரண் உண்டு -மக்குதிம்மா


அன்னப் பசியினும் சொன்னப்பசி தீவிரம்
சொன்னப் பசியினும் ஆண்பெண் உறவாம்

மன்னு புகழாசை யாவினும் தீவிரம்
தின்னு மவர் நெஞ்சம் -மக்குதிம்மா
(சொன்னம்=சொர்ணம், பொருளாசை)


வானி லுண்டோ பறவைக்கு வரைபடம்
மீனுக் குண்டோ நீந்திட வரையறை
ஏனோ வொன்று தள்ளுது ஒன்றிழுக்குது

நீனொரு காற்றிலாடும் பட்டம்- மக்குதிம்மா


நாளுக்கு நாள் கணத்திற்கு கணமாய்
நாளைய கவலை விட்டு வாழ்ந்திடு
விவரங்கள் தொகுப்பவன் வேறொருவன்
கழித்திடு உன் பிறவிதனை - மக்கு திம்மா

[கொசுறு: DVG பெங்களூரில் எங்களது பாட்டானாரின் வீட்டு பின் தெருவில் குடியிருந்தார் என்பதும் எங்களது பாட்டனாருக்கு நல்ல நண்பர் என்றும் அவ்வப்போது அவரது கையெழுத்துப் பிரதிகளை எனது பாட்டனார் சரி பார்த்துக் கொடுத்திருக்கிறார் என்பதை என் தந்தை வழியாக சமீபத்தில் அறிந்த போது பெருமையாக இருக்கிறது.]

பசவனகுடி, ப்யூகல் ராக் பூங்காவில் டிவிஜிக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மாலை வேளைகளில் நண்பர்களோடு உரையாட மிகவும் விரும்பிய இடம் என்பதால் அதே இடத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

9 comments:

திகழ் said...

அருமையான தகவல்

அவரின் தமிழ்ப்பாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன.

KABEER ANBAN said...

//அவரின் தமிழ்ப்பாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன //

நன்றி திகழ். இதையே தொடர்ந்து செய்ய முடியுமா என்று யோசித்து வருகிறேன். இறைவன் சித்தம் எப்படியோ ?

மெளலி (மதுரையம்பதி) said...

கபீரன்பன் சார், சிறப்பான அறிமுகம். தமிழில் பாடல்கள், கருத்தை எளிதாக உணரவைக்கின்றன. கண்டிப்பாக்த் தொடருங்கள். அங்கும், இங்குமாக இரு இடங்களிலும் இடலாம் :-)

NambikkaiRAMA said...

ஆமாம் மௌலிஜி சொன்னார் போல் ..அங்கும் இங்கும் தொடரலாம் .ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்தால் அதையும் சேர்த்து இடுங்கள் சார்!

KABEER ANBAN said...

நன்றி மௌலி, நம்பிக்கை ராமா.

//ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்தால் அதையும் சேர்த்து இடுங்கள் //

எனக்கு கன்னடம் ஓரளவுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் நாம் நேரடி முயற்சியில் இறங்கலாமே. நடுவில் ஆங்கிலத்தை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.அதைத் தருவதில் சிரமம் ஒன்றுமில்லை. அதையும் தருகிறேன்

கோமதி அரசு said...

திரு. தேவனஹள்ளி வெங்கடரமணய்யா குண்டப்பா அவர்களை தெரிந்து கொண்டோம்.

நிறை,குறை வாழ்க்கையில் உண்டு.அதை சம்நோக்கய் பார்க்கும் பக்குவம் பெற பாடல்.

பொன், பொருள், புகழ்லில் ஆசையைப் படும் நெஞ்சைப் பற்றி பாடல்.

பறவைக்கும், மீனுக்கும் எல்லைகோடுகள் இல்லை. நம் வாழ்க்கை பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையில் திரிசங்கு சொர்க்கம் போல் இழுபடுவதையும், காற்றுஅடிக்கும் இடத்தில் பறக்கும் பட்டம் போல் நம் மனதை குறிக்கும் பாடல்.

நாளுக்கு நாள் என்ற பாடலை படுக்கும் போது நாளை பொழுதை இறைவனுக்கு அழித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
பிறவியை கழிக்க நல்ல பாடல்.

இன்னும் பாடல்கள் படிக்க ஆவல்.

உங்கள் பாட்டானாரின் நல்ல நணபர் என்ற விஷயம் மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி கபீரன்பன்.

KABEER ANBAN said...

நன்றி கோமதி மேடம்,

ரசித்துப் படித்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வழிப்போக்கன் said...

மக்குதிம்மா கக்கா தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா? புத்தகம் எங்கு கிடைக்கும்?

KABEER ANBAN said...

நல்வரவு வழிப்போக்கன்,

மன்குதிம்மன கக்கா தமிழில் ஸ்ரீமதி வரதா பிரசாத் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை வெளியிட்டவர்கள் Shri Kashi Sesha Sastri Charitable Trust, Bangalore.
கீழ்கண்ட இணைப்பில் முழுவிவரமும் அறியலாம். bestctrust dot com

ஆனால் என் இடுகைகளில் வெளியிடப்படும் மொழி பெயர்ப்புகள் என் சொந்த முயற்சி. அவருடைய மொழிபெயர்ப்பு அல்ல

தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.