Thursday, September 30, 2010

பழைய வேர் புதுத் தளிர்

நூறு வருடங்களுக்கு மேலான சர்வகலாசாலைக்கு புதுப்புது மாணவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அதனுடைய நூறு வருட பாரம்பரியத்தில் அனைவருக்கும் பெருமிதம். பழம் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும் பொழுது புது தொழிலாளிக்கு ஒரு கூடுதல் பொறுப்பு. அதன் பெருமைக்கு களங்கம் வராதவாறு பணியாற்ற வேண்டும்.[படம் நன்றி : இண்டியா பிக்ஸ் டாட் காம் ]வெள்ளி விழா, பவழ விழா எல்லாம் கொண்டாடுவதும் இதை நினைவூட்டத்தானே. நமக்கென்று ஒரு வேர் இருக்கிறது. அது கலாசாரத்தின் ஆழத்திலிருந்து மனிதர்களை நல்வழிப் படுத்திக் கொண்டே இருக்கிறது.

ஏதோ ஒரு காரணத்தினால் இலைகளை பூஞ்சான் நோய் தாக்கினாலும் பெரிய மரம் அவற்றை உதிர்த்து விட்டு மீண்டும் புதிதாக தளிர் விடத் தொடங்குகிறது. அப்படி உயிர்த்து வரும் புது நம்பிக்கை ’மரத்தின் ஆழமான வேர்களால் அல்லவோ’ என்று DVG இந்த இடுகையின் பாடலில் விளக்குகிறார்.


புதுத்தளிரும் பழவேரும் மரத்திற் கழகு
புதுயுக்தி பழந்தத்துவம் வாழ்நெறிக் கழகு
புதுஞானம் மெய்ஞானம் இணைதலு மழகு
இதுமேன்மை மனிதருக்கே- மக்குத் திம்மா
(பழவேர் = பழமையான வேர்)

மனித குலத்துக்கு புதுப்புது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் அவசியம். அவை புதுத் தளிர் போல. சூரிய ஒளியிலிருந்து இலைகள் எப்படி ஒளிசக்தியை மரத்திற்கான ஊட்டச் சத்தாக மாற்றுகின்றனவோ அப்படி புது யுக்திகள் நம் வாழ்க்கையை உயிர்ப்புடனும் துடிப்புடனும் இயங்கச் செய்கின்றன. ஆனால் அதற்கு அந்த சக்தியை வழங்குவது மரத்தின் ஆழமான வேர்கள் என்பதையும் மறக்கலாகாது. ஆன்மீகத்தின் மூலம் கண்டறியப்பட்ட அற நெறி வாழ்க்கையையும் கை விட்டு விடலாகாது. எப்போதும் பழமையுடன் புதுமை கலந்து இயங்குவதே மனிதகுலத்துக்கு மேன்மை தரும் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் DVG.

கீழே உள்ள பழைய மரத்தில் ஒரு சிற்பி பல்விதமான பறவைகள், மிருகங்கள், ஊர்வன செதுக்கி இருக்கி இருக்கிறான். உங்களால் எவ்வளவு கண்டு பிடிக்க முடியும் என்று முயற்சி செய்யுங்கள். பழமையில் புதுமை !!இது தெற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் பழைய மரம். பெரிய படத்தைக் காண இங்கே சுட்டவும்.

6 comments:

கோமதி அரசு said...

பழைய மரத்தில் எனக்கு தெரியும் பறவைகள்....மயில்,கழுகு,கரடிக்கு கீழே ஒரு பறவை மேலே மரங்கொத்தி பறவை தெரிகிறது. பின் முதலை,தேள்,குரங்கு,ஒட்டகசிவங்கி கரடி,நத்தை,காண்டாமிருகம்,காளை குதிரை,ஆடு, மலை பாம்பு மாதிரி தெரிகிறது.

சிற்பி பாராட்டப்பட வேண்டியவர்.

எங்கள் பார்வைக்கு தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
//அறநெறி வாழ்க்கையை கை விட்டு விடலாகாது//
உண்மை கபீரன்பன்.

KABEER ANBAN said...

வருக கோமதி மேடம்.

நான் கண்டுபிடிச்சதுக்கும் அதிகமாகவே கண்டுபிடித்து இருக்கிறீர்கள். நீர்யானை தெரிகிறது. காண்டாமிருகம் எங்கே ?

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

கோமதி அரசு said...

//ஆன்மீகத்தின் மூலம் கண்டறியப்பட்ட அற நெறி வாழ்க்கையையும் கை விட்டு விடலாகாது. எப்போதும் பழமையுடன் புதுமை கலந்து இயங்குவதே மனிதகுலத்துக்கு மேன்மை தரும் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் DVG.//

மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் இணையும் போதுதான் இன்பம்.

விஞ்ஞானத்தின் பயனாய் பொருள் பெருகும் அளவிற்கு
விளைவறிந்து அளவுமுறை பிறாழாது வாழ
மெய்ஞ்ஞானம் மக்களிடை மேலோங்க வேண்டும்
மிக இன்றயமையாத இதை முதலில் செய்வோம்.

வேதாத்திரி மகரிஷி.

KABEER ANBAN said...

அருமையான மகரிஷியின் உபதேசத்தை பொருத்தமாக எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி, கோமதி மேடம்.

நன்றி

ஜீவி said...

குழந்தைகளோ எனில், சுவர், தரை என்று கண்ட இடங்களில் கிறுக்குமாம்.
இந்த சிற்பியின் வேலை, எனக்கென்னவோ உயிரில் உளிகொண்டு செதுக்கிய மாதிரித் தோன்றியது.
அல்லது கை,கால் என்று உடல் பூரா 'மகந்தி' போலவான சித்திரங்களைத் தீட்டிக் கொள்கிறார்களே, அதுபோல் இந்தச் சிற்பி மரத்திற்கு மகந்தியென சிற்பங்களைத் தீட்டி விட்டான் போலும்!

KABEER ANBAN said...

//உயிரில் உளிகொண்டு செதுக்கிய மாதிரித் தோன்றியது. //

உண்மைதான்தான் ஜீவி சார். புதுமைகள் செய்வதில் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆற்றல் மிகவும் ஆச்சரியம் அளிப்பதே !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி