Thursday, December 14, 2023

ஹைடிரோபானிக்ஸ்- என் பரிசோதனைகள்-2

 இதன் முதல் பகுதியில்  நீரியல் வளர்ப்பு எனப்படும் ஹைட்ரோபானிக்ஸ் முறையில் தாவரங்களை வளர்ப்பதன் மேன்மைகளைச் சொல்லி அதில் என் ஆரம்ப அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.  

அதைப்பற்றி தெரிந்து கொள்ள.....  

இதை எழுதி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் என் பரிசோதனைகளை சிறிய அளவில் நடத்திக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதையும் சாதிக்கவில்லை.  என் வீட்டு மாடியில் மழைநீர் சேகரிப்பு, Green House 130 சதுர அடி என சில முஸ்தீபுகளை செய்து கொண்டு தீவிரமான முயற்சியில் இறங்குவதற்கு இவ்வளவு காலம் பிடித்தது. 

க்ரீன் ஹவுஸ் ஏன் தேவைபடுகிறது என்றால்  திறந்த வெளியில் அதிக காற்று மழை அடிக்கடி பாதிப்பு ஏற்படுத்துவதால் நமக்கு சரியான முடிவுக்கு வரமுடியாமலே பரிசோதனை கெட்டுப் போய் விடுகிறது. 

குறைந்த இடத்தில் அதிகப்பயிர் என்னும் படியான தொழில்நுட்பத்தை க்ரீன்ஹவுஸ்-னுள் புகுத்திப் பார்க்க- Tower Cultivation எனப்படும்-  நெட்டையான குழாய்களில் வளர்க்கும்  முறையை இணையத்தின் மூலம் வாங்கி என்னுடைய புதிய சோதனைகளை இந்த வருடம் மே மாதக் கடைசியில் ஆரம்பித்தேன்.

இது நம் கோவில்களில் உள்ள கொடிமரத்தை நினைவுபடுத்துவதால்  கொடிமரக்குழாய் வளர்ப்பு என்றே பெயரிடுவோம்.

கொடிமரக் குழாயின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீர் இறைப்பான் ( submersible pump)  நீரை மேலிருந்து -உட்புறத்தில்-வடிய செய்வதால் நீரின் சுழற்சியில் செடிகளுக்கு தேவையான நீர் (அதன் மூலம் ஊட்டச்சத்து) மற்றும் பிராணவாயு தொடர்ந்து கிடைக்கிறது. ஐந்தரை அடி உயரமுள்ள குழாய்களில் 32 செடிகளுக்கு இடம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.  இதன் செயல்முறையை பல டியூப் சானல்களில் காணலாம்.

இதிலுள்ள பம்பு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. செடிகளின் வேர்களில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் நான்  'இரண்டு நிமிடம் இறைப்பு' 'பத்து நிமிடம் ஓய்வு' என்ற சுழற்சி முறையை ஒரு Timer மூலம் நடைப்படுத்தினேன்.

மிக மிக திருப்திகரமாக வேலை செய்து வருகிறது. 18 வாட்ஸ் பம்பு ஒரு நாள் முழுதும் இந்த சுழற்சியில் ஓடினால் ஆகும் மின் அளவு 72 Wh. அதாவது  இரண்டு வாரங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.

மேலும் க்ரீன் ஹவுஸ் உள்ளேயே இருப்பதால் பூச்சித் தாக்குதல் அறவே இருக்கவில்லை. ஆவியாகும் தண்ணீரை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அளவு பார்த்து நிரப்பவேண்டும்.  இது ஒரு நாளைக்கு  2 லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. மாதம் ஒன்றிற்கு 70 முதல் 80 லிட்டர் அளவிலேயே தேவைப்பட்டது. இதற்கு நான் சேமித்து வைத்திருக்கும் மழைநீரையே முழுவதுமாக பயன்படுத்தினேன்.

தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கரைசல்  ஒரு லிட்டருக்கு 300 லிருந்து 400 மிகி மட்டுமே. 15 லிட்டர் கரைசலுக்கு தேவைப்படும்   NPK கூட்டு உரத்தின் அளவு 6.00 முதல் 10 கிராம் மட்டுமே.  இதில் வீணாய் போகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மாதத்திற்கு 100 லிட்டர் என்று வைத்துக் கொண்டாலும் 40 கிராம் உரத்திற்கான விலை ரூபாய் ஐந்திற்கும் குறைவே.  இப்படியாக எப்படிப்  பார்த்தாலும் சிக்கனமான வளர்ப்பின் பயனை உணர முடிந்தது.  

ஒரே சமயத்தில் எட்டு விதமான  செடிகளை  கொடிமரக் குழாயில் வளர்க்க ஆரம்பித்தேன். அதில் கீரை வகைகள் இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளேயே வளர்ந்து அறுவடைக்கு வந்துவிட்டன.  அதற்குள் தக்காளி  சாமந்தி போன்றவை கிளை பிரிந்து இலைகள் பெரியனவாகி வேறு செடிகளை வளரவிடாமல் தடுத்து விட்டன. கீழே உள்ள தொகுப்பில் அவற்றின் வளர்ச்சியைக் காணலாம். 


(படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம்)


     கடந்த ஆறு மாத காலத்தில் என் அனுபவம்  உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.  பூச்செடிகளான காசித்தும்பை, துலுக்க சாமந்தி,  பூஜைக்கான துளசி, தும்பை,  கீரைவகைகளான புதினா, பாலக்,  செர்ரி டொமேடொ எனப்படும் சிறிய வகை தக்காளி ( இன்னமும் காய்த்துக் கொண்டிருக்கிறது!) என்பதாக பலவகை செடிகளின் மிக ஆரோக்கியமான வளர்ச்சியை காணமுடிந்தது. மேலும் வேர்தாக்கலால் வரக்கூடிய  நோய்களும் இருக்கவில்லை.  

அடிக்கடி வெளியூர்களுக்கு போவதானாலும் "தண்ணீர் விட வேண்டுமே... செடிகள் காய்ந்து விடுமே" என்ற கவலையில்லை. 

இதில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் குழாயினுள் எல்லாச் செடிகளின் வேர்களும் மிக அடர்த்தியாக வளர்ந்து பின்னிப்பிணைந்து கொள்கின்றன. இதனால் சில செடிகளை அதன் காலம் முடிந்ததும் எடுத்துவிடலாம் என்றால் சிக்கல் இன்றி எடுக்க முடிவதில்லை.

அடுத்ததாக தொட்டி  வளர்ப்பில் குத்தாக வளரும் செடிகள் இந்த கொடிமரக்குழாயில் கோணலாக வெளிவந்து பின்னர் நிமிரத்தொடங்குகின்றன.  இதனால் பெரிய இலையுள்ள பாலக் போன்ற செடிகள் சிறிய இலை கொண்ட  கொத்துமல்லி புதினா இவற்றின் வளர்ச்சியை பாதிக்கின்றன.  கொடிமரக் குழாயைப் பயன்படுத்தும்  வகைகளை நிதானமாக முறைப்படுத்தி  குறுகிய காலத்தில் அதிகப் பயனடைவது எப்படி என்று கண்டறிவதே அடுத்த கட்ட பயணம்.
குறிப்பாக வேறு காய்கறி செடிகளை எப்படி பயிரிடலாம், அவை எல்லாவற்றின் ஊட்டச்சத்துத் தேவைகளும் ஒரே மாதிரி இருக்குமா  எந்த செடிகளோடு எவை எவை ஒத்துப்போகும்  எனப்பலவகையான கேள்விகள் எழுகின்றன.

அடுத்த பொங்கலுக்குள் (2024) மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டம் போட்டு செயல் படுத்த வேண்டும். ஏனெனில் பல வகை செடிகளின் பலனளிக்கும் காலமே 60 அல்லது 90 நாட்களுக்குப் பிறகு தான் தொடங்குகிறது. அதுவரை புசு புசு என்று அடர்த்தியாக வளரும் இலைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவைகளை கத்தரிக்கலாமா வேண்டாமா என்ற கவலை என்போன்ற அனுபவமில்லாதவர்களுக்கு ஏற்படும்.

எல்லாமே ஒரு நல்ல படிப்பினைதான். 

Wednesday, December 6, 2023

காணறியா இறைவன் சூது

 அந்த காலத்தில் 16 m.m.   திரையில் எங்கள் காலனியில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை  திறந்த வெளியில் திரையிடும் போது பல வேடிக்கைகள் நடக்கும். அடிக்கடி ரீல் அறுந்து போகும்.  ஏற்கனவே படம் பார்த்திருப்பவர்கள் அதற்கான உரையாடல்களை கூடவே சொல்லிக் கொண்டு போவார்கள். படத்தை விட பார்க்க வந்திருப்பவர்களின் வைபோகமே அதிகம்.

 ஒரு முறை நான்கு வயது சிறுவன் சுற்றியிருந்த இருளும் திரையில் படமும்  புரியாததாலோ என்னமோ திரும்பி நின்று கொண்டு "அம்மா லைட்'  'அம்மா லைட்" ப்ரொஜக்டரைக் காட்டிக் கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தான்.   (அந்த வெளிச்சம் பரவாமல் ஏன் யாவரும் இருட்டில் அமர்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வியே அவனுள்ளத்தில்  இருந்திருக்குமோ ?) சிறிய துவாரத்தின் மூலம் வெளியான அவ்வெளிச்சம் தான் திரையில் காணும் காட்சிகளுக்கு காரணம் என்பது அவனுக்கு புரியவில்லை.  "ஆமா ஆமா லைட் தான் படுத்து தூங்கு" என்று சிரமப்பட்டு அவனை தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தாள் அவனுடைய தாயார். 

"Go to the source "  என்பது ஆன்மவிசாரம் செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை.  ஆன்மாவின் ஒளிதான் தேகம் மற்றும் உலகத்தின் இயக்கத்திற்கே அடிப்படை. அதை கவனிக்க ஆரம்பித்தால்  உலகம் என்ற திரை நம் முதுகு பக்கமாகி நம்மை பாதிக்காது. இதையே அந்தர்முகம் என்று தியானவகுப்பில் சொல்கின்றனர்.  

அந்த கவனிப்பு நீளும் அளவு மனம் கொந்தளிப்புகள் அடங்கி குளிர்ந்து இருக்கும்.  இதன் அவசியத்தை டி.வி.ஜி. அவர்கள் மக்குத் திம்மன் கவிதை ஒன்றில் அழகாக உரைக்கிறார்.

இனியென்ன மற்றென்ன, கதி ஏது எனப் பதறினும்  

விதியதன் எழுது கோலும் உளதோ உன் கையில் ?  

கண்களுக்கு எட்டாது அவன் நடத்தும் சூது

குளிர்ந்திருப்பாய் உன் ஆன்மாவிலே- மன்கு திம்மா.

திரையில் ஓடும் காட்சிகளோடு மனம் ஒன்றியிருக்கும் போது கதையின் போக்கு திகிலூட்டக்கூடும். ஆனால் அதிலிருந்து விலகிடும் போது மனதை திரைக்கதை பாதிப்பதில்லை.  

உலக விசாரங்களில் நம் மனதின்படி முடிவுகள் வராமல் போய்விட்டால் அதை சுலபமாக மனம் ஏற்றுக் கொள்ளாமல் தவிப்பை அதிகமாக்கிக் கொள்கிறது.  இறைவனின் இச்சைப்படிதான்  இந்த உலகில் எல்லாம் நடக்கிறது என்ற போக்கை கடைபிடித்தால் மனமும் போராட்டங்கள் இல்லாமல் குளிந்திருக்கும். அதற்கான வழிதான் ஆன்மாவில் கவனம் செலுத்துவது என்கிறார் திரு குண்டப்பா அவர்கள்.

இதே உண்மையை  ஜென் கருத்தும் எவ்வளவு பொருத்தமாக எடுத்து சொல்கிறது !!   'நாம் முடிவு செய்பவர் அல்லர்' என்பதை புரிந்து கொண்டால்

"....your struggles with life will end " 

பாடலின் மூலமும்,  தமிழில் முயற்சியும் :

கதியிதுவோ மற்றெதுவோ எனப் பதைப்பதும் ஏன்?
விதியதன் கோலும்  உன் கையில் உளதோ?
பதியவன் காணறியா சூதின் வழி நடக்கும் உலகு 
மதியும் குளிரட்டும் ஆத்மனிலே-மக்குத் திம்மா  (# 360)

(பதி =இறைவன்; காணறியா சூது = கற்பனைக்கெட்டாத வழி முறை )

பின் குறிப்பு :

 ( தபாலில் வந்த ஒரு உறை மேல் கிறுக்கிய  இந்த படத்திற்கு டிஜிடல் வர்ணம் பூசி, ஜென் ஞானத்துடன்  வாட்ஸப்பில் சிலருடன் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு அது எனக்கே வேறொருவர் மூலமாக வந்தது ... இப்போது டிவிஜி கவிதைக்கு துணையாகிறது. ) 



Saturday, July 8, 2023

ஆறு மனமே ஆறு ....

"ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு "  என்பது ஆண்டவன் கட்டளை என்கிற திரைப்படத்தில் இடம் பெற்ற மிகவும் புகழ் பெற்றப்  பாடல்.

இதில்  கவிஞர் கண்ணதாசன் ஆறு குணங்களை  மனிதரின் மன ஆறுதலுக்காகப் பட்டியலிடுகிறார். அவை  1) ஒன்றே சொல், அதையே செய்  2) இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்த நியதி 3) உண்மையை சொல்லி நன்மையை செய் 4) நிலை உயரும் போது பணிவு கொள் 5) ஆசை, கோபம் களவு மிருக குணங்கள் 6) அன்பு கருணை நன்றி -தெய்வ குணங்கள்.
அற்புதமான இசையமைப்புடன் கூடிய அந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

மேற்கண்ட குணங்களை பலவேறு கோணங்களில் மக்குதிம்மன் மூலமாக  குண்டப்பா அவர்களும் பல பாடல்களில் சொல்லியிருக்கிறார். இந்த பதிவில்
மனிதரின்  முன்னேற்றத்திற்கென அவர் சொல்லும் மூன்று குணங்களை பார்ப்போம். முதலில் பாடலும் அதன் மொழிபெயர்ப்பும்:   

ಚಾರುದೃಶ್ಯಂಗಳಿಂ ಪ್ರೀತಿ ಹೃದಯವಿಕಾಸ|
ಕ್ರೂರದೌಷ್ಟ್ಯಯಂಗಳಿಂ ವೀರಾನುಕಂಪ ||
ಭೈರವಾದ್ಧುತಗಳಿಂ ಮೌನದಂತರ್ಮನನ |
ದಾರಿಯುದ್ಧಾರಕಿವು- ಮಂಕುತಿಮ್ಮ || 457 ||


மன விகாசம் தரும் இயற்கையின் காட்சி
வன்மையைக் காணில் வெகுளும் மற நெகிழ்ச்சி
மோனத்தில் வியந்திரு பிரளயங் காட்டும் மிரட்சி
மேன்மைக்கு வழியிதுவே- மக்குத் திம்மா

( விகசித்தல் = மலர்தல்; பிரளயங் காட்டும் மிரட்சி= பயந்தரும் இயற்கையின் சீற்றம் ;  மற  நெகிழ்ச்சி =  வீரத்தின் பின்புலத்தில்  இரக்கம்  -வீர அனுகம்பம்  )
 
முதலாவது இயற்கையோடு இயைந்திருப்பது.    
 இரண்டாவது தர்மத்தோடு  இயைந்திருப்பது . 
மூன்றாவதாக எல்லாம் வல்ல இறைசக்தியின் முன் தலை வணங்கி நிற்பது.    

முதல் வரியில் இயற்கையோடு இயைந்திருப்பதின் ரகசியத்தை சொல்கிறார். 
 
மன விகாசம் தரும் இயற்கைக் காட்சி
நாம் பார்க்கின்ற ஒரு காட்சி நம்முடைய மனதை  கொள்ளைகொள்ளும் போது நமது மனம் மிகவும் மென்மையானதாகிறது .  குழந்தையின் சிரிப்பிலாகட்டும், மலர்களின் மலர்ச்சியாகட்டும்  அக்கணங்களில் மனம் லேசாவதை உணரலாம்.  அதை இறையோடு ஒன்றிய நிலை என்றும் கூறலாம்.   

     காட்டின் வழியில் முல்லைக் கொடிக்கு  தேர் ஈந்தான் பாரி மன்னன் என்றும்  அழகிய தோகை விரித்தாடும்  மயிலைக் கண்டு குளிரால் நடுங்கியது என்று விலையுர்ந்த  போர்வையை போர்த்தினான்   மன்னன் பேகன்  என்றும்  அறியும்  போது அவர்களது மனம் எந்த அளவிற்கு  மென்மை  அடைந்திருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.  மனதின் அந்த  நெகிழ்ச்சியே அவர்களை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது. 

ஆனால்  இந்த மென்மை சமூக வாழ்க்கையில் பயன்தருமா?  மனம் மென்மையானாலும் வீரம் குறையக் கூடாது. அநீதிக்கு எதிராக எழ வேண்டும்.  அதை இரண்டாவது வரியில் குறிப்பிடுகிறார். 

வன்மையைக் காணில் வெகுளும் மற நெகிழ்ச்சி

வீர அனுகம்பம் என்று ஒரு வார்த்தையை கையாளுகிறார் டி.வி.ஜி. அதாவது இரக்கத்தினால் வெளிப்படும் வீரத்தன்மை.  தமிழ் அகராதியில் அனுகம்பம் என்கிற வார்த்தைக்கு இரக்கம் என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது வடமொழியிலிருந்து வந்திருக்கும் சொல். கன்னடம் தமிழ் இரண்டிலும் புழக்கம் உண்டு.

யாருக்கேனும் ஏற்படும் குரூரமான துன்பத்தைக் கண்டு, மனமிரங்கி , அதைக் களைய வேண்டி ஒருவருக்கு ஏற்படும் மனநிலையை குறிக்க வந்தது இது.
இதை  நிறைவேற்ற  ஒருவர்  இரத்தம் சிந்தவோ உயிரை விடவோ கூட நேரலாம்.  ஆனால் அது பிற உயிர் மேல் கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாக எழும் உணர்ச்சி.  

அப்போது  மனதின் மென்மைத்தன்மை மறைந்து வீரத்தின் அறிகுறியான மறத் தன்மை வெளிப்படுகிறது.  அதை 'வீர அனுக்கம்பம்  என்கிறார் டி .வி.ஜி. 

 உதாரணமாக தன்னுடைய தசையை அறுத்து எடைக்கு எடை கொடுத்து ஒரு புறாவைக் காப்பாற்ற முன்வந்த சிபி சக்ரவர்த்தியாகட்டும், கன்றை இழந்து தவித்த பசுவிற்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணமான தன் மகனை தேரடியில் கிடத்திய மனுநீதி சோழன் போன்றவர்களின் மனநிலையை சொல்லலாம். இங்கே பெரும்பாலும் தியாக குணம் இருக்கும். தன்னலத்திற்கு இல்லாமல் பிறர் நலனுக்காக போராடும் குணம் வெளிப்படும்.  அதனால் இதையும் மனமுயர்த்தும் வழி என்கிறார் டி.வி.ஜி. 

மூன்றாவதாக  சர்வ வல்லமை வாய்ந்த  இயற்கையின்  கோர  சக்தியை கண்டு  அதன் முன் எப்படி மனிதனின் ஆற்றல்கள் யாவும் ஒரு துரும்பு போன்றது என்பதை நினைக்கும் போது  ஆணவம் அடங்கி  மன அடக்கம் ஓங்குகிறது.  அப்போது மனிதனால் அந்த சக்தியை மௌனமாக வியக்க முடியுமே அன்றி வேறெதுவும் செய்ய இயலாதவன் ஆகிறான். இந்தப் புரிதலும் மனிதரின் முன்னேற்றத்திற்கு ஒரு  தேவையே! 


மோனத்தில் வியந்திரு பிரளயங் காட்டும் மிரட்சி

 இந்தப் பாடல், சத்சங்கத்தில் இருக்கும்  சாதகர்களுக்கு  என்பதாக வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அடிப்படை  நல்லொழுக்க நெறிகளை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  அவர்கள் சாதனையில் அடுத்த கட்டத்திற்கு நகருவதற்காக அமைத்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை என்று கொள்ளலாம்.  அதற்கான வழி சொல்லும் பாடல் இது.

மாற்று :  ( கொள்ளை என்ற சொல்லை பல பொருளில் பயன்படுத்த ஒரு சோதனை முயற்சி.  )

கொள்ளை அழகில் விகசிக்கும் மனம்  -              abundance
கொள்ளை கொலை கண்டு வீறும் மறம் -            robbery
கொள்ளை வியப்பு ஊழிதன் நர்த்தனம்    -           plenty
கொள்ளை யுண்டு மனிதருக்கே மக்குத் திம்மா   -  profit


Tamil Lexicon : 
[கொள்ளை koḷḷai , n. < கொள்-. 1. [T. kolla, K. koḷḷe, M. koḷḷa.] Robbery, plunder, pillage; சூறைகொள்ளுகை. 2. [T. kolla.] Excess, abundance, copiousness, plenty; மிகுதி. கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம் (பாகவ. 1, 5, 14). 3. Crowd, throng; கூட்டம். கொள்ளையிற் பலர் கூறலும் (கந்தபு. விண்குடி. 14). 4. Plague, pestilence, epidemic; பெருவாரிநோய். 5. Hindrance, obstacle, difficulty; தடை. அதைச்செய்ய உனக்கு என்ன கொள்ளை? 6. Price; விலை. சில்பத வுணவின் கொள்ளை சாற்றி (பெரும்பாண். 64). 7. Use, profit; பயன். நானிருந்தென்ன கொள்ளை (இராமநா. பால கா. 9).]


Thursday, June 29, 2023

Smart socket and UPS inverter :

இந்த தலைப்பை தமிழில் எழுதத் தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். சரி, விஷயத்திற்கு வருவோம்.    

  கர்நாடகாவில் மின்சாரத்துறை  குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. முதலில் இலவசம் என்ற அறிவிப்பு ஒருபுறம்.  மறுபுறம் யூனிட்க்கு  ரூ 4/லிருந்து ரூ 7/க்கு கட்டணம் அதிகரிப்பு.  இதைத் தவிர உபரி வரிகள்.  இலவசம் என்பது ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமலாகும், அதுவும் கடந்த வருட சராசரி பயன்பாட்டைப் பொறுத்து முடிவாகும் என்று நாளுக்கு ஒரு அறிவிப்பு யார் யார் மூலமாகவோ வந்து கொண்டிருக்கிறது.

என் நண்பருக்கு கவலை பிடித்துக் கொண்டது. அவர் மாதம் 120 முதல் 180 யூனிட்டுகளுக்கு குறைவில்லாமல் கட்டி வந்திருக்கிறார். பேச்சு வாக்கில் பயன்பாட்டை குறைப்பது பற்றிக் கேட்டார். வழக்கமான கேள்விகளில் தெரியவந்தது அவர் வீட்டில் வெந்நீருக்கு கீஸர் ஒன்றைத் தவிர பெரியதாக மின்சார பயன்பாட்டைஅதிகரிக்கும் இயந்திரங்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு ஃபிரிட்ஜ், அதுவும் இன்வெர்டர்  பிரிட்ஜ்.  அதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட்டுக்கும் குறைவாகவே இருக்கும். வாஷிங் மிஷன், மிக்ஸி, கிரைண்டர்  போன்ற  இயந்திரங்களே இல்லை. மற்றபடி  தொலைக்காட்சிப் பெட்டி, மின் விசிறிகள், குழாய் விளக்கு  போன்றவைதான்.  ஒரு UPS  இன்வெர்டர் 12 வோல்ட் பாட்டரியுடன் மின்தடை காலங்களின் பயன்பாடு கருதி இணக்கப்பட்டிருந்தது.

அதுவும் சரியாக பராமரிக்கப்படாமல் பாட்டரியின் நீர் அளவு குறைவாகவும்  உப்புப் பூத்த டெர்மினலுடன் காணப்பட்டது.  என் கணக்குப்படி முதல் திருடன் இதுதான். இது கண்டிப்பாக பெரும் விரயத்தை ஏற்படுத்துகிறது என்று தோன்றியது.  கீஸரிலாவது   ஆட்டோ சிவிட்ச் ( thermostat) மூலம்  மின்சார விரயம் குறைக்கப்படுகிறது. 

UPS-ஸில் ஆட்டோ ஸ்விட்ச்  பாட்டரியில் சேமிக்கப்பட்ட மின் அளவைப் பொருத்து செயல்படும். பாட்டரியின் எந்த ஒரு செல் பகுதி பலவீனமானாலும் அது முழு சார்ஜ் ஏற்காது. அதனால் இன்வெர்டர் அதை எப்போதும் சார்ஜ் செய்து கொண்டே இருக்கும்.

.சரியாக பராமரிக்கப்படும் பாட்டரியில் கூட 20  வாட்ஸ் வரையிலும் தொடர்ந்து இழப்பு இருந்து கொண்டே இருக்கும். அதாவது ஒரு நாளைக்கு 480 wh  அல்லது  ஒரு நாளைக்கு அரை யூனிட் . மாதம் 15 யூனிட்கள்.  இது ஸ்டாண்ட் -பை  ( standby loss) இழப்பு எனப்படும்.  நமது  அளவுக்கூடக் கூட  இதுவும் கூடும்.  

பெரும்பாலும்  இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ஏனெனில் இதை  அளப்பதற்கு சரியான கருவிகள் இல்லை.

அப்படி எனக்கொரு கருவி கிடைத்து அதை கடந்த ஒன்றரை வருடங்களாக உபயோகித்து வருகிறேன். ஆனால் அதை வாங்கியபோது அது இப்படி பயன்படும் என்று அறிந்திருக்கவில்லை.

அது ஸ்மார்ட் ப்ளக் ( Smart plug ) எனப்படும்,  கணினி, கைப்பேசி மூலமாக இயக்கக்கூடிய மின் இணைப்பு முறையாகும். இதன் மூலம் நமக்கு தேவையான குறிப்பிட்ட கருவியை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ நிறுத்தவோ முடியும்.  அதை எங்கிருந்தாலும் இணைய இணைப்பு இருந்தால் செய்ய முடியும்.  தானியங்கி செயல்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட்டு இதில் சேமித்து விட்டால் அக்குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிடப்பட்ட செயலை நிறைவேற்றும்.  உலகில் நீங்கள் அதன் செயல்பாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம்.

அப்படி ஒரு ஸ்மார்ட் ப்ளக்கை இணைய தளத்திலிருந்து வாங்கி என் வீட்டு சோலார் இன்வெர்டருடன் இணைத்தேன்.  என்னுடைய தேவை பாட்டரியின் பயன்பாட்டை அதிகப்படுத்தி மின்வாரியத்தின் புழக்கத்தை குறைப்பதே. இதன் மூலம் தானியங்கி ப்ளக்கைக் கொண்டு -அனுபவத்தின் அடிப்படையில் - பருவ நிலைக்குத் தக்கவாறு  கண்காணித்து செயல்படுத்தி வருகிறேன்.

நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவென்றால் நாம் எந்த எந்திரத்துடன் இணைத்துள்ளோமோ அதன் தனிப்பட்ட மின்னளவு பயன்பாட்டை துல்லியமாக தொடர்ந்து கணித்து அதை எப்போது வேண்டுமானாலும் நம் ஸ்மார்ட் ஃபோனில் பார்க்கின்ற வசதியை தயாரிப்பாளர்கள் செய்திருக்கிறார்கள். இதனால் என்னுடைய இன்வெர்டர் ஒவ்வொரு நாளும்  பயன்படுத்தும் நிகழ்நிலையிலேயே ( Real time) அதைத் தெரிவிக்கிறது.

உதாரணத்திற்கு இந்த படத்தில் என்னுடைய கடந்த சில மாதங்களுக்கான  இன்வெர்டரின் பயனளவை காட்டியிருக்கிறேன்.  ( இரவு 12 மணி முதல் காலை 7:45 மணியளவிலேயே 130 wh உபயோகித்திருக்கிறது. 1000 wh = 1 kwh அல்லது 1 யூனிட் எனப்படும்) )



இதில்  2022 ஆம் வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் நாங்கள் ஊரில் இல்லாதபோதும்  7 அல்லது 8 யூனிட்டுகளை அது உபயோகித்திருக்கிறது. நான் நல்ல முறையில் என் பாட்டரிகளை பராமரித்து வருவதால்  அதன்  மின் இழப்பு வேகம் குறைந்திருக்கலாம். இழப்பு குறையும் போது ஈடுகட்ட வேண்டிய மின்தேவையும்  குறையத்தானே செய்யும்!  

அதிக அளவில் மின்தேவை ஏற்படும் பொழுது இன்வெர்டர் எடுத்துக் கொள்ளும் அளவும் ( self maintenance ) அதிகரிக்கிறது.  இதை மாதாந்திர உபயோகத்தின் அளவுகளைக் கண்டு புரிந்து கொள்ளலாம். 


கீழே இருக்கும் எண்கள் இன்வெர்டர் யூனிட்டுகள் மேலே உள்ளவை அந்தந்த மாதத்திற்கான பயனீட்டு அளவு.  சராசரியாக இன்வர்டர் மட்டும் மாதம் 24 யூனிட்டுகளுக்கு காரணமாகிறது.  அதிக அளவு மின்சாரம் இன்வெர்டர் மூலம் இழுக்கப்படும் பொழுது சூட்டைத் தணிக்க அதிலுள்ள cooling fan  அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால் அன்றைய  தட்ப வெப்பத்தைப்பொருத்தும் தினசரி வேறுபாடுகள் இருக்கும்.

இதையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறேனென்றால்  UPS  சேவை மிக அவசியம் என்று  நாம் பெரும்பாலும் தேவையின்றி பாட்டரியை சார்ஜ் செய்து கொண்டு  அதிகப்படியான மின்கட்டணம் கட்டி வருகிறோம்.

பயனீட்டின் அளவு அதிகரிக்கும் போது இன்வெர்டரின் தேவை  65 வாட்ஸ் வரை கூட போகலாம்  என்று இணையத்தில் பலருடைய அனுபவங்கள் வாயிலாக அறிகிறேன்

அப்போது  இன்வெர்டரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க முடிந்தால் 30 யூனிட்டுகளை குறைக்க முடியும்.  அதாவது மாதம் ரூ 210 + உபரி வரிகளை குறைக்கலாம். 

இன்வெர்டர் UPS வைத்து இருப்பவர்கள் பாட்டரியை வாரம் ஒரு முறை சார்ஜ் செய்து அதை மெயின் லைனிலிருந்து switch off  செய்து விடுங்கள்.  மின்தடை ஏற்படும்பொழுது மட்டும் அதை ON செய்து கொண்டால் போதுமானது. இதனால் தேவையின்றி இன்வெர்டர் இயங்காது. சூடாகாது.  அது போல் பாட்டரியின் இழப்பு வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும். 

முக்கியமாக பாட்டரியின் ஆயுட்காலம் எத்தனை முறை செறிவூட்ட சுழற்சி (Charging cycles) என்பதைப் பொருத்தது. எப்பொழுதும் மின் இணைப்பிலேயே வைத்திருக்கும் பொழுது மிக விரைவிலேயே சுழற்சி எண்ணிக்கையை எட்டி விடுகிறது. இதனால்  ஐந்து வருட காலம் என்பது மூன்றாக சுருங்கி போய் விடும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பராமரிப்பு சரியில்லாமல் இருந்தால் அதிக அளவில் மின் இழப்பை ஏற்படுத்தும்.  

மேலே கூறிய அனைத்தும் வெறும் இன்வெர்டர் UPS வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. 

பின் குறிப்பு :  இந்த சேமிப்பின் பரிமாணம் என்ன?
மாதம் ரூ 200 என்று வைத்துக் கொண்டால் வருடத்திற்கு ரூ2400/
 ஐந்து வருடத்தில் சேமிப்பின் அளவு ரூ 12000/

அதாவது அடுத்த பாட்டரி வாங்குவதற்கான பணத்தை முறையான கண்காணிப்பினாலேயே சேமிக்க வழியுண்டு என்பதை புரிந்து கொண்டாலே போதும்.



Saturday, June 24, 2023

வேண்டியதை ஈவான் ஈசன்

இயற்கையின் நியதிப் படித்தான்  எல்லாம் நடக்கிறது என்பது வழி வழியாக சான்றோர்கள் ஏற்றுக் கொண்டுள்ள வழக்கு.

இதில் நமக்கு என்னப் பிரச்சனையென்றால் இயற்கை  (அல்லது கடவுள்) அந்த நியதிகளை வெளிப்படையாக திறந்த புத்தகமாக நமக்குக் காட்டுவதில்லை.  இதனால் சஸ்பென்ஸ் அதிகமாகப் போய் பெரிய நகரத்தில் மொழி, வழி தெரியாமல் சிக்கிக் கொண்டவனைப்   போல் ' ..........இத்தாவிர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்"   என்று  சிவபுராணத்தில்  மணிவாசகர் சொல்வதை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது ஒரே வழி அந்த கடவுளிடம் சரணடைவதே.  அவனிடம் வேண்டப்போவது என்ன ?  

  D.V.G. இதற்கு மாணிக்கவாசகர் மொழியிலேயே  விடை தருகிறார்.


இங்கே மனிதர்களுக்கே உரித்தான மனத் தடுமாற்றத்தை அழகாகப் படம் பிடிக்கிறார்.  நம்முடையே இச்சைகளை அவன் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஆனால் அதை அருளுவானோ இல்லையோ என்ற சந்தேகம். அதே வேளை நாம் இச்சைப்பட்டதெல்லாம் நமக்கு நன்மை தருமா என்பதும் தெரியாது. சரி அவனிச்சைப்படியே நடக்கட்டும் என்று உறுதியாக நம்பும் மனமாவது உண்டா ? ( என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்).

ஆகையால் கடவுளிடம் ஏதாவது வரம் வேண்டுவதானால் "நீ அருளுவதை ஏற்றுக் கொள்ளும் உறுதியான மனதைக் கொடு'  என்பது மட்டுமாகவே இருக்கட்டும்  என்று மக்குத் திம்மன் வாயிலாக நமக்கு சொல்கிறார் டி.வி.ஜி.

மொழிபெயர்ப்பு :

வேண்டியதை ஈவான் ஈசன் என்ற நிலையில்லை

வேண்டுவதில் நலம் யாதென அறிவுமில்லை

வேண்டாமலே வருவது அவனிச்சை எனக் கொள்

வேண்டிடு நீ அந்நெஞ்சுரம் - மக்குத் திம்மா  ( 943)

மாணிக்கவாசகர் வழியிலேயே சொல்லுகிறார் என்று ஏன் சொல்லுகிறேன் என்றால்  காலத்தால்  மொழியால்  பிரிக்கப்பட்டிருந்தாலும்  அவர்களிடையே உள்ள கருத்து ஒற்றுமை எப்படி வெளிப்படுகிறது என்பதை கீழ்கண்ட திருவாசகப் பாடலை படித்தாலே புரியும்.


"அதுவும் உந்தன் விருப்பன்றே" என்கிற மாணிக்கவாசகப் பெருமானுக்கு இருந்த மன உறுதியை பெறுவதே  நம்முடைய பிரார்த்தனைகளுக்கான முழுமையான பலன் என்று உணர்ந்தாலே நமக்குள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டதாகப் பொருள் கொள்ளலாம்.

அப்போது நம்மைப் பற்றி யார் என்ன நினைத்தால் என்ன?  எல்லாம் ஈசுவர இச்சைப்படி நடக்கிறது.
( டிஜிடல் வரைவு )