பிறவிப்பிணி எதனால் வருகிறது?
நமது தீர்க்கப்படாத ஆசைகள் என்பது பொதுவான எண்ணம்.
நாம் தீர்க்க வேண்டிய சில பழைய பாக்கிகளும் நமக்கு பிறவியைத் தரக்கூடியது என்ற நம்பிக்கையும் ந்ம்மிடையே உண்டு.
ஒரு சிலர் பத்து பைசா இருபது பைசா போன்ற மிகச் சிறியத் தொகையைக் கூடக் கறாராகக் கணக்குப் பார்த்து திருப்பித் தருவார்கள். “ என்னப்பா இதையெல்லாம் கணக்குப் பார்க்கணுமா?” என்றால் “ இதுக்காக இன்னொரு ஜன்மமெல்லாம் எடுத்து வந்து செட்டில் பண்ண முடியாது, கணக்குன்னா கணக்குதான்” என்கிற பதில்தான் கிடைக்கும்.
சில வயதானவர்கள் எதிர்பார்ப்புக்கும் அதிகமான அளவு உதவி பெறும் போது “உன்னுடைய ருணத்தை எப்படித் தீர்ப்பேனோ” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். (இ)ருணம் என்றால் கடன்.
அந்த உணர்வின் அடிப்படையில் எழுந்த ஒரு மக்குதிம்மன் பாடலின் பொருள் :
அன்னத்தை உட்கொள்ளும் போது கேட்டுக் கொள்; அதை வேக வைத்த நீர் | உன் உழைப்பின் வியர்வையோ, பிறரது கண்ணீரோ
தின்பாய் நீ, செகத்திற்கு தின்னக் கொடுத்ததை நிதமும். மிகுதியாகத் தின்றது ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி - மக்குத்திம்மா
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான் என்கிற விதி நினைவூட்டப்படுகிறது. பிறரை ஏமாற்றி அல்லது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் தராது அவரது உழைப்பில் பயனடைந்தவர்கள் அதையும் ஒரு காலத்தில் தீர்க்க வேண்டிவரும் என்பதை “ ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி “ என்று DVG குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
உழைப்பின் முதற்பயன் உணவு பெறுதல். அதை ஒரு பொழுதும் கைவிட முடியாது.
எத்தட்டு மக்களாயினும் உணவு உண்ணுகையில் தான் உணவு ஈட்டிய வழியை நினைத்துக் கொள்வது ஆத்ம சோதனைக்கு வழி வகுக்கும். அதுவே அவரது ஆன்மீக முன்னேற்றத்திற்கான பாதை.
உலகில் தான தர்மங்கள் செய்யாமல் போக வாழ்க்கையை நடத்துவது மிகுதியான உணவு உட்கொள்வதற்கு ஒப்பாகும். அதை செரித்துக் கொள்ள முடியாது. அதை ”ஜீரணிக்க முடியாத மிச்சம் ” என்று DVG உருவகப்படுத்துகிறார்.
உணவை வைத்து சொல்ல வந்த கருத்தில் பொருத்தமாக ஜீரணம் பற்றியும் சொல்லிவிட்டார்! அஜீரணம் உடலுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். சமுதாயத்திற்கு தன்னால் முடியக் கூடிய கடமைகளையும் உதவிகளையும் செய்யாமல் விடுவதும் அஜீரணம். அது ஆன்மாவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கும்.
அந்தக் கஷ்டத்தை அனுபவித்துதான் கழிக்க வேண்டும் என்பதையும் பல சென்மங்களுக்குத் தொடரக்கூடியது என்பதையும் ’கடன் பாக்கி’ அல்லது ’பிறவிக்கடன்’ என்று உருவகப்படுத்துகிறார் DVG.
மொழியாக்க முயற்சி -1
உன்னிடு உண்ணுகையில் உணவை, அது வெந்த நீரெது ?
உன்னு ழைப்பின் வியர்வையோ, வேறொருவர் கண்ணீரோ ?
உன்னுழைப் பளவேஉண்; செரிம மாகா மிகுதி
இன்னல்தரும் பிறவிக் கடனாம் -மக்குத்திம்மா.
உன்னுழைப்பின் அளவே உண் என்பதை நியாயமான முறையில் சம்பாதித்ததை வைத்து அனுபவிப்பது என்ற பொருளில் எழுதினாலும், அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு அவர்களின் எதிர்பார்ப்புக்கு மேலேயே பொருள் குவிகிறது.
பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் உழைப்பு ஒன்றே ஆனாலும் அவர்கள் பணியாற்றும் பள்ளி அல்லது கல்லூரியின் வசதியைப் பொறுத்து அவர்களது வருமானம் பெருமளவில் வேறுபட வாய்ப்பிருக்கிறது. அதை தர்மத்திற்கு விரோதம் என்று சொல்ல முடியாது.
இதை வைத்துப் பார்க்கும் போதுதான் DVG ”தின்பாய் நீ, செகத்திற்குத் தின்னக் கொடுத்ததை..” என்று சொன்னதன் ஆழம் புரிந்தது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டமுள்ளவர்கள் பெரிய அளவில் தம் செல்வத்தை சமுதாய மேம்பாட்டுக்காக கொடுக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான செல்வம், 'படகுக்குள் புகுந்த நீரைப் போல' என்று கபீர் சொல்வார். அப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு கைகளாலும் நீரை வெளியே இறைப்பது போல நமக்கு இறையருளால் வந்த செல்வத்தை பிறர் நலனுக்காக கொடுத்து விடுங்கள் என்கிறார். ஆச்சார்யா P.C. Ray இன் வாழ்க்கையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
முயற்சி -2
பசிகளையும் கவளம் வெந்தது உன் வியர்வையிலோ
புசிக்கும் வேளை நினை, அது பிறன்தன் கண்ணீரோ
இசைவதும் நீ கொடுத்த அளவே ; தின்ற மிகுதியோ
இசித்திடும் சமியாக் கடனே -மக்குத் திம்மா
[இசைதல்-ஏற்புடையது; இசித்தல் - இழுத்தல் சுண்டுதல்; சமி -சீரணம் ]
மனிதனாக வாழக் கற்றுக் கொண்டால் தெய்வம் தானே தேடிவரும். மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டும் பாடல் இது.
3 comments:
அன்னத்தை உட்கொள்ளும் போது கேட்டுக் கொள்; அதை வேக வைத்த நீர் | உன் உழைப்பின் வியர்வையோ, பிறரது கண்ணீரோ
தின்பாய் நீ, செகத்திற்கு தின்னக் கொடுத்ததை நிதமும். மிகுதியாகத் தின்றது ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி - மக்குத்திம்மா
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான் என்கிற விதி நினைவூட்டப்படுகிறது. பிறரை ஏமாற்றி அல்லது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் தராது அவரது உழைப்பில் பயனடைந்தவர்கள் அதையும் ஒரு காலத்தில் தீர்க்க வேண்டிவரும் என்பதை “ ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி “ என்று DVG குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.//
இன்று உழைப்பாளர் தினத்திற்கு ஏற்ற பதிவு.
உழைப்பவர்களின் வேர்வை ஆறும் முன் அவர்களின் கூலியை கொடுக்க வேண்டும் என்பார்கள்.
பிறர் உழைப்பால் தன் வயிரை நிறைத்துக் கொண்டு அவர்களின் பசியை போக்காமல் இருந்தால் அதைவிட கொடுமை வேறு இல்லை.
மக்குத்திம்மன் பாடல்களும், கபீர் சொல்வதையும் கூறி இன்றைய உழைப்பாளர் தினத்தை பெறுமை ப்டுத்திவிட்டீர்கள்.
வேதாத்திரி மகரிஷி உண்ணும் போது ஒரு கைபிடி உணவை எடுத்து இது எத்தனை பேர் உழைப்பால் வந்து இருக்கிறது என்று நினைத்து உண்டிடு
என்று பாடல் சொல்லி இருக்கிறார்.
வயலில் விதைத்ததுலிருந்து அது வீடு வந்து நம் பானையில் பொங்கும் வரை எத்தனை பேர் உடல் உழைப்பு.
தினம் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.
நல்ல பதிவை தந்த உங்களுக்கு நன்றி.
ஆன்மீகம் என்றால் இறைவழிபாடு என்று மட்டுமே இல்லை. சகல உயிர்களையும் சமமாக பாவித்து எல்லோரது முன்னேற்றத்துக்காகவும் உழைப்பவரெல்லாம் ஆன்மீகவாதிகளே. பிரஃபுல்ல சந்திர ரே (Prafulla Chandra Ray ) என்பவர் இந்திய சுதேசி முயற்சிகளின் முன்னோடி என்று கொள்ளத்தக்கவர். வேதியியல் மற்றும் மருத்துவத் துறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் அடைந்திருந்த முன்னேற்றத்தை வெள்ளையர்களுக்கும் (நம்மவர்களுக்கும்) உலகத்தவர்ககும் புரிய வைத்தவர். 1892-ல் Bengal Chemical & Pharmaceutical Works என்னும், முதல் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையை கல்கத்தாவில் நிறுவியவர். மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் இருப்பினும் தனக்கென அவர் வைத்துக் கொண்டது ரூபாய் இருநூறுக்கும் குறைவே. மீதம் உள்ளதை விஞ்ஞான மேம்பாட்டிற்காகவும், அனாதை குழந்தைகளுக்காகவும் கைம்பெண் நலவாழ்வுக்கெனவும் கொடுத்துவிடுவார். செய்யுந்தொழிலையே இறைவனாகவும் சமுதாய மேம்பாடே வழிபாடாகவும் கொண்ட இவரை கபீர் வழியில் சிறந்த ஆன்மீகவாதி என்று கொள்ளலாம்.
இத்தனை அருள்வாய் ஈசா, என்றும் எம்குடி நலம் கா
பத்தர் பசித்து ஏகாமலே, யானும் பசியாது இருக்கத் தா
(பத்தர் =பக்தர், அடியார்; ஏகாமல் =போகாமல்)
கபீர் பல்லக்கு கேட்கவில்லை. மாட மாளிகை கேட்கவில்லை. யாவரும் பசியின்றி இருக்க வேண்டுகிறார்.//
பிரஃபுல்ல சந்திரரேயைப்பற்றி தெரிந்து கொண்டேன். அவர் சிறந்த ஆன்மீகவாதிதான்.
கபீரின் வேண்டுதல் சிறப்பானது அதயே நாமும் தினம் வேண்டுவோம்.
உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை எண்ணி உண்ணிடல் என்றும் உன் கடன்
உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு.
உழைப்பினால் பதில் உலகுக்குத் தந்திடு.
வேதாத்திரி மகரிஷி.
வாங்க கோமதி மேடம்,
//இன்றைய உழைப்பாளர் தினத்தை பெருமை படுத்திவிட்டீர்கள்.//
நினைவில் கொள்ள வேண்டிய விஷயத்தை பொருத்தமாக எடுத்துக் காட்டியதற்கு நன்றி. இது திட்டமிட்டு செய்தது அல்ல.
//உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு.
உழைப்பினால் பதில் உலகுக்குத் தந்திடு.//
வேதாத்ரி மகரிஷியின் அற்புத வாசகங்களையும் இணைத்துச் சொல்லி பெருமை படுத்தியிருக்கிறீர்கள்.
தங்கள் வாசிப்பு ஆர்வத்திற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி
Post a Comment