Sunday, May 27, 2012

நகையெனும் ஒரு யோகம்

Laughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம்.  “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது.  அது கைவரப் பெற்றால் அதுவே யோக நிலையாகும். சீனாவிலும் ஜப்பானிலும் பிரசித்தமான ”சிரிக்கும் புத்தன்”  குறிப்பிடும் நிலையாகும் அது.


அதை பயில்வதற்கு மக்குதிம்மன் சொல்லும் வழியையும் பார்ப்போம்.
 D.V.குண்டப்பாவின் கவிதையின் மூலம் -அல்லது நேரடி மொழி பெயர்ப்பு

அசமத்தில் சமமும், வித்தியாசங்களில் ஒற்றுமையும்
அசம்பந்தங்களில் சம்பந்தத்தையும் (அறிகின்ற) சூத்திர நயமே
விசனமயமான சம்சாரத்தில் விநோதங்களைக் கண்டு
ரசிக்கும் தன்மையே யோகமாகும் - மன்கு திம்மா

இதை நான் புரிந்த கொண்ட விதத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்

அசமத்தில் சமம் : ஒருமுறை ஐன்ஸ்டீன் ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நேர்ந்ததாம். குழந்தை கொஞ்சம் பேச்சும் துடுக்குத்தனமும் நிறைந்தது போலும். அதன் தாயார் பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட போது “ அந்தக் குழந்தையிடம் நான் கற்றுக்கொண்டதும் நிறைய உண்டு” என்று பதிலளித்தாராம் ஐன்ஸ்டீன். வயதிலும் அறிவிலும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் அக்குழந்தைக்கும் அந்த விஞ்ஞானிக்கும். அது அசமம். ஆனால் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் உலகத்தில் எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் உண்டு என்பதை அவர் சுட்டிக்காட்டும் போது தம்மிருவருக்கும் இடையே ஒரு சமத்தை கண்டார். அதுவே அசமத்தில் சமம்.

வித்தியாசங்களில் ஒற்றுமை: புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்த மேனேஜிங் டைரக்டரிடம் மனித வளத்துறை அதிகாரி  கம்பெனிக்கு நியமிக்கப்பட இருந்த இளம் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேர்வு முறைகளை விளக்கிக் கொண்டிருந்தார். முதல் கட்டமாக எழுத்து மூலமான பொதுத் தேர்வு. அடுத்த கட்டமாக ஆப்டிட்யூட் டெஸ்ட். மூன்றாம் நிலை க்ரூப் டிஸ்கஷன். கடைசியாக நேர்முகத் தேர்வு என்று ஒவ்வொரு படியையும் விவரித்தார்.  அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மேனேஜிங் டைரக்டர் “சரிதான் அப்போ எனக்கு வேலை கிடைக்காது”  என்று  சொல்லவே யாவரும் சிரித்து விட்டனர். நிர்வாகப் பொறுப்புகள் மிகுந்த உயர்பதவியையும் ஆரம்பப் படித்தட்டு வேலையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாதவை. ஆனால் அந்த அதிகாரி தான் மீண்டும் அந்த ஆரம்பத்தட்டு நிலையை சந்திக்க நேர்ந்தால் தன் நிலைமை என்ன என்று ஒப்பிட்டுக்கொள்ளும் மன ஒற்றுமையில் நகைச்சுவை எழுகிறது

அசமந்தங்களில் சம்பந்தம்: இராமன் விளைவு என்பது, ஒளி பல ஊடகங்கள் வழியே ஊடுருவி வெளிவரும் போது ஏற்படும் ஒளிப்பிரிகைகளால் தோன்றும் வர்ண மாற்றங்கள் பற்றியது. வானும் கடலும் நீலமாகத் தோன்றுவது இத்தகைய ஒளிப்பிரிகையால்தான் என்பதை பரிசோதனைகளால் நிரூபித்த சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது பல பாராட்டு விழாக்களிலும் விருந்துகளிலும் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட வெளிநாட்டு விருந்து ஒன்றில் மதுபானம் தொடர்ந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து மறுத்து வந்தார் சி.வி. ராமன். சில வெளிநாட்டு அன்பர்கள் வற்புறுத்தவே அவர் சொன்னது  “ மதுவில் ராமன் விளைவைக் காணலாம். ஆனால் இராமனுள் மது விளைவை காண்பது உசிதமல்ல” 

விசனத்திலும் விநோதம் :  மகாபாரதத்தில் வரும் ஒரு கதை. வீட்டுக்கு ஒருவர் என்ற முறைப்படி பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்லும் முறைப்படி அன்று அந்த சிறுவனின் முறை. அவனை விட்டால் வேறு ஆண்பிள்ளைக் கிடையாது. உணவு கொண்டு செல்பவனையும் தின்று தீர்த்து விடுவது பகாசுரன் வழக்கமாதலால் அவனது தாய் பெரும் துக்கத்தில் மூழ்கினாள். அந்த பச்சிளம் பாலகன் ஒரு சிறிய குச்சியை கையில் வைத்துக் கொண்டு நீ கவலைப் படாதே அம்மா. பகாசுரனை நான் அடித்து கொன்று விடுவேன்” என்று வீரம் பேசும் போது தன் துக்கத்தையும் மறந்து சிரிக்கிறாள் அவனது தாய்.

எந்நிலையிலும்  நகைச்சுவை உணர்வை கைவிடாமல் இருந்தால் நமக்கும் பிறருக்கும் வாழ்க்கை ரசிக்கத்தக்கதாக மட்டுமல்ல மனதளவில் அது ஒரு உயர்ந்த பயிற்சியாகும் என்பதை  DVG குறிப்பிடுகிறார். உங்களுக்கு தெரிந்த மேலும் பொருத்தமான உதாரணங்களைச் சொன்னால் நம் ரசிப்புத் திறமையும் கூடுமே ! :))
என்னுடைய மொழியாக்க முயற்சி:

அசமத்தில் சமங்களையும் முரண்களில் ஒற்றுமையும்
அசம்பந்தத்தில் சம்பந்தம் தேடுவதும் நயமே.
விசன வாழ்வில் நகையுணர்வு கொள்ளுவதே
ரசனை யுள்ள யோகமடா -மக்குத்திம்மா

[மக்குதிம்மன் மேலுள்ள அன்பினாலும் உரிமையாலும் “யோகவெலோ” என்று DVG குறிப்பிட்டிருப்பதை யோகமடா என்பதாக மொழிபெயர்த்திருக்கிறேன்.]

8 comments:

Geetha Sambasivam said...

மக்குதிம்மன் மேலுள்ள அன்பினாலும் உரிமையாலும் “யோகவெலோ” என்று DVG குறிப்பிட்டிருப்பதை யோகமடா என்பதாக மொழிபெயர்த்திருக்கிறேன்.]//

அவர் கன்னடத்திலே சொல்லி இருப்பதை மொழிபெயர்த்திருக்கீங்க. எனக்கு அதனாலே வித்தியாசமாய் எதுவும் தெரியப் போறதில்லை.

எல்லா உதாரணங்களுமே நன்றாகப் பொறுக்கி எடுக்கப் பட்டிருக்கின்றன. வழக்கம்போல் ஆழ்ந்த யோசனையுடன் கூடிய அருமையான பதிவு. என்றோ ஒருநாள் பதிவுகள் வந்தாலும் அனைத்தும் நினைவில் கொள்ளக் கூடியவை.

கோமதி அரசு said...

“நீ கவலைப் படாதே அம்மா. பகாசுரனை நான் அடித்து கொன்று விடுவேன்” என்று வீரம் பேசும் போது தன் துக்கத்தையும் மறந்து சிரிக்கிறாள் அவனது தாய்.//

இயல்பான , அழகான எடுத்துக்காட்டு.

கோமதி அரசு said...

எந்நிலையிலும் நகைச்சுவை உணர்வை கைவிடாமல் இருந்தால் நமக்கும் பிறருக்கும் வாழ்க்கை ரசிக்கத்தக்கதாக மட்டுமல்ல மனதளவில் அது ஒரு உயர்ந்த பயிற்சியாகும் என்பதை DVG குறிப்பிடுகிறார்.//

உண்மைதான். எந்நிலையிலும் நகைச்சுவை உணர்வை கைவிடாமல் இருக்க பழக வேண்டும்.

தொட்டதற்கு எல்லாம் கோபபட்டு தொட்டால் சிணுங்கி போல் சுருங்கி போகாமல் சிரிக்க கற்றுக் கொண்டால் வாழ்வு இனிமையாக இருக்கும்.

கோமதி அரசு said...

சிரிக்கும் புத்தரை வீட்டில் வைத்தால் யோகம் என நினைத்துக் கொண்டு வித விதமாய் நிறைய வாங்கி வீட்டை அலங்கரிக்கிறார்கள், நகைக்க தெரியாத மனிதர்கள்.

புன்னகை ஒன்றே போதும் பொன்நகை எதற்கு!என்று புலவர்கள் பெண்ணை வர்ணித்து பாடுவார்கள்.

KABEER ANBAN said...

வாங்க கீதா மேடம்.

//அவர் கன்னடத்திலே சொல்லி இருப்பதை மொழிபெயர்த்திருக்கீங்க. எனக்கு அதனாலே வித்தியாசமாய் எதுவும் தெரியப் போறதில்லை. ///

”யோகமடா” என்னாமல் யோகமாம் என்றோ யோகமே என்றும் சொல்லியிருக்கலாம். அப்படி ஏன் சொல்லவில்லை என்பதற்கான ஒரு சிறிய விளக்கம், அவ்வளவு தான் :)

தங்களுக்கு உதாரணங்கள் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம்,

///சிரிக்கும் புத்தரை வீட்டில் வைத்தால் யோகம் என நினைத்து,,,,//

அட! பெரியவங்க சொல்லும் யோகத்தை விட்டு விட்டு தமக்கு தேவையான யோகத்தை பிடித்துக் கொள்கிறார்கள் என்பதை நயமாக சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.
அதுதான் சராசரி உலகம்.

இரசித்துப் படித்து கருத்துகளை ஒன்றுக்கு மூன்றாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

Vetirmagal said...

வழக்கம் போல , மென்னமையாக, இதமாக, இனிப்பாக உள்ளது.

சுவைத்து படிக்க இன்னுமொன்று!

நன்றி.

KABEER ANBAN said...

நல்வரவு வெற்றிமகள்,

//சுவைத்து படிக்க இன்னுமொன்று..//

:))
மக்குதிம்மனும் உங்கள் உள்ளத்தில் புகுந்து விட்டான் என்பதை அறிவதில்மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகளுக்கு நன்றி.