கைப்பேசி யுகம் வந்ததிலிருந்து கடிதம் எழுதுவது என்பதே மறந்து போய்விட்டது. பெரும்பாலனவர்களின் வசிக்கும் இடம் தெரியும் ஆனால் விலாசம் தெரியாது. விசேஷத்திற்கு நேராக சென்று அழைக்க முடியாமல் போகும் போது மட்டும் “.....கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க. இன்விடேஷனை தபால்-ல போடறேன். கொஞ்சம் அட்ரஸ் சொல்றியா ?” என்று அன்பாகக் கேட்டு அழைப்பிதழை அனுப்பிய கையோடு விலாசத்தை மறந்து விடுவது வழக்கமாகி விட்டது. அதுதான் செல்போன் இருக்கே. எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம் :))
பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது தந்தி வழி செய்தி அனுப்பும் முறைக்கு அடிப்படை மோர்ஸ் கோடு ( Morse code)என்று படித்திருக்கிறோம். மின்னஞ்சல், FAX என்கிற முறைகள் வந்ததும் இந்த தந்தி அனுப்பும் தொழிலும் படுத்து விட்டது. இந்திய தபால்துறை பெரும்பாலான இடங்களில் தந்தி அலுவலகங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகின்றனர். கப்பல் வழி வணிகத்திற்கும் உலகப்போரின் போதும் உயிர் நாடியாக விளங்கிய மோர்ஸ்-குறிமுறை இனி வரலாற்றில் படிக்க வேண்டிய ஒன்று என்று நினைத்தால் அது தவறாகும்.
கூகுள் இப்போது அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்திருக்கிறது. அவர்களது நோக்கம், கைப்பேசியில் இருக்கும் ஆங்கில எழுத்துகளுக்கான பொத்தான்களைத் தேடித் தேடி இயக்குவதற்கு பதிலாக dot & dash முறையில் இரண்டு பொத்தான்களின் துணையோடு space bar யும் பயன்படுத்தி வேகமாக தட்டச்சு செய்யமுடியும் என்கிறது.
இதற்கான மென்பொருளை ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் கைபேசிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறது கூகிள்.
ஆனால் அந்த மோர்ஸ்-குறிமுறை யைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவர்கள் குறிப்பிடுவது போல் சுலபமாக இருக்க முடியுமா என்கிற சந்தேகமே அதிகமாகிறது. படத்தைப் பார்த்தாலே மலைக்க வைக்கிறது. DAD என்கிற மூன்றெழுத்துக்கு எட்டு முறை பொத்தானை அழுத்த வேண்டும் !! பின் வேகம் எப்படிக் கூடும் ?
எலக்டரானிக் டிஜிடல் கடியாரங்கள் வந்த புதிதில் நகரும் முட்கடியாரங்கள் செத்து ஒழிந்து விடும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் அந்த முட்கள் இல்லாமல் காலமே நகராது என்று நம்பும் அளவுக்கு அவை இன்னும் நிலைத்து நிற்கின்றன. சாவி கொடுக்கும் தொந்திரவு,பாட்டரி இயக்கத்தால் ஒழிக்கப்பட்டதலோ என்னவோ பொதுவாக இக்காலத்து முட்கடியாரங்கள் மிகவும் தரமானவைகளாக இருப்பதாலும், வெகுநாட்கள் பழுது இல்லாமல் செயல்படுவதாலும் இருக்கலாம். ஆனால் எளிமையாக எண்களைப் பார்த்தே நேரம் அறிந்து கொள்ள வசதி வந்தும் ஏன் முட்கடியாரங்களை துறக்க மனிதர்களுக்கு மனம் வரவில்லை ?
புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டுமென்றால் கற்றுக் கொள்வதற்கான நேரம், எளிமை இரண்டும் மிகவும் பொருந்தி வரவேண்டும். மோர்ஸ்-குறிமுறை இந்த இரண்டு விஷயத்திலும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
எனவே எத்தனை நுகர்வோர்கள் மோர்ஸ் முறைக்கு மாறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
4 comments:
என்னிடம் இன்னமும் சாவி கொடுக்கும் எச் எம் டி கைக்கடிகாரம் தான்.
பழமையை புதுமை வெல்ல காலம் ஆகும்.
நல்ல ப்கிர்வு.
நல்வரவு கோமதி மேடம்
//பழமையை புதுமை வெல்ல காலம் ஆகும். //
”பழைய வேரும் புதிய தளிரும்” என்கிற மக்குதிம்மன் பாடல் நினைவுக்கு வருகிறது. பழமையை புதியது வென்றாக வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை சொல்லும் பாடல் அது.
படித்து கருத்து சொல்லியதற்கு நன்றி
வருக கீதா மேடம்
//என்னிடம் இன்னமும் சாவி கொடுக்கும் எச் எம் டி கைக்கடிகாரம் தான். //
ஒண்ணு, நீங்க நல்லா மெயிண்டைன் பண்றவரா இருக்கணும். இல்லே கட்டிக்காமலேயே அலமாரிக்குள்ளே வச்சு அழகு பார்க்கவரா இருக்கணும் :))))
இன்னொரு பத்து வருஷத்துல அதுக்கெல்லாம் ஆண்டிக் வால்யூ ஆரம்பிச்சிடும். பத்திரப்படுத்தி வையுங்க !
நன்றி
Post a Comment