Saturday, April 26, 2008
ஒரு ஜோடி நாற்காலியின் கதை
உலகத்திலேயே............
வேணாம், இந்தியாவிலேயே.......
அதுவும் ஒத்துக்க மாட்டீங்களா
சரி, சென்னையிலேயே
ரொம்ப அதிகமான போட்டோ பிடிச்சு இருக்கிறது என்னையத் தாங்க.
ரெண்டு லட்சத்துக்கும் மேலே. எப்படீங்க்றீங்களா கதைய கேளுங்க.
எனக்கு வயசு எழுபதுக்கு மேல. முதலாளி அய்யா வெங்டேச ரெட்டி பர்மா தேக்குல ஸ்பெஷலா சொல்லி நாலு ஆளுங்க ராப்பகலா வேலை பார்த்து ஒருமாசத்தில எனக்கு ஒரு உரு கொடுத்தாங்க. அப்பயிலேர்ந்தே என் பேரு ஜோடி நாற்காலி தாங்க. இப்போ எல்லாம் டபுள் சோபா அப்படீங்கறாங்களே, அப்பிடி.
வீட்டுல என்ன விசேஷமானாலும் அய்யாவயும் அம்மாவையும் ஜோடியா தாங்கறதுக்கு அடியேன்தான். அவரு நவராத்திரி, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி அப்படீன்னு வருசம் முழுக்க எதினாச்சும் விழா நடத்தி கிட்டே இருப்பாரு. பட்டணத்துல இருக்கிற பெரிய புள்ளிங்களெல்லாம் ஆஜர். எதுவானாலும் எட்டுநாள் பத்து நாள் நடக்கும். வர்றவங்களுக்கெல்லாம் டிபன் சாப்பாடு. வீடு ஜே ஜே ன்னு இருக்கும். அந்த வீட்டுல நான் தான் சிம்மாஸனம்.
என்னெயெ பாத்துட்டு “இது மாதிரி ஒரு வேலைப்பாடு எங்கேயும் பார்த்தே இல்லை. இதை எனக்கு குடுத்துடுன்னு” பலான பலான பேர்வழிகளெல்லாம் வந்து கேட்டுப் பார்த்துட்டாங்க. அய்யா மாத்திரம் ஒத்துக்கவே மாட்டாரு. அப்படி ஒரு பாசம் எம்மேலே. ரொம்ப ராசியான நாற்காலி அப்படீனு பேரு எல்லாம் வந்துச்சு.
நான் வந்து இருபது வருசத்திலெ அம்மாவுக்கு உடம்பு ரொம்ப முடியாம போச்சு. அப்ப வீட்ல வேலை செஞ்சுக்கிட்டிருந்த ஒரு ஏழைப் பொண்ணுக்கு கலியாணம் செஞ்சு வைங்கன்னு சொல்லி செத்து போயிட்டாங்க.
அய்யா பாத்தாரு. அம்மா பேருல ஒரு கலியாண மண்டபமே கட்டிட்டாரு. அலமேலு ரெட்டப்ப கலியாண சத்திரம் கட்டின காலத்தில ரொம்ப ஃபேமஸ்.
அம்மா போனப்புறம் என் மேல வந்து உக்கார்றதுக்கு அவருக்கு என்னமோ போலருந்திச்சு.'இந்த ராசியான நாற்காலி புதுசா கலியாணம் கட்டிக்க போற புள்ளைங்களுக்கும் ராசியா இருக்கட்டும்' அப்படீங்கற நல்ல மனசோட என்னை கொண்டு போய் கலியாண சத்திரத்தில வச்சுட்டாங்க.
இங்கே வந்தப்புறம் பழைய கல கலப்பு இல்லீங்க. வருசத்திலே முப்பது நாப்பது முகூர்த்தம் தேறும் அப்போ ரெண்டு நாளைக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கும். சின்ன ஜோடிங்க சந்தோசமா இருக்கிறத பாக்கிறதுக்கே உத்சாகமா இருக்கும்.
ரிசப்ஷனுக்கு முன்னாடி நம்மளை வெளிய கொண்டு வந்து வச்சதுமே சின்ன புள்ளைங்களெல்லாம் என் மேலே ஏறி வெளயாட ஆரம்பிச்சுடும். அந்த வாச்சுமேன் சின்னையா இருக்கானே (அவன் தாங்க என்கதையில வில்லன்) அவன் வந்து கொளந்தங்களையெல்லாம் வெரட்டுவான். பெரிய அய்யா
இருக்கும்போது கொளந்தைங்க அந்த மாதிரி வெளையாடினா ஆசையோட பார்ப்பாரு. கூடவே அவரும் வெளையாடுவாரு.
ஹும் பெரிய அய்யா போனப்புறம், இந்த நாப்பது வருசத்தில எவ்ளவோ மாறிடிச்சு. அவுங்க புள்ளைங்களெல்லாம் வேற வேற பிஸினஸ்க்கு போயிட்டாங்க. பெரிய மருமக(ள்) மாத்திரம் கொஞ்சம் சத்திரம் விஷயமா வந்து கவனிச்சுக்குவாங்க.
பெரிய அய்யா காலத்திலேந்து போட்டோன்னா எனக்கு ரொம்ப பிரியமுங்க. எல்லா விழாவிலேயும் அய்யா போட்டோகிராபருக்கு சொல்லிடுவாரு. கறுப்பு வெள்ளை போயி, கலர் வந்து அப்புறம் வீடீயோ வந்திடுச்சு. வீடீயோ என்னங்க வீடீயோ. அந்த காலத்துலே காந்தராவ் சினிமாவுல கூட நெறைய வந்திருக்கேனாக்கும். அப்பப்ப ஷூட்டிங்கு கொண்டு போய் திரும்ப கொண்டு வந்திடுவாங்க. இதுவரைக்கும் என்னைய ரெண்டு லட்சத்துக்கும் மேல போட்டோ எடுத்திருங்காங்களாம் !!
என்னோட வாழ்க்கையில ஒரே ஒரு பெரிய குறைதானுங்க. எங்க வீட்டு ஒரு கலியாணத்தில எனக்கு எடமில்லாம போனதுதாங்க அது.
என்னாச்சுன்னா பெரிய பையனுக்கு ரெட்டைப் பொண்ணுங்க. அது ரெண்டும் கலியாண வயசு வந்ததும் இன்னொரு ரெட்டையா பொறந்த பையங்கள பார்த்து நிச்சயம் பண்ணினாங்க. ரெண்டாம் தலைமுறையில முதல் கலியாணம்.
ரிசப்ஷன் ல ரெண்டு ஜோடியும் ஒண்ணா நிக்கணுமே. “இதுக்கு செட்டா இன்னொரு ஜோடி நாற்காலி இருக்கான்னு” என்னைய காமிச்சு பிள்ளை வீட்டுக்காரங்க கேட்டாங்க. மானேஜர் சொன்னாரு “இது ரொம்ப பழசுங்க. இது மாதிரி எங்க தேடினாலும் கெடைக்காது.” “அப்ப இதை உள்ளேயே வச்சுட்டு ஒரே மாதிரி இருக்கிற ரெண்டு ஜோடி சோபா ஏற்பாடு பண்ணுங்க” ன்னு பிள்ளை வீட்டுகாரங்க சொல்லிட்டாங்க :((
நம்ம வூட்டு கலியாணத்துல என் மேலே ஆசையா குதிச்சு வெளையாண்ட நம்ம குழந்தைகளோட கலியாண போட்டோல நான் இல்லை.
அன்னிக்கு பெரிய அய்யாவையும் அம்மாவையும் நெனச்சு அழுதேன் பாருங்க அந்த மாதிரி என்னிக்குமே வருத்தப்பட்டதில்லே.
ரெண்டு லட்சத்துக்கும் மேலே போட்டோல விழுந்து என்ன புண்ணியம். நம்ம பேரக் குழந்தைங்க கலியாணத்துல இல்லாம போயிட்டேனே அப்படீன்னு ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு.
ஜோடி கிடைக்காம தனியா நிக்கிற 'ஜோடி நாற்காலி' நான்.
அதுவே ஏதோ ஒரு கெட்ட சகுனமா தோணிச்சு.
இது நடந்து ரெண்டு மாசம் கூட இல்லீங்க,இந்த வாச்சுமேன் சின்னையாவால வந்தது வெனை.
அவன் சத்திரத்துல யாரும் இல்லாத போது வந்து என் மேல உக்காந்துக்குவான். பெரிய ராசா மாதிரி, சிவாஜி மாதிரி, சூப்பர் ஸ்டார் மாதிரி எல்லாம் ஆக்ட் குடுப்பான். அப்படி ஒரு நாள் குடிச்சுக்கிட்டிருந்த துண்டு பீடிய ரஜ்னி மாதிரி தூக்கிப் போட்டு ஆக்ட் குடுத்தானா, அந்த பாளாப் போனப் பீடி எம்மேல இருந்த மெத்தை சந்துக்குள்ள விழுந்திடுச்சு. அவன் தேடறான் தேடறான் கீழ எங்கேயோ தேடிக்கிட்டே இருக்கான்.
பாவி பொகையுதுடா இங்க பாரு-ன்னு கத்துரேன், காதுல விழுந்தாதானே. கொஞ்சம் பொகை ஜாஸ்தியானப்புறம் தான் அவனுக்கு புரிஞ்சது தன்னோட தப்பு. அதுக்குள்ள பாதி மெத்தை கருகி போயி பார்க்கிறதுக்கே விகாரமா போச்சு. அம்மா கிட்ட மானேஜரும் அவனுமா ஏதோ பொய்யைச் சொல்லி தப்பை மூடிட்டாங்க.
ரெண்டு வாரத்துக்கு முந்தி அம்மா வந்தபோது ஏன் சத்திரத்த சுத்தமா வச்சுக்க கூடாதா அப்டீன்னு ஒரு வெரட்டு வெரட்டினாங்க. மேனசர் சொல்றாரு “அம்மா ரொம்ப வருசமாச்சு வெள்ளையடிச்சு. வெள்ளை அடிச்சா பாக்கிறதுக்கு நல்லா இருக்கும்.”
“அதுக்கு ஏது காசு ?” அப்படீன்னு பெரிய மருமக கணக்கு போட்டாங்க.
மேனஜர் சொன்னாரு “எரிஞ்சு போன அந்த பழைய ஜோடி நாற்காலி இருக்குதுங்களே அது அத்தனையும் பர்மா தேக்கு. தேக்கு மரம் மட்டுமே அம்பதாயிரத்துக்கு மேலே போவும். வேலைப்பாடு செஞ்சதுங்கறதுனால எப்படியும் ஒரு லட்சத்துக்கு கேட்டு பாக்கலாம். இப்ப எல்லாம் யாருங்க அதை யூஸ் பண்றாங்க. பழைய மாடல். வித்து வர்ற காசு வச்சு முடிச்சுடலாம்”.
எனக்குத் தானே தெரியும் அவரு போடற கமிஷன் கணக்கு. பொம்பளைங்களுக்கு விவரம் பத்தாதுங்க.
மருமகளோட கண்ணு அகல விரிஞ்சுது. “அப்படியா, விசாரிச்சு சொல்லுங்கன்னு” சொல்லிட்டு போயிட்டாங்க.
யார் யாரோ எல்லாம் வந்து பார்த்துட்டு போறாங்க. ஏதோ பாம்பே பார்ட்டியாம். ஃபை ஸ்டார் ஹோட்டலுக்கு வேணுமாம். சீக்கிரமே முடிச்சுட பாக்குறாங்க.
சின்னையா சொல்றான் 'இதுக்கு வந்த வாழ்வ பாருடா. பாம்பேயாம்! ஃபைஸ்டார் ஹோட்டலாம்!”
“பொய் சொல்ற ரெண்டுபேரும் இங்கயே ஜோடியாவே இருந்து அழுங்கடா” அப்படீன்னு மனசுல திட்டிக்கிட்டேன். பெரிய அய்யா போனப்புறம் எனக்கு எந்த ஊரானா என்னங்க.
அப்போ பாம்பே -ல சந்திக்கலாமா? புள்ளகுட்டிங்களோட வந்திடுங்க. நெறைய போட்டோ எடுத்துக்கலாம்.
வரலாற்றிலே மிக அதிகமான போட்டோ யாருதுன்னு கேட்டா .........
இல்லையில்லை.. மிக அதிகமாக போட்டோ எடுக்கப்பட்ட ஜோடி நாற்காலி அப்படீன்னா .....
அது நானாதான் இருக்கணும்-னு ஆசை. அம்புட்டுதான்.
Sunday, April 20, 2008
அநுமனும் சினா-சோனா வும்
இத்தகைய எதிர்மறை எண்ணங்களை எதிர் கொள்வது எப்படி ? தன்னம்பிக்கை உடையோருக்கு எதிர்மறை எண்ணங்கள் எழாது. எழுந்தாலும் விரைவிலேயே அதை தம் அனுபவத்தாலோ அறிவினாலோ அழித்து வெற்றி கொள்வர்.
“Ventures Make men and ventures Break men" என்று சொல்வான் சினா.சோனா.
இதற்கு சிறந்த உதாரணம் அநுமன். சுந்தரகாண்டத்தின் நாயகன். அங்கே முழுப்பெருமையும் அவனதே.
இலங்கை அடைந்தபின் பல இடங்களிலும் தேடி சீதையை காணாமல் மனம் தளர்ந்து போன அநுமன், கம்பரின் வரிகளில்
கொன்றானோ ? கற்பு அழியாக் குலமகளைக் கொடும் தொழிலால்
தின்றானோ? எப்புறத்தே செறித்தானோ சிறை சிறியோன் ?
ஒன்றானும் உணர்கிலேன் மீண்டு போய் என் உரைக்கேன் ?
பொன்றாத பொழுது எனக்கு இக் கொடும் துயரம் போகாதால்
என்றும்
.......புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழைநின்றும் போயதால்
என்றும்
..... ஆழித்தாய் இடர் ஆழி இடையே வீழ்ந்து அழிவேனோ ?
என்றும் பலவாறாக புலம்பி உயிரை அழித்துக்கொள்ள விழைகிறான். இந்த நம்பிக்கை யில்லாமையை despondency என்று ஆங்கிலத்தில் உரைப்பர்.
வால்மீகி ராமாயணத்திலும் இப்படி புலம்பினாலும் இதே கட்டத்தில் பின்னர் அநுமன் தன்னைத் தானே தேற்றிக் கொள்ள சொல்லும் இரண்டு பாடல்கள் சுந்தரகாண்டத்தில் வருகிறது. கஷ்ட காலத்தில் சுந்தர காண்டத்தை படிக்கச் சொல்வதின் நோக்கமும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளத்தான்.
வட மொழி மனந்தளராமையை அநிர்வேதம் என்று உரைக்கிறது.
அநிர்வேத: ஷ்ரியோ மூலம், அநிர்வேத: பரம் ஸுகம் |
அநிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்த்தக: || (12-10)
தளராமையே செல்வத்திற்கு காரணம், தளராமையே சிறந்த சுகம். தளராமையே எப்பொழுதும் எல்லா காரியங்களிலும் ஊக்கமளிப்பது.
கரோதி ஸபலம் ஜந்தோ: கர்ம யத்தத் கரோதி ஸ:
தஸ்மாத் அநிர்வேத-க்ருதம் யத்னம் சேஷ்டே ஹமுத்தமம் || (12-11)
(மனம்)தளராமையே ஒரு ஜீவனின் காரியத்தை பயனுடையாதகச் செய்கிறது. ஆகையால் தளர்ச்சிக்கு இடம் கொடாமல் சிறந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இன்று ஹனுமத் ஜெயந்தி, அவனருளால் எல்லோருக்கும் நல்ல காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிட்டட்டும். இடுகம்பாளையம் ஆஞ்சநேயரை இங்கே தரிசிக்கலாம்.
Tuesday, April 15, 2008
வாழ்வு தரும் வாழ்த்து அட்டைகள்
தில்லியில் தில்லி ஹாட் என்ற ஒரு இடம் உண்டு. அங்கே கைவினைப் பொருட்கள் கண்காட்சி அவ்வப்போது நடக்கும். பல மாநிலங்களிலிருந்து கைவினைஞர்களும் அவர்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களும் அதில் பங்கு பெறும். அப்படி ஒரு தொண்டு விற்பனை செய்த வாழ்த்து அட்டைகள் தான் நீங்கள் இங்கே காண்பது. கண்ணை பறிக்கும் அழகழகான அட்டைகள். ஐந்து அட்டைகள் அடங்கிய ஒரு பாக்கெட் ஐம்பது ரூபாய்.
கேரளாவிலிருந்து வந்திருந்த அந்த சேவை நிறுவனத்தினர் விற்பனை முறைகளை அறியார்கள் போலும். வாழ்த்து அட்டைகளில் எங்குமே அவர்கள் பெயரையோ தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியோ தரவில்லை.
பொருட்கள்: பாடம் செய்யப்பட்ட அரச இலை, ஆடைகளில் பயன் படுத்தப்படும் லேஸ், மரவள்ளிக் கிழங்கின் உலர்ந்த செதில்கள், வர்ண அட்டைகள் இத்யாதி. இதே போல அரச இலையில் வாழ்த்து அட்டைகளை நானே தயாரித்து அனுப்பிய பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது.
ஐந்து அட்டைகள் ஐம்பது ரூபாய்கள் மட்டுமே !!
ஏனெனில் என் குழந்தைகள் வாங்குகின்ற அச்சடித்த ஆர்சி அல்லது ஹால்மார்க் அட்டைகள் ஒவ்வொன்றும் விலை இருபத்தியைந்திலிருந்து
நாற்பது ரூபாய் ரேஞ்சுதான். பணத்தின் அருமை தெரியாதவர்கள் என்று அலுத்துக் கொள்கின்ற நேரத்தில்தான் அந்த அழகான
அட்டைகளை காணநேர்ந்தது. இங்கே ஒரு அட்டைக்கு பத்து ரூபாய் கொடுத்தாலும் அது எங்கோ இருக்கும் ஒரு ஏழைக் குடும்பத்தை
வாழவைக்க பயன்படுகிறது என்ற எண்ணமே ஆறுதல் தருவதாக இருந்தது.
இன்று வாழ்த்து அட்டைகளின் விற்பனை வருடத்திற்கு ரூ.200லிருந்து 250 கோடி வரை. இதில் 50 சதம் Archie கார்டுகள்.
மேலும் 20 சதம் ITC இன் Expressions, பன்னாட்டு Hallmark நிறுவனைகளின் விற்பனை பங்கு ஆகும்.
தில்லி நேஹ்ரு ப்ளேஸில் அழகாக வண்ணமலர் கொத்துகள் அச்சடிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை நடைப்பாதையில் கூறு கட்டி விற்றுக்
கொண்டிருப்பார்கள். பத்து ரூபாய்க்கு ஐந்து அட்டைகள் வாங்கலாம்.ஒரு அட்டையின் விலைஇரண்டு ரூபாய். அதை வைத்துப் பார்க்கும்
போது நாம் வாங்கும் ஆர்சி அல்லது ஹால்மார்க் அட்டைகளின் காசு பெரும் டிபார்மெண்ட் ஸ்டோர் அல்லது 'மால்'களின் குளிர்பதன
செலவுக்கும் அவர்களின் இதர ஆடம்பர காட்சியமைப்புக்கும் ஈடு செய்ய கொடுக்கப்படுவதேயன்றி வாழ்த்து அட்டையின் அடக்கவிலை
விற்பனை விலையில் கால்பங்கை விட குறைவானதாகவே இருக்கும். ஹூம்...அறியா பிள்ளைகளுக்கு இது புரிவதில்லை.
பத்து ரூபாய் கொடுக்கப்படும் ஒரு அட்டைக்கு அதை செய்தவர்களுக்கு இரண்டரை ரூபாய்களாவது தேறாதா? சராசரியாக ஒரு குடும்பம்
வாரத்திற்கு ஒரு நூறு அட்டைகள் தயாரித்தாலும் மாதம் சுமார் ரூ.1000 கூடுதல் வருமானம் வருமே! நம்முடைய அளவில் இது ஒரு பெரிய தொகையாகத் தெரியாமலிருக்கலாம். ஆனால் மகளிர் சுய உதவி குழுக்களுடன் பழகியவர்களுக்கு தெரியும் அவர்கள் எப்படி ஒவ்வொரு
ரூபாய்க்கும் சிக்கனமாக கணக்கு பார்க்கிறார்கள் என்று.
ஒரு சிறிய கணக்கு போட்டுப் பார்த்தேன். ரூ.250 கோடி ரூபாயில் 5 சதம் இந்த கை-வினைஞர்களின் அட்டைகளை விற்பனை செய்யமுடியும் என்றால் அவர்களின் விற்பனை மட்டும் 12.5 கோடியை எட்டும். அதில் கால்பங்கு அவர்களின் உழைப்புக்கான கூலி என்றால் சுமார் மூன்று கோடி ரூபாய்கள் ஏழைகளை அடையும் (நடு தரகர்களை விலக்க முடிந்தால் இன்னும் அதிகமாகவே அடையும் என் கருத்து). வருடத்திற்கு ஒரு குடும்பம் ரூ 12000 சம்பாதிக்க முடியுமானால் மூன்று கோடி ரூபாய்கள், 2500 குடும்பங்களுக்கு உபரி வருமானம் தர முடியும்.
தினம் தினம் வறுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை காணும்போது பொருளாதார விரிசல் மனதை உறுத்துகிறது. அந்த விரிசலை மூடுவதற்கு ஒரே வழி அவர்களுக்கு உள்ள, இறைவன் தந்த,செல்வமான நேரத்தையும் உழைப்பையும் பயன்படுத்திக் கொள்ளுதலும் அதற்கு ஏற்ற ஊதியம் தருதலுமே ஆகும். அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்து சந்தை படுத்தி மேன்மேலும் அவர்களுக்கான வாய்ப்பை பெருக்க வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள் மட்டும் போதாது. ஏனெனில் அவர்கள் முயற்சியெல்லாம் ஒரு குறுகிய வட்டத்துள் தான் இருக்கும்.
இதை எப்படி நடைமுறை படுத்துவது என்பதை பற்றி எண்ணும் போது மேலே சொன்ன திரு பத்ரியின் கட்டுரை அதை ஓரளவு கோடிட்டு காட்டுகிறது. அதில் கூறியுள்ளவற்றை நடத்திக்காட்ட தேவை சமுதாய விழிப்புணர்ச்சியும் பொறுப்புணர்வுடன் கூடிய முனைப்பும்.
பெரிய தொழில் நிறுவனங்கள் கொள்கை ரீதியாக இத்தகைய கைவினைப் பொருட்களை பரவலாக தொடர்ந்து பயன் படுத்த முன்வரவேண்டும். CRY, SOS, Unicef போன்ற சேவை நிறுவனங்கள் 'வாழ்த்து அட்டை' விற்பனையை கையால் தயாரிக்கப்பட்ட அட்டைகளைக் கொண்டே மேற்கொள்வது என்று முடிவெடுத்தால் அவர்களின் சேவை இரண்டு விதத்தில் பயன்படும். முதலாவதாக கொள்முதல் செய்யும் போது ஏழை தொழிலாளர்களுக்கு வருவாய் அளிக்கிறது. இரண்டாவதாக விற்று வரும் இலாபம் அனாதை
குழந்தைகளின் நல்வாழ்வுக்குப் பயன்படுகிறது. ஒரு காலத்தில் தீப்பெட்டி தயாரிப்பை இப்படி குடிசைத் தொழிலுக்கென ஒதுக்கி வைத்திருந்தனர். தாராளமாக்கப்பட்ட பொருளாதாரம் வந்த பின்னால் அது போய் விட்டது என கருதுகிறேன்.
நேரடியாக தம்முடைய செல்வத்தை பகிர்ந்து கொள்ள யாருக்கும் மனம் வராது. ஆனால் உழைப்பை பகிர்ந்து கொள்வதன் மூலம் செல்வமும் பகிர்ந்தளிக்கப் படுகிறது. அதைத்தானே ராட்டை மூலம் காந்தியும் செய்து காண்பித்தார். லல்லு பிரசாத் ப்ளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக மண்குடுவைகளை சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் பயன் படுத்த முன் வந்த போது அதை மனமார வரவேற்கத் தோன்றியதும் இந்த காரணத்தினால் தான்.
எல்லா நேரத்திலும்,இடத்திலும் தரமும் விலையும் போட்டி போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்த்து அட்டைகளும் பிற கைவினைப் பொருட்களும் அந்த வகையை சேர்ந்த ஒரு சாதனம். அதை சிறப்பாக ஊக்குவிக்க முடிந்தால் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறும்.
கிட்டு மாமா -சூஸி மாமி
நிகழ்சி : கிட்டு மாமா -சூஸி மாமி
கிட்டுமாமா : ஏண்டீ சூ..ஸீ ... சேதி கேட்டியோ ?
சூஸி மாமி : என்ன கிட்சூ ?
கி.மாமா.: எல்லா கவன்மெண்ட் ஆபீசுலேயும் ஒவ்வொரு வெள்ளிக் கெளமை அன்னைக்கும் வேஷ்டிதான் கட்டிண்டு வரணுமாம்.
காலேஜுக்கு போற லெக்சர் ப்ரொபசர்களும் ஸ்டூடென்ஸும் கூட அப்படித்தானாம்.
சூஸி மாமி: லேடிஸ் கூடவா கிட்சூ ;)
கி.மாமா : போடீ பைத்தியம். அவா பொடவ கட்டிக்கணுமாக்கும்
சூஸி மாமி : இது என்னா கிட்சூ இப்படி புது லா எல்லாம் போட்டிருக்காங்கோ ?
கி.மாமா : நோக்கு எங்க புரியப் போறது ;) ஆனாலும் சொல்றேன் கேட்டுகோ. இந்த கைத்தறி நெசவாளரெல்லாம் இருக்காளோ இல்லியோ...
சூஸி மாமி : அது என்னா மேன் கைத்றி நேசம்..
கி.மாமா : ஆமாண்டி நேசம் தான். ஒளெரினாலும் மொதத் தடவயா அர்த்தத்தோட ஒளரி இருக்கே. கைத் தறி.. தறி அப்படீன்னா ஹாண்ட்லூம் வீவர்ஸ் இருக்காளோ இல்லியோ, பாவம் அவாளாடோ தயாரிப்பெல்லாம் யாருமே வாங்கறதே இல்லியாம். இப்ப எல்லாரும் லெவி ஜீன்ஸ், ந்யூபொர்ட் அப்படீன்னு ஜீன்ஸ் போட்டுண்டு சுத்தறாளோன்னோ இவாளுக்கு மார்க்கெட் டல்.
சூஸி மாமி: அப்போ அவங்கலயும் ஜீன்ஸ் மானுவாக்ச்ர் பண்ண சொல்ரதுதானே கிட்சூ.
கி.மாமா :அடி முண்டம். ஜீன்ஸை யாராவது கையில நெய்ய முடியுமாடி. அதுக்கு பெரிய பெரிய மெஷின் வேணும். அதெல்லாம் இம்போர்ட் பண்ணனும். அதெல்லாம் இவாளால முடியற காரியமாடி? அதனாலே தான் இந்த புது சட்டமாக்கும்.
சூஸி மாமி : ஒருநாள் வேஷ்டி, பொட்வே கட்னா மார்கெட் வந்துருமா கிட்சூ ?
கி.மாமா : அடி போக்கத்தவளே. பாவம் அவாளுக்கெல்லாம் ஏதோ கொஞ்சம் ஹெல்பா இருக்கட்டுமேன்னு அரசாங்கத்துல ரொம்ப யோசிச்சு ஏதோ செய்யப் பாத்தா நீ எடக்கு மடக்கா கேள்வி கேக்றியே !
சூஸி மாமி : அப்படியில்லே கிட்சூ. இப்போ ஹெல்மெட் போடாட்டா ஃலைப்க்கு டேஞ்சர். அதனாலே ஹெல்மெட் போடணுமின்னு சொல்லி பப்ளிக்குக்கு ஹெல்ப் பண்ண ஒரு ரூல் வந்துச்சே கிட்சூ...
கி.மாமா: ஓ.ஓ..ஓ!! நீ அங்க போயிட்டியாக்கும் !....... சூ...ஸீ.. சும்மா சொல்லப்படாது.. டீ. நீயும் ரொம்ப சுயமா யோசனை பண்ணக் கத்துண்டுட்டாய். இதக்கப்புறம் ஒன்னோட பேசப் படாது..
------விளம்பர இடைவெளிக்குப் பின் பாடல் ஆரம்பிக்கிறது------------
(இந்த நிகழ்ச்சி சூரியன் FM-ல் தினமும் காலையில் அன்றாட செய்தி துணுக்குகளை அலசும் விதமாக ஒலிபரப்பப்படுவது. கோவை பெருமக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நிகழ்ச்சி)