Sunday, April 20, 2008

அநுமனும் சினா-சோனா வும்

'ஊக்கமது கைவிடேல்' என்பது பாட்டியின் முது மொழி. மேற்கொண்ட செயல் எதிலும் வெற்றி பெற வேண்டுமாயின் மன ஊக்கம் கொள்ள வேண்டும். எப்படியாவது ஒருவனது முயற்சியை நகைப்புக்கு இடமாக்கி தோல்விபெறச் செய்வதில் பலருக்கு திருப்தி. 'அப்பவே சொன்னேன், டேய் இதெல்லாம் வேண்டாம்-னு, கேட்டாத்தானே' என்று புத்திசாலிகளாகி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவர் மிக உண்டு.

இத்தகைய எதிர்மறை எண்ணங்களை எதிர் கொள்வது எப்படி ? தன்னம்பிக்கை உடையோருக்கு எதிர்மறை எண்ணங்கள் எழாது. எழுந்தாலும் விரைவிலேயே அதை தம் அனுபவத்தாலோ அறிவினாலோ அழித்து வெற்றி கொள்வர்.



“Ventures Make men and ventures Break men" என்று சொல்வான் சினா.சோனா.

இதற்கு சிறந்த உதாரணம் அநுமன். சுந்தரகாண்டத்தின் நாயகன். அங்கே முழுப்பெருமையும் அவனதே.
இலங்கை அடைந்தபின் பல இடங்களிலும் தேடி சீதையை காணாமல் மனம் தளர்ந்து போன அநுமன், கம்பரின் வரிகளில்

கொன்றானோ ? கற்பு அழியாக் குலமகளைக் கொடும் தொழிலால்
தின்றானோ? எப்புறத்தே செறித்தானோ சிறை சிறியோன் ?
ஒன்றானும் உணர்கிலேன் மீண்டு போய் என் உரைக்கேன் ?
பொன்றாத பொழுது எனக்கு இக் கொடும் துயரம் போகாதால்


என்றும்
.......புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழைநின்றும் போயதால்

என்றும்
..... ஆழித்தாய் இடர் ஆழி இடையே வீழ்ந்து அழிவேனோ ?

என்றும் பலவாறாக புலம்பி உயிரை அழித்துக்கொள்ள விழைகிறான். இந்த நம்பிக்கை யில்லாமையை despondency என்று ஆங்கிலத்தில் உரைப்பர்.

வால்மீகி ராமாயணத்திலும் இப்படி புலம்பினாலும் இதே கட்டத்தில் பின்னர் அநுமன் தன்னைத் தானே தேற்றிக் கொள்ள சொல்லும் இரண்டு பாடல்கள் சுந்தரகாண்டத்தில் வருகிறது. கஷ்ட காலத்தில் சுந்தர காண்டத்தை படிக்கச் சொல்வதின் நோக்கமும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளத்தான்.

வட மொழி மனந்தளராமையை அநிர்வேதம் என்று உரைக்கிறது.
அநிர்வேத: ஷ்ரியோ மூலம், அநிர்வேத: பரம் ஸுகம் |
அநிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்த்தக: || (12-10)

தளராமையே செல்வத்திற்கு காரணம், தளராமையே சிறந்த சுகம். தளராமையே எப்பொழுதும் எல்லா காரியங்களிலும் ஊக்கமளிப்பது.

கரோதி ஸபலம் ஜந்தோ: கர்ம யத்தத் கரோதி ஸ:
தஸ்மாத் அநிர்வேத-க்ருதம் யத்னம் சேஷ்டே ஹமுத்தமம் |
| (12-11)
(மனம்)தளராமையே ஒரு ஜீவனின் காரியத்தை பயனுடையாதகச் செய்கிறது. ஆகையால் தளர்ச்சிக்கு இடம் கொடாமல் சிறந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இன்று ஹனுமத் ஜெயந்தி, அவனருளால் எல்லோருக்கும் நல்ல காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிட்டட்டும். இடுகம்பாளையம் ஆஞ்சநேயரை இங்கே தரிசிக்கலாம்.

No comments: