Saturday, April 26, 2008

ஒரு ஜோடி நாற்காலியின் கதை

( வ. வா. ச ரெண்டாவது வருட போட்டிக்கு)


உலகத்திலேயே............
வேணாம், இந்தியாவிலேயே.......
அதுவும் ஒத்துக்க மாட்டீங்களா
சரி, சென்னையிலேயே
ரொம்ப அதிகமான போட்டோ பிடிச்சு இருக்கிறது என்னையத் தாங்க.
ரெண்டு லட்சத்துக்கும் மேலே. எப்படீங்க்றீங்களா கதைய கேளுங்க.

எனக்கு வயசு எழுபதுக்கு மேல. முதலாளி அய்யா வெங்டேச ரெட்டி பர்மா தேக்குல ஸ்பெஷலா சொல்லி நாலு ஆளுங்க ராப்பகலா வேலை பார்த்து ஒருமாசத்தில எனக்கு ஒரு உரு கொடுத்தாங்க. அப்பயிலேர்ந்தே என் பேரு ஜோடி நாற்காலி தாங்க. இப்போ எல்லாம் டபுள் சோபா அப்படீங்கறாங்களே, அப்பிடி.

வீட்டுல என்ன விசேஷமானாலும் அய்யாவயும் அம்மாவையும் ஜோடியா தாங்கறதுக்கு அடியேன்தான். அவரு நவராத்திரி, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி அப்படீன்னு வருசம் முழுக்க எதினாச்சும் விழா நடத்தி கிட்டே இருப்பாரு. பட்டணத்துல இருக்கிற பெரிய புள்ளிங்களெல்லாம் ஆஜர். எதுவானாலும் எட்டுநாள் பத்து நாள் நடக்கும். வர்றவங்களுக்கெல்லாம் டிபன் சாப்பாடு. வீடு ஜே ஜே ன்னு இருக்கும். அந்த வீட்டுல நான் தான் சிம்மாஸனம்.

என்னெயெ பாத்துட்டு “இது மாதிரி ஒரு வேலைப்பாடு எங்கேயும் பார்த்தே இல்லை. இதை எனக்கு குடுத்துடுன்னு” பலான பலான பேர்வழிகளெல்லாம் வந்து கேட்டுப் பார்த்துட்டாங்க. அய்யா மாத்திரம் ஒத்துக்கவே மாட்டாரு. அப்படி ஒரு பாசம் எம்மேலே. ரொம்ப ராசியான நாற்காலி அப்படீனு பேரு எல்லாம் வந்துச்சு.

நான் வந்து இருபது வருசத்திலெ அம்மாவுக்கு உடம்பு ரொம்ப முடியாம போச்சு. அப்ப வீட்ல வேலை செஞ்சுக்கிட்டிருந்த ஒரு ஏழைப் பொண்ணுக்கு கலியாணம் செஞ்சு வைங்கன்னு சொல்லி செத்து போயிட்டாங்க.

அய்யா பாத்தாரு. அம்மா பேருல ஒரு கலியாண மண்டபமே கட்டிட்டாரு. அலமேலு ரெட்டப்ப கலியாண சத்திரம் கட்டின காலத்தில ரொம்ப ஃபேமஸ்.

அம்மா போனப்புறம் என் மேல வந்து உக்கார்றதுக்கு அவருக்கு என்னமோ போலருந்திச்சு.'இந்த ராசியான நாற்காலி புதுசா கலியாணம் கட்டிக்க போற புள்ளைங்களுக்கும் ராசியா இருக்கட்டும்' அப்படீங்கற நல்ல மனசோட என்னை கொண்டு போய் கலியாண சத்திரத்தில வச்சுட்டாங்க.

இங்கே வந்தப்புறம் பழைய கல கலப்பு இல்லீங்க. வருசத்திலே முப்பது நாப்பது முகூர்த்தம் தேறும் அப்போ ரெண்டு நாளைக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கும். சின்ன ஜோடிங்க சந்தோசமா இருக்கிறத பாக்கிறதுக்கே உத்சாகமா இருக்கும்.

ரிசப்ஷனுக்கு முன்னாடி நம்மளை வெளிய கொண்டு வந்து வச்சதுமே சின்ன புள்ளைங்களெல்லாம் என் மேலே ஏறி வெளயாட ஆரம்பிச்சுடும். அந்த வாச்சுமேன் சின்னையா இருக்கானே (அவன் தாங்க என்கதையில வில்லன்) அவன் வந்து கொளந்தங்களையெல்லாம் வெரட்டுவான். பெரிய அய்யா
இருக்கும்போது கொளந்தைங்க அந்த மாதிரி வெளையாடினா ஆசையோட பார்ப்பாரு. கூடவே அவரும் வெளையாடுவாரு.

ஹும் பெரிய அய்யா போனப்புறம், இந்த நாப்பது வருசத்தில எவ்ளவோ மாறிடிச்சு. அவுங்க புள்ளைங்களெல்லாம் வேற வேற பிஸினஸ்க்கு போயிட்டாங்க. பெரிய மருமக(ள்) மாத்திரம் கொஞ்சம் சத்திரம் விஷயமா வந்து கவனிச்சுக்குவாங்க.

பெரிய அய்யா காலத்திலேந்து போட்டோன்னா எனக்கு ரொம்ப பிரியமுங்க. எல்லா விழாவிலேயும் அய்யா போட்டோகிராபருக்கு சொல்லிடுவாரு. கறுப்பு வெள்ளை போயி, கலர் வந்து அப்புறம் வீடீயோ வந்திடுச்சு. வீடீயோ என்னங்க வீடீயோ. அந்த காலத்துலே காந்தராவ் சினிமாவுல கூட நெறைய வந்திருக்கேனாக்கும். அப்பப்ப ஷூட்டிங்கு கொண்டு போய் திரும்ப கொண்டு வந்திடுவாங்க. இதுவரைக்கும் என்னைய ரெண்டு லட்சத்துக்கும் மேல போட்டோ எடுத்திருங்காங்களாம் !!

என்னோட வாழ்க்கையில ஒரே ஒரு பெரிய குறைதானுங்க. எங்க வீட்டு ஒரு கலியாணத்தில எனக்கு எடமில்லாம போனதுதாங்க அது.

என்னாச்சுன்னா பெரிய பையனுக்கு ரெட்டைப் பொண்ணுங்க. அது ரெண்டும் கலியாண வயசு வந்ததும் இன்னொரு ரெட்டையா பொறந்த பையங்கள பார்த்து நிச்சயம் பண்ணினாங்க. ரெண்டாம் தலைமுறையில முதல் கலியாணம்.

ரிசப்ஷன் ல ரெண்டு ஜோடியும் ஒண்ணா நிக்கணுமே. “இதுக்கு செட்டா இன்னொரு ஜோடி நாற்காலி இருக்கான்னு” என்னைய காமிச்சு பிள்ளை வீட்டுக்காரங்க கேட்டாங்க. மானேஜர் சொன்னாரு “இது ரொம்ப பழசுங்க. இது மாதிரி எங்க தேடினாலும் கெடைக்காது.” “அப்ப இதை உள்ளேயே வச்சுட்டு ஒரே மாதிரி இருக்கிற ரெண்டு ஜோடி சோபா ஏற்பாடு பண்ணுங்க” ன்னு பிள்ளை வீட்டுகாரங்க சொல்லிட்டாங்க :((

நம்ம வூட்டு கலியாணத்துல என் மேலே ஆசையா குதிச்சு வெளையாண்ட நம்ம குழந்தைகளோட கலியாண போட்டோல நான் இல்லை.

அன்னிக்கு பெரிய அய்யாவையும் அம்மாவையும் நெனச்சு அழுதேன் பாருங்க அந்த மாதிரி என்னிக்குமே வருத்தப்பட்டதில்லே.

ரெண்டு லட்சத்துக்கும் மேலே போட்டோல விழுந்து என்ன புண்ணியம். நம்ம பேரக் குழந்தைங்க கலியாணத்துல இல்லாம போயிட்டேனே அப்படீன்னு ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு.

ஜோடி கிடைக்காம தனியா நிக்கிற 'ஜோடி நாற்காலி' நான்.

அதுவே ஏதோ ஒரு கெட்ட சகுனமா தோணிச்சு.

இது நடந்து ரெண்டு மாசம் கூட இல்லீங்க,இந்த வாச்சுமேன் சின்னையாவால வந்தது வெனை.

அவன் சத்திரத்துல யாரும் இல்லாத போது வந்து என் மேல உக்காந்துக்குவான். பெரிய ராசா மாதிரி, சிவாஜி மாதிரி, சூப்பர் ஸ்டார் மாதிரி எல்லாம் ஆக்ட் குடுப்பான். அப்படி ஒரு நாள் குடிச்சுக்கிட்டிருந்த துண்டு பீடிய ரஜ்னி மாதிரி தூக்கிப் போட்டு ஆக்ட் குடுத்தானா, அந்த பாளாப் போனப் பீடி எம்மேல இருந்த மெத்தை சந்துக்குள்ள விழுந்திடுச்சு. அவன் தேடறான் தேடறான் கீழ எங்கேயோ தேடிக்கிட்டே இருக்கான்.

பாவி பொகையுதுடா இங்க பாரு-ன்னு கத்துரேன், காதுல விழுந்தாதானே. கொஞ்சம் பொகை ஜாஸ்தியானப்புறம் தான் அவனுக்கு புரிஞ்சது தன்னோட தப்பு. அதுக்குள்ள பாதி மெத்தை கருகி போயி பார்க்கிறதுக்கே விகாரமா போச்சு. அம்மா கிட்ட மானேஜரும் அவனுமா ஏதோ பொய்யைச் சொல்லி தப்பை மூடிட்டாங்க.

ரெண்டு வாரத்துக்கு முந்தி அம்மா வந்தபோது ஏன் சத்திரத்த சுத்தமா வச்சுக்க கூடாதா அப்டீன்னு ஒரு வெரட்டு வெரட்டினாங்க. மேனசர் சொல்றாரு “அம்மா ரொம்ப வருசமாச்சு வெள்ளையடிச்சு. வெள்ளை அடிச்சா பாக்கிறதுக்கு நல்லா இருக்கும்.”

“அதுக்கு ஏது காசு ?” அப்படீன்னு பெரிய மருமக கணக்கு போட்டாங்க.

மேனஜர் சொன்னாரு “எரிஞ்சு போன அந்த பழைய ஜோடி நாற்காலி இருக்குதுங்களே அது அத்தனையும் பர்மா தேக்கு. தேக்கு மரம் மட்டுமே அம்பதாயிரத்துக்கு மேலே போவும். வேலைப்பாடு செஞ்சதுங்கறதுனால எப்படியும் ஒரு லட்சத்துக்கு கேட்டு பாக்கலாம். இப்ப எல்லாம் யாருங்க அதை யூஸ் பண்றாங்க. பழைய மாடல். வித்து வர்ற காசு வச்சு முடிச்சுடலாம்”.

எனக்குத் தானே தெரியும் அவரு போடற கமிஷன் கணக்கு. பொம்பளைங்களுக்கு விவரம் பத்தாதுங்க.

மருமகளோட கண்ணு அகல விரிஞ்சுது. “அப்படியா, விசாரிச்சு சொல்லுங்கன்னு” சொல்லிட்டு போயிட்டாங்க.

யார் யாரோ எல்லாம் வந்து பார்த்துட்டு போறாங்க. ஏதோ பாம்பே பார்ட்டியாம். ஃபை ஸ்டார் ஹோட்டலுக்கு வேணுமாம். சீக்கிரமே முடிச்சுட பாக்குறாங்க.

சின்னையா சொல்றான் 'இதுக்கு வந்த வாழ்வ பாருடா. பாம்பேயாம்! ஃபைஸ்டார் ஹோட்டலாம்!”

“பொய் சொல்ற ரெண்டுபேரும் இங்கயே ஜோடியாவே இருந்து அழுங்கடா” அப்படீன்னு மனசுல திட்டிக்கிட்டேன். பெரிய அய்யா போனப்புறம் எனக்கு எந்த ஊரானா என்னங்க.

அப்போ பாம்பே -ல சந்திக்கலாமா? புள்ளகுட்டிங்களோட வந்திடுங்க. நெறைய போட்டோ எடுத்துக்கலாம்.

வரலாற்றிலே மிக அதிகமான போட்டோ யாருதுன்னு கேட்டா .........
இல்லையில்லை.. மிக அதிகமாக போட்டோ எடுக்கப்பட்ட ஜோடி நாற்காலி அப்படீன்னா .....

அது நானாதான் இருக்கணும்-னு ஆசை. அம்புட்டுதான்.

No comments: