Saturday, September 21, 2019

பங்கு சந்தை என்னும் கவர்ச்சி உலகம்-2

    சென்றப் பதிவில் பங்கு சந்தையைப் பற்றிய என் கட்டுரையைப் பார்த்து முதலில் என்னிடம் கேட்கப்பட்டக் கேள்வி “நீ யாருக்காக இதை எழுதுகிறாய்?” 

       பயணக்கட்டுரைகளை பலர் எழுத நாம் படிக்கிறோம். இதில் அவர்களுடைய அனுபவங்களை புரிந்து கொள்ளவும், போகின்ற இடத்தில் சந்திக்கக் கூடிய எதிர்பாராத  பிரச்சனைகளையும், அங்கே இன்னது கிடைக்கும் அல்லது கிடைக்காது என்கிற விவரங்களை தெரிந்து கொள்ளவும் முடிகிறது. அதனால் ஓரளவு நம் மனநிலையை தயார் படுத்திக் கொள்ளலாம். சில சமயம் சொல்பவருடைய அனுபவம் நன்றாக இருந்தால் நாமும் ஒரு தடவை போய்விட்டு வரலாமே என்று தோன்றும். மோசமாக இருப்பின் ‘ஐயோ வேண்டாம்’ என்று தோன்றும். ஆர்வமுள்ளவர்கள் பலருடைய அனுபவங்களைக் கேட்டுத் தானாக ஒரு முடிவுக்கு வருவார்கள்.

என்னுடைய அனுபவத்தையும் புரிதலையும் அப்படிப்பட்ட ஆர்வமுடையவர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இதுவும் ஒரு அனுபவம். முடிவல்ல. இங்கே சொல்லப்படும் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகள் நிச்சயம் இருக்கும்.  சரி தவறு என்று ஏதும் கிடையாது. மேலும் தவறுகளை சரி செய்து கொள்ள வாய்ப்புகள் எப்போதும் உண்டு.

     இந்த பதிவுகளில்  பங்குச் சந்தையை நான் எப்படி அணுகுகிறேன் என்பதை மையமாக வைத்து உங்கள் கருத்துகளுடன்  ஒப்பிட்டுக்  கொள்ளவும்.

    சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். நம்மிடம்  ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்ய சேமிப்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

       என்னைப்போல் சாமானியன் முதலில் பார்ப்பது பாதுகாப்பான வங்கி வைப்புநிதி ( Fixed Deposit).  இதில் வருடத்திற்கு 7 முதல் 7.6 சதம் வட்டி கிடைக்கும். அதாவது ஒரு லட்சம் என்பது ஒரு வருட இறுதியில் ரூ 7600 வரை ஈட்டும்.  அஞ்சல் சேமிப்பிலும் ஏறக்குறைய அதே அளவு தான் இருக்கும். ஏனெனில் இவை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுபவை.

        இந்நிலையில்,  நம் பொருளாதாரத்தின் பணவீக்கம்  5% என்று வைத்துக் கொண்டால் நம்முடைய நிகர வருமானம் ரூ 2600/ மட்டுமே. அதாவது சென்ற வருடம் ரூ 1 லட்சத்திற்கு வாங்கிய பொருளின் இன்றைய விலை ரூ 1லட்சத்து ஐந்தாயிரம். என்னுடைய வாங்கும் திறன் குறைந்து விட்டது.  அதற்கு அடுத்த வருடம் அது 1 லட்சத்து ஐயாயிரத்து இருநூற்று ஐம்பதாகும். அப்போது நிகர வருமானம் 2350 ஆகக் குறையும்.  கவலைக்குரிய விஷயம் இது தான்.

  நான் ஒரு  வங்கியின் அறிவுரைப்படி  தொடர் வட்டியில் (Compound interest) வைத்தால் அதன் மதிப்பு ரூ.125518 ஆக  மூன்று வருடங்களில் வளர்ச்சியுறும்.

இதையே பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால்?   இதை எப்படி அறிவது?

இதற்கு சென்செக்ஸ் என்ற குறியீட்டை பயன்படுத்துகின்றனர். இது 50 அல்லது 100 மிக அதிகமாக விற்பனை பரிவர்த்தனையில் கைமாறிய பங்குகளின் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு கணிக்கப்படுகிறது.   மும்பை சந்தையில் 2019 மார்ச் மாதத்தில் இந்த குறியீடு 38762 ஆக உள்ளது.  இதுவே மூன்று வருடங்களுக்கு முன்பு ( 2015-16)-ல் 25341 ஆக இருந்தது.  இதை எளிமைப்படுத்திச் சொன்னால் 52.9% சதவீத வளர்ச்சி.


    இதன்படி நம்முடைய முதலீடான ஒரு லட்சம் ரூபாய் 152900 ஆக வளர்ந்திருக்கும்.  வளர்ச்சி வேகம் வருடத்திற்கு 17.6 %  ஆகிறது. இது வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட 10% அதிகம்.

   [மும்பை பங்குச் சந்தை குறியீடு போலவே தேசிய பங்கு சந்தை குறியீடு என்றும் ஒன்றுள்ளது. இது ஒரு தனி அமைப்பு.  இவர்கள் குறியீடு ஏப்ரல் 2016 -ல் 7713 ஆக இருந்து 2017 மார்ச் மாதத்தின் இறுதியில் 8592 ஆக முடிந்தது. அதுவே 11570 ஆக 2019 மார்ச் இறுதியில் வளர்ந்தது. இதன்படி மூன்று வருடங்களில் 50 % வளர்ச்சியாகும்  நம்முடைய முதலீடு ரூ.150000 ஆகியிருக்கும்.]

    ஆனால் இது தனிப்பட்ட சிறு முதலீட்டார்களுக்கு அப்படியே பொருந்தும் என்று சொல்ல முடியாது.  ஒருவேளை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் அல்லது குறைந்தும் போகலாம். அது அவர்கள் வைத்திருக்கும் கம்பெனிகளின் தனிப்பட்ட அன்றைய  சந்தை மதிப்பைப் பொறுத்தது.

அப்படியானால் நல்ல கம்பெனிகளை தேர்வு செய்வது எப்படி?

   நம் போன்ற சாமானியர்களுக்கு எளிதாகும் வகையில் எல்லா பெரிய வங்கிகளிலும் முதலீடு  செய்வதற்கு பல வகைகளில் உதவுகின்றனர்.

இதில் மியுட்சுவல் ஃபண்ட், காப்பீட்டுடன் கூடிய முதலீடு என்பவையும் அடக்கம்.  இவற்றைப் பற்றி என் பார்வையை அடுத்த பதிவில் காண்போம்.

முந்தைய பதிவை படிக்க                                                 அடுத்த பதிவை படிக்க


Friday, September 20, 2019

பங்கு சந்தை என்னும் கவர்ச்சி உலகம்

    பங்கு சந்தை வீழ்ச்சி, ஒரே நாளில் 1200 கோடி நட்டம் என்றெல்லாம் படிக்கிறோம், தொ(ல்)லைக் காட்சிகளில் விவாதங்களைக் கேட்கிறோம். இவை ஏதோ அரசாங்கத்தின் தடுமாற்றம் போலவோ அல்லது சர்வதேச வாணிக ஏற்ற இறக்கத்தாலோ ஏற்படுவன போல் காரணங்களைத் தேடுவார்கள்.

    இதில் செலவிடப்படும் மனிதநேரம் (Man hours) சினிமாவிலும் அரசியல் விவாதங்களுக்கும் செலவிடப்படுவதில் சற்றும் சளைத்தது அல்ல.

    சற்று உற்று கவனித்தால் இது ’உழைக்காமல், விரைவாக சம்பாதிக்க நினைக்கும் கூட்டத்தின் உரத்த குரல் தானே தவிர வேறொன்றும் பெரிதாக இல்லை.  சூதாட்டத்தில் பணத்தை கட்டி விட்டு தவிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

      இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது போல மத்தியதர வர்க்கத்தினரும் எளிய வர்க்கத்தினரும் இந்த வலையில் விழுவது தான். உண்மையில் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள்தான்.  அவர்கள் பெயரைச் சொல்லி முதலைக் கண்ணீர் வடிக்கும் கும்பலின் ஓலம்தான் நாம் தொலைக் காட்சியில் காண்பது.


( picture coutesy : https://tradebrains.in/stock-market-memes/)
    மேற்கண்டவை என் கருத்து மட்டுமல்ல பல விவரம் தெரிந்த நிபுணர்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள் கருத்தும் கூட.

இது நாணயத்தின் ஒரு பக்கம். மறுபக்கம் என்ன?

     உழைப்பினால் சேமித்த பணத்தை சும்மா வைத்திருக்கூடாது.  காலம் செல்லச் செல்ல அதன் மதிப்பு குறைந்து கொண்டே போகும். இதையே பணவீக்கம் என்கின்றனர்.  இந்த பண வீக்கத்திலிருந்து காத்துக் கொள்ள காலங் காலமாக நம் முன்னோர்கள் கண்ட வழி தங்கமாக மாற்றி வைத்துக் கொள்வது.

   தொழிற்சாலை உற்பத்தியும் வர்த்தகமும் பெருகப் பெருக அதன் வளர்ச்சியும் பங்கு விலையும் ஏற்றம் காண்கின்றன. ஆகையால் இது ஒரு விதத்தில் நல்ல முதலீடே. நம்முடைய சேமிப்பை பணவீக்கத்திலிருந்து காப்பதுடன் தங்கத்தைப் போல் கட்டிக் காக்க வேண்டியசங்கடங்கள் இல்லை என்பது இன்னொரு சாரார்.

  இது உண்மையில்லாவிட்டால் பங்குச் சந்தை என்பது இத்தனை வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்ற நிஜத்தையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.   ஓரளவு  நம்முடைய தேவைகள் ( உணவு, உடை, வீடு, இதர பொறுப்புகள் ) பூர்த்தியான பின் உபரி சேமிப்பை எங்கே முதலீடு செய்வது என்பதிலே தான் ஓய்வு பெற்றவர்களின் கவனம் எல்லாம். அவர்களை முதலில் ஈர்ப்பது இந்த பங்கு சந்தையே.

    ஏனெனில் இவர்கள்தான் உண்மையிலே  சேமிப்பை இழக்காமல் கவனமாக பாதுகாத்து செலவழிக்க வேண்டியவர்கள்.
     இப்படித்தான்  முப்பது வருடங்களுக்கு முன் என் மாமனார் ஓய்வு பெற்ற பின் கிடைத்த  ஒரு பகுதி சேமிப்பை நண்பர்கள் பலருடைய சிபாரிசின்படி ஏகப்பட்ட  கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். அப்போது Demat,  Online trading, என்பனவெல்லாம் கிடையாது. அங்கங்கே பங்கு தரகர்களின் சிறிய சிறிய அறைகளில் அமர்ந்து சந்தையின் ஏற்ற இறக்கங்களை சிலாகித்து  சில முதலீட்டு கம்பெனிகளின் திட்டங்கள் பற்றிய செய்திகளையும் விவாதித்து விற்பனை அல்லது கொள்முதல் முடிவு செய்யப்படும். இது டீக்கடை பெஞ்சு சமாச்சாரம் தான். பெரும்பாலும் கற்பனை உலகம். அவரவர்களும் கண் வைத்து காது வைத்து தமக்குத் தோன்றுவதை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

      அப்போது அவருடைய சில முதலீடுகள் நல்ல நிலையில் இருந்ததால் எனக்கும் சிபாரிசு செய்தார். நல்ல வேளை, என்னிடம் சேமிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. மேலும் பெரியவர்கள் பேச்சிற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ.பத்தாயிரம் அவருக்கு அனுப்பி அவருடைய மகள் பெயரில் (என் மனைவி) அவர் உசிதம் என்று நினைக்கும் கம்பெனிகளில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். இதில் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

   ஒரு சில ஆண்டுகள் கழிந்தன. ஹர்ஷத் மேத்தா, கேதன் ஃபரீக் போன்றவர்களின்  சூறவளி சூதாட்டம் பங்கு சந்தையில் வந்து போனது.  அவர்கள் கொடுத்த படிப்பினையின் பேரில் SEBI கண்காணிக்கும் முறை வந்தது.  அதைத் தொடர்ந்து  கணினியுகம் வந்து பங்கு சந்தையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் சந்தையில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதெல்லாம் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.

  அதற்குள் என் மாமனார் கணிசமான தொகையிழந்து தம்முடைய பங்குகளையெல்லாம் விற்று இனி பங்கு சந்தை பக்கம் படுக்க மாட்டேன் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.  இதில் தன் மகள் பெயரில் இருந்த என்னுடைய முதலீடுகள் பலவற்றையும் விற்று விட்டார். சிலவற்றை விற்க முடியாமல் விட்டு விட்டார்.

   விற்க முடியாமல் நின்று போன பங்குகளுக்காக  SEBI -ன் கட்டாயத்தினால் என் மனைவி பெயரில் ஒரு DEMAT கணக்கு துவக்கினேன். ஆன்லைன் வசதிகள் காரணமாக அவ்வப்போது   அவற்றின் சந்தை விலையை கவனிக்க ஆரம்பித்தேன்.  என்ன ஆச்சரியம்! கைவிட்டுப் போனவை என்று கருதப்பட்ட அந்த பங்குகளின் விலை இன்றைக்கு லட்ச ரூபாய்க்கும் மேலே. எனக்கு பிற பங்குகள் மூலம் வந்த லாப நட்டக் கணக்குப் பிடிபடவில்லை. ஆனால் இந்த சில பங்குகள் மூலமே அன்றைய முதலீடு நேராக்கப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன்.

    வங்கி அல்லது அஞ்சல்துறை  வைப்புநிதியானால் ரூ. 10000  இருபதாயிரம் ஆவதற்கு குறைந்தது 8 முதல் 10 வருடம் வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இந்த முப்பது வருடங்களில் ரூ. 50000 ஐ தாண்டமுடியாது. ஆகவே ரூ. ஒரு லட்சம்  என்பது நிஜமாகவே கணிசமான வளர்ச்சிதான். அந்த குறிப்பிட்ட கம்பெனிகளும் பல ஏற்ற இறக்கங்களுக்கு இடையே  தொழில் வளர்ச்சி கண்டிருந்தன.

ஒரு உண்மை உறைக்கத் துவங்கியது.  பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சி காண வேண்டுமானால்  அவசரப்படக்கூடாது.  குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினர் இதை ஒரு நெடுங்கால முதலீடாகக் கருத வேண்டுமே அன்றி  குறுகிய காலத்தில் அதிக லாபம் என்று இறங்கக் கூடாது.

அதே சமயத்தில் சற்று கவனுத்துடன் செயல்பட்டால் வங்கிகளின் வைப்பு நிதி விகிதத்தை விட சற்று அதிகமாகவே ஈட்ட முடியும் என்று தோன்றியது. அடுத்த பதிவில் இதைப் பற்றி பலரின் அணுகு முறை என்ன என்பதைக் காண்போம்.  இதில் என் அனுபவத்தைக் காட்டிலும்  பிற அன்பர்களின் பரிந்துரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். என்னுடைய ஒப்பீடுகளும் இடம் பெறும்.

ஏனெனில் என்னுடைய அனுபவத்தை  பதிவு செய்ய மேலும் சில வருடங்கள் தேவைப்படுமே !!

 ( cartoon courtesy tf india.in )

அடுத்த பகுதி