Wednesday, October 30, 2019

பங்குச் சந்தை என்னும் கவர்ச்சி உலகம்-3

       சென்ற இதழில், பங்குச் சந்தையில் கவனமாக முதலீடு செய்வதால் வங்கிகளிடமிருந்து பெறும் வட்டி விகிதத்தை விட அதிகமாகவே வருமானம் பெற வாய்ப்புள்ளது என்பதை கண்டோம். இதில்  சூதாட்ட மனப்போக்கை விலக்கி முதலுக்கு மோசமில்லாமல் வருவாயை அதிகப்படி பெருக்கிக் கொள்ள என்ன வழி என்பதே நமது முயற்சி.

       குறிப்பாக இதில் ஆன்லைன் DEMAT கணக்கு வைத்திருப்பவர்கள் சுலபமாகவே பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதை எளிமையாக்குவதற்கு பெரும்பாலான பெரும் வங்கிகள் பங்கு விற்பனை பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். தேவைப்படுவோர்க்கு அவர்களின் சேவைப்பிரிவு முதலீடுகள் பற்றி தம்முடைய அறிவுரைகளையும் வழங்குகிறார்கள். 

      அவர்கள் தரும் பெரும்பாலான அறிவுரை தம்முடைய வங்கியின் பரஸ்பரநிதி (Mutual Fund) அல்லது அதனோடு இணைக்கப்பட்ட ஆயுள் பாதுகாப்பு சேமிப்பு முதலியவற்றில் முதலீடு செய்தால் பயன் அதிகம் என்பர்.

     பரஸ்பரநிதி என்பது  நம்மைப் போல் நேரமும் பொறுமையையும் இல்லாத சிறு முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஒன்று திரட்டி வங்கிகளே நேரடியாக பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் பல நிபுணர்களின் அனுபவமும் முன்னோக்கும் அந்தந்த நிதியில் பயன்பட்டு லாபம் ஈட்ட ஏதுவாகிறது.     

    சமீபத்திய மிக லாபகரமான பரஸ்பர நிதிகளின் செயல்பாடும் கடந்த 3 அல்லது 5 வருடங்களில் அவைகள் கொடுத்திருக்கும்  வருமானமும் கீழ்கண்ட புள்ளிவிவரத்தின் மூலம் அறியலாம். (30/10/2019)


                           ( படத்தை சொடுக்கி பெரிதாக்கவும்)  

Best Returns என்று குறிப்பிடப்பட்டுள்ள எந்த பரஸ்பர நிதியும்  10% விட அதிகம் காட்டவில்லை.  ஆனால் அதே 3  வருட காலத்தில் பங்கு சந்தையின் வளர்ச்சி 50% என்பதை சென்ற கட்டுரையில் கண்டோம். 

அப்படியானால் முதலீட்டாளர்களின் லாபமெல்லாம் எங்கே போகிறது?  நாம் செய்த முதலீடு நிபுணர்களின் பார்வையில் பங்கு சந்தையில் கொஞ்சமுமாக  வைப்பு நிதியங்களில் (Debt funds)  கொஞ்சமாக வைக்கப்பட்டிருந்தாலும் 25% அல்லது 30% ஆவது விருத்தி அடைந்திருக்க வேண்டாமா?   இது இன்று நேற்றல்ல பலவருடங்களாக என் மனதை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.

இன்னொரு வேடிக்கையையும் நீங்கள் அந்த அட்டவணையில் காணலாம். அதாவது முதல் வருடத்தில் 12%லிருந்து 18 % வரை லாபம் காட்டிய அதே நிதி 3 வது வருடம் 7%க்கும் 8 % இறங்கி விடுவதுதான். இது எப்படி? 

 சில வங்கி தொடர்பாளர்களுடன்  பேச்சு வாக்கில் நான் அறிந்து கொண்டது   தங்களுடைய நிறுவன செலவுகள் ( Administrative &Marketing expenses) போக இருக்கும் லாபத்தையே  பங்கு போட முன் வருகின்றனர் என்பதாகும். 

அதாவது நிறுவனச் செலவு எவ்வளவு %  இருக்க வேண்டும் என்பதில்   Reserve Bank, SEBI போன்ற  நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை என்ற நிலைதான் இன்று நிலவுகிறது.  எல்லா பரஸ்பரநிதி  நிர்வாக நிறுவனங்களும் பொடி எழுத்துகளில் Investment risk is subject to market conditions என்று எழுதி தம்மை பாதுகாத்துக் கொள்கின்றன.

அதாவது செலவு கணக்கைக்  கூட்டி லாபத்தை குறைப்பது ஒரு வியாபார தந்திரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.  நம்மூர் வழக்கு மொழியில் சொல்வதானால் இது ஒரு கூட்டுக் களவாணித் திட்டம்.

”உண்மையில் எவ்வளவு லாபம் ஈட்டினேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் நஷ்டம் வந்தால் அது உன் தலையெழுத்து” 


தேவையான கட்டுப்பாட்டு செயல்முறை என்னவென்றால் பங்கு சந்தை குறியீட்டிற்கு ( BSE  NSE Index)  60 % முதல் 70% க்கு குறையாமல்  டிவிடெண்ட் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்ட ரீதியாக வலியுறுத்தப்படவேண்டும்.  அப்படி இல்லாமல் போனால் நட்டக்கணக்கு எழுதும் கூட்டம் பெருகிவிடும்.

முதன் முதலாக Unit Trust of India இந்த பரஸ்பர நிதியை 1986 ஆம் வருட வாக்கில்  Master Share என்ற பெயரில் அறிமுகப்படுத்திய போது 10 ரூபாய் யூனிட்கள் 45 ரூபாய் வரை மூன்றாண்டு காலத்தில் வளர்ச்சி அடைந்ததை (350%) கண்டவன் என்ற முறையில் இப்போது நடத்தப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் வெறும் கண்துடைப்பு நாடகம் நடப்பதாகவே நினைக்கிறேன்.

இந்த காரணங்களால் எனக்கு Mutual Fund -ல் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லை.

முந்தைய பதிவைக் காண                   அடுத்த பதிவிற்கு

Saturday, September 21, 2019

பங்கு சந்தை என்னும் கவர்ச்சி உலகம்-2

    சென்றப் பதிவில் பங்கு சந்தையைப் பற்றிய என் கட்டுரையைப் பார்த்து முதலில் என்னிடம் கேட்கப்பட்டக் கேள்வி “நீ யாருக்காக இதை எழுதுகிறாய்?” 

       பயணக்கட்டுரைகளை பலர் எழுத நாம் படிக்கிறோம். இதில் அவர்களுடைய அனுபவங்களை புரிந்து கொள்ளவும், போகின்ற இடத்தில் சந்திக்கக் கூடிய எதிர்பாராத  பிரச்சனைகளையும், அங்கே இன்னது கிடைக்கும் அல்லது கிடைக்காது என்கிற விவரங்களை தெரிந்து கொள்ளவும் முடிகிறது. அதனால் ஓரளவு நம் மனநிலையை தயார் படுத்திக் கொள்ளலாம். சில சமயம் சொல்பவருடைய அனுபவம் நன்றாக இருந்தால் நாமும் ஒரு தடவை போய்விட்டு வரலாமே என்று தோன்றும். மோசமாக இருப்பின் ‘ஐயோ வேண்டாம்’ என்று தோன்றும். ஆர்வமுள்ளவர்கள் பலருடைய அனுபவங்களைக் கேட்டுத் தானாக ஒரு முடிவுக்கு வருவார்கள்.

என்னுடைய அனுபவத்தையும் புரிதலையும் அப்படிப்பட்ட ஆர்வமுடையவர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இதுவும் ஒரு அனுபவம். முடிவல்ல. இங்கே சொல்லப்படும் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகள் நிச்சயம் இருக்கும்.  சரி தவறு என்று ஏதும் கிடையாது. மேலும் தவறுகளை சரி செய்து கொள்ள வாய்ப்புகள் எப்போதும் உண்டு.

     இந்த பதிவுகளில்  பங்குச் சந்தையை நான் எப்படி அணுகுகிறேன் என்பதை மையமாக வைத்து உங்கள் கருத்துகளுடன்  ஒப்பிட்டுக்  கொள்ளவும்.

    சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். நம்மிடம்  ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்ய சேமிப்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

       என்னைப்போல் சாமானியன் முதலில் பார்ப்பது பாதுகாப்பான வங்கி வைப்புநிதி ( Fixed Deposit).  இதில் வருடத்திற்கு 7 முதல் 7.6 சதம் வட்டி கிடைக்கும். அதாவது ஒரு லட்சம் என்பது ஒரு வருட இறுதியில் ரூ 7600 வரை ஈட்டும்.  அஞ்சல் சேமிப்பிலும் ஏறக்குறைய அதே அளவு தான் இருக்கும். ஏனெனில் இவை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுபவை.

        இந்நிலையில்,  நம் பொருளாதாரத்தின் பணவீக்கம்  5% என்று வைத்துக் கொண்டால் நம்முடைய நிகர வருமானம் ரூ 2600/ மட்டுமே. அதாவது சென்ற வருடம் ரூ 1 லட்சத்திற்கு வாங்கிய பொருளின் இன்றைய விலை ரூ 1லட்சத்து ஐந்தாயிரம். என்னுடைய வாங்கும் திறன் குறைந்து விட்டது.  அதற்கு அடுத்த வருடம் அது 1 லட்சத்து ஐயாயிரத்து இருநூற்று ஐம்பதாகும். அப்போது நிகர வருமானம் 2350 ஆகக் குறையும்.  கவலைக்குரிய விஷயம் இது தான்.

  நான் ஒரு  வங்கியின் அறிவுரைப்படி  தொடர் வட்டியில் (Compound interest) வைத்தால் அதன் மதிப்பு ரூ.125518 ஆக  மூன்று வருடங்களில் வளர்ச்சியுறும்.

இதையே பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால்?   இதை எப்படி அறிவது?

இதற்கு சென்செக்ஸ் என்ற குறியீட்டை பயன்படுத்துகின்றனர். இது 50 அல்லது 100 மிக அதிகமாக விற்பனை பரிவர்த்தனையில் கைமாறிய பங்குகளின் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு கணிக்கப்படுகிறது.   மும்பை சந்தையில் 2019 மார்ச் மாதத்தில் இந்த குறியீடு 38762 ஆக உள்ளது.  இதுவே மூன்று வருடங்களுக்கு முன்பு ( 2015-16)-ல் 25341 ஆக இருந்தது.  இதை எளிமைப்படுத்திச் சொன்னால் 52.9% சதவீத வளர்ச்சி.


    இதன்படி நம்முடைய முதலீடான ஒரு லட்சம் ரூபாய் 152900 ஆக வளர்ந்திருக்கும்.  வளர்ச்சி வேகம் வருடத்திற்கு 17.6 %  ஆகிறது. இது வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட 10% அதிகம்.

   [மும்பை பங்குச் சந்தை குறியீடு போலவே தேசிய பங்கு சந்தை குறியீடு என்றும் ஒன்றுள்ளது. இது ஒரு தனி அமைப்பு.  இவர்கள் குறியீடு ஏப்ரல் 2016 -ல் 7713 ஆக இருந்து 2017 மார்ச் மாதத்தின் இறுதியில் 8592 ஆக முடிந்தது. அதுவே 11570 ஆக 2019 மார்ச் இறுதியில் வளர்ந்தது. இதன்படி மூன்று வருடங்களில் 50 % வளர்ச்சியாகும்  நம்முடைய முதலீடு ரூ.150000 ஆகியிருக்கும்.]

    ஆனால் இது தனிப்பட்ட சிறு முதலீட்டார்களுக்கு அப்படியே பொருந்தும் என்று சொல்ல முடியாது.  ஒருவேளை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் அல்லது குறைந்தும் போகலாம். அது அவர்கள் வைத்திருக்கும் கம்பெனிகளின் தனிப்பட்ட அன்றைய  சந்தை மதிப்பைப் பொறுத்தது.

அப்படியானால் நல்ல கம்பெனிகளை தேர்வு செய்வது எப்படி?

   நம் போன்ற சாமானியர்களுக்கு எளிதாகும் வகையில் எல்லா பெரிய வங்கிகளிலும் முதலீடு  செய்வதற்கு பல வகைகளில் உதவுகின்றனர்.

இதில் மியுட்சுவல் ஃபண்ட், காப்பீட்டுடன் கூடிய முதலீடு என்பவையும் அடக்கம்.  இவற்றைப் பற்றி என் பார்வையை அடுத்த பதிவில் காண்போம்.

முந்தைய பதிவை படிக்க                                                 அடுத்த பதிவை படிக்க


Friday, September 20, 2019

பங்கு சந்தை என்னும் கவர்ச்சி உலகம்

    பங்கு சந்தை வீழ்ச்சி, ஒரே நாளில் 1200 கோடி நட்டம் என்றெல்லாம் படிக்கிறோம், தொ(ல்)லைக் காட்சிகளில் விவாதங்களைக் கேட்கிறோம். இவை ஏதோ அரசாங்கத்தின் தடுமாற்றம் போலவோ அல்லது சர்வதேச வாணிக ஏற்ற இறக்கத்தாலோ ஏற்படுவன போல் காரணங்களைத் தேடுவார்கள்.

    இதில் செலவிடப்படும் மனிதநேரம் (Man hours) சினிமாவிலும் அரசியல் விவாதங்களுக்கும் செலவிடப்படுவதில் சற்றும் சளைத்தது அல்ல.

    சற்று உற்று கவனித்தால் இது ’உழைக்காமல், விரைவாக சம்பாதிக்க நினைக்கும் கூட்டத்தின் உரத்த குரல் தானே தவிர வேறொன்றும் பெரிதாக இல்லை.  சூதாட்டத்தில் பணத்தை கட்டி விட்டு தவிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

      இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது போல மத்தியதர வர்க்கத்தினரும் எளிய வர்க்கத்தினரும் இந்த வலையில் விழுவது தான். உண்மையில் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள்தான்.  அவர்கள் பெயரைச் சொல்லி முதலைக் கண்ணீர் வடிக்கும் கும்பலின் ஓலம்தான் நாம் தொலைக் காட்சியில் காண்பது.


( picture coutesy : https://tradebrains.in/stock-market-memes/)
    மேற்கண்டவை என் கருத்து மட்டுமல்ல பல விவரம் தெரிந்த நிபுணர்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள் கருத்தும் கூட.

இது நாணயத்தின் ஒரு பக்கம். மறுபக்கம் என்ன?

     உழைப்பினால் சேமித்த பணத்தை சும்மா வைத்திருக்கூடாது.  காலம் செல்லச் செல்ல அதன் மதிப்பு குறைந்து கொண்டே போகும். இதையே பணவீக்கம் என்கின்றனர்.  இந்த பண வீக்கத்திலிருந்து காத்துக் கொள்ள காலங் காலமாக நம் முன்னோர்கள் கண்ட வழி தங்கமாக மாற்றி வைத்துக் கொள்வது.

   தொழிற்சாலை உற்பத்தியும் வர்த்தகமும் பெருகப் பெருக அதன் வளர்ச்சியும் பங்கு விலையும் ஏற்றம் காண்கின்றன. ஆகையால் இது ஒரு விதத்தில் நல்ல முதலீடே. நம்முடைய சேமிப்பை பணவீக்கத்திலிருந்து காப்பதுடன் தங்கத்தைப் போல் கட்டிக் காக்க வேண்டியசங்கடங்கள் இல்லை என்பது இன்னொரு சாரார்.

  இது உண்மையில்லாவிட்டால் பங்குச் சந்தை என்பது இத்தனை வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்ற நிஜத்தையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.   ஓரளவு  நம்முடைய தேவைகள் ( உணவு, உடை, வீடு, இதர பொறுப்புகள் ) பூர்த்தியான பின் உபரி சேமிப்பை எங்கே முதலீடு செய்வது என்பதிலே தான் ஓய்வு பெற்றவர்களின் கவனம் எல்லாம். அவர்களை முதலில் ஈர்ப்பது இந்த பங்கு சந்தையே.

    ஏனெனில் இவர்கள்தான் உண்மையிலே  சேமிப்பை இழக்காமல் கவனமாக பாதுகாத்து செலவழிக்க வேண்டியவர்கள்.
     இப்படித்தான்  முப்பது வருடங்களுக்கு முன் என் மாமனார் ஓய்வு பெற்ற பின் கிடைத்த  ஒரு பகுதி சேமிப்பை நண்பர்கள் பலருடைய சிபாரிசின்படி ஏகப்பட்ட  கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். அப்போது Demat,  Online trading, என்பனவெல்லாம் கிடையாது. அங்கங்கே பங்கு தரகர்களின் சிறிய சிறிய அறைகளில் அமர்ந்து சந்தையின் ஏற்ற இறக்கங்களை சிலாகித்து  சில முதலீட்டு கம்பெனிகளின் திட்டங்கள் பற்றிய செய்திகளையும் விவாதித்து விற்பனை அல்லது கொள்முதல் முடிவு செய்யப்படும். இது டீக்கடை பெஞ்சு சமாச்சாரம் தான். பெரும்பாலும் கற்பனை உலகம். அவரவர்களும் கண் வைத்து காது வைத்து தமக்குத் தோன்றுவதை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

      அப்போது அவருடைய சில முதலீடுகள் நல்ல நிலையில் இருந்ததால் எனக்கும் சிபாரிசு செய்தார். நல்ல வேளை, என்னிடம் சேமிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. மேலும் பெரியவர்கள் பேச்சிற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ.பத்தாயிரம் அவருக்கு அனுப்பி அவருடைய மகள் பெயரில் (என் மனைவி) அவர் உசிதம் என்று நினைக்கும் கம்பெனிகளில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். இதில் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

   ஒரு சில ஆண்டுகள் கழிந்தன. ஹர்ஷத் மேத்தா, கேதன் ஃபரீக் போன்றவர்களின்  சூறவளி சூதாட்டம் பங்கு சந்தையில் வந்து போனது.  அவர்கள் கொடுத்த படிப்பினையின் பேரில் SEBI கண்காணிக்கும் முறை வந்தது.  அதைத் தொடர்ந்து  கணினியுகம் வந்து பங்கு சந்தையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் சந்தையில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதெல்லாம் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.

  அதற்குள் என் மாமனார் கணிசமான தொகையிழந்து தம்முடைய பங்குகளையெல்லாம் விற்று இனி பங்கு சந்தை பக்கம் படுக்க மாட்டேன் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.  இதில் தன் மகள் பெயரில் இருந்த என்னுடைய முதலீடுகள் பலவற்றையும் விற்று விட்டார். சிலவற்றை விற்க முடியாமல் விட்டு விட்டார்.

   விற்க முடியாமல் நின்று போன பங்குகளுக்காக  SEBI -ன் கட்டாயத்தினால் என் மனைவி பெயரில் ஒரு DEMAT கணக்கு துவக்கினேன். ஆன்லைன் வசதிகள் காரணமாக அவ்வப்போது   அவற்றின் சந்தை விலையை கவனிக்க ஆரம்பித்தேன்.  என்ன ஆச்சரியம்! கைவிட்டுப் போனவை என்று கருதப்பட்ட அந்த பங்குகளின் விலை இன்றைக்கு லட்ச ரூபாய்க்கும் மேலே. எனக்கு பிற பங்குகள் மூலம் வந்த லாப நட்டக் கணக்குப் பிடிபடவில்லை. ஆனால் இந்த சில பங்குகள் மூலமே அன்றைய முதலீடு நேராக்கப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன்.

    வங்கி அல்லது அஞ்சல்துறை  வைப்புநிதியானால் ரூ. 10000  இருபதாயிரம் ஆவதற்கு குறைந்தது 8 முதல் 10 வருடம் வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இந்த முப்பது வருடங்களில் ரூ. 50000 ஐ தாண்டமுடியாது. ஆகவே ரூ. ஒரு லட்சம்  என்பது நிஜமாகவே கணிசமான வளர்ச்சிதான். அந்த குறிப்பிட்ட கம்பெனிகளும் பல ஏற்ற இறக்கங்களுக்கு இடையே  தொழில் வளர்ச்சி கண்டிருந்தன.

ஒரு உண்மை உறைக்கத் துவங்கியது.  பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சி காண வேண்டுமானால்  அவசரப்படக்கூடாது.  குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினர் இதை ஒரு நெடுங்கால முதலீடாகக் கருத வேண்டுமே அன்றி  குறுகிய காலத்தில் அதிக லாபம் என்று இறங்கக் கூடாது.

அதே சமயத்தில் சற்று கவனுத்துடன் செயல்பட்டால் வங்கிகளின் வைப்பு நிதி விகிதத்தை விட சற்று அதிகமாகவே ஈட்ட முடியும் என்று தோன்றியது. அடுத்த பதிவில் இதைப் பற்றி பலரின் அணுகு முறை என்ன என்பதைக் காண்போம்.  இதில் என் அனுபவத்தைக் காட்டிலும்  பிற அன்பர்களின் பரிந்துரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். என்னுடைய ஒப்பீடுகளும் இடம் பெறும்.

ஏனெனில் என்னுடைய அனுபவத்தை  பதிவு செய்ய மேலும் சில வருடங்கள் தேவைப்படுமே !!

 ( cartoon courtesy tf india.in )

அடுத்த பகுதி

Tuesday, August 27, 2019

ஜோடி சோபா Fevicol கதையும் என் கதையும்.

Great minds think alike !

  ஒரு ஜோடி நாற்காலியின் கதை என்று நான் எழுதிய கதை ஒன்றை  வருத்தப் படாத வாலிபர் சங்கம் இரண்டாம் ஆண்டு வலைப்பூ போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.  போட்டியின் முக்கியமான கண்டிப்பு ‘ஜோடி’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப் படவேண்டும். அது எந்த ஜோடியாக வேண்டுமானாலும் இருக்கலாம்...காதல்ஜோடி, செருப்பு ஜோடி இத்யாதி.

     பரிசு எதுவும் கிடைக்கவில்லை. போகட்டும், அதை பரிசுக்காக நான் எழுதவும் இல்லை. வெறும் என் கற்பனைத் திறனுக்கு ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டேன்.

இது நடந்தது 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்.  பதினொரு ஆண்டுகளுக்குப்பின்......

நேற்று ஒரு தொலைக்காட்சி சானல் ஒன்றில்  Pidilite-Fevicol  நிறுவனத்தின் புதிய  விளம்பர படம் ஒன்றைப் பார்த்த போது ஆச்சரியம் மேலிட்டது.

ஏனெனில் அவர்கள் எடுத்துக் கொண்ட கருவும் ஜோடி சோபா-தான். பல தலைமுறைகளுக்கு உழைக்கும் வகையில் ’பிடிலைட்’  சோபாவை உறுதியாக வைத்திருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவர்கள் படத்தில் காட்டுவது போல் என் கதையிலும் குழந்தைகள் சோபாவில் ஏறி விளையாடுவதைச் சொல்லியிருந்தேன்.

ஏன் அவர்கள் ஜோடி சோபாவை தேர்ந்தெடுக்க வேண்டும்?  அதை அவர்கள் திருமண சீதனமாகக் காட்டியிருக்கிறார்கள்.

என் கதையிலும் அது  திருமண வரவேற்புகளில் அதிகம் பயன்பட்டதாகச் சொல்லியிருந்தேன்.

என் மனதில் அந்த விளம்பரத்தைப் பார்த்த போது சந்தோஷம் கலந்த ஆர்வம். அருமையான படபிடிப்பு, பாடல் இசையமைப்பு. யூட்யூபில் நான்கு நாட்களிலேயே 66000க்கும் அதிகமான பார்வையாளர்கள் 113 க்கும் அதிகமான பாராட்டுகள்.  நீங்களும் கண்டு மகிழுங்கள்.


    இதிலிருந்து ஒன்று புரிகிறது. நமது எண்ண அலைகள் என்றும் மடிவதில்லை. நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு எண்ணமும் அதற்கேற்ற ஒரு கருவியை கண்டால் வெளிப்படுகிறது. எனக்குத் தோன்றிய கதைக் கருவும் யாரால் எப்போது எங்கே வெளிப்பட்டதோ தெரியாது.

    ஆனால் நான் என் கற்பனையில் எழுதியதாக நினைத்தேன்.  அதே போல் இந்த படம் எடுத்தவர்களும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

இதைத் தான் சுவாமி விவேகானந்தர் “பெரும் தவசிகள் யாரும் காணாத குகைகளில் அமர்ந்து கொண்டு சமுதாயத்திற்குத் தேவையான ஆழமான சிந்தனைகளை தமக்கேற்ற கருவிகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்” என்று சொல்கிறாரோ என்னமோ ! இதற்கிடையில் மனிதர்கள் வெளிப்படுத்தும் நல்ல தீய எண்ணங்களும் அவைகளுக்கேற்ற திறனுக்கேற்ப பலன்களை விளைவித்துக் கொண்டிருக்கும்.

எண்ணங்களின் வலிமை அபாரம். நல்லனவற்றையே சிந்திப்போம், வெளிப்படுத்துவோம்.

Wednesday, February 20, 2019

டிவிட்டர் என்னும் பறவையுலகம்

பெரிய மரங்களின் அடியில்  அந்தி சாயும் வேளைகளில் அமர்ந்திருக்கும் போது பறவைகளின் கீச் கீச் என்ற சத்தம்  அந்த பகுதியையே உயிரோட்டமுள்ளதாக மாற்றும். நல்ல வேளை அவைகளின் மொழி நமக்கு புரிவதில்லை. தெரிந்தால் இப்போதுள்ள டிவிட்டர் உலகம் போலத் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

சமூகத் தளங்கள் எனப்படும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போல டிவிட்டரும் ஒரு சமூகத் தளம். யார் யாருடன் வேண்டுமானாலும் கருத்து பகிரலாம் இருவரும் டிவிட்டர் கணக்கு வைத்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.

எனக்கு 2009 லிருந்தே டிவிட்டர் கணக்கு இருப்பினும் அதை வெறும் என் பதிவுகளை பிறருக்கு தெரிவிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தேன். எனக்கு குறைவான அரசியல் ஆர்வக் காரணமும் அங்கே எழும் அர்த்தமற்ற விவாதங்களும் என்னை விலக்கியே வைத்தன.

சமீபத்தில் நண்பரொருவர் ( எதிர்வீட்டுக்காரர்- 10000 அதிகமான Followers) தூண்டி விட்டதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று டிவிட்டர் தளத்திற்கு அடிக்கடி வந்து புரட்ட ஆரம்பித்தேன். பலருடைய கீச்சுகளை (tweets) படித்த பின் அவ்வப்போது  எனக்குள் எழும் எண்ணங்களை அவர்களுக்கு பின்னூட்டமாக இட ஆரம்பித்தேன்.  இதில் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பது புரிந்தது.

மழையும் சகதியும் நிறைந்த குறுகிய பாதையில் கண் மண் தெரியாமல் வண்டி ஓட்டுபவர்கள் பாதசாரிகள் மேல் தெரிக்கின்ற சேற்றைப் பற்றி கவலைப் படாமல் போவது போலத்தான் இந்த சமூகத்தளம். யார் யாரைப் பற்றியும் எப்படியும் கருத்து சொல்லலாம். அதிலுள்ள நியாயத்தையோ அநியாயத்தையோ சுட்டிக் காட்டப்போனால் தூள் பறக்கும். பலர் முகமூடிகளுடன் திரிவதால் நாகரீகமற்ற  சொற்களையும் பயன்படுத்தத் தயங்குவதில்லை. இதை trolling என்று சொல்கிறார்கள். அதனால் நீங்கள் எப்பொழுதுமே தெரிந்தவர்களுடனேயே இருப்பது நல்லது.  சுதந்திரப் பறவை என்று நினைத்து சுற்றிவரப் போனாலோ எங்கிருந்து எப்போது கல் பறக்கும் என்று தெரியாது.

உதாரணத்திற்கு ஒரு அம்மையார் யாரையோ பற்றி ஆங்கிலத்தில் விமரிசிக்கும் போது  “மூதேவி!” என்று ஆரம்பித்து தன் கருத்தை சொல்லி இருந்தார். பெரும்பான்மையான தமிழரல்லாத வாசகர்களுக்கு அதன் பொருள் என்னவென்று விளங்காததால் அப்படி என்றால் என்ன? என்று கேட்டிருந்தனர். அவர் எவருக்கும் பொருள் சொல்லாத காரணத்தால் நான் வட இந்திய அன்பருக்கு உதவட்டுமே என்று ”தமிழில், கோபத்தின் போது சொல்லப்படும் ஒரு வசவுச் சொல். துரதிரிஷ்டம் தரும் பெண் என்ற பொருளில் மந்தபுத்தி உடைய மகளையோ வேலைக்காரியையோ அல்லது அண்டை வீட்டுப் பெண்மணியையோ ஏச்சும் சொல்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

ராக்கெட் வேகத்தில் அந்த அம்மையாரிடமிருந்து பதில் வந்தது. ”என்னவொரு அபத்தமான விளக்கம்! யாராவது வேலைக்காரியை மூதேவி என்பார்களா? Rubbish racist ! ..... என்று ஆரம்பித்து மூதேவி பாற்கடலில் ஆலாஹல விஷத்துடன் தோன்றியவள் என்று விளக்கம் கொடுத்து  she is ”embodiment of laziness and misfortune" என்று முடித்திருந்தார்.

இவருடைய பதில் எவ்விதத்தில் நான் குறிப்பிட்ட பேச்சு வழக்கை தவறு என்று காட்டியது என்று புரியவில்லை. என்னுடைய கிராம வாழ்க்கையில் பலர் பல சந்தர்பங்களில் மூதேவி, சனியனே, சண்டாளா, கட்டையல போறவனே ....(இன்னும் பலவுண்டு) சொல்லிக் கேட்டிருக்கிறேன். இவர் கேட்காத பட்சத்தில் நான் Racist  ஆகி விட்டேன் ! அப்படியானால் இதை  அவர் டிவிட்டரில் எந்த பொருளில் பயன்படுத்தினார்? வேலைக்காரி அல்லாத எவரையும் மூதேவி என்று திட்டலாமா??  எனக்கு முன்பு, தானே அந்த விளக்கத்தை கேட்பவருக்குக் கொடுத்திருக்கலாமே, ஏன் கொடுக்கவில்லை?

எதற்கு சொல்ல வந்தேன் என்றால் இப்படி தம்மை தாமே மிக உயர்வாக நினைத்துக் கொண்டு கீச்சுபவர்கள் ஏராளம்.  சேறு நம் மேல்தான் வீசும்.

இன்னொரு வகை உண்டு. அடுத்தவர்களின் கீச்சுகளை அப்படியே நகலெடுத்து தம்முடையது போல் காட்டிக் கொள்பவர்கள். இவர்கள் அதை மொழிமாற்றமோ அல்லது மீள் கீச்சோ (Retweet) செய்யாமல் தன் சொந்த எண்ணத்தை பதிவிடுவதாகக் காட்டிக் கொள்வார்கள். கீழே ஒரு உதாரணம்.
(படத்தை சுட்டினால் முழுவதும் படிக்கலாம்)

இப்படி போலிமுகங்கள் மிக அதிகம் டிவிட்டர் உலகில்.  அதனால் தான் நான் அதிகம் யாரையும் பின் தொடர்வதில்லை. என்னைத் தொடர்பவரின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலையும் இல்லை. இப்பொழுதெல்லாம் மிக தேர்ந்தெடுத்த சில கேள்விகளுக்கு ( அது யாரிடமிருந்து எழுகிறது என்பதைப் பார்த்து) என்னுடைய மனதில் நியாயம் எனப்பட்டதை பதிவு செய்கிறேன்.

அப்படி பதிவு செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என்ற கேள்வி எழலாம். ஒவ்வொரு கருத்தும் ஒரு விதை போல. அது பழத்தை தின்ற பறவையின் எச்சத்தில் விழும் விதை எந்த மண்ணில் எப்போது முளைக்குமோ தெரியாது. நல்ல கருத்துகளை தெரியப்படுத்த சமூக வலைத்தளம் ஒரு நல்ல சாதனம்.

அது போலவே இன்றைய ஊடகங்கள் செய்யும் தவறான பிரச்சாரங்களையும் அரைவேக்காட்டு உண்மைகளையும் மிக மிக விரைவாக தோலுரித்து காட்டிவிடுகின்றனர். உதாரணம் ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்த ரஃபேல் விவகாரத்தில் கத்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ராணுவ ஆவணம்  எப்படி தவறானது என்றும் பொய் பிரச்சாரத்தில் அது ஈடுபட்டுள்ளது என்பதையும் டிவிட்டர் மக்கள் வெளிக்குக் கொண்டு வந்தனர். ஆகவே இன்று பத்திரிக்கைகளையும் தொலைக் காட்சிகளையும் நம்புவதை விட நாமே சமூக வலைத் தளங்களுக்கு சென்று உண்மையை கண்டறிய வேண்டும்.  ஆனால் அதற்கு நம்பத் தகுந்தவர்களை மட்டுமே பின் தொடர வேண்டும்.

டிவிட்டர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தவறான வதந்திகளை மிக வேகமாக பரப்புகிறது என்பவற்றை பற்றி சட்ட ஒழுங்கு பிரச்சனை கண்ணோட்டத்துடன் கவலை எழுந்திருக்கிறது. இதைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

டிவிட்டர் உலகில் பிழைக்க வேண்டுமானால் பாதசாரியாக நடந்து செல்லக் கூடாது. பறவை போல பறக்கத் தெரிய வேண்டும். நீங்கள் பருந்தாகவோ ஆந்தையாகவோ இருந்தால் பரவாயில்லை. தனிக் குருவிக்கு கஷ்டந்தான்.