Saturday, October 15, 2016

நலம் தரும் இதை வாசி, சுருள்பாசி- தாய் சேய் நலம்

சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சுருள்பாசியை ( Spirulina) பற்றிய பதிவை இன்றும்  அதிகப்படியான வாசகர்கள் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூகிள் சேவை மூலம் அறிந்து கொண்டேன்.

அப்படி இருக்கும் போது அதைப் பற்றிய மேற்கொண்டு விவரங்களை பதிவு செய்தால் பலருக்கும் நன்மை அளிக்குமே என்ற எண்ணத்தில்  எழுந்ததுதான் இந்தப்பதிவு.  இதில்  தாய் சேய் நலத்திற்கு  சுருள்பாசி  எப்படி பயனளிக்க வல்லது என்பதை காண்போம்.



சுருள்பாசியின் ஊட்டத்தன்மை  முட்டை பால் இவைகளைக் காட்டிலும் மிக அடர்த்தியானது. அதாவது ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் என்றால் 200 மிலி பாலிலும் கிட்டத்தட்ட அதே அளவு புரதம் இருக்கும். இந்த அளவு புரதச் சத்தை பெறுவதற்கு பத்து கிராம் சுருள்பாசியை உட்கொள்ள வேண்டும்.

அதே சமயம் புரதச் சத்தினோடு வேறுபல ஊட்டச் சத்துகளை மிக அதிக அளவில் அளிக்கவல்லது சுருள்பாசி. இதை கீழே உள்ள படத்தில் காணலாம்.


ஒரு கிராம் புரதத்தைப் பெறும் அதே நேரத்தில் விட்டமின் -ஏ, விட்டமின்-பி யை சேர்ந்த நியாஸின், ரைபோஃபேளிவின், தையமின், ஸைனோகோபாலமைன் (B12), போன்றவை சுருள்பாசி மூலம் எவ்வளவு அதிகம் பெறப்படுகிறது என்பதை கண்டு அறியலாம். அதனால் தான் இதை ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகம் காணப்படும் கிராமத்துக் குழந்தைகளுக்கு  Department of Biotechnology மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 91 பாலவாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்டது.   இதை மூன்று தனித்தனி மருத்துவர் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று அரசு மருத்துவப் பிரிவு, ஒன்று சென்னையைச் சேர்ந்த மருத்துவ கல்லூரியைச் சேர்ந்தக் குழு மூன்றாவது மதுரையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த  தனியார் மருத்துவக் குழுக்களாகும்.  இது 1990-91 ஆம் ஆண்டு  முருகப்பா ஆராய்ச்சி மையத்தின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது.

இவற்றின் அடிப்படையில் கண்ட உண்மை,  குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு பலமடைந்து அவர்கள் ஆரோக்கியமாகவும் முறைப்படி எடைக் கூடுவதையும் உறுதி படுத்தியது.

அதே போல் கருத்தரித்திருக்கும் தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிராம் சுருள்பாசி கொடுத்து வருவது மூலம் குறைப் பிரசவம் இல்லாமல்  நல்ல ஆரோக்கியமான எடையுடன் குழந்தைகள் பிறப்பதை ஹைதிராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து  விஞ்ஞானக் கழகம் ( National Institute of Nutrition) 2001 ஆண்டு கண்டறிந்தது. இதற்காக அவர்கள் கீழ்த்தட்டு குடும்பங்களில் 120 தாய்மார்களுக்கு  கொடுத்து, சுருள்பாசியை உட்கொள்பவர்களுக்கும்  கொள்ளாதவர்களுக்கும் உள்ள வித்தியாசம்  வெகுவாகவே கண்டறிய முடிகிறது என்று முடிவை சமர்ப்பித்தனர். அந்த முடிவின் படி பிறக்கின்ற சிசுவின் எடை சராசரி 280 கிராம் அதிகம் உள்ளதாகவும்,  குறைபிரசவம் 27% லிருந்து 4 % க்கு குறைந்து இருப்பதாகவும் கண்டு வந்தது.

மேலே காண்பது அவர்களின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிகளின் முடிவு. ( படத்தை சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்)

இப்படி பல நிலைகளிலும் பரிசோதிக்கப்பட்டு வெகுவாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ஊட்டச்சத்து முன்னேற்றம் சுருள்பாசியை வளர்ப்பதன் மூலம் கைகூடும் என்ற எண்ணம் அரசாங்கங்களிடையே  பலப்பட்டு வருகிறது.

2 comments:

Geetha Sambasivam said...

அரிய தகவல்களுக்கு நன்றி.

KABEER ANBAN said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி, கீதா மேடம்.