Monday, April 30, 2012

பிறவிக்கடன் என்பது என்ன ?

பிறவிப்பிணி எதனால் வருகிறது? 

நமது தீர்க்கப்படாத ஆசைகள் என்பது பொதுவான எண்ணம்.
நாம் தீர்க்க வேண்டிய சில பழைய பாக்கிகளும் நமக்கு பிறவியைத் தரக்கூடியது என்ற நம்பிக்கையும் ந்ம்மிடையே உண்டு.

ஒரு சிலர் பத்து பைசா இருபது பைசா போன்ற மிகச் சிறியத் தொகையைக் கூடக் கறாராகக் கணக்குப் பார்த்து திருப்பித் தருவார்கள். “ என்னப்பா இதையெல்லாம் கணக்குப் பார்க்கணுமா?” என்றால் “ இதுக்காக இன்னொரு ஜன்மமெல்லாம் எடுத்து வந்து செட்டில் பண்ண முடியாது, கணக்குன்னா கணக்குதான்” என்கிற பதில்தான் கிடைக்கும்.

 சில வயதானவர்கள் எதிர்பார்ப்புக்கும் அதிகமான அளவு உதவி பெறும் போது “உன்னுடைய ருணத்தை எப்படித் தீர்ப்பேனோ” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். (இ)ருணம் என்றால் கடன்.
அந்த உணர்வின் அடிப்படையில் எழுந்த ஒரு மக்குதிம்மன் பாடலின் பொருள் :

அன்னத்தை உட்கொள்ளும் போது கேட்டுக் கொள்; அதை வேக வைத்த நீர் |  உன் உழைப்பின் வியர்வையோ, பிறரது கண்ணீரோ  
தின்பாய் நீ, செகத்திற்கு தின்னக் கொடுத்ததை நிதமும். மிகுதியாகத் தின்றது  ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி - மக்குத்திம்மா

 தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான் என்கிற விதி நினைவூட்டப்படுகிறது. பிறரை ஏமாற்றி அல்லது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் தராது அவரது உழைப்பில் பயனடைந்தவர்கள் அதையும் ஒரு காலத்தில் தீர்க்க வேண்டிவரும் என்பதை “ ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி “ என்று  DVG குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

உழைப்பின் முதற்பயன் உணவு பெறுதல். அதை ஒரு பொழுதும் கைவிட முடியாது.

எத்தட்டு மக்களாயினும் உணவு உண்ணுகையில் தான் உணவு ஈட்டிய வழியை நினைத்துக் கொள்வது ஆத்ம சோதனைக்கு  வழி வகுக்கும். அதுவே  அவரது ஆன்மீக முன்னேற்றத்திற்கான பாதை.

உலகில் தான தர்மங்கள் செய்யாமல் போக வாழ்க்கையை நடத்துவது  மிகுதியான உணவு உட்கொள்வதற்கு ஒப்பாகும். அதை செரித்துக் கொள்ள முடியாது.  அதை ”ஜீரணிக்க முடியாத மிச்சம் ” என்று  DVG உருவகப்படுத்துகிறார்.

உணவை வைத்து சொல்ல வந்த கருத்தில் பொருத்தமாக ஜீரணம் பற்றியும் சொல்லிவிட்டார்! அஜீரணம் உடலுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். சமுதாயத்திற்கு தன்னால் முடியக் கூடிய கடமைகளையும் உதவிகளையும் செய்யாமல் விடுவதும் அஜீரணம். அது ஆன்மாவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கும்.

அந்தக் கஷ்டத்தை அனுபவித்துதான் கழிக்க வேண்டும் என்பதையும் பல சென்மங்களுக்குத் தொடரக்கூடியது என்பதையும் ’கடன் பாக்கி’ அல்லது ’பிறவிக்கடன்’ என்று உருவகப்படுத்துகிறார் DVG.

மொழியாக்க முயற்சி -1  
உன்னிடு உண்ணுகையில் உணவை, அது வெந்த நீரெது ? 
உன்னு  ழைப்பின் வியர்வையோ, வேறொருவர் கண்ணீரோ ?
உன்னுழைப் பளவேஉண்; செரிம மாகா மிகுதி 
இன்னல்தரும் பிறவிக் கடனாம் -மக்குத்திம்மா. 

 உன்னுழைப்பின் அளவே உண் என்பதை நியாயமான முறையில் சம்பாதித்ததை வைத்து அனுபவிப்பது என்ற பொருளில் எழுதினாலும், அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு அவர்களின் எதிர்பார்ப்புக்கு மேலேயே பொருள் குவிகிறது.

பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் உழைப்பு ஒன்றே ஆனாலும் அவர்கள் பணியாற்றும் பள்ளி அல்லது கல்லூரியின் வசதியைப் பொறுத்து அவர்களது வருமானம் பெருமளவில் வேறுபட வாய்ப்பிருக்கிறது. அதை தர்மத்திற்கு விரோதம் என்று சொல்ல முடியாது.

இதை வைத்துப் பார்க்கும் போதுதான்  DVG  ”தின்பாய் நீ, செகத்திற்குத் தின்னக் கொடுத்ததை..” என்று சொன்னதன் ஆழம் புரிந்தது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டமுள்ளவர்கள் பெரிய அளவில் தம் செல்வத்தை சமுதாய மேம்பாட்டுக்காக கொடுக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான செல்வம், 'படகுக்குள் புகுந்த நீரைப் போல' என்று கபீர் சொல்வார். அப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு கைகளாலும் நீரை வெளியே இறைப்பது போல நமக்கு இறையருளால்  வந்த செல்வத்தை பிறர் நலனுக்காக கொடுத்து விடுங்கள் என்கிறார்.  ஆச்சார்யா P.C. Ray இன் வாழ்க்கையை   இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

முயற்சி -2  
பசிகளையும் கவளம் வெந்தது உன் வியர்வையிலோ 
புசிக்கும் வேளை நினை, அது பிறன்தன் கண்ணீரோ 
இசைவதும் நீ கொடுத்த அளவே ; தின்ற மிகுதியோ 
இசித்திடும் சமியாக் கடனே -மக்குத் திம்மா 


[இசைதல்-ஏற்புடையது; இசித்தல் - இழுத்தல் சுண்டுதல்; சமி -சீரணம் ] 

மனிதனாக வாழக் கற்றுக் கொண்டால் தெய்வம் தானே தேடிவரும். மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டும் பாடல் இது.

Sunday, April 1, 2012

Gmail Tap -எடுபடுமா ?

கைப்பேசி யுகம் வந்ததிலிருந்து கடிதம் எழுதுவது என்பதே மறந்து போய்விட்டது. பெரும்பாலனவர்களின் வசிக்கும் இடம் தெரியும் ஆனால் விலாசம் தெரியாது. விசேஷத்திற்கு நேராக சென்று அழைக்க முடியாமல் போகும் போது மட்டும் “.....கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க. இன்விடேஷனை தபால்-ல போடறேன். கொஞ்சம் அட்ரஸ் சொல்றியா ?” என்று அன்பாகக் கேட்டு அழைப்பிதழை அனுப்பிய கையோடு விலாசத்தை மறந்து விடுவது வழக்கமாகி விட்டது. அதுதான் செல்போன் இருக்கே. எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம் :))

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது தந்தி வழி செய்தி அனுப்பும் முறைக்கு அடிப்படை மோர்ஸ் கோடு ( Morse code)என்று படித்திருக்கிறோம். மின்னஞ்சல், FAX என்கிற முறைகள் வந்ததும் இந்த தந்தி அனுப்பும் தொழிலும் படுத்து விட்டது. இந்திய தபால்துறை பெரும்பாலான இடங்களில் தந்தி அலுவலகங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகின்றனர். கப்பல் வழி வணிகத்திற்கும் உலகப்போரின் போதும் உயிர் நாடியாக விளங்கிய மோர்ஸ்-குறிமுறை இனி வரலாற்றில் படிக்க வேண்டிய ஒன்று என்று நினைத்தால் அது தவறாகும்.

கூகுள் இப்போது அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்திருக்கிறது. அவர்களது நோக்கம், கைப்பேசியில் இருக்கும் ஆங்கில எழுத்துகளுக்கான பொத்தான்களைத் தேடித் தேடி இயக்குவதற்கு பதிலாக dot & dash முறையில் இரண்டு பொத்தான்களின் துணையோடு space bar யும் பயன்படுத்தி வேகமாக தட்டச்சு செய்யமுடியும் என்கிறது.



இதற்கான மென்பொருளை ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் கைபேசிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறது கூகிள்.
ஆனால் அந்த மோர்ஸ்-குறிமுறை யைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவர்கள் குறிப்பிடுவது போல் சுலபமாக இருக்க முடியுமா என்கிற சந்தேகமே அதிகமாகிறது. படத்தைப் பார்த்தாலே மலைக்க வைக்கிறது. DAD என்கிற மூன்றெழுத்துக்கு எட்டு முறை பொத்தானை அழுத்த வேண்டும் !! பின் வேகம் எப்படிக் கூடும் ?

எலக்டரானிக் டிஜிடல் கடியாரங்கள் வந்த புதிதில் நகரும் முட்கடியாரங்கள் செத்து ஒழிந்து விடும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் அந்த முட்கள் இல்லாமல் காலமே நகராது என்று நம்பும் அளவுக்கு அவை இன்னும் நிலைத்து நிற்கின்றன. சாவி கொடுக்கும் தொந்திரவு,பாட்டரி இயக்கத்தால் ஒழிக்கப்பட்டதலோ என்னவோ பொதுவாக இக்காலத்து முட்கடியாரங்கள் மிகவும் தரமானவைகளாக இருப்பதாலும், வெகுநாட்கள் பழுது இல்லாமல் செயல்படுவதாலும் இருக்கலாம். ஆனால் எளிமையாக எண்களைப் பார்த்தே நேரம் அறிந்து கொள்ள வசதி வந்தும் ஏன் முட்கடியாரங்களை துறக்க மனிதர்களுக்கு மனம் வரவில்லை ?

புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டுமென்றால் கற்றுக் கொள்வதற்கான நேரம், எளிமை இரண்டும் மிகவும் பொருந்தி வரவேண்டும். மோர்ஸ்-குறிமுறை இந்த இரண்டு விஷயத்திலும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
எனவே எத்தனை நுகர்வோர்கள் மோர்ஸ் முறைக்கு மாறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.