Sunday, August 21, 2011

பிழைப்பு, வாடகை வண்டி !

மும்பை நகருக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னமும் கம்பெனியில் பல முடிவுகள் எடுக்கப்படாமலே காலம் போய்க்கொண்டிருக்கிறது. பெங்களூர் மைசூர் என்று ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை வண்டி இப்போது இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இதுவும் எவ்வளவு நாளோ !

இந்நிலையில் என் நினைவுக்கு வருவது “நம் கையில் எதுவும் இல்லை” என்பதை சுட்டிக்காட்டும் D V குண்டப்பா அவர்களின் மக்குத் திம்மன் பாடல் ஒன்று. கர்நாடக மக்களிடையே மிகப் பிரபலமான பாடல் இது “பதுகு ஜட்கா பண்டி”. இதே பெயரில் ஒரு திரைப்படமும் வந்தது என்று நினைக்கிறேன்.

சேணம் பூட்டிய குதிரைக்கு எப்படி சுதந்திரம் இல்லையோ அப்படி நாமும் இவ்வுலகில் சிக்கிக் கொண்டுள்ளோம்.

இதை ஓட்டுபவன் விதி. அவன் தான் எசமானன்.
அந்த விதி என்கிற எசமானன் ஓட்டுகின்ற இடத்திற்கு ஓடுவது ஒன்றே நம்மால் முடிவது. நம்மை அப்படி ஓடச் செய்வது நம்முடைய பூர்வ கர்ம வினை என்னும் பயணிகள். அதன்படி சில சமயங்களில் சுப வாழ்க்கையும் சில சமயங்களில் அசுப சந்தர்பங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. குதிரைக்கு அடி பிறழ்ந்தால் கீழே விழ நேரிடும். நிலத்தின் மேல் ஓடுவதால் அந்த நிலமே அதைத் தாங்கும்.

[ குதிரைக்கு தான் போகின்ற இடத்தைப் பற்றிய கவலை இல்லை. அதை நிச்சயிக்கும் அதிகாரமும் இல்லை. அப்படி, நம்முடைய செயல்கள் யாவும் இறைவனைச் சார்ந்தது என்ற மனப்பான்மையுடன் செய்தால் பெரும் துன்பம் வந்தாலும் அவன் அருள் துணை நிற்கும் என்பது இந்த பாடலுக்கு சொல்லப்படும் பொருள்]

இதன் நேரடி மொழி பெயர்ப்பு முதலில்:

வாழ்க்கை வாடகை வண்டி, விதியதன் எசமானன்
குதிரைநீ, அனுப்பி வைப்பான் பயணியரை அவன்
மணவீடோ மசானமோ ஓடென்ற இடத்திற்(கு) ஓடு
அடி சறுக்கின் தாங்க நிலமுண்டு -மக்குத் திம்மா

பதுகு என்கிற கன்னடச் சொல் வாழ்க்கையை நடத்துகின்ற முயற்சியைக் குறிப்பதாகும். பிழைப்பு என்று கொள்ளலாம். முன்பெல்லாம் வாடகைக் குதிரை வண்டி சொந்தகாரர்களே ஓட்டிகளாகவும் இருந்தனர். மேலும் ஓட்டுபவன்தான் குதிரையின் போக்கை நிர்ணயிப்பவன். அதையொட்டி ஓட்டி என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அந்த மாற்றங்களுடன் சில சிறு மாறுதல்களுடன் என் இரண்டாம் முயற்சியும் கீழே.

இரண்டாம் முயற்சி:
பிழைப்பு வாடகை வண்டி, விதியதன் ஓட்டி
இழுக்கும் குதிரை நீ, பயணியர் அவன் இச்சைப்படி
இழுத்த இழுப்புக்கு ஓடு, மணவீடோ மயானமோ
வழுக்கி விழுந்தால், தாங்க நிலமுண்டு - மக்குத் திம்மா

4 comments:

கோமதி அரசு said...

//இதை ஓட்டுபவன் விதி. அவன் தான் எசமானன்.
அந்த விதி என்கிற எசமானன் ஓட்டுகின்ற இடத்திற்கு ஓடுவது ஒன்றே நம்மால் முடிவது. நம்மை அப்படி ஓடச் செய்வது நம்முடைய பூர்வ கர்ம வினை என்னும் பயணிகள். அதன்படி சில சமயங்களில் சுப வாழ்க்கையும் சில சமயங்களில் அசுப சந்தர்பங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. குதிரைக்கு அடி பிறழ்ந்தால் கீழே விழ நேரிடும். நிலத்தின் மேல் ஓடுவதால் அந்த நிலமே அதைத் தாங்கும். //

முற்றிலும் அனுபவ பூர்வமான உண்மை.
சில சமயங்களில் அசுப சந்தர்பங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. என் தங்கையின் குடும்பத்தில் நடந்த அசுப சந்தர்ப்பத்திலிருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இன்று தான் வந்தேன். என் மன்நிலைக்கு ஏற்ற மாதிரி உங்கள் பதிவு.
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்த்தும் பதிவு.

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம்

//...என் மன்நிலைக்கு ஏற்ற மாதிரி உங்கள் பதிவு //

கவிஞர்களின் வாக்கில் எப்போதும் ஒரு சத்தியம் இருக்கும் என்பார்கள். அதனால் அவர்களுடைய வார்த்தைகள் கண்ணாடி போல் எல்லோர் வாழ்க்கையையும் பிரதிபலிக்குமாம். நான் மும்பைக்கு வர நேர்ந்ததை மனதில் வைத்து எழுதினால் உங்களுக்கு அதே பாடல் வேறுவிதமாக பொருந்தி இருக்கிறது.
யாவும் அவன் செயல்.

மிக்க நன்றி

Geetha Sambasivam said...

மும்பை போனதில் மராட்டி மொழியின் அற்புதப் பாடல்களையும் உங்கள் மூலம் கேட்கலாம். அதிலும் நீங்கள் விற்பன்னராக ஆக வாழ்த்துகள்.

மக்கு திம்மனின் எளிமையான மேற்கோள்களுடன் கூடிய பாடல்களும் விளக்கமும் அருமை. உங்கள் மொழிபெயர்ப்பும் சுவையாக உள்ளது. குதிரை தடுமாறி விழுந்து எழுந்திருப்பது போல் வாழ்க்கையில் நாமும் அவ்வப்போது தடுமாறி விழுந்து எழுந்து இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். இறைவன் அருள் துணை கூட்டும்.

KABEER ANBAN said...

நல்வரவு கீதா மேடம்

//மும்பை போனதில் மராட்டி மொழியின் அற்புதப் பாடல்களையும் உங்கள் மூலம் கேட்கலாம்..//

இதென்ன மதுரைக்கு வந்த சோதனை :)))
இச்சிறியேனால் ஆவதும் என்னே ?

மக்குத்திம்மனை ஆசீர்வதித்ததற்கு மிக்க நன்றி.