Monday, July 21, 2008

தமிழ் இசைப் பிரியர்களுக்காக....

ஒரு சிறிய இசைத் திரட்டு உருவாக்கலாமே என்று தோன்றியது. ஞானிகளின் மொழிக்கு மந்திர சக்தியுண்டு என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆகவே அது நம் தமிழ் ஞானிகளின் மொழி வழியால் வந்த பாடல்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் பட்டது.

இரண்டு தேவாரப் பாடல்களும்,கந்தர் அலங்காரத்திலிருந்து 'நாளென் செயும்' என்ற பாடலும் சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் குரலில். அவர் பாடுவதில் தமிழும் பக்தியும், பூவும் மணமுமாகக், கமழும். தெள்ளிய உச்சரிப்பும் பாவனையும் மனதை உருக்கும். தமிழ் பண் இசையை முறையாகப் பயின்றவர் என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். எந்த நாட்டில் எந்த நேரத்தில் கேட்டாலும் மனம் உடனே தமிழ் நாட்டிற்கு பயணித்துவிடும்.

அபிராமி பதிகத்திலிருந்து ‘கலையாத கல்வியும்' பாடலை பாடியிருப்பவர் ராஜ்குமார் பாரதி. இவருடைய பாணியிலும் ஒரு அலாதி ஈர்ப்பு எனக்கு உண்டு. பாடலைக் கேட்ட பின்பு உங்களுக்கே புரியும் ஏன் அப்படி சொன்னேன் என்று.

சஞ்சய் சுப்பிரமணியின் குரலில் ’மானாடா மழுவாட’ என்ற விருத்தம். நடராஜர் பத்து என்ற தொகுப்பிலிருந்து ஒரு பாடல். எழுதியவர் சிறுமணவூர் முனுசாமி.
விருத்தம் பாடுவதும் ஒரு கலை. ஒரு சிலரால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். சஞ்சய் மிகமிக சிறப்பாகவே பாடியிருக்கிறார். கேட்டு அனுபவியுங்கள்.

திருப்புகழைப் பாடப் பாட வாய்மணக்கும். மும்பை சகோதரிகளின் குரலில் ஏவினை நேர்வழி என்ற திருப்புகழைக் கேட்டும் பாடியும் மகிழுங்கள். கூடவே பாடிப் பார்ப்பதற்கு வசதியாக திருப்புகழை எழுத்து வடிவிலும் கீழே தருகிறேன்.

தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் குரலிலும் இதேப் பாடலை இணையத்தில் ஓதுவார் டாட் காம்-மில் கேட்டு மகிழலாம். அங்கே அவரது குரல் மட்டும் அல்லாது பல ஓதுவார்களின் குரலில் தமிழிசைக் கேட்கலாம், தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை---- நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை....அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை----யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது .....மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ...குறமாதை
நாடிய கானிடை கூடிய சேவக
நாயக மாமயி....லுடையோனே
தேவிம நோமணி ஆயிரப ராபரை
தேன்மொழி யாள்தரு...சிறியோனே
சேணுயர் சோலையி நீழலி லே திகழ்
சீரலை வாய்வரு ...பெருமாளே

இனி இந்த இசைத் திரட்டை எப்போதும் கற்கை நன்றே மற்றும் சித்திரமும் கைப்பழக்கம் வலைப்பூக்களின் பக்கப் பட்டையி(side bar) லிருந்து கேட்டு மகிழலாம்.

4 comments:

வடுவூர் குமார் said...

நன்றி.

KABEER ANBAN said...

வருகைக்கு நன்றி குமார்,

நானும் உங்களைப் போலவே பின்னூட்டப் பெட்டியை கீழே பொருத்தி விட்டேன்.

jeevagv said...

மிக்க நன்றி கபீரன்பன்.

KABEER ANBAN said...

வருக ஜீவா,
esnip உறுப்பினர்கள் இப்பாடல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Firefox downloader பொருத்தி இருப்பவர்கள் உறுப்பினர் ஆகாமலே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.